தமிழ்நாட்டின் எதிர்க்கட்சிகள் என்ன செய்கின்றன?


ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிந்தைய, கருணாநிதியின் தள்ளாமைக்குப் பிந்தைய இந்த இரு வாரக் காட்சிகள் மீண்டும் ஒரு கேள்வியைத் திட்டவட்டமாக எழுப்புகின்றன. தமிழ்நாட்டின் எதிர்க்கட்சிகள் என்ன செய்கின்றன? மாநில நலன்களை விடுத்து, ஒரு சீட்டு நிறுவனம்போல அவரவர் நலன், பாதுகாப்பு சார்ந்து காய் நகர்த்தும் இந்த அரசாங்கத்தை எதிர்கொள்ளத் தொலைநோக்கும் துடிப்பும் செயலூக்கமும் ஒருங்கமைந்த, மக்களிடம் இடைவிடாது சுழலும் ஒரு தலைவர் இன்று இருக்கிறாரா?



தமிழகத்தின் அடுத்த தலைமுறைத் தலைவர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய எழுச்சிக்கு கருணாநிதி, ஜெயலலிதா இருவரின் ஆளுமையும் அரசியலும் தடையாக இருப்பதாக எண்ணிப் புலம்புபவர்கள். இருவரும் நேரடியாக இல்லாத அரசியல் களத்தில் தங்களால் மாயாஜாலங்களை நிகழ்த்திவிட முடியும் என்றும் நம்புபவர்கள். இதோ, அப்படியொரு சூழலும் வந்துவிட்டது. என்ன செய்கிறார்கள் எல்லாம்?

ஜெயலலிதா மறைவுக்கு ஒரு வாரம் துக்கம் அனுஷ்டிப்பதாக அறிவித்த அவருடைய சொந்தக் கட்சியான அதிமுககூட, ஜெயலலிதா காலமான அடுத்த நிமிடத்திலிருந்து தீவிரமான அரசியல் காட்சிகளை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகளோ காலவரையற்ற தூக்கத்தில் மூழ்கியிருக்கின்றன. இரண்டு முக்கியமான விவகாரங்களை எடுத்துக்கொள்வோம்.

முதலாவது, பணமதிப்பு நீக்க விவகாரம். மோடி அரசு நவம்பர் 8 அன்று அறிவித்த ரூ.500, ரூ.1,000 பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின் நாட்டின் பொருளாதாரம், குறிப்பாக கிராமப்புறப் பொருளாதாரம் பெரிய அளவில் முடங்கியிருக்கிறது. பெருமளவிலானோருக்கு வேலை அளிக்கும் விவசாயமும் அமைப்புசாராத் துறையும் அடிவாங்கியிருக்கின்றன. நாட்டின் முன்னணித் தொழில்முனைவு மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தின் தொழில்துறை நிலைகுலைந்திருக்கிறது. சாமானிய மக்கள் ஒவ்வொரு நாளும் பணம் எடுக்க வங்கிகளின் முன் கால் கடுக்க காத்து நிற்கிறார்கள்.

வங்கத்தில் உள்ள நண்பர்களிடம் உரையாடும் போது சொல்கிறார்கள், "மோடியின் அரசியலைச் சுக்குநூறாக்கிக்கொண்டிருக்கிறார் மம்தா. பணமதிப்பு நீக்க நடவடிக்கையை முன்வைத்து மத்திய அரசாங்கம் எப்படியெல்லாம் பெருமுதலாளிகளும், பெருநிறுவனங்களும் நாட்டைத் தனதாக்க வழிவகுக்கிறது; மக்களின் இன்னல்களை அரசாங்கம் எவ்வளவு துச்சமெனக் கையாள்கிறது; மூலதனமும் முதலாளித்துவமும் உலகமயமாக்கலும் எவ்வளவு எளிமையாக ஆட்சியாளர்களைத் தம் கையில் போட்டுக்கொண்டு, இந்தியாவைப் பொம்மையாக ஆட்டிப் படைக்கின்றன என்றெல்லாம் மாநிலத்தை ஆளும் திரிணமுல் காங்கிரஸார் ஊருக்கு ஊர் வங்கிகள் முன் நிற்கும் மக்களிடம் அம்பலப்படுத்துகின்றனர். விளைவாக, வங்கத்தின் எதிர்க்கட்சிகளும் இதைக் கையில் எடுக்க, கிராமப்புற - எளிய மக்களிடம் நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளைப் பற்றிப் பேசுவதற்கான சந்தர்ப்பமாக இதை மாற்றியிருக்கின்றனர்."

தமிழக அரசு கடந்த ஒன்றரை மாதத்தில் இதுகுறித்து வாய் திறக்கவில்லை. இரு தினங்கள் முன்பு மோடியைச் சந்தித்த பன்னீர்செல்வம், அவரிடம் அளித்த - "ஜெயலலிதாவுக்குப் பாரத ரத்னா வழங்க வேண்டும், நாடாளுமன்றத்தில் சிலை வைக்க வேண்டும்" என்பன உள்ளிட்ட 29 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய - 141 பக்க மனுவில், பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் மக்கள் படும் அவஸ்தை தொடர்பில் ஒரு வார்த்தை இல்லை. இதுபற்றி அரசை எதிர்க்கேள்வி கேட்கவும் அதன் மக்கள் விரோதப் போக்கை அம்பலப்படுத்தவும் தமிழக எதிர்க்கட்சிகளிடம் எந்தத் திட்டமும் இல்லை.

இரண்டாவது, சேகர் ரெட்டி விவகாரம். வேலூரைச் சேர்ந்த இவர், தமிழக அரசின் ஒப்பந்ததாரர்களில் முக்கியமானவர். மணல் குவாரிகள் முதல் போயஸ் தோட்டம் வரை ஆளுங்கட்சியினர் மத்தியில் செல்வாக்கோடு பேசப்படுபவர். திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் தமிழக அரசின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டவர். சேகர் ரெட்டி தொடர்புடைய இடங்களில் வருமான வரித் துறையினர் சமீபத்தில் நடத்திய சோதனைகளில் ரூ.147 கோடி பிடிபட்டிருக்கிறது.  இதில், புதிய ரூ.2,000 நோட்டுக் கட்டுகளாக மட்டும் பிடிபட்டிருப்பது ரூ.34 கோடி. கூடவே, 22,250 பவுன் - 178 கிலோ தங்கம். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இருவருக்கும் நெருக்கமானவராகச் சொல்லப்படும் சேகர் ரெட்டியோடு பன்னீர்செல்வம் மொட்டை சகிதமாகக் காட்சித் தரும் புகைப்படம் இந்த அரசுக்கும் சேகர் ரெட்டிக்கும் இடையிலான தொடர்பை எளிதில் உணர்த்தக் கூடியது.

டெல்லியில் உள்ள நிதி அமைச்சக அதிகாரிகள், "இது வெறும் பணப் பதுக்கலாக மட்டும் தெரியவில்லை. மாறாக, பழைய ரூபாய் நோட்டுகளைத் தங்கமாகவும், புதிய ரூபாய் நோட்டுகளாகவும் மாற்றும் வேலையும் நடந்ததாகத் தெரிகிறது. அதிகாரத்தில் இருக்கும் பலரின் ஊழல் கறுப்புப் பணம் சேகர் ரெட்டியின் மூலமாக வெள்ளையாக மாறியிருப்பதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன" என்கிறார்கள். வருமான வரித் துறையின் தொடர் நடவடிக்கையாக அடுத்து தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் சோதனை நடந்திருக்கிறது.

தமிழகத்தில் சமீப காலத்தில் உயர் பொறுப்பிலிருப்பவர்கள் எவரும் இவ்வளவு வில்லங்கமான விவகாரங்களில் இத்தனை அப்பட்டமாகச் சிக்கியதில்லை. இதுபற்றி அறிக்கைகள் விடுவதைத் தாண்டி, தமிழக எதிர்க்கட்சிகளுக்குச் செய்ய ஒன்றும் இல்லை.

சுற்றிலும் அரங்கேறும் காட்சிகளைக் கவனியுங்கள். காலமெல்லாம் நடத்திப் பழகிய திமுகவுக்குள்ளான உட்கட்சி கோதாவிலேயே இன்னமும் தீவிரமாக இருக்கிறார் ஸ்டாலின். விஜயகாந்திடம் எதிர்பார்க்க ஏதுமில்லை. தேமுதிகவை மரணப் படுக்கையில் தள்ளிய பெருமித சாதனைக்குப் பின், அடுத்த இலக்கு தேடிக்கொண்டிருக்கிறார் வைகோ. திருமாவளவன் திசை தேடும் குழப்பத்தில் இருக்கிறார். துண்டைக் கையில் போட்டுக்கொள்ளும் பாணியை அரசியலுக்கு அறிமுகப்படுத்திய தா.பாண்டியனும் அவர் வழிவந்த முத்தரசனும் நவீன புரட்சியைப் பவ்ய உடல்மொழி மூலம் நிகழ்த்தும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஜி.ராமகிருஷ்ணனைக் கடைசியாகப் பரபரப்பாக மருத்துவமனைகளின் வாசல்களில் பார்த்த ஞாபகம். உருப்படியான அறிக்கைகளைத் தொடர்ந்து வெளியிடுவதில் ராமதாஸ் முன்னணியில் இருக்கிறார். ஆனால், முதல்வர் கையெழுத்திட பேனாவும் கையுமாகத் திரிந்த அன்புமணி என்று அங்கே ஒருவர் இருந்தாரே, தேர்தலுக்குப் பின் அவர் என்னவானார்? தமிழக காங்கிரஸின் புதிய தலைவர் திருநாவுக்கரசர் எல்லோரையும் விஞ்சுகிறார். "ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் வெள்ளை அறிக்கையும் வேண்டாம்; கறுப்பறிக்கையும் வேண்டாம்" என்று வெள்ளையறிக்கை கேட்டவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடியும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனோடு இது தொடர்பில் அவர் நடத்திவரும் குடுமிப்பிடிச் சண்டையும் அதிமுக அமைச்சர்களையும் திகைப்பில் ஆழ்த்தக் கூடியது! ஒரே ஒரு கேள்வி, எந்த அடிப்படையில் இவர்கள் எல்லாம் தங்களுக்குத் தமிழக மக்கள் நாளை மகுடம் சூட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்?

தமிழகத்தில் ஏனைய எல்லாக் கட்சிகளையும்விட அதிமுக பிரமாண்டமான இடத்தில் நிற்க இதுநாள் வரை அதன் வசம் இரு அஸ்திரங்கள் இருந்தன. ஒன்று, எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் தம் தனிப்பட்ட கவர்ச்சியை மூலதனமாக்கி உருவாக்கிய பிம்பத் தலைமை. மற்றொன்று, கடைசிக் கிராமத்துக்கும் அவர்கள் கொண்டுசென்ற கட்சி அமைப்பு. அதிமுக அதன் பிம்பத் தலைமையை இழந்திருக்கலாம்; அதன் கட்சி அமைப்பு இன்னும் உயிரோட்டத்துடன் இருக்கிறது. அதிமுகவின் எல்லா வியூகங்களையும் மீறி திமுக இவ்வளவு காலம் ஒரு மாற்று சக்தியாக நீடித்து நிற்கிறது என்றால், கருணாநிதியின் அயராத உழைப்பும் திமுகவிடம் அவர் தக்கவைத்த போராட்டக் குணமுமே அதற்கான அடிப்படை. அன்றைய கம்யூனிஸ்ட்டுகள் முதல் பாமக வரையிலும்கூட இந்தப் போராட்டக் குணத்தில் ஊறியிருந்தார்கள். ஜெயலலிதாயிஸத்தின் தாக்கமோ என்னமோ, கடந்த பத்தாண்டுகளில் திமுக உள்ளிட்ட எல்லாக் கட்சிகளுமே கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடமிருந்து விலகின. தொலைக்காட்சிகளும் சமூக வலைதளங்களும் பெருகிவிட்ட இந்நாட்கள், அன்றாடம் ஒரு அறிக்கை, அவ்வப்போது பேட்டிகள், சூழல் நெருக்கும்போது சில போராட்டங்கள் - பொதுக்கூட்டங்கள் என்பதாக மக்கள் அரசியலைச் சுருக்கிவிட்டன. தமிழகத்தைப் பிம்ப அரசியலிலிருந்து விடுவிப்பதற்கான தருணம் இது. தமிழகத்தை ஜெயலலிதாயிஸத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என்றால், எதிர்க்கட்சித் தலைவர்கள் முதலில் தாங்கள் ஜெயலலிதா அல்ல என்பதை உணர வேண்டும்; 'உள்ளேன் ஐயா ரக' அடையாள அரசியலிலிருந்து விடுபட்டு வீதியில் இறங்க வேண்டும்!

டிசம்பர், 2016, ‘தி இந்து’

8 கருத்துகள்:

  1. வருமானவரித்துறையின் நடவடிக்கைகள் எல்லாம் மத்திய அரசின் மாநில உரிமையில் தலையிடும் அதிகார மீறல்களே, அதில் நாட்டின் நலன் மற்றும் ஊழல் ஒழிப்பு என சாயம்பூசுவது மக்களை ஏமாற்றும்வித்தை. வடமாநில்ங்களில் இதுபோன்ற சோதனைகளில் ஈடுபடுமா இந்திய அரசு?

    பதிலளிநீக்கு
  2. நாம் தமிழர் கட்சியின் போக்கை எப்படி பார்க்குறிங்கனு தெரிஞ்சிக்கலாமா

    பதிலளிநீக்கு
  3. நல்ல பதிவு சமஸ்..
    ஏன் இந்தக் கட்சிகளே மீண்டும் ஆள வேண்டும்..இளைஞர் இயக்கம் ஒன்று தலைமையேற்கட்டும் என்பது கூட உங்கள் கட்டுரையின் முடிவாக இருந்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  4. //Jhon Arokiasamy//
    ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிந்தைய, கருணாநிதியின் தள்ளாமைக்குப் பிந்தைய இரு வாரக் காட்சிகளை முன்னிறுத்தி தமிழ்நாட்டின் எதிர்க்கட்சிகள் என்ன செய்கின்றன என்றும் மாநில நலன்களை விடுத்து, ஒரு சீட்டு நிறுவனம்போல அவரவர் நலன், பாதுகாப்பு சார்ந்து காய் நகர்த்தும் இந்த அரசாங்கத்தை எதிர்கொள்ளத் தொலைநோக்கும் துடிப்பும் செயலூக்கமும் ஒருங்கமைந்த, மக்களிடம் இடைவிடாது சுழலும் ஒரு தலைவர் இன்று தமிழக அரசியலில் இருக்கிறாரா? அடுத்த தலைமுறைத் தலைவர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய எழுச்சிக்கு கருணாநிதி, ஜெயலலிதா இருவரின் ஆளுமையும் அரசியலும் தடையாக இருப்பதாக எண்ணிப் புலம்புபவர்கள். இருவரும் நேரடியாக இல்லாத அரசியல் களத்தில் தங்களால் மாயாஜாலங்களை நிகழ்த்திவிட முடியும் என்றும் நம்புபவர்கள். இதோ, அப்படியொரு சூழலும் வந்துவிட்டத நிலையில் என்ன செய்கிறார்கள் என்கிற கேள்விகனைகளை தங்கள் சிறப்பு கட்டுரை வாயிலாக தொடுத்திருக்கும் திரு
    சமஸ் போன்ற இதழியலாளர்கள் தற்போதைய முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையிலான மாநில அரசு மாநிலத்தின் சுயஆட்சி தத்துவத்தைப் அடகு வைத்து பணமதிப்பு நீக்க விவகாரத்தின் கோரதான்டவம் முதலாக மாநிலத்தின் நலன்களை பாதிக்கும் அனைத்து பிரச்சினைகள் வரை மத்திய அரசுக்கு தூபம் போடும் கையறுநிலையை தட்டி கேட்கவில்லை என பொங்கி எழதுவதில் என்ன நியாயம் இருக்கிறது?
    தமிழகம் இமலய ஊழல் மாநிலமாக மாறி ஊழல் வழக்கில் ஒரு மாநில முதல்வரே கைதாகும் நிலை வந்த பின்பும், அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைத்து மட்டத்திலும் ஊழல் ஊரிப்போயிருந்தாலும், வரலாற்றில் இதுவரை இல்லாத பண மழையால் இரு திராவிட கட்சிகள் வாக்காளர்களை குளிர்வித்தும் ஊடகங்களை கருத்து திணிப்பு நாடக கம்பெனிகளாக வளைத்தும் உண்மையான மாற்றத்தின் மன நிலையை மடைமாற்றிய தேர்தல் தேரில் சனநாயகத்தின் நான்காம் தூணின் மான்பை ஏற்றி நடுநிலை தவறி அப்பட்டமாக காற்றில் பறக்கவிட்ட நயவஞ்சக ஊடாக நரிகளை சமஸின் கேள்விகனைகள் துளைக்காதது ஏன்?
    சமீபத்தில் நடந்த இரண்டு சம்பவங்களை கவனிப்போம். நாடு முழுவதும் நெடுஞ்சாலை மது கடைகளை மூட பாமக சட்டப்போர் நடத்தி வெற்றி பெற்றது. ஆனால் தமிழக ஊடகங்கள் எல்லாம் ஒன்று போல வழக்கு தொடுத்த கட்சியின் பெயரையோ, வழக்கறிஞரின் பெயரையோ சொல்லால் இருட்டடிப்பு செய்தன.
    அடுத்து TNPSC உறுப்பினர்களாக சட்டங்களை மீறி தனது கூஜாக்களை நியமித்தது அதிமுக அரசு. ஆரம்பம் முதலே அதை எதிர்த்த பாமக, வழக்கும் தொடுத்து இப்போது வெற்றியும் கண்டுள்ளது. ஆனால் ஊடகங்கள் இதை திமுக வழக்கு என்று ஒரு கூட்டமும், பெயரே சொல்லாமல் இன்னொரு கூட்டமும் மீண்டும் இருட்டடிப்பு செய்தன.

    பதிலளிநீக்கு
  5. //Jhon Arokiasamy//
    குறிப்பிட்ட ஒரு கட்சியை அதன் தலைவரை அக்கட்சியின் உண்மையான வரலாற்று சாதனைகளை தேர்தல் களம் முதல் சட்டக்களம் வரை நிகழ்த்தி மதுவின் பிடியிலிருந்தும் வரையரையற்ற ஊழலின் பிடியிலிருந்தும் விடுவிக்க அவர்கள் எடுக்கும் மாநில மக்கள் மட்டுமல்லாமல் நாட்டு மக்களின் நலன்கள் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுத்தரும் போது வன்மத்துடன இருட்டடிப்பு செய்யும் வஞ்சக ஊடக தர்மத்தை பற்றிய சமஸின் கேள்விகள் எங்கே?
    தனி நபர் சுயநல ஊழல் ஆட்சியில் திளைத்து மக்களை இலவசங்களாலும், சாராயத்தாலும், வாக்குகளுக்கு பணமழையாலும் நனைத்து அவர்களை முட்டாள்களாகவே வைத்திருந்து கனமவள கொள்ளையிலிருந்து கல்வி கொள்ளைவரை உலகளாவிய அதிகாரப்பூர்வ ஊழல் பணத்தில் பல்லாயிரக்கணக்கான கோடிகளை சுருட்டி ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் மட்டுமன்றி, தேர்தல்கால பிச்சையாக பாமர வாக்காளன் முதல் படித்தவன் வரை கொள்கைகளை காட்டிலும் கொள்ளையை பங்கிட்டு அதிகார துஷ்பிரயோகம் செய்து ஆட்சியை பிடித்து பெயரளவில் நடந்த, நடக்கும் ஒரு அரசுக்கு, மாநிலத்தைப் பற்றிய கவலை, கடன் சுமை பற்றிய கவலை, அதன் வளர்ச்சி பற்றிய கவலை என எதுவும் எள்ளளவும் இல்லாத
    ஊழல் ஆட்சியாளர்களுக்கு பண்பாடி சாமரம் வீசும் பரத்தையர் ஊடக அறத்தை பற்றி யார் தான் கேள்வி கேட்பது?
    அதீத ஆளுமைகளாக அரை நூற்றாண்டு சானக்கிய அரசியல் அறிவு திறன் கொண்ட கலைஞர் மீதும், ஆயிரம் யானைகளின் அசூர தையிர பலமும் கொண்ட அம்மையார் ஜெயலலிதா மீதும் ஆளுமைகள் சார்ந்த பார்வையில் அவர்களை அன்னார்ந்து பார்த்து அரசியல் பாடங்களை பல வருடங்கள் படித்தவன் என்பதால் எனக்கு அவர்கள் மீது இன்றளவும் அரசியல் கடந்த வியப்பும் மரியாதையும் உண்டு.
    அரசியல் காலச்சக்கரத்தில் அவர்களின் அத்தியாயம் அத்தியாவசியமானது என்கிற நிலையை தாண்டிய பின்பும் ஜெயலலிதாயிஸம், கருணாநிதியிசம் என்றும் இன்னும் எத்தனை காலம் பிம்ப ஆராதனை அகழ்வாராய்ச்சியில் ஈடுபடுவீர்கள்?

    பதிலளிநீக்கு
  6. //Jhon Arokiasamy//
    சசிகலாவோ, பன்னீர் செல்வமோ என அதிமுகவின் அரசியல் பயணம் அடுத்த ஐந்தாண்டுகள் அவசரமின்றி பயணிக்கும் பட்சத்தில் அனைத்து பிற கட்சிகளும் தமிழகம் முழுவதும் சராசரி மூவாயிரம் வாக்குகள் பெற்று ஒரே நிலையில் இருக்கும் போது, பிரதான எதிர் கட்சியாக அதிமுகவிற்கு இனையான பலத்தில் திமுகவும், இவ்விரு கட்சிகளின் வெற்றி வாய்ப்பை பணபலத்தை, ஊடக இருட்டடிப்பபை மீறி அறுபது தொகுதிகளுக்கும் மேலாக தீர்மானித்து இவ்விருவருக்குமான இடைவெளி வாக்குகளை மிக குறைந்த வித்தியாசத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும் பரவலாக பல தொகுதிகளில் நிரப்புமளவிற்கு தனியாக தமிழகத்தில் மூன்றாவது கட்சி ஒன்று உண்டு என நிரூபித்த தமிழகத்தின் எதிர்கால நம்பிக்கையாக கட்சிகளின் பலம் முதல் தலைவரகளின் தரம் வரை அடுத்த கட்ட தலைவர்களில் ஸ்டாலின், அன்புமணி என்கிற ஆளுமைகள் என ஒருவரையும் விதி விலக்கில்லாமால் எதிர் கட்சி தலைவர்கள் பற்றிய சமஸின் தேர்தல் கடந்த அளவுகோல் விமர்சனம் ஒரு வேளை ஒரு வாததிற்காக முழுவதும் உண்மை என்றே வைத்து கொள்வோம்.
    நீங்களே சொன்ன மாதிரி உருப்படியான அறிக்கைகளை மட்டும் தரும் மருத்துவர் இராமதாசு போன்று, நீங்கள் சொல்லாத அவரது அறிவு, அறிவியல் என ஆக்க பூர்வமான அறிக்கைகள் போலன்றி, நீங்கள் அடிக்கடி குறிப்பிடும் மம்தா பானர்ஜி போன்று நீங்கள் குறிப்பிடாத கெச்சரிவால் போன்று எதற்கெடுத்தாலும் எப்போதும் குறைத்துக்கொண்டிருப்பது மட்டுமல்ல ஆரோக்கியமான அரசியல்.
    அதே போல் எப்போதும் வீதிக்கு வந்து பாய்ந்து கொண்டேயிருக்க வேண்டும் என்கிற நீங்கள் சொல்கிற பாசாங்கு அரசியலை செய்தால் தான் பந்தியில் இடமுண்டு என்கிற வாதம் அரசியல் உத்திகள் நன்கறிந்தவர்கள் செய்வதுமல்ல. அப்படிப் பார்தால் தமிழகம் சார்ந்த அத்தனை பிரச்சினைகளை டெல்லிவரை குரல் கொடுத்து தனி ஒருவராக பன்முனை கருத்துருவாக்க அழுத்த தாக்குதலை பாரத பிரதமர் சந்திப்பிலிருந்து பாராளுமன்றம் வரை தொடுப்பதிலிருந்து தமிழகத்தில் எந்த ஒரு தலைவரும் இல்லாத அளவுக்கு களத்தில் நிற்கும் அனபுமணியை ஊடகம் அறம் சார்ந்து உற்று நோக்க வேண்டும். அப்படி பார்த்தால் ஸ்டாலின் கூட எதிர்கட்சி தலைவர் என்கிற தன் கடமையை கருத்துடன் செய்கிறார் என்றே சொல்லலாம்.
    அரசியல் களம் வேறு. தேர்தல் களம் வேறு. அணுகுமுறைகளும் வேறு என்பது சமஸ் போன்றவர்கள் அறியாததொன்றுமில்லை.
    ஆட்சியில் இருக்கும் போதே இருகிறாரா இல்லையா என யாரும் நெருங்கமுடியாத மர்மக்கோட்டையில் அம்மையார் இருக்கவில்லையா? அது வெறுமனே நீங்கள் கூறும் ஜெயலலிதாயிசத்தினால் மட்டுமல்ல.
    எப்போதும் பாய்ந்து கொண்டே இருந்தால்
    அது புலியல்ல. பூனையாகவும் இருக்கலாம். பதுங்கும் போது பதுங்குவதும், பாயும் போது முறையாக பாய்வதும் போர் முறையறிந்தவர்களின் புலிக்குனம்.
    எங்கே அன்புமணி என்று நீங்கள் எழுப்பும் கேள்வி உங்களையும் இருட்டடிப்பு செய்யும் ஊடகங்களையும் நீங்கள் கேட்டு கொள்ள வேண்டிய கேள்வி. கொஞ்சம் உங்கள் காதுகளை மக்கள் களத்தின் பக்கம் திருப்பி மக்களின் மனநிலை என்ன என்பதை செவி கொடுத்து இனியாவது கேளுங்கள். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்கிற உண்மை விளங்கும். அவர்களின் இன்றைய அரசியல் எதிர்புகள் முதல் நாளைய எதிர்பார்புகள் வரை. அப்படியே ஊடக அறம் சார்ந்து பிரதிபலிக்க உங்களில் எத்தனை பேர் இருக்கிறீர்கள்?
    திராவிட கடவுளர்கள் என்கிற தமிழகத்தின் தலயாய இரு பிம்பங்கள் தங்கள் கண்ணசைவிலும் கையசைவிலும் வெற்றி பெறும் கவர்ச்சிகரமான தாரக தனிநபர் பிம்பங்களை தாண்டி, இருநூற்று முப்பத்து நான்கு தொகுதிகளிலும் இருநூரு முதல் அளவில்லா இமாலய வாக்காளர் கையூட்டு என தங்கள் தொகுதிகளிலேயேயும் பணத்தின் பின்னே மறைந்து கொண்டு வெற்றி பெற வேண்டிய ஒரு தேர்தல் காலகட்டத்தில், முதல் முறையாக இலவசங்கள் இல்லா வளர்ச்சி, பூரண மதுவிலக்கு என தான் வரையறுத்த மாற்றத்தின் தேர்தல் பிரச்சார மகுடிக்கு மற்றவர்களை ஆட்டுவித்த வரலாற்றுக்கு சொந்தக்காரர் அன்புமணி என்கிற உண்மையை பதிவிட்டுவிட்டு உங்கள் விமர்சன கேள்விகளை நீங்கள் தொடுத்திருந்தால் உங்கள் கேள்வி அர்தமுள்ள கேள்வியாக இருந்திருக்கும்.
    நான் உங்கள் சமகால எழுத்துக்களை அரசியல், சமூகம் என பலகோணம் சார்ந்த எண்ணங்களை விரும்பி மதிப்பவன் என்கிற உரிமையில் கேட்கிறேன்.
    இனிமேலாவது செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?

    பதிலளிநீக்கு
  7. உள்ளேன் ஐயா ரக' அடையாள அரசியலிலிருந்து விடுபட்டு வீதியில் இறங்க வேண்டும்!

    இது கட்சிகளுக்கும்,அரசியல்வாதிகளுக்கும் மட்டுமின்றி ஜனநாயகத்தின் நான்காவது தூணுக்கும் பொருந்தும் என்பதை புரிந்து அனைவரும் செயல்பட வேண்டும் நண்பரே...

    பதிலளிநீக்கு