என்றும் அழியாத கோலம்






திடீரென்று அழைக்கிறார்: இன்னைக்கு அலுவலகம் வர முடியுமா?”

பொதுவாக, சரியான நேரத்தைப் பின்பற்றுவார் என்பதால், அவர் குறிப்பிட்டபடி சரியான நேரத்தில் அங்கிருந்தேன். வழக்கத்துக்கு மாறாக அவருடைய நாற்காலியில் அமராமல், சோபாவில் அமர்ந்திருக்கிறார். நாற்காலியை இழுத்துப்போட்டு அருகில் அமருமாறு சைகைசெய்கிறார்: உடம்பு சரியில்லை, டாக்டரைப் போய்ப் பார்த்தேன். என்ன மருந்து எழுதினார்னு தெரியலை. மாத்திரை முழுங்கினதிலேர்ந்து மயக்கமாவே இருக்குஎன்றவர், சத்யா என்பவரை அழைக்கிறார். சத்யா வந்ததும் அவரிடம் சாப்பிட எடுத்துவரச் சொல்லி சைகை காட்டுகிறார். சத்யா அகன்றதும், “சத்யா என்னோட மகன் மாதிரி. தப்பு. அவன் என்னோட வளர்ப்பு மகன்என்கிறார். கொஞ்சம் இடைவெளி விட்டு, “சத்யா எம்.ஏ. தமிழ் இலக்கியம் படிச்சிருக்கான். டிரைவர் வேலைக்குத்தான் என்கிட்ட வந்தான். தமிழ் இலக்கியம் படிச்சுட்டு என்ன செய்யப்போறன்னு கேட்டுட்டு, நான்தான் சினிமா கத்துக்கச் சொன்னேன். இப்போ சத்யா சினிமா படிக்கிறான். அவனும் என்னுடைய மாணவன். ஏதோ, நம்மால முடிஞ்சது இப்படிப்பட்ட உதவிகள்தான்என்கிறார்.

சத்யா ஒரு கோப்பையில் காய்கறி சூப்பைக் கொண்டுவந்து கொடுக்கவும், மெல்ல அதைக் கரண்டியால் எடுத்துச் சாப்பிட ஆரம்பிக்கிறார். அவருடைய கைகள் நடுங்கி, சட்டையில் சூப் சிந்துகிறது. தொடர்ந்து ஒவ்வொரு முறை சூப்பை உறிஞ்ச வாய்க்குக் கொண்டுசெல்லும்போதும், சூப் சிந்துகிறது. ஆனால், அதை உணரவோ தடுக்கவோ அவரால் முடியவில்லை. நகரும் கணங்கள் சங்கடமாக மாறுவதை உணர்ந்தவராக, அருகில் இருந்த ஒரு புகைப்படத்தைக் கையில் எடுத்துக்கொடுத்து, “இந்தப் படத்தைப் பார்த்திருக்கீங்களா?” என்கிறார்.

அது கொஞ்சம் அரிதான படம். ஒலிப்பதிவுக் கூடத்தில் கமலுக்கும் ஸ்ரீதேவிக்கும் இடையில் அவர் ஓவெனக் கத்துவது போன்ற படம் அது. “‘மூன்றாம் பிறையில ஸ்ரீதேவி பயந்து கத்துவது மாதிரியான காட்சியில, எப்படிக் கத்தணும்னு நான் விளக்கினப்போ எடுத்த படம் இது. ரவி எடுத்தது. ரவி எப்போ, எங்கேர்ந்து படம் எடுக்கிறார்னே தெரியாதுஎன்பவருக்குள் இருக்கும் புகைப்படக்காரர் வெளியே வருகிறார். நான் ஸ்ரீதேவியை எடுத்த படத்தை நீங்க பார்க்கணுமே…” என்றவர் கொஞ்சம் உற்சாகம் வந்தவராக, மெல்ல எழுந்து, படங்கள் தொங்கும் அறைக்கு அழைத்துச் செல்கிறார்.ஸ்ரீதேவியின் அற்புதமான ஒரு படத்தைக் காட்டுகிறார்: என்னா அழகு!

கூடவே அங்கு மாட்டப்பட்டிருக்கும் ஏராளமான படங்களிடையே ரஜினியோடு நிற்கும் ஒரு படத்தைக் காட்டுகிறார். பாலு மகேந்திராவும் ரஜினியும் நின்றுகொண்டிருக்க, அவர்கள் அருகே கீழே அமர்ந்திருக்கும் மாதவி பாலு மகேந்திராவை ரசித்துப் பார்க்கும் படம் அது.

தனுஷ் இங்கே வந்தப்போ இந்தப் படத்தைப் பார்த்தார். சார்... மாதவியோட பார்வையைப் பாருங்க சார்... எங்க மாமனாரைப் பார்க்கலை; உங்களையே பார்க்கிறாங்க'னு சொன்னார். அப்புறம்தான் கவனிச்சேன். மாதவி என்னைத்தான் பார்த்துக்கிட்டுருக்கார்; இல்லையா?” - சிரிக்கிறார்.

அந்தக் காலத்தில் அட்டகாசமாக இருந்திருக்கிறீர்கள் சார்…”

ஏன், இப்போது மட்டும் என்னவாம்?” மீண்டும் சிரிப்பு.

எல்லோர் படமும் இருக்கு. சில்க் ஸ்மிதா படம் இல்லையே?”

ஏன் இல்லை? என் மனசுல இருக்குஎன்கிறவர் கொஞ்சம் இடைவெளிவிட்டு,“சில்க் பேரழகி. அவளோட முகம், உடல், கால்கள்... சில்க் பேரழகி. அவளுடைய உதட்டுச் சுழிப்பு போதுமே... கவர்ச்சிக்கும் கிறக்கத்துக்கும். அத்தனை சக்தி உண்டு அவ அழகுக்கு.

ஸ்ரீதேவியைவிடவும் சில்க் அழகா?”

ஆமாம். திராவிட அழகோட உச்சம் இல்லையா அவ?ஸ்ரீதேவியும் அழகிதான். ஆனா, அவளோட சிவப்பு நிறம் திகட்டக்கூடியது. சில்க் அப்படி அல்லஎன்றவர், அப்படியே சில நிமிஷங்கள் யோசனையில் ஆழ்கிறார். ஒரு பேரழகிங்கிறதைத் தாண்டி எத்தனை அற்புதமான ஆன்மா அவள்? அப்படி ஒரு முடிவு அவளுக்கு ஏற்பட்டிருக்கக் கூடாது. நல்ல ஆன்மாக்கள் நம்மகிட்ட நீண்ட நாளைக்கு நீடிக்க முடியாமல்போறது ஒரு சாபக்கேடுஎன்கிறார். பேச்சு அவருடைய பழைய படங்கள், நண்பர்களைப் பற்றிச் செல்லும் வேளையில், ஷோபாவிடம் போய் நிற்கிறது. மீண்டும் யோசனையில் ஆழ்கிறார்.  உங்களுக்கு ஒரு கனவு வரும்போது அதுல சந்தோஷமான, துக்கமான, குழப்பமான, நிம்மதியில்லாத இப்படி எல்லா உணர்வுகளும் அதிலே இருக்கும், இல்லையா? அப்படி ஒரு கனவு ஷோபா. வேறென்ன சொல்ல?” என்றவர் இரும ஆரம்பிக்கிறார்.



யோசிச்சுப்பார்த்தா, ஒவ்வொரு படைப்பாளியோட தனிப்பட்ட வாழ்க்கையுமே சாபம்தான், இல்லையா? பாருங்க, ஒரு சாமானியனுக்கும் படைப்பாளிக்கும் இடையிலே என்ன வித்தியாசம்? நுண்ணுணர்வு. அதைப் படைப்பாக்குற அறிவு. அந்தப் படைப்பை ஏதோ ஒரு வகையில் வெளிப்படுத்தியே, பகிர்ந்துகிட்டே ஆகணும்கிற வேட்கை. ஒரு சாதாரண விஷயத்தைக்கூடத் தரிசனமாகப் பார்க்குறது. அதைப் பிரமாண்டப்படுத்துறது. உணர்வுபூர்வமாக வாழ்றது. இந்த இயல்பு ஒரு மனுஷனோட படைப்புலக வாழ்க்கைக்கு நல்லது. ஆனா, தனிப்பட்ட வாழ்க்கைக்கோ சாபக்கேடு. சின்னச்சின்ன விஷயங்களைக்கூடப் பெரிசாக்கிப் பார்க்கிறதும் எல்லா விஷயங்களையும் உணர்வுபூர்வமா அணுகுறதும் உறவுகள் சார்ந்து ஆபத்தானது. ஆனா, அதுதான் ஒரு அசலான படைப்பாளியோட இயல்பு. நான் என்னுடைய படைப்புலக வாழ்க்கைக்கு நுண்ணுணர்வாளனாகவும் வீட்டிலே சாதாரணமானவனாகவும் இருப்பேன்னு நடந்துக்க முடியாது. கொஞ்சம் அதிர்ஷ்டசாலிகளுக்கு, இதைப் புரிஞ்சுக்கிட்ட வீட்டுச் சூழல் அமையும். ஆனால், அது எல்லோருக்கும் வாய்க்கிறது இல்லை” - மீண்டும் இருமல் வரவும் அப்படியே அமைதியாகிறார்.

நான் கொஞ்சம் அதிர்ஷ்டம் செஞ்சிருக்கேன். என்னோட எல்லாக் கிறுக்குத்தனங்களையும் தாண்டி, என் குடும்பம் என்னை ஒரு குழந்தைபோல ஏந்திப் பிடிச்சுருக்கு. குடும்பச் சூழல்ல மட்டும் இல்ல, என்னோட தொழில் சார்ந்தும் நான் அதிர்ஷ்டசாலின்னுதான் சொல்லணும். நாம ஜெயிக்கிறோம், சம்பாதிக்கிறோம், தோக்குறோம், ஒண்ணுமே இல்லாமப் போறோம்... இது எல்லாத்தையும் தாண்டி, நாம இஷ்டப்பட்ட வேலையைச் செய்றோம்கிறது எவ்வளோ பெரிய பாக்கியம்?

ஒரு புகைப்படக்காரன், ஒளிப்பதிவாளன், இயக்குநர்இங்கே நீ சாதிச்சது என்னன்னு என்னை யாரும் கேட்கலாம். இது எல்லாத்தையும்விட, நான் எதைப் பெரிசா நெனைக்கிறேன் தெரியுமா? என்னோட மாணவர்களை. தமிழ் சினிமால பாலு மகேந்திராங்கிற பேர் ஒரு மனுஷன் இல்லை; ஒரு குடும்பம். என் மாணவர்களை நான் பிள்ளைகளாத்தான் பார்க்கிறேன். ஒருகட்டம் இருந்துச்சு, என்ன வாழ்க்கை இவ்வளவுதானான்னு யோசிக்கவெச்ச கட்டம். எல்லாத்தையும் இழந்துட்டு நின்ன மாதிரி இருந்துச்சு. அப்புறம் பார்த்தா, ஏக பலமாயிடுச்சு. பிள்ளைங்க பெரியாளாயிட்டாங்கல்ல? இன்னைக்கு என்னைச் சுத்தி எல்லாரும் நல்லவங்களா இருக்காங்க. நான்தான் பெரிய பணக்காரன்என்கிறார்.

என்னோட சின்ன வயசுல என் வீட்டுக்குப் பக்கத்துல ஒரு ஆலமரம் உண்டு. என்னோட பால்ய கால எல்லா ரகசியங்களும் அறிஞ்ச மரம் அது. ஒரு வகையில் அது என்னோட மறைவிடம். வீட்டுக்குத் தெரியாம நான் செஞ்ச எல்லா விஷயங்களும் அந்த மரத்துக்குத் தெரியும். அந்த வயசுல ஒருத்தன் மறைக்கிறதுக்கு நியாயங்கள் இருக்கலாம். இந்த வயசில் என்ன நியாயம் இருக்க முடியும்? மனசுல ஒரு படம் இருக்கு. மனசுல உள்ளதையெல்லாம் கொட்டி அதை எடுக்கணும்கிற ஆசை இருக்கு. ஆனா, இங்கே அது முடியுமா? தெரியலை. ஆனா, முடிக்கணும். பார்ப்போம்!

நெஞ்சில் அப்படியே நிற்கிறார் பாலு மகேந்திரா.

தி இந்து’, பிப். 2014 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக