ஜனநாயகம் யார் கையில்?


ஜெயலலிதாவின் ஆரம்ப கால அரசியல் புகைப்படம் ஒன்று என்னிடம் உண்டு. ஜீப்பின் முன்புறம் உள்ள பேனட் மீது நின்றுகொண்டு மக்கள் மத்தியில் அவர் ஆவேசமாகப் பேசும் படம் அது. அங்கிருந்து ஒவ்வொரு தேர்தலிலும் அவர் பேசும் படங்களை வரிசையாக நகர்த்திக்கொண்டே வந்தால், அவரது தேர்தல் மேடைகளும் வாகனங்களும் அடுத்துவரும் காலத்தை முன்கூட்டிச் சொல்லும் குறியீடுகளாகத் தோன்றுகின்றன. காலந்தோறும் அவை மாறிவந்திருக்கின்றன. மக்களிடமிருந்து விலகிவந்திருக்கின்றன. அந்த மேடைகள் வெளிப்படுத்தும் மேலாதிக்க உணர்வையும் அந்நியமாதலையும் அடுத்து வரும் காலகட்டத்தில் மேலும் மேலும் அதிகரித்திருக்கின்றன ஜெயலலிதாவின் நிர்வாகச் செயல்பாடுகள்.

நாட்டிலேயே மக்களால் எளிதில் அணுக முடியாத முதல்வராகப் பெயர் பெற்ற ஜெயலலிதா, இந்தத் தேர்தல் காலத்திலும்கூட நாட்டு மக்களின் சூழலை நேரடியாகத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. சாலை வழிப் பிரச்சாரப் பயணம் என்பது வெவ்வேறு பகுதி மக்களை அவர்களுடைய நேரடி வாழ்க்கைப் பின்னணியில் சந்திப்பதற்கான வாய்ப்பு மட்டும் அல்ல; ஊர் சூழல் எப்படியிருக்கிறது, மக்களின் வாழ்க்கைப்பாடு எப்படியிருக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்கான ஒரு வாய்ப்பும்கூட. தன்னுடைய பெரும்பான்மைப் பயணங்களை ஹெலிகாப்டர் வழியாகவே திட்டமிட்டிருக்கும் ஜெயலலிதா இப்போதும்கூட உண்மையான உலகத்துக்கு முகங்கொடுக்கத் தயாராக இல்லை.

இந்தத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு வடிவமைக்கப்பட்டிருக்கும் – கீழே வேட்பாளர்கள்; மேலே அவர் மட்டும் என்பதான – மேடை முடியாட்சிக் கால, சர்வாதிகார மனோபாவத்தின் அப்பட்டமான வெளிப்பாடு. தமிழகம் தவிர வேறெங்கும் மக்களாட்சி நடக்கும் ஓரிடத்தில் இப்படியான ஒரு மேடையமைப்பில் ஒரு மாநிலத்தின் முதல்வரோ, பிரதான கட்சியின் தலைவரோ உட்கார முடியுமா என்று கற்பனையிலும் நினைக்க முடியவில்லை.

ஏப்ரல் 11 விருத்தாசலம் நிகழ்வு தொடர்பாக அந்த நிகழ்ச்சிக்குச் சென்றுவந்தவர்களிடம் பேசும்போது நடந்தது ஒரு விபத்தாகத் தோன்றவில்லை. நம்முடைய அரசியல்வாதிகளின் ஆணவத்தினாலும் அதன் தொடர்ச்சியாக அதிகார வர்க்கத்தினரிடமும் கீழேயுள்ள நிர்வாகக் கட்டமைப்பினரிடம் ஊடுருவியிருக்கும் அலட்சியத்தாலும் நடத்தப்பட்ட கொலைகளாகவே தோன்றுகின்றன.


அக்கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அதிமுக வேட்பாளர்கள் 13 பேருக்கும் தலா 20 ஆயிரம் பேர் எனக் கணக்கிட்டு  2.6 லட்சம் பேரை அந்தத் திடலில் திரட்டத் திட்டமிட்டிருக்கிறார்கள். “ஆளுக்கு முந்நூறு ரூவா, சாப்பாட்டுப் பொட்டலம் கொடுத்தாங்கய்யா. வண்டி வெச்சிக் கூட்டிட்டுப் போனாங்க. காலையில எட்டு மணிக்கே வீட்டுலேர்ந்து பொறப்படச் சொல்லிட்டாங்க. அங்கெ கொண்டுபோய் உட்காரவைக்கும்போது மணி பதினொண்ணு இருக்கும். உட்கார்ந்த கொஞ்ச நேரத்துலேயே வெயில் சூடு மண்டையப் பொளக்க ஆரம்பிச்சுட்டு. காலுக்கு வேற செருப்பு இல்லாததால, காலைத் தூக்கி வச்சிக்கிட்டு நாற்காலியில உட்கார்ந்துருந்தோம். நேரமாக நேரமாக தண்ணித் தவிப்பு தாங்கலை. ‘அம்மா இதோ வந்துட்டாங்க, அதோ வந்துட்டாங்க’ன்னு சொல்லியே அந்தாண்ட இந்தாண்ட அசையவிடலை. மூணு மணிக்கு அம்மா வந்தாங்க. ‘தலை சுத்துது; கொஞ்சோண்டு தண்ணி கொடுங்கய்யா’ன்னோம். ‘அம்மா பேசி முடிக்கிறவரைக்கும் அசையக் கூடாது’ன்னுட்டாங்க. அதுக்கு மேல தாங்காம வரிசையா சரிஞ்சு விழ ஆரம்பிச்சுட்டாங்க” என்கிறார்கள்.

இப்படி 19 பேர் மயங்கி விழுந்து மருத்துவமனைக்குத் தூக்கிச்செல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் இறந்தவர்கள் என்று அரசு சொல்லும் கணக்கு இருவர். உள்ளூர் மக்கள் மேலும், இருவர் பெயர்களைச் சொல்லி, “அப்படியென்றால், அவர்கள் என்னவானார்கள்?” என்று கேட்கிறார்கள். இவ்வளவும் ஜெயலலிதா பேசிக்கொண்டிருந்தபோது, அவர் பார்க்கக் கூடிய 30 அடி தொலைவுக்குள் நடந்திருக்கிறது.

இத்தகைய சம்பவங்கள், உயிரிழப்புகள் ஜெயலலிதாவுக்கும் அதிமுகவினருக்கும் புதிதல்ல. சமீபத்திய 2014 பொதுத் தேர்தலின்போதுகூட இதே கடலூர் மாவட்டத்தில், சிதம்பரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் இப்படி ஒரு தொண்டர் உயிரிழந்தார். அரசியல்வாதிகளைப் பொறுத்த அளவில் உயிர்களுக்கு விலை உண்டு. தேர்தல் முடிந்ததும் நிவாரண நிதி வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் ஜெயலலிதா. மேலும், விருத்தாச்சலம் கூட்டத்துக்கு வந்து இறந்தவர்கள் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததாகச் சொல்லியிருக்கிறார். தன்னுடைய அடுத்தடுத்த பொதுக்கூட்டத் திட்டங்களிலும் அவர் பெரிய மாற்றங்களைச் செய்யவில்லை.

அருப்புக்கோட்டைப் பொதுக்கூட்டத்தில் கால்களிலும் தலைகளிலும் பாலிதீன் பைகளைக் கட்டிக்கொண்டு கொளுத்தும் வெயிலில் நான்கைந்து மணி நேரம் உட்காரவைக்கப்பட்டிருந்த வயதான பெண்களைப் பார்த்தபோது, விருத்தாச்சலம் மரணங்களை இதற்கு மேல் கொச்சைப்படுத்த முடியுமா என்று தோன்றியது. ஹெலிகாப்டரில் வந்திறங்கி, சுற்றிலும் குளிர்சாதனங்கள் நிறுவப்பட்ட ஒரு மேடையில் வசதியாக உட்கார்ந்துகொண்டு, கொளுத்தும் வெயிலில் வாடிக்கொண்டிருக்கும் மக்களிடத்திலும் தன்னைக் காட்டிலும் வயதானவர்களிடத்திலும் “நான் தவ வாழ்க்கை வாழ்கிறேன்; மக்களால் நான், மக்களுக்காக நான்; உங்களால் நான், உங்களுக்காக நான்” என்று ஒருவர் நாடக பாணி வசனம் பேசும்போது, வறிய மக்களின் வாழ்க்கையைப் பரிகசிப்பதுபோல இருக்கிறது.

2011 சட்டப்பேரவைத் தேர்தலில், தான் தேர்ந்தெடுத்த வேட்பாளர்களில் குறைந்தது 100 பேரை இந்த முறை வேட்பாளர் பட்டியலிலிருந்து நீக்கியிருக்கியிருக்கிறார் ஜெயலலிதா. இந்தத் தேர்தலுக்கான வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருப்பவர்களில், இதுவரை 15 தொகுதிகளில் ஆட்களை மாற்றியிருக்கிறார். தனக்கு எது தேவை, எது நல்லதென்றே அவருக்குத் தெரிந்திருக்கிறதா என்று தெரியவில்லை. “உங்களுக்கு எது தேவை, எது நல்லதென்று எனக்குத்தான் தெரியும்” என்று மக்களைப் பார்த்துப் பேசுகிறார் ஜெயலலிதா.


தான் விரும்பும் ஒரு மேடை. தான் விரும்பும் ஒரு கூட்டம். தான் விரும்பும் ஒரு பேச்சு. தன் பேச்சு மட்டும் கேட்கும் உலகம் என்ற நம்பிக்கை. அந்த உலகில் யாருக்கும் வாய் கிடையாது; உணர்வுகள் கிடையாது. அந்த மனிதர்கள் யாவும் காதுகளாக மட்டுமே படைக்கப்பட்டவர்கள். வெறும் காதுகள். ஆங்கிலத்தில் ‘மெகலோமேனியா’ என்றொரு வார்த்தை உண்டு. தமிழில் ‘சர்வமும்நானே மனோபாவம்’ என்று அதை மொழியெர்க்கலாம். சுயமோகம், பாதுகாப்புவுணர்வின்மையின் உச்சத்தில் வெளிப்படும் மனோபாவம் இது. உள்ளுக்கும் வெளியிலுமாகத் தன்னைத்தானே போற்ற ஆரம்பித்து, பின் ஏனையோர் மீதும் அதே உணர்வை ஏவிவிடும் மனப்போக்கு. காணக்கிடைக்கும் காட்சிகள் அப்பட்டமாக அதைச் சொல்கின்றன.


சமீபத்தில் கோழிக்கோடு பக்கத்திலுள்ள  நடைக்காவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றிருக்கிறார் கேரள முதல்வர் உம்மன் சாண்டி. மேடையை நோக்கி நடந்த அவரை, ‘உம்மன் சாண்டி’ என்று சத்தமாகப் பெயரிட்டுக் கூப்பிட்டிருக்கிறார் ஒரு பார்வையாளர். உடன் வந்தவர்களுக்கு ஒரே திகைப்பு. கூப்பிட்ட மனுஷி ஷிவானிக்கு வயது 7; இரண்டாம் வகுப்பு மாணவி.

உம்மன் சாண்டி வாஞ்சையாக, அவளை அருகில் அழைத்து, குனிந்து “என்னம்மா?” என்று கேட்டிருக்கிறார். ‘’என்கூடப் படிக்கும் மாணவன் அமல் கிருஷ்ணனின் அம்மா, அப்பா இரண்டு பேரும் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள். அவர்கள் குடியிருக்க ஒரு வீடு வேண்டும்” என்று சொல்லியிருக்கிறாள். “நடவடிக்கை எடுக்கிறேன் அம்மணி” என்ற உம்மன் சாண்டி உடனே இதுபற்றி விசாரிக்கச் சொல்லியிருக்கிறார். கையோடு அந்தக் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் பணமும் ஒதுக்கியிருக்கிறார்.

இந்த மாதம் புனித வெள்ளியன்று தேவாலயத்துக்குப் போனார் உம்மன் சாண்டி. தேவாலயத்தில் ஒரே கூட்டம். உள்ளே இடம் இல்லை. மனிதருக்கு என்ன அசதியோ, வாசல் படியிலேயே உட்கார்ந்துவிட்டார். செருப்புகள் கிடக்குமிடத்தில் ஒரு மாநிலத்தின் முதல்வர் உட்கார்ந்திருந்த புகைப்படத்தைப் பார்த்தபோது அது வாசல் படியாகத் தெரியவில்லை. மக்கள் மனம் என்னும் சிம்மாசனமாகத் தெரிந்தது.

ஒரு நாட்டில் ஜனநாயகத்தை வளர்த்தெடுப்பது உம்மன் சாண்டிகள் மட்டும் அல்ல; ஷிவானிகளுக்கும் அதில் முக்கியப் பங்கு இருக்கிறது. ஜனநாயகம் என்றால், என்னவென்பதை ஜெயலலிதாக்கள் மறக்கும்போது அதை உணர்த்த வேண்டிய பொறுப்பு ஷிவானிகள் கையிலேயே இருக்கிறது!


ஏப்ரல், 2016, ‘தி இந்து’

19 கருத்துகள்:

  1. Nice and bold article.

    But after " avar varalatril irrukirar" article, I have a different eye on this too;-)

    பதிலளிநீக்கு
  2. ஆண்டான் அடிமையாக நம்மை வரித்துக்கொண்டு விலை போவதில் ஒரு குற்றமுமுமில்லையா ?

    பதிலளிநீக்கு
  3. Seruppal adipadhu maadhiri solvadhai vitu, sellamaga kutti irukkiraar...

    பதிலளிநீக்கு
  4. Lots of love to you Samas for this bold and well presented article. It not only talks about the problem but proposes a solution too.
    ஆனால், ஷிவானிகளின் மீதும் வழக்குகள் பாயும் மாநிலமல்லவா நமது!

    பதிலளிநீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. மேலும் பல ஷிவானிகள் இதோ இங்கே உருவாக்கப் படுகிறார்கள். தங்கள் வார்டு அளவிலான அரசு ஊழியர்களை அரசாங்கத்தை இயக்குவிக்கிறார்கள்.
    அடுத்த தலைமுறையை நேர்மையானவர்களாக சமுதாய ஈடுபாடு மிக்கவர்களாக மாற்றும் முயற்சி இதோ இங்கே.
    https://www.youtube.com/watch?v=3LWvBMwi-e4
    கோவையின் ஒரு பள்ளிக் குழந்தைகள் சென்ற வருடம் இந்த அடிப்படையில் மேற்கொண்ட திட்டப் பணியின் விளைவு, VKK மேனன் சாலை சீர் செய்யப் பட்டது.
    https://www.youtube.com/watch?v=JTUOCR__FK4
    https://www.scribd.com/doc/298234340/Bala-Janagraha-Coimbatore
    இதை தமிழ் நாடெங்கும் மக்கள் பாதை எடுத்துச் செல்ல வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  7. கடுமையான வார்த்தைகளால், கட்டுரை எழுதப்பட்டுள்ளது! புரிய வேண்டிய நபர்களுக்கு புரிந்தால் சரி!!

    பதிலளிநீக்கு
  8. கடுமையான வார்த்தைகளால், கட்டுரை எழுதப்பட்டுள்ளது! புரிய வேண்டிய நபர்களுக்கு புரிந்தால் சரி!!

    பதிலளிநீக்கு
  9. Arumai. Ungal thairiyathuku valthukal. Pakirungal padipom nanbare.

    பதிலளிநீக்கு
  10. Arumai. Ungal thairiyathuku valthukal. Pakirungal padipom nanbare.

    பதிலளிநீக்கு
  11. நேர்மையான, அழுத்தமான பதிவு.

    பதிலளிநீக்கு
  12. சரியான நேரத்தில் சரியான விசயத்தை சுட்டி காட்டியுள்ளது. நல்ல உதாரணமும் அளித்துள்ளது அருமை.

    பதிலளிநீக்கு
  13. உம்மன்சாண்டியின் எளிமையை வடிவமைக்கிறது யாருடைய அரசியல்?
    தமிழகத்தில் ஜனநாயகம் விந்தையான தோற்றவடிவங்களை நிகழ்த்துவதற்கு செல்வி.ஜெயலலிதாவே முழுப்பொறுப்பு என்பதுபோன்ற தொனியில் ‘ஜனநாயகம் யார் கையில்” என்று ஒரு கட்டுரையை திரு.சமஸ் அவர்கள் எழுதியிருக்கிறார். ஒரு மாநிலத்தின் ஜனநாயகம் எப்படி அமையவேண்டும் என்பதை தீர்மானிப்பது அந்த மாநிலத்தின் வலுவான நிலையிலிருக்கும் குறிப்பிட்ட ஒரே ஒரு கட்சியாக இருக்கமுடியாது. அதன் பிரதான எதிர்கட்சியும் சேர்ந்து தான் அதை தீர்மானிக்கிறது. அந்த வகையில் திரு.கருணாநிதிக்கு தமிழக ஜனநாயக செயல்பாடுகளில் நேர்மறையான குணாம்சங்களிலும் எதிர்மறையாக முன்னெடுக்கின்ற அவலங்களிலும் மிக முக்கிய பங்கு உண்டு..
    வட்டசெயலார்கள் வண்டுமுருகேசன்கள், அவர்களின் அரசியல் லூட்டிகள், வாகன பவனிகள், அன்னதானம் கும்பாபிசேகம் என்று அனைத்திலும் வலியசென்று முன்னிலை வகிப்பது, அடைமொழிகளின் வாந்திகளாலான தலைவர் புகழ் பாடும் விளம்பரங்கள், வளர்சிப்பணிகளில் மாமூல் ஆகவே மாறிவிட்ட லஞ்சம் பெறுவது இத்யாதி அடிமட்டத்தில் இருந்தே ஜனநாயகம் விந்தையாகத்தான் இருக்கிறது. இது மேலே செல்ல செல்ல அதன் அடர்த்தி அதிகரிக்கத்தானே செய்யும். இதில் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா கட்சிகளுக்கு என்ன வித்தியாசம் இருக்கிறது.
    செல்வி.ஜெயலலிதாவின் அரசியல் மற்றும் ஜனநாயக பண்புகளை தீர்மானிப்பதில் திரு.கருணாநிதியின் அரசியல் மற்றும் ஜனநாயக குணாம்சங்கள் தாக்கம் ஏற்ப்படுத்தும். அது போலவே திரு.கருணாநிதியின் அரசியல் மற்றும் ஜனநாயக் விழுமியங்களை தீர்மானிப்பதில் செல்வி.ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் தாக்கம் ஏற்படுத்தும். பரஸ்பர பூரகம்! மாற்று என்று ஓன்று உருவானால் நுளையிலையே கிள்ளிவிடுவார்கள் தமிழக அறிவுசீவிகளில் வலுவானவர்கள்.
    ஆகையால்த்தானே கம்யூனிஸ்ட்டுகள் அரசியல் செல்வாக்கு பெற்ற மாநிலங்களிருந்து மட்டுமே, எளிமையான, மக்களோடு மக்களாக வாழுகிற அல்லது அப்படி தோற்றமளிக்ககூடிய காங்கிரஸ்காரர்கள் உருவாகிறார்கள். திருவாளர்கள் உம்மன்சாண்டி, மம்தா பானர்ஜி, A.K.ஆண்டனி போன்ற காங்கிரஸ்காரர்கள் கம்யூனிஸ்ட்டுகள் செல்வாக்கு செலுத்தாத மாநிலங்களிலிருந்து ஏன் உருவாகவில்லை? பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் காங்கிரஸின் முதல்வர் கோடி ரூபாய் மதிப்புள்ள கைக்கடிகாரம் அணிந்தால் பா.ஜ.கா.வின் தலைவர் திரு.எடியுரப்பா கோடி ரூபாய் மதிப்புள்ள மகிழுந்தில் செல்கிறார். (சர்ச்சைகளுக்கு உள்ளாக்கபபட்டதனால் திருப்பியளிக்கபட்டது).
    ஜனநாயகத்தில் மகாராணிகள் மற்றும் “தளபதி”களுக்கு முடிசூட்டிக்கொள்ளுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டால் ஜனநாயக மாண்புகளுக்கு என்ன முக்கியத்துவம் கிடைக்கும்?
    திரு.கருணாநிதியின் ஜனநாயகம் ஜெயலலிதாபாணி அரசியலை தான் வளர்த்தெடுக்கும் என்பதே நிதரச்னமாயிருக்க, திரு.சமஸ் அவர்கள் திரு.கருணாநிதியின் ஜனநாயகத்தை வளர்த்தெடுக்கும்(?) பங்கினை முற்றாக இருட்டடிப்பு செய்துவிட்டு, தமிழக அரசியலின் ஜனநாயக கேலிக்கூத்துகளுக்கு முழுப்பொறுப்பையும் செல்வி.ஜெயலலிதா தான் ஏற்கவேண்டும் என்று சொல்வது பத்திரிக்கை தர்மமா இல்லை தலைவரோடுள்ள அபிமானமா?.
    தோழர்.வி.பி.சிந்தன் முதல்வராகியிருந்தால் செல்வி. ஜெயலலிதா போன்றவர்கள் முதல்வராகியிருப்பார்களா?.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Excellent. One dimensional analysis by the author. Probably he could have simply mentioned that MK is a lesser evil now compared to JJ though both are two sides of the same coin.

      நீக்கு