உங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா?


      
      கவனமாகப் படியுங்கள். உலகிலேயே அற்புதமான கலாசாரத்துக்குச் சொந்தக்காரர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவின் உண்மையான முகத்தைத் தரிசிக்க உதவும் புள்ளிவிவரங்கள் இவை.

* உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் 53 சதவிகிதம் குழந்தைகள் - அதாவது இரண்டில் ஒரு குழந்தை - பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படும் நாடு இந்தியா.

* இவற்றில் 89 சதவிகிதம் குற்றங்கள் உறவினர்கள், நண்பர்கள் என நன்கு அறிமுகமானவர்களாலேயே நடத்தப்படுகின்றன.

* இப்படி வன்முறைக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகளில் 87 சதவிகிதம் பேர் மீது மீண்டும் மீண்டும் வன்முறை தொடர்கிறது.

* இவர்களில் 5-12 வயதுக்குள் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 42.06 சதவிகிதம்.

* இப்படி வன்முறைக்கு உள்ளாக்கப்படுபவர்களில் பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை 6 சதவிகிதம் அதிகம்.

* இந்தியாவில் 20 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறாள்.

      டெல்லியில் ஓடும் பஸ்ஸில் மாணவி ஐந்து பேரால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் ஆகட்டும், குவாஹாத்தியில் சாலையில் பலர் முன்னிலையில் ஓட ஓட ஓர் இளம்பெண் மானபங்கப்படுத்தப்பட்ட சம்பவம் ஆகட்டும். முக்கியமான ஒரு செய்தியை நமக்குத் திரும்பத் திரும்ப உணர்த்துகின்றன... இனியும் இந்த நாட்டில் அரசாங்க அமைப்புகளை நம்பிப் பயன் இல்லை. நம் குழந்தைகளைக் காத்துக்கொள்ள இனி நாம்தான் களம் இறங்கியாக வேண்டும்; குழந்தைகளுக்கான பாலியல் கல்வியை வீட்டில் இருந்தே தொடங்க வேண்டும் என்பதே அந்தச் செய்தி!
  சரி, எந்த இடத்தில் இருந்து தொடங்குவது?
      
முக்கியமான 5 கட்டளைகள்:
 

      *மார்பகம், பிறப்புறுப்பு, மாதவிடாய், நாப்கின், ஆணுறை, சுய இன்பம்,  உடலுறவு, கற்பு, பலாத்காரம், காதல், குழந்தைப் பிறப்பு... இப்படி எது தொடர்பாக உங்கள் குழந்தை கேட்டாலும் மறைக்காமல் அறிவியல்ரீதியிலான உண்மையைச் சொல்லுங்கள். அதேசமயம், தேவைக்கு அதிகமாக, பெரிய பெரிய விளக்கங்களோடு பதில் அளிக்க வேண்டியது இல்லை. அவர்கள் கேட்கும் கேள்விக்கு ஒரு வரியில் பதில் சொல்லப் பழகுங்கள். இப்படிப்பட்ட விஷயங்களைப் பேசும்போதோ, குழந்தைகளை விசாரிக்கும்போதோ ஒரு குற்றவாளியை அணுகுவதுபோல அவர்களின் நேருக்கு நேர் அமர்ந்து, கண்களைப் பார்த்துப் பேசுவதைத் தவிர்த்து, பக்கவாட்டில் அமர்ந்து விளையாட்டாகப் பேசுங்கள். ஆண் குழந்தைகளுக்குப் பெண் குழந்தைகளைப் பற்றியும் பெண் குழந்தைகளுக்கு ஆண் குழந்தைகளைப் பற்றியும் ஏராளமான சந்தேகங்கள் இருக்கும். இயல்பாகவே ஒருவர் மீது மற்றவருக்கு ஈர்ப்பு இருக்கும். எனவே, ஆண் குழந்தைகளுக்குப் பெண் குழந்தைகளை எப்படி அணுகுவது என்றும் பெண் குழந்தைகளுக்கு ஆண் குழந்தைகளை எப்படி அணுகுவது என்றும் சொல்லிக்கொடுங்கள்.

      * வீட்டில் அரைகுறை ஆடையோடு உலவாதீர்கள். கணவன் - மனைவி நெருக்கத்தைக் குழந்தையின் முன் காட்டாதீர்கள். குழந்தையின் முன் உடை மாற்றாதீர்கள். ஆபாசம் வரும் எனத் தெரிந்தால், டிவியோ, பத்திரிகையோ குழந்தை முன் பார்க்காதீர்கள். 
      
