அல்வா நகரம்!


 

  
                     னிப் பெருந்திருவிழாத் தேரோட்ட நாளில் திருநெல்வேலி புறப்பட்டு வர நேர்ந்தது எதேச்சையாக அமைந்தது. நெல்லை வந்ததும்தான் பயணத்தின் விசேஷம் நமக்கே புரிந்தது. ஒட்டுமொத்த ஊரும் விழாக் கோலம் பூண்டிருந்தது. ஏழாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் நெல்லையப்பர் திருக்கோயிலின் முக்கியத் திருநாளே திருத்தேரோட்டம்தான். ஏறத்தாழ 500 ஆண்டுகள் பழமையான  இந்தத் தேர், திருவாரூர் தேருக்கு அடுத்து மாநிலத்திலேயே பெரியது என்று கூறுகிறார்கள் (தொன்னூறு அடி உயரமும் இருநூற்று இருபது டன் எடையும் கொண்டது திருவாரூர் ஆழித்தேர்).

                         நீண்ட வீதிகள் எங்கும் மக்கள் சூழ, நடுவே முதலில் சுவாமித் தேர், அதைத் தொடர்ந்து அம்பாள் தேர், அதையடுத்து விநாயகர் தேர், அதற்குப் பின்னர் சுப்பிரமணியர் தேர், அதற்கும் பின்னர் சண்டிகேஸ்வரர் தேர் என்று வரிசையாக அசைந்தாடி தேர்கள் வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சி என்றால், நெல்லையப்பர் திருக்கோயிலைக் காண்பது அற்புத தரிசனம். கோயில் அழகும் தேர் அழகும் ஒன்றுகூடிய திருநாள் அழகும் ஒரு முழு நாளை எடுத்துக்கொண்டன. நாம் வந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு இன்னொரு நாள் தேவைப்பட்டது.

                          ஏற்கெனவே, கிடைத்திருந்த தகவலின்படி மாலை சரியாக 5 மணி அளவில் நெல்லையப்பர் கோயிலின் பிரதான வாயிலின் இடது திருப்பத்தையொட்டிய அந்த இடத்துக்கு வந்து சேர்ந்திருந்தோம். மரக்கதவுகளால் அடைக்கப்பட்டிருந்த அந்தச் சின்னக் கடையைப் பார்த்தபோது ஆச்சர்யமாக இருந்தது. இந்தச் சின்ன இடமா ஒரு மாநகரின் அடையாள அடித்தளமாக இருக்கிறது? வியப்பு மேலிட்டது. பெயர்ப் பலகை இல்லாததால் அப்பகுதியைச் சேர்ந்தவர்களிடம் "இடம் இதுதானா?' என்று கேட்டு உறுதிசெய்துகொள்கிறோம். கடிகாரத்தைப் பார்க்கிறோம். மணி 5.30. சுற்றிக் கவனிக்கிறோம். இப்போது அந்த இடத்தில் நம்மையும் சேர்த்து ஒரு கூட்டம் நிற்கிறது. மணி 5.54. கூட்டம் அதிகரிக்கிறது. ஒருவரையொருவர் முந்திக்கொள்ளும் ஆர்வம் ஒவ்வொருவர் முகத்திலும் தெரிகிறது. சரியாக மணி 6. கடை திறக்கிறது. கடையில் எரியும் ஒரேயொரு ‘40 வாட்ஸ் பல்பு’ அந்தச் சூழலை எங்கோ கொண்டுசெல்கிறது. நாம் உறுதிப்படுத்திக்கொள்கிறோம். ஆம், நாம் இப்போது ‘இருட்டுக்கடை’யில் நின்றுகொண்டிருக்கிறோம்.

                         திருநெல்வேலி - அல்வா என்னும் பிரிக்க முடியாத பிணைப்புக்கு அடித்தளமிட்ட இருட்டுக்கடை சுமார் 108 இண்டுகளுக்கு முன்பு, அதாவது 1900-ல், ராஜஸ்தானைச் சேர்ந்த கிருஷ்ணசிங்கால் தொடங்கப்பட்ட கடையாகும். கிருஷ்ணசிங் கடுமையான உழைப்பாளி. தன்னுடைய பகல் பொழுதுகளைச் சமையலுக்கு அவர் ஒதுக்க வேண்டி இருந்ததால், மாலைப் பொழுதை வியாபாரத்துக்கு ஒதுக்கினார். அந்நாட்களில் பெரும்பாலான நாட்களில் அவருடைய ஒரே துணையாக அரிக்கன் விளக்கு மட்டுமே இருந்தது (மின்சாரம் வந்த பின்னர் 40 வாட்ஸ் பல்பு). கூட்டத்தைச் சமாளிக்க அல்வாவை வெவ்வேறு எடையில் பொட்டலமாகக் கட்டிவிடுவது அவர் வழக்கம். கடைக்கு வந்ததும், பொட்டலங்களை எடுத்துத் தருவதும் அங்கேயே நின்று சாப்பிடுவோருக்கு இலையில் வைத்துத் தருவதுமே அவருடைய வேலையாக இருந்திருக்கிறது. நாளடைவில் அவருக்குப் பின் கடை நிர்வாகத்தைக் கவனித்த பிஜிலிசிங்கும் தன் தந்தையின் நடைமுறையையே கடைப்பிடித்திருக்கிறார். ‘இருட்டுக்கடை’க்கு அந்தப் பெயர் வந்த பின்னணி இதுதான்.

                         இப்போது மூன்றாவது தலைமுறை. பிஜிலிசிங்கின் உறவினர் ஹரிசிங் நிர்வகிக்கிறார். ‘‘கிருஷ்ணசிங், பிஜிலிசிங் இருவரும் விட்டுச் சென்ற அதே பாதையில் பயணிக்கிறோம். வேறொன்றும் ரகசியமில்லை’’ என்கிறார். கடையின் கல்லாப்பெட்டியைக் காட்டுகிறார். பல ஆண்டுகளுக்கு முன்னரே வழக்கொழிந்துவிட்ட பனை ஓலை கல்லாப்பெட்டி அது. செய்முறை கேட்கிறோம். ‘‘நயமான கோதுமையை எட்டு மணி நேரம் ஊறவைத்துக் கையால் பால் பக்குவம் வரும் வரை அரைத்து எடுக்கப்பட்ட பாலை நன்கு சூடேற்றுங்கள். கோதுமையின் அளவுக்கேற்ப நாலரை மடங்கு ஜீனியை அந்தப் பால் கொதிக்கும் நிலையில் சேருங்கள். நீண்ட கொதிக்குப் பின்னர் குமிழ்கள் கொப்பளிக்கும்போது, இரண்டரை மடங்கு சுத்தமான நெய் சேர்த்து கீழே இறக்குங்கள். ஊறவைத்துப் பரிமாறுங்கள். திருநெல்வேலி அல்வா சுவை கிடைக்கும். கிடைக்கவில்லையெனில், அடுத்த முறை வரும்போது ஒரு குடத்தில் தண்ணீர் எடுத்துச்சென்று அல்வாவை அதில் செய்துபாருங்கள். கிடைக்கும். தண்ணீர் சாதாரண தண்ணீர் அல்ல. தாமிரபரணித் தண்ணீர்’’ என்கிறார் சிரித்துக்கொண்டே.

                         நாம் அங்கிருந்து புறப்படத் தயாராகிறோம். அல்வா கொடுக்கிறார்கள். சாப்பிட்டுவிட்டு ஒரு தம்ளர் தண்ணீர் கேட்டு குடிக்கிறோம். புறப்படுகிறோம். மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள பெரிய பொதிகை மலையுச்சியில் தாமிரபரணி உருவாகிறது. மலை, பாறை, குன்று, மரம், மட்டை, புழுதி, குட்டை என ஏல்லாவற்றையும் தழுவி சுமார் 125 கி.மீ. தொலைவுக்குப் பாய்ந்து கடலில் கலக்கிறது. இதில், எந்த இடத்தில் அல்வா ருசி தண்ணீரில் ஏறுகிறது என்று தெரியவில்லை. பஸ் ஊருக்கு வந்தும்கூடப் புரியவில்லை!
‘சாப்பாட்டுப் புராணம்’ புத்தகத்திலிருந்து...
தினமணி 2008

8 கருத்துகள்:

  1. இருட்டுக் கடை அல்வாவை சுவைக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. படிக்க வாய்ப்பு கிடைத்தது சந்தோஷம்.

    பதிலளிநீக்கு
  2. எப்பொழுதுமே இருக்கும் இடத்தின் அருமை அடுத்தவருக்குத்தான் தெரியும் என்பார்கள் .உண்மைதான் ...நன் தினமும் உண்ணும் உணவை நீங்கள் சுவைத்த பின்புதான் எனக்கும் சுவை கூடியதாக புரிகிறது.

    பதிலளிநீக்கு
  3. எப்பொழுதுமே இருக்கும் இடத்தின் அருமை அடுத்தவருக்குத்தான் தெரியும் என்பார்கள் .உண்மைதான் ...நன் தினமும் உண்ணும் உணவை நீங்கள் சுவைத்த பின்புதான் எனக்கும் சுவை கூடியதாக புரிகிறது.

    பதிலளிநீக்கு
  4. தண்ணீரில் உள்ள ருசி இருட்டு கடையில் ஏறுகிறது.

    பதிலளிநீக்கு