தமிழ்நாட்டில் இனியாவது அரசியல் நடக்குமா?


ஜெயலலிதா விடுதலை தீர்ப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? - இப்படிக் கேட்பவர்களிடம் எல்லாம் இந்தக் கேள்வியைத்தான் பதிலுக்குக் கேட்கிறேன்: இன்றைக்குத் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தால் யார் ஜெயிப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?

எதிர்க்கட்சிகளின் அந்தராத்மாவிடம் கேட்டால், அதுகூட சொல்லும், ‘இன்றைய சூழலில் மீண்டும் அதிமுகதான் ஆட்சியைப் பிடிக்கும்’ என்று. இப்படிப்பட்ட சூழலில், இந்தத் தீர்ப்பை முன்வைத்து விவாதிப்பதில் அரசியல்ரீதியாக அர்த்தம் ஏதேனும் உண்டா?

ஜெயலலிதாவைப் பற்றியும் தீர்ப்பைப் பற்றியும் மீண்டும் மீண்டும் பேசுவதைவிடவும் தமிழக அரசியலில் முக்கியமாக நாம் பேச வேண்டிய பிரச்சினை ஒன்று இருக்கிறது. அது, தமிழக எதிர்க் கட்சிகளின் உறைநிலை. ஜெயலலிதா முதல்வர் பதவியிலிருந்து இறங்கிய பின் தமிழக அரசும் அதிமுகவும் நிர்வாகரீதியாக முற்றிலுமாக முடங்கிப்போனதை நாம் போதிய அளவுக்குப் பேசியிருக்கிறோம். சரி, நம் எதிர்க் கட்சிகளின் செயல்பாடு எப்படி இருக்கிறது?

மத்தியில், நரேந்திர மோடி அரசு பொறுப்பேற்று ஒரு வருஷம் ஆகிறது. ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றன மோடி அரசாங்கத்திடம். ஆனால், அரசாங்கம் செயல்படுகிறது. நாடாளுமன்றம் செயல்படு கிறது. ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சிகளும் மாறி மாறி மோதிக்கொண்டாலும், இடையில் விவாதம் நடக்கிறது. கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆக்கபூர்வமாக இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் விவாதங்கள் நடந்திருக்கின்றன. மக்களவை 123% பணியாற்றியிருக்கிறது; மாநிலங்களவை 102% பணியாற்றியிருக்கிறது. இரு அவைகளிலும் தலா 135 கேள்விகளுக்கு வாய்மொழியாகவே பதில்கள் அளிக்கப் பட்டிருக்கின்றன. இதுவரையிலான சராசரி அளவைக் காட்டிலும் இது இரு மடங்கு. மக்களவையின் 56% நேரம் நிதி விவகாரங்கள், விவசாயிகள் தற்கொலை போன்ற விவகாரங்களில் கழிந்திருக்கிறது. மாநிலங்களவை 58% நேரத்தை இவற்றுக்காகச் செலவிட்டிருக்கிறது. இதற்கு முன் இப்படி ஆக்கபூர்வமாக நாடாளுமன்றம் செயல்பட்டது ராஜீவ் காந்தியின் 1984 - 1989 அரசு ஆட்சியில் இருந்த காலகட்டத்தில். இப்போது அதற்கு இணையான பணித்திறனுக்கு நாடாளுமன்றம் திரும்பிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் டெல்லி வாலாக்கள்.

நாடாளுமன்றத்தின் ஆக்கபூர்வமான செயல்பாட்டுக்கு ஆளும் கட்சி மட்டும் காரணம் அல்ல; எதிர்க்கட்சிகளும் முக்கியக் காரணம். தன்னுடைய வரலாற்றிலேயே மிகப் பெரிய சரிவைச் சந்தித்திருக்கும் நிலையில்தான் முஷ்டியை முறுக்கி நிற்கிறது காங்கிரஸ். சொற்ப இடங்களை வைத்துக்கொண்டு இடதுசாரிகள் மல்லுக்கு நிற்கிறார்கள். நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி, ஆளுங்கட்சியைச் சாய்க்க முடியாவிட்டாலும் தடுமாறவைக்க முடிகிறது எதிர்க் கட்சிகளால், அவர்தம் எதிர் அரசியலால்.

தமிழகத்தின் நிலை என்ன?

முதல்வரும் அரசாங்கமும் ஆளுங்கட்சியும் மட்டும் அல்ல; அத்தனை எதிர்க்கட்சிகளும், எதிர்க்கட்சித் தலைவர்களும் உறைநிலையிலேயே இருக்கிறார்கள். ஆளும்கட்சியினருக்கு சட்டப்பேரவையை நடத்து வதிலேயே விருப்பம் இல்லை என்றால், நடக்கும் சொற்பக் கூட்டங்களிலும் வெளிநடப்பே கதியாக இருந்தவர்கள் எதிர்க்கட்சியினர். எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் பேரவைக்கு எத்தனை நாட்கள் வந்திருக்கிறார், எந்தெந்தப் பிரச்சினைகளை அவர் முன்னெடுத்துப் பேசியிருக்கிறார்? சரி, பேரவையில்தான் பேச வாய்ப்பில்லை; பேரவைக்கு வெளியே எத்தனை போராட்டங்களை அவரும் அவருடைய தேமுதிகவும் முன்னெடுத்திருக்கிறார்கள்? தமிழக சட்டப்பேரவை வரலாற்றிலேயே இதுபோன்ற ஒரு செயல்படா எதிர்க்கட்சித் தலைவர் இதுவரை கிடையாது.

பேரவைக்கு வெளியே பெரிய எதிர்க் கட்சியான திமுக 2010 சட்டப்பேரவைத் தேர்தல் பின்னடைவுக்குப் பின் இன்னும் ஒரு அடிகூட முன்னோக்கி எடுத்துவைக்கவில்லை. சட்டப்பேரவைத் தேர்தலிலும் மக்களவைத் தேர்தலிலும் அது எந்தெந்தக் காரணங்களுக்காக மக்களால் நிராகரிக்கப்பட்டதோ, அந்தக் காரணங்களில் ஒன்றைக்கூட அது இன்னும் சீரமைத்துக்கொள்ளவில்லை. மக்களை நெருங்கு வதற்கும் திமுகவிடம் எந்த உத்தியும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒருகாலத்தில் ஒரு நாளைக்கு 10 கூட்டங்கள் பேசியவர்கள் அதன் தலைவர்கள்; இன்றைக்கெல்லாம் வருஷத்துக்கு 10 கூட்டங்களில் அவர்கள் பங்கேற்பதே அரிதாகிக்கொண்டிருக்கிறது. ஒருகாலத்தில் மொழிப் போராட்டம் போன்ற கொதிநிலை மிக்க போராட்டங்களை நடத்திய கட்சி இன்றைக்குப் பெயருக்கு போராட்டம் நடத்தும் கட்சியாக / போராடுவதையே மறந்துவிட்ட கட்சியாகக் காட்சியளிக்கிறது.

ஏனைய கட்சிகளான காங்கிரஸ், பாமக, மதிமுக, இடதுசாரிகள், பாஜக ஆகியோரின் நிலையும் இதுதான். யாவரும் பேசுகிறார்கள். எல்லாம் அறிக்கை அரசியல்; பாவனை அரசியல்; உள்ளேன் ஐயா அரசியல். ஜெயலலிதாவுக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பின், அதை விளக்கி ஒரு தெருக்கூட்டம் நடத்த முடியாத இவர்கள் இப்போது அவருடைய விடுதலைக்குப் பின், மேல்முறையீடுக்காகக் கர்நாடகத்துக்குக் காவடி தூக்குவது அரசியல் அவலம்.

ஒரு அரசியல்வாதி நீதிமன்றத்தில் அல்ல; மக்கள் மன்றத்தில் வீழ்த்தப்பட வேண்டும். அதுதான் அவரை எதிர்ப்பவர்களுக்கு உண்மையான அரசியல் வெற்றி. தமிழக எதிர்க் கட்சிகளிடம் மக்கள் பிரச்சினைகளை முன்னெடுத்துப் போராடி அரசியல் களத்தில் ஒருங்கிணைந்து ஜெயலலிதாவை வீழ்த்தும் உத்தி இல்லை. மாறாக, ஓடுமீன் ஓட உறுமீனுக்காகக் காத்திருந்த கொக்கின் மனநிலையில் இருக்கின்றன; ஜெயலலிதாவை வீழ்த்தி, தங்கள் இருப்பை வெளிக்காட்ட இந்த வழக்கை மட்டுமே ஒரே துருப்புச்சீட்டாகப் பிடித்துத் தொங்குகின்றன. ஜெயலலிதா இல்லாத இடத்தில் கம்பு சுழற்ற ஆசைப்படுகின்றன.

ஜெயலலிதா வழக்கு அதிமுகவுக்கு உயிராதாரப் பிரச்சினையாக இருப்பதன் நியாயம் புரிந்துகொள்ளக் கூடியது. ஏனைய கட்சிகளும் அதையே கட்டிக்கொண்டு அழுவது அருவெறுக்கத்தக்கது. அரசியல் நடத்த, மக்களை அணிசேர்க்க இவர்களுக்குத் தமிழக அரசிடம் பிரச்சினைகளே இல்லையா என்ன?

தமிழக அரசியல் கட்சிகள் / அரசியல்வாதிகள் எல்லோருக்குமே ஆட்சிக் கனவும் முதல்வர் கனவும் சிறகடிக்கின்றன. ஆனால், அரியணை ஏறுவதற்கு முதலில் அவர்கள் தூக்கம் கலைய வேண்டும்; களம் காண முதலில் அவர்கள் நிலத்தில் கால் பதிக்க வேண்டும்; அதற்குத் தம் சொந்த கால்களை அவர்கள் நம்ப வேண்டும்!

மே, 2015, ‘தி இந்து’

7 கருத்துகள்:

 1. மிகவும் நிதானித்து, சிந்தித்து எழுதப்பட்ட கட்டுரை! தமிழர்க்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கட்டுரை!! வாழ்க உமது தொண்டு.... வளர்க உம் பணி !

  பதிலளிநீக்கு
 2. சமஸ் அவர்களே ! களம் கண்டவர்களை பற்றி ஊடகங்கள் எழுது வதில்லையே ! தூத்துகுடி மாவட்டத்தில் வாலிபர்களும் மானவர்களும் மண்டை உடைபட்டார்களே ! அதை எழுதியவர்கள் எத்துணை பேர் 1 சல்மான்கனை பறி எழுதட்டும் ! ஜாமீண் கிடைக்காமல் சிறையிலிருந்தே நடித்துக் கொடுத்த பாலராஜ் சகானியை பற்றி எழுதியவர்கள் எத்தனை பேர் ! தாமிர வருணி படுகொலை பற்றி எழுதுவார்கள் ! ஆனால் அந்த பொராட்டத்தில் குறிவத்து போளீசாரால் தாக்கப்பட்டு மண்டை உடைந்து ஆருமாதம் மருத்துவ மனையிலிருந்த பழனி பற்றி எழுத வில்லை யே ஏன் ? இவர்களேல்லாம் கம்யூனிஸ்டுகள் என்பதால் தானே ! இப்போதும் திரிணமுல் காங்கிரசும் மறைமுகமாக பா.ஜ.க வும் கம்யூனிஸ்டுகளை நரவேட்டை யாடுகிறார்களே ! நம்ம ஊர் ஊடகங்கள் ஏன் கண்டு கொள்வதில்லை ! இவற்றிர்க்கு பின்னல் இருக்கும்வர்க்க அரசியலையும் புரிந்து கொள்ள வேண்டும் ---காஸ்யபன்.

  பதிலளிநீக்கு
 3. ஒரு அரசியல்வாதி நீதிமன்றத்தில் அல்ல; மக்கள் மன்றத்தில் வீழ்த்தப்பட வேண்டும் -

  பதிலளிநீக்கு
 4. நீங்கள் கூறுபவை அத்தனையும் உண்மைதான், சரிதான். ஆனால், இன்றைக்குத் தேர்தல் நடந்தால் அ.தி.மு.க-தான் வெல்லும் என்கிறீர்களே அதைத்தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எதை வைத்து இப்படிச் சொல்கிறீர்கள் எனப் புரியவில்லை. எதிர்க்கட்சிகளின் செயல்படாத்தன்மையை விட ஆளுங்கட்சியின் செயல்படாத்தன்மைதான் மக்களைப் பெருமளவு பாதித்திருக்கிறது. தான் ஆளாத நாளில் மக்களுக்குண்டான அடிப்படை நலத்திட்டங்கள் கூட அறிவிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் ஜெயலலிதா விழிப்புடன் இருப்பதாக ஊடகங்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. அதனால் மக்ளிடம் மிகுந்த வெறுப்பு கண்டிப்பாக ஏற்பட்டிருக்கிறது. அரசியல்வாதி நீதிமன்றத்தில் அல்ல; மக்கள் மன்றத்தில் வீழ்த்தப்பட வேண்டும் என்கிறீர்கள். நீதிமன்றத்தில் ஜெயலலிதா வீழ்த்தப்பட்டிருந்தால் கூட மக்கள் மன்றத்தில் அவர் மீது பரிதாபம் உருவாகியிருக்கும். ஆனால், உலகறிய அவர் செய்த அந்த ஊழலை இல்லவே இல்லை என இன்று நீதிமன்றம் விடுவித்திருப்பது மக்களிடையே எந்தளவுக்குப் பெரும் முகச் சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை நீங்கள் கீச்சகத்தில் இருந்தால் உணரலாம்.

  சொல்லப் போனால், மொழி, இனம் ஆகியவற்றுக்கான அரசியல் பிரதிநிதியாக இருந்த தி.மு.க அதே விதயங்களில் செய்த துரோகத்தின் காரணமாக மக்களால் தூக்கியெறியப்பட்டு, அ.தி.மு.க-வும் மேலாண்மைக் குளறுபடிகளால் மக்களின் வெறுப்பை ஈட்டியிருக்கும் இன்றைய நிலையில் தமிழர் பிரச்சினைகளை முன்னிறுத்தி ம.தி.மு.க போன்ற கட்சிகள் முன்னணிக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் எவ்வளவுதான் போராடினாலும் முதன்மை ஊடகங்கள் பெரிய தலைகளின் கையில் இருப்பதால் அவை வெளிச்சத்துக்கு வருவதேயில்லை. ஊடகங்கள் தி.மு.க, அ.தி.மு.க-வின் குறைகளுக்குக் கொடுக்கும் வெளிச்சத்தில் பத்து விழுக்காட்டையாவது களத்திலிறங்கிப் போராடும் இடதுசாரி, ம.தி.மு.க, நாம் தமிழர் கட்சிகளின் மீது பாய்ச்சினால் அரசியலில் அடுத்த தலைமுறை தலையெடுக்க வழிபிறக்கும். தமிழ்நாட்டின் முதன்மை ஊடகங்களில் பணியாற்றும் நீங்கள், முடிந்தால் அதற்கு ஏதாவது ஏற்பாடு செய்யுங்கள்! நன்றி!

  பதிலளிநீக்கு
 5. தங்கள் கட்டுரை ஊழலுக்கு வக்காலத்து வாங்குகிறது பிரச்சினைதீர்ப்பு தவறா சரியா என்பதுதான் அதை விட்டுவிட்டு தமிழகத்தில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற ரீதியில்கட்டுரை செல்கிறது இடதுசாரிகளின் போராட்டம் பெயரளவுக்கு மட்டுமே உள்ளதுஎன்று சொல்கிறீர்கள் எனக்கு தெரிந்து இந்துயாவிளும் தமிழகத்திலும் இடதுசாரிகளின் போராட்டம்மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக தினமும் நடைபெற்றுவருகிறது சமிபத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு மற்றும் போராட்ட நிகழ்ச்சிகளை எந்த அளவிற்க்குதங்கள் பத்திரிகைகளில் முக்கியத்துவம் தருகிறீர்கள் என்று நன்றாகவேதெரிகிறது நீங்கள் ஊழலுக்குஇந்த அளவுக்கு ஆதரிப்பீர்கள் நான் எதிர்பார்க்கவில்லை நீங்கள் எதையோ எதிர்பார்த்து........வாழ்க சமஸ் வாழ்க தமிழ் இந்து .

  பதிலளிநீக்கு
 6. ஒரு அரசியல்வாதி நீதிமன்றத்தில் அல்ல; மக்கள் மன்றத்தில் வீழ்த்தப்பட வேண்டும். அதுதான் அவரை எதிர்ப்பவர்களுக்கு உண்மையான அரசியல் வெற்றி.

  பதிலளிநீக்கு
 7. ஜெயலலிதா எதிர் கட்சி தலைவராக இருந்த பொலுது எத்தனை போராட்டம் நடத்தி ஆட்சியை பிடித்தார். நன்றாக ஓய்வு எடுத்து கொண்டுதானே இருந்தார். மக்கள் போறாட்டதிற்க்கு ஆதாரவு தறுவதுவும் இல்லை. அவர்கள் தக்க நேறத்தில் தகுந்த முடிவை எடுப்பர்கள். ப்த்திரிக்கை கரராகிய நீங்கள் நேற்மையாக இருங்கள்.
  மற்றவை நன்ராகவை நடக்கும்.

  பதிலளிநீக்கு