கூத்தாநல்லூர் தம்ரூட்





      னக்கென தனிப் பாரம்பரியம் கொண்ட ஊர் கூத்தாநல்லூர்நகரம் என்று அழைக்கப்பட்டாலும் சற்றே பெரிய கிராமமாகக் காட்சியளிக்கும் கூத்தாநல்லூர்  ஒரு வித்தியாசமான ஊரும்கூட. சுற்றுவட்டாரக்காரர்களால்குட்டி வளைகுடா’ன்று ஆழைக்கப்படும் கூத்தாநல்லூரின் பெரும்பாலான ஆண்கள் வளைகுடா  நாடுகளில் இருக்கிறார்கள். தம்முடைய வாழ்நாளின் பெரும்பாலான நாட்களை வளைகுடா  நாடுகளிலேயே கழித்துவிடுவதாலோ  என்னவோ அந்நாடுகளின் கலாச்சாரம் கூத்தாநல்லூர்க்காரர்களின் ஒவ்வொரு  விஷயத்திலும் ஏதேனும் ஒரு வகையில் பிரதிபலிக்கிறது. கூத்தாநல்லூருக்குச் செல்பவர்களுக்கு மூன்று அனுபவங்கள் முக்கியமானவை. நீண்ட வீதிகளின் இருமருங்கிலும் மாளிகைகளாய்க் காட்சியளிக்கும் வீடுகள்; மையத்தில் பிரியாணியைக் குவித்து சுற்றிலும் நால்வர் அமர்ந்து சாப்பிடும் நல்விருந்து, ஒருபோதும் திகட்டாத வீட்டுப் பணியாரம் - தம்ரூட்.

            கூத்தாநல்லூரில் அந்தக் காலத்திருந்தே வீட்டுப் பணியாரம் மிகவும் பிரசித்திபெற்ற ஒரு பலகாரம். பெயரில் என்னவோ பணியாரம் என்றிருந்தாலும் நாம் வழக்கமாகக் குறிப்பிடும் பணியார வகையைச் சேர்ந்தது அல்ல இது; விசேஷமானது. பண்டிகை நாட்கள், பிறந்த நாள், நிச்சயதார்த்தம், திருமணம், மணமக்கள் அழைப்பு, வெளிநாட்டுக்கு வழியனுப்பும் நிகழ்ச்சி... இப்படி விசேஷமான தருணங்களில் மட்டுமே வீட்டுப் பணியாரம் செய்வார்கள். கூத்தாநல்லூர்க்காரர்கள் யாரேனும் திருமண அழைப்பின்போது அழைப்பிதழுடன் வீட்டுப் பணியாரமும் வைத்து உங்களை அழைத்தால் அவர் உங்களை மிக முக்கியமானவராகக் கருதுகிறார் என்று பொருள். அதாவது வெற்றிலை, பாக்கு வைத்து அழைப்பதுபோல் இது ஒருவகை கௌரவம்!

           ரவை, முட்டை, பால்திரட்டு, ஜீனி, நெய், முந்திரி சேர்த்துச் செய்யப்படும் இந்த வீட்டுப் பணியாரம் எல்லோருக்கும் கைகூடாது. அதனாலேயே, அந்தக் காலத்தில் வீட்டுப் பணியார ஆத்தாக்கள்  நிறைய பேர் இப்பகுதியில் இருந்தார்கள். யாருக்குத் தேவையோ அவர்களுடைய வீட்டுக்கே வந்து இவர்கள் வீட்டுப் பணியாரம் செய்து தருவார்கள். விசேஷ நாட்களில் இவர்களுக்கு ஏகக் கிராக்கியாக இருக்கும். ஆனால், கூத்தாநல்லூரிலேயே இப்போது வீட்டுப் பணியாரம் என்ற பெயரையும் அதன் கதையையும் அடுத்து வரும் தலைமுறைக்குத் தெரியாமல் போகும்படி செய்துவிட்டார் ஒருவர். அவர்எம்.. முஹம்மது தமீம்! 

                அவர் தொடங்கியமௌலானா பேக்கரி’யில் வீட்டுப் பணியாரம் தம்ரூட்டாகப் புதிய அவதாரமெடுத்த இந்த 19 ண்டுகளில் வீட்டுப் பணியார ஆத்தாக்கள் காணாமலே போய்விட்டார்கள். மேலே சாக்லேட் நிறத்திலும் உள்ளே மஞ்சள் நிறத்திலும் கேக்போல இருக்கும் தம்ரூட்  திகட்டாத ஒரு பலகாரம். நினைத்து நினைத்துச் சாப்பிட அழைக்கும் தம்ரூட்டின் கவர்ச்சிக்குக் காரணம் அதன் சுவை மட்டுமல்ல; அதில் எப்போதும் உறைகொண்டிருக்கும் உருகும் நெய்யின் மணமும்கூட. இந்த மணம் கூத்தாநல்லூர்க்காரர்களை மட்டும் கட்டிப்போடவில்லை. கூத்தாநல்லூர் செல்லும் எவரையும் கட்டிப்போட்டுவிடுகிறது

           ‘மௌலானா பேக்கரி’ உரிமையாளர் தமீம் சொன்னார்: "மொஹல் உணவு வகையைச் சேர்ந்த வீட்டுப் பணியாரம், இந்த மக்களின் கொண்டாட்டங்களிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாத ஒன்று. நாங்கள் இந்தக் கடையைத் தொடங்கியதும் வித்தியாசமாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று தோன்றியபோது வீட்டுப் பணியாரமே முதலில் ஞாபகத்துக்கு வந்தது. அதுவரை வீடுகளில் மட்டுமே செய்யப்பட்டுவந்த வீட்டுப் பணியாரத்தைக் கடையில் செய்து விற்கத் தொடங்கினோம். அதன் ருசியைக் கூட்டியதுடன் சீக்கிரம் கெட்டுப்போகாதவாறும் தயாரித்தோம். இப்போது வளைகுடா நாடுகள் வரை எங்கள் கடை தம்ரூட் பிரபலம்'' என்றார் தமீம்.

    இவர்கள் கடையில் குறிப்பிட வேண்டிய இன்னொரு ஐட்டம் பால் மணம் மாறாத அமுல் ரஸ்க். தமிழக பேக்கரிகளில் இவர்களுக்கென்று ஒரு முக்கிய இடத்தை இந்த ரஸ்க் பெற்றுத் தந்திருக்கிறது. "இந்த இடத்தைவிடவும் தம்ரூட் பெற்றுத்தரும் இடம் இன்னும் பெரிதாக இருக்கும்'' என்று சிரிக்கிறார் தமீம்.

            கூத்தாநல்லூர் வந்து செல்பவர்கள் பைகளில் அவசியம் தம்ரூட் இருக்குமாம். ஊர் திரும்பியதும் நம் பையைத் திறந்து பார்த்தோம். நெய் வாசம் மட்டும் இருந்தது!

சாப்பாட்டுப் புராணம் புத்தகத்திலிருந்து...
தினமணி, 2008 

6 கருத்துகள்:

  1. ithu yentha oru district la irukku ?

    பதிலளிநீக்கு
  2. திருவல்லிக்கேணியில் 'பாஷா அல்வா' கடையிலும் தம்காரோட்/ரூட் என ஒரு இனிப்பு பதார்த்தத்தைக்கேள்விப்பட்டு சென்றேன்.. இது பணியாரம்னு சொல்றீங்க ஆனா, அங்க அல்வா மாதிரி இருந்தது. ஒருவேளை அது வேற இனிப்பு சமாசாரமா இருக்கும்போல.. சும்மா சொல்லக்கூடாது , சரியான சுவை..

    http://pic.twitter.com/fq5WOEPseY

    பதிலளிநீக்கு
  3. Basha Sweets thamkaroot is entirely different from Koothanallur Dhamroot. You can get Dhamroot in a shop in Mannady

    பதிலளிநீக்கு