கள்ளப் பொருளாதாரத்தை மோடியால் கட்டுப்படுத்த முடியுமா?


பிரதமர் மோடியிடமிருந்து முக்கியமான அறிவிப்பு வெளியாகவிருக்கிறது என்ற தகவல் வந்தவுடனேயே “நெருக்கடி நிலை அறிவிப்பாக இருக்குமோ?” என்றார் ராம்பிரசாத். இந்த நாட்களில் எதையும் சொல்வதற்கு இல்லை. உத்தரப் பிரதேசத் தேர்தல் முடிவதற்குள் இந்தியா எதையும் சந்திக்கலாம்.


கொஞ்ச நேரம் கழித்து மோடி தொலைக்காட்சியில், “கைவசமுள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது” என்ற அறிவிப்பை வெளியிட்டபோது, என் கையில் - அந்த நோட்டுகள் நீங்கலாக - ரூ.30 இருந்தது. வீடு திரும்பும்போது காய்கறிகள் வாங்கிச் செல்வது வழக்கம். கூடவே அன்றைக்கு மளிகைச் சாமான்களும் கொஞ்சம் வாங்கிப்போக வேண்டியிருந்தது. வழக்கமாக சாமான்கள் வாங்கும் சிறுகடைகள் யாவும் கைவிரித்துவிட்டன. தானியங்கிப் பணப்பட்டுவாடா மையம் ஒவ்வொன்றின் முன்னும் பெரும் கூட்டம் நீள்வரிசையில் நின்றது. “அடுத்த நாள் வங்கிச் சேவை கிடையாது; அடுத்தடுத்த நாட்களிலும் வெறும் ரூ.2000 மட்டுமே எடுக்க முடியும்” என்கிற அறிவிப்புகள் மக்களிடம் கலக்கத்தை உருவாக்கியிருந்தன. சென்ற இடமெல்லாம் மக்களிடம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் பார்க்க முடிந்தது. நிறையப் புலம்பல்கள் வெளிப்பட்டன. எல்லாவற்றையும் தாண்டி அவர்களிடம் ஒரு கேள்வி: “எப்படியோ கள்ளப் பணம் கொஞ்சமாச்சும் ஒழியும்ல சார்?”

இந்நாட்டின் அரசாங்கமும் ஆட்சியாளர்களும் ஆன்ம சுத்தியுடன் இந்தக் கேள்விக்குத்தான் பதில் தேட வேண்டும். மோடியின் இந்த அறிவிப்பு அரசியல் லாப நோக்கங்கள் அற்றது என்றோ இந்த ஒரு நடவடிக்கையின் நிமித்தம் இந்தியாவின் கள்ளப் பொருளாதாரம் ஸ்தம்பித்துவிடும் என்றோ இன்று குழந்தைகள்கூட நம்ப மாட்டார்கள். எனினும், இந்நடவடிக்கை இந்தியாவின் நிழல் பொருளாதாரத்தின் இயக்கத்தை நூற்றில் ஒரு பங்கையேனும் கண்டிப்பாகப் பாதிக்கும் என்றே கருதுகிறேன்.


இந்தியாவின் கள்ளப் பொருளாதாரம் குறித்து விவாதிக்கையில் இரு விஷயங்களை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.

முதலாவது, நம்மில் பெரும்பாலானோர் நம்ப விரும்புவதுபோல, - தன்னுடைய அரசியல் லாபங்களுக்காக முன்னதாக பாஜகவும் மோடியும் கட்டமைத்ததுபோல - நம்மவர்களின் கறுப்புப் பணமானது பெருமளவில் இந்தியாவுக்கு வெளியே பதுங்கியிருக்கவில்லை; மாறாக ஒரு வழியே வெளிநாடுகளுக்குச் சென்று இன்னொரு வழியே உள்நாட்டுக்கே திரும்ப வந்து இங்கே முழு மூச்சில் இயங்கிக்கொண்டிருக்கிறது.

