உணவல்ல; உயிர் கொடுக்கிறோம்!


சென்னை, திருவல்லிக்கேணி உணவு விடுதிகளுக்குப் பேர் போனது. தலைநகரில் ஒண்டிக்கட்டைகளின் பேட்டை இது என்பது அதற்கான பின்னணிகளில் ஒன்று. நூற்றாண்டுகளைக் கடந்த படா படா உணவகங்களின் மத்தியில் ‘பாரதி மெஸ்’ அப்படி ஒன்றும் பழுத்த கிழம் அல்ல. சின்னதும்கூட. சென்னை வந்த புதிதில் வெளியே வீட்டுச் சாப்பாடு எங்கே கிடைக்கும் என்று தேட ஆரம்பித்தபோது நண்பர்கள் ‘பாரதி மெஸ்’ஸுக்கு வழிகாட்டினார்கள். கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது.

முதல் முறை உணவகத்துக்குள் நுழைந்தபோதே ஆச்சரியமாக இருந்தது. முகப்பிலேயே கடவுள் இடத்தில் பாரதி. தவிர, சுவர் எங்கும் பாரதியின் அரிய படங்கள். கூடவே, “இதுவரை பாரதியாரின் 5 புகைப்படங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அவற்றில் மூன்று வகையான தோற்றத்தில் உள்ளார்” என்பது போன்ற சிறுசிறு குறிப்புகள். ஒரு அலமாரியில் பாரதியின் எல்லாப் படைப்புகளும். ஒரு அலமாரியில் சலுகை விலையில் ‘பாரதி கவிதைகள்’. ஒரு அலமாரியில் விலையில்லாப் புத்தகங்கள். விரும்புவோர் தாம் படித்த புத்தகங்களை இங்கே அளிக்கிறார்கள்; விரும்புவோர் அவற்றை எடுத்துச்செல்கிறார்கள். சுவரில் ஒரு இடத்தில் எழுதியிருந்தது, “இங்கு வீட்டு முறையிலேயே சமைக்கிறோம். அஜினோமோட்டோ, சோடா உப்பு, பாமாயில், டால்டா சேர்ப்பது இல்லை. வயிற்றுக்கு எந்தப் பழுதும் நேராது; மனதாரச் சாப்பிடுங்கள்.” ஒரு இடத்தில் எழுதியிருந்தது: “நாம் தோசையில் மேல் மாவு சேர்ப்பதில்லை.”

உணவின் சுவையில் மட்டும் அல்ல; தரத்திலும் தனித்துவம் தெரிந்தது. இப்படிதான் ‘பாரதி மெஸ்’ கண்ணன் அறிமுகமானார்.


“படிக்கிற காலத்துல உண்டானது பாரதிப் பித்து. பாரதியோட கவிதைகள் வெறும் வார்த்தைகள் இல்ல; அதுல சத்தியம் இருக்கு. உண்மையைக் கட்டிக்கிட்டு போராடின ஒரு போராளியோட வாழ்க்கை இருக்கு. நாம என்ன வேலைக்குப் போனாலும் சரி, சமூகத்துக்குப் பிரயோஜனமான ஒரு வாழ்க்கையை வாழணும்கிற ஒரு குறிக்கோளை எனக்குள்ள விதைச்சது பாரதி. படிச்சு முடிச்ச உடனே பத்திரிகைல வேலை கிடைச்சுது. 10 வருஷம். பெரிய நாளிதழ் ஒண்ணுல ஆசிரிய இலாகாவுல இருந்தேன். குடும்பச் சூழல் பத்திரிகை வேலையைக் காவு கேட்டுச்சு. ஊரு, நேரங்காலம் பாக்காம ஓடுன வேலையை விட்டேன். பொழைப்புக்கு என்ன பண்றதுன்னு யோசிச்சப்ப எழுத்தைத் தாண்டி எனக்கு ஆர்வமும் அனுபவமும் இருந்த துறை உணவு. ரொம்ப ரசிச்சு சாப்பிடுறவன் நான். ருசிக்க சமைக்கவும் தெரியும். சின்ன வயசுல அம்மாக்கிட்ட கத்துக்கிட்டது.

திருவல்லிக்கேணியைப் பத்தி உங்களுக்குத் தெரியும். பொழைப்புக்காக ஒண்டவர கூட்டம் சென்னையில முதல்ல தேர்ந்தெடுக்குற இடம் இது. நல்ல சாப்பாட்டுக்காக அவங்க படுற பாட்டை நானும் இங்கெ வந்த புதுசுல கொஞ்ச காலம் அனுபவிச்சிருக்கேன். ஏன் கட்டுப்படியாகக்கூடிய காசில நாம அவங்களுக்கு ஒரு நல்ல சாப்பாடு கொடுக்கக் கூடாதுங்குற கேள்வி ஒரு நாள் எழுந்தப்போதான் ‘பாரதி மெஸ்’ யோசனை வந்துச்சு. இன்னைக்கு உணவகம்கிறது பெரும்பாலும் காசைப் பிரதானமா கொண்டதா மாறிடுச்சு. அதுக்காக என்ன வேணும்னாலும் செய்யலாம்னும் ஆயிடுச்சு. யோசிச்சுப்பாருங்க, உடம்பு சரியில்லாம ஆஸ்பத்திரியில இருக்குற ஒரு குழந்தைக்கு சோடா உப்பு கலக்காத நல்ல இட்லி தேடுனா, இன்னைக்கெல்லாம் அது எவ்வளவு அரிதாப் போயிடுச்சு! ஊழல்னா எங்கே நடந்தாலும் ஊழல்தானே!


 நான் வாடிக்கையாளர்கிட்டேயிருந்து வாங்குற காசு நம்ம உடம்புல ஒட்டணும்னா, நாம கொடுக்குற சாப்பாடு அவங்க உடம்புல ஒட்டணும்னு நெனைக்கிறேன். ஆனா, வெறும் கனவு மட்டுமே நனவாயிடாதுங்குறதையும் பாரதி நமக்குச் சொல்லிக்கொடுத்துருக்காரே! அடிப்படையையே மாத்தி யோசிக்க வேண்டியிருந்துச்சு. அதாவது, மாஸ்டர்னு இங்கெ ஒருத்தரை வெச்சுக்கவே இல்ல. ஏன்னா, அவங்களுக்கு இந்தத் தொழில் மேல ஏற்கெனவே ஒரு பார்வை இருக்கு. அதை மாத்துறது அவ்வளவு சாமானியம் இல்ல. ஒரு உணவகம்கிறது கூட்டுச் செயல்பாடு. அதனால நம்ம எண்ணத்துக்கு ஏத்தவங்க இருக்குறது ரொம்ப முக்கியம். என் மனைவி புவனேஸ்வரி, என் தம்பி சரவணன், அவரோட மனைவி வைதேகி அப்படிப்பட்டவங்க. முதல்ல இவங்களை இணைச்சுக்கிட்டேன். அடுத்து, உணவகங்கள் சமையல்னா அது ஆண்கள் சமையல்ங்கிறதை மாத்தி முழுக்கப் பெண்களை மையமாக்கினோம். இன்னைக்கு என்கிட்ட 45 பேர் வேலை பண்றாங்க; 30 பேர் பெண்கள்.

எல்லாத்துக்குமே கல்வியும் பயிற்சியும் தேவைப்படுது. இங்க இந்த இடத்தைப் பிடிச்சு முதல் எட்டு மாசம் வெறுமனே சமைச்சுப் பாத்தோம். நல்லதைச் சுவையாகவும் கொடுக்கணும்னா கொஞ்சம் மெனக்கெட்டாதான் ஆகும். உதாரணமா, தோசையை இழுத்து எடுக்க வசதியா எல்லா உணவகங்களேயும் மாவுல மைதாவைக் கொஞ்சம் மேல் மாவா பயன்படுத்துவாங்க. இது வயித்துக்குக் கெடுதி. நாங்க அந்தப் பதமும் வேணும்; மைதாவையும் தவிர்க்கணும்னு சோதிச்சப்ப மாவுல கொஞ்சம் வெந்தயத்தையும் அவலையும் சேர்த்து அரைச்சப்போ அந்தப் பதம் கெடைச்சது. இப்படி நிறையக் கண்டுபிடிச்சோம். ஊழியர்கள்கிட்டே சீரான ஒழுக்கத்தைக் கொண்டுவராம தரத்தைப் பராமரிக்க முடியாது. அதுக்கு, அவங்களோட கண்ணியமான வாழ்க்கைக்கும் நாம பொறுப்புங்கிறதை அவங்களுக்கு உணர்த்தினோம். இங்கெ ‘உடல் சுத்தம்; உடை சுத்தம்; உள்ளச் சுத்தம்’னு ஊழியர்களுக்கான ஒரு மந்திரமே உண்டு. இவை மூணும் நம்மைச் சுற்றியுள்ளவர்கள்கிட்ட நம்ம மதிப்பை உணர்த்தும்; நம்ம வாழ்க்கையையும் உயர்த்தும்கிறதே அர்த்தம்.

நல்ல சம்பளம், சலுகைகள்ங்கிறதைத் தாண்டி, சரியான நேரத்துக்கு வர்றதை ஊக்குவிக்குறதுக்காக ஒவ்வொரு நாளும் 25 ரூபா; சுத்தமான உடையில வர்றதை ஊக்குவிக்குறதுக்காக ஒவ்வொரு நாளும் 25 ரூபான்னு ஊக்கத்தொகைகள்லாம்கூட உண்டு. இதுல பணம் ஒரு விஷயம் இல்ல; அவங்களோட நல்லியல்பை நாம மதிக்கிறோம்கிறதுக்கு ஒரு அடையாள வெகுமதி. அவ்ளோதான். ஊழியர்கள்கிட்ட இதெல்லாம் பெரிய மாற்றங்களை உருவாக்கியிருக்கு. இங்கெ வேலை பண்றவங்கக்கிட்ட லட்ச ரூபாயைக் கொடுத்து அனுப்பிட்டு, கணக்குக் கேட்காம இருக்கலாம். காரணம், அவங்ககிட்ட வளர்ந்துருக்குற சுயமரியாதை; தொழில் மீதான மதிப்பு. ‘உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேன்’னு திருமூலர் எழுதியிருக்கார்னா, நாலு பேருக்குச் சமைச்சுப் பரிமாறுற நாம உயிர்களோட சம்பந்தப்பட்டிருக்கோம், இல்லையா!

இங்கே சாப்பாடு, டிபன் எல்லாத்துலேயும் வீட்டுச் சேர்க்கை உண்டு. அதாவது, நம்ம வீடுகள்ல வாரத்துக்கு ஒரு நாளாச்சும் இந்தக் கீரை சேர்க்கணும்; இந்தக் காய் சேர்க்கணும்னு அக்கறையோட எல்லாத்தையும் சேர்ப்பாங்கள்ல, அப்படி. ஒரு உதாரணம், டிபன்கூட கொடுக்குற நெல்லிக்காய் சட்னி. அதே மாதிரி மதியச் சாப்பாட்டோட கூடவே ஊறவைச்சு முளைகட்டின நவதானியக் கலவை ஒரு கிண்ணத்துலேயும் சிறுதானிய சாதம் ஒரு கிண்ணத்துலேயும் கொடுத்துடுவோம். ஒரு நாள் சாமை, ஒரு நாள் தினை, ஒரு நாள் கொள்ளு, ஒரு நாள் கேழ்வரகுன்னு ஒவ்வொரு நாளும் ஒவ்வொண்ணு. அரிசி சாதம், ரெண்டு வகை குழம்பு, கூட்டு, பொறியல், அப்பளம், வடைன்னு வெவ்வேறு ஐட்டங்களோட இதையும் சேர்த்துத் தந்துடுறதால சிறுதானிய உணவையும் விரும்பிச் சாப்பிடுறாங்க. இன்னும் இஞ்சிமல்லி காபி, உளுந்தங்கஞ்சி, களி மசியல்னு நிறையக் கொண்டுவர இருக்கோம். இப்ப நாங்க மட்டும் மாசம் 1.5 டன் சிறுதானியங்களை வாங்குறோம். விவசாயச் சுழல்லேயும் எவ்வளவு மாற்றம் பாருங்க!”

பேசிக்கொண்டேபோன கண்ணனை மறித்துக் கேட்டேன். “சமைப்பதில் உள்ள சந்தோஷம் சரி; எழுதுற வேலையை விட்டுட்டு வந்ததுல வருத்தம் இல்லையா?”

நுழைவாயில் பாரதி படத்துக்கு அருகே அழைத்துச் சென்றவர் அதன் பின்னணியில் எழுதப்பட்டிருந்த கவிதை வரிகளைக் காட்டினார்: “வையகம் காப்பவரேனும் சிறு வாழைப்பழக் கடை வைப்பவரேனும் பொய்யகலத் தொழில் செய்தே பிறர் போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர்!”


ஜனவரி, 2016, ‘தி இந்து’

13 கருத்துகள்:

 1. உண்மை.நல்லதம்பி..தெருவில் சங்க அலுவலகம் வரும்போது வியந்து சாப்பிட்டுள்ளேன்

  பதிலளிநீக்கு
 2. பொய்யகலத் தொழில்.... வாழும் பாரதியைக் கண்டேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 3. ஜெயமோகனின் சோத்து கணக்கு தான் ஞாபகத்திற்கு வருகிறது

  பதிலளிநீக்கு
 4. நன்றி திரு. சமஸ், நேர்மையான மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்று அறியும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 5. நன்றி சமஸ். பாரதி மெஸ்ஸில் உணவு உண்டேன் நன்றாக இருந்தது அது மட்டும் அல்லாமல் பாரதியார் பற்றி சில தகவல்கள் அறிய தகவல் கிடைத்தது.

  பதிலளிநீக்கு
 6. நன்றி சமஸ். பாரதி மெஸ்ஸில் உணவு உண்டேன் நன்றாக இருந்தது அது மட்டும் அல்லாமல் பாரதியார் பற்றி சில தகவல்கள் அறிய தகவல் கிடைத்தது.

  பதிலளிநீக்கு