பத்ம விருதுகளை எவ்வளவு காலத்திற்குப் புனிதப் போர்வைக்குள் பூட்டிவைத்திருப்பீர்கள்?



பத்ம விருதுகளில் இந்த ஆண்டு பாலிவுட் நட்சத்திரங்களுக்கு இடமில்லாமல் போனதை, மும்பையில் விவாதம் ஆக்கியிருக்கிறார்கள். இதற்குப் பின் இரண்டு கூற்றுகள் உண்டு. நாட்டில் தலைநகர் டெல்லிக்கு அடுத்து அதிகமான பத்ம விருதுகளைக் குவித்திருப்பது மகாராஷ்டிரம். 2017 வரை அறிவிக்கப்பட்டிருக்கும் 4373 பத்ம விருதுகளில் 764 விருதுகளை அது பெற்றிருக்கிறது. 397 விருதுகளுடன் அதற்கு அடுத்த நிலையில் உள்ள தமிழ்நாட்டுடன் ஒப்பிடுகையில், மகாராஷ்டிர லாபிக்கு டெல்லியில் உள்ள செல்வாக்கை உணர முடியும். பத்ம விருதுப் பட்டியலில் எப்போதும் மத்திய ஆட்சியாளர்களின் செல்லக்குட்டிகள் சினிமாக்காரர்கள். ஏன் அப்படி?



பத்ம விருதுப் பட்டியலை அடிப்படையாக்கி, அரசியல் பேசுவது பலருக்குச் சங்கடம் அளிக்கலாம். ஆனால், பத்ம விருதுகளின் ஆக அடிப்படைத் தகுதியே வெற்று தேசியத்தில் குடிகொண்டிருப்பதை நாம் உடைத்துதான் தீர வேண்டும். ஆக, அரசு சார்பில் அளிக்கப்படும் உயரிய விருதுகளைப் பெறுவோரை 'வெற்று தேசியர்கள்' எனக் குறிப்பிட முடியுமா? அப்படி அல்ல. பத்ம விருதுகளைப் பெறுபவர்களில் மிகச் சிறந்த தேசியவாதிகள், நாடு கொண்டாட வேண்டிய கலைஞர்கள், கல்வியாளர்கள், பல்துறை ஆளுமைகளும் இருக்கின்றனர். எனது குற்றச்சாட்டின் மையம் பட்டியலில் இடம்பெற்றிருப்பவர்கள் தொடர்பானது அல்ல; இடம்பெறாதவர்கள் தொடர்பானது. சரியாகச் சொல்வதானால், தன்னுடைய நிபந்தனையற்ற ஆதரவாளர்களை அங்கீகரித்து, அவர்களைக் கொண்டாடும் நம்முடைய தேசியம், விமர்சகர்களைப் புறக்கணிப்பதன் மூலம் வெளியே சொல்ல விழையும் செய்தி என்ன?

நீங்கள் இந்த நாட்டுக்காகவும், சமூகத்துக்காகவும் எந்த ஒரு துறை சார்ந்தும், எவ்வளவு பெரிய பங்களிப்பையும் செய்யலாம். விருதைத் தீர்மானிப்பது அது மட்டும் அல்ல. அடிப்படையில் டெல்லியை எதிர்த்துப் பேசுபவரா இல்லையா என்பதே உங்களுக்கான விருதை உறுதிசெய்கிறது. மேலும், இரு தகுதிகள். ஒன்று அபாரமான புகழை வெகுஜன தளத்தில் நீங்கள் குவித்திருக்க வேண்டும் அல்லது டெல்லி யில் லாபி செய்ய உங்களுக்கு ஆட்கள் வேண்டும். நம் மாநிலத்துக்கு எந்த அளவுக்கு டெல்லியுடன் ஒட்டுறவு இருக்கிறதோ, அதற்கேற்பவே விருதுகளின் கனம் இருக்கும்.

பாரத ரத்னா விருதுக்கு அடுத்த, உயரிய விருதான பத்ம விபூஷன் விருது அருணாச்சல பிரதேசம், சண்டிகர், சத்தீஸ்கர், மணிப்பூர், மிசோரம், நாகலாந்து என்று 10 மாநிலங்களைச் சேர்ந்த ஒருவருக்குக்கூட இதுநாள் வரை அளிக்கப்படவில்லை. இந்த 63 ஆண்டு பத்ம விருது வரலாற்றில் பிஹார், அஸாம், ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், மேகாலயா, திரிபுரா ஆகியவை ஒரு பத்ம விபூஷன் விருதை மட்டுமே பெற்றிருக்கின்றன என்றால், அதன் பின்னுள்ள அரசியல் என்ன?

கல்வி, கலை, இலக்கியம், திரைப்படம், கல்வி, மருத்துவம், விளையாட்டு, ஆன்மிகம், பொது விவகாரம், சமூக சேவை என்று பல்வேறு துறைகளையும் உள்ளடக்கிய பத்ம விருதுகளுக்கான பிரிவுகளில் எழுத்தாளர் களின் நிலை பரிதாபகரமானது. தமிழகம் இதுவரை பெற்றுள்ள 397 விருதுகளில் இலக்கியப் பிரிவில் இடம்பெற்றிருப்பவர்களில் கொத்தமங்கலம் சுப்பு, ஜெயகாந்தன், வைரமுத்து, வாலி, இந்திரா பார்த்தசாரதி போன்றோரைத் தவிர தமிழிலக்கிய உலகம் அறிந்த பெயர்கள் எதுவும் இல்லை. சுந்தர ராமசாமி, மௌனி, ஜி. நாகராஜன், ப.சிங்காரம், சி. மணி, அசோகமித்திரன், கி.ராஜநாராயணன் இவர்களையெல்லாம்போல தானுண்டு தன் எழுத்துண்டு என்று எழுதிக்கொண்டிருப்பவர்களை ஒரு நாளும் பத்ம விருது சீந்தாது.

நிறுவனங்களுக்கு வெளியே பெரும் பணிகளை மேற்கொண்ட எஸ்.வி.ராஜதுரை போன்ற ஆய்வாளர்கள், தன்னுடைய பணி யினூடாகவே ஏராளமான புத்தகங்களை எழுதிக் குவித்திருக்கும் அ. மார்க்ஸ் போன்ற கல்வியாளர்கள்-செயல்பாட்டாளர்கள்; தன்னுடைய வேலையைத் தூக்கியெறிந்துவிட்டு, இயற்கை வேளாண்மையைத் தோளில் தூக்கிச்சென்று, விவசாயிகளை இயற்கை வேளாண்மை நோக்கித் திரும்ப அழைத்து வந்த நம்மாழ்வார் போன்ற களப்பணியாளர்களை ஒரு நாளும் தேசிய விருதுகள் சீந்தாது. ஏனென்றால், அரசின் செயல்பாடுகளை விமர்சித்துக் கருத்துகளைச் சொல்லக் கூடியவர்கள் இவர்கள்! பன்மைத்துவத்திற்கு எதிரான வெற்று தேசியத்தைக் கேள்விக்குள்ளாக்குபவர்கள்!

பெருமளவில் அரசியல் விமர்சனங்களிலிருந்து ஒதுங்கி நிற்கும் ஒரு சினிமா கலைஞரையோ, விளையாட்டு வீரரையோ, தொழில் அதிபரையோ விருதுக்குத் தேர்ந்தெடுப்பது எளிதானது. அவர் எந்தச் சித்தாந்தத்தைக் கொண்டிருக்கிறார் என்ற பிரச்சினையே எழப்போவதில்லை. எழுதுபவரோ அபாயகரமானவர்.

பத்ம விருதுகளில் சாதியும், மதமும் இனமும் இருக்கின்றனவா? இது கடுமையான விவாதத்துக்குள்ளாக்கப்பட வேண்டும். இதுவரையிலான பட்டியல் தீர்க்கமான முன்னுரிமைகளையும் புறக்கணிப்புகளையும் தன்னகத்தே உள்ளடக்கியிருக்கிறது. உண்மையான ஜனநாயகம், வேறுபாடுகளற்ற பரிபூரணப் பிரதிநிதித்துவத்திலும், எல்லையற்ற சுதந்திரக் கருத்துகளுக்கான சூழலிலும் இருக்கிறது. வெறுமனே ‘இந்தியா வாழ்க!’ என்று கோஷம் போடுவதைக் காட்டிலும், அமைப்பின் பெயரால் எல்லாவற்றையும் நியாயப்படுத்துவதைக் காட்டிலும், நூறு மடங்கு உயரியது இந்நாட்டைத் தாங்கி நிற்கும் பன்மைத்துவத்துக்காகப் பேசுவதும், அமைப்புசார் அநீதிகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராகத் தொடர்ந்து செயல்படுவதும்.

இந்தியா உண்மையான குடியரசாக, பரந்து விரிந்த ஜனநாயகத்தைப் போற்றும் ஒரு தாராளவாத நாடாக ஒரு நாள் மலரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அந்த நாளில், “இவ்வளவு காலமும் இவர்களைப் புறக்கணித்ததற்காக நாங்கள் மன்னிப்பு கோருகிறோம்” என்ற அறிவிப்போடு, காலம்சென்ற பலருக்கு இந்நாட்டின் அரசு விருதுகளை அறிவிக்க வேண்டியிருக்கும். அந்த நாளில், இந்திய தேசியத்தைத் தொடர்ந்து எதிர்த்துவந்த - அதே சமயம், இந்நாட்டின் ஜனநாயகத்தின் வேரில் புற்றுநோயெனக் கவ்வியிருக்கும், சாதிக்கு எதிராகக் கடைசிவரை போராடிய - தந்தை பெரியாருக்கும் மாநிலங்களின் சுயாட்சிக்காகக் கடைசி வரை பேசி, எழுதிவந்த அண்ணாவுக்கும் 'பாரத ரத்னா' விருதை அறிவித்துத் தன்னை இந்நாடு பெருமைப்படுத்திக்கொள்ளும்!

- ஜனவரி, ‘தி இந்து’

3 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. சுயமாக விண்ணப்பித்தோ அல்லது பரிந்துரைகளின் மேல் கொண்ட பரிகாசத்தினாலோ வழக்கப்படும் இந்த பத்ம விருதுகளின் மேல் எனக்கு எப்போதும் மதிப்பில்லை.

    இந்த 2017 ஆம் ஆண்டின் விருதுப்பட்டியலும் இதையே எனக்கு நினைவூட்டுகிறது.

    மேலும் தாங்கள் பதிவிட்டிருப்பது போல் தந்தை பெரியார் மற்றும் அறிஞர் அண்ணா அவர்களுக்கு பாரதரத்னா வழங்கப்படும் நாள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரே பிரதமராகப் பொறுப்பேற்று இருப்பார் என்பதே என் திண்ணம்.

    பதிலளிநீக்கு

  3. பெருமளவில் அரசியல் விமர்சனங்களிலிருந்து ஒதுங்கி நிற்கும் ஒரு சினிமா கலைஞரையோ, விளையாட்டு வீரரையோ, தொழில் அதிபரையோ விருதுக்குத் தேர்ந்தெடுப்பது எளிதானது. அவர் எந்தச் சித்தாந்தத்தைக் கொண்டிருக்கிறார் என்ற பிரச்சினையே எழப்போவதில்லை. எழுதுபவரோ அபாயகரமானவர்.##

    பதிலளிநீக்கு