சர்வ பலமிக்க எதிராளி!சீனத் தத்துவ ஞானியான லாவோ ட்சு போர்கள், போட்டிகளை ஆதரிப்பவர் அல்ல. எனினும், போர்கள், போட்டிகளில் நாட்டமுள்ளவர்களுக்கு - முக்கியமாக அரசியல்வாதிகளுக்கு - அவருடைய புகழ் மிக்க இந்தக் கூற்றுக்கு இணையான அடிப்படைப் பாடம் இல்லை: “எதிராளியைக் குறைத்து மதிப்பிடுவதுபோலப் பேராபத்து எதுவும் கிடையாது.”

நரேந்திர மோடி யுகத்தில் இந்திய எதிர்க் கட்சிகள் இந்தப் பேராபத்தை எதிர்கொள்கிறார்கள். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் கட்சியைத் தன்வசப்படுத்தி, தேர்தல் களத்துக்கு முன்வந்து களத்தையே அவர் தனதாக்கிக்கொண்டபோதும் சரி; ஓராண்டுக்கு முன் பொதுத் தேர்தலில் அவர் பெற்ற பிரம்மாண்ட வெற்றியின்போதும் சரி; அவருடைய ஓராண்டு ஆட்சிக்குப் பின் அவருடைய செயல்பாடுகளை மதிப்பிடும் இன்றைய சூழலிலும் சரி... மோடியின் எதிரிகள் இன்னும் அவரைச் சரியாக மதிப்பிடக் கற்றுக்கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.

மோடியின் ஓராண்டு தொடர்பான கருத்துகளைத் தொடர்ந்து அவதானிப்பவர்கள் ஒரு விஷயத்தைக் கவனித்திருக்க முடியும்: அவற்றில் ஆகப் பெரும்பாலானவை தேஜகூ அரசு மீதான விமர்சனங்கள், குறைகள். உண்மைதான். ஆனால், இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? மோடியின் ஆதரவாளர்கள் / எதிர்ப்பாளர்கள் இந்த அரசு எப்படி நடக்கும் என்று எதிர்பார்த்தார்களோ அந்தத் திசையிலேயே அரசு செல்கிறது. இன்னும் சொல்லப்போனால், இரு தரப்பினரும் எதிர்பார்த்த வேகத்தைக் காட்டிலும் குறைவான வேகத்திலேயே அரசு செல்கிறது. உண்மையில், எல்லோருமே கவனிக்க வேண்டிய, கவனிக்கத் தவறவிடும் மோடியின் காய் நகர்த்தல்கள் அரசுக்கு உள்ளே இல்லை; அரசுக்கு வெளியில் நடக்கின்றன. அவற்றைக் கவனிக்காமல், மோடியை அவருடைய அரசின் செயல்பாடுகளின் வழியே மட்டும் பார்த்து மதிப்பிடுவது மேலோட்டமான, பலவீனமான மதிப்பீடாகவே தோன்றுகிறது.

ஓராண்டுக்கு முன் பிரதமர் பதவியை நோக்கி மோடி நகர்ந்தபோது அவருடைய அரசியல் வாழ்வின் உச்சபட்ச இலக்காகவே அந்தப் பதவியை அவர் கருதியதுபோலத் தோன்றியது. ஆனால், கடந்த ஓராண்டு ஆட்சி அவர் ஒரு பெரும் திட்டத்துடன் நகர்வதைத் துல்லியமாகக் காட்டுகின்றன. அதாவது, அவருடைய திட்டங்களை முழுமையாகச் செயல்படுத்துவதற்கான களமாக அவர் வகுத்திருக்கும் காலகட்டம் 2014-2019 அல்ல; 2019-2024 என்பதை உணர்த்துகின்றன. 2019-க்குள் இந்திய அரசியலின் ஆகப்பெரும்பான்மை அதிகாரத்தை அவர் கைக்குள் கொண்டுவர விரும்புவதையும் அதற்கான களம் அமைக்கும் ஏற்பாடுகளை மேற்கொள்ளும் கருவியாகவே 2014-2019 காலகட்ட ஆட்சியை அவர் பயன்படுத்துவதையும் உணர்த்துகின்றன.

மோடியின் ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் எதிர்பார்த்த அளவுக்கு மோடியின் முதலாண்டு ஆட்சியில் வேகம் இல்லாததற்கு, பாஜக கூட்டணிக்கு மாநிலங்களவையில் போதிய பலம் இல்லாததே காரணம் என்று பலரும் கூறுகின்றனர். அது மட்டுமே காரணமாகத் தெரியவில்லை. ஏனென்றால், கடந்த 30 ஆண்டுகளாகவே மக்களவையில் பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்த எந்த அரசுக்கும் மாநிலங்களவையில் முழு பலம் இருந்ததில்லை. அவற்றோடு ஒப்பிட்டுப் பார்த்தால், பாஜக கூட்டணி கூடுதல் பலத்துடனேயே இருக்கிறது. 534 தொகுதிகளைக் கொண்ட மக்களவையில் பாஜக கூட்டணிக்கு இப்போது இருக்கும் இடங்கள் 336. ஆங்கிலோ இந்திய நியமன உறுப்பினர்கள் இருவர் எண்ணிக்கையையும் சேர்த்தால் 338 ஆகும். 250 தொகுதிகளைக் கொண்ட மாநிலங்களவையில் பாஜக கூட்டணிக்கு இப்போது இருக்கும் இடங்கள் 63. இரு அவைகளையும் சேர்த்தால் 795 இடங்களில் 401 இடங்கள் அதன் கையில் இருக்கும். அதாவது, எதிர்க் கட்சிகளைக் காட்டிலும் 7 இடங்கள் அதிகம். தவிர, எதிர்க் கட்சிகள் வசமிருக்கும் 394 இடங்களும்கூட முழுக்க எதிர் ஓட்டுகளாகவே அமையும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. உதாரணமாக, இன்றைக்கு நிலம் கையகப்படுத்தும் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், அதிமுக எப்படியான முடிவை எடுக்கும்? அரசு நினைத்தால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டி, தான் நினைக்கும் எந்த மசோதாவையும் நிறைவேற்றிக்கொள்ளும் சூழலிலேயே இருக்கிறது.

ஆக, மோடியின் கனவு, காத்திருப்பின் எல்லைகள் மக்களவை, மாநிலங்களவை பெரும்பான்மையோடு நின்றுவிடுவதாகத் தோன்றவில்லை. அவர் அதற்கு மேலும் விரும்புகிறார், திட்டமிடுகிறார். இந்தியாவில் ஒட்டுமொத்த மாற்றங்களை மத்தியிலுள்ள அரசு செயல்படுத்த வேண்டும் என்றால், மாநிலங்களிலும் அவற்றைச் செயல்படுத்துவதற்கேற்ற அரசுகள் தேவை. மோடியின் திட்டம் இதை மையமாகக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது.

 2013 செப்டம்பர் 13-ம் தேதி அன்று பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதன் பிறகு இதுவரை 6 மாநிலங்களில் அது ஆட்சியைப் பிடித்திருக்கிறது. நாட்டின் 29 மாநிலங்களில் 8 மாநிலங்களில் நேரடியாகவும் 4 மாநிலங்களில் கூட்டணியோடும் ஆட்சியில் இருக்கும் பாஜக இப்போது மூன்றில் ஒரு பகுதி (34.8%) இந்திய மாநிலங்களில் தன் கொடியைப் பறக்கவிட்டிருக்கிறது. அடுத்து வரும் இரண்டாண்டுகளில் பிஹார், மேற்கு வங்கம், அசாம், உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்களைக் குறிவைத்திருக்கும் அதன் கணக்கு ஜெயிக்குமானால், மேலும் ஒரு பகுதி (32.95%) இந்திய மாநிலங்களில் அதன் கொடி பறக்கும். உத்தேசமாக, 2019 மக்களவைப் பொதுத் தேர்தலை மோடி எதிர்கொள்ளும்போது, பாஜக கூட்டணியின் கையில் மூன்றில் இரு பகுதி இந்தியா இருக்கும். 2019 மக்களவைத் தேர்தலையும் அது வென்றால் மோடியின் கையில் மக்களவை, மாநிலங்களவை மட்டும் அல்ல; பெரும்பான்மை மாநிலங்களும் இருக்கும்.

இது சாத்தியமானால், சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் நேருவுக்குக் கிடைத்த அதிகாரத்துக்கு இணையானதாக மோடியின் அதிகாரம் இருக்கும். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் பிரதமர் பதவிக்கான களத்தில் மோடி குதித்தபோது, பாஜகவின் முன்வரிசையில் சற்றே முன்னிருந்த தலைவர் அவர். ஆனால், தேர்தல் அறிவிக்கப்பட்டதும் எல்லோரையும் ஓரங்கட்டுபவராக மாறினார். தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருந்தபோதே கிட்டத்தட்ட கட்சியின் சுக்கான் அவர் கைகளில் வந்துவிட்டது. தன்னுடைய வலது கையான அமித் ஷாவைக் கட்சித் தலைவராக்கியதும் முழுக் கட்சியும் அவர் கைகளில் வந்துவிட்டது. ஒருகாலத்தில் தனிநபர் அரசியலுக்கு எதிராகவும் கூட்டுத் தலைமைக்கு உதாரணமாகவும் தன்னை முன்னிறுத்திக்கொண்ட கட்சி, இன்றைக்கு ஒரு தலைவரின் கட்சியாகிவிட்டது. அந்தக் கட்சி உலகின் மிகப் பெரிய கட்சி எனும் கனவுடன் நகர்ந்துகொண்டிருக்கிறது.

அவர் தேசிய அரசியலுக்குப் புதியவர் என்றவர்கள் உண்டு. “டெல்லி காந்திநகர் அல்ல; டெல்லியின் ஒவ்வொரு சாலையும் கண்ணுக்குத் தெரியாத புதைகுழிகளின் மேல் அமைக்கப்பட்டவை; தேசிய அரசியல் எவ்வளவு அபாயகரமானது என்பதை மோடி இங்கே தெரிந்துகொள்வார்” என்றவர்கள் உண்டு. “தன் சொந்தக் கட்சியினாராலேயே ஓராண்டுக்குள் அவர் வீழ்த்தப்படுவார்” என்றவர்கள் உண்டு. இந்த ஓராண்டுக்குள் எல்லாக் கணிப்புகளையும் அவர் தாண்டியிருக்கிறார். இந்தியத் தேர்தல் வரலாற்றைக் கவனிப்பவர்களுக்கு ஒரு விஷயம் புலப்படும். மத்திய ஆட்சிக்கு இந்தியர்களின் இயல்பான முதல் அரசியல் தேர்வு காங்கிரஸ் கட்சி; காங்கிரஸ் தவறிழைக்கும்போது கொடுக்கும் தண்டனை யாகவே ஏனையோருக்கு மக்கள் வாய்ப்பளிக்கின்றனர். மோடி இதைப் புரிந்து கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. இந்தியாவில் நேரு குடும்பத்தைத் தாண்டி நாடு முழுவதும் அறியப்பட்ட பிரதமர்கள் யாரும் இல்லை; நாட்டின் கடைசி முனை வரை ஒரு முகம் சென்றடைவது அத்தனை எளிதும் இல்லை.

மோடி இதையும் புரிந்துகொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. தேசிய அளவில் ஒரு நேருவைப் போலவோ மாநில அரசியலில் ஒரு எம்ஜிஆர் போலவோ வசீகரம் அற்றவர் மோடி. ஆனால், ஜப்பான் பயணத்தில் டிரம்ஸ் கலைஞரோடு சேர்ந்து டிரம்ஸ் அடிப்பதாகட்டும், சத்தீஸ்கர் பயணத்தில் பள்ளிக் குழந்தையோடு சேர்ந்து நாற்காலியில் தாளம் போடுவதாகட்டும், சீன வலைதளமான ‘வெய்போ’வில் இணைவதாகட்டும், பிரதமர் லீயோடு சேர்ந்து செல்ஃபி எடுத்துக்கொள்வதாகட்டும், தன்னுடைய பிம்பத்தை ஒரு வெகுமக்கள் தலைவராகத் திட்டமிட்டு உருவாக்கிக்கொண்டிருக்கிறார். இந்தியாவுக்குள்ளும் வெளியிலும். இவையெல்லாமும் உணர்த்துவது என்ன?

இதில் ஒன்றும் ரகசியம் இல்லை. பாஜக தலைவர் அமித் ஷாவின் பேச்சுகளைத் தொடர்ந்து கேட்டுவருபவர்கள் இதைக் கவனித்திருக்கக் கூடும். ஆரம்பத்திலிருந்தே அவர் அடுத்த 10 ஆண்டுகளுக்கு மோடிதான் பிரதமர் என்றே பேசிவந்திருக்கிறார். சமீபத்திய தெஹ்ராதூன் கூட்டத்திலிருந்து, “அடுத்த 30 ஆண்டு காலம் ஆட்சியில் நீடிப்பதே பாஜகவின் இலக்கு” என்றும் பேச ஆரம்பித்திருக்கிறார். ஆக, எட்டு கைகள், எட்டு கால்களுடன் எட்டு திசைகளிலும் சங்க பரிவாரங்கள் சூழ பாய்ந்துகொண்டிருக்கிறார் மோடி. அவற்றில் ஒரு திசையில் மட்டும் இருட்டில் நின்றுகொண்டு தங்களுக்குள் முஷ்டி முறுக்கிக்கொண்டிருக்கின்றனர் அவருடைய எதிரிகள்!

ஜூன் 2015, ‘தி இந்து’

3 கருத்துகள்:

  1. தலைப்புகளுககான சொற்றொடரைத் தாங்கள் தெரிவு செய்யும் விதம் மிக அருமை. நல்ல அலசல் கட்டுரை.

    பதிலளிநீக்கு
  2. உங்கள் கணிப்பு பலிக்கட்டும், நாடு வளமும், பலமும் பெறட்டும்!

    பதிலளிநீக்கு