வங்கத்தோடு ஒட்டிக்கொண்டிருக்கும் ‘மேற்கு’ வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறார் மம்தா பானர்ஜி. மாநிலத்தின் புதிய பெயராக வங்க மொழியில் ‘பங்கா’ என்றும், ஆங்கிலத்தில் ‘பெங்கால்’ என்றும் அம்மாநிலம் அழைக்கப்பட வேண்டும் என்று முன்மொழிந்திருக்கிறது, மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸின் அமைச்சரவை.
முன்பு 1999-ல், வாஜ்பாய் தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்தபோது அன்றைய முதல்வர் ஜோதி பாசு, இதே போன்ற கோரிக்கையை முன்வைத்தது ஞாபகத்துக்கு வருகிறது. அகண்ட பாரதக் கனவைக் கைவிட முடியாத சங்கப் பரிவாரங்கள், அப்போது அதைக் கடுமையாக எதிர்த்தன. அடுத்து, 2011-ல் முதல் முறையாக முதல்வராகப் பதவியேற்றதும், மம்தா இதுபற்றிப் பேசினார். மன்மோகன் சிங் அரசோடு உறவுச் சூழல் சரியில்லாத நிலையில், அந்தக் கோரிக்கை காற்றோடு காற்றாகக் கலந்தது. சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற முதல்வர்கள் மாநாட்டில், ஆங்கில அகரவரிசைப்படி மேற்கு வங்கம் கடைசியாக அழைக்கப்பட்டது. இதனாலேயே தன் பேச்சுக்கும் மாநிலத்துக்கும் உரிய கவனம் கிடைக்கவில்லை என்று கருதிய மம்தா, மீண்டும் பெயர் மாற்ற விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கிறார்.
பிரிட்டிஷ் ஆட்சியில், 1905-ல் கிழக்கு, மேற்கு என்று வங்கம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. தேசியவாதிகளின் கடும் எதிர்ப்பால் அடுத்த ஆறு ஆண்டுகளில் ஒன்றிணைக்கப்பட்ட வங்கம், மீண்டும் 1946-ல் பிரிக்கப்பட்டது. இந்துக்கள் பெரும்பான்மைப் பகுதி கொல்கத்தாவைத் தலைநகரமாகக் கொண்ட மேற்கு வங்கமாகவும் முஸ்லிம்கள் பெரும்பான்மைப் பகுதி டாக்காவைத் தலைநகரமாகக் கொண்ட கிழக்கு வங்கமாகவும் பிரிக்கப்பட்டன. இந்தியப் பிரிவினையின்போது கிழக்கு வங்கம் பாகிஸ்தான் பக்கமும் மேற்கு வங்கம் இந்தியா பக்கமுமாக ஒதுக்கப்பட்டன. 1971-ல் கிழக்கு வங்கம் பாகிஸ்தானிடமிருந்து பிரிந்து வங்கதேசம் என்ற சுதந்திர நாடான பிறகு, கிழக்கு வங்கம் என்ற சொல் செத்துப்போனது. கிழக்கு வங்கம் என்று ஒன்று இல்லாமல் போய்விட்ட இன்றைய சூழலில், மேற்கு வங்கம் என்று வங்கம் அழைக்கப்படுவதற்கான நியாயம் என்ன என்று கேட்கிறார் மம்தா. மேலும், அகர வரிசைப்படி மேற்கு வங்கமானது இந்திய மாநிலங்களின் பட்டியலில் கடைசி வரிசையில் இடம்பெற்றிருப்பதால், மாநிலத்துக்கு உரிய கவனம் கிடைப்பதில்லை என்றும் கூறியிருக்கிறார்.
மம்தாவின் விமர்சகர்கள் இதை வரலாற்றுடனான விளையாட்டு என்கிறார்கள். “வங்கத்தின் பெயரோடு ஒட்டிக்கொண்டிருக்கும் ‘மேற்கு’ வெட்டப்பட்டால், எதிர்காலத் தலைமுறையினர் ஒன்றுபட்ட வங்கத்தின் வரலாற்றையும் துண்டாடப்பட்ட வரலாற்றையும் பிரிவினைக் கொடூரங்களையும் தெரிந்துகொள்வதற்கான ஒரு கேள்வியை இழப்பார்கள்” என்பது அவர்களுடைய வாதம்.
மம்தாவின் ‘அகர வரிசை வாதம்’ அர்த்தமற்றது. அப்படிப் பார்த்தால், இந்தியாவில் அகர வரிசையில் முன்னணியில் இருக்கும் அருணாசலப் பிரதேசம், அசாம், பிஹார், சத்தீஸ்கர் எல்லாம் இன்றைக்கு எங்கேயோ போயிருக்க வேண்டுமே! அகர வரிசைப் பட்டியலில் கடைசி வரிசையில் வரும் தமிழகம், வளர்ச்சிப் பட்டியலில் எப்போதும் முன்வரிசையில் இருக்கும் மாநிலங்களில் ஒன்று. ஒரு மாநிலத்தின் வளர்ச்சியைத் தீர்மானிப்பது செம்மையான ஆட்சி நிர்வாகமேயன்றி முன்வரிசைப் பெயர் அல்ல. அதேசமயம், மம்தா முன்வைக்கும் இன்னொரு வாதமும் மாநிலத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்ற வங்காளிகளின் உணர்வுகளின் பின்னிருக்கும் நியாயமும் மதிக்கப்பட வேண்டியவை.
வரலாறு நெடுகிலும் ஒவ்வொரு நிகழ்வும் கல்லும் மண்ணும் ரத்தமும் கறையுமாகப் படிந்திருக்கின்றன. அவற்றில் எவை பெருமிதங்கள், எவை இழிவுகள், எவை தக்கவைக்கப்பட வேண்டியவை; எவை கழுவிவிடப்பட வேண்டியவை என்பதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் அந்தந்தச் சமூகங்களே அன்றி, வெளியில் இருப்பவர்கள் அல்ல.
பொதுவாக, மாச்சரியங்களைக் கடந்து, வங்காளிகளுக்கு ரத்தத்தில் கலந்த இரு கனவுகள் உண்டு என்று சொல்வார்கள்: 1.அகன்ற வங்கம், 2.சுபாஷ் சந்திர போஸின் மறுவருகை. மிக உணர்வுபூர்வமான விஷயங்கள் இவை. இன்றைக்கு மம்தாவும் பெரும்பான்மை வங்காளிகளும் “வங்கம் என்ற ஒரு சொல் போதும்” என்று சொல்கிறார்கள் என்றால், இதுவும் வரலாறு.
இந்தியா சுதந்திரம் அடைந்ததில் தொடங்கி காலனியாதிக்கத் தவறுகள், முத்திரைகள், இழிவுகளிலிருந்து நம் மண்ணின் அடையாளத்தை உதறிவிடும் பணி நடக்கிறது. திருவிதாங்கூர் - கொச்சின் 1956-ல் கேரளம் ஆனது. மத்திய பாரதம் 1959-ல் மத்தியப் பிரதேசம் ஆனது. சென்னை மாநிலம் 1969-ல் தமிழ்நாடு ஆனது. மைசூர் மாநிலம் 1973-ல் கர்நாடகம் ஆனது. உத்ராஞ்சல் 2007-ல் உத்தராகண்ட் ஆனது. இந்தப் பெயர் மாற்றங்கள் ஒவ்வொன்றுக்கும் பின் தனித்தனி வரலாறு உண்டு. பொதுவான நோக்கம், அந்தந்த மண்ணின் மொழி, இன, கலாச்சார அடையாளங்களுக்கு ஏற்ப பெயரைச் சீரமைத்துக்கொள்வது.
ஆங்கிலேயர்கள் தம்முடைய வாய்க்கு வந்தபடி உச்சரித்து, அதையே ஆங்கிலத்தில் அதிகாரபூர்வமான பெயருமாக்கிச் சிதைத்த ஏராளமான ஊர்கள் நம் நாட்டில் உண்டு. கொஞ்சம் மாற்றியிருக்கிறோம். அப்படித்தான் ஜுப்பல்பூரை ஜபல்பூர் ஆக்கினோம். பரோடாவை வடோதரா ஆக்கினோம். திருவான்ட்ரம் திருவனந்தபுரம் ஆனது. ஆலப்பீ ஆலப்புழா ஆனது. பாம்பே மும்பை ஆனது. கல்கத்தா கொல்கத்தா ஆனது. பெங்களூர் பெங்களூரு ஆனது. தமிழகத்தில் டேஞ்சூர் தஞ்சாவூர் ஆனது. காஞ்சிவரம் காஞ்சிபுரம் ஆனது. இன்னும் நிறைய ஊர்களின் பெயர்கள் மாறின என்றாலும், இழிவுகள் இன்னும் தொடர்கின்றன. தூத்துக்குடியை டூட்டுகொரின் என்றும் தரங்கம்பாடியை டிராங்கோபார் என்றும் குறிப்பிடுகிறோம். சேலத்தை சலேம் என்றும் எழுதுகிறோம்.
எனக்கு இது போன்ற விஷயங்களில் முரட்டுத்தனமான ஒரு பிடிவாதம் உண்டு. எங்கு, எவருக்குக் கடிதம் எழுத நேர்ந்தாலும், தூத்துக்குடி (Thuththukudi) என்றும் சேலம் (Selam) என்றும் ஆங்கிலத்தில் வம்படியாகக் குறிப்பிடும் பிடிவாதம். ஆங்கிலத்தில் ஒரு எழுத்து மாற்றி எழுதக் கூசும்போது, தமிழில் எது எல்லாவற்றையும் உதிர்த்துப்போடச் சொல்கிறது? சென்னை வந்த புதிதில் ஏனைய வார்த்தைகளை முழுக்கத் தமிழில் உச்சரிப்பவர்களும்கூட, “டிரிப்பிலிகேனுக்கு எப்படிப் போகணும்?”; “எக்மோருக்குப் போக எவ்வளவு நேரம் ஆகும்?” என்று ஊர்ப் பெயரைக் குறிப்பிடுகையில் மட்டும் ஆங்கிலேயராக மாறுவதைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. போகப் போக எங்கு பார்த்தாலும் “ஆல்வார்பேட், கீல்பாக், சைதாபேட்” என்று கேட்க கேட்க வெறும் சூழல் பழக்கம் மட்டுமே அல்ல அது; இதில் உள்ளார்ந்த ஒரு உவகையும் அவர்களுக்கு இருக்கிறது என்பது புரிந்தது. அடிமைத்தனத்தின் எச்ச ருசி!
இன்றைக்கு நாம் சுமக்கும் நிறைய இழிவுகளுக்கான காரணங்களை வரலாறு, பண்பாடு, கலாச்சாரம் எனும் சொற்களின் பின்னணியிலேயே பதுக்கிப் பாதுகாக்கிறோம். இழிவுகளிலிருந்து விடுதலையடைய முதலில் உணர்வுத் தளைகளிலிருந்து விடுதலையடைதல் அவசியமாகிறது. வங்கம் தன்னுடைய பெயரிலிருந்து மேற்கை வெட்டும் முயற்சியில் இறங்கியிருப்பது, ஒரு வகையில் இந்நாடு மேற்கின் காலனிய அடிமை மனோபாவத் தளையிலிருந்து விடுதலையடைந்து சுயம் தேடும் நீண்ட முயற்சியின் தொடர்ச்சி. மேற்கு வெட்டுப்படட்டும்!
ஆகஸ்ட், 2016, ‘தி இந்து’
அகர வரிசைக்காக முன்னுக்கு வர நினைப்பது என்பது ஏற்கக்கூடியதல்ல.
பதிலளிநீக்குநாம் வேண்டுமானால் இங்கே வாழலாம், ஆனால் நம்முடைய. ஒட்டுமொத்த. வாழ்வியல் முறையும் இஙௌகிலாந்துகாரனின் அடிமையாகவே இருக்கிறது,
பதிலளிநீக்கு