வழிகாட்டுகிறது பகுலாஹி!


ப்படிப்பட்ட மனிதர்களும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது; ‘மாஞ்சி’ படம் பார்த்தீர்களா? - இப்படிக் கேட்கும் நண்பர்களிடம் எல்லாம் கூடுதலாக ஒரு செய்தியைப் பரப்பிக்கொண்டிருக்கிறேன்: “பகுலாஹி செய்தியைக் கேள்விப்பட்டீர்களா?”

நவாசுதீன் சித்திக் - ராதிகா ஆப்தே நடிப்பில் வெளியாகியிருக்கும் இந்திப் படமான ‘மாஞ்சி’, பிகாரைச் சேர்ந்த ஏழை விவசாயியான தசரத் மாஞ்சியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. பிஹாரின் கயா மாவட்டத்தில் உள்ள கெலார் எனும் சின்ன மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர் தசரத் மாஞ்சி. பிஹார் போன்ற ஒரு மாநிலத்தில், மலைக் கிராமங்களில், அதுவும் ஒடுக்கப்பட்ட மக்கள் பெரும்பான்மையாக வாழும் ஊரில் அடிப்படை வசதிகள் எப்படியிருக்கும் என்று சொல்லவும் வேண்டுமா? கெலார் மக்கள் பக்கத்திலுள்ள நகரமான வஜூர்கஞ்சை அடைய வேண்டும் என்றால், மலையைச் சுற்றிக்கொண்டு 80 கி.மீ. தூரம் செல்ல வேண்டும். இதைவிடப் பெரிய கொடுமை, குடிதண்ணீர் வேண்டும் என்றாலே, மலைக்கு மறுபக்கம் சென்றுதான் எடுக்க வேண்டும். 1959-ல் இப்படி ஒரு நாள் தண்ணீர் எடுப்பதற்காகச் சென்றார் தசரத் மாஞ்சியின் மனைவி பல்குனிதேவி. கல் இடறி தவறி விழுந்ததில், பாறைகளில் உருண்டு படுகாயம் அடைந்தார். வஜூர்கஞ்ச் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் பாதி வழியிலேயே பல்குனிதேவியின் உயிர் போய்விட்டது. ஒரு சாதாரண மனிதரான தசரத் மாஞ்சியை ‘மலை மனிதர்’ ஆக்கியது இந்தச் சம்பவம். தன் மனைவிக்கு ஏற்பட்ட நிலை இன்னொருவருக்கு ஏற்படக் கூடாது என்று முடிவெடுத்தார். உளி, சுத்தியல். இரண்டையும் கொண்டே தனி ஒரு ஆளாக மலையின் நடுவே 25 அடி உயரம், 30 அடி அகலம், 360 அடி நீளத்தில் ஒரு பாதையை அமைத்தார். கெலாரையும் சேர்த்து 60 கிராம மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை அந்தப் பாதை உருவாக்கியது. கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் உழைப்பு + கடுமையான அர்ப்பணிப்புணர்வின் பலன் இது.

அரசாங்கத்திடமிருந்தோ, சமூகத்திடமிருந்தோ தசரத் மாஞ்சி எதையும் எதிர்பார்க்கவில்லை. பின்னாளில், ‘பத்மவிபூஷண்’ விருதுக்கு மாஞ்சியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டபோதும்கூட, “ஒரு தனி மனிதர் இப்படி மலையைப் பிளந்து பாதை அமைத்தார் என்பதற்கு ஆதாரமில்லை” என்று கூறி மத்திய அரசு நிராகரித்தது. “எனக்கு விருதெல்லாம் வேண்டாம்; என் ஊர் மக்களுக்கு ஒரு மருத்துவமனை வேண்டும்; முடிந்தால் அதைச் செய்துகொடுங்கள்” என்று கூறி நிலமற்ற விவசாயியான தனக்கு, பிகார் அரசு அளித்த 5 ஏக்கர் நிலத்தையும் கொடுத்துவிட்டார். 2007-ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தபோதுதான் தசரத் மாஞ்சி நம் அரசியல்வாதிகளின் கண்ணுக்குத் தெரிந்தார். பிஹார் அரசு மரியாதையோடு அவருடைய இறுதி நிகழ்ச்சிகள் நடந்தன.


ராஜாராம் பாப்கர் கதையும் இப்படித்தான். மஹாராஷ் டிரத்தின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள குண்டேகாவோன் எனும் சிறுகிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாராம் பாப்கர். பள்ளிக்கூட ஆசிரியர். சாலை வசதி இல்லாத கிராமம் குண்டேகாவோன். பக்கத்திலுள்ள கோலேகாவோன் கொஞ்சம் பெரிய ஊர். குண்டேகாவோன் மக்கள் கோலேகாவோனுக்குச் செல்ல வேண்டும் என்றாலே, மூன்று கிராமங்களைச் சுற்றிக்கொண்டுதான் வர வேண்டும். இதற்குத் தீர்வு ஏதாவது உண்டு என்றால், இடையிலேயே இருக்கிற சந்தோஷா எனும் குன்றைக் குடைந்து வழி அமைக்க வேண்டும். அரசாங்கத்துக்கு மனு எழுதி, மனு எழுதி நொந்துபோன ராஜாராம் பாப்கர் தானே களத்தில் இறங்கினார். தன் சம்பாத்தியத்தின் பெரும் பகுதியைச் செலவிட்டு, பாதை அமைக்கும் வேலைகளைத் தொடங்கினார். 40 கி.மீ. நீளத்துக்கு 7 பகுதிகளாகச் சாலையை அமைத்தார். 1968-ல் ஒற்றையடியில் இருந்த பாதை, இப்போது லாரிகள் கடக்கும் சாலையாக மாறியிருக்கிறது. கிட்டத்தட்ட 58 ஆண்டுக் கால உழைப்பு, சம்பாத்தியம், சேமிப்பு, பணிக்கொடை, ஓய்வூதியம் + அர்ப்பணிப்புணர்வின் பலன் இது.

நாளை ராஜாராம் பாப்கர் பெயரிலும் ஒரு படம் வரலாம்.

தசரத் மாஞ்சி, ராஜாராம் பாப்கர் கதைகளுக்கும் பகுலாஹி கதைக்கும் ஒரு வேறுபாடு உண்டு. அவை இரண்டும் தனிமனிதச் சாதனைகள். இது கூட்டுச்சாதனை. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தசரத் மாஞ்சிகள், ராஜாராம் பாப்கர்களின் கதை இது. உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத், பிரதாப்கட் மாவட்ட விவசாயிகளின் முக்கியமான நீராதாரங்களில் ஒன்று பகுலாஹி ஆறு. மழைக் காலத்தில் அடிக்கடி பகுலாஹியில் பெருவெள்ளம் ஏற்படும். வெள்ளத்தை எதிர்கொள்ள புத்திசாலித்தனமாக யோசிப்பதாக நினைத்துக்கொண்ட அதிகாரிகள் வர்க்கம் ஒரு முடிவை எடுத்தது; ஆற்றின் போக்கை திருப்பிவிட்டது. ஆரம்பத்தில் மக்களுக்கும் இது நல்ல யோசனையாகவே பட்டது. ஆனால், அடுத்த 25 ஆண்டுகளில், தண்ணீர் வரத்தே இல்லாமல் நிலத்தடிநீர் ஆதாரமும் அருகி பெரும் பிரச்சினை உருவானது. அரசிடம் முறையிட்டு எந்தப் பலனும் இல்லை. ‘தண்ணீர் மனிதர்’ ராஜேந்திர சிங் இந்தப் பக்கம் வந்தபோது விவசாயிகள் அவரிடம் யோசனை கேட்டிருக்கிறார்கள். ஆற்றை மீண்டும் அதே தடத்தில் பாயச் செய்வதே ஒரே வழி என்று அவர் சொல்லியிருக்கிறார். மக்களைப் பொறுத்த அளவில் இமாலயக் காரியம் அது. ஏனென்றால், இடைப்பட்ட காலத்தில் ஆறு ஓடிய தடத்தில் பலர் மண்ணை நிரவி குடியிருப்புகளை உருவாக்கிவிட்டார்கள். எஞ்சிய இடம் வயல்களாகவும் மேய்ச்சல் காடுகளாகவும் மாற்றப்பட்டு, ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன. அவ்வளவையும் அகற்றி மீண்டும் ஆற்றுப் பாதையை உருவாக்கி, ஆற்றைக் கொண்டுவருவது என்றால் சாதாரண காரியமா? ஆனாலும், மனம் திகைக்காமல் களத்தில் இறங்கினார்கள்.

2011-ல் சுமார் 50 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஓரிடத்தில் கூடினார்கள். ஆற்றை மீண்டும் அதன் வழிக்குக் கொண்டுவருவது தங்கள் பொறுப்பு என்று உறுதியெடுத்துக்கொண்டார்கள். ஒவ்வொரு ஊராகச் சென்று பேசினார்கள். ஆக்கிரமிப்பாளர்களை அவர்களுடைய செல்வாக்கு, அரசியல் பலம் எல்லாவற்றையும் தாண்டி வழிக்குக் கொண்டுவந்தார்கள். தங்களுக்குள்ளேயே கலந்து பேசி பண வசூல் நடத்தி, தேவையான கருவிகளை வாங்கி வேலையைத் தொடங்கினார்கள். சுழற்சி முறையில் ஒவ்வொரு ஊரையும் சேர்ந்த விவசாயிகள் ஆற்று வேலைக்கு வந்து மண் சுமக்க மொத்தம் உள்ள 18 கி.மீ. நீர்ப்பாதையில் 15.5 கி.மீ. பாதையை மக்களே உருவாக்கிவிட்டனர். மக்கள் பணியைப் பார்த்து அசந்துபோன மாவட்ட நிர்வாகம் கடைசிக் கட்டத்தில் அதுவும் கை கோக்க மகாத்மா காந்தி வேலையுறுதித் திட்டத்தின் கீழ் மிச்சப் பணிகள் முடிந்திருக்கின்றன. இன்றைக்கு பழைய பாதையில் பாய்கிறது பகுலாஹி. முன்புபோல, வெள்ளப் பிரச்சினை உருவாகாமல் தவிர்க்க, புரே துராய் எனுமிடத்தில் பகுலாஹி ஆற்றுக்குக் குறுக்கே ஒரு சின்ன அணையை உருவாக்கும் திட்டத்தையும் அரசுக்குச் சொல்லியிருக்கின்றனர். கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் உழைப்பு + பல்லாயிரக்கணக்கானோரின் கூட்டு முயற்சி + அர்ப்பணிப்புணர்வின் பலன் இது.

தசரத் மாஞ்சி, ராஜாராம் பாபகர், பகுலாஹி மூன்று கதைகளுமே மக்கள் நினைத்தால், எப்படியான மாற்றங்களுக்கெல்லாம் வழிவகுக்கலாம்  என்பதற்கான உதாரணங்கள் என்றாலும், பகுலாஹி கதை இந்திய அரசுக்கும் நம்முடைய ஆட்சியாளர்களுக்கும் முக்கியமான ஒரு வழிகாட்டலைக் கொடுக்கிறது. நாட்டின் பெரும்பான்மையான நீர்நிலைகள் இன்றைக்கு ஆக்கிரமிப்பில் இருக்கின்றன / அழிவை எதிர்கொள்கின்றன. நாட்டின் சரிபாதி ஆறுகள் சீரழிவில் இருக்கின்றன என்கிறது மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சமீபத்திய ஆய்வறிக்கை. ஆறுகள் சூறையாடப்படுவது நாளுக்கு நாள்  அதிகரிப்பதோடு வேகமாகவும் ஆரம்பித்திருக்கிறது. அரசால் மாசுபட்டவை என்று வரையறுக்கப்படும் 275 ஆறுகளில் 121 கடந்த ஐந்து ஆண்டுகளுக்குள் மோசமான பாதிப்புக்குள்ளானவை என்கிறது இன்னொரு ஆய்வறிக்கை. நாட்டின் முக்கியமான நதிகளில் ஒன்றான - கிட்டத்தட்ட 50 கோடி மக்கள் வசிக்கும் படுகையைக் கொண்ட - கங்கையை ஓரளவுக்குத் தூய்மையாக்க மட்டும் ரூ. 7 லட்சம் கோடி வேண்டும் என்கிறது கான்பூர் ஐஐடி பேராசிரியர் வினோத் தாரே ஆய்வுக் குழு. அப்படியென்றால், நாட்டின் எல்லா நீர்நிலைகளையும் முழுமையாகத் தூய்மையாக்கவும் ஆக்கிரமிப்பில் தொலைந்த நீர்நிலைகளை மீண்டும் மீட்டுருவாக்கவும் தொடர்ந்து அவற்றைப் பராமரிக்கவும் எத்தனை கோடி லட்சங்கள் ஒவ்வோர் ஆண்டும் தேவைப்படும்; இதெல்லாம் சாத்தியமா என்பதை விவரிக்க வேண்டியதில்லை. எதிர்வரும் காலத்தில் தண்ணீருக்காகப் பெரும் விலையைக் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கும் இந்திய அரசுக்கு பகுலாஹி முக்கியமான ஒரு உண்மையையும் தீர்வையும் சுட்டிக்காட்டுகிறது: நீர்நிலைகளை மக்கள் துணையின்றி அரசால் பாதுகாக்கவோ, பராமரிக்கவோ முடியாது. ஆம். நீர்நிலைகளைத் தேசியமயமாக்குங்கள்; அதன் பராமரிப்பு உரிமையை, கடமையை அந்தந்த நீர்நிலைகளைப் பயன்படுத்தும் மக்களிடம், விவசாயிகளிடம் அளியுங்கள். மகாத்மா காந்தி வேலையுறுதித் திட்டத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துங்கள். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்துக்கு முன் இந்தியாவில் இருந்த குடிமராமத்து முறையை மீண்டும் கொண்டுவந்து வளர்த்தெடுங்கள்!

செப்.2015, ‘தி இந்து’

4 கருத்துகள்:

  1. ஆக மொத்தத்தில், மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்கான தீர்வுகள் தனி மனிதர்களாலும் அரசு சாரா அமைப்புகளாலுமே முன்னெடுக்கப்படுகின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் மக்கள் விரோத திட்டங்களுக்கெதிராகப் போராடுவதே மக்களின் பெருங்கடமையாக தற்காலத்தில் இருக்கிறது. போராட இயலாத நிலையில், பலர் தன்னை மாற்றிக்கொள்கின்றனர்; இக்கட்டுரையில் குறிப்பிட்டதைப்போன்ற வெகு சிலர் தன்னையே அர்ப்பணித்து மாற்றங்களுக்கு வழியமைக்கின்றனர்.

    பதிலளிநீக்கு
  2. நீர்நிலைகளை மக்கள் துணையின்றி அரசால் பாதுகாக்கவோ, பராமரிக்கவோ முடியாது என்பது முற்றிலும் உண்மை. அந்த அளவிற்கான விழிப்புணர்வு மேம்படுத்தப்படவேண்டும். ஆங்காங்கே இவ்வாறானவர்கள் செய்யும் முயற்சி முன்னுக்கு வைக்கப்படவேண்டும். அவை பிற நிகழ்வுகளுக்குக் காரணமாக அமையும். அர்ப்பணிப்பு உணர்வும், கூட்டு மனப்பான்மையும் நல்ல நிலைக்கு இட்டுச்செல்லும்.

    பதிலளிநீக்கு