இந்தியாவில் ஏன் கலவரங்கள் தொடர்கின்றன?



னசாட்சியைத் தட்டி எழுப்பும் கேள்விகள் யாரிடம் இருந்து வேண்டு​மானாலும் வரலாம். ''ஒருமாதமாக அஸ்ஸாம் பற்றி எரிகிறது. கிராமங்கள் எல்லாம் சுடுகாடு ஆக்கப்பட்டு, நான்கு லட்சம் மக்கள் முகாம்களில் அடைபட்டுக் கிடக்கின்றனர். ஏன் உங்கள் யாருக்கும் உறைக்கவில்லை'' என்று கேட்கிறார் வீரேந்தர். அஸ்ஸாம் கலவரத்தின் தொடர்ச்சியாக,வடகிழக்கு மாநிலத்தவர் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று பரவிய வதந்தியால் அலறி அடித்துக்கொண்டு சொந்த ஊருக்கு ரயில் பிடித்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களில் ஒருவர் வீரேந்தர். அஸ்ஸாமின் ஐக்கிய ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதியுமான பக்ருதீன் அஜ்மல் சொல்வதுபோல, ''அஸ்ஸாமில் என்ன நடக்கிறது என்றும் இதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்றும் கவலைப்பட இந்தியா விரும்பவில்லை'' என்பதுதான் உண்மை.

அஸ்ஸாமில் நடக்கும் இனக் கலவரங்கள்பற்றி பெரும்பான்மை இந்தியர்களின் கருத்து என்ன?
''அஸ்ஸாமில் கொல்லப்படுவது வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாகக் குடியேறும்முஸ்லிம்கள். இந்திய அரசும் அஸ்ஸாம் மாநில அரசும் ஓட்டு அரசியலுக்காக இந்தச் சட்டவிரோதக் குடியேற்றத்தை வேடிக்கை பார்த்தன. இப்போது மாநிலத்தில் கிட் டத்தட்ட 20 சதவிகிதத்தினர் என்ற அளவுக்கு முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்து, அரசியல்ரீதியாகவும் பலம் பெற்றுவிட்டனர். உள்ளூர் மக்களுக்கு அவர்கள் போட்டியாகிவிட்டதாலேயே, இந்த மோதல்கள் நடக்கின்றன.''

சரி, இங்கே ஒரு கேள்வியைக் கேட்டுக்கொள்வோம்... வங்கதேச முஸ்லிம்களின் சட்டவிரோதக் குடியேற்றம் தடுக்கப்பட வேண்டியது என்பது சரி. ஆனால், சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள் என்பதாலேயே அவர்களை நாம் கொல்லலாமா? குடியேறி​களின் மீதான வன்முறைதான் இந்தப் பிரச்னைக்கான தீர்வா?

சுதந்திர இந்தியாவில் நடந்த மிகப் பெரிய இனக்கலவரங்களில் ஒன்று இப்போது அஸ்ஸாமில் நடந்துகொண்டிருக்கும் கலவரம். இந்தக் கலவரங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை முந்தைய கலவரங்களுடன் ஒப்பிடுகையில் குறைவாக இருக்கலாம். ஆனால், பாதிப்புகள் இந்தக் கலவரத்திலேயே அதிகம். முந்தைய கலவரங்களைப் போல அல்ல; இந்தக் கலவரத்தில் திட்டமிட்டு மிக நுட்பமாகச் செயல்பட ஆரம்பித்திருக்கிறார்கள் போடோக்கள். “வீடுகளில் உள்ள பொருட்களைக் கொள்ளை​யடித்துவிட்டு, எரித்துவிட்டுச் செல்லும்உத்தியையே எல்லா இடங்களிலும் போடோக்கள் கையாள்கிறார்கள்; இதற்கான ஒரே அர்த்தம் இனி இங்கே உங்களுக்கு இடம் இல்லை என்பதுதான்” என்கின்றனர் பாதிக்கப்​பட்ட முஸ்லிம்கள்.  “கலவரத்​தின்போது வெளியேறிய முஸ்லிம்கள் மீண்டும் குடியேற அனுமதிக்க மாட்டோம்” என்ற போடோலாந்து பிரதேச ஆணையத்தின் துணைத் தலைவர் காம்பா போர்கோயுரியின் கொக்கரிப்பு இதை உறுதிசெய்கிறது.

அஸ்ஸாமில் வங்கதேச முஸ்லிம்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையேயான பகை இப்போது உருவானது அல்ல. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை காலகட்டத்தில் இருந்தேஅஸ்ஸாமில் முஸ்லிம்கள் குடியேற்றம் நடந்துகொண்டு இருக்கிறது. வங்கதேசசுதந்திரத்துக்குப் பின் அது அதிகமானது. 1980-களில் அஸ்ஸாம் மாணவர் சங்கம் அரசியல்ரீதியாக வலுவான அமைப்பாக உருவெடுத்ததற்கு முஸ்லிம்கள் மீதான உள்ளூர் மக்களின்எதிர்ப்பு உணர்வும் முக்கியமான காரணம். 1983 ஜூலை 18 அன்று நாகோவான் மாவட்டத்தில் நடந்த நெல்லிப் இனப் படுகொலையில் ஆறு மணி நேரத்துக்குள் 2,191 பேர் கொல்லப்பட்டதில்அஸ்ஸாம் மாணவர் சங்கத்துக்கு முக்கியப் பங்கு இருந்தது. பின்னாளில், ராஜீவ் காந்தி அரசு, கொலையாளிகள் தரப்போடு சமரசம் செய்துகொண்டது; நெல்லிப் படுகொலைச் சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர்கூட தண்டிக்கப்படவில்லை. குற்றவாளிகள் ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றினர். இப்போது இருபது ஆண்டுகளாகும் நிலையிலும், எந்த விதமான மாற்றமும் முன்னேற்றமும் இல்லை என்பதற்கு அரசைத் தவிர வேறு யாரைக் குற்றம்சாட்ட முடியும்?

அஸ்ஸாம் கலவரங்கள் அஸ்ஸாமைத் தாண்டியும் இந்தியாவுக்கு உணர்த்தும் முக்கியமான இருசெய்திகள் உண்டு. ஒன்று, பிழைப்புக்காக நாட்டுக்குள்ளேயும் நாட்டுக்கு வெளியில் இருந்தும்நடக்கும் குடியேற்றங்கள் இனரீதியான வன்மத்தை நம் மக்களிடையே மௌனமாக வளர்த்துக்கொண்டிருப்பது. மற்றொன்று, இனக்கலவரங்களுக்கு இடையேதான் சுதந்திரம் கிடைத்தது என்பதாலேயோ என்னவோ, இனக்கலவரங்களை சர்வ சுதந்திரமாக நடத்த வாய்ப்புள்ளநாடாக இந்தியா தொடர்வது!

1969 அகமதாபாத் கலவரம், 1984 டெல்லி கலவரம், 1987 மலியானா கலவரம், 1989 பகல்பூர்கலவரம், 1990 மும்பை கலவரம், 1991 பெங்களூரு கலவரம், 2002 குஜராத் கலவரம், 2008கந்தமால் கலவரம்...  படுகொலைகள் தொடர்கின்றன. ஆனால், குற்றவாளிகள்தண்டிக்கப்படுவதே இல்லை. விசித்திரமாக, அவர்கள் பிரபலம் அடைந்து... மேலும் அதிகாரம்மிக்கவர்களாகி விடுகிறார்கள். இந்தியா ஒரு பாதுகாப்பான நாடு என்றும் இந்தியர்கள்நல்லிணக்கவாதிகள் என்றும் சொல்லிக்கொண்டே - இனப்படுகொலைகளின் நடுவே -நம்முடைய சுதந்திரத்தைக் கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம் நாம்!

ஆக. 2012, ஜூனியர் விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக