நாம் ஏன் ரஜினியை நேசிக்கிறோம்?


மார்லன் பிராண்டோ மறைந்தபோது, துயரம் தாங்காமல் ஒரு வாரத்துக்குஅழுத ரசிகர் அவர். இத்தனைக்கும் பிராண்டோ நடித்த ஒரு படத்தைக்கூட அவர் பார்த்தது இல்லை. பின் எப்படி இவ்வளவு நேசம் என்று கேட்டபோது, பிராண்டோவின்  பேட்டி ஒன்றைப் பார்த்து அவருக்கு ரசிகரானதாகச் சொன்னார் அவர்.  ‘‘சூப்பர்மேனுக்கான உடைகளை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்?’’ என்று நிருபர் கேட்டபோது,  “அமெரிக்க செவ்விந்தியர்கள் எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறார்கள்” என்று மணிக்கணக்கில் பதில் அளித்து நிருபரை பிராண்டோ வெறுப்பேற்றிய பேட்டி அது.


ஒரு சினிமா நாயகனை மக்கள் ஏன் கொண்டாடுகிறார்கள் என்பதற்குப் பெரிய ஆராய்ச்சிகள் தேவை இல்லை. பிராண்டோ சொன்னதுதான்.‘‘நல்லவனோ, கெட்டவனோ… மக்களுக்குக் கொண்டாடுவதற்கு கட்டாயம் ஒரு நாயகன் தேவை. அவனைப் பற்றிப் பேசுவதும் கொண்டாடுவதும் அவர்களுக்கு முக்கியம்.’’  ஆனால், ஒரு நாயகன் கொண்டாடப்படும் பின்னணி முக்கியமானது. அது சமூகத்தின் மனநிலையையும் சேர்த்து நாம் பார்க்க உதவுகிறது.

சுதந்திரத்துக்குப் பின் தேனாறும் பாலாறும் ஓடும் என்று உருவாக்கப்பட்டமாயைகள் உடைந்து, பணக்காரர்களும் பண்ணையார்களும் கொட்டம் அடித்தபோது திரைப்படங்களில் அவர்களைத் தட்டிக்கேட்ட நாயகர்கள் உச்சத்துக்குப்போனார்கள். திரையில் அறநெறிகளுடன் ‘வாழ்ந்து காட்டிய’நாயகர்கள் மக்கள் தலைவர்களாகப் பார்க்கப்பட்டார்கள். எம்.ஜி.ஆர். அப்படித்தான் ஜெயித்தார். ரஜினி விஷயத்தில் நடந்ததோ தலைகீழ். இந்தியா கலாச்சாரப் பாய்ச்சலுக்குள்ளான காலகட்டம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் மீறல் கனவுகளை, ஆழ்மன ஆசைகளை திரையில் அனாயசமாக நடத்திக்காட்டினார் ரஜினி. திரையில் அவர் சாமானியராக இருந்தார். சாமானியர்களின் முரட்டுத்தனத்தையும் அப்பாவித்தனத்தையும் பிரதிபலித்தார். சாமானியனாக இருந்துகொண்டே சாமானியர்களால் கற்பனைசெய்யக்கூட முடியாத அற்புதங்களை நிகழ்த்தினார். முக்கியமாக, எல்லாத் தவறுகளோடும் ஒருவன் நல்லவனாகவும் நாயகனாகவும் இருக்க முடியும் என்று காட்டினார். அவருடைய ஆரம்பக் காலப்  பாசங்கற்ற நடவடிக்கைகள் அவருடைய பிம்பத்துக்கு மேலும் வலு சேர்த்தன.



ரஜினி கோலோச்சத் தொடங்கிய 1980-கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிசுகிசு. ரஜினிக்கு தினம் ஒரு பெண் தேவை என்று பத்திரிகைகள் எழுதியபோது, ரஜினி ஒரு பேட்டியில் சொன்னார்.‘‘ஆமாம், உண்மைதான். இதைச் சொல்றதுல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. நான் யாரையும் தேடிப் போகலை. வற்புறுத்தலை. கஷ்டப்படுத்தலை. யாருக்கும் நான் பிராமிஸ் பண்ணலை... யாரையும் ஏமாத்தவும் இல்லை.’’

ரஜினியின் திருமணம் இன்றைய தலைமுறையினர் பலருக்கு ஆச்சர்யம் அளிக்கக் கூடியது. ரஜினி, லதா இருவரின் குடும்பங்களையும் சேர்ந்த சிலர் மட்டும் பங்கேற்ற நிகழ்ச்சி அது. திருப்பதி கோயிலில் நடந்தது. அதிகாலையில் திருமணத்தை முடிந்தவர், காலை 10 மணிக்கு எல்லாம்‘நெற்றிக்கண்’ படப்பிடிப்புக்குப்  போய்விட்டார். திருமணத்துக்கு முன் பத்திரிகையாளர்களை வீட்டுக்கு அழைத்திருந்தார் ரஜினி. முன்கூட்டியே, அவரும் லதாவும் மாலையோடு இருக்கும் படம் ஒன்றை அவர்களிடம் கொடுத்து, ‘‘குறிப்பிட்ட சிலரை மட்டும்தான் அழைச்சு இருக்கேன்னு சொல்லி, திருப்பதி கோயில்ல கல்யாணத்துக்கு ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கி இருக்கேன். என்னோட கல்யாணம் நடந்து முடிஞ்சதும் நீங்க இந்த போட்டோவைப் பயன்படுத்திக்கங்க. தயவுசெஞ்சு திருப்பதிக்கு யாரும் வந்துடாதீங்க’’ என்றார். அப்போது, ‘‘வந்தா?’’ என்றார் ஒரு நிருபர். ‘‘உதைப்பேன்’’ என்று சொன்னார் ரஜினி. அருகில் இருந்த  இன்னொரு நிருபர் ‘‘இந்த மாதிரி வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தாதீங்க... அதை நாங்க பப்ளிஷ் செஞ்சுட்டா,பின்னாலே அசிங்கமா போயிடும்’’ என்று சொன்னபோது, ரஜினி சொன்னார். ‘‘உங்களோட ஓபன் அப்ரோச் எனக்குப் பிடிச்சு இருக்கு. ஐயாம் வெரி சாரி. ஆனா, இப்போ சாரி சொல்லிட்டேன்னு கல்யாணத்துக்கு வந்துடாதீங்க. அங்கே கேமராவோட யாரையாவது பார்த்துட்டா உதைக்கறதைத் தவிர எனக்கு வேற வழி இல்லை.’’

நம்மில் பலரையும்போல, ‘முள்ளும் மலரும்’ ரஜினிதான் ரஜினிக்கும் பிடித்தமானவர். இயக்குநர் மகேந்திரன்தான் இன்றைக்கும் அவரை இயக்கியவர்களிலேயே அவர் பெரிதும் மதிப்பவர். ஆனால், ஒருகட்டத்தில்,ஒரு மாபெரும் பொழுதுபோக்குக் கலைஞனாக அவர் உருவெடுத்தபோது  தன்னுடைய படங்கள் முழுக்கப் பொழுதுபோக்குக்கானவை என்ற முடிவை அவர் எடுத்தார். தன்னுடைய படங்கள்குறித்து போலியான மதிப்பீடுகள் ரஜினியிடம் இல்லை.  ‘‘ஆயிரக்கணக்கானவங்க வாழ்க்கை இதுல இருக்கு. என்னை நம்பி பணம் போடுறவங்களுக்கு, எனக்குப் பணம் கொடுக்குறவங்களுக்கு, திரும்ப நான் பணம் சம்பாதிச்சுக் கொடுக்கணும். அவங்க நடிக்க வைக்கிறாங்க. நான் நடிக்கிறேன். அவ்ளோதான். இதிலே எந்தக் குழப்பமும் இல்லை’’என்றார்.

ஒரு பேட்டியில் மோகன்லாலிடம் கேட்டார்கள்: ‘‘ரஜினிகாந்தைப் போல வழுக்கைத் தலையோடும் நரைத்த முடியோடும் உங்களால் வெளியே வர முடியுமா?’’ மோகன்லால் சொன்னார்: ‘‘ரஜினி எப்படி வேண்டுமானாலும் வரலாம்;என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவரை யாருடனும் ஒப்பிட முடியாது. ஏனென்றால், மக்கள் அவரை அப்படித்தான் எதிர்பார்க்கிறார்கள். அவருடைய தனித்துவமே அதுதான்.’’

உண்மைதான். சமூக வாழ்க்கை சார்ந்து எவ்வளவோ விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டும், திரையில் ரஜினியைப் பார்த்ததும் நாம் பரவசமாகிறோம்.ஒவ்வொரு படத்திலும் ரஜினி நிகழ்த்தும் அற்புதங்கள் மேலும் மேலும் அதிகரிக்க வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம். அவருக்கு எவ்வளவு வயதானாலும், திரையில் இன்னும் இன்னும் இளமையாகப் பார்க்கவும் பறந்து பறந்து அடிப்பதையும் நாம் எதிர்பார்க்கிறோம். ஏனென்றால், ரஜினி என்றால், எதுவும் செய்யலாம் என்ற மாபெரும் சுதந்திரத்தைநாம் ரஜினியிடம் கொடுத்திருக்கிறோம்; ஏனென்றால்,ரஜினியிடம் நாம் பார்ப்பது நமக்குள் இருக்கும் ரஜினியை!

‘தி இந்து’ டிச. 2013

9 கருத்துகள்:

  1. ரஜினியைப் பற்றி மாற்றுக் கருத்து கொண்டவர்கள்கூட அவரை ரசிப்பர். அதுவே அவருடைய வெற்றி.

    பதிலளிநீக்கு
  2. சமஸ் அண்ணாவுக்கு வணக்கம்,
    ரஜினி அவர்களின் பிறந்தநாள் நெருங்க நெருங்க...முகபுத்தகத்தில் பத்திரிகையாளர்கள்,மற்றும் உலக சினிமா ரசிகர் தனி மனித துதி பாடலை வெறுக்கிறோம் என்று கூறி கொள்பவர்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்......பொதுவா அவருடைய ரசிகரான எனக்கு அது கோபத்தை தரும்..போன வருடம் இதை நீங்கள் எழுதியபோது நான் படிக்கவில்லை...இன்று நீங்கள் முகபுத்தகத்தில் இதை பகிர்ந்து இருந்ததை பார்த்த பொழுது ரஜினியை விமர்சித்து இன்னொரு கட்டுரையா...எவளோ விமர்சனத்த படுச்சுடோம்..இதையும் படுச்சுடுவோமேனு படித்தேன் ...உணமையாக மட்டற்ற மகிழ்ச்சி...ஒரு சராசரி மனிதன் பார்வையில் இருந்து எழுதபெற்ற சிறந்த பதிப்பு அண்ணா....அதுவும் கொண்டாட்ட மனநிலையை பற்றி கூறி இருந்திர்களே மார்லன் பிராண்டோ கூரியதையாக,அருமை...
    அண்ணா அதுக்காக ரஜினியை பாராட்டியதால் மட்டும் இதை எழுதவில்லை...நான் பொறியியல் படித்துவிட்டு தபால்வழியில் மேலாண்மை படிக்கிறேன் இப்போது...நான் தஞ்சாவூரை சேர்ந்தவன் அண்ணா...இங்கே உள்ளே சாஸ்திரா பல்கலைகலகத்துல படித்தேன் பொறியியல்...அங்கே தான் துளிர்த்தது சினிமா கனவு...ஆனால் அங்கே சேரும்போது நான் தமிழ் படங்கள் மட்டுமே பார்த்துவந்தேன்.. சென்னையில் இருந்து பல மாணவர்கள் படித்ததால் அவர்களின் நட்பு மூலமாக உலக சினிமா அறிமுகமானது...பின்பு எஸ்.ராமகிருஷ்ணனின் யாமம் படித்ததும் தமிழ் இலக்கியம் மீது ஒரு காதல் பிறந்தது...உலக சினிமா என்றால் ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளேன்..இலக்கியத்திலும் கூட..உலக சினிமாவில் என்னை அதிகம் ஈர்த்தது ஈரான் சினிமாவே....நான் மஜீத் மஜீதின் தீவிர ரசிகன்........ நான் மத்திய தர குடும்பத்தை சேர்ந்தவன்...ஆனாலும் நான் பயந்து கொண்டே இருந்தேன் என்னுடைய சினிமா கனவை வீட்டில் சொல்ல...படிப்பை முடித்து இரண்டு வருடங்கள் ஆகியும்..வீட்டில் இருந்து கொண்டே புத்தகம் படிப்பது...படம் பார்ப்பதுமாக இருந்தேன்...வீட்டில் வேலைக்கு அவனாக போவான் , கோவித்து கொள்வேன் என்று ஏதும் சொல்லவில்லை...ஆனால் இடையில் எப்போதாவது குரூப் எக்ஸாம் எழுது என்று கூறுவார்கள்....நான் உதாசின படுத்திவிடுவேன்..ஆனால் எங்கேனும் பல வருடமாக சினிமாவில் உதவி இயக்குனர்களாக இருந்து இன்னும் இயக்குனர் ஆகாமலே இருபவர்களை கடந்து விட்டேன் என்றால் இரண்டு மூன்று நாட்கள் தூக்கம் வராது...
    அந்த மாதிரி சூழிநிலையில் உண்மையாக என் மனதை சந்தோஷ படுத்துவது கமர்சியல் காமெடி படங்களே...இத்தனைக்கும் நான் சென்னையில் போய் இது வரை பெரிதாக வாய்ப்பு தேடியதே இல்லை...தற்போது திரும்பவும் இரண்டு மூணு நாட்களாக எதிர்காலத்தின் மீது ஒரு பயம் காரணமாக சரியான தூக்கம் இல்லை...லிங்கா வருகிறது கொஞ்சம் மனசை ஆற்றும் அது என்று இருந்தேன்...அதை செய்தது நிறைவாய் இன்று ..ரஜினி படத்தில் என்னவென்றால் மிக நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்து ஒரு சிறு பதட்டத்துடன் பார்ப்பேன்...
    இதை ஏன் சொல்கிறேன் என்றால் ஒரு மத்தியதர குடும்பத்தில் பிறந்து சிறிது அளவு உலக சினிமாவும்,இலக்கியமும் தெரிந்து...இரண்டு வருடமாக என்ன செய்ய போகிறாய் என்று கேட்காமல் சோறு போடும் குடும்பத்தில் பிறந்த எனக்கே... வாழ்கை மீது இருக்கும் சிறு அச்சத்தை,பதற்றத்தை இன்ன பிறவற்றை தவிர்க்க,மறக்க கமெர்சியல் சினிமா தேவை படும் போது....வாழ்வில் பல பிரச்சனைகளும் தொடர் சங்கலியாய் வருத்தத்தை தரும் அச்சமும் இன்ன பிறவுமாக வாழும்..இலக்கியம் உலகசினிமா தெரியாமல் இருக்கும் .என் சகோதர சகோதரிகளுக்கு,என் அப்பா,அம்மாவுக்கு, நல்ல கமர்சியல் சினிமா கண்டிப்பாக தேவை....
    ரஜினி சரியான சதவிகிதத்தில் பலவற்றை கலந்து... சினிமாவை தவிர்த்து உள்ள குணத்தால் மக்களுக்கு மிகவும் நெருக்கமாக ஆகிவிட்டார்...அதும் நடத்துனரில் இருந்து எட்டாத உயரத்திற்கு சென்று விட்டவர் என்பதால் ...செய்யா முடியாதது எதுமே இல்லை என்பதிற்கு எடுத்துக்காட்டாக விளங்குவதால் மக்கள் அவரை கொண்டாடுகிறார்கள்...பிரச்சனைக்கு நடுவில் கிடைக்கும் சந்தர்பத்தை,தங்கள் பிரச்சனைகளை மறந்து கொண்டாடுவதில் அதிகம் நாட்டம் உடைய என் மக்கள் ரஜினியை அதிகம் கொண்டாடுகிறார்கள்....இது அவர்களின் வாழ்கை மீது,எதிர்காலத்தின் மீது உள்ள அச்சத்தை சிறிது அளவேனும் குறைக்கும் என்றால் கொண்டாடிவிட்டுதான் போகிறோமே நல்ல கமர்சியல் சினிமாக்களையும் ,ரஜினியவும் ...!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோடிகளைக் கொட்டி எடுக்கும் இந்த சினிமாக்களுக்கு வருமானம் மக்கள் பார்ப்பதால் மட்டும் தான் கிடைக்கிறது. இந்த கோடிகளைக் கொட்டினாலும் திருப்பி எடுத்து விடலாம் என்ற நம்பிக்கை தயாரிப்பாளர்களிடமிருக்கிறது. அந்தப் படத்தைப் பார்க்க மக்கள் போகிறார்கள் என்றால் அவர்களின் போலிக் கதாநாயக பாத்திரமே. இவர்களை மக்கள் உன்னதமானவர்களாக பார்த்துத் தான் தம் உழைப்பை வீணாக்குகிறார்கள். இதனால் ஏழைகள் மேலும் மேலும் சுரண்டப்படுகிறார்கள். இது அப்பட்டமான களவில்லையா.மக்களை பகிரங்கமாக ஏமாற்றுவதில்லையா. இதற்கு ஆன்மீக வேஷம் வேறு. மக்கள் வஞ்சகமற்றவர்கள். அவர்களை ஏமாற்றிப்பிழைப்பு நடத்தி போகும் போது வாரிசுகளுக்கு சேர்த்து விட்டு வெறும் கையுடன் தான் போவார்கள்.ஆனால் ஏழைகளோ வயிற்றைக் கட்டி இவர்களுக்குத் தாரை வார்த்து விடுவாரார்கள். இந்த நடிகர்கள் தங்கள் நடிகத்தன்னையை பகிரங்கமாக ஒப்புக்கொண்டு கோடிகளைக் கொட்டி படமெடுத்துப் பார்த்தால் புரியும் மக்கள் கொண்டாடுகிறார்களா இல்லை வறுத்தெடுக்கிறார்களா என்று.

      நீக்கு
  3. நம்மில் குடிகொண்டிருந்த கதாநாயக பிம்பங்கள்/

    பதிலளிநீக்கு
  4. சமஸ் அவர்களுக்கு வணக்கம்,

    தமிழ் சமூகத்தை பார்க்க வேண்டுமென்றால், அதில் சினிமாவும் ஒரு வீட்டு பங்காளி போல தான். நாம் சினிமாவை ஒதுக்கி வைத்து விட்டு, சமகால அரசியல் முதல் கடந்தகால சமூக சூழலையும் பார்க்க முடியாமல் போகும். பிரெஞ்சு சினிமாக்கள் அனைத்தும் ரியலிசம் சார்ந்த சினிமாக்கள், கொரியம் சினிமாக்கள் அனைத்தும், உளவியல் சார்ந்தைவை என பல மேலை நாட்டு சினிமாக்கள், ஒரே விஷயத்தை பல கோணங்களில், பல விஷயங்களை ஒரே கோணத்திலும் காட்டுகின்றன. அது சினிமாவிற்கான ஒரு விதமான கோட்டுபாடுகளாக இருந்து வந்துள்ளது. ஆனால், தமிழ் சினிமாவில் மட்டும், சமூகத்தில் புரையோடி கிடைக்கிற, பிற்போக்கான சிந்தனைகளை முன் வைத்து தமிழ் சினிமா, ஆதிக்க வர்ககத்தினரால் உருவாக்கப்பட்டு வருகிறது.அதில் ஒன்றுதான் இந்த, இந்த சினிமாவின் கதாநாயர்கள், கதாநாயகிகள் என்பவர்கள். நம் மனதில் தோன்றும் செயலை, நம் கண் முன்னே, வேறு ஒருவன் செய்து காட்டினால், அவர் தான் கதாநாயகன். இது மக்களின் உள்ளணர்வு சார்ந்த ஒன்றாக தான் பார்க்க முடிகிறது. இது நமக்கு தெரியாமலே, நமக்குள் விதைக்கப்பட்ட விதை. இந்த விதை வளர்ந்து ஆலமரமாக நம்மில் வளர்ந்து இருக்கிறது. அதனால், தான் தமிழ் சினிமாவின் கதாநாயகர், கதாநாயகி என அனைவரும் நல்ல மேட்டுகுடியை சார்ந்தவர்களாக தான் காட்டப்படுகிறது. இதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால், சொற்பகாலமாக தான் விளிம்புநிலை மக்களுக்கான, ரியலிசமான சினிமாக்கள் வர தொடங்கி உள்ளது. இது தான் வளர்ச்சி என கூறவில்லை. இருந்தும், சினிமா வளர்ச்சி என்ற வகையில் பார்க்கிற போது, நாம் பின் தங்கி உள்ளோம், என கூறுகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. .#‘‘நல்லவனோ, கெட்டவனோ… மக்களுக்குக் கொண்டாடுவதற்கு கட்டாயம் ஒரு நாயகன் தேவை. அவனைப் பற்றிப் பேசுவதும் கொண்டாடுவதும் அவர்களுக்கு முக்கியம்.’’ ஆனால், ஒரு நாயகன் கொண்டாடப்படும் பின்னணி முக்கியமானது. அது சமூகத்தின் மனநிலையையும் சேர்த்து நாம் பார்க்க உதவுகிறது.#
    மிகச்சரி.

    பதிலளிநீக்கு
  6. தானாக கொண்டாடுகிறார்களா? அல்லது திட்டமிட்டு முழு வணிக நோக்கில் கொண்டாடும்படி சாமானியர்களை மூளைச் சலவை செய்கிறார்களா? என்பதை சமஸ் அவர்கள் மனதை தொட்டு சொல்லவும்....

    பதிலளிநீக்கு
  7. தானாக கொண்டாடுகிறார்களா? அல்லது திட்டமிட்டு முழு வணிக நோக்கில் கொண்டாடும்படி சாமானியர்களை மூளைச் சலவை செய்கிறார்களா? என்பதை சமஸ் அவர்கள் மனதை தொட்டு சொல்லவும்....

    பதிலளிநீக்கு
  8. தானாக கொண்டாடுகிறார்களா? அல்லது திட்டமிட்டு முழு வணிக நோக்கில் கொண்டாடும்படி சாமானியர்களை மூளைச் சலவை செய்கிறார்களா? என்பதை சமஸ் அவர்கள் மனதை தொட்டு சொல்லவும்....

    பதிலளிநீக்கு