மோடி பலூனை ஊதுவது யார்?                     லைவனுக்காகக் காத்திருக்கும் தேசம், மோடிக்காகக் காத்திருக்கும் இந்தியா, மோடி தயார் . . . இந்தியா தயாரா . . . - இப்படி ஊதிப் பெருக்கப்படும் மோடி பலூனுக்குக் காற்று கொடுப்பவர்கள் யார்? இந்தியத் தொழில் துறை மோடியைத் தூக்கிவைத்துக் கொண்டாடக் காரணம் என்ன? ஊடகங்கள் திட்டமிட்டு மறைக்கும் அந்த உண்மையைத் தலைமைத் தணிக்கைக் கணக்காயர் அலுவலகம் (CAG) வீதிக்குக் கொண்டுவந்து இருக்கிறது.

                    லஞ்சம், ஊழல் மற்றும் விதிமீறல் காரணங்களால் 2009 - 2011 இரு நிதியாண்டுகளில் மட்டும் ரூ. 17 ஆயிரம் கோடி குஜராத் அரசுக்கு இழப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று சொல்கிறது தலைமைத் தணிக்கைக் கணக்காயரின் அறிக்கை. அரசின் இந்த இழப்புகளைப் பெரும் பகுதி ஏப்பம் விட்டு செரித்திருப்பவை பெருநிறுவனங்கள். குஜராத் மாநில பெட்ரோநெட் நிறுவனத்துக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும் இடையேயான எரிவாயு உடன்படிக்கையில் செய்யப்பட்ட விதிமீறல்களால் மட்டும் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 52.27 கோடி பலன் அடைந்துள்ளது. இதேபோல, மாநில அரசின் குஜராத் யுர்ஜா விகாஸ் நிகாம் நிறுவனம், அதானி பவர் நிறுவனத்துடன் செய்துகொண்ட மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் செய்யப்பட்ட திமீறல்களால், அதானி நிறுவனம் ரூ.160.26 கோடி பலன் அடைந்துள்ளது. சூரத்தில் எஸ்ஸார் உருக்கு நிறுவனம் ஆக்கிரமித்திருந்த 7.24 லட்சம் சதுர மீட்டர் நிலத்தை சதுர மீட்டர் ரூ. 700 என்கிற மட்டி விலைக்கு எஸ்ஸார் நிறுவனத்துக்கே உரித்தாக்கி இருக்கிறது மோடி அரசு. இதேபோல், ஃபோர்டு இந்தியா, லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனங்களுக்கு அரசு நிலத்தைக் கொடுத்ததிலும் விதிமீறல்கள் நடந்திருக்கின்றன என்கிறது அந்த அறிக்கை.

                    ஒரு மாநில அரசு மீது ரூ. 17 ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடு குற்றஞ்சாட்டப்படுவது பெரிய செய்தி. அதுவும் கறை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரர் என்றும் தலைசிறந்த நிர்வாகி என்றும் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்படும் ஒருவர் மீதான நாட்டின் உயர்ந்த தணிக்கை அமைப்பின் இந்தக் குற்றச்சாட்டு பெரிய அளவில் பேசப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தேசிய ஊடகங்கள் இந்தச் செய்தியை இரு பத்திகளுக்குள் அடக்கம் செய்தன.

மோடி அரசு மீதான குற்றச்சாட்டுகள் புதிதல்ல. அதானி குழுமத்துடன் மோடி அரசுக்குள்ள தொடர்புகள் தொடர்ந்து விவாதத்தில் இருக்கின்றன. கடந்த ஆண்டு இறுதியில் அரவிந்த் கேஜ்ரிவால் அம்பலப்படுத்திய குஜராத் மாநில பெட்ரோலிய நிறுவனம் - ஜியோ குளோபல் நிறுவனம் இடையேயான ஒப்பந்தம் கிட்டத்தட்ட இரண்டாம் அலைக்கற்றை ஒதுக்கீட்டை ஞாபகப்படுத்தக் கூடியவை (ஒப்பந்தத்தின்போது வெறும் 64 டாலர் - அன்றைய மதிப்பில் ரூ. 3200 சொத்து மதிப்பைக் கொண்ட ஜியோ குளோபல் நிறுவனம் பின்னர் 10 ஆயிரம் கோடி நிறுவனமானதை அம்பலப்படுத்தினார் கேஜ்ரிவால்). ஆனால், ராபர்ட் வதேராவின் முறைகேடுகளைப் புரட்டி எடுத்த ஊடகங்கள் மோடியின் செய்தியை அன்றோடு அடக்கம் செய்தன.


                    நான் வளர்ச்சியின் பிரதிநிதி என்கிறார் மோடி. ஆனால், எது வளர்ச்சி என்பதற்கு நம்மிடம் சரியான வரையறைகள் இல்லை. குஜராத் அரசு சமூகத் துறைகளில் ஒழுங்காகச் செயல்படவில்லை என்பது தொடர்ந்து அவ்வப்போது வெவ்வேறு புள்ளிவிவரங்கள் வாயிலாக வெளிவந்துகொண்டிருக்கும் ஓர் உண்மை. 2011-ல் வெளியான மத்தியத் திட்டக் குழு அறிக்கை குஜராத் மாநிலத்தில் நிலவும் வறுமையை வெளிக்கொண்டுவந்தது - மாநிலத்தில் 44.6 சதவிகிதக் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடு உடையவர்கள். 2012-ல் வெளியான தலைமைத் தணிக்கைக் கணக்காயர் அறிக்கை தண்ணீர் விஷயத்தில் அரசு காட்டும் அலட்சியத்தைப் பட்டியலிட்டது. “குடிநீர்க் கொள்கை சரியாக வரையறுக்கப்படவில்லை. தேசிய நதி நீர்ப் பாதுகாப்புத் திட்டம், எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல் அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆற்றுநீர் மாசுபடுவது சம்பந்தமாக அரசு அக்கறை காட்டவில்லை. சபர்மதி ஆற்று நீரைத் தூய்மைப்படுத்தும் திட்டமும் முறையாகக் கண்காணிக்கப்படவில்லை” என்று கடந்த ஆண்டு அறிக்கை சொன்னது. குஜராத்தில் நிலத்தடி நீர்மட்டம் ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 6 மீட்டர் கீழே செல்கிறது. 40 ஆண்டுகளுக்கு முன் 30 மீட்டர் ஆழத்தில் தண்ணீர் கிடைத்த இடங்களில், இப்போது தண்ணீருக்கு 152 மீட்டருக்கும் கீழே செல்ல வேண்டியிருக்கிறது. அரசு இந்தப் பிரச்சினையில் தீவிரக் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்கள் சூழலியலாளர்கள். முந்தைய அரசுகளைப் போலவே இந்தப் பிரச்சினையை மோடி அரசும் அலட்சியப்படுத்துகிறது.

                    குஜராத் மக்கள்தொகையில் 10 சதவிகிதம் வகிக்கும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைக்கூட கடந்த தேர்தலில் மோடி நிறுத்தவில்லை என்பது இந்தக் கட்டுரைக்கு அப்பாற்பட்ட விஷயமாக இருக்கலாம். ஆனால், நகர்ப்புற முஸ்லிம்கள் ஏழைகளாக உலவும் 4 மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று என்பது இந்தக் கட்டுரையோடு தொடர்புடையது. மோடி தன்னுடைய வளர்ச்சியின் அடையாளமாகக் கொண்டாடிய சனாந்த் தொகுதியில் (டாடா நானோ ஆலை அமைக்கப்பட்ட இடம்) பாஜக தோற்றது இந்தக் கட்டுரையோடு தொடர்புடையது.

குஜராத்தை வளர்ச்சியோடு ஒப்பிட்டுப் பேசும் பலரும் தட்டாமல் குறிப்பிடுவது குஜராத்தின் எரிசக்தித் துறை வளர்ச்சி. உண்மையில், மோடி அரசின் பல முறைகேடுகள் குடிகொண்டிருக்கும் துறை இது. மின்சார உற்பத்தியில் குஜராத் முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என்று குரல் கொடுப்போர் பலர் பேசாத ஒரு விஷயம், குஜராத்தின் மொத்த மின் உற்பத்தித் திறனான 16,945 மெகா வாட்டில் தனியார் பங்களிப்பு மட்டும் 6,864 மெகாவாட் என்பது. அதாவது, கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு தனியாருடையது. தவிர, நாட்டிலேயே மின்சாரத்தை அதிக விலைக்கு விற்கும் மாநிலங்களில் ஒன்று குஜராத். நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கான குறைந்தபட்ச தேவை 50 யூனிட். குஜராத்தில் வறுமைக்கோட்டுக் கீழ் வாழும் ஒரு குடும்பமே இந்த மின்சாரத்துக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ. 2.95 கொடுக்க வேண்டும். தமிழகத்துடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட மூன்று மடங்கு இது (தமிழகத்தில் ஒரு யூனிட் ரூ. 1.10) . நாட்டிலேயே சூரிய மின் சக்தியை முன்னெடுப்பதிலும் குஜராத் முன்னணியில் இருக்கிறது. ஆனால், வால்மார்ட்டும் மான்சாண்டோவும் அந்தச் சூரிய மின் சக்தி உபகரணங்களின் பின்னணியில் இருக்கின்றன; சூழலுக்குப் பெரும் நஞ்சான கேட்மியம் டெலுராய்டைக் காற்றிலும் நிலத்திலும் நீரிலும் எதிர் காலத்தில் குஜராத் சுமக்க இந்தத் திட்டம் வழிவகுக்கும் என்கிறார் மின்சாரம் தொடர்பாகத் தொடர்ந்து பேசி வரும் சமூகச் செயல்பாட்டாளர் காந்தி. குஜராத் தொடர்பாக ஊதப்படும் ஒவ்வொரு துறையின் வளர்ச்சியின் பின்னணியிலும் இப்படி சங்கடப்படுத்தும் உண்மைகள் உண்டு. எப்படி ஏனைய இந்திய மாநிலங்களின் வளர்ச்சிக் கதைகளுக்குப் பின்னணியிலும் சங்கடப்படுத்தும் உண்மைகள் உண்டோ அப்படி. ஆனால், குஜராத்தில் மட்டும் இந்தச் சங்கதிகள் ஒரு நாள் செய்தியோடு அடக்கமாகிவிடுகின்றன. ஏன்?

                    நம்முடைய முதலாளிகளுக்கு இன்று மோடி தேவைப்படுகிறார். மன்மோகன் சிங் அரசு பன்னாட்டு நிறுவனங்களின் கையாள் என்று நாம் குற்றஞ்சாட்டுகிறோம், ஆனால், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இந்தியப் பெருமுதலாளிகளுக்கும் மன்மோகன் சிங் போதுமானவராக இல்லை அல்லது அவருடைய தேவைக்கான காலம் முடிந்துவிட்டது. இப்போது அவர்களுடைய தேவை இன்னும் துரிதமாகவும் துணிச்சலாகவும் சுதந்திரமாகச் செயல்படும் ஒருவர்தான். முக்கியமாக, இந்தியாவில் முதலீடு செய்ய சட்டரீதியாக மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் சின்னச் சின்ன நடைமுறைகளைக்கூட உடைத்து எறியவும் இந்திய வனங்களில் புகுந்து சூறையாட ஏதுவாக அங்குள்ள எதிர்ப்புகளை வேர் அறுக்கவும் ஓர் ஆள் தேவைப்படுகிறார். இந்தியாவில் செம்மையான செயல்பாட்டுக்கு கார்ப்பரேட் துறைதான் முன்னோடி என்பதை வெளிப்படையாகச் சொல்லும் மோடி அதற்குச் சரியான தேர்வாக இருப்பார் என்று அவர்கள் நம்புகிறார்கள். குஜராத்தில் ஒரு நிறுவனம் நினைத்தவுடன் தொழில் தொடங்குவதற்கான எல்லாச் சாத்தியங்களையும் ஓடியாடிச் செய்யும் மோடி அதற்குப் பொருத்தமானவர் என்று அவர்களும் நம்புகிறார்கள். மத்திய அரசு இப்போது முன்மொழிந்திருக்கும் தேசிய முதலீட்டு வாரியத்துக்கு முன்னோடி மோடியின் குஜராத் பாணிதான். உங்கள் ஊரில், ரூ. 1000 கோடிக்கு மேல் ஒரு தொழிலை ஆரம்பிப்பது என்று ஒரு பன்னாட்டு நிறுவனம் முடிவெடுத்துவிட்டால் போதும். உள்ளூர் மக்கள் எதிர்ப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு எதைப் பற்றியும் அந்நிறுவனம் கவலைப்பட வேண்டியது இல்லை. தேசிய முதலீட்டு வாரியத்தின் அனுமதி மட்டும் அதற்குப் போதும். யாரும் அந்த நிறுவனத்தைக் கேள்வி கேட்க முடியாது . . . உள்ளூர் மக்களில் தொடங்கி சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் வரை எவரும் கேள்வி கேட்க முடியாது. இப்படி ஓர் அணுகுமுறையைத்தான் அரசிடமிருந்து எல்லா விஷயங்களிலும் முதலாளிகள் எதிர்பார்க்கிறார்கள். காங்கிரஸ் அதைச் செய்கிறது. ஆனால், தாமதமாகச் செய்கிறது. யோசித்து இழுத்தடித்துச் செய்கிறது. முதலாளிகள் துணிச்சலான துரித சேவையை விரும்புகிறார்கள். காங்கிரஸுக்குக் காலம் கடந்து கொண்டிருக்கிறது.

                    இந்தக் கட்டுரையை எழுதும் நாளில் குஜராத்தின் கப்ரதா பகுதி கிராம மக்கள் அதிகாலை 3.30 மணிக்கே எழுந்து 5 கி.மீ. தூரம் நடந்து வரிசையில் நின்றுகொண்டிருக்கிறார்கள் - இரு குடங்கள் குடிநீருக்காக. “கப்ரதா பகுதியில் உள்ள முப்பது சொச்ச கிராம மக்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது. எவ்வளவோ பேசிப் பார்த்தாயிற்று அரசாங்கத்திடம்; ஒன்றும் நடக்கவில்லை’’ என்கிறார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான ஜிட்டு சௌத்ரி. மக்கள் தண்ணீருக்காகக் கிடையாய்க் கிடக்கிறார்கள். அவர்கள் கிடக்கட்டும் . . . முதலாளிகள் முடிவெடுத்துவிட்டார்கள். மோடிக்காகக் காத்திருக்கிறது இந்தியா!

காலச்சுவடு, ஏப்ரல் 2013

13 கருத்துகள்:

 1. மோடி என்பவர் முதல்வர் பதவிக்கு எப்படி வந்தார் என்பதில் இருந்து பார்க்க துவங்கினால் அவரால் வர கூடிய ஆபத்து தெளிவாக விளங்கும்
  ஒரு ஊராட்சி தேர்தலில் கூட நிற்காமல் ஆர் எஸ் எஸ் உயர் தலைவர்களை காக்காய் பிடித்து ,சூழ்ச்சி அரசியல் செய்து நேரடியாக பின்பக்கமாக முதல்வர் ஆனவர்.பல ரைட் ஆதரவாளர்களின் ,RIGHT களின் கனவு அது
  சொந்தமாக ஜெயிக்க ஒரு தொகுதி கூட கிடைக்காமல் ,ஜெயிக்க கூடிய தொகுதியாக தேர்ந்தெடுத்த தொகுதியின் எம் எல் ஏ ஹரேன் பாண்ட்யா அதற்க்கு ஒத்து கொள்ள மறுத்ததால் அவரை பதவியில் நேரடியாக உட்கார வைத்த தலைவர்களின் வேண்டகோளை புறக்கணிக்க மருத்துவமனையில் சேர்ந்து நாடகமாடி மிரட்டி அவர் அரசியல் வாழ்வை அழித்தவர்.அவரும் கொல்லப்பட்டது (குடும்பத்தினர் அதற்க்கு காரணம் என்று பல ஆண்டுகளாக கதறுவது யாரை பார்த்து தெரியுமா RIGHT மோடி )
  நாம் ஐந்து நமக்கு இருவத்தி ஐந்து என்று இஸ்லாமியரை நக்கல் செய்து,தேர்தலை உடனே நடத்த மறுத்த தலைமை தேர்தல் அதிகாரியை james மைகேல் lyngdoh என்று கூட்டம் கூட்டமாக முழங்கி அவர் மதத்தின் காரணமாக எதிர்க்கிறார் என்று பழி போட்ட RIGHT தான் மோடி

  ஆண் பெண் சதவீதத்தில் குறைவாக இருந்த பெண்களின் எண்ணிக்கையை அவரின் பத்து ஆண்டு ஆட்சியில் மாற்றி விட்டாரா

  மத்திய அரசு பணிகளில் நூத்துக்கு ஒன்று ,இரண்டு குஜராத்திகள் கூட இல்லாத நிலையில் இருந்து பத்து பேராவது சேரும் அளவிற்கு மாற்றி விட்டாரா

  மற்ற மாநிலங்களை விட அதிக இடங்கள் குஜராத் மாநிலத்தை சேர்ந்த பெண்களுக்கு வேலை,கல்லூரிகளில் கிடைக்குமாறு செய்துள்ளாரா

  பழங்குடியினர்,தாழ்த்தப்பட்டோர் அதிக அளவில் மத்திய மாநில அரசு கல்வி,வேலைவாய்ப்பில் இடம் பிடிக்க காரணமாக இருந்துள்ளாரா
  குடும்ப கட்டுப்பாடு திட்டங்களின் மூலம் பிறப்பு விகிதத்தை விரும்பிய அளவிற்கு குறைத்து விட்டாரா
  குடி தண்ணீருக்காக மக்கள் கொஞ்சம் கூட சிரமப்பட வேண்டிய தேவை இல்லாமல் செய்து விட்டாரா
  இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இருந்து மக்கள் மருத்துவம் பார்த்து கொள்ள/படிக்க/வேலை செய்ய லட்சக்கணக்கில் ஓடி வரும் நிலைக்கு மாநிலத்தை மாற்றி விட்டாரா(நம்ம ஊழல் தமிழகத்திற்கு படிக்க,மருத்துவம் பார்க்க,வேலை பார்க்க வருபவர்களில் பத்தில் ஒரு பங்காவது எட்டி இருக்கிறாரா )
  விளையாட்டு துறையில் குஜராத்திகள் அவரின் ஆட்சியில் கீழ் ஓரளவிற்காவது முந்தைய நிலையை விட முன்னேறி இருக்கிறார்களா

  மருத்துவ படிப்பு,செவிலியர் படிப்பு,பொறியியல் போன்றவற்றில் மாநிலத்தின் தேவை அளவிற்காவது அங்கு மாணவர்கள் படிக்கிறார்களா /இருக்கிறார்களா இல்லை பக்கத்து மாநிலங்களை நம்பி தான் அங்கு பள்ளிகள்/கல்லூரிகள்/மருத்துவமனைகள் இருக்கின்றதா

  தமாதூண்டு ஏழை மாநிலம் மணிபூர்
  தேசிய விளையாட்டு போட்டிகளில் 48 தங்கம்.நம்ம பெருமித பணக்கார சுயம்பு சுயமரியாதை கொண்ட குஜராத் மாநிலம் மொத்தமா ரெண்டு வெள்ளி
  கலை,அறிவியல்,விளையாட்டு,ராணுவம்,துணை ராணுவம்,மத்திய அரசு பணிகள்,விஞ்ஞானிகள்.ஆட்சி பணியாளர்கள் என்று எல்லாவற்றிலும் பூஜியதிர்க்கு அருகில் தான் குஜராத்திகள்
  ஒவ்வொரு மாவட்டத்திற்கு என்றும் ராணுவத்தில் சேர இட ஒதுக்கீடு உண்டு.அந்த இடங்கள் கூட பூர்த்தி ஆகாத மாநிலம் நம்ம குஜராத் தான்

  பதிலளிநீக்கு
 2. அவரை கொல்ல மாதாமாதம் வந்து கொண்டிருந்த தீவிரவாதிகள் அவர்களை சுட்டு வீழ்த்திய காவல்துறை உயர் அதிகாரிகள் சிறைக்கு சென்று விட்டதால் வருவதை நிறுத்தி விட்டனர்.அப்படிப்பட்ட RIGHT தான் மோடி
  டோசன் கணக்கில் காவல்துறை உயர் அதிகாரிகள் சிறைக்கு உள்ளிருக்கும் மாநிலம் எது தெரியுமா -RIGHT மாநிலமான குஜராத் தான்
  டெல்லியில் டிசம்பர் மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட்ட பெண்ணுக்காகவும்,இப்போது அதே கொடுமைக்கு உள்ளான ஐந்து வயது குழந்தைக்காக கொந்தளிப்பவர்களே RIGHT மோடி சண்டை போட்டு பொது செயலாளர் பதவி வாங்கி கொடுத்த அவரது வலது கை அமித் ஷா யார் தெரியுமா
  கௌசர் பி என்ற பெண்ணை அவர் கணவர் சொராபுத்தினோடு கடத்தி சென்று பாலியல் வன்முறை புரிந்து உடலை எரித்து கொன்ற குற்றத்தில் குற்றம் சாற்றப்பட்டுள்ள குற்றவாளி
  மனைவி மட்டும் அல்ல கடத்தலுக்கு சாட்சியான பிரஜாபதி என்பவரை பக்கத்து மாநில சிறையில் இருந்து நீதிமன்றத்தில் என் உயிருக்கு ஆபத்து என்று கதறிய கதறல்களையும் கண்டு கொள்ளாமல் போட்டு தள்ளிய Mr RIGHT
  அவருக்கு போட்டியாக இருந்த ஆர் எஸ் எஸ் ஜோஷி சி டி வெளிவந்து அவர் அரசியல் வாழக்கைக்கு முற்றுபுள்ளி வைக்க நடந்த முயற்சியில் RIGHT மோடிக்கு பெரும் பங்கு உண்டு.அவர் மறுபடியும் UP மாநில தேர்தலில் பொறுப்பு பெற்றதால் தேர்தல் பிரச்சாரத்தை புறக்கணித்த புண்ணியவான் RIGHT மோடி

  பதிலளிநீக்கு
 3. மதுரைக்கு ஒரு அஞ்சா நெஞ்சன்னா

  மோடி இந்தியாவுக்கே அஞ்சா நெஞ்சன்

  அழகிரிக்கும் மோடிக்கும் அப்படியே பொருந்தும்

  எந்த தேர்தலிலும் நிற்காம ஜெயத்த எம் எல் ஏக்களை ஆட்டி வைத்து கொண்டு இருந்தவர்கள்.அழகிரியாவது தேர்தலில் ஜெயத்த பிறகு மந்திரி யானார்.இவர் கவுன்சிலர் தேர்தலில் கூட நிற்காமல் நேரடியாக தலைவர்களை காக்கா பிடித்து முதல்வர் ஆனவர்.

  எதிராக இருந்து தா கி போட்டு தள்ளப்பட்டது போல இங்கு எதிராக இருந்த ஹரேன் பாண்ட்யா போட்டு தள்ளப்பட்டார்.

  கட்சிக்குள் தன எதிரிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டால் கட்சிக்காக உழைக்க மாட்டார்கள்,பிரசாரத்திற்கு செல்ல மாட்டார்கள்.கட்சி பொது குழுவில் கலந்து கொள்ள மாட்டார்கள்
  தனக்காக கொலை,கொள்ளை,கட்ட பஞ்சாயத்து செய்யும் அமித் ஷா ,அட்டாக் பாண்டி போன்றவர்களுக்கு பதவி வாங்கி தருவார்கள்

  காவல்துறை அதிகாரிகளை கைப்பாவையாக வைத்து கொண்டு போலி என்குண்டேர்களை நடத்துவார்கள்.பிரச்சினை வந்தால் கை கழுவி விட்டு ஓடி விடுவார்கள்

  பதிலளிநீக்கு
 4. what ever it may be third time consecutively congress coming to power is unbearable.

  பதிலளிநீக்கு
 5. குறைநோக்குப் பார்வையுடன் எழுதபட்டிருக்கும் கட்டுரை. இங்கு எழுதபட்டிருக்கும் விஷயங்கள் பல ஊடகங்களில் ஏற்கனவே வந்தவையே. ஏன் அவை பெரிதாக எடுத்துகொள்ள படவில்லையென்றால் சாதனைகள் மிகுதியாக உள்ளது . நல்லவைகள் மிகுதியாக உள்ளதால் தான் அவர் மூன்றாவது முறையாக நல்ல பெரும்பான்மையுடன் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார்.

  மோடி மிக நல்லவர் என்று அர்த்தமில்லை. அவர் வல்லவர்.இன்று நாட்டுக்குத் தேவை ஒரு வல்லவருடைய தலைமை. தற்பொழுது மோடி ஒருவரே அந்த வகையில் உள்ளார். அவர் நிரூபித்துக்காட்டி உள்ளார்.

  சீஏஜி சொல்லுவதை போல அரசாங்கத்திற்கு வருவாய் ஒன்றையே குறிக்கோளாக வைத்துக்கொண்டு வேலை செய்தால் எந்த ஒரு நாட்டிற்கோ, மாநிலத்திற்கோ முதலீடு வராது. சில விட்டுக்கொடுத்தல்கள் வேண்டும். அந்த விட்டுக்கொடுத்தல்கள் குஜராத்தில் நிகழ்ந்துள்ளது.இவை மக்களுக்கும் தெரியும்.

  ஒலிக்கற்றலைகள் விஷயத்தில் ராசா லஞ்சம் பெற்றதே ஊழல். அவர் குறைந்த விலைக்கு விற்றது சீஏஜி பார்வையில் பார்த்தால் அரசாங்கத்திற்கு வருவாய் குறைந்தது என்ற பார்வையில் தவறு. அதே சமயம் மக்களுக்கு, குறைந்த செலவில் பேச வழிவகுத்தது என்ற பார்வையில் பார்த்தால் நல்லது. அரசாங்கத்திற்கு எவ்வளவு வருவாய் வந்தாலும் பற்றாக்குறை பட்ஜெட்டே தாக்கல் செய்யப்படும். லஞ்ச லாவண்யங்கள், வீண் செலவுகள் செய்து பயன்னற்றதாக போகும். அதற்கு குறைந்த விலையில் நிலமோ வேறு சில ஆதாரங்களோ நிறுவனங்களுக்கு வழங்குவது தவறில்லை. அதைப் பார்கின்ற பார்வையில் தான் தவறு உள்ளது. இவ்வாறு செய்வதால் பலன் பெறுவது நிறுவனங்கள் மட்டுமில்லை தொழிலாளர்கள், சிறு முதலீட்டாளர்கள், பொதுமக்கள் மற்றும் அரசாங்கம். நீண்ட கால அடிப்படையில் பார்த்தல் வரி வருவாயின் மூலம் அரசாங்கமும் இதனால் பலன் பெரும். இப்படியான தொலைநோக்குப் பார்வை ஒரு தலைவனிடம் இருக்க வேண்டும். இதை குறைக் கொண்டிருபவர்கள் கூறிக் கொண்டேதான் இருப்பார்கள்.
  பெரிய நிறுவனங்கள் பயனடைவதை குறைகூரிக்கொண்டே இருந்தால் முதளிடுகளோ வேலை வாய்ப்புகளோ வராது.

  குஜராத்தில் ஒரு யூனிட் ரூ. 2.90 க்கு மின்சாரம் வாங்கும் அளவிற்கு அடித்தட்டு மக்களின் பொருளாதாரம் உயார்வாக உள்ளது பெருமை படக்கூடிய விஷயம். மின்சார விலை அதிகம் என்று நினைதிருந்தால் மக்கள் தேர்தலில் தோற்கடித்திருப்பார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Sir, You argue that this was all done to generate employment benefits to society, but an earlier article on The Hindu ("poverty amid prosperity") clearly shows how total employment growth rate (in organized + unorganized + agriculture sectors) has remained almost stagnant at close to zero or even negative (in case of rural employment). So, business honchos are prospering while employment does not grow at that same rate. This is a tell tale sign of crony capitalism which Narendra Modi's govt is following.

   நீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
 6. Congress yengindra oru oozhal arakkanukku maatru modi oruvar thaan

  பதிலளிநீக்கு
 7. modi varalatril hitler pontravar. Hitler jermany desa valarchiku ulaithar. Modi corporate desa valarchi ku ulaikirar. Iruvarumey facist.

  பதிலளிநீக்கு
 8. nenga congress ku support panravaru nu neneaikiran,,,,,evlo pesium unngalala etavatu matra mudinchitha ella... ella solla thana mudinchithu... vaippu kodunga enna panraru parpom appuram pesunga.....pakkam pakkam ma .......

  பதிலளிநீக்கு
 9. இதே மன்மோகன் சிங் சில மாதங்களுக்கு முன்பு வரையிலும் இந்திய முதலாளிகள் மட்டுமின்றி, வெளிநாட்டுத் தொழில் முதலைகளின் ஆதர்ச நாயகனாக இருந்தாரே, அதற்கு என்ன சொல்லப் போகிறீர்?

  இன்று நிதி அமைச்சர் ப.சி. அமெரிக்காவில் போய் நாங்கள் உங்களுக்குப் பட்டுக் கம்பளம் விரிக்கிறோம், தயவு செய்து வந்து எங்கள் மானத்தைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறாரே, அதற்கு என்ன சொல்லப் போகிறீர்?

  சில வருடங்களுக்கு முன்பு வரை வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்க எல்லா கட்டுப்பாடுகளையும் நீக்கிக் கொண்டேயிருந்த ஜோடிதானே சிங்கும் ப.சி.யும்? அதற்கு என்ன சொல்லப் போகிறீர்?

  வால் மார்ட் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் கடை திறந்து, இந்நாட்டிலுள்ள கோடிக்கணக்கான குடும்பங்களின் வயிற்றில் அடிக்க அடிகோலியவர்கள்தானே இந்த இருவரும்...

  அதே வால் மார்ட் இன்று தனது கூட்டுத் தொழிலில் இருந்து விலகக் காரணம்... மோடிதான் முதலாளிகளின் நண்பன் என்பதல்ல... இன்று இந்தியாவில் நிறைய லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது என்பதால்தான்...

  இதைப் பற்றியும் கொஞ்சம் எழுதுங்கள்.... ஆனால் நீங்கள் எழுதாவிட்டாலும், உங்களைப் படிப்பவர்களுக் இது தெரியும்.

  பதிலளிநீக்கு
 10. மோடி ....பிரதமராவது சட்டியில் இருந்து அடுப்பிற்குள் விழுந்த கதை போல் ஆகிவிடும்....

  பதிலளிநீக்கு