சென்னை பசுமைவழிச் சாலையிலுள்ள முதல்வர் பன்னீர்செல்வத்தின் வீடு ஜேஜேவென்று இருக்கிறது. அதிமுக தலைகளைத் தாண்டிப் பொதுமக்கள் தலைகள். நேராக உள்ளே போகிறார்கள். திண்ணை வாசலில் நின்று முழக்கமிடுகிறார்கள். பன்னீர்செல்வம் வெளியே வருகிறார். ஆதரவைத் தெரிவிக்கிறார்கள். கும்பிடு போட்டு, நாலொரு வார்த்தைகள் பேசி நன்றி தெரிவிக்கிறார். எல்லோருக்கும் கைகுலுக்குகிறார். பின் அவர் வீட்டுக்குள் நுழைந்ததும் இவர்களும் கலைந்துவிடுகிறார்கள். அப்புறம் மாட்டுத்தொழுவம் வரை சென்று பார்க்கிறார்கள். செல்பேசியில் சில சுயபடங்கள். பந்தலில் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக நடக்கும் பிரச்சாரத்தைக் கொஞ்ச நேரம் பார்த்து ஆர்ப்பரிக்கிறார்கள். அடுத்து, திண்ணையில் அமர்ந்திருக்கும் தொழில்நுட்பக் குழுவிடம் சென்று தங்கள் சுயவிவரங்களை அளிக்கிறார்கள். பன்னீர்செல்வம் முதல்வராகத் தொடர, நடத்தப்படும் இணைய கையெழுத்து இயக்கத்தில் தங்களையும் இணைத்துக்கொள்கிறார்கள். புறப்படுகிறார்கள். அடுத்தடுத்து கூட்டம் வருவதும் போவதுமாக இருக்கிறது.
தமிழகத்தின் ஆளுங்கட்சிக்குள் அதன் பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும் இடையில் நடந்துகொண்டிருக்கும் அதிகாரச் சண்டை தொடர்பிலான ஆயிரமாயிரம் கதைகளில் மிக முக்கியமானதாக எனக்குத் தோன்றுவது தமிழ் மக்களின் இந்த நேரடி அரசியல் பங்கெடுப்பு. வீதியிலிருந்து சமையலறை வரை இன்று அரசியல் விவாதமே ஆதிக்கம் செலுத்துகிறது. ஆளுநரின் அதிகாரம் என்ன, பாஜக அரசு எப்படிக் காய்களை நகர்த்துகிறது, சசிகலா மீதுள்ள சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு என்னவாகும் என்று சகலமும் பேசுகிறார்கள். குறிப்பாக பெண்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள். சில வாரங்களுக்கு முன் ‘ஜல்லிக்கட்டு பாதுகாக்கப்பட வேண்டும்’ என்று தமிழகமெங்கும் லட்சக்கணக்கில் மக்கள் கூடியபோது, சசிகலா, பன்னீர்செல்வம் இருவரின் பெயர்களுமே கூட்டத்தினர் மத்தியில் ஒருசேர வறுபட்டன. இன்று அந்தக் கூட்டத்தின் பெரும் பகுதி சசிகலாவுக்கு எதிராகவும் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும் எப்படிப் பேசுகிறது?
நான் முன்பே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தபடி, ‘ஜெயலலிதாவின் பிம்பம் ஒரு முனையில் கடவுள் ஆக்கப்பட, எதிர்முனையில் சாத்தான் ஆக்கப்பட்ட பிம்பம் சசிகலா.’ அதிலிருந்து சசிகலா விடுபடுவது அத்தனை எளிதல்ல. இதை அவர் உணரவில்லை; மாறாக, தன்னை அடுத்த கடவுளாக அவர் எண்ணிக்கொண்டார். தனக்கு எதிரே இருந்தவர்களுக்கு மனிதர்களுக்கான குறைந்தபட்ச மதிப்பைக்கூட அவர் அளிக்க முற்பட்டதாகத் தெரியவில்லை. கட்சியின் மூத்த தலைவர்களில் தொடங்கி எல்லோரும் தன் கால்களில் விழுவதை ரசித்தபடி ஒரு பேரரசிபோல அவர் வலம் வரத் தொடங்கியபோது, தமிழகத்தின் மூலைமுடுக்குகளில் எல்லாம் சுவரொட்டிகளில் அவருடைய முகம் சின்னாபின்னமாகிக்கொண்டிருந்தது. இப்போது பன்னீர்செல்வம் பிம்பம் புனிதமாகவும் சசிகலாவே காரணமாகிவருகிறார்.
ஜெயலலிதாவைச் சுற்றி நடந்த ஊழல்களின் வசூல் மையமாக சசிகலா குடும்பம் திகழ்ந்ததே சசிகலா மீதான இன்றைய வெறுப்புக்கான காரணம் என்றால், சசிகலா குடும்பத்தின் பிரதான சேவகர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் பன்னீர்செல்வம். 2001-க்குப் பிறகு விசுவரூபம் எடுத்த பன்னீர்செல்வம் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை, நிதித் துறை என்று அமைச்சர் ஆக ஆட்சியிலும் பொருளாளர் ஆகக் கட்சியிலும் அதிமுகவின் நிதிப் புழக்கத்தின் முக்கியமான மையத்தில் இருந்தவர். இக்காலகட்ட அதிமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து எவரும் பன்னீர்செல்வத்தைப் பிரித்துப் பேச முடியாது. இன்றைக்கும் சேகர் ரெட்டி முறைகேடு வழக்கைக் கையில் வைத்துக்கொண்டே, பன்னீர்செல்வத்தை மத்தியில் ஆளும் பாஜக பின்னிருந்து ஆட்டுவிக்கிறது என்று பேசப்படும் ரகசியங்கள் எளிதில் நிராகரிக்கக் கூடியவை அல்ல. ஆனால், சசிகலாவைப் பிரிந்த அடுத்த நொடி பன்னீர்செல்வம் விசுவரூபம் எடுத்தார். எப்படி? சமூகவலைதளங்களில் ஒருவர் சொல்லியிருந்ததுபோல, “இரண்டுமே கொள்ளிகள் என்றாலும், எந்தக் கொள்ளி சின்ன கொள்ளி என்பதும் மக்கள் பேச்சுக்கு யார் மதிப்பளிக்கிறார் என்பதும் முக்கியம்!”
பன்னீர்செல்வத்தின் வீட்டுச் சூழல் தமிழக மக்களின் உளவியலை ஓரளவுக்குப் புரிந்துகொள்ள உதவுகிறது. ஒரு அரசியல்வாதியின் வீட்டிற்குள் - அதுவும் முதல்வரின் வீட்டுக்குள் - இவ்வளவு சுதந்திரமாக உள்ளே நுழைந்து புழங்க முடியும் என்பதும் பொதுமக்களோடு சகஜமாக உரையாