மோடி சொல்ல விரும்பாத ஒரு சாதனைக் கதை!


துவும் ஒரு சாதனைக் கதைதான். மோடியின் குஜராத்தில், எல்லையோர சிறு நகரமான தாரட்டிலிருந்து அகமதாபாத் நோக்கி பிழைப்புக்காகக் குடிபெயர்ந்த ஒரு ஜவுளி வியாபாரக் குடும்பத்தின் கதை. ஒரு தொழில் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய சாமானியனின் கதை. மோடியின் தோழர் கௌதம் அதானியின் கதை.

1988-ல் தொடங்கப்பட்ட அதானி குழுமம் எந்தெந்தத் தொழில்களிலெல்லாம் இறங்கி வெறும் 27 ஆண்டுகளுக்குள் எப்படிக் கிட்டத்தட்ட 28 நாடுகளில் கிளை பரப்பி நிற்கிறது என்பது ஒரு பெரும் வரலாறு. அதை அப்படியே இங்கே விவரிப்பது சாத்தியம் இல்லை. எனினும், ராகுல் காந்தியின் கூற்றுப்படி, “குஜராத்தில் மோடி ஆண்ட 2002-2014 காலகட்டத்தில் மட்டும் ரூ. 3,000 கோடியிலிருந்து ரூ. 40,000 கோடியாக அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு உயர்ந்தது எப்படி?” என்ற கேள்விக்கு, பின்னாளில் ‘ஃபோர்ப்ஸ்’ வெளியிட்ட ஒரு கட்டுரை பதிலுக்கான திசையைக் காட்டியது. மோடியின் ஆட்சியில் கட்ச் வளைகுடா பகுதியில் மட்டும் அதானி குழுமத்துக்கு 7,350 ஹெக்டேர் 30 வருஷக் குத்தகைக்குக் கிட்டத்தட்ட ஒரு ரூபாய் விலைக்கு ஒரு சதுர மீட்டர் என்று இடம் அளிக்கப்பட்ட கதை, அப்படி அளிக்கப்பட்ட நிலத்தைக் சுமார் 15 மடங்கு அதிக தொகைக்கு ‘இந்தியன் ஆயில்’ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அதானி குழுமம் உள்குத்தகைக்கு விட்ட கதையையெல்லாம் அந்தக் கட்டுரை சொன்னது. இடையிடையே வெளியான தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கைகளும் மோடி அரசு பெருநிறுவனங்கள் மீது, அதானி குழுமத்தின் மீது காட்டிய பாசத்தையும் அதீத சலுகைகளையும் கூறின. ஆக, அம்பானியின் கதைபோல அதானியின் கதையும் ஒரு வெற்றிக் கதை!

இந்த வெற்றிக் கதையில் மோடியின் முதலாண்டு ஒரு அற்புதமான அத்தியாயம். இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் பலரும் மறந்துவிட்ட அத்தியாயம். உண்மையில், அகமதாபாத்திலிருந்து டெல்லி நோக்கி மோடி நகரப்போகிறார்; பாஜகவின் வேட்பாளர் அவர்தான் என்று அறிவிக்கப்பட்டதுமே அந்த அத்தியாயம் புயல் வேகத்தில் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அதானியின் மூன்று நிறுவனங்கள்  - அதானி என்டர்பிரைஸஸ், அதானி போர்ட் அண்ட் செஸ் லிமிடெட், அதானி பவர் - மதிப்பும் 85.35% வளர்ச்சி கண்டன. சென்செக்ஸ் வெறும் 14.76% வளர்ச்சி கண்ட காலகட்டம் அது. தேர்தல் களத்தில் அதானி விமானத்தில் பறந்து மோடி முந்த முந்த... பங்குச்சந்தையில் அதானி குழுமம் மேலே மேலே போனது.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான அதே நாளில், தன் நண்பர் மோடியைப் போலவே மிகப் பெரிய சாதனை ஒன்றைச் செய்தார் அதானி. அன்றைய தினம்தான் அவருடைய ‘அதானி போர்ட்ஸ்’ நிறுவனம், ஒடிஸாவில், கிழக்குக் கடற்கரைப் பகுதியில் உள்ள ‘தாம்ரா போர்ட்’ துறைமுகத்தை ரூ.5,500 கோடிக்கு வாங்கியது. டாடா ஸ்டீல் மற்றும் எல்&டி நிறுவனங்களுக்குச் சொந்தமான ‘தாம்ரா’ துறைமுகம் கிழக்கு மாநிலங்களின் தாதுப் பொருட்களைக் கொண்டுசெல்லும் மிக முக்கியமான மையம். அரசுக்குச் சொந்தமான மேற்கு வங்கத்தின் ஹல்தியா துறைமுகம் மற்றும் ஒடிஸாவின் பாரதிப் துறைமுகம் ஆகியவற்றுக்குச் சரியான போட்டியாக விளங்கக் கூடியது. 2005-ல் ‘ஸ்கில் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்’ நிறுவனத்திடமிருந்து குஜராத்தில் உள்ள பைபவ் துறைமுகத்தை பெருந்தொகைக்கு ‘ஏபிஎம் டெர்மினல்ஸ் பிவி’ நிறுவனம் வாங்கியதற்குப் பிறகு, துறைமுக வணிகத்தில் நடந்த மிகப் பெரிய வணிகம் இது. அதைவிடவெல்லாம் முக்கியம், அதானியின் நீண்ட நாள் கனவு - காத்திருப்பு அது. இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்குக் கடற்கரையோரப் பகுதிகளில் பெரிய அளவில் வணிகம் செய்வதற்குச் சரியான மையம் அது என்பது அவருடைய வியூகம். அதானி குழுமம் ஏற்கெனவே குஜராத்தில் ஆசியாவிலேயே மிகப் பெரிய தனியார் துறைமுகமான ‘முந்த்ரா’ உட்பட 5 பெரிய துறைமுகங்களை நிர்வகிக்கிறது. ‘தாம்ரா’ துறைமுகத்தை வாங்கியிருப்பதன் மூலம், 2020 வாக்கில் 200 மில்லியன் டன் கையாளும் இலக்கை எட்ட முடியும்; அதன் மூலம் துறைமுகத் தொழிலில் அசைக்க முடியாத இடத்துக்குச் செல்ல முடியும் என்பது அதானியின் கணிப்பு.

அடுத்த மூன்று மாதங்களில், உடுப்பியிலுள்ள ரூ. 6,000 கோடி மதிப்புள்ள 1,200 மெகாவாட் அனல் மின் உற்பத்தி நிலையத்தை ‘லான்கோ இன்ஃப்ரா’ நிறுவனத்திடமிருந்து அதானி குழுமம் வாங்கியது. அடுத்த மூன்று மாதங்களில், ரூ. 4,200 கோடி மதிப்புள்ள 600 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தை ‘அவந்தா’ நிறுவனத்திடமிருந்து அதானி குழுமம் வாங்கியது. இதன் மூலம் 11,040 மெகாவாட்டாக அந்நிறுவனத்தின் மின் உற்பத்தித் திறன் உயர்ந்தது. நாட்டின் மிகப் பெரிய தனியார் மின் உற்பத்தியாளர் எனும் கனவை அதானி நனவாக்கிக்கொண்டார். “அடுத்து 2020-க்குள் 20,000 மெகாவாட் மின் உற்பத்தி இலக்கை அதானி குழுமம் அடையும்” என்றார். இதற்கிடையிலேயே செப்டம்பரில் இன்னொரு சாதனையையும் அவர் படைத்தார். இந்தியாவின் ‘டாப் 10 பணக்காரர்கள்’ பட்டியலில் நுழைந்தார். அவருடைய சொத்து 152% வளர்ந்திருப்பதாகச் சொன்னது ‘ஹுரூம்’ ஆய்வறிக்கை.

மோடியின் ஓராண்டு வெளிநாட்டுப் பயணங்கள் நாம் அறியாதவை அல்ல. அவற்றில் பெரும்பாலான பயணங்களில் அதானிக்குக் கட்டாயம் இடம் உண்டு. ஐ.நா. சபையில் மோடி உரையாற்றிக்கொண்டிருந்தபோதும் சரி, ஜி-20 மாநாட்டுக்கு மோடி சென்றிருந்தபோதும் சரி... அதானி அங்கே இருந்தார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், பெரும்பாலான பயணங்களில் அவருடைய இருப்பை மோடி அரசு வெளியிட விரும்புவதில்லை. உதாரணமாக, பிரான்ஸ் பயணத்தின்போது இருதரப்புப் பேச்சுவார்த்தையில் அவர் பங்கேற்றதை பிரெஞ்ச் அரசின் செய்திக்குறிப்பு சொன்னது; இந்தியத் தரப்போ மூடி மறைத்தது. முன்னாள் அதிபர் நிகோலஸ் சர்கோஸி கொடுத்த விருந்தில்கூட அவர் பங்கேற்றதாகச் சொன்னார்கள். கேட்டால், “அதானி அதிகாரபூர்வமாக அல்லாமல் தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளும் பயணங்களையும் நிகழ்ச்சிகளையும் பற்றி நாங்கள் என்ன சொல்ல முடியும்?” என்று கேட்டிருக்கிறார்கள் நம் அதிகாரிகள். கூடவே, “இதென்ன புதிதா? மோடி முதல்வராக இருந்தபோதே சிங்கப்பூர், சீனா, ரஷ்யா என்று உடன் சென்றவர்தானே அதானி” என்றிருக்கிறார்கள்.

அதானியின் ஓராண்டுப் பயணத்தில் முக்கியமான அடுத்த மைல்கல் கார்மைக்கேல் நிலக்கரிச் சுரங்க ஒப்பந்தம். மோடியின் ஆஸ்திரேலியப் பயணத்தின்போது பேசி முடிக்கப்பட்ட பேரம் இது. உலகின் பெரும் திட்டங்களில் ஒன்று என்கிறார்கள். முன்னெப்போதும் இல்லாத வகையில் அதானியின் இந்தத் திட்டத்துக்கு ஒரு பில்லியன் டாலர்களை (கிட்டத்தட்ட ரூ. 6,396,54,50,000) கடனாக அளிக்கவிருப்பதாக அறிவித்தது பாரத ஸ்டேட் வங்கி. ஆஸ்திரேலியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலின் சரிவையும், நிலக்கரி விலையில் ஏற்பட்ட 50% சரிவையும், சுற்றுச்சூழல் காரணங்களையும் சுட்டிக்காட்டி சிட்டி வங்கி, டாய்ச்சு வங்கி, ராயல் வங்கி, எச்எஸ்பிசி, பார்கிளேய்ஸ் எனப் பல பன்னாட்டு வங்கிகள் கடன் வழங்க மறுத்த திட்டம் இது. சர்வதேச வங்கிகளெல்லாம் மறுத்த ஒரு திட்டத்துக்கு, பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி கடன் வழங்கும் முடிவெடுக்க என்ன காரணம்?

இந்தக் கேள்வியை எதிர்க் கட்சிகள் கேட்டன. மாநிலங் களவை உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் வெளிப்படையாகவே பல கேள்விகளை எழுப்பினார். பிரதமர் மோடியும் ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யாவும் அதானியும் சந்தித்த விருந்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றார். கூடவே, சங்கடமான இன்னொரு கேள்வியையும் அவர் எழுப்பினார். “நிலக்கரியை இந்தியா இறக்குமதிசெய்வது அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் நின்றுவிடும் என்று நிலக்கரித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகிறார். ஆனால், அதானியின் ஆஸ்திரேலியத் திட்டப்பணி மூலம் வெட்டி எடுக்கப்படும் நிலக்கரியில் மூன்றில் இரண்டு பங்கு இந்தியாவுக்கு ஏற்றுமதிசெய்யப்படும் என்கிறார்களே எப்படி?” என்றார். “தொழில்களுக்கு உகந்த ஒரு அரசாக மோடி அரசு இருப்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை; ஆனால், தொழிலதிபர்களுக்கான அரசாக - அணுக்கம்சார் முதலாளித் துவ அரசாக - இருப்பது எங்களுக்குப் பிரச்சினை” என்றார்.

அரசிடம் பதில் இல்லை. இதற்கெல்லாம் பதில் சொல்ல முடியுமா என்கிறது.

அதானி குழுமத்தின் சாதனைக் கதைகள் தொடர்கின்றன. வளர்ச்சி என்றால் அப்படித்தானே?


ஜூன், 2015, ‘தி இந்து’

3 கருத்துகள்:

  1. பிரச்சினையின் ஊற்றுக்கண்ணை அறிவதற்கு சாமர்த்தியம் வேண்டும் என்பதைத் தம் செய்கையின் மூலமாக உணர்த்திவிடுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  2. இந்தியா போன்ற அரசுஎந்திரம் முடக்கு செய்யும் நாட்டில் அதானி, அம்பானி போன்றவர்களே தொழில் செய்ய இயலும். அதானியோ அம்பானியோ ஒருவேளைக்கு மூன்று சப்பாத்திதான் உண்பார்கள். ம்ிச்சமுள்ள அவர்களின் செல்வம் தொழில்துறையை வளர்க்கும். செல்வர்கள் விரும்பாத நாடு முன்னேறத்தகுதியற்றது.

    பதிலளிநீக்கு