எல்லோரிடமும் மன்னிப்பு கோருகிறேன்!


புத்தாண்டு நாளுக்குப் பெரிய கவனம் கொடுப்பதில்லை. உட்கார்ந்து யோசிக்கவோ, கொண்டாடித் தீர்க்கவோ என்று நாட்களை ஒதுக்குவதும் இல்லை. ஆனால், பிறந்த நாள், திருமண நாள், புத்தாண்டு நாள் போன்ற தருணங்களைக் கொஞ்சம் யோசிக்க ஒதுக்குவது முக்கியம் என்று தோன்றுகிறது. ஒரே ஓட்டமாய் ஓடிக்கொண்டிருக்கும்போது நம்மைக் கொஞ்சம் திரும்பிப் பார்த்துக்கொள்ள இவையெல்லாமும் ஒரு வாய்ப்புதானே?

எங்கெல்லாம் குறை என்று கவனிக்க உட்காரும்போதுதான் சிக்கல் ஆரம்பிக்கிறது. ஏகப்பட்ட ஓட்டைகள். நம் முகத்தை நாமே அவலட்சணமாக உணர்வது அவலம். ஓட்டைகள் இருக்குமிடம் தெரியாமல் ஓடுவது தவறு என்றால், தெரிந்தும் திருத்திக்கொள்ளாமல் ஓடுவது அயோக்கியத்தனம்.

இப்போது சரிசெய்துகொள்ள ஆரம்பித்திருக்கிறேன். நிறைய. வீட்டில் ஆரம்பித்து அலுவலகம் வரையில். எல்லாவற்றையும் வெளியே சொல்லத் தேவையில்லை என்றாலும், அம்பலத்தில் செய்த தவறுகளுக்கு அம்பலத்திலேயேதானே பரிகாரமும் தேட வேண்டும்?

என்னுடைய வார்த்தைகள் - பேச்சு/எழுத்து இரண்டுமே - சில நேரங்களில் வெறுப்பை உமிழ்ந்திருப்பதை உணர்கிறேன். பொதுவாக, என் பக்கம் நியாயம் இல்லாமல் கோபிக்க மாட்டேன். ஆனால், வெறுப்பை எந்தக் கோபத்தைக் கொண்டும் நியாயப்படுத்தவே முடியாது; கூடாது.

ஒரு வாரத்துக்கு முன்புகூட மூத்த பத்திரிகையாளர் ஜவஹர் ஒரு தவறிலிருந்து காப்பாற்றினார். தமிழக கம்யூனிஸ்ட்டுகளின் தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, “கம்யூனிஸ்ட்டுகள் மாற்றி மாற்றி பல்லக்குத் தூக்குவது சரிதானா?” என்று கேட்டுவிட்டேன். என் வாதங்களில் உள்ள நியாயங்களை ஆமோதித்த அவர், நான் பயன்படுத்திய அந்தக் கடுஞ்சொற்களை மட்டும் சிரித்துக்கொண்டே சுட்டிக்காட்டினார். “பல்லக்குத் தூக்குவது சரியா என்பதை, தூக்கிச் சுமப்பது சரியா என்றும் கேட்கலாம் இல்லையா?” என்றார். உடனே மாற்றிக்கொண்டேன்; அதன் பிறகு பேச்சு அதைக் கடந்து எங்கெங்கோ சென்று கலந்துவிட்டது என்றாலும், அவர் சுட்டிக்காட்டிய விஷயம் தீயை மிதித்துவிட்டு வந்ததுபோல இருந்தது. என்னுடைய ஆசிரியர் அசோகனும் அடிக்கடிச் சொல்வார், “எழுத்தில் கோபம் எல்லாம் அப்படியே இருக்கட்டும்; ஆனால், கடுஞ்சொல் வேண்டுமா?”

சரிதான். நம் பக்கம் உள்ள எல்லா நியாயங்களையும் நாசப்படுத்த கோபத்தில் நாம் வெளிப்படுத்தும் ஒரு வார்த்தை போதுமானதாக இருக்கிறதே? தவிர, யாரிடம் நாம் உரையாட வேண்டுமோ அவர்களைக் காயப்படுத்திப்படுத்திவிட்டு, அப்புறம் என்ன பேசி என்ன பலன்? அவர்கள் எதையும் காதில் வாங்கப்போவதில்லை. கோபமும் வெறுப்பும்தான் மிச்சம்!

நான் எழுதுவதன் நோக்கம் நிச்சயம் என் புஜபலத்தைக் காட்ட அல்ல; பசித்திருப்பவரைப் பற்றி எழுதினால், அவருக்கு எந்த வகையிலேனும் நம்மால் உணவுக் கிடைக்க உதவ முடியுமா என்பதே என் எழுத்தின் அடிப்படை நோக்கம். அதுதான் நோக்கம் என்றால், இங்கே கடுஞ்சொல்லுக்கு என்ன தேவை? கட்டுரைகளில்தான் என்றில்லை; ஃபேஸ்புக் பதிவுகளிலும்கூட இத்தவறைச் செய்திருக்கிறேன். சில நாட்கள் முன்புகூட. தேடினால் மின்னஞ்சல்களிலும் பேச்சிலும்கூட நிறையத் தவறுகள் கிடைக்கக் கூடும்.

நாம் சார்ந்திருப்பது எத்தனை சின்ன வட்டம்! இந்த உறவு வட்டத்தில் உள்ளவர்களிடம்கூடக் காயப்படுத்தாமல் பேச, எழுத முடியவில்லை என்றால், பேச/எழுத வருவதில் என்ன பிரயோஜனம்?

அடிப்படையில் நான் எவர் மீதும் பகை அல்லது வெறுப்பைச் சுமந்து அலைபவன் அல்ல. மேலும், எல்லாவற்றிலுமே நம் கண்ணுக்குத் தெரிவது மட்டுமே உண்மை இல்லை என்பதையும் உணர்ந்தே இருக்கிறேன். ஆனால், இந்தக் கோபமும் பொறுப்பற்ற அவசரத்தனமும் உறவுகளை எவ்வளவு நாசப்படுத்திவிட்டிருக்கிறது!

எல்லாவற்றுக்கும் சேர்த்து இன்று மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனி ஒருநாளும் என் பேச்சில்/எழுத்தில் அவசரத்தனத்துக்கும் வெறுப்புக்கும் இடம் இருக்காது.

என்னால் காயப்படுத்தப்பட்ட ஒவ்வொருவரும் என்னுடைய இந்தக் கோரிக்கையை அந்தரங்க மன்னிப்பாகக் கருத வேண்டுகிறேன்.

அன்புடன்,
சமஸ்.

14 கருத்துகள்:

  1. மன்னிப்பு இந்த வார்த்தை எவ்வளவு பெரிய ஆயுதம், சார் எனது முன்கோபத்தால் பலரை இழந்துள்ளேன் ஆனால் மன்னிப்பு கேட்க மனம் ஒத்துக்கொள்வது கிடையாது அது எவ்வளவு பெரிய தவறு என்பது உங்களது இந்த வார்த்தைமூலம்(நான் எவர் மீதும் பகை அல்லது வெறுப்பைச் சுமந்து அலைபவன் அல்ல. மேலும், எல்லாவற்றிலுமே நம் கண்ணுக்குத் தெரிவது மட்டுமே உண்மை இல்லை என்பதையும் உணர்ந்தே இருக்கிறேன். ஆனால், இந்தக் கோபமும் பொறுப்பற்ற அவசரத்தனமும் உறவுகளை எவ்வளவு நாசப்படுத்திவிட்டிருக்கிறது) அறிந்துகொண்டேன் இன்றுமுதல் நான் எனது கோபத்தை கூரைக்க முயல்வேன் யாரையும் காயப்படுத்தமாட்டேன்

    பதிலளிநீக்கு
  2. எத்தனை பேருக்கு தோன்றும் இந்த வார்த்தையை சொல்ல? யு ஆர் கிரேட் அய்யா...

    பதிலளிநீக்கு
  3. போன வாரம் ஞாநி பற்றிய பதிவில் நீங்கள் குறிப்பிட்டு இருந்த வாசகம் இது "ஒருகாலத்தில் ஞானி கலைஞரை பெரிய தலைவராக நம்பி" என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.அது என்ன கலைஞரை பெரிய தலைவராக நம்பி ..? அப்போது கலைஞர் பெரிய தலைவர் கிடையாதா ? அதாவது ஒருகாலத்தில் ஞானி கலைஞர் மீது பற்று கொண்டு என்று எழுதியிருக்கலாமே? இப்படி நீங்கள் குறிப்பிடுவதை பாரத்தால் அவர் பெரிய தலைவர் என்று நம்பி இணைந்து இருந்தார் என்பதை போலவும் பின்பு அவர் பெரிய தலைவர் அல்ல சிறிய தலைவர் என்று அறிந்து விலகியது போல இருக்கிறது உங்கள் பதிவு

    பதிலளிநீக்கு
  4. அருமை.

    உங்கள் மீதான்ா மதிப்பு இன்னமும் கூடுகிறது

    பதிலளிநீக்கு
  5. நெருப்பை போல் நேர்மையானவர் தான் இப்படி
    எழுத முடியும் அந்த நேர்மை உங்களிடம் இருக்கிறது சகோதரரே. இந்த பதிவை பதிவு செய்து வைத்துள்ளேன் என் வார்த்தை என்னையை மீறி வரும்போது இந்த கட்டுரையை படித்து என்னை சரி பண்ணிக்கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. தன்னையே அறிதல்
    மனிதனின் உச்சம் அல்லவா

    பதிலளிநீக்கு
  7. சமஸ்,

    அதுபோல சில நாட்களுக்கு முன் இந்த கட்டுரையை வாசித்த பின், மனதில் நெருடிக்கொண்டிருந்த விஷயம் ஓன்று.

    http://writersamas.blogspot.in/2015/12/blog-post_15.html

    இதுபோல மேலொட்டமாக 'அரசியல்' என்று சொல்வதை தாண்டி. பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் சொல்லும்போது மட்டுமே ஓரு கட்டுரை முழுமை அடைவதாக நினைகிறேன்.

    இந்த விஷயத்தில் தீர்வுகள் பல - உதாரணமாக தண்ணீரை குறைவாக எடுத்துக் கொள்ளும் கழிப்பறை (toilet bowls). ஏன் தானியங்கியாக மிக சொற்பமான அளவில் நீரை செலவு செய்வது என பல வகை உண்டு. இங்கிருந்து நாம் 100 வருடங்களுக்கு கண்டிப்பாக முன் போக இயலாது. நீரே இல்லாமல் சுகாதாரமாக எப்படி இதை சாத்தியபடுத்தலாம்,இப்படியான அடுத்த கட்டத்துக்கு செல்வம் தீர்வுகளை பற்றி சிந்திப்பதே சரியாக இருக்கும்.

    கண்டிப்பாக தவறாக எடுத்துக் கொள்ளமாட்டீர்கள் என நினைக்கிறேன்.

    -ஆரூர் பாஸ்கர்.

    பதிலளிநீக்கு
  8. மிகவும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய பதிவு. நீங்கள், பாரதி தம்பி, திருமாவேலன் முதலானோரைப் பார்த்துப் பார்த்துப் படித்துத்தான் நான் எழுதக் கற்று வருகிறேன். நான் முதன் முதலில் எழுதத் தொடங்கியபொழுது இருந்த நடைக்கும், இப்பொழுது இருக்கும் நடைக்கும் உள்ள வேறுபாடு மிக மிகப் பெரிது. தொடக்கத்தில், கூட இருப்பவர்களே "என்ன இது, ஒரே விதயத்தை மீண்டும் மீண்டும் சுற்றிச் சுற்றி எழுதிக் கொண்டிருக்கிறாயே" என்று கேட்டது போய் இன்று, உடன் இருப்பவர்கள் முதல், யார் என்னவெனவே தெரியாத மூன்றாம் மனிதர்கள் வரை எல்லாரும் "நன்றாக இருக்கிறது... உன் எழுத்து வீச்சு அபாரம்... அது, இது..." எனவெல்லாம் பாராட்டும் அளவுக்கு வளர்ந்திருக்கிறேன் என்றால் அதற்கு உங்களைப் போன்றவர்கள்தாம் காரணம். ஆனால், அண்மைக்காலமாக, எழுத்தில் இன்னும் கொஞ்சம் காரம் சேர்க்கலாமோ என நான் சிந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் நான் முன்னோடியாக நினைக்கும் ஒருவரிடமிருந்து இப்படி ஒரு பதிவு. இஃது எனக்கு அடிக்கப்பட்ட எச்சரிக்கை மணியாய் உணர்கிறேன். சிந்திப்பேன். நன்றி!

    பதிலளிநீக்கு
  9. கடுஞ்சொற்கள் வேண்டாம் என்ற உங்கள் முடிவு வரவேற்கத்தக்கது.
    மற்றபடி, நாம் அனைவரும் மனிதர்களே. வருத்தம் வேண்டாம்.

    பதிலளிநீக்கு
  10. I was worrying on seeing some of the titles of your interviews.
    I feel happy like a mother.
    R.Venugopal

    பதிலளிநீக்கு

  11. அறிவழகன் என்ற சாருநிவேதிதாவை, அவர் செய்திருக்கும் அத்தனை முறையற்ற அயோக்கியத்தனங்களை தெரிந்தும், தேவைக்கும் அதிகமாக முன்னிலைப் படுத்துவதனை உணர்ந்து எப்போது மன்னிப்பு கேட்கப் போகின்றீர்கள் சமஸ்?

    பதிலளிநீக்கு
  12. தங்களது இப்பதிவால் எங்களால் மேலும் ஈர்க்கப்பட்டுவிட்டீர்கள். சுயமதிப்பீடு நம்மை என்றென்றும் மேம்படுத்தும் என்பதை என் அனுபவத்தில் உணர்ந்துள்ளேன். அவ்வாறான தங்களது மதிப்பீடே தங்களை திருத்திக்கொள்ள உதவியுள்ளது என்று நம்புகிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு