ஜனநாயக அரசியல் என்பது வெகுஜன அரசியல்தானே?​




ரு பொழுதாயினும் நீ என்னை அடித்தது கிடையாது. இருந்தும் உனது முகம் சிவப்பதும் உரத்த குரலில் நீ கத்துவதும் வேகமாகக் காற்சட்டையைச் சரிசெய்வதும். இவையெல்லாம் ஒருத்தனைத் தூக்கிலிடுவதுபோல. தூக்கிலிட்டால் அவன் செத்துவிடுவான். எல்லாம் முடிந்துவிடும். ஆனால் தூக்கிலிடுவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் அவனை அருகிலிருந்து பார்க்க வைத்து, கழுத்துக்கு முன் கயிறு தொங்கும் அந்தக் கணத்தில், ஆயுள் தண்டனை என அவனுக்குச் சொல்வதைப் போல. வாழ்வு முழுதும் அவனை அந்த வலியில் துடிக்கவைப்பதைப் போல.
- காஃப்கா தந்தைக்கு எழுதிய கடிதத்தில்.

துதான் கொடூரத் தண்டனை என்று எதையாவது முற்றிலுமாக வரையறுத்துவிட முடியுமா? காஃப்காவின் வரிகளைப் படிக்கும்போது, முடியாது என்றே தோன்றுகிறது. மரண தண்டனையைக் கொடூரத்தின் உச்சமாக நாம் நம்புகிறோம். அதனாலேயே, ஆயுள் தண்டனை சாதாரணமானதாகிவிட முடியுமா?

மொத்தம் 23 வருஷ சிறைவாசம். முதலில், நீதிமன்ற விசாரணையின்போது ஏழு வருஷங்கள். அப்புறம் மரண தண்டனை அறிவிக்கப்பட்ட பின் 13 வருஷங்கள். ஒரு நாளைக்கு 86,400 நொடிகள். ஓர் ஆண்டுக்கு 3,15,36,000 நொடிகள். எப்போது வேண்டுமானாலும் தூக்கிலிடப்படலாம் என்ற உணர்வோடு ஒரு நொடியைக் கடப்பது எவ்வளவு கொடூரமானது? எனில், கருணை மனுவைப் பரிசீலிக்கிறேன் என்ற பெயரில், ஆண்டுக் கணக்காக இழுத்தடிப்பது எவ்வளவு கொடூரமான தண்டனை?

ராஜீவ் கொலை வழக்குக் குற்றவாளிகளை மரண தண்டனையிலிருந்து விடுவித்ததன் மூலம் இந்திய நீதி அமைப்பின் மீது விழுந்த கறையை உச்ச நீதிமன்றம் துடைத்திருக்கிறது என்றால், அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்ததன் மூலம் இந்திய அரசியல் அமைப்பின் மீது விழுந்த கறையைத் தமிழக அரசு துடைத்திருக்கிறது. மத்திய அரசு அவர்களை விடுவிக்க வேண்டும் என்று அபூர்வமாக இந்தப் பிரச்சினையில், நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க., தி.மு.க. இரு கட்சிகளுமே குரல் கொடுத்திருப்பதை ஆக்கபூர்வமான நகர்வாகவே பார்க்க வேண்டும். தேர்தல் நெருங்கும் சூழலில், இது வெகுஜன அரசியல் நடவடிக்கை' என்று சொன்னால், ஆம் இது வெகுஜன அரசியல் நடவடிக்கைதான்; அதில் என்ன தவறு?

இந்தியாவின் உச்ச நீதிமன்றம் இன்றைக்கு மரண தண்டனைக்கு எதிராக இவ்வளவு வலுவான ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது என்றால், அதற்கு வெகுஜன எண்ணமும் ஒரு காரணம். இந்திய வரலாற்றிலேயே மரண தண்டனைக்கு எதிராகத் தன்னெழுச்சியாக ஒரு பெரும் இயக்கம் நடந்த மாநிலம் இது. அரசியல் கட்சிகள் தங்கள் முந்தைய நிலைப்பாட்டுக்கு எதிராக, மக்கள் எண்ணத்தை நோக்கி நகர்வதற்கான காரணம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டுமேசமூகத்துக்கு அது நல்லது என்றால், வரவேற்கப்பட வேண்டியதுதானே? கடைசியில் ஜனநாயக அரசியல் என்பது வெகுஜன அரசியல்தானே?

‘தி இந்து’, பிப். 2014

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக