வாழ்க வாய்தாவாலாக்கள்!


முதன்முதலில் இந்திய நீதித் துறையைப் பார்த்து மிரண்டுபோனது, ஷோவா பஷார் பரம்பரையின் வழக்கு தொடர்பாக செய்தி வெளியானபோது. 175 வருஷ பழமையான வழக்கு இது; இன்னும் நிலுவையில் இருக்கிறது என்று அந்தச் செய்தி சொன்னது. கொஞ்ச நாட்களில், “இந்தியாவில்தான் உலகிலேயே அதிகமான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. நாடு முழுவதிலும் 3.56 கோடி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன; இவை தவிர ஒவ்வோர் ஆண்டும் புதிதாக 1.5 கோடி வழக்குகள் பதிவாகின்றன” என்று மேலும் அசரடித்தார் அன்றைய சட்டத் துறை அமைச்சர் ஹெச்.ஆர். பரத்வாஜ். ஒடிசா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த பி.எஸ். சௌகான் இன்னும் ஒருபடி மேலே போய், “இந்திய நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை விசாரித்து முடிக்க இன்னும் 300 ஆண்டுகள் தேவைப்படும்” என்று பிரமிக்கவைத்தார்.


அதற்கு அப்புறம் இந்திய நீதித் துறையின் ‘வேகம்’ தொடர்பான செய்திகள் / தகவல்கள் பழகிவிட்டன. சில நாட்களுக்கு முன்கூட ஒரு செய்தி வெளியானது. “நம்முடைய உயர் நீதிமன்றங்களில் மட்டும் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் தேங்கியிருக்கின்றன. இவற்றில், 25% வழக்குகள் இன்னும் ஆரம்ப கட்ட நிலையிலேயே இருக்கின்றன. ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் 1957-ல் தொடரப்பட்ட வழக்கு ஒன்று இன்னும் நிலுவையில் இருக்கிறது” என்றெல்லாம் பட்டியலிட்டது அந்தச் செய்தி. ம்ஹூம். ஒரு சலனமும் ஏற்படவில்லை. பழகிவிட்டது.

ஒரு செய்திக்கும் சம்பவத்துக்கும் உள்ள வேறுபாடு இதுதான். கல்லூரியில் இதழியல் வகுப்பு எடுக்கும்போது சொல்லிக்கொடுப்பார்களே அப்படி, மனிதனை நாய் கடித்தால் அது சம்பவம்; நாயை மனிதன் கடித்தால் அது செய்தி. இந்தியாவில் வாய்தா வழக்குகள் விசேஷம் இல்லை. ஒரு வழக்கு உடனே விசாரணைக்கு வந்தால், அதில் தீர்ப்பு வந்தால் அது நிச்சயம் விசேஷம்.

நடிகர் சல்மான் கானின் ‘டொயோட்டோ லேண்ட் குரூயிஸர்’ கார், நடைபாதையில் படுத்துத் தூங்கிய ஏழைகள் மீது ஏறி ஒருவரைக் கொன்று நால்வரைக் காயப்படுத்தியது, 2002-ல். வெறுமனே விபத்து என்று இதைச் சொல்லிவிட முடியாது. காரை ஓட்டியபோது சல்மான் கான் குடித்திருந்தார். சம்பவ இடத்திலிருந்து தப்பினார். வழக்கை உடைக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ எல்லாவற்றையும் செய்தார். எத்தனை சாட்சியங்கள் பிறழ்ந்தன? எத்தனை ஆவணங்கள் காணாமல்போயின? வழக்கின் முக்கிய சாட்சியம் ரவீந்திர பாட்டிலின் வாழ்க்கையே நாசமாக்கப்பட்டதே? 13 ஆண்டுகள் கழித்து, சல்மான் கானின் குற்றத்தை உறுதிசெய்து ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கிறது நீதிமன்றம். அன்றைய தினமே மேல் முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்று, கையோடு ஜாமீனையும் அளிக்கிறது. அடுத்தடுத்த நாட்களில் உயர் நீதிமன்றமும் ஜாமீன் அளித்து, தீர்ப்பை நிறுத்திவைக்கிறது. என்ன வேகம்! சல்மான் கானின் ‘டொயோட்டோ லேண்ட் குரூயிஸர்’ காரைவிட வேகம்!

சல்மான் கான் தீர்ப்பு செய்தி வெளியான நேரத்தில் ஃபேஸ்புக்கில் ஒருவர் எழுதியிருந்தார்: “ஒரு வழக்கை எவ்வளவு மெதுவாக நடத்த முடியும் என்பதை தண்டனைக்கு முன்னும், எவ்வளவு விரைவாக நடத்த முடியும் என்பதை தண்டனைக்குப் பிறகும் அறிந்துகொள்ள நமக்கு இன்னொரு வாய்ப்பு. ” அப்படித்தானே இருக்கிறது?

இந்திய நீதித் துறையின் மிகப் பெரிய சாபக்கேடு அதன் தாமதம் என்றால், இந்திய நீதித் துறை மிகக் கடுமை காட்ட வேண்டியவர்கள் அல்லவா வாய்தாவாலாக்கள்? நம்முடைய நீதித் துறைக்குச் சவால் விடும் வகையில், வாய்தாக்களால் வழக்கை இழுத்தடிப்பவர்களில் ஆகப் பெரும்பான்மையினர் செல்வாக்குள்ளவர்கள். ஆனால், அப்படி இழுத்தடிப்பவர்களின் வழக்குகளே தண்டனைத் தீர்ப்புக்குப் பின் சீக்கிரம் மேல்முறையீட்டுக்கு எடுக்கப்படுகின்றன; தீர்க்கப்படுகின்றன. இங்கே நீதித் துறை சமூகத்துக்குக் கொடுக்கும் சமிக்ஞை என்ன?

நேற்று ஒரு நண்பர் கேட்டார்: ராஜீவ் காந்தி படுகொலை 1991-ல் நடந்தது. 350-க்கும் மேற்பட்டோர் உயிரைப் பறித்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு 1993-ல் நடந்தது. முன்னதைப் பின்னின்று நடத்தியது புலிகள் என்றால், பின்னதைப் பின்னின்று நடத்தியது பாகிஸ்தான் உளவுத் துறை. முன்னது ஒரு தேசிய தலைவரின் படுகொலை என்றால், பின்னது ஒரு தேசத்தின் மீதான தாக்குதல். பேரறிவாளன் மீதான பிரதான குற்றச்சாட்டு அவர் இரண்டு பேட்டரிகள் வாங்கிக்கொடுத்தது. சஞ்சய் தத் மீதான பிரதான குற்றச்சாட்டு தாவூத் இப்ராஹிம் ஆட்கள் கொடுத்த துப்பாக்கிகள், எறிகுண்டுகளை வைத்திருந்தது. இரண்டுமே  ‘தடா’ வழக்குகள்தான். இன்னும் சொல்லப்போனால், பேரறிவாளன் வழக்கு பல வகைகளில் பலவீனமான வழக்கு. ஆனால், பேட்டரி வாங்கிக் கொடுத்ததாகச் சொல்லப்படுபவரை, தூக்குக் கயிறு வரை அழைத்துச் சென்றுவிட்டு 24 ஆண்டுகளாகச் சிறைக்குள் வைத்திருக்கிறோம். துப்பாக்கிகளையும் எறிகுண்டுகளையும் வைத்திருந்தவர் 20 ஆண்டு இழுத்தடிப்புக்குப் பின் 5 ஆண்டு சிறைத் தண்டனையில் இருக்கிறார். இடையிலேயே 50 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். என்ன மாதிரி அணுகுமுறை இது?

சில கேள்விகளுக்கெல்லாம் நம் நாட்டில் பதில்கள் கிடைப்பதே இல்லை!



மே 2015, ‘தி இந்து’

6 கருத்துகள்:

  1. பெயரில்லா9 மே, 2015 அன்று 11:10 PM

    http://countercurrentnews.com/2014/06/billionaire-only-gets-four-months-for-12-year-old/

    பதிலளிநீக்கு
  2. நெற்றியடி சம்பந்தபட்ட துறைக்கு............... மத்திய அரசின் சட்டத்துறை, நீதித்துறைக்கு சவுக்கடி.......... பணம் பாதாளம் வரை பாயும் என்பது உண்மையா.... முடிவு செய்க.....

    பதிலளிநீக்கு
  3. ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கை விட்டு விட்டீர்கள். அவர்களும் 18 வருஷங்களாக வழக்கை இழுத்தடித்தார்கள். ஆனால் தண்டணை கிடைத்ததும் உச்ச நீதி மன்றம் எவ்வளவு சீக்கிரம் ஜாமீன் கொடுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஜாமீனை வழங்கி விட்டது. இந்தியாவில் நீதிமன்றங்களில் கடுமையாக தண்டிக்கப் படுபவர்கள் எல்லோருமே சாமானியர்களும் பணமில்லாத ஏழைகளும் மட்டுமே! நீதி எல்லோருக்கும் சமமானது என்பதெல்லாம் வெறும் பசப்பல் ஷரத்துக்கள்!
    - சோ.சுப்புராஜ்

    பதிலளிநீக்கு
  4. அருமை! நீங்கள் இதில் செயலலிதா வழக்குப் பற்றி எழுதாமல் விட்டாலும் இது அதைத்தான் நினைவூட்டும். இதற்குப் பெயர்தான் சொல்லாமல் சொல்வதோ! பிய்த்து விட்டீர்கள்!

    பதிலளிநீக்கு
  5. தாமதிக்கப்பட்ட நீதி அநீதி என்பதை நீதித்துறை மட்டும் இந்தியாவில் உணர்வதே இல்லை! உங்கள் கட்டுரை அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தினால் நல்லது!

    பதிலளிநீக்கு
  6. What's the coolest thing you've done with Python?
    If you want to more details to contact us: #LoginForExcellence, #VLSITraininginChennai,#VLSITrainingInstituteinChennai,#VLSITraininginVelachery,#TraininginVelachery,VLSI Training in Chennai

    பதிலளிநீக்கு