கொலைக் குற்றமா கருக்கலைப்பு? 

                     டந்த ஆண்டு அயர்லாந்து இருந்த இடத்தில் இந்த ஆண்டு ஸ்பெயின். பெண்கள் அமைப்புகள் கொடிகளை ஏந்தி நிற்கின்றன. அயர்லாந்து சட்டம் கருக்கலைப்பை அனுமதிக்காத நிலையில், கடந்த ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த சவிதா அங்கு கருக்கலைப்பு மறுக்கப்பட்டு உயிரிழந்தபோது அயர்லாந்து சர்ச்சையில் சிக்கியது; ஏற்கெனவே உள்ள சட்டத்தை மேலும் இறுக்கிக் கிட்டத்தட்ட கருக்கலைப்புத் தடைச் சட்டத்தைக் கொண்டுவந்து, சர்ச்சையில் சிக்கியிருக்கிறது ஸ்பெயின். பெண்களின் கருப்பைக்கான உரிமையை மேலாதிக்கம் செய்வதில் வளர்ந்த நாடுகள், பின்தங்கிய நாடுகள் என்ற வேறுபாடு இல்லை; உயிர்களைவிடவும் மதமும் நம்பிக்கைகளுமே அங்கு முக்கியம்.அமுதா ஏன் இறந்தார்?நம்மூர் கதைக்கு வருவோம். மதுரையைச் சேர்ந்த அமுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த வாரம் உயிரிழந்தார். அவருடைய மூன்றாவது வீட்டுப் பெண்களுக்குக்கூட அமுதாவின் மரணத்துக்கான உண்மையான காரணம் தெரியாது. காய்ச்சலில் கிடந்து அவர் இறந்துபோனதாக அமுதாவின் உறவுக்காரர்கள் எல்லோரிடமும் சொன்னார்கள். உண்மையான காரணம் - கருக்கலைப்பின் தொடர்ச்சியாக ஏற்பட்ட நோய்த்தொற்று.

ஆனால், அமுதாவின் மரணத்துக்கான காரணம் ஏன் மறைக்கப்பட்டது? இத்தனைக்கும், அமுதாவுக்குக் கணவர் இருக்கிறார்; மேலும், இரு குழந்தை களுக்கு அவர் தாய்.


பதில்... குற்ற உணர்வும் அவமானமும்.ஆண்டுக்கு 20 ஆயிரம் அமுதாக்கள்இந்தியாவில் ஆண்டுக்குக் குறைந்தது 20 ஆயிரம் அமுதாக்கள் குற்ற உணர்வோடும் அவமான உணர் வோடும் வலியைச் சுமந்து இப்படி உயிரை விடுகிறார்கள். நம்முடைய சட்டம் கிட்டத்தட்ட முழுமையாகக் கருக்கலைப்பை அனுமதிக்கிறது. 1860-ம் வருடச் சட்டம், கருக்கலைப்புக்குக் கடுமையான கெடுபிடிகளை விதித்தது. ஆனால், சுதந்திரத்துக்குப் பின் குடும்பக் கட்டுப்பாட்டின் அவசியத்தை மெல்லமெல்ல உணர்ந்த இந்திய அரசு, 1971-ல் புதிய சட்டத்தை உருவாக்கியது.நியாயமான காரணங்களோடு முன் மொழியப்படும் கருக்கலைப்பை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள், உயிர் காக்கும் அனைத்து வசதிகளும் உடைய அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் செய்ய இந்தச் சட்டம் அனுமதி அளிக்கிறது. உடல்/மனநலம் சார்ந்து தாயோ சேயோ சிக்கலை எதிர்கொள்ளலாம் என்ற சூழல், ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுக் கருவைச் சுமக்கும் சூழல், திருமணம் ஆகாத - 18 வயதுக்கு உட்பட்ட இளம்பெண் கருவைச் சுமக்கும் சூழல், மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கருவைச் சுமக்கும் சூழல் என்று 20 வாரங்களைத் தாண்டாத கருவைக் கலைப்பதற்கான சூழல்களை இந்தச் சட்டம் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது.இந்தப் பின்னணியில், தன்னுடைய உடல்நிலை சார்ந்து ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ளலாமா, வேண்டாமா என்று முடிவு எடுக்கும் உரிமை ஓர் இந்தியப் பெண்ணுக்கு உண்டு. ஆனால், இந்திய மருத்துவச் சமூகம் கருக்கலைப்பை ஓர் அவமானகரமான விஷயமாகவே சமூகத்தின் மனத்தில் உருவாக்கிவைத்திருக்கிறது.மருத்துவர்களின் குற்றம்பெரும்பாலான இந்திய மருத்துவமனைகள் கருக்கலைப்புக்காக அணுகுவோரை மோசமான நடத்தையுடைய தகாத மனிதர்களாகவே நடத்துகின்றன.அரசு மருத்துவமனைகள் கருக்கலைப்புக்காக அணுகுபவர்களைப் பெரும்பாலும் அவமானப்படுத்தி அல்லது அறுவைச் சிகிச்சை நிர்பந்தப்படுத்தி அல்லது சாக்குப்போக்கு சொல்லி தனியார் மருத்துவமனைகளை நோக்கித் தள்ளுகின்றன. தனியாரை நாடும் சூழ்நிலையிலோ, நல்ல மருத்துவர்கள் என்று பெயர்பெற்ற பெரும்பாலான மகப்பேறு நிபுணர்கள் - பெரும்பாலும் தங்கள் பிரசவத் தொழில் நலன், மத நம்பிக்கைகளின் பின்னணியில் - தாங்கள் கருக்கலைப்பு செய்வது இல்லை என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருப்பதாகக் கூறித் தவிர்க்கின்றனர்.

தொழில் அறம் சார்ந்து பார்த்தால் இது குற்றம். ஆனால், கேள்வி கேட்க ஆள் இல்லை. விளைவு... கருக்கலைப்புக் கோரிக்கையோடு அணுகுவோரைப் பணம் காய்ச்சி மரங்களாக இரண்டாம் தர மருத்துவர்கள் பயன்படுத்திக்கொள்ள வசதியாகிவிடுகிறது. கிராமப்புறங்களிலோ செவிலியர்களும் ஆயாக்களுமே கருக்கலைப்பு நிபுணர்கள் ஆகிவிடுகின்றனர்.


குச்சி முதல் கத்தி வரைஇந்தியாவில் ஆண்டுதோறும் 1.10 கோடி கருக்கலைப்புகள் நடக்கின்றன. இவற்றில் 66% கருக்கலைப்புகள் சட்டத்துக்குப் புறம்பான வகையிலேயே நடக்கின்றன. குச்சி முனையில் பச்சிலையை வைத்து பெண் உறுப்பில் செலுத்திச் செய்யப்படும் நாட்டுப்புற முறையில் தொடங்கி, மயக்க மருந்தே கொடுக்காமல் நடத்தப்படும் அரைகுறை அறுவைச் சிகிச்சை முறை வரை அவரவர் விருப்பப்படி கையாளப்படுகின்றன இந்தக் கருக்கலைப்புகள். இதனால், தன் உடல் - உயிர் மீதான உரிமையே மறுக்கப்பட்ட நிலையில், மரணத்தை எதிர்கொள்கின்றனர் பலர்.அயர்லாந்தின் சட்டத்தால் கருக்கலைப்பு மறுக்கப்பட்டு, உயிரிழந்த சவிதா ஒரு மருத்துவர். ஆகையால், அப்போது சவிதாவுக்கு ஆதரவாகத் தீவிரக் குரல்கொடுத்தது இந்திய மருத்துவச் சமூகம். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் நடக்கும் அமுதாக்களின் மரணங்களுக்கு இந்திய மருத்துவச் சமூகம் தெருவில் குரல்கொடுக்க வேண்டியது இல்லை; தம் மனசாட்சிக்காவது குரல்கொடுக்க முயல வேண்டும்.

‘தி இந்து’ டிச. 2013

1 கருத்து:

  1. பெண்களுக்குக் கருப்பையிலேயே தொடங்கிவிடுகின்றன மேலாதிக்க உரிமைகள் பிறருக்கு. கருப்பை உரிமை கணவன், மாமியார், மருத்துவர் என்று படிப்படியாக அரசு வரை அவளைத் தவிர மற்றவர்களுக்கே உரிமைகள் அதிகம். வெட்கித் தலை குணிய வேண்டிய சமுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    அருமையான பகிர்வு.

    வெளிநாட்டில் இருந்தால் குரல் கொடுப்பார்கள். சவிதாவாக இருந்தாலும் சரி. தேவ்யானியாக இருந்தாலும் சரி. நம் நாட்டின் (தமிழ் நாட்டில்) அமுதாக்களுக்குக் கொடுக்க மாட்டார்கள்.ஏனென்றால் நாமெல்லாம் தமிழர்கள்!!!!

    பதிலளிநீக்கு