போராட்டம் சரி... எதற்காக?



 
            ப்படி ஒரு போராட்டச் சூழலை தமிழகம் சந்தித்து எவ்வளவு காலம் இருக்கும்?

        
ஈழத் தமிழர் நலனை முன்னிறுத்தி தமிழக மாணவர்கள் முன்னெடுக்கும் போராட்டம் உத்வேகம் அளிக்கிறது. அரசியல் ஒரு சாக்கடை; அது நமக்கு வேண்டவே வேண்டாம் என்று சொல்லி, பொத்திப் பொத்தி வளர்க்கப்பட்ட ஒரு தலைமுறையிடமிருந்து வெளிப்படும் இந்தத் தார்மிகக் கோபமும்  தன்னெழுச்சியும் அது வெளிப்படும் அறவழியும் கொண்டாடப்பட வேண்டியவை. ஆனால், ஒரு போராட்டம் என்பது இவ்வளவு மட்டும்தானா? முக்கியமாக, இந்தப் போராட்டத்தின் நோக்கம் என்ன? அதாவது, இந்தப் போராட்டம் அடையப்போகும் இலக்கு என்ன?
    
         நாம் வாழும் காலத்தின் தன்னிகரற்ற போராளியான இரோம் ஷர்மிளா ஒரு போராட்டத்துக்கான தேவையாக வரையறுப்பது இது: "ஒரு பெரிய போராட்டத்துக்கான தேவை... தீவிரம், உறுதி, சுயநலமற்ற நீடிப்புத்தன்மை, நேர்மையான தொலைநோக்கு."
        
நான் மேலும் ஒரு விஷயத்தைச் சேர்த்துக்கொள்ள விரும்புகிறேன்... கள யதார்த்த அடிப்படையிலான சித்தாந்தம்!
        
       
கடந்த இரு ஆண்டுகளில் உலகம் சந்தித்த சில முக்கியமான போராட்டங்களையும் அவற்றின் இன்றைய விளைவுகளையும் நாம் நினைவுகூரலாம். துனிஷியாவில் ஸைன் அல் எபிடைன் பென் அலி; எகிப்தில் ஹோஸ்னி முபாரக்; லிபியாவின் மம்மர் கடாபியை எதிர்த்து நடந்த போராட்டங்களை நாம் எவ்வளவோ உத்வேகத்தோடு பார்த்தோம். இன்றைக்கு அங்கு நடப்பது என்ன? அண்ணா ஹஜாரேவுக்குக் கூடிய கூட்டம் இப்போது எங்கே போனது? ஹ்யூகோ சாவேஸின் மரணத்துக்குப் பின் வெனிசுலாவின் எதிர்காலம் என்னவாகும்? இவை எல்லாம் உணர்த்தக் கூடிய முக்கியமான ஒரு விஷயம் உண்டு. எதிர்ப்பும் தன்னெழுச்சியும் தனிநபர் ஆளுமையும் மட்டுமே ஒரு போராட்டத்தின் இலக்கை அடையப் போதுமானவை அல்ல. சித்தாந்தம் வேண்டும். கள யதார்த்த அடிப்படையிலான சித்தாந்தம்.
         
           
தமிழகத்தில் மாணவர்கள் மகத்தான தன்னெழுச்சியுடன் போராடுகிறார்கள். சரி. இந்தப் போராட்டத்தின் தலையாய கோரிக்கைகள் என்னென்ன?
1.
இலங்கை நடத்திய போர்க்குற்றங்கள் தொடர்பாக அதிபர் ராஜபக்ஷே தண்டிக்கப்பட வேண்டும்; இதற்கான சர்வதேச விசாரணைக்கு நடத்த இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2.
ஈழத் தமிழ் மக்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்; தனித்தமிழீழம் வேண்டும்.
இன்னும் இன்னும் ஏராளமான கோரிக்கைகள் இருக்கின்றன... தமிழகத்துக்குத் தனி வெளியுறவுத் துறை வேண்டும் என்பது உட்பட.

           
இவை எல்லாம் யாரை நோக்கி விடுக்கப்படும் கோரிக்கைகள்? இந்திய அரசை நோக்கி. அதாவது, எந்த அரசு ஈழப் போரைப் பின்னின்று இயக்கியது என்று நாம் குற்றம்சாட்டுகிறோமோ, அந்த அரசை நோக்கி. சர்வதேச விசாரணை என்று நாம் யாரை மனதில் வைத்துக் கேட்கிறோம்? அமெரிக்க - ஐரோப்பிய நாடுகளை மனதில்வைத்து. அதாவது, எந்த நாடுகள் எல்லாம் ஈழப் படுகொலையின் பின்னணிச் சதியில் பங்கு வகித்தனவோ, அந்த நாடுகள் விசாரணை நடத்தி, நீதி வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். எனில், நம்முடைய கோரிக்கைகள் எந்த அளவுக்குக் கள யதார்த்தத்துடன் பொருந்துபவை? இவை எல்லாம் எந்த அளவுக்கு ஈழத்தில் வாழும் தமிழர்களின் இன்றைய பிரச்னைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டவை?
         
             
போரில் உறவுகளையும் வாழ்வாதாரத்தையும் பறிகொடுத்துவிட்ட நிலையில், மறுவாழ்வுக்கென உருப்படியாக எந்த நடவடிக்கையையும் அரசு எடுக்காத சூழலில், வேலைவாய்ப்பின்மையால் சூழும் வறுமைதான் ஈழத் தமிழர்களின் இன்றைய தலையாயப் பிரச்னை. போருக்குப் பின்னரும் வீதிக்கு வீதி நிற்கும் ராணுவமும் திட்டமிட்டு நடத்தப்படக் கூடிய சிங்களமயமாக்கமும்தான் அவர்கள் இன்றைக்கு எதிர்கொள்ளும் பெரும் அரசியல் நெருக்கடிகள். ஈழத் தமிழர்கள் நலனில் நாம் உண்மையாகவே அக்கறை காட்டுகிறோம் என்றால், நாம் பணிகளைத் தொடங்க வேண்டிய இடம் இதுதான். முதலாவது அவர்கள் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள், இரண்டாவது ராணுவமயமாக்கலை உடைப்பதற்கான நடவடிக்கைகள், மூன்றாவது சிங்களமயமாக்கலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள்... இந்த வரிசையின் கடைசிக் கட்டத்தில்தான் தமிழீழத்துக்கான நடவடிக்கைகள் அமையலாம். முதலாவதாக அல்ல. அதையும்கூட முன்னெடுப்பது நாமாகவோ, சர்வதேச நாடுகளாகவோ இருக்க முடியாது. ஈழத் தமிழ் மக்கள்தான் முன்னெடுக்க வேண்டும். நாம் இப்படி யோசித்துப் பார்ப்போம். இந்தியச்  சுதந்திரப் போராட்டத்தின் முக்கியமான காலகட்டத்தில் காந்தி, நேரு, நேதாஜி உட்பட அனைத்துத் தலைவர்களும் கொல்லப்படுகின்றனர். போராட்டம் முழுமையாக வெள்ளையரால் ஒடுக்கப்படுகிறது. இத்தகைய சூழலில், அமெரிக்காவிலோ, ஆப்பிரிக்காவிலோ இந்தியச் சுதந்திரப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு இந்தியா சுதந்திரம் அடைவது சாத்தியம்தானா?
         
            
ஒரு போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்றால், எந்த மக்களுக்காக அந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறதோ, அந்த மக்களின்  அன்றாட வாழ்வில் அந்தப் போராட்டத்துக்கான நெருக்கடியும் தேவையும் இருக்க வேண்டும். போராட்டத்தின் தேவை - தீர்வு குறித்த தெளிவு அந்த மக்களிடத்தில் பயிற்றுவிக்கப்பட வேண்டும். முக்கியமாக, சம்பந்தப்பட்ட மக்களின் கையில் அந்தப் போராட்டம் இருக்க வேண்டும். சமகாலத்தில், இதற்குச் சரியான உதாரணம்... கூடங்குளம் மக்களின் போரட்டம். கூடங்குளப் போராட்டத்தில் பங்கேற்கும் ஒரு பள்ளிச் சிறுமியிடம் கேட்டுப்பாருங்கள்... தான் எதற்காகப் போராடுகிறாள், தன்னுடைய கோரிக்கைகள் என்ன, அவற்றின் சாத்தியம் என்ன, இந்தப் பிரச்னைக்கான தீர்வு என்ன, தான் செல்ல வேண்டிய தொலைவு என்ன என்கிற ஒவ்வொரு கேள்விக்கும் பதில் வைத்திருப்பாள். இந்தியா எல்லா அணு உலைகளையும் மூட வேண்டும்; உலகம் அணு சக்திக்கு விடை கொடுக்க வேண்டும். இது கூடங்குளம் மக்கள் போராட்டத்தின் கடைசி வரிசையில் இருக்கக் கூடிய கோரிக்கை. அப்படி என்றால், முதல் வரிசையில் இருக்கும் கோரிக்கைகள்  என்ன? அதாவது, எதிர்த் தரப்பை ஓரளவுக்கேனும் அசைந்து கொடுக்கவைக்கும் முதல்கட்ட கோரிக்கைகள் என்ன? கூடங்குளம் அணு உலையை மூட வேண்டும்; மூடும் வரை எங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்; தற்காப்புப் பயிற்சி அளிக்க வேண்டும். இதுதான் கள யதார்த்த அடிப்படையிலான போராட்டம். இந்த அணுகுமுறையுடன் ஒத்துப்போகும் சித்தாந்தமும் நீடித்தத்தன்மையும் சேரும்போது காலம் அதற்குப் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.
        
              
இந்தியாவில் வாழும் தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் ஈழப் போரின் தோல்வி ஒரு பெரும் குற்றவுணர்வை உருவாக்கி இருக்கிறது. இயலாமையும் அரசியல் கையாலாகாததன்மையும் சேர்த்து உருவாக்கிய குற்றவுணர்வு அது. வெறுமனே ஒழிக கோஷம் போடுவதால் மட்டும் அந்தக் குற்றவுணர்விலிருந்து நாம் வெளிப்பட்டுவிட முடியாது. இன்னும் ஒருபடி மேலே போய் தமிழகம் வரும் சிங்களர்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்கள் சூழலை மேலும் நாசப்படுத்தக் கூடியவை. இலங்கையில் போர் உச்சகட்டத்திலிருந்த நேரம். நாசகார ஆயுதங்கள் சூழ பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ராணுவத்தின் பிடியில் சிக்கியிருந்த சூழலில், கொழும்பில் தங்களுடைய இறுதி வான் தாக்குதலை நடத்தினர்  விடுதலைப் புலிகள். அல்-கொய்தாவின் நியூயார்க் வான் தாக்குதலை முன்மாதிரியாகக் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல் அது. இலங்கை ராணுவம் சுதாகரித்துக்கொண்ட நிலையில், புலிகளின் இரு விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட பெரிய சேதம் இன்றி தோல்வியில் முடிந்தது அந்தத் தாக்குதல். ஒருவேளை புலிகள் கணக்குப்படி அந்தத் தாக்குதல் வெற்றி பெற்றிருந்தால், அதிகபட்சம் ஐந்நூறு அறுநூறு சிங்களர்கள் செத்திருக்கலாம். ஆனால், பதிலுக்குத் தமிழர்கள் இன்னும் எத்தனை ஆயிரம் உயிர்களைக் கூடுதலாகக் கொடுக்க வேண்டி இருந்திருக்கும்? புலிகளிடம் அன்று வெளிப்பட்ட அதேராஜதந்திரம்தான் இன்றைக்குத் தமிழகம் வரும் சிங்களர்களைக் குறிவைத்துத் தாக்குவோரிடமும் வெளிப்படுகிறது. அன்றைக்குப் புலிகளின் மனதை ஆக்கிரமித்தது சாகச மனோபாவம் என்றால், இன்றைக்கு வன்முறையில் இறங்கும் ஈழ ஆதரவாளர்களை ஆக்கிரமிப்பது கும்பல் மனோபாவம். இனவெறிக்கு எதிராக நாம் களம் இறங்குவதாகச் சொல்கிறோம்ஆனால், அதே இனவெறியைத்தான் நாம் வெளிப்படுத்துகிறோம். இலங்கையில் வாழும் தமிழர்களிடையே பதற்றத்தை உருவாக்குவதோடு மட்டும் இல்லாமல்போருக்குப் பின் மெல்ல இன அடிப்படைவாதப் போட்டியிலிருந்து விலகி, வேறு திசை நோக்கி நகர ஆரம்பித்திருக்கும் இலங்கை அரசியலை மீண்டும் இன அடிப்படைவாதத்தை நோக்கித் தள்ளவும் இது வழிவகுக்கும். இன்னும் இந்தியாவுக்குள்ளேயே நம்முடைய நிலைப்பாட்டை எதிர்க்கும் ஏனைய மாநிலத்தவர்கள் மீது நாம் வெளிப்படுத்தும் ஆத்திரம் ஈழத் தமிழர்களை  அந்நியப்படுத்தவே செய்யும். மேலும், நம்மில் எத்தனை பேர் காஷ்மீர் பிரச்னைக்காகவோ, மணிப்பூர் பிரச்னைக்காகவோ போராடியிருக்கிறோம்...  கைமாறு எதிர்பார்க்க?

              
ஈழப் போரின் பின்னணி ஒரு சர்வதேச சதி. இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா... எந்த ஓர் ஏகாதிபத்திய நாடும் இனி ஒருபோதும் ஈழ விடுதலைக்கு உதவாது. இன்றைக்கு ஈழத் தமிழர்களின் உடனடித் தேவை பொருளாதார மீட்சியும் ராணுவமயமாக்கலிலிருந்து விடுவிப்பும். இலங்கை அரசுக்கும் அரசியல்வாதிகளுக்கும் நாம் உணர்த்த வேண்டிய முதல் உண்மை... தமிழர்கள் நலனின்றி இலங்கையில் ஒருபோதும் அமைதி சாத்தியம் இல்லைகள யதார்த்தச் சூழலைக் கணக்கில் கொண்டு நாம் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்றால், அந்தப் போராட்டம்  செல்ல வேண்டிய திசையின் தொடக்கம் இதுதான்!

தினமணி மார்ச் 2013

35 கருத்துகள்:

  1. உண்மை, உண்மை, உண்மை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழன் என்ற உணர்வோடு ஒன்றுகூடி, உலக அளவில் பலம் வாய்ந்த ஒரு அமைப்பை உருவாக்கி போராடினால் ஒழிய, எவரின் போராட்டத்தையும் எவரும் கண்டு கொள்ள போவதில்லை

      நீக்கு
  2. நாசகார ஆயுதங்கள் சூழ பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ராணுவத்தின் பிடியில் சிக்கியிருந்த சூழலில், கொழும்பில் தங்களுடைய இறுதி வான் தாக்குதலை நடத்தினர் விடுதலைப் புலிகள். அல்-கொய்தாவின் நியூயார்க் வான் தாக்குதலை முன்மாதிரியாகக் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல் அது. இலங்கை ராணுவம் சுதாகரித்துக்கொண்ட நிலையில், புலிகளின் இரு விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட பெரிய சேதம் இன்றி தோல்வியில் முடிந்தது அந்தத் தாக்குதல். ஒருவேளை புலிகள் கணக்குப்படி அந்தத் தாக்குதல் வெற்றி பெற்றிருந்தால், அதிகபட்சம் ஐந்நூறு அறுநூறு சிங்களர்கள் செத்திருக்கலாம்//



    புலிகள் கொழும்பில் 5 க்கும்மேற்பட்ட வான்தாக்குதல்களை நடாத்தியிருந்தனர். ஒவ்வொரு முறையும் இராணுவ கேந்திர நிலையங்களே குறிவைக்கப்பட்டிருந்தன.

    நீங்கள் குறிப்பிடுகிற தாக்குதல் பொதுமக்களை குறிவைத்து நடாத்தப்பட்டதல்ல. ஒரு விமானம் கொழும்பில் விமானப்படை தலைமைச்செயலகத்தை இலக்கு வைத்தது. அது சுட்டுவிழுத்தப்படவில்லை. விமானப்படைத் தலைமைச்செயலகத்திற்கு அருகான இன்னொரு உயர்ந்த கட்டடத்துடன் மோதி நொருங்கியது. மற்றய விமானம் கட்டுநாயக்கா விமானப்படை தாக்குதல் விமானங்களை இலக்கு வைத்தது. பொதுவாகவே இந்திய பத்திரிகையாளர்கள் மீது - நோகாமல் நொங்கெடுப்பவர்கள் தேடலற்றவர்கள் என்றொரு கருத்து எனக்கு நீண்ட நாட்களாக இருக்கிறது. உண்மைதான் போலும் - பிபிசியின் ஆங்கிலச் செய்தியாளர் உங்களை விட அதிகம் அறிந்து வைத்திருப்பார்.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனானிமஸ்... இந்தியப் பத்திரிகையாளர்கள் நோகாமல் நொங்கெடுப்பவர்கள், தேடலற்றவர்கள் என்பது உங்கள் அபிப்ராயம் என்றால், தாராளமாக வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், கட்டுரையின் நோக்கத்தைத் திசை திருப்பாதீர்கள்.

      அல் கொய்தா தாக்குதல் இலக்கில், அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் இருந்ததையும் அந்தத் தாக்குதல் முறியடிக்கப்பட்டதையும் உலகம் இன்னும் மறந்துவிடவில்லை. நான் பொதுமக்களை இலக்காகவைத்து புலிகள் தாக்குதல் நடத்தினர் என்று குறிப்பிடவில்லை. சிங்களர்களை என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன். இலங்கையின் ராணுவ வீரர்கள் சிங்களர்கள்தானே?

      புலிகள் எப்போது விமானங்களை வாங்கினார்களோ, அப்போதுதான் ’’புலிகள் இலங்கைக்கு மட்டும் அச்சுறுத்தல் இல்லை; ஏனைய நாடுகளுக்கும் அச்சுறுத்தல், விமானங்கள் வாங்கிவிட்டார்கள்... இனி வான் வழி பறந்து உங்களையும்கூட எதிர்காலத்தில் தாக்கலாம்’’ என்று இலங்கை அரசு பிரசாரத்தை முன்னெடுக்க ஆரம்பித்தது. செப்டம்பர் தாக்குதல் பின்னணியில் ஏனைய நாடுகளிடம் இந்தப் பிரசாரம் எடுபட ஆரம்பித்தது.

      தயவுசெய்து உலகத்தைத் தட்டையாகப் பார்க்காதீர்கள்.நேர்மையான கேள்விகளுக்கு நேர்மையாகப் பதில் அளியுங்கள். உள்நோக்கம் கற்பிக்காதீர்கள். ஒரு மிகப் பெரிய தோல்வியை நாம் சந்தித்திருக்கிறோம். நம் பக்க தவறுகளை இப்போதுகூட ஆய்வு செய்துகொள்ளவில்லை என்றால், எப்போது செய்துகொள்ளப்போகிறோம்?

      நீக்கு
  3. Well said, I agree with you. there is no point in requesting separate Eelam, we must have our initial focus on upliftment of Tamils in Sri Lanka by removing SL Army suppression and providing essential needs & economical progress through diplomatic route. Violence is not a solution, the need of time is reform for Sri Lankan Tamils.

    பதிலளிநீக்கு
  4. அனானிமஸ்... இந்தியப் பத்திரிகையாளர்கள் நோகாமல் நொங்கெடுப்பவர்கள், தேடலற்றவர்கள் என்பது உங்கள் அபிப்ராயம் என்றால், தாராளமாக வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், கட்டுரையின் நோக்கத்தைத் திசை திருப்பாதீர்கள்.

    அல் கொய்தா தாக்குதல் இலக்கில், அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் இருந்ததையும் அந்தத் தாக்குதல் முறியடிக்கப்பட்டதையும் உலகம் இன்னும் மறந்துவிடவில்லை. நான் பொதுமக்களை இலக்காகவைத்து புலிகள் தாக்குதல் நடத்தினர் என்று குறிப்பிடவில்லை. சிங்களர்களை என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன். இலங்கையின் ராணுவ வீரர்கள் சிங்களர்கள்தானே?

    புலிகள் எப்போது விமானங்களை வாங்கினார்களோ, அப்போதுதான் ’’புலிகள் இலங்கைக்கு மட்டும் அச்சுறுத்தல் இல்லை; ஏனைய நாடுகளுக்கும் அச்சுறுத்தல், விமானங்கள் வாங்கிவிட்டார்கள்... இனி வான் வழி பறந்து உங்களையும்கூட எதிர்காலத்தில் தாக்கலாம்’’ என்று இலங்கை அரசு பிரசாரத்தை முன்னெடுக்க ஆரம்பித்தது. செப்டம்பர் தாக்குதல் பின்னணியில் ஏனைய நாடுகளிடம் இந்தப் பிரசாரம் எடுபட ஆரம்பித்தது.

    தயவுசெய்து உலகத்தைத் தட்டையாகப் பார்க்காதீர்கள்.நேர்மையான கேள்விகளுக்கு நேர்மையாகப் பதில் அளியுங்கள். உள்நோக்கம் கற்பிக்காதீர்கள். ஒரு மிகப் பெரிய தோல்வியை நாம் சந்தித்திருக்கிறோம். நம் பக்க தவறுகளை இப்போதுகூட ஆய்வு செய்துகொள்ளவில்லை என்றால், எப்போது செய்துகொள்ளப்போகிறோம்?

    பதிலளிநீக்கு
  5. ena sir mukimana coment yella remove panitiga pola irruke............ena tha iruthalum

    பதிலளிநீக்கு
  6. நண்பர் நிஷாந்த்... ஒரே கமென்ட்டை இரு முறை போட்டிருந்தார் அனானிமஸ். நானும் தவறுதலாக அதே கமெண்டுக்கு இரு முறை பதில் கொடுத்துவிட்டேன். அவைதான் தூக்கப்பட்டுள்ளன.

    பதிலளிநீக்கு
  7. தமிழ்நாட்டில் மனசாட்சியுள்ள ஒரு பத்திரிகையாளானவது இருக்கிறான் என்ற நம்பிக்கையைத் தருகிறது இந்தப் பதிவு. இன்றைய காலச் சூழலில் இந்தக் கட்டுரையை எழுத தைரியம் வேண்டும். வெல்டன்.

    பதிலளிநீக்கு
  8. @சமஸ் :- என் மனதில் இருந்த கருத்துகளின் பிரதிபலிப்பாகவே உங்கள் கருத்தை பார்க்கிறேன். ஆனால் அனைவரும் இதை ஏற்றுக்கொள்ள வெகு நாட்கள் பிடிக்கும். குறைந்தபட்சம் இக்கருத்தை பரப்பி அனைவரின் மனதிலும் விதைக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
  9. சமஸ்அவர்களுக்கு வணக்கம்,வாழ்த்துக்கள்.தங்களின் கட்டுரை உணர்ச்சிவயப்படாமல் ஆய்வுமனப்பான்மையோடு நிதானமாக உண்மைகளை எடுத்துவைக்கப்பட்டுள்ளது கண்டு மகிழ்ச்சி.இனியாவது மீதமுள்ள இலங்கை தமிழர்களுக்கு தொல்லைகளை சேர்த்திடாமல்,உண்மையிலேயே அவர்களுக்கு உதவிடும் வகையில் இங்கு நமது செயல்பாடுகள் அமையட்டும்.அங்குள்ள தமிழர்களுக்கு இன்றைய தேவை என்ன?அதற்க்கு நம்மால் என்ன செய்ய முடியும்?நாம் இங்கு மிகவும் பாதுகாப்பாக இருந்துகொண்டு சவால் விடுவது அவர்களின் பாதுகாப்புக்கு வைக்கும் வேட்டு என்பதை புரிந்துகொள்ளும் மனநிலையில் தமிழகம் இல்லை."இன்றைக்கு வன்முறையில் இறங்கும் ஈழ ஆதரவாளர்களை ஆக்கிரமிப்பது கும்பல் மனோபாவம். இனவெறிக்கு எதிராக நாம் களம் இறங்குவதாகச் சொல்கிறோம்… ஆனால், அதே இனவெறியைத்தான் நாம் வெளிப்படுத்துகிறோம். இலங்கையில் வாழும் தமிழர்களிடையே பதற்றத்தை உருவாக்குவதோடு மட்டும் இல்லாமல், போருக்குப் பின் மெல்ல இன அடிப்படைவாதப் போட்டியிலிருந்து விலகி, வேறு திசை நோக்கி நகர ஆரம்பித்திருக்கும் இலங்கை அரசியலை மீண்டும் இன அடிப்படைவாதத்தை நோக்கித் தள்ளவும் இது வழிவகுக்கும்" இவ்வரிகளிலுள்ள உண்மையை உணர்வார்களா?உணர்வாளர்கள்.

    பதிலளிநீக்கு
  10. இன அடிப்படைவாதப் போட்டியிலிருந்து விலகி, வேறு திசை நோக்கி நகர ஆரம்பித்திருக்கும் இலங்கை அரசியலை மீண்டும் இன அடிப்படைவாதத்தை நோக்கித் தள்ளவும் இது வழிவகுக்கும் haha do u what is happening here , this war victory gave a energy to Sinhala racism they have started a new war against Muslim business man, except this and ltte flight crash news other things are true , no point of demanding impossible things and in my point view there is no chance for a revolution from sl Tamils

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முல்லை மயூரன்...

      நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இஸ்லாமியர்களைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் அவசியம் நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம்.

      நீக்கு
  11. மாற்றுக் கருத்துக் கொண்டோரை தமிழினத் துரோகி என்று பட்டம் சூட்டி அவரை அவமானப் படுத்துவது தமிழகத்தில் நிலவி வருகின்ற சூழல். அதிலும் குறிப்பாக இலங்கைப் பிரச்சனைப் பற்றி நடு நிலையில் கருத்துக்களைக் கூறிடவே சிலர் அஞ்சுகின்ற நிலைதான் இங்குள்ளது. தங்களின் துணிச்சலுக்கு எனது பாராட்டுக்கள். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் தமிழர்களிடையே பல்வேறு நலப் பணிகளை சேவா இன்டர்நேஷனல் அமைப்பின் வாயிலாக தொடர்ந்து நடந்து வருகிறது.

    நா.சடகோபன்

    பதிலளிநீக்கு
  12. logicala solringa kandippa ellorum yosikkanum

    பதிலளிநீக்கு
  13. //இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின் முக்கியமான காலகட்டத்தில் காந்தி, நேரு, நேதாஜி உட்பட அனைத்துத் தலைவர்களும் கொல்லப்படுகின்றனர். போராட்டம் முழுமையாக வெள்ளையரால் ஒடுக்கப்படுகிறது. இத்தகைய சூழலில், அமெரிக்காவிலோ, ஆப்பிரிக்காவிலோ இந்தியச் சுதந்திரப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு இந்தியா சுதந்திரம் அடைவது சாத்தியம்தானா?//இது எத்தனை பெரிய விதண்டாவாதம் என்று தெரிந்தும் எழுததுணிந்த உங்க மணத்துணிச்சலுக்கு என் வணக்கங்கள்

    இந்தியாவும் இலங்கையும்... இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றா? இதனை நீங்கள் ஒரே தராசில் வைத்துதான் பார்க்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
  14. புலிகள் எப்போது விமானங்களை வாங்கினார்களோ, அப்போதுதான் ’’புலிகள் இலங்கைக்கு மட்டும் அச்சுறுத்தல் இல்லை; ஏனைய நாடுகளுக்கும் அச்சுறுத்தல், விமானங்கள் வாங்கிவிட்டார்கள்... இனி வான் வழி பறந்து உங்களையும்கூட எதிர்காலத்தில் தாக்கலாம்’’ என்று இலங்கை அரசு பிரசாரத்தை முன்னெடுக்க ஆரம்பித்தது. செப்டம்பர் தாக்குதல் பின்னணியில் ஏனைய நாடுகளிடம் இந்தப் பிரசாரம் எடுபட ஆரம்பித்தது.// உலகின் பெரும்பாலான, வல்லரசாகத் துடித்துக் கொண்டிருக்கும் நாடுகள் எல்லாம் விடுதலைப் புலிகளை விட பல லட்சம் மடங்கு ஆபத்து மிகுந்த ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள். அவர்களை எல்லாம் உலக தாதா அமெரிக்காவுக்குத் தெரியாதா?
    புலிகள் வைத்திருந்தது மட்டும் தான் ஒரு இன அழிப்புக்குக் காரணமாக மற்ற பிறா நாடுகள் உறுதுணையாக இருந்தது என்று சொல்வது... புலிகள் மேல் ஏதோ ஒரு உள்நோக்கம் உங்களுக்கு இருப்பது போலவே தேரிகிறது. நீங்கள் சு.சாமியை விடவும் ஆபத்தானவர். டக்ளசை விட துரோகமானவர்.
    எழுத்து விற்பனை பொருள் அல்ல நண்பரே

    பதிலளிநீக்கு
  15. //எந்த விதத்தில் பார்த்தாலும் தமிழீழத்துக்கு இந்தியா உதவும் என்று நினைப்பது மடமை// இந்தியா உதவக் கூடாது என்பது தான் உங்கள் உள்ளக் கிடங்கில் ஒளிந்து இருக்கு ஆசையா? தமிழ் ஈழம் அமைவதை இந்தியா தடுப்பதற்கான நேரடிக் காரணாக்கள் உங்களைப் போன்ற பத்திரிகையாளருக்குத் தெரியாமலா இருக்கும்?
    இந்த இன அழிப்பு போர், வெறும் இலங்கையின் உள்நாட்டுப் போரா? இல்லை இந்தியாவின் அன்னையின் பழவாங்கல் உணர்ச்சியின் ஒரு பகுதியா?

    சர்வதேச அளாவில் விவாதிக்கும் நீங்கள் ஏன் ராஜீவின் மரணத்துக்கும், இந்த போரில் இத்தனை இந்தியாவின் ஆதீத உறுதுணை நடவடிக்கைகலுக்கும் தொடர்பு இருக்க்கலாமோ என்று கூட யோசிக்க தயாராக இல்லை?

    பதிலளிநீக்கு
  16. எனது எதிர்வினை http://www.thiagu1973.blogspot.in/2013/03/blog-post.html

    பதிலளிநீக்கு
  17. கத்தியை எடுத்தவனெல்லாம் வீரனில்லை;
    பேனா எடுத்தவனெல்லாம் 'புடுங்கி' இல்லை....

    ஐயா சமஸ் புடுங்கி...

    ஒன்றை சொல்கிறேன் கேட்டுக்கொள்....

    இலங்கைதமிழருக்கு தனி ஈழம் அமைத்துக்கொடுத்தால் போதும்...வேறு ஆணி எதையும் புடுங்க வேண்டாம்... வேலைவாய்ப்பு, பணம், இதர எல்லாவற்றையும் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்...!

    கள யதார்த்த சூழலில் முதலில் உன் போன்ற பித்துக்குளி பீத்தல் ஆசாமிகள் உளறுவதை முதலில் நிறுத்தவேண்டும்..
    இந்தியா முழுதும் மக்களிடத்தே இந்த நிகழ்வுகளை கொண்டுசென்று, நமக்கான ஆதரவான மத்திய-மாநில அரசுகளை நிறுவினாலே போதும்... தனி ஈழம் கிடைத்துவிடும்...

    சீனா-அமெரிக்கா- எவனாக இருந்தாலும் இந்திய முடிவில் தான் ஈழமெல்லாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. poi pulla kuttiyai paddika vai

      நீக்கு
    2. நீ என்னடா சமசுக்கு கொடுக்கா? உண்மையா சொன்னா கசக்குதோ?

      நீக்கு
  18. @Tamilan:
    பாகிஸ்தான் அது போலவே நம்மிடம் காஷ்மீரை தனி நாடக கேட்டால் இந்தியாவல் கொடுக்க முடியுமா???
    நம்மக்கு அங்கு தமிழர்களின் சமாதனமான வாழ்கை முக்கியம் அதற்கான வழிகளை அறிவதை விட்டு விட்டு தனி இழம் பற்றி பேசுவது மேலும் எறியும் நெருப்பில் எண்ணெய் உற்றுவது போல் ஆகும் . திரு சாமா வின் கருத்தை உண்மையில் எந்த ஸ்ரீலங்கா தமிழனும் வரவேற்பான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்களையும் சக மனிதர்களாக பாருங்கள், என்று இவ்வளவு ஆண்டு காலமும் கேட்டு கேட்டு அழுத்துப்போய்தான், தனி ஈழம் வேண்டும் என்ற நிலைக்கு, இலங்கையில் வாழும் தமிழன் தள்ளப்பட்டான். எடுத்த எடுப்பிலேயே தனி நாடு வேண்டும் என்று எந்த தமிழனும் கேற்கவில்லை

      நீக்கு
  19. @தமிழன் :
    உண்மையில் நீ யோகியனாக இருந்தால் ஏன் காஷ்மீர் பண்டிதர்களுக்காகவோ அல்லது அஸ்ஸாம் tribel பிரச்சனைக்காக குரல் கொடுக்கவில்லை ? நம் நாடே இங்கு நாறுகிறது இது தெரியாமல் பிடுங்கி மாதிரி பேசுகிறாய் .

    நான் இலங்கை தமிழர்களுக்கு எதிரானவன் அல்ல அவர்களுக்கு நாம் குரல் கொடுக்க வேண்டும் நமது குரல் அங்கு அவர்கள் வாழ்வில் அன்பையும் சமாதானத்தையும் ஏற்படுத்த வேண்டுமே தவிர வேறு எதையும் அல்ல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @gopal
      காஸ்மீர், இஸ்ரேல், அஸ்ஸாம், தர்மபுரி மற்றும் பல பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம்.. நான் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரானவன்..
      என் யோக்கியத்தைப்பற்றி பேச உனக்கு அருகதை இல்லை கோவாலு...

      இலங்கையின் வரலாற்றில் இனப்படுகொலைகள் புதிது அல்ல...
      நீ கூறும் புடுங்கித்தனம் 60 ஆண்டுகள் விடுதலை போராட்டத்தை அடியோடு மூடி மறைப்பதாக உள்ளது...

      தேவை தனி நாடு.. இலங்கை பிரச்சனையை முழுதாக தெரிந்த எவனும் "ஒன்றுபட்ட இலங்கை" புராணம் பாடமாட்டான்...

      நீக்கு
    2. கள எதர்த்தம் நிச்சயம் புரிந்து கொண்டதுனால் தான் ....புலிகள் ஆயுதத்தை ஒரு வழியாக தேர்ந்து எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கபட்டர்கள் ..ஒன்றை தெரிந்துக் கொள்ளுங்கள் அன்று இந்திய மக்கள் வேண்டியது அடிமை தனத்திற்கு எதிரான விடுதலை....இந்திய விடுதலை போராட்டமும் ஈழப் போராட்டமும் ஒன்று அல்ல... இந்திய விடுதலை வரலாற்றில் மொத்தமாய் கூட்டினால் கூட ஒரு லட்சம் வீரர்கள் மரணித்து இருக்க மாட்டார்கள் ...ஒரே ஒரு தடவை கூட வானில் இருந்து குண்டு வீசப்படவில்லை....அடுத்து நீங்கள் சொல்வது போல் போராட வேண்டியது ஈழத் தமிழ் மக்கள் தானே அன்றி நாம் இல்லை என்று ....ஒன்றை தெளிவு படுத்துங்கள் ...இன்று கொழும்பில் ஈழத் தமிழ் மக்கள் ஒரு ஆர்ப்பாட்டம் ,அல்லது ஒரு பொதுக்கூட்டம் நடத்த முடியுமா???இதற்க்கு பதில் நீங்கள் சொல்லலாம் புலிகள் உருவாக்கிய நிலை என்று ...எதிரிக்கு எந்த மொழி புரிகிறதோ அந்த மொழியில் தான் பேச முடியும் அதே மொழியில் தான் அவர்களும் பேசினார்கள் ....கொழும்பில் வான் தாக்குதல் நடத்திய புலிகள் கணக்கு தப்பியதால் அறுநூறு சிங்கள உயிர் தப்பியதாக கூறிய நீங்கள் அதை சிங்கள ராணுவம் சுட்டு வீழ்த்தியதாகவும் கூறி உள்ளீர்கள்...கொழும்பில் வான் தாக்குதல் நடத்தியவர்கள் கரும்புலிகள் நிச்சயம் திரும்பி வரவே மாட்டோம் என்று அவர்களுக்கு உறுதிபட தெரியும் ..இது ஒரு புறம் இருக்க சிங்கள ராணுவம் போல அப்பாவி மக்கள் மேல் குண்டு வீச
      ஒன்றும் அந்த தாக்குதல் நடத்த பட வில்லையே...இது வரை எத்தனை அப்பாவி சிங்கள மக்கள் புலிகள் நடத்திய தாக்குதலில் மரணித்தார்கள் என்று சொல்ல முடியுமா????இறுதியாக இந்திய,அமெரிக்க போன்ற எந்த நாடும் உதவாது என்று கூறி முடித்து உள்ளீர்கள் ...நிச்சயம் உதவாது என்று எமக்கு தெரியும் ....அதனால் தானே நாங்கள் எங்கள் மண்ணில் போராடுகின்றோம்....

      நீக்கு
  20. நல்ல கருத்துக்கள். எனக்கு, ஹைடி (Haiti) தீவில் இயற்கை விளைவித்த அகோரத்திற்கு உலகத்தின் பதில் தான், நினைவிற்கு வருகிறது, இதனை போராட்டம் நடத்தும் அனைவரும், தங்கள் சக்தியை திரட்டி, முடிந்தால் அங்கு சென்று, கட்டு மான பணியில் ஈடுபடலாம். அவர்களுக்கு தேவை, வாழ்வாதாரங்கள் தான், அதை அளிக்க அரசு தேவை இல்லை, நாம் எல்லோரும் சேர்ந்தால் செய்ய முடியும், ஏன் இதை செய்ய நம் எவருக்கும் தோணவே இல்லை?

    பதிலளிநீக்கு
  21. மிக தெளிவான கட்டுரை அருமை !..........

    பதிலளிநீக்கு
  22. முற்றிலும் உண்மை! யதார்த்த நிலையறியாமல் உணர்சிமிகுதியலே இங்கே பெரும்பாலான போராட்டங்கள் நிகழ்கின்றன!

    பதிலளிநீக்கு
  23. இங்கு யதார்த்த நிலை புரிந்தவர்கள் அனைவருமே தற்காலிக முடிவுக்குதான் பரிந்துரை செய்கிறார்கள். அது இறுதி முடிவோ அல்லது போராட்டத்தின் நோக்கமான முடிவோ அல்ல.

    தேவை தனி ஈழம் அதற்கான வழியை மட்டும் தேடுவது நன்மை பயக்கும். மீண்டும் சிங்களனோடு ஒண்டு குடித்தனம் நடத்த தமிழர்கள் யாரும் தயாராக இல்லை என்பதே உண்மை.l

    பதிலளிநீக்கு