ஒரு பள்ளிக்கூடத்தின் கதை



  
        இ
ந்தியாவின் சிறந்த பள்ளிகளில் ஒன்று அது. ஆச்சர்யம்... அதை ஒரு நாளும் அவர்கள் விளம்பரப்படுத்திக்கொண்டது கிடையாது. ஏனென்றால், அவர்களுக்குப் போட்டிகள் ஒரு பொருட்டல்ல. வெற்றிகள் பொருட்டல்ல. பரிசுகளும் பொருட்டல்ல!
 

         ஐந்து வயது நிரம்பிய ஒரு குழந்தை ‘‘எனக்கு மூடு சரியில்லை, வகுப்பில் உட்கார்ந்திருக்கப் பிடிக்கவில்லை’’ என்று ஆசிரியரிடம் சொல்லி--விட்டு, பள்ளியின் பூங்காவில் மரத்தடியில் தனிமையில் உலவ முடியும் என்றால், அதுதி ஸ்கூலில்மட்டுமே சாத்தியம். சென்னையில் 1973-ல் நிறுவப்பட்ட இந்தப் பள்ளி, ஜே.கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை நடத்தும் 9 பள்ளிக்கூடங்களில் இரண்டாவதாகத் தொடங்கப்பட்டது.  ‘‘சரியான கல்வியானது, தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்ள ஊக்குவிக்கும்போதே, அதைவிட மிக முக்கியமான ஒன்றைச் சாதிக்க வேண்டும். அதாவது, வாழ்வின் முழுப் பரிமாணத்தை மனிதன் உணரும்படிச் செய்ய வேண்டும்’’ என்று சொல்வார் ஜே.கே. ‘‘போர்கள் அற்ற அமைதியான உலகம் வேண்டும் என்றால், அது முதலில் போட்டிகள் அற்ற உலகமாக இருக்க வேண்டும்’’ என்பது ஜே.கே-வின் நிலைப்பாடு.  போட்டிகள் கிடையாது; தேர்வுகள் கிடையாது; ஒப்பீடுகள் கிடையாது; வெற்றிகள் கிடையாது; தோல்விகள் கிடையாது; பரிசுகள் கிடையாது; தண்டனைகளும் கிடையாது என்று ஜே.கே-வின் எண்ணங்களுக்கு ஏற்ப பள்ளிக்கூடங்களை நடத்துவது என்பது இன்றைய சூழலில் அவ்வளவு எளிமையானது அல்ல. ஒட்டுமொத்த உலகின் போக்குக்கும் எதிர் திசையில் பயணிப்பதற்கு ஒப்பானது. பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிப்பில் மட்டும் அல்ல; விளையாட்டிலும் பாலினப் பாகுபாடின்றி, சேர்ந்தே பங்கேற்கும் மாணவ - மாணவியரால் எப்படி விகல்பம் இல்லாமல் பழக முடியும்? எட்டாம் வகுப்பு வரை தேர்வுகளே இல்லாமல் படிப்பவர்களால், பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எப்படி வெற்றிகரமாக எழுத முடியும்? அசந்தால், நம் காலின் மேலேயே கண நேரத்தில் ஏறி நின்றுவிடக் கூடிய இன்றைய போட்டிச் சூழ் உலகை, போட்டிகளைச் சந்திக்காமல் வளரும் குழந்தைகள் எதிர்கொள்வது எப்படி? இப்படி எண்ணற்ற கேள்விகளுக்கு, குழந்தைகளைப் பதில்களாக்கி நடமாடவிட்டு இருக்கிறது இந்தப் பள்ளிக்கூடம்.

        ஆசிரியர்களை அண்ணா, அக்கா என்று அழைக்கிறார்கள் குழந்தைகள். ஆசிரியர்கள் மேல் துளி பயம் இல்லாமல் அவர்களை அணுகுகிறார்கள். எதைப் பற்றி, யாரிடம் வேண்டுமானாலும் கேட்கும் சுதந்திரம் அவர்களுக்கு இருக்கிறது. அவரவருக்கு விருப்பமான உடைகளை அணிந்து இருக்கிறார்கள். பாடங்களைப் படிக்கிறார்கள், பாட்டு - நடனம் கற்றுக்கொள்கிறார்கள், ஓவியங்கள் வரைகிறார்கள், விளையாடுகிறார்கள், மரத்தடியில் அமர்ந்து விவாதம் நடத்துகிறார்கள், நெசவு நெய்கிறார்கள்... எல்லாமும் அவர்களுடைய  விருப்பப்படியே நடக்கிறது. ஆனால், அவர்களிடமிருந்து வெளிப்படும் ஆற்றல் பிரமிக்கவைக்கிறது.
    
  
ஆசிரியர்கள் ஒவ்வொருவருமே ஆச்சர்யப்படுத்துகிறார்கள். இந்தப் பணிக்காக மிகப் பெரிய பதவிகளை, சம்பளத்தை எல்லாம் விட்டுவிட்டு பணியாற்றுபவர்கள் நிறையப் பேரைப் பார்க்க முடிகிறது. எல்லோரிடமுமே நிதானத்தையும் தெளிவையும் பார்க்க முடிகிறது. பள்ளி மைதானத்தில், புழுதி கால்களோடு சின்ன பையனைப் போல், விளையாட்டு ஆசிரியர் வினயன் ஓடிக்கொண்டிருக்கிறார். ‘‘எவ்வளவு வசதிகள் இருந்தாலும் சரி... ஒரு விளையாட்டைச் சுவாரஸ்யமாக நீ விளையாட வேண்டும் என்றால், உன்னை எதிர்த்து ஆட ஆட்டக்காரன் வேண்டும். இதுதான் விளையாட வரும் மாணவர்களிடம் நாங்கள் சொல்லும் முதல் செய்தி. எல்லோருக்குமே எல்லோருமே முக்கியம் என்று புரிந்துகொள்வதைவிட வாழ்க்கையில் நல்ல விஷயம் என்ன இருக்க முடியும்?’’ என்று கேட்கிறார் வினயன். ஓவிய ஆசிரியர் தாரித் பட்டாச்சார்யா இன்னும் வியக்கவைக்கிறார். கரிக்கட்டைகள், களிமண் என்று கைக்குக் கிடைக்கும் பொருட்களை எல்லாம் நம்முடைய முன்னோர்கள் எப்படி அற்புதமான மையாகப் பயன்படுத்தினார்கள் என்பதைக் கற்றுக்கொடுத்திருக்கிறார். ஓவியக்கூடம் அமைந்திருக்கும் பகுதியில் உள்ள  சுவர்கள் முழுவதும் ஓவியங்களாக இருக்கின்றன. தேர்ந்த தொழில்முறை ஓவியர்களின் ஓவியங்களுக்குச் சவால் விடுகின்றன அவை. ‘‘காகிதங்களில் வரையக் கற்றுக்கொடுக்கும்போது, குழந்தைகளுக்கான படைப்பு எல்லை சுருங்கிவிடுகிறது. அதனால்தான், மிக நீளமான சுவர்களை உங்கள் திரைகள் ஆக்கிக்கொள்ளுங்கள் என்று குழந்தைகளுக்குச் சொல்லி இருக்கிறேன்’’ என்று சிரிக்கிறார் பட்டாச்சார்யா. குழந்தைகள் இங்கே படிக்கும்போதும் சரி, விளையாடும்போதும் சரி... அந்தந்த வகுப்பு சார்ந்து பங்கேற்பது இல்லை. ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரை, ஐந்து முதல் ஏழாம் வகுப்பு வரை என்று கலந்து கலந்துதான் பங்கேற்கவைக்கப்படுகிறார்கள். ‘‘வாழ்க்கையின் எல்லாக் காலகட்டங்களையும் எல்லா வயதினருடனும் சேர்ந்தேதானே எதிர்கொள்கிறோம்; எனில், பள்ளிக்கூடமும் அப்படித்தானே இருக்க வேண்டும்?’’ என்கிறார்கள். குழந்தைகள் சோழர்களைப் பற்றிப் படிக்கும்போது தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்கிறார்கள். அவர்களுக்கு காந்தியைப் பற்றிச் சொல்லிக்கொடுக்கும்போது வார்தாவுக்கு அழைத்துச் செல்கிறார்கள். ‘‘கல்வி என்பது அடிப்படையில் உணர்தல்தான்’’ என்கிறார் முதல்வர் ஜெயஸ்ரீ நம்பியார். 

 
        பொதுத்
தளத்தில்தி ஸ்கூல்தொடர்பாக ஒரு பிம்பம் உண்டு. ‘‘பணக்கார வீட்டுக் குழந்தைகள் படிக்கும், பணக்காரர்களுக்கான பள்ளிக்கூடம்’’ என்பதே அது. ஆனால், கிட்ட நெருங்கிப் பார்க்கும்போது அது உண்மை இல்லை என்றே தோன்றுகிறது. கோடீஸ்வரர்களின் பிள்ளைகளின் மத்தியில், பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய நிலையில் உள்ள குழந்தைகளும் கல்வி உதவித்தொகையுடன் படிப்பதைப் பார்க்க முடிகிறது. தவிர, தன்னுடைய மாணவர்களைத் தாண்டியும் கல்விச் சேவையை எடுத்துச் செல்கிறதுதி ஸ்கூல்’. நாட்டின் பொதுக்கல்வித் துறையில் தமிழகம் கொண்டுவந்த முன்னோடித் திட்டமான செயல்வழிக்கற்றல் திட்டம் இங்கிருந்து உருவாக்கம் பெற்றதுதான். அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்புப் பயிற்சி, விளிம்பு நிலையில் இருக்கும் பள்ளிகள் தத்தெடுப்பு போன்ற சில பணிகளையும் முன்னெடுக்கிறது.


       
நம் நாட்டில் 66 ஆண்டுகளாக குழந்தைகள் சுதந்திரத்தைப் பற்றியும் மாற்றுக் கல்விமுறையைப் பற்றியும் பேசிக்கொண்டே இருக்கிறோம். அரசு ஏன்தி ஸ்கூல்முறையைப் பின்பற்றக் கூடாது? இந்தியாவின் நான்கில் ஒரு பள்ளி தனியார் பள்ளி என்கிற அளவுக்கு அரசுப் பள்ளிகளுக்கு இணையாகத் தனியார் பள்ளிகள் வளர்ந்துவரும் காலம் இது. ஏன் தனியார் பள்ளிகள் இந்தக் கல்விமுறையை முன்னெடுக்கக் கூடாது?

ந்திகன் மார்ச், 2013.



ஒரு விண்ணப்பம்:  சென்னையில், தியாஸபிகல் சொசைட்டிக்குச் சொந்தமான இடத்தில் இதுவரை செயல்பட்டுவந்த  'தி ஸ்கூல்' இப்போது அந்த இடத்தைக் காலி செய்ய வேண்டிய சூழலில் இருக்கிறது. நிரந்தரமான ஓர் இடத்தில் செயல்பட  புதிய பள்ளிக்கட்டடம் கட்டும் திட்டத்தை ஜே.கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளையினர் மேற்கொண்டுவருகின்றனர். அதற்கு நிதி உதவி அவர்களுக்குத் தேவைப்படுகிறது. இப்படி ஒரு பள்ளிக்கூடம் நம்மூரில் ஒரு நிரந்தர இடத்தில் நீடிப்பது முக்கியம். எனவே, முடிந்தவர்கள் அவசியம் உதவுங்கள்

விவரங்களுக்கு:
தொலைபேசி எண்: 044 - 2491 5845, 2446 5144
மின்னஞ்சல்theschool.kfi.chennai@gmail.com
இணையதளம்: http://www.theschoolkfi.org/index.php

காசோலைகளை அனுப்ப வேண்டிய முகவரி:

The Secretary,
Krishnamurti Foundation India,
Vasanta Vihar,
124 - 126, Greenways Road,
RA Puram, Chennai 600 028.

வங்கிக் கணக்கு விவரம்:
For The School Relocation Fund
Name of beneficiary: Krishnamurti Foundation India
Account Number: 01411450000021
Bank Name and Branch: HDFC Bank, RA Puram, Chennai 600 028
Account Type: Domestic, Savings
IFSC Code: HDFC0000141
 

11 கருத்துகள்:

  1. இப்படிப்பட்ட பள்ளிகளுக்கு உதவுவதும் ஊக்குவிப்பதும் கடப்பாடு.
    - சேதுராமன், சென்னை.