 * பாலியல் கல்வியின் அடிப்படையே வீட்டிலிருந்து, பாலியல் சமத்துவத்தில் இருந்துதான் தொடங்குகிறது. எனவே, ஆண் - பெண் பாகுபாடு எந்த விதத்திலும் வீட்டில் நிலவாத சூழலை உருவாக்குங்கள். சமையலில் தொடங்கி முக்கியமான முடிவுகளை எடுப்பது வரை எல்லா விஷயங்களிலும் கணவன் - மனைவி  இருவருக்கும் சமமான பங்கு இருப்பதை உறுதிசெய்யுங்கள். ஆண் குழந்தைகளுக்குப் பெண் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கும் எல்லா வேலைகளையும் கற்றுக்கொடுங்கள்; பெண் குழந்தைகளுக்கு ஆண் குழந்தைகளுக்குக் கொடுக்கும் எல்லா வாய்ப்புகளையும் அளியுங்கள்.

      * சக நண்பராக குழந்தைகளோடு நெருக்கமாக உரையாடுங்கள். தினமும் குறைந்தது ஒரு மணி நேரமேனும் அவர்களோடு செலவிடுங்கள். அவர்களுடைய நண்பர்கள், விருப்பங்கள், செயல்பாடுகள்பற்றிப் பேசித் தெரிந்துகொள்ளுங்கள். குழந்தைகளிடம் பிறப்புறுப்புபற்றி சகஜமாகப் பேசுங்கள். கை, கால்களைப் போல அதுவும் ஓர் உறுப்புதான் என்று அவர்களுக்கு உணர்த்துங்கள். அதைப் பற்றிப் பேசவோ, சந்தேகம் கேட்கவோ அவர்கள் தயங்காத சூழலை உருவாக்குங்கள். புத்தக வாசிப்புப் பழக்கத்தை உருவாக்குங்கள். நீங்கள் சொல்ல நினைக்கும் - ஆனால், சொல்ல முடியாதது என்று நினைக்கும் - விஷயங்களைப் புத்தகங்களாக வாங்கிக் கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள்.

      * குழந்தைகள் எந்த ஒரு சங்கடமான விஷயத்தை உங்கள் முன் கொண்டுவந்தாலும் ‘‘பயப்பட வேண்டாம், இது ஒரு பிரச்னையே இல்லை, நான் இருக்கிறேன்’’ என்கிற பக்கபல வார்த்தைகளோடு அவர்களை அணுகுங்கள்.

அதிகம் கேட்கப்படும் 5 கேள்விகளும் சொல்ல வேண்டிய பதில்களும்!

‘‘அம்மா, என்கூட படிக்குற ஒரு பையன் என்கிட்ட வந்து காதலிக்கிறேன்னு சொல்றாம்மா...”
‘‘ஆஹா... அவனுக்கு உன்னைப் பிடிச்சுருக்குபோல இருக்குடா. உன்கூட ஃப்ரெண்டா இருக்க ஆசைப்பட்டு இருக்கான். அதை அவனுக்குச் சொல்லத் தெரியலை. டி.வி., சினிமாவைப் பார்த்து காதல்னு சொல்லி இருக்கான். தப்பில்லே. அவன்கிட்டே சொல்லு. நம்ம ரெண்டு பேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸா இருந்து படிப்போம்னு. ஞாயிற்றுக் கிழமைல வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு வா. விளையாடு!’’

‘‘ஏம்மா, பெண்களுக்கு மட்டும் மார்பு வளருது... ஆண்களுக்கு வளரலை?”
‘‘பிற்காலத்துல குழந்தைங்க பிறக்கும்போது, அந்தக் குழந்தைங்களுக்குப் பால் கொடுக்கணும் இல்லையா? அதுக்காகத்தான் பெண்களுக்கு மார்பு பெரிசா வளருது.’’

‘‘பலாத்காரம்னா என்னப்பா?”
‘‘கண்ணா, நம்ம உடம்புல சில இடங்களை எல்லோரும் தொடலாம், சில இடங்களைத் தொடக் கூடாது. அப்படித் தொடக் கூடாத இடங்களை நம்மளை மீறித் தொட்டுடறதைத்தான் பலாத்காரம்னு சொல்றாங்க.’’

‘‘மாதவிடாய்னா என்னம்மா? அக்காவுக்கு நாப்கின் எதுக்கு  வாங்குறீங்க?”
‘‘உடம்புக்குத் தேவை இல்லாத தண்ணீர் எப்படி உச்சாவா வருதோ, அதேபோல, பெண்களுக்கு மட்டும் அவங்க பெரிய பிள்ளையா வளர ஆரம்பிச்ச உடனே தேவையில்லாத ரத்தம் வெளியே வரும். அதைத்தான் மாதவிடாய்னு சொல்வாங்க. அப்படி வரும்போது, அந்த ரத்தம் டிரஸ்ல பட்டுடாம இருக்கத்தான் நாப்கின்.’’

‘‘குழந்தை எப்படிப்பா பிறக்குது?”
‘‘அப்பாக்கிட்ட ஒரு கெமிக்கல் இருக்கும். அது அம்மா வயித்துக்குள்ள இருக்குற கெமிக்கல்கிட்டே போய் சேர்ந்து, பாப்பாவாப் பிறக்கும். ஏரோப்ளேன் எப்படிப் பறக்குது? அதை முழுசாச் சொன்னா உனக்கு இப்போ புரியாதுல்ல... அதுபோல, நீ பெரியவனாகும்போது இதெல்லாம் படிப்புல வரும். அப்போ உனக்கு எல்லாம் புரியும்.’’

அணுகச் சங்கடமான 3 விஷயங்கள்!

குட் டச் / பேட் டச் 
      
     குழந்தைக்குக் கொஞ்சம் கொஞ்சமாக, அதன் உடலில் பிறர் எங்கெல்லாம் தொடலாம், எங்கெல்லாம் தொடக் கூடாது என்று புரியவையுங்கள். கை குலுக்கலாம் - குட் டச். தலை மேல் கை வைக்கலாம், கன்னத்தில் கையால் கிள்ளி முத்தம் கொடுக்கலாம், தோளில் கை போடலாம் - குட் டச். தடவக் கூடாது - பேட் டச். மார்பில், வயிற்றில், இடுப்பில், பிறப்புறுப்பில், தொடையில் கை வைக்கக் கூடாது; தடவக் கூடாது. வாய் மீது வாய் வைத்து முத்தம் கொடுக்கக் கூடாது. கட்டிப்பிடிக்கச் சொல்லக் கூடாது. மடியில் அமர்த்திக்கொண்டு அணைக்கக் கூடாது - பேட் டச். அப்படி யார் செய்தாலும் சம்பந்தபட்டவர்களிடம் இருந்து சமர்த்தாய் நழுவி, தனியாக இருக்கும்போது அம்மாவிடம்/அப்பாவிடம் உடனே சொல்ல வேண்டும் என்று சொல்லிக்கொடுங்கள் . வீட்டின் அருகிலோ, பள்ளிக்கூடத்தின் அருகிலோ தெரிந்தவர்கள் / தெரியாதவர்கள் யாரேனும் தங்களைத் தொடர்ந்து கவனிக்கிறார்களா, சைகை மூலம் அழைக்கிறார்களா, சம்பந்தம் இல்லாமல் பேசுகிறார்களா என்று குழந்தைகள் கவனிக்கக் கற்றுக்கொடுங்கள். அப்படிக் குழந்தை தெரிவிக்கும் நபர்களைக் கண்காணியுங்கள்.


காதல்

      குழந்தை ஐந்து வயதில் காதல் வயப்படலாம். இயல்புதான். பதின்பருவத்தில் காதல் வருவதும் இயல்புதான். சூசகமாகச் சொல்லுங்கள்... ‘‘வெறும் நட்புதான்பா. ஆனா, இந்த வயசுல அப்படித்தான் தோணும், தப்பில்லை. இப்படித்தான் அப்பாவுக்கும் சின்னப் புள்ளையா இருக்கும்போது நடந்துச்சு. அப்புறம் பெரியவனானதும் இதெல்லாம் சும்மான்னு புரிஞ்சுச்சு. படிப்பைக் கவனிப்பா. எதுவா இருந்தாலும் அது முக்கியம்’’ என்பதுபோலப் பேசுங்கள்.

சுய இன்பம் 

      ஆணோ, பெண்ணோ... ஒரு குழந்தை தன் வாழ்வில் இரு முறை சுயஇன்பம் பழக்கத்துக்கு ஆட்படுகிறது. முதல் முறை 3-5 வயதில். இரண்டாவது முறை 10-13 வயதில். இது எல்லாக் குழந்தைகளுக்கும் சகஜமானது. பிறப்புறுப்பைத் தேய்த்துக்கொண்டே இருப்பதால் கிடைக்கும் சுகம் காரணமாக ஏற்படும் இந்தப் பழக்கத்தை விவரம் தெரியாத வயதில், குழந்தையின் கவனத்தைத் திசை மாற்றி நம்மால் தடுக்க முடியும். ஆனால், விவரம் தெரிந்த பின் பதின்பருவத்தில் ஏற்படும் பழக்கம் அப்படி அல்ல. அனுமதியுங்கள். அதேசமயம், டி.வி., ஆபாசப் புத்தகங்கள், இணையம் போன்ற திசை திருப்பும் விஷயங்களை வீட்டில் இருந்து அகற்றுங்கள். விளையாட்டு உள்ளிட்ட பிற விஷயங்களில் ஊக்குவியுங்கள். கவனம் சிதறும் அளவுக்குப் பழக்கம் அதிகமானால், அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூசகமாகத் தெரியப்படுத்துங்கள்.

ஆப்த வாக்கியம் 


      ஒரு விஷயத்தைக் குழந்தைப் பருவத்தில் இருந்தே சொல்லி வளருங்கள். ‘‘நீ மட்டுமே உலகம் இல்லை. நாம் ஒவ்வொரு நாளும் உயிர் வாழ எவ்வளவோ பேருடைய உழைப்பு தேவைப்படுகிறது. ஆகையால், உன்னைப் போல் எல்லோரையும் நினை’’ என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லி வளருங்கள். எல்லோருடைய எண்ணங்களுக்கும் மதிப்பு அளிக்க வேண்டும் என்பதை உணர்த்தி வளருங்கள். வாழ்வின் எல்லாக் கட்டங்களிலும் நீங்கள் அவர்களுக்குத் துணையாக இருப்பீர்கள்; எதையும் மறைக்க வேண்டியது இல்லை என்று சொல்லி வளருங்கள். அதேசமயம், எப்போதும் குழந்தைகளைக் கவனத்திலேயே வைத்திருங்கள்!
டாக்டர் விகடன் ஜன.2013

(சமூக நலன் கருதி ஒரு வேண்டுகோள்: இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், தயவுசெய்து இதை உங்கள் நண்பர்களுக்குப் பகிர்ந்துகொள்ளுங்கள்...)

43 கருத்துகள்:

  1. நீங்கள் விகடனிலிருந்து வெளியேறிய வருத்தத்தை அதிகரிக்கிறது தோழரே இந்த கட்டுரை. இந்த கோணங்களில் எல்லாம் யோசிக்கவும் எழுதவும்..... ஒரு பெரிய வெற்றிடத்தை உருவாக்கிவிட்டீர்கள் சமஸ்.

    பதிலளிநீக்கு
  2. மிக நல்லதொரு பதிவையும் இன்றைய சூழலுக்கு நாம் எவ்வாறு பயணப்பட வேண்டுமென்பதையும் தெளிவுபடுத்தும் ஆழமான பதிவு... இனியும் இந்த நாட்டில் அரசாங்க அமைப்புகளை நம்பிப் பயன் இல்லை. நம் குழந்தைகளைக் காத்துக்கொள்ள இனி நாம்தான் களம் இறங்கியாக வேண்டும்; குழந்தைகளுக்கான பாலியல் கல்வியை வீட்டில் இருந்தே தொடங்க வேண்டும் என்பதே அந்தச் செய்தி!

    நிச்சயம் இது நம்மிலிருந்து ஆரம்பமானால் தான் நல்லதொரு மாற்றத்தைக்கொடுக்கும்... மனமார்ந்த வாழ்த்துகள் இப்பதிவுக்கு... முக நூலில் சகோதரன் மோனி கோயப்புத்தூர் அவர்களின் நிலையில் பகிர்ந்த தகவலைப்பார்த்து வந்தேன்.... இன்னும் உத்வேகத்தோடு ஆரம்பமாகட்டும் உங்களின் எழுத்துலகம்..வாழ்த்துகள் சகோதரரே....

    பதிலளிநீக்கு
  3. மிக ஆரோக்கியமான,அருமையான கட்டுரை..நன்றி

    பதிலளிநீக்கு
  4. தேவை மிக்க பதிவு தெளிவான வழிகாட்டலுடன்... நன்றி....

    பதிலளிநீக்கு
  5. தாங்கள் விகடனிலிருந்து வெளியேறிய தகவலை படித்தபோது ஏற்பட்ட வருத்தம் இந்த ப்ளாக்கை பார்த்த பின்னர் ஓடோடிவிட்டது. தொடர்ந்து எழுதுங்கள் தோழர். ஆயிரக்கணக்கானவர்கள் உங்கள் எழுத்தை படிக்க காத்திருக்கிறோம். குறைந்தது வாரம் ஒரு கட்டுரையாவது தாங்கள் எழுத வேண்டும். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. மிக அருமையான பதிவு . இரு குழந்தைகளுக்கு தந்தை என்கிறமுறையில் சொல்கிறேன் ,

    நீங்க நல்லாஇருக்கனும் . இந்தபதிவில் இருப்பவை அனைத்தும் நமக்கு மிகவும் தேவையானதே . நெறயவிஷயங்கள் கற்றுக்கொண்டேன் . நன்றி நன்றி நன்றி !!!!!!!!

    உங்களது வலைப்பதிவை எனக்கு முகநூல் மூலம் share செய்து பகிர்ந்து கொண்ட என் முகநூல் நண்பர் mony coimbatore அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்

    பதிலளிநீக்கு
  7. மிக அருமையாக உள்ளது சமஸ் சார்
    குழந்தைகளிடம் எப்படி சொல்லுவது என்று புரியாமல் இருந்தது இப்போது உங்கள் கருத்தியல் சிந்தனை என்னை தெளிவு பெற வைத்துள்ளது.. நன்றி மீண்டும் தொடரட்டும் உங்கள் தொண்டு

    பதிலளிநீக்கு
  8. சமஸ்,
    பெற்றோர்களுக்காக எழுதப்பட்டுள்ள இந்தக் கட்டுரையைப் போல, குழந்தைகளுக்காகவும் ஒன்று எழுதுங்கள். நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த 5 கேள்விகளை குழந்தைகள் அவ்வளவு எளிதாக கேட்டுவிடுவதில்லை.

    பதிலளிநீக்கு
  9. எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை, இனிமேல் ஆனால் எந்த பிரச்சனையும் இல்லை, மிக மிக நல்ல விடயங்கள், மிகவும் நன்றி

    பதிலளிநீக்கு
  10. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  11. sensible, well written, very much required topic. need to be shared without hesitation or shy

    பதிலளிநீக்கு
  12. பயனுள்ள பதிவு இப்போதைய நிலைமைக்கு

    பதிலளிநீக்கு

  13. மிகவும் பயனுள்ள கட்டுரை. இதை நான் டாக்டர்விகடனில் படித்தேன். அதை எழுதிய உங்களை தேடிய போது உங்கள் வலைத்தளம் பார்த்தேன். பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்.. எனது தளத்தில் உங்கள் பெயருடன் பகிர்ந்து உள்ளேன் நன்றி நீங்கள் தமிழ் தி ஹிந்துவில் இப்போது பணிபுரிவதாக அறிந்தேன் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  14. அருமையான கட்டுரை சமஸ் அண்ணா.. இந்த கட்டுரை மக்களை பெருமளவில் போய் சேர்ந்தால் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  15. நன்று
    இதுபோல் சமூக அக்கறை கொண்ட கட்டுரைகள் எழுத வேண்டும்

    பதிலளிநீக்கு
  16. பயனுள்ள பதிவு நன்று

    பதிலளிநீக்கு
  17. இது தி இந்து வில் படித்தேனா என்று ஞாபகம் உள்ளது. ஆனாலும் , கட்டுரையின் பயன் வீச்சு மிக அதிகமாக இருப்பதால், இந்த பதிவை , என் ஜிமெயில் நண்பர்களுக்கு , அனுப்பியுள்ளேன். மிக்க நன்றி .. நண்பர் சமஸ் அவர்களே....

    பதிலளிநீக்கு
  18. அற்புதமான படைப்பு நண்பரே ... வாழ்த்துக்கள் ..

    பதிலளிநீக்கு
  19. அன்புள்ள சமஸ், மிகவும் பயனுள்ள கட்டுரை

    பதிலளிநீக்கு
  20. அற்புதமான கட்டுரை! தங்கள் கட்டுரைகளை தமிழ் இந்துவில் வாசித்து வருகின்றோம்! உங்கல் கட்டுரைக்காகவே தமிழ் இந்து வாங்குகின்றோம்! உங்கள் வலைத்தளத்தைக் கண்டதும் எங்கள் வலைத்தளத்தில் சேர்த்துவிட்ட்டோம்! தொடர்கின்றோம்! உங்கள் கட்டுரைகள் இன்னும் வர வேண்டும்!

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  21. அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய தகவல்கள். ஆசிரியர்களும் பெற்றோர்களும் குழந்தைகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். விரிவான விளக்கங்களுக்கு நன்றி.
    இது போன்ற பதிவு ஒன்றை கடந்த ஆண்டு வெளியிட்டிருந்தேன்.நேரம் கிடைத்தால் இந்த இணைப்பில் படிக்கவும்.
    பாலியல் தொல்லைகள்-குழந்தைகளை இப்படிப் பழக்குவீர்!

    பதிலளிநீக்கு
  22. அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
    நல்வணக்கம்!

    திருமதி ஞா.கலையரசி அவர்களால்,
    வலைச்சரம் நான்காம் நாள் - 'மங்கையராய்ப் பிறப்பதற்கே...'

    இன்றைய வலைச் சரத்தின்
    சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
    வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!

    வாழ்த்துக்களுடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr
    ( S'inscrire à ce site
    avec Google Friend Connect)

    பதிலளிநீக்கு
  23. எழுபதுகளில் புள்ளிவிபரப்பட்டியலில் 10%பெண்கள் கூடுதலாக இருந்தால் கணக்கு சரி. இப்பொழுது 10%குறைவாய் இருந்தால் சரி என்கிறார்கள். பதின்மவயது வன்முறைக்கு அதுவும் தவறான கணிப்பும் காரணிகள். ஆரோக்கிய வாழ்கை இல்லத்திலிருந்தே தொடங்குகிறது. அதை அங்கிருந்து தொடங்குவதில் தவறில்லை.

    பதிலளிநீக்கு
  24. நல்ல பதிவு அண்ணா .... என் அம்மா படிப்பு அறிவு இல்லாதவர் ஆனால் அனுபவ அறிவு உள்ளவர் நான் ஆண் பிள்ளை என்றாலும் நான் பத்தாவது படிக்கும் போது எனக்கு பெண்களை பற்றி கொஞ்சம் கொஞ்சமாக புரிய வைத்தார்கள் .. நான் இதுவரை எந்த பெண்ணையும் தவறான கண்ணோட்டத்தில் பார்த்ததே இல்லை என்று நேர்மையாக நெஞ்சை நிமித்தி சொல்ல காரணம் பெற்றோர் தான் ... அவர்கள் எதயையும் எனக்கு எடுத்து பக்குவமாக சொல்ல விலை என்றால் நான் ஆபாச பட வீடியோக்களுக்கு அடிமையாக இருந்து இருப்பேன்...
    இன்றும் ஆபாச விடியோக்களை பார்க்கிறேன் ஆனால் அதன பேரில் எந்த பென்னிடமும்ம் தவறாக நடந்து கொள்வது கிடையாது .. பெற்ற்றோர்கள் நினைத்தால் தங்கள் மகன் மகளை காப்பாற்றலாம் ....

    பதிலளிநீக்கு
  25. sir only one question. if possible please reply. My daughter always likes to see love songs.. when we watch movie if any love making scene comes means I used to change the channel but my daughter used cry and asks why are you changing the channel daddy.. what should I do..

    பதிலளிநீக்கு
  26. அன்பு சமஸ்! வணக்கம். இந்துவில் வரும் கட்டுரைகளையே படித்துக் கொண்டிருந்த நான் இன்று இணையத்தில் உங்கள் கட்டுரையைப் படித்தேன். சிறப்பாக உள்ளது. அனைத்து பெற்றோர்களும் ஆசிரியர்களும் படித்து புரிந்துகொண்டு மற்றவர்களுக்கும் அறிவுறுத்த வேண்டிய விஷயங்கள். இதை நகலெடுத்து என் உடன் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் உங்கள் அனுமதியோடு கொடுக்கப் போகிறேன். தொடர்ந்து உங்கள் கட்டுரைகள் முழுமையும் படித்துவிட்டு விரிவாகக் கடிதம் எழுதுகிறேன்,
    மிக்க அன்புடன்,
    குமரி ஆதவன்,
    குமாரபுரம் அஞ்சல் - 629 164,
    குமரி மாவட்டம்.
    அலைபேசி : 9442303783

    பதிலளிநீக்கு