மன்மோகன் சிங் அரசாங்கத்தைக் காலிசெய்ய பாஜக வகுத்த வியூகங்களில் ஒன்று, பெரும்பாலான கறுப்புப் பணம் வெளிநாடுகளில் இருக்கிறது என்ற பிரச்சாரம். 2008-ல் மன்மோகன் சிங்குக்கு அத்வானி கடிதம் எழுதியபோது அது தொடங்கியது. அடுத்து, இதுகுறித்து ஆராய அக்கட்சி ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழு கொடுத்த அறிக்கை, “இந்தியர்களின் பணம் சுமார் ரூ. 25 லட்சம் கோடி சுவிஸ் வங்கிகளிலும் ரூ. 75 லட்சம் கோடி இதர வெளிநாடுகளிலும் பதுக்கப்பட்டிருக்கிறது” என்றது. ஆரம்பத்தில் காங்கிரஸ் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஒருகட்டத்தில் அரசுக்கு எதிரான பெரும் பிரச்சாரமாக இதை பாஜக மாற்றியபோது, நாடாளுமன்றத்தில் கறுப்புப் பணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யும் நிலை அரசுக்கு உருவானது. ஞாபகம் இருக்கலாம், அந்த அறிக்கையை இன்றைய குடியரசுத் தலைவரும் அன்றைய நிதியமைச்சருமான பிரணாப் முகர்ஜி தாக்கல்செய்தார். மே 2012-ல் தாக்கல்செய்த அந்த 108 பக்க அறிக்கையின் வெளிப்பட்ட முக்கியமான செய்தி, பாஜகவும் ஏனைய அமைப்புகளும் சொன்ன அளவுக்கு இந்தியர்களின் பணம் வெளிநாடுகளில் இல்லை!

சுவிஸ் தேசிய வங்கி இது தொடர்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதன்படி, 2006-ல் ரூ.23,373 கோடியாக இருந்த இந்தியர்களின் முதலீடுகள் 2010-ன் முடிவிலேயே - அதாவது இந்தியாவில் இதுகுறித்த விவாதம் பெரிதாகத் தொடங்கிய பின் - ரூ.9295 கோடியாகக் குறைந்துவிட்டது. என்றாலும், பாஜக தன்னுடைய பழைய பல்லவியைத் தொடர்ந்தது. தொடர்ந்து, 2014 மக்களவைத் தேர்தலில் இதை மோடி முக்கியமான பிரச்சினையாக்கினார். மோடியின் பிரச்சாரக் கூட்டங்களில் “வெளிநாடுகளில் உள்ள நம்மவர்களின் கறுப்புப் பணத்தை மீட்டு, நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடலாம்” என்ற முழக்கங்கள் ஒலித்தன. 2014 மே மாதம் ஆட்சிக்கு வந்த அடுத்த ஆறு மாதங்களுக்குள் பாஜக அரசின் சுதி மாறியது.

முதலில், “கறுப்புப் பண விவகாரத்தில் ஜனரஞ்சக, சாகச நடவடிக்கைகள் எடுக்க முடியாது” என்றார் நிதியமைச்சர் அருண் ஜேட்லி. அடுத்து, 2014, நவம்பர் 2 அன்று ‘மன்கி பாத்’ நிகழ்ச்சியில் பேசுகையில் மோடி சொன்னார்: “வெளிநாடுகளில் இந்தியர்களின் கறுப்புப் பணம் எவ்வளவு இருக்கிறது என்பது உங்களுக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது, இந்த அரசுக்கும் தெரியாது, முந்தைய அரசுக்கும் தெரியாது, ஏன் யாருக்குமே தெரியாது!”

ஒருவகையில் அது உண்மை என்பதை இது தொடர்பில் ஆய்வு நடத்தியவர்கள் பலரின் ஆய்வறிக்கைகளும் கூறின. குறிப்பிடத்தக்க ஒருவர் ஜேஎன்யு பேராசிரியரும் ‘தி பிளாக்மணி’ நூலாசிரியருமான அருண்குமார். “நாம் நாட்டின் உள்நாட்டு மதிப்பாகக் கணக்கிடும் ரூ.130 லட்சம் கோடியில் 50% அளவு - ரூ.65 லட்சம் கோடி - கறுப்புப் பொருளாதாரம் ஆக மதிப்பிடலாம். உண்மையில் இந்தத் தொகையில் 90% இங்கேயே மறைந்துள்ளது” என்று சொன்னார் அருண்குமார்.

இந்த மதிப்பில் பெருமளவு தங்கமாக இருக்கலாம்; மனைகளாகவும் கட்டிடங்களாகவும் இருக்கலாம்; பங்குகளாக இருக்கலாம்; தொழிலாக இருக்கலாம்; நிச்சயம் கணிசமான ஒரு பகுதி பணமாகவும் இருக்கலாம். சாமானியர்களின் வீடுகளில் நடக்கும் திருட்டுச் சம்பவங்களிலேயே “பல ஆயிரங்கள், பல பவுன் நகைகள் காணவில்லை” என்று வெளியாகும் செய்திகளும் தேர்தல் சமயங்களில் அரசியல்வாதிகளின் வாகனங்களில் பிடிபடும் பண மூட்டைகளும் இந்தியச் சமூக உளவியலில் பணத்தை ரொக்கமாகக் கையாள்வதில் இருக்கும் பிடிமானத்தையும் சௌகரியத்தையும் உணர்த்தக் கூடியவை. கறுப்புப் பணம் தொடர்பில் விவாதிக்கையில் நாம் திட்டமிட்டு அரசை ஏமாற்றும் பெருமுதலைகள் தொடர்பாக மட்டும் விவாதிக்கவில்லை; நாட்டின் 3% நீங்கலாக வருமான வரி செலுத்தாமல் சாமானிய வேடத்தில் லட்சங்களைக் குவிப்பவர்கள், வீட்டு மனைப் பதிவின்போது ஒன்றுக்குப் பாதியாகக் குறைத்து மதிப்புக் காட்டி அரசை ஏமாற்றுபவர்கள் வரை நாம் உள்ளடக்குகிறோம் என்ற புரிதல் வேண்டும்.

இரண்டாவது, கள்ள நோட்டு விவகாரம். பாகிஸ்தானிலிருந்து அச்சடிக்கப்பட்டு, புழக்கத்தில் விடப்படும் கள்ள நோட்டுகளைப் பற்றித் தன்னுடைய உரையில் மோடி குறிப்பிட்டிருக்கிறார். இது முக்கியமான ஒரு விஷயம். 2011-ல் இதுகுறித்து அமெரிக்க அரசும்கூட விரிவான ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது ஞாபகத்தில் இருக்கிறது. “பயங்கரவாதிகளின் செலவுகளுக்கு உதவுவதற்காக மட்டுமல்லாமல் இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் திட்டத்தின்படியும் இந்தக் கள்ள நோட்டுகள்  விநியோகிக்கப்படுகின்றன” என்றது அந்த அறிக்கை.


கடந்த 10 ஆண்டுகளாகவே இந்தியப் பொருளாதாரத்தில் கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துவருவது தொடர்பாகத் தொடர்ந்தும் பல தரப்பிலிருந்தும் பேசிவருகிறார்கள். 2006-டன் ஒப்பிட்டால், 2007-ல் சில மாநிலங்களில் 200% வரை அதிகமாக கள்ள நோட்டுகள் பிடிபட்டன. 2008-ல் உத்தரப் பிரதேசத்தில், பாரத ஸ்டேட் வங்கியின் தோமாரியா கஞ்ச் கிளையிருந்து மட்டும் ரூ.4 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. “2009-ல் இந்தியாவில் புழக்கத்தில் இருந்த நோட்டுகளின் மொத்த மதிப்பில் 20% வரை போலி” என்றது ஒரு ஆய்வறிக்கை. 2010-ல் ரூ.27.82 கோடி, 2011-ல் ரூ.29.40 கோடி, 2012-ல் ரூ.32.63 கோடி கள்ள நோட்டுகள் பிடிபட்டதாகச் சொன்னது உள்துறை அமைச்சகம். 2016 தொடக்கத்தில் கொல்கத்தாவைச் சேர்ந்த இந்தியப் புள்ளியியல் கழகம் மேற்கொண்ட ஆய்வின் அறிக்கை, “புழக்கத்தில் உள்ள ரூ. 1,000 நோட்டுகளில் கிட்டத்தட்ட சரி பாதி கள்ள நோட்டுகள்” என்று சொன்னது. நாடு முழுக்கப் புழக்கத்தில் இருந்த ரூ. 17 லட்சம் கோடியில், 80% நோட்டுகள் - அதாவது ரூ.13.6 லட்சம் கோடி - ரூ.500, ரூ.1,000 நோட்டுகள்.


இத்தகைய பின்னணியில், இந்நடவடிக்கையால் எந்தப் பலனும் இருக்காது என்று எவராலும் சொல்ல முடியாது. இந்நடவடிக்கையை முற்றிலுமாக நிராகரிப்பவர்களிடம் காத்திரமான காரணங்களைக் காட்டிலும் மோடி மீதான ஒவ்வாமையே அதிகம் வெளிப்படுவதாகத் தோன்றுகிறது. “சுதந்திர இந்தியாவில் முன்னதாக
1978-ல், மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது இதே போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ரூ.1,000, ரூ.5,000, ரூ.10,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது இந்திய அரசு. அது பெரிய அளவில் பலன் ஒன்றையும் தரவில்லை” என்று சொல்பவர்கள் ஒரு விஷயத்தைக் கவனிக்கத் தவறுகிறார்கள். அன்றைக்கு மொரார்ஜி தேசாய் ஒரு பலவீனமான அரசின் பிரதமராக இருந்தார். இப்படி ஒரு நடவடிக்கை எடுத்த அடுத்த மறு வருஷம் அவருடைய ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது. இன்றைக்குப் பெரும்பான்மைப் பலமிக்க உறுதியான ஒரு அரசு மோடியின் கீழ் இருக்கிறது.

இந்த அரசுக்குக் கறுப்புப் பணத்தை ஒழிப்பதில் உண்மையிலேயே அக்கறை இருந்தால், அதைக் கணிசமான அளவுக்குச் சாத்தியப்படுத்தும் பலம் இருப்பதாகவே கருதுகிறேன். வெறுமனே இந்த ஒரு நடவடிக்கையால் மட்டுமே கறுப்புப் பொருளாதாரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியாது; பொருளாதாரரீதியாக, அரசியல்ரீதியாக, நிர்வாகரீதியாகப் பல நடவடிக்கைகள் தேவை. இப்போதைய நடவடிக்கை எளிதானது, ஆபத்தற்றது, அரசியல்ரீதியில் பலன்களைத் தரக்கூடியது. ஏனையவை அப்படியானவை அல்ல. அந்த முடிவுகள் அனைத்திற்குமான துணிச்சல் மோடியிடம் உண்டா என்று கேட்டால், சந்தேகம் என்று சொல்வேன்!

நவம்பர், 2016, ‘தி இந்து’


4 கருத்துகள்:

  1. தலைப்பிற்கான பதில் : முடியவே முடியாது. இவரால் மட்டுமல்ல, எவராலும். இந்நடவடிக்கை இந்தியாவின் நிழல் பொருளாதாரத்தின் இயக்கத்தை நூற்றில் ஒரு பங்கையேனும் கண்டிப்பாகப் பாதிக்கும் என்பது முழுமையாக ஏற்றுக்கொள்ளவேண்டிய கருத்தாகும். அரசியல் நோக்கோடு பார்ப்பதைவிடுத்து பொதுநோக்கில் பார்த்தால் இதனை ஒரு சிறிய ஆரம்பமாகக் கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  2. நிழல் பொருளாதாரத்தின் சூத்திரதாரிகளின் தயவின்றி இங்கே இடதுசாரிக் கட்சிகளைத் தவிர வேறெவராலும் அரசியல் "பண்ண" முடியாது; இதுகாறும் தேர்தல் செலவுகளுக்கு முறையாகக் கணக்கு காட்டியர்கள் இடதுசாரிகள் மட்டுமே!. ,நிற்க.
    கருப்புச் சந்தைதான் கருப்புப் பணத்தின் விளை நிலமும் விளையாட்டுத் திடலும். அசையாச் சொத்துகளின் கைமாற்றம், தங்கம்,வெள்ளி போன்ற விலை உயர்ந்த நுகர் பொருள்களின் பரிமாற்றம் ஆகியன கருப்புச் சந்தையின் தூண்கள்! அரசே அச்சடிகிற நல்ல பணமும், அரசு நிர்வாகத்துக்கு உள்ளேயும், வெளியேயும் இருக்கிற பெரிய மனிதர்கள் அச்சடித்து புழக்கத்தில் விடுகிற கள்ளப்பணமும் இரண்டறக் கலக்கிற அவ்விடங்கள் ஆளுகிற, எதிர்வரிசையில் நிற்கிற அத்தனை ஜனநாயகக்(!) கட்சிகளும் தாங்கி நிற்கிற ஆளும் வர்க்கங்களாம் முதலாளிகள், வணிகர்கள், அவர்களின் ஏவலர்கள் ஆகியோருக்கு மட்டுமே உரியவை. அவர்களுக்குச் சாதகமான வரி, கடன் கொள்கைகளைக் கொண்டிருக்கிற மோடி அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையின் உடனடி விளைவு அதிகபட்சம் கள்ளப்பணத்தைச் செயலிழக்கச் செய்யும்--அதுவும் தற்காலிகமாக! அதற்கு மேல் போய்க் கருப்புப் பொருளாதாரத்தையே அழித்தொழிப்பதற்கு அவசியமான அரசியல் உறுதி இங்குள்ள--அனைத்திந்திய/மாநில அளவிலான--எந்தவொரு முதலாளியக் கட்சிக்கும் இல்லை! அதற்கொரு சிறு சான்று: இந்த மாவீரன் , இந்த அதிரடி நடவடிக்கையை வெளிப்படுத்துவதற்குச் சற்று முன்னதாக, அவரின் "வித்தியாசமான கட்சி"யின் வங்கக் கிளை கொல்கத்தா நகரின் சித்தரஞ்சன் சாலையிலுள்ள இந்தியன் வங்கிக் கணக்கில் 500/1000 ரூபாய்த் தாள்களாகவே ஒரு கோடி ரூபய்ப் போட்டிருக்கிறது; அதற்கெப்படித் தெரிந்தது அத் தாள்கள் சில நொடிகளில் செல்லாதவை ஆகப் போகின்றன என்று?
    காமராசர் காலத்திலேயே கள்ளப் பணத்தை அச்சடித்த கோவை கிருஷ்ணன் போன்றோர் ச்ருிற்ந்னைக்ரளில் 'அரசு விருந்தினராய்' இருந்தனர் என்பது வரலாறு; அண்மையில் கருநாடக சட்டமன்றவளாகத்தில் சிதறிக் கிடந்த சில்லறையாம் இரண்டரைக் கோடி பற்றி இந்த மாவீரனின் மாநிலக் கட்சித் தலைவருக்கு மட்டுமே தெரியும் என்பது இன்றைய செய்தி; மேலும் வரி ஏய்ப்பாளர்களான முன்னாள் பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி, மோசடி ஆன்மீக வணிகன் ராம்தேவ் ஆகியோர் தொடங்கி அத்தனைப் பெருமுதலாளிகளின் சங்கங்களும் இந்த அதிரடித் திட்டத்தை வரவேற்றிருப்பதிலிருந்தும் இத நம்பகத் தன்மை கேள்விக்குள்ளாகியுள்ளது.

    பதிலளிநீக்கு
  3. உங்களின் கனிவான கவனத்துக்கு!:> (1)💰swiss வங்கியில் உள்ள மொத்த இந்திய பணம் ₹ 280 லட்சம் கோடி அது எவ்வளவென்றால் 280,00,000,00,00,000

    அது இந்தியாவிற்கு வந்தால்
    😳 30 வருடங்களுக்கு வரி இல்லாமலேயே பட்ஜெட் தாக்கல் செய்ய முடியும்
    😳60,00,00,000 பேருக்கு அரசு வேலை தரமுடியும்
    😳இந்தியாவின் எல்லா கிராமங்களில் இருந்து டெல்லி வரை நான்கு வழி தார் சாலை அமைக்கமுடியும்
    😳இந்திய குடிமகன்கள் அனைவருக்கும் மாதம் ₹2,000 கொடுத்தால் 60 ஆண்டுகள் தரலாம்
    😳ஐநூறுக்கும் மேட்பட்ட social projectuku இலவச மின்சாரம் தர முடியும்

    "Indian peoples are poor but India is not a poor country"says swiss bank director

    😳இந்தத்தகவலை கூறியவர் Swiss bankஇல் வேலை செய்த இந்தியர். அவர் இப்போது சிறை தண்டனை பெற்று Switzerland சிறையில் உள்ளார்
    😭ஊடகங்கள் இதை முற்றிலுமாக மறைத்துவிண்டன😭
    (2)https://youtu.be/VeLFGg3GsXI

    பதிலளிநீக்கு
  4. நாம் ஒவ்வொருவரும் இந்தியாவை மாற்றிட வேண்டும் என்று விரும்புகிறோம்.ஆனால்! ஒருவரும் தன்னை மாற்றிக்கொள்ள தயாரில்லை..!அப்பட்டமான உண்மை,நம்மை மாற்றிக்கொள்ளாமல் இந்தியா மாறவேண்டும் என்று சொல்வதும்,நடவடிக்கை எடுப்பதும் தண்ணீர்,காற்றில் எழுதுவதற்கு சமம்..!

    பிரதமர் விரித்த வலையில் திமிங்கலங்களை பிடிக்க முடியாது.இதுவலை வீசியவருக்கும் தெரியும்,திமிங்கலங்களுக்கும் தெரியும்.அப்படியிக்க "சொன்னாக் கொன்னிகள் தான் கணிசமாக மாட்டித் தவிக்க போகிறார்கள்...தட்டளிய விடப்படுவார்கள் என்பது நிதர்சனம்.!

    நாட்டில் சட்டங்கள் போடுவது ஆட்சியாளர்கள்,அதை நடைமுறைப் படுத்துவது அதிகாரிகள்,கடைப்பிடிக்க வேண்டியது மக்கள்.இவர்கள் மூவருமே அவரவர்கள் உண்மை நிலையில் இருந்து பார்க்க வேண்டும்.இதை விட்டு இந்த மூவருமே சட்டத்தின் ஓட்டை வழியே தப்பித்துள்ளார்கள் - அல்லது தப்பிக்க வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதுதான் உண்மை!

    "காலம் மாறும்;எழுத்துக்கள் பேசும்"காலம் மாறுகிறது.அரசியலாரின் பேச்சில்,செயலில் மாறுதல்கள் இல்லை,நம்பகதன்மை இல்லை - அவர்களின் பேச்சினை கடைக்கோடி பாமரன் வரை வேறுவழியின்றி அவதணிக்க நேரிடுகிறது.ஆனால்! அரசியல்வாதிகளை விமர்சிப்பவர்கள் எழுதுவதை மாற்றிக்கொள்ள தேவையில்லை..!

    நன்றி..!


    -காயல் அன்பின் அலாவுதீன்-
    anbinala16@gmail.com
    Kayalanbinala.blogspot.in

    பதிலளிநீக்கு