தமிழினத்தின் ஏழு மண்டேலாக்கள்  
ரு நாளைக்கு 10 பத்திரிகைகள் படிக்கலாம்; மணிக்கொரு முறை இணையத்தில் முக்கியச் செய்தித்தளங்களைச் சுற்றி வரலாம்; 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சிகளை ஓட விட்டு வேலைக்கு நடுவே நிமிஷத்துக்கு நிமிஷம் எட்டிப் பார்க்கலாம்ஆனால் தமிழ்நாட்டின் அரிய செய்திகளை அளிப்பதில் சுவரொட்டிகளுக்கு ஈடுஇணை இல்லை. தமிழ்நாட்டுக்கு ஏழு மண்டேலாக்கள் கிடைத்த செய்தியும் சுவரொட்டிகள் மூலம்தான் கிடைத்தது. சென்னை, ராஜாஅண்ணாமலைபுரத்தின் நீண்ட சுவர்களில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகள் மூலம்.

யார் இந்த ஏழு மண்டேலாக்கள்?
வேறு யாராக இருக்க முடியும்? ராஜீவ் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு, மரண தண்டனையிலிருந்து தப்பி, 23 வருஷ சிறைவாசத்திலிருந்து விடுபட ஏங்கிக்கொண்டிருக்கும் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் ஃபயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய எழுவர்தான் அந்த ஏழு மண்டேலாக்கள். இவர்கள் எப்படி, எப்போது மண்டேலா ஆனார்கள் என்ற கேள்வி இங்கு பொருத்தமற்றது. ஏனென்றால், மண்டேலா மறைந்தபோது அவருக்கு அஞ்சலி செலுத்துகிறோம் என்ற பெயரில், ‘இன்விக்டஸ்படத்தில், மண்டேலாவாக நடித்த மார்கன் ஃப்ரீமேன் படத்தைப் போட்டு அஞ்சலி செலுத்திய வரலாறு நம்முடையது. எனினும், மனித மேரி மாதாக்கள், வாழும் வள்ளுவர்கள், சமகால சே குவேராக்கள் வரிசையில் ஏழு மண்டேலாக்களையும் சேர்க்க முடியுமா?


தேசியத் தொலைக்காட்சிகளில், அர்னப் கோஸ்வாமிகளும் ராஜ்தீப் சர்தேசாய்களும் தமிழர்களை இன வெறியர்களாகச் சித்தரித்துக் கத்தும்போது, வேகமும் கோபமும் வரத்தான் செய்கிறது. ஆனால், நம் ஆட்கள் சிலர் அடிக்கும் கூத்துகளை வெளியிலிருந்து பார்க்கும் ஒருவருக்கு வேறு எப்படித் தோன்றும்?

மனிதாபிமானமா, இன அரசியலா?

பஞ்சாபில் 1995-ல் அன்றைய முதல்வர் பியாந்த் சிங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், மாற்று மனித வெடிகுண்டாக வந்தவர் பல்வந்த் சிங் ரோஜனா. பாப்பர் கால்ஸா இயக்கத்தைச் சேர்ந்தவர். இந்த வழக்கில் நீதிமன்றத்தில் தானாக முன்வந்து வாக்குமூலம் அளித்தவர். 2007-ல் சி.பி.ஐ. நீதிமன்றம் ரோஜனாவுக்கு மரண தண்டனை விதித்தபோது மேல்முறையீட்டு வாய்ப்பை மறுத்தவர். ரோஜனாவுக்கு ஆதரவான சீக்கியர்களின் தொடர் போராட்டங்கள், பஞ்சாபின் செல்வாக்குமிக்க அமைப்பான சிரோமணி குருத்வாரா பிரபந்தக் குழு தாக்கல்செய்த கருணை மனு, முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் நேரடி முறையீடு ஆகியவற்றின் தொடர்ச்சியாக ரோஜனாவின் மரண தண்டனையை நிறுத்திவைத்திருக்கிறது அரசு.

1993-ல் டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மணீந்தர்ஜித் சிங் பிட்டா கொலை வழக்குக் குற்றவாளியான காலீஸ்தான் விடுதலைப் படையைச் சேர்ந்த புல்லரின் கதை ஒப்பீட்டளவில் இன்னும் நமக்கு நெருக்கமானது. 2001-ல் மரண தண்டனை விதிக்கப்பட்ட புல்லரின் கருணை மனுவை 10 ஆண்டுகளுக்குப் பின் நிராகரித்தார் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல். சீக்கியர்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். இப்போது புல்லருக்கு ஏற்பட்டிருக்கும் மனநல பாதிப்பு மற்றும் கருணை மனு, பரிசீலனைக் கால தாமதம் ஆகிய காரணங்களுக்காக புல்லரின் மரண தண்டனையை நிறுத்திவைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

மரண தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டியது சரி. ஆனால், மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்படுவதாலேயே ரோஜனாவும் புல்லரும் குற்ற மற்றவர்கள் ஆகிவிடுவார்களா? தனி சீக்கிய மாநிலம் கோரும் குழுக்கள், “சீக்கிய தேசத்தை நோக்கிய பயணத்தின் முதல் வெற்றிஎன்று ரோஜனா, புல்லர் விவகாரங்களைக் கொண்டாடுகின்றன. இதற்கும் எழுவர் விடுதலை, தமீழீழ விடுதலை நோக்கிய பயணத்தின் முதல் வெற்றிஎன்ற கொண்டாட்டத்துக்கும் என்ன வேறுபாடு?

அப்பாவிகளா, போராளிகளா?

இந்தியாவின் மோசமான அரசியல் படுகொலைகளில் ஒன்று ராஜீவ் படுகொலை. நீதிமன்றம் இதில் சம்பந்தப்பட்டவர்களை விடுவிக்கலாம் என்று பரிந்துரைத்திருப்பதும் தமிழக அரசு விடுவிக்க முடிவெடுத்திருப்பதும் மனிதாபிமான அடிப்படையில்தானே தவிர, அவர்கள் நடந்த குற்றத்தோடு துளியும் தொடர்பற்றவர்கள் என்கிற அடிப்படையில் அல்ல.

இத்தனை நாட்களும் அப்பாவிகள் என்று கூறியே அவர்கள் விடுதலையைக் கோரினோம். இப்போது தியாகிகள் என்கிறோம். எனில், அவர்களை யாரென்று அடையாளப்படுத்துகிறோம்? பேரறிவாளன் தூக்குக் கயிற்றின் முன் நின்றபோது, கூக்குரலிட்டோம். அப்சல் குருவின் குரல்வளை நெரிபடும்போதோ, வாய் மூடி. முகம் திருப்பி நின்றோம்.
என் தாய் - தந்தை கையால் சாப்பிடக் காத்திருக்கிறேன்என்கிற அரித்ரா குரல் நமக்கு வலிக்கிறது. என் தந்தையை இழந்தேன். இனி, அவர் திரும்பிவரப்போவதில்லை. ஒரு முன்னாள் பிரதமரான என் தந்தைக்கே நீதி கிடைக்கவில்லை என்றால், இந்நாட்டின் சாமானியனுக்கு எப்படி நீதி கிடைக்கும்?” என்கிற ராகுல் குரலின் வலி கேலிக்குரியதாகிறது என்றால், நாம் யார்?

நேற்றுவரை யாரும் மரண தண்டனையின் பெயரால் கொல்லப்பட்டுவிடக் கூடாது என்று இங்கு கூட்டங்கள் நடந்தன. அதுவே அஹிம்சை என்றோம். இன்றைக்கு, ராஜீவ் கொல்லப்பட்டிருக்கக் கூடாது என்று அவருடைய கட்சியினர் கூட்டங்கள் நடத்தும்போது, அவர்களை நோக்கிக் கல் வீசப்படுகிறது; ராஜீவ் சிலைகளின் முகம் சிதைக்கப்பட்டு, தலை தகர்க்கப்படுகிறது. எனில், நாம் சொல்ல விழைவதுதான் என்ன?

‘தி இந்து’, மார்ச் 2014.

14 கருத்துகள்:

 1. வெறுமனே நாம், நாங்கள், தமிழர்கள் போன்ற பதங்களை யாரை நோக்கி வீசுகீறிர்கள். தமிழ்நாட்டில், ஏழு பேரின் விடுதலையை ஆதரிக்கும் மக்கள் அனைவரும் ஒன்றே என்றும் எவ்வித கருத்து வேறுபாடும் அற்றவர்கள் என்றும் கருதுகீறிர்களா? இதுபோன்று யாரோ ஒருவரையோ அல்லது பெயரைக் குறிப்பிடாமலோ நீங்கள் எழுதுவதிற்க்கும் அர்னாப், ராஜ்தீப் போன்றவர்கள் தமிழர்களை இழிவுபடுத்துவதற்க்கும் என்ன வேறுபாடு?

  பதிலளிநீக்கு
 2. சரியான நேரத்தில் வந்திருக்கும் சரியான மாற்றுக் கருத்து. ஒரு நாட்டின் முன்னால் பிரதமரை படுகொலை செய்த குற்றவாளிகளை ஆவேசத்துடன் ஆதரிக்கும் ஒரு இனத்தை அந்த நாட்டின் பிற மாநில மக்கள் எத்தனை வெறுப்புடன் அணுகுவார்கள் என்பதைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை... மாற்றாக அவர்கள் மீதே வெறுப்பைக் கக்கி அவர்களும் தங்கள் இனத்தின் குற்றவாளிகளை ஆதரிக்க வேண்டுமென ஆவேசமாக எதிர்பார்க்கிறார்கள் இவர்கள்... அப்படி குற்றவாளிகளாக சொல்லப்படுபவர்களின் குற்றங்கள் அடிப்படை ஆதாரமற்றது என இந்த தமிழின பிரதிநிதிகள் நம்பும்பட்சத்தில் அதை பிற மாநில மக்களிடமும் ஊடகங்களிடமும் கொண்டு செல்ல வேண்டியதே அவர்களின் கடமை... அதுவே யதார்த்த அணுகுமுறை. தமிழர்கள் மீது வெறுப்பை கக்குகிறார்கள்... தமிழன் ஏமாறுகிறான்.... தமிழன் அழிக்கப்படுகிறான்... போன்ற உணர்ச்சிவசப்பட்ட கூக்குரல்களால் நாம்தான் நிதர்சனத்தை மறந்துவிட்டு பிறர் மீது இனவெறுப்பைக் கக்குகிறோம் என்பதை மறந்துவிடுகிறார்கள். இது மனிதாபிமான அடிப்படையில் விடுதலை பெறவிருக்கும் அந்த எழுவருக்கும் எதிரான மனநிலையையே பிற மாநில மக்களிடம் உருவாக்கும். அந்த எழுவரையும் தியாகிகளாக்குவதன் மூலம் அவர்கள் விடுதலைக்கு இவர்களே உலை வைக்கிறார்கள்.... ஒரு தமிழகதலைவர் வடமாநிலம் ஒன்றிற்கு சென்று அம்மாநில இயக்கத்தால் படுகொலை செய்யப்பட்டு, அம்மாநில மக்கள் அந்த படுகொலையில் குற்றவாளியாக அறியப்பட்டவர்ளை ஆவேசமாக ஆதரித்து கோஷங்கள் எழுப்பினால்... நமது எதிர்வினையும் மனநிலையும் என்னவாக மாறும் என்பதை ஒரு கணம் யோசித்தாலே போதும்.

  பதிலளிநீக்கு
 3. @The time of Rajiv Gandhi's Demise :

  GK Mooppanar went to a petty shop, for buying Pan Parag;

  Vaazhappaadi Ramamoorthy dropped from Rajiv's car and ran away to meet the Famous Congress Leaders Actresses Deepa or Maya, in the middle of the journey towards Sriperumpudur;

  P Chidambaram went to his PanBroker office, for checking that day’s collection;

  Jayanthi Natarajan went to a jewel shop, for buying an ear ring.

  Then, Rajiv Gandhi Alone Died.

  Bhaarath Maathaki Jay!!!

  #whokilledrajiv

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Oh... so, you were there at the deadly moment. Not only that, you were watching what all these people were doing. Great.

   நீக்கு
  2. Then, where these people went, without protecting their lovable,honorable...etc leader?.

   நீக்கு
 4. ஆயிரக்கணக்கான கொலைகள், பெண்களின் கற்பை சூறையாடிய ஒரு கொடூரக் கொலையாளியை, மற்றும் போர்க்குற்றவாளியான ராஜீவ் காந்தியை காந்தி தேசம் என்று கூறுவர்கள் ஆவேசத்துடன் ஆதரிப்பதே வெட்கக் கேடான விடயமாகும்.

  பதிலளிநீக்கு
 5. வழமைபோலவே சமஸ் கிண்டலுக்காக தமிழர் விரோதக் கற்பனையில் மண்டலாக்கள் என்று எழுதியிருக்கிறார் ஆனால் இதனை ஆழமாகச் சிந்தித்தால் அவரே இந்த 7 பேரையும் ஒருவகையில் மண்டலாக்களாக உருவாக்கிவிட்டார் என்ற உண்மையை உணரமுடியும். அடக்குமுறைக்கு எதிராகப் போராடிய ஒரு இனத்தினை அழித்தவர் ராஜீவ் காந்தி. அதற்கு எதிராக வெகுண்டெழுந்து போராடுபவர்கள் அனைவரும் மண்டேலாக்கள் தானே. ராஜீவ் காந்தி மேற்கொண்ட அக்கிரமங்கள் இவர்களை மண்டேலாக்களாக மாற்றுகின்றன என்ற உண்மையும் இதில் உள்ளன.

  கிட்லரும் அன்று யேர்மனியர்களுக்குப் பெரிய தலைவராக இருந்தவரே. பின்னர் அவரின் இனப்படுகொலைகளை அந்நாட்டு மக்களும் புரிந்துகொண்டு வெட்கித் தலைகுனிந்து நின்றனர், இதுவே மானிடராய் பிறந்தவர்களுக்குரிய அழகு. எப்போது இந்திய தேசமும் ராஜீவ் காந்தியை நினைத்து வெட்கித் தலைகுனியப் போகிறது?

  கிட்லரின் கொடுமைகளுக்கு எதிராகப் போராடி அவரை அழித்தவர்களும் மண்டேலாக்கள் என்று கூறலாம் தானே? இதில் என்ன ராஜீவ் காந்திக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கலாமா?

  மண்டேலா ஒரு அஹிம்சை வாதி என்று இந்தியாவில் உள்ள பலர் நினைத்துகொண்டிருக்கிறார்கள். அவரை பயங்கரவாதிகளின் பட்டியலில் பல ஆண்டுகளாக அமெரிக்கா வைத்திருந்தது. மண்டேலா அஹிம்சையை மட்டும் ஆதரிக்கவில்லை ஆயுதப் போராட்டத்தையும் தீவிரமாக ஆதரித்தவர்.

  பதிலளிநீக்கு
 6. ஆயிரக்கணக்கான கொலைகளையும், பெண்களின் கற்பை சூறையாடிய ஒரு கொடூரக் கொலையாளி, மற்றும் போர்க்குற்றவாளியான ராஜீவ் காந்தியை கண்மூடித்தனமாகவும் ஆவேசத்துடனும் பெரிய தலைவர் என்றும் கடவுள் என்றும் கூறும் போது இந்த 7 பேரையும் தமிழினத்தின் ஏழு மண்டேலாக்கள் என்று மற்றவர்கள் கூறமாட்டார்களா?

  பதிலளிநீக்கு
 7. தலைவனுக்கான ஆடம்பரம் , காவலர் குழுமம் , வசதிகள் ,துதிபாடிகள் ,அதற்கு பின்னுள்ள அரசியல் இவற்றோடு ஒரு சாமான்யனின் நிலையை ஒப்பிடுவது ?

  பதிலளிநீக்கு
 8. வெவ்வேறு புள்ளிகளையும் ஒன்றிணைத்துக் காணும் நீளும் கதையாடல்களை விட்டு விலகி தனிதனி புள்ளிகளின் கூர்மையையும் விவரனங்களையும் தமிழ் சிந்தை வீதிகளில் காண்பது எந்நாளோ? பாராட்டுகள் சமஸ் .

  பதிலளிநீக்கு