கபாலியும் காலி வத்திப்பெட்டியும்


ரஜினி படம் ஒரு தேர்த் திருவிழா. தேர் பார்க்கப்போவது என்று முடிவெடுத்துவிட்டால், கூட்டத்தோடு பார்ப்பது கூடுதல் கொண்டாட்டம். திருவிழா என்பது சுவாமி பார்ப்பது மட்டும் இல்லை. ஆனால், ஊர் முழுக்க உள்ள அத்தனை திரையரங்குகளிலும் படத்தை எடுத்து, அதிகாலை 4 மணிக்கே சிறப்புக் காட்சிகளைத் தொடங்கிவிட்டாலும் சமீப காலமாக முதல் நாள் அன்று ரஜினி படம் பார்ப்பது சாத்தியப்படுவதில்லை. கொள்ளைக் கட்டணம் கொடுத்துப் படம் பார்க்க மனம் ஒப்புவதில்லை.

திரையரங்கம் சென்று சினிமா பார்ப்பது அரிதாகி நீண்ட நாட்கள் ஆகின்றன. சென்னையில், சாதாரண நாட்களில், ஒரு குடும்பம் திரையரங்கம் போய் படம் பார்த்து வருவதற்கே எழுநூறு, எண்ணூறு ரூபாய் வேண்டும். சராசரியாக ஒரு டிக்கெட் விலை ரூ.120. வாகனம் நிறுத்த ரூ.50. பத்து ரூபாய் பப்ஸின் விலை அரங்கினுள்ளே ரூ.50. சம்பாத்தியத்துக்கும் செலவழிப்பதற்கும் சம்பந்தம் இல்லை. சோளப் பொரியை நூறு ரூபாய் கொடுத்து வாங்கித் தின்ன தனித்த ஒரு பராக்கிரம மனம் வேண்டி இருக்கிறது.

திரையரங்குகள் இன்றைக்கு எல்லோருக்குமான இடங்களாக இல்லை. ஒருகாலத்தில் சாதியை உடைத்து நொறுக்கிப் போட்டவை. இன்றைக்கு வர்க்கம் பார்த்து மேலே இருப்பவர்கள் மட்டும் வந்தால் போதும் என்று நினைக்கின்றன. இல்லாவிட்டால், சாமானிய நிலையிலுள்ள குடும்பங்கள் நொறுக்குத்தீனி எடுத்து வருவதைக்கூடத் தடுக்கும் முடிவை அவை எப்படி எடுக்கும்? ஆக, இப்போதெல்லாம் சிடியில்தான் படம் பார்க்கிறேன். இதில் தவறு ஏதும் இருப்பதாகக் கூறும் புண்ணியவான்கள் சாமானிய குடும்பங்கள் ஐம்பது, நூறு ரூபாயில் படம் பார்க்க வேறு ஏதேனும் வசதி இருக்கிறதா என்று கூற வேண்டும்.

திரையரங்கில் பைசா செலவழிப்பதில்லை என்கிற வைராக்கியத்துடன் படம் வெளியான ஐந்தாம் நாள் ‘கபாலி’க்குப் போனோம். முதல் நாள் ரூ.2,000-க்கு விற்ற டிக்கெட் அன்றைக்குத்தான் ரூ.120-க்குக் கிடைத்தது. படம் பிடித்திருந்தது. குறிப்பாக ஏதேனும் சொல்ல வேண்டும் என்றால், வயதுக்கேற்ப ரஜினியின் சினிமா பயணத்தை சரியான தடம் நோக்கி நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் இரஞ்சித். “பழைய ரஜினி படங்களின் ‘மாஸ்’ இல்லை” என்று பலரும் பேசக் கேட்க முடிந்தது. அதற்கான காரணத்தை இரஞ்சித்திடம் தேடுவதைக் காட்டிலும் ரஜினியிடம் தேடுவது உசிதமாக இருக்கும் என்று தோன்றியது. இந்தப் படத்திலும் சரி; இதற்கு முந்தைய சமீபத்திய படங்களிலும் சரி; எங்கெல்லாம் முன்புபோல் ரஜினி துள்ள வேண்டும் என்று நினைக்கிறாரோ அங்கெல்லாம் அவருடைய வயது அவரைக் கைவிடுவதைக் கவனிக்க முடிந்தது. ஒரு ரசிகனாக படத்தில் வயதான ரஜினியையும் வயதுக்கேற்ற ஆர்ப்பாட்டமான அவருடைய நடிப்பையும் ரொம்பவே பிடித்திருக்கிறது. சமீப ஆண்டுகளில் ‘படையப்பா’வுக்குப் பின் அதிகம் ஒன்றவைத்த ரஜினி படம் இது.


ரஜினி படத்தை இரஞ்சித் இயக்குகிறார் என்ற தகவல் வெளியான நாள் தொடங்கி ‘கபாலி’ தொடர்பான விவாதங்கள் தொடங்கிவிட்டன. ஒருகட்டத்தில் இரஞ்சித்தை அடிப்படையாக வைத்து, ‘கபாலி தலித் அரசியல் பேசும் சினிமாவா?’ என்பது விவாதங்களின் மையப்புள்ளி ஆனது. பின் படத்துக்குச் சாதிய சாயம் பூசும் வேலையும் நடந்தது. படத்தில் மலேசிய தமிழனாக ரஜினி பேசியிருக்கும் சில வசனங்களைக் கதைக்கு வெளியிலிருந்து பார்க்கலாம் என்றாலும்கூட, ஒடுக்குமுறைக்கு எதிரான சாடலாகவே அவை பட்டன. காலங்காலமாக சினிமாவில் பிராமணர், தேவர், கவுண்டர், பிள்ளைமார், படையாச்சிகளின் புகழ் பாடிய வசனங்கள் உருவாக்காத உறுத்தலை ஒடுக்குமுறைக்கு எதிரான வசனங்கள் நமக்கு உருவாக்குகின்றன என்றால், பிரச்சினை படத்தில் இல்லை; அது நம் மனதில் இருக்கிறது.

திகைப்பூட்டிய விஷயம் ஒன்று உண்டு. படம் நெடுக நூற்றிச்சொச்சம் பேர் வெட்டியும் சுட்டும் கொல்லப்படுகிறார்கள். அரசின் தணிக்கைத் துறை எப்படி அனைவரும் பார்ப்பதற்கான ‘யு’ சான்றிதழை வழங்கியது? படத்தை ‘ஜாஸ் சினிமாஸ்’ வெளியிட்டிருப்பதை நண்பர் சுட்டிக்காட்டினார். ‘எந்திரன்’ படம் வெளியானபோது உருவான சர்ச்சைகள் ஞாபகத்துக்கு வந்தன. அந்தப் படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ வெளியிட்டிருந்தது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் என்பது காட்சி மாற்றம்!

திரையரங்கிலிருந்து வெளியே வந்தபோது பசி வயிற்றைப் பிறாண்டியது. கடலைவண்டி கண்ணில் பட வறுத்த கடலை வாங்கினோம். ஒரு பொட்டலம் ரூ.10. அவ்வளவு கூட்டம் வந்து செல்லும்போதும் பெரிய போணி ஆனதுபோலத் தெரியவில்லை. பெரியவர் காலையிலேயே வந்துவிடுவாராம். அதிசயமாக நூறு பொட்டலம் விற்றால்கூட எல்லாம் போக பெரியவருக்கு என்ன கிடைக்கும் என்று தோன்றியது. “மனுஷன் கடலை திங்கிறதை மறந்துட்டான் சார். நாளெல்லாம் நின்னாலும், முப்பது பொட்டலம்கூடப் போறதில்லை. கேவலமா நெனைக்கிறாங்க. அடுத்த தலைமுறையில கடலை வண்டினு ஒண்ணு இருக்காது சார்” என்றார். கடலையை எடுத்து மடித்தவர், “சூடு கொஞ்சம் கம்மி” என்றவாறே கொடுத்தார்.

அணைந்திருந்த அடுப்பைப் பற்றவைக்க முயன்றார். தீப்பெட்டியின் கடைசி குச்சி அது. அடுப்பு பற்றியதும் காலிப் பெட்டியைத் தூக்கி எறிந்தார். “ஒரு ரூவா தீப்பெட்டி. இதுல நாம கட்டுற வரி இருபத்தெட்டு காசு. ‘கபாலி’ படம் மொத நாள் வசூல் நம்மூர்ல மட்டும் இருவது கோடியாம். டிக்கெட் மூவாயிரம் வரைக்கும் வித்திருக்கான். ஒரு ரூவா அரசாங்கத்துக்கு வரி கிடையாது. எப்படி சார் உருப்படும் இந்த ஊர்?”

கடலையை வறுக்க ஆரம்பித்தார். வண்டியைக் கடப்போர் கவனத்தைத் திருப்ப சட்டியைக் கரண்டியால் தட்டினார். ‘டங்… ணங்… டங்…’

பெருமளவு கருப்புப் பணம் புழங்கும், சூதாட்டத்தைப் போல் நடக்கும் சினிமா துறைக்கு எதற்காக அரசாங்கம் சலுகை அளிக்க வேண்டும்? கேளிக்கை வரி விதிக்கப்பட்டால், நூறு ரூபாய் டிக்கெட்டுக்கு முப்பது ரூபாய் அரசுக்குப் போகும். தமிழில் படப் பெயரைச் சூட்டுபவர்களுக்கு கேளிக்கை வரியை ரத்துசெய்யும் முடிவை 2006-ல் தமிழக அரசு அறிவித்த ஆரம்ப ஆண்டுகளிலேயே வருவாய் இழப்பு ரூ.50 கோடியைத் தொட்டது. பெருமளவில் உள்ளாட்சி அமைப்புகளுக்குச் செல்லக் கூடிய நிதி இது. இந்த இழப்பைப் பற்றி அந்நாட்களில் கருணாநிதி பேசிய வார்த்தைகள் இன்றும் நினைவில் இருக்கின்றன. “எதை எதையோ தாங்கிக்கொண்ட இந்த இதயம், இந்த ஐம்பது கோடியையா தாங்கிக்கொள்ளாமல் போய்விடப்போகிறது?”

