சிதம்பரம் கொத்சு!

               ல்லா ஊர்களிலும் கோயில்கள் இருக்கின்றன. ஆனால், சில ஊர்கள் மட்டுமே கோயிலோடு பிணைந்துவிடுகின்றன. அந்த ஊர்களின் பெயரை உச்சரித்தால் மனம் முதலில் கோயிலையே அவதானிக்கிறது - வாடிகன்போல, கேன்டர்பெரிபோல, சிதம்பரம்போல!

               சிதம்பரத்தையும் நடராஜர் கோயிலையும் பிரித்துப் பார்க்க முடிவதில்லை. மேலோட்டமாய் யோசித்தால் ஒரு நாட்டியக்காரனின் சாஸ்வதம் தோன்றி மறையும் இந்த இடத்தில், சற்று தீவிரமாய்ப் போனால் ஓர் அமானுஷ்ய உலகம் உங்களை இழுத்துக்கொள்ளும். பஞ்சபூத ஸ்தலங்களில் சிதம்பரம் ஆகாய ஸ்தலம். மூன்று நிலைகளில் இறைவன் இங்கு உறைந்திருக்கும் நிலை அருவ நிலை. இறைவனை எப்படி வழிபடுகிறார்கள் தெரியுமா? மந்திர வடிவில். மந்திரத்தில் இறைவன் இருக்கும் இடத்தைத் திருவம்பலச்சக்கரம் என்பார்கள். தன்னையே தேடுவோருக்குத் தன்னையே தரும் இறைவன், லோகாயுதவாதிகளுக்குத் தன்னிடத்தில் ஒன்றை மட்டும் விட்டுவைத்திருக்கிறான்; அது... அவனே சொக்கிக் கிடக்கும் கத்திரிக்காய்க் கொத்சு. சிதம்பரத்தில் சாயங்காலம் இரண்டாம் கால பூஜையின்போது இறைவனுக்குச் சம்பா சாதத்துடன் கொத்சு நைவேத்தியம் செய்கிறார்கள். வேகவைத்த கத்திரிக்காயை இடித்து, உப்பு, புளி சேர்த்து, சுண்டக் கொதிக்கவிட்டு, பசைப் பக்குவத்தில், காரமல்லிப் பொடி சேர்த்து, நல்லெண்ணையில் கொதிக்கவிட்டு, தாளித்த சூட்டோடு இறக்கப்படும் கொத்சை ஒரு துளி சுவைத்துப் பார்த்தால் இறைவனின் மீது பொறாமையே வரும். கடவுளர்களுக்குத்தான் சாப்பாடு எப்படியெல்லாம் வாய்க்கிறது?! இருந்த இடத்திலேயே வேளாவேளைக்கு நோகாமல் கடவுளர்களுக்கு மட்டும் இப்படி விதவிதமான சாப்பாடு கிடைப்பது பொறுக்காமல்தான் கடவுளர்களை மனிதன் சாப்பிடவிடாமல் செய்துவிட்டான்போலும்! அது போகட்டும், சிதம்பரத்தில் கொத்சு நிலைத்து நின்றதே ஒரு பெருமைதான் தெரியுமா?

               சிதம்பரத்தில் பெயர் வாங்கினால் நீங்கள் எல்லா ஊரிலும் பெயர் வாங்கிவிடலாம். அதிலும், கச்சேரிக்காரர்களும் சமையல்காரர்களும் ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டிய ஊர் இது. அக்காலத்தில் வித்வான்களையோ சமையல்காரர்களையோ, "சிதம்பரத்தில் உற்சவம், போவோமா?'' ஏன்று யாராவது சும்மா கேட்டால் வம்புக்கு இழுக்கிறார்கள் என்று பொருள். ஏனென்றால், இங்கு வித்வான்கள் ராகத்தைச் சுதி பிறழாமல் வாசித்தால் மட்டும் போதாது. எந்த நேரத்தில், எந்த இடத்தில், எந்த ராகத்தை இசைக்க வேண்டும் என்றும் தெரிந்து வாசிக்க வேண்டும். இதை அறியாமல் மேல வீதியில் காலையில் வாசிக்க வேண்டிய ராகத்தைக் கீழ வீதியில் ராத்திரியில் வாசித்தால் வித்வானை ஊருக்கு மூட்டை கட்ட வைத்துவிடுவார்கள். இப்படிச் சமையலிலும் ஆயிரம் பணிக்கிச் சொல்வார்கள். இதனாலேயே, சிதம்பரத்தில் பல சாப்பாட்டு ஒட்டங்கள் வந்த வேகத்தில் காணாமல் போய்விட்டன. ஒரே விதிவிலக்கு கொத்சு.

               அந்தக் காலத்தில் சிதம்பரம் போனால் கடைகளில் இட்லிக்குச் சட்னி, சாம்பார் வேண்டும் என்று யாரும் கேட்க மாட்டார்கள்; கொத்சைத்தான் தேடுவார்கள். அந்நாளில், சிதம்பரத்தில் கொத்சுக்குப் பெயர் போன கடைகள் நிறைய இருந்தன. "முருக முதலியார் கடை', "நாராயணசாமி அய்யர் கடை', "குமரவிலாஸ்', "உடுப்பி கிருஷ்ண விலாஸ்' என்று அக்காலத்துக் கடைகள்  ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகையில் கொத்சு செய்வார்கள். பார்வைக்கு ஒன்றுபோல இருந்தாலும் ருசி வித்தியாசப்படும். ஒவ்வொரு கடை கொத்சுக்கும் தனி ரசிகர் கூட்டமே உண்டு. யார் கடை கொத்சு சிறந்தது என்ற பட்டிமன்றத்தைச் சிதம்பரம் வீதிகளில் சகஜமாகக் கேட்கலாம். இப்போதோ கலிகாலம். சிதம்பரத்திலேயே சாப்பாட்டுக் கடைகளில் கொத்சைத் தேட வேண்டியிருக்கிறது. நல்ல வேளையாக பாரம்பரியம் போய்விடாமல் "உடுப்பி கிருஷ்ண விலா'ஸில் மட்டும் கொத்சு இன்னமும் கிடைக்கிறது. உணவகத்தின் ஒவ்வோர் அங்குலத்திலும் தெரியும் பழமை கொத்சு ருசியிலும் இருக்கிறது. கடை நிறுவனர் லக்ஷ்மி நாராயண பட் இப்போது இல்லை. கடையை அவருடைய மகன் சுப்ரமண்ய பட் நிர்வகித்துவருகிறார். அவருடன் பேசினோம். "எங்கள் பூர்வீகம் உடுப்பி. சிதம்பரத்தில் கடையைத் தொடங்கியபோது கொத்சு ருசியில் ஏதாவது மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்று நினைத்த எங்கள் தந்தையார் கொத்சில் கத்திரிக்காயுடன் சின்ன வெங்காயத்தையும் சேர்த்தார். தவிர, உடுப்பி சமையல் பாணியில் கொஞ்சம் வெல்லத்தையும் சேர்த்தோம். இந்தப் புதிய ருசி எல்லோருக்குமே பிடித்துப்போயிற்று. இன்றும் அதே பாணி, அதே பக்குவம், அதே ருசி'' என்றார் சுப்ரமண்ய பட்.

               இப்போது மேஜை முன் நாம். மேஜையில் சுடச்சுட இட்லி, சுண்டியிழுக்கும் கொத்சு. அடுத்து ஏன்ன ஆகியிருக்கும் என்று நீங்கள் யூகித்தது சரிதான். ஆடாத ஆட்டத்தால் அண்டத்தையே ஆட்டிவைக்கும் தில்லையம்பலத்தானே கொத்சில் சொக்கிக் கிடக்கிறான். அப்புறம் நீங்களென்ன, நானென்ன, நாமென்ன பராபரமே?!

சாப்பாட்டுப் புராணம் புத்தகத்திலிருந்து...
தினமணி 2008

1 கருத்து:

  1. சமஸ்... சிதம்பரத்தில் வாத்தியார் கடை என்று ஒன்று உண்டு, அங்கேயும் கொஸ்து கிடைக்கும்.

    பதிலளிநீக்கு