    பதிலளிநீக்கு
  2. இங்கு படிக்க பணம் அதிகம் செலுத்த வேண்டும் . இந்த அளவு வசதிகள் இருந்தால் எல்லா பள்ளிகளும் அப்படி இருக்கும். அவர்கள் வசூலிக்கும் தொகை பற்றி கூறவில்லை. அனைவரும், இந்தஎழுத்தாளர் உட்பட ஒழுங்காக வரி கட்டினால், அனைவருக்கும் இதுபோன்ற கல்வி சாத்தியமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவாக, என்னுடைய கட்டுரைகள் தொடர்பான எதிர்வினைகள் எதற்கும் வலைப்பூவில் நான் பதில் அளித்தது இல்லை. என்றாலும், இந்த விமர்சனத்துக்கு அவசியம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். காரணம்… இந்தப் பார்வை பலருக்கும் மனோபாவம் சார்ந்த ஒரு பிரச்னையாக இருப்பது.

      முதலாவதாக, பெரும் பணக்காரர்களால் மட்டுமே படிக்க வைக்கக் கூடிய அளவுக்கான அளவுக்குக் கடுமையான கட்டணம் இந்தப் பள்ளியில் கிடையாது. ஒரு குழந்தைக்கு சுமார் ரூ. 50 ஆயிரம் ஆண்டுக் கட்டணமாக வசூலிக்கிறார்கள். சிற்றுண்டி, மதிய உணவு உட்பட. இங்கு ஒரு குழந்தைக்கு கல்வியோடு கூடுதலாக அளிக்கப்படும் விளையாட்டு, ஓவியம், இசை, நாட்டியத்தில் தொடங்கி நெசவு வரையிலான பயிற்சிகளோடு ஒப்பிடுகையில் இந்தத் தொகை மிக நியாயமானது (இந்தப் பயிற்சிகளை எல்லாம் தரும் ஆசிரியர்களுக்கு நியாயமான சம்பளத்தை யார் வழங்குவார்கள்?). தவிர, இந்தத் தொகையைக் கட்டினால்தான் குழந்தையைப் படிக்கவைக்க முடியும் என்ற சூழல் இங்கு இல்லை. உங்களால் இவ்வளவுதான் கட்ட முடியும் என்ற சூழல் இருப்பின் அவர்களே கல்வி உதவித்தொகை பெற்று படிக்கவைக்கிறார்கள். சென்னையின் பிரபலமான பள்ளிகளில் எல்.கே.ஜி-க்கு வசூலிக்கப்படும் நன்கொடை ரூ. 15 லட்சம் என்ற உண்மையுடன் பொருத்திப் பார்த்தால், இந்தப் பள்ளியின் நோக்கம் நிதியா கல்வியா என்பது புரியும்.

      இரண்டாவதாக, ஓர் எழுத்தாளர் ஒரு பள்ளிக்கூடத்தைப் பற்றி எழுதினால், அது ஏழைகள் படிக்கும் பள்ளிக்கூடமாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற எண்ணமும் ஒரு சர்வாதிகார மனப்பான்மைதான். பணக்காரர்கள் ஒன்றும் வெறுக்கப்பட வேண்டிய விலங்குகள் அல்ல. இன்னும் சொல்லப்போனால், நூறு தொழிலாளிகளின் குழந்தைகளுக்கு அறம் சார்ந்த மதிப்பீடுகளைக் கற்றுக்கொடுப்பதைவிட முக்கியமானது ஒரு பணக்காரனின் குழந்தைக்கு அறம் சார்ந்த மதிப்பீடுகளைக் கற்றுக்கொடுப்பது என்று நான் நினைக்கிறேன். அதாவது, நாம் தர்மத்துக்குக் கட்டுப்பட்டவனாக இருப்பதைவிடவும் நம்முடைய முதலாளிகள் தர்மத்துக்குக் கட்டுப்பட்டவர்களாக இருந்தால், விளையும் பயன் அதிகம்.

      மூன்றாவதாக, நான் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் சரியாக வரி கட்டுகிறேன். இந்திய அரசின் பிரச்னை வருமானம் அல்ல. ஆண்டுக்கு 5 லட்சம் கோடிகளை கார்பரேட் நிறுவனங்களுக்கு வரிவிலக்காக வாரி வழங்கும் அரசாங்கம் நம்முடையது. அரசாங்கத்துக்கு கல்வித் துறை மீது கரிசனமோ, தொலைநோக்குப்பார்வையோ இல்லை என்பதுதான் நம்முடைய பிரச்னை.
      இந்த வாசகி ஓர் இளம்பெண் என அறிகிறேன். அவருக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். விமர்சிப்பது தவறல்ல. ஆனால், போகிறபோக்கில் எல்லோர் மீதும் புழுதிவாரித் தூற்றிவிட்டுப்போகக் கூடாது. நம்முடைய சமூகத்தில் இந்தப் பள்ளிக்கூடம் போன்ற ஓர் அமைப்பு இருப்பது மிக முக்கியமானது. தேசிய அளவில் ஒரு சிறந்த பள்ளி நம்மூரில் இருக்கிறது என்பது நாம் பெருமைப்பட வேண்டிய ஒன்று. இந்தச் சின்ன வயதில் இந்த வாசகி நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.

      நீக்கு
    2. @Queen of Hearts: The School KFI certainly does not charge high fees compared to most private schools in the city. The teachers' pay is less compared to the pay of teachers in govt-schools. Parents and teachers flock to the school mostly out of genuine love for the kind of learning it encourages among children. These are verifiable facts. As for facilities in the school, they hardly exist. No computer-based teaching, no smart boards, nothing. But that is more than compensated by the quality of teachers it attracts and the freedom it provides them in teaching. At The School KFI the focus is on teaching children, and not teaching subjects. It is sad that you chose to bad mouth the school without even knowing the facts. Pity you.

      நீக்கு
  3. ahaa...enna oru arumayana vishayam!!...en manadhil ethanayo natkal ippadi yosithirukiren....oru school ippadi ean irukakoodadhu enru....ippadi onru unmayaga irupadhu ippodhuthan arigiren... ezhuthalar SAMAS avargaluku en parattugal ithai facebook moolam parapiyatharku....Nichayam ithil nanum oru pangaga iruka virumbugiren.....
    savithiri karunanithi

    பதிலளிநீக்கு
  4. SIR,
    I AM READY TO OFFER MY PLACE AT PALLIKARANAI, ALREADY A RUNNING SCHOOL, UPTO FIFTH STANDARD.
    I AM INTERESTED IN TAKING OVER THE SAID SCHOOL ALONG WITH TEACHERS AND STUDENTS AND THE SAME
    WILL BE MAINTAINED. OUR PROPERTY IS FOUR ACRES SITUATED NEAR THE FOREST AREA IN NARAYANAPURAM.
    BEHIND THE MARSHLAND OF NEARLY 200 ACRES.
    I SPOKE TO THE TRUSTEE ONCE, AND HE SAID HE WILL LET ME KNOW., I AM WAITING FOR THE CALL
    PLEASE VISIT THE WEBSITE WWW.FACEBOOK.COM/DSR SHARANALAYA PUBLIC SCHOOL

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Sir,
      It looks like you are offering for an 'aggressive take over' of 'the school' while 'the school' is requesting for help alone.
      You may need to reconsider your offer!.

      நீக்கு
  5. "தி ஸ்கூல் " பற்றிய இன்னும் சொல்லப்படாத நல்ல விஷயங்கள் உள்ளன.அவை இந்தக் கட்டுரையில் இல்லை. தமிழ் நாடு அரசின் செயல் வழிக் கற்றல் , சமச்சீர் கல்வி இவற்றில் இந்தப் பள்ளியின் பங்கு முக்கியமானது. சொல்லப்போனால் அரசுப் பள்ளிகளின் செயல் வழிக் கற்றல் "rishi valley method " என்றே சொல்லப்பட்டது.( rishi valley - KFI -இன் மற்றொரு பள்ளி.)
    இது பற்றி மேலும் தெரிந்து கொள்ள இந்தக் காணொளி-யைச் சொடுக்குங்கள் https://www.youtube.com/watch?v=I4BWTJtKakA
    இங்கு கொடுக்கப் படும் மிகத் தரமான ஆசிரியர் பயிற்சிக்கு கட்டணம் கிடையாது; Stipend கொடுக்கிறார்கள் ; மதிய உணவு மற்றும் மாலை டிபன் உடன். (மற்ற இடங்களில் 50000 ரூபாய்க்கு மேல் வசூலிக்கிறார்கள்).

    இங்கு பணக்காரர்களின் குழந்தைகள்-தான் அதிகம் படிக்கிறார்கள் என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் பணக்காரர்கள்தான் படிக்க வைக்க முடியும் என்பது உண்மை அல்ல.நடுத்தர வர்க்கம் இந்தப் பள்ளியை நாடாததற்க்குக் காரணம் பெரும்பான்மை மக்களால் ஜீரணிக்கவே முடியாத கல்வி முறைதான்; பணம் காரணம் அல்ல; ஏன் மிகப்பெரும் பணக்காரர்களால் கூட இந்தக் கல்வி முறை-யை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. "Rewards and Punishments , examinations , comparisons , competitions" இவை எல்லாம் இல்லை என்றால் நம்மில் எத்தனை பேர் இதை விரும்புவோம்.

    இதற்கு சாட்சி இந்தப் பள்ளிக்கு வரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையே! மற்ற எல்லா வியாபாரிகளின் பள்ளிகளை விட மிக மிகக் குறைவாகவே விண்ணப்பங்கள் வருகின்றன என்கிறார்கள். ஆனால் இதுதான் இந்தியாவின் பள்ளி அல்லது சிறந்த பள்ளிகளில் ஒன்று! எவ்வளவு பெரிய ஆச்சர்யம் !

    பணக்காரர்கள், முதலாளிகள் என்ற வாதம் என்பது இங்கே தேவையே இல்லை என்பது எனது கருத்து . That should be in a different forum. "Education Methodology " - பற்றிய விழிப்புணர்வுதான் முக்கியம் இங்கே, இப்போது.

    இன்னும் இன்னும் நிறைய இருக்கிறது! வாய்ப்பு கிடைத்தால் "தி ஸ்கூல் " பெற்றோர்களிடம் பேசிப் பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  7. கல்விமுறை சார்ந்த பல புதிய முயற்சிகளுக்கு அச்சாரம் இட்ட பள்ளி என்ற நோக்கில் பார்ப்பது ஒரு முக்கியமான பார்வை.
    அதை இந்த உரையாடலில் வி ட் டுவிடக் கூடாது என்பதற்கான பதிவு இது ...

    1. செயல் முறை கல்வி - (Activity Based Learning)
    2. குழந்தைகளை மையமாகக்கொண்ட கற்பிகுக்கும் முறை - (Child Centric Learning
    3. எதனையும் மாணவ / மாணவிகள் ஆராய்ந்து அறிந்துகொள்ள உத்வேகப்படுத்தும் / தூண்டும் முறை - (Emphasizing Enquiry in all forms of learning)
    4. அவர்களுடைய பத்திரிக்கை மூலமாக கல்வி முறை சார்ந்த அனுபவங்களின் பகிர்தல் - Journal of the Krishnamurti Schools (http://journal.kfionline.org/)
    5. எந்தவித கொள்கைகளையும் திணிக்காமல் (No Propaganda), சுயமாய் சிந்தித்து
    செயல்படு வதற்கான வாய்ப்புகளை ஒவ்வொரு கணத்திலும் ஏற்படுதிக்கொடுக்கும் ஒரு கட்டமைப்பு ...

    இத்தகைய சூழலை ஏற்படுத்திக்கொடுக்கும் ஒரு பள்ளிக் கூடத்திற்கு உதவிட வேண்டுமா என்று ஒரு கேள்வியை எழுப்பிப் பாருங்கள் ?

    ஓரளவில் ஒதுங்கி, சின்ன வட்டத்தில் இயங்கிகொண்டு இருக்கின்ற இந்தப் பள்ளிகூடத்திற்கு, இத்தகைய தருணங்களில், பெரிய அளவில் ஒரு பொறுப்பு உணர்வை உணர்த்தக் கிடைத்த வாய்ப்பாகக்கூடப் பார்க்கலாம்

    கடைசியாக சமஸ் கட்டுரையிலிருந்து மீண்டும்
    ‘‘போர்கள் அற்ற அமைதியான உலகம்வேண்டும் என்றால், அது முதலில் போட்டிகள் அற்ற உலகமாக இருக்க வேண்டும்’’ என்பது ஜே.கே-வின் நிலைப்பாடு.

    இந்தியாவின் பட்ஜெட் மட்டுமே அல்லாது உலகின் எந்த நாட்டின் பட்ஜெட்டிலுமே பெரும்பன்மையான நிதி, ராணுவம் மற்றும் சண்டைக்காக என்றும் ஒதுக்கப்படும் காலகட்டத்தில் ... தயவு செய்து மீண்டும் ஒருமுறை மேற்குரிய கட்டுரை வரிகளை படியுங்கள்...யோசியுங்கள் ... தொடருங்கள் உங்கள் விவாதங்களை ....

    பதிலளிநீக்கு
  8. பள்ளியைப் பற்றி அறிந்துகொண்டேன்.. !!!

    பதிலளிநீக்கு