அன்றைய ஐம்பது கோடி, இன்றைக்கு நூறு கோடியாகி இருக்கலாம். நாளை இருநூறு, முந்நூறு, ஐந்நூறு கோடிகள் ஆகலாம். இழப்பை கருணாநிதி தாங்கவில்லை; ஜெயலலிதாவும் தாங்கவில்லை!


10 கருத்துகள்:

 1. ஒருவன் நான் ரஜனியின் ரசிகன்/கமலின் ரசிகன் என்றாலே பாவம் அவருக்கு வேறு நடிகர்களைத்தெரியலையென்று அர்த்தம். நான் ரங்கராவின் ரசிகன் என்று யாரும் சொன்னதுண்டோ? நான் ‘கபாலி’யைப்பற்றி எதுவும் பேசலை. சுபம்.

  பதிலளிநீக்கு
 2. நீங்க கொழுத்திப்போடுங்க ஜி

  பதிலளிநீக்கு
 3. Nalla pathivu Saar...! Kabali la irukka odukkumurai arasiyal alavkku athigama vivathika pada vendiyathu......intha thirai aranga kattinangalla olungu padutha vendiyathum.....intha laabathil aransangathukku yentha varuvaaiyum varathu kollai kaasaga silaridam seruvathum patriyum..!

  பதிலளிநீக்கு
 4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 5. //காலங்காலமாக சினிமாவில் பிராமணர், தேவர், கவுண்டர், பிள்ளைமார், படையாச்சிகளின் புகழ் பாடிய வசனங்கள் உருவாக்காத உறுத்தலை ஒடுக்குமுறைக்கு எதிரான வசனங்கள் நமக்கு உருவாக்குகின்றன என்றால், பிரச்சினை படத்தில் இல்லை; அது நம் மனதில் இருக்கிறது// - 100க்கு 100 உண்மை!

  பதிலளிநீக்கு
 6. #சோளப் பொரியை நூறு ரூபாய் கொடுத்து வாங்கித் தின்ன தனித்த ஒரு பராக்கிரம மனம் வேண்டி இருக்கிறது# எத்தனை அருமையான வரிகள்!

  இழப்புகளை தாங்கவா இவர்கள் ஆட்சிக்கு வருகிறார்கள்? ரொம்பக் கொடுமை சமஸ்.

  பதிலளிநீக்கு
 7. விளம்பரம், வணிகம், பணம் பண்ணுவோர், அரசியல் என்ற பல தளங்கள் போட்டி போட்டுக்கொண்டு சாமான்யனை இன்னும் கீழ்நிலைக்குக் கொண்டு செல்கின்றன. தான் அறியாமல் அவனும் அதற்கு உடந்தையாகிறான். இதுதான் வேதனை.

  பதிலளிநீக்கு
 8. /திரையரங்குகள் இன்றைக்கு எல்லோருக்குமான இடங்களாக இல்லை. ஒருகாலத்தில் சாதியை உடைத்து நொறுக்கிப் போட்டவை. இன்றைக்கு வர்க்கம் பார்த்து மேலே இருப்பவர்கள் மட்டும் வந்தால் போதும் என்று நினைக்கின்றன. இல்லாவிட்டால், சாமானிய நிலையிலுள்ள குடும்பங்கள் நொறுக்குத்தீனி எடுத்து வருவதைக்கூடத் தடுக்கும் முடிவை அவை எப்படி எடுக்கும்? ஆக, இப்போதெல்லாம் சிடியில்தான் படம் பார்க்கிறேன். இதில் தவறு ஏதும் இருப்பதாகக் கூறும் புண்ணியவான்கள் சாமானிய குடும்பங்கள் ஐம்பது, நூறு ரூபாயில் படம் பார்க்க வேறு ஏதேனும் வசதி இருக்கிறதா என்று கூற வேண்டும்./நச்சென்ற கருத்து. நானும் அதை வரிக்கு வரி ஆமோதிக்கிறேன். தியேட்டரிலேயே இவர்கள் ரூ.2000, 3000 என்று டிக்கெட்டை விற்பார்களாம். படத்தை யாரும் நெட்டில் சுட்டுப் போடக்கூடாது என்று போலீஸிடம் புகார் கொடுப்பார்களாம். முதல் நாள் முதல் காட்சி பார்க்க எந்த விலையும் தரத் தயாராய் இருக்கும் ஜென்மங்களையும் சொல்ல வேண்டும். சினிமாவை கடவுளாலும் காப்பாற்ற முடியாது.

  பதிலளிநீக்கு
 9. Unmai ...nanum amothikkiren ...Itharkaga than nanum theatre selvathillai 2 varudangalaga...

  பதிலளிநீக்கு