அம்பலமாகும் இந்திய பயங்கரவாதம்!

              ல்லைப் பாதுகாப்புப் பணியின்போது, உயிரை இழக்க நேர்ந்த ஆயிரக்கணக்கான இந்திய ராணுவ வீரர்களுக்குக் கிடைக்காத மரியாதை அது. ‘இந்தியாவின் வீரத்திருமகன்’ என்ற பிரதமரின் பட்டம், நாடாளுமன்ற அனுதாபத் தீர்மானம், மாநில அரசின் மூன்று நாள் துக்க அறிவிப்பு, இரங்கல் தெரிவிக்க சட்டப்பேரவைச் சிறப்புக் கூட்டம், அதில் ‘தேசிய தியாகி' என்ற அறிவிப்போடு, இந்த மரணம் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும் என்ற தீர்மானம், மகள்களுக்கு அரசுப் பணி உத்தரவாதம், மாநில அரசின் சார்பில் ரூ. 1 கோடி, மத்திய அரசின் சார்பில் ரூ. 25 லட்சம் நிதி,  துப்பாக்கிக் குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையோடு நடந்த இறுதிச் சடங்கில் மாநில முதல்வரில் தொடங்கி ‘நாட்டின் இளவரசர்’ வரையிலான முக்கியஸ்தர்களின் பங்கேற்பு... யார் இந்த சரப்ஜித் சிங்?


                       நமக்கு சரப்ஜித் சிங் தொடர்பாக இரண்டு கதைகள் தெரியும்.

                        முதலாவது  கதையில், சரப்ஜித் சிங் ஓர் அப்பாவி.  இந்தியா - பாகிஸ்தான் எல்லை அருகே போதையில் சுற்றித் திரிந்த சரப்ஜித் சிங்கைக் கைதுசெய்த பாகிஸ்தான், அவரை இந்திய உளவாளி எனச் சித்திரித்து சிறையில் அடைத்தது. ஒரு குண்டுவெடிப்பு வழக்கில் அவருக்குப் பங்கு இருப்பதாக ஜோடித்து மரண தண்டனை வழங்கியது. இது இந்தியக் கதை.

                        இரண்டாவது கதையில், சரப்ஜித் சிங் ஒரு பயங்கரவாதி. இந்திய உளவு அமைப்பான ‘ரா’வின் கைக்கூலியான அவர், 14 பேர் உயிர் இழக்கக் காரணமாக இருந்த 1990 லாகூர், பைசலாபாத் தொடர் குண்டுவெடிப்புகள்  சதியில் முக்கியப் பங்காற்றிய குற்றவாளி. இது பாகிஸ்தான் கதை.

                        சரப்ஜித் சிங்கின்  சடலம் தனி விமானத்தில் இந்தியா கொண்டுவரப்படும் வரை பாகிஸ்தான் சொன்ன கதையை உறுதியாக மறுத்தது இந்திய அரசு. அதாவது, சரப்ஜித் சிங் ஏதும் அறியாத அப்பாவி என்றது. ஆனால், சடலம் வந்த பின் நடந்த சங்கதிகள் இந்தியக் கதை மீதான நம்பகத்தன்மையைக் கிழித்து எறிந்தன. இந்த நாட்டில் இதற்கு முன் எந்த அப்பாவியின் மரணத்துக்கும் இவ்வளவு மரியாதை கொடுக்கப்பட்டதில்லையே?

                        சரப்ஜித் சிங் ஓர் உளவாளி, சதிகாரர். சரப்ஜித் சிங் மரணத்துக்கு அளிக்கப்பட்ட மரியாதைக்கு நியாயம் சேர்க்கும் வகையில், டெல்லியில் அரசே கசியவிட்ட செய்திகள் இதை உறுதிப்படுத்துகின்றன. சரப்ஜித் சிங் இறந்த அடுத்த சில நாட்களில், நாட்டின் முன்னணிப் பத்திரிகைகளில் ஒன்றான ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ வெளியிட்ட ஒரு செய்தி, ‘‘பாகிஸ்தானில்  ‘ரா’  முன்னெடுத்த ‘ஒரு திட்ட’த்தில் பங்கேற்றவர் சரப்ஜித் சிங்;  இந்தத் திட்டத்தை முன்னெடுத்த அதிகாரி பின்னாளில் உளவுத் துறையின் வெளிநாட்டுப் பிரிவின் தலைவராகப் பணியாற்றியவர்’’ என்று அந்த அதிகாரியின் பெயரைக் குறிப்பிடாமல் சொன்னது. இந்தியாவில் அரசின் கண்ணசைவு இல்லாமல் இப்படி ஒரு செய்தி வெகுஜன ஊடகங்களில் வெளியாக வாய்ப்பே கிடையாது. ஆக, இதுவரை இந்தியா சொன்ன கதை பொய்க் கதை. அப்படி என்றால், பாகிஸ்தான் கதை? ஆம். அந்தக் கதையில் உண்மை இருக்கிறது!

                        சீன, பாகிஸ்தான் போர்களுக்குப் பின் 1960-களின் இறுதியில் தொடங்கப்பட்ட ‘ரா’ உளவுப் பணிகளில் மட்டுமே  ஈடுபட்டிருப்பதாகப் பெரும்பான்மை இந்தியர்கள் நம்பிக்கொண்டிருப்பது உண்மை அல்ல. எப்படி அமெரிக்காவின் ‘சி.ஐ.ஏ.’, இஸ்ரேலின் ‘மொஸாத்’ ஆகியவை சதி வேலைகளில் ஈடுபடுகின்றனவோ, அப்படியே ‘ரா’வும் சதி வேலைகளில் ஈடுபடுகின்றது. எப்படி இந்தியாவில் பாகிஸ்தான் பயங்கரவாதத்தைப் பின்னின்று இயக்குகிறதோ, அப்படியே ‘ரா’வும் பாகிஸ்தானில் பயங்கரவாதத்தைப் பின்னின்று இயக்குகிறது.

                        ஒருகாலத்தில் அண்டை நாடுகளை மேலாதிக்கம் செய்ய அங்குள்ள அரசுக்கு எதிராக ‘ரா’ காய்களை நகர்த்தியது. பின்னர், அங்குள்ள ஆயுதக் குழுக்களுக்கு ஆயுதப் பயிற்சியும் ஆயுத - நிதி உதவியும்  வழங்கியது. சிக்கிம் அப்படித்தான் இந்தியாவோடு இணைந்தது. வங்கதேசம் அப்படித்தான் உருவானது. இலங்கையில் அந்த நோக்கத்தில்தான் தமிழ் ஆயுதக் குழுக்கள் பயிற்றுவிக்கப்பட்டன. தொண்ணூறுகளில் பயங்கரவாதத்தையும் ஓர் உத்தியாக ‘ரா’ கையில் எடுத்தது.  ரா’வின் சிறப்புப் பிரிவான ‘சி.ஐ.டி. எக்ஸ்’ முன்னெடுத்த இந்தச் சதி வேலைகளை குஜ்ரால் காலத்தோடு முடிவுக்கு வந்துவிட்டதாக இந்திய அரசு சொன்னது.

                        ஆனால், ‘‘ ‘சி.ஐ.டி. எக்ஸ்’ தொடர்ந்து செயல்படுகிறது. இப்போது அதன் செயல்பாடுகள் மேலும் பல மடங்கு விரிவடைந்திருக்கின்றன. இஸ்ரேலின் ‘மோஸாத்’துடனும் அமெரிக்காவின் ‘சி.ஐ.ஏ’-வுடனும் இணைந்து தனித்தனியே பல திட்டங்களை  ‘சி.ஐ.டி. எக்ஸ்’ முன்னெடுக்கிறது. இவற்றில் முக்கியமானது பாகிஸ்தானிலிருந்து பலுசிஸ்தானைப் பிரிப்பது. பல்வாரிஸ்தான் இயக்கத்தைப் பின்னின்று இயக்குவதே ‘சி.ஐ.டி. எக்ஸ்’தான். இதில் ஆப்கனியர்களை  இரண்டாம் படையாக இந்தியா பயன்படுத்துகிறது” என்று தொடர்ந்து கூறிவருகிறது பாகிஸ்தான். ஒருமுறை பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் இந்தியாவைப் பார்த்து,  வெளிப்படையாகவே கேட்டார்: ‘‘நீங்கள் 'ஐ.எஸ்.ஐ.' மீது குற்றஞ்சாட்டுகிறீர்கள். ஆனால், ஆப்கனில் கந்தஹாரிலும் ஜலாலாபாத்திலும் இந்தியத் துணைத் தூதரகங்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றன? உங்கள் ‘ரா’ என்ன செய்துகொண்டிருக்கிறது?”

                         முஷாரப்பின் கேள்வியை பல்வாரிஸ்தான் தேசிய முன்னணியின் தலைவர் அப்துல் ஹமீது கான் சொன்ன ‘‘எங்களுக்குத் தேவை பல்வாரிஸ்தான். இந்தியாவா, பாகிஸ்தானா என்று எங்களைக் கேட்டால், நாங்கள் இந்தியாவைத்தான் தேர்ந்தெடுப்போம்” என்ற வார்த்தைகளோடும், உளவுப் பணியின்போது பிடிபட்டு, சித்திரவதைகளைச் சுமந்து, நடைப்பிணங்களாக நாடு திரும்பி, ஓய்வூதியத்துக்காக அலையும் நூற்றுக்கணக்கான இந்திய உளவாளிகளின் மத்தியில், சரப்ஜித் சிங்குக்கு அளிக்கப்பட்ட ‘வீரத் திருமகன்’ மரியாதையோடும் ஒப்பிட்டுப் பாருங்கள்... பதில் தெரியும். ஆம், ஒரு பயங்கரவாத தேசத்தின் ரத்தக் கறை படிந்த குடிமகன்கள் நாம்!

காலச்சுவடு மே 2013

8 கருத்துகள்:

  1. சிறந்த பகிர்தல்

    பதிலளிநீக்கு
  2. india ulavuthurai seivadhil thavarondrum illaye.. matra naadugalai avargal prachanayil engage panni vaithirupadhin moolam avargal nammai kurivaikum nerathinai kuraikiradhu... bangladesh il nadandhadhu nalla oru thitam, bangladesh sudhanthiram raw inal kidaithadhu endru solvadhu thavaru annaatu makkalin poraatathirku urudhunai seidhadhu endru kooruvadhe sariaga irukum... srilanka vil india arasu seiya ninaithadhu adhigaprasangithanam... adhan pinvilaivayum avargal sandhithargal...
    neengal solvadhupol appaavi makkalin uyirilappu ku kaaranamaaga irupin adhu vanmayaga kandika thakadhu...

    பதிலளிநீக்கு
  3. தங்கள் கட்டுரை வாயிலாக இந்தியாவும் வல்லரசாக முயற்சி எடுப்பதாக தெரிகிறது.ஆனால் யாரையும் கெடுத்து நாம் முன்னேறமுடியாது என்பது காந்தியின் மைந்தர்களான நாம் உரக்க கூறிக்கொண்டே இருப்போம் தங்களோடு இனைந்து

    பதிலளிநீக்கு
  4. Hello Samas,

    Hats off to this article. Very straight forward and the truth. I have been in so many countries and knew the other side of India as well. We cant claim as pure as Gandhi or any purity. Even i shared my room with one pakistani during my masters, i had to buy so many paining blunders India did in the pakistan region.

    Thanks a lot for being staright and truthful. i have become your fan of your blog. Great Going !!!

    பதிலளிநீக்கு
  5. சமஸ் , உங்களுடைய எழுத்துக்கு மிகுந்த மரியாதையும் வரவேற்பும் உள்ளது. உங்களுடைய கட்டுரைகளில் துணிச்சலும் நேர்மையும் உள்ளது.

    நீங்கள் சொல்லும் கருத்துகளின் நம்பக தன்மை மீது அக்கறை செலுத்தும் படி கேட்டு கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. சமஸ் எதிரி நிம்மதியாக இருந்தால் அவனுடைய நோக்கம் நம்மை சிதைப்பதாக தான் இருக்கும். தற்காப்புக்கு முதல் கேடயம் தாக்குதல் ஆங்கிலத்தில் Attacking is the best way of defense என்று சொல்வார்கள். உலகில் உள்ள எல்லா நாடுகளும் காலம் காலமாக செய்து வருவது தான் இந்த மறைமுக தாக்குதல் முறை. பாகிஸ்தான் காரன் நிம்மதியாக இருந்தால் அவனுடைய அடுத்த அடி நமக்கு காஸ்மீரில் விழும். அவர்களை நிம்மதியாக இருக்க விட்டதன் பலன் கோவையில் குண்டு வெடிப்பு முழுக்க முழுக்க பாகிஸ்தானியர்கள் நடத்தியது. அதன் ரணம் எங்கள் மனங்களில் இருந்து இன்னும் ஆறவில்லை. ஸ்ரீ லங்காவில் மொத்த பிரச்சனைக்கும் காரணம் இந்தியா தான். அண்டை நாடுகளில் பிரச்சனை இல்லாவிட்டால் நமக்குதான் பிரச்சனை. இதை தான் ராஜ தந்திரம் என்று அன்றே சாணக்கியன் சொன்னான்.

    பதிலளிநீக்கு
  7. சரியண கட்டுரை சமஸ் கஷ்மிரில் நடக்கும் போருக்கு நாம் பாக்கிஸ்தாணை குற்றம் சாட்டுகிறோம் எண்பதுதாண் உண்மை. ஆணல் இரு நாடுகளும் ஒரே குட்டையில் உரிய மட்டைகள்தாண்

    பதிலளிநீக்கு
  8. சரியண கட்டுரை சமஸ் கஷ்மிரில் நடக்கும் போருக்கு நாம் பாக்கிஸ்தாணை குற்றம் சாட்டுகிறோம் எண்பதுதாண் உண்மை. ஆணல் இரு நாடுகளும் ஒரே குட்டையில் உரிய மட்டைகள்தாண்

    பதிலளிநீக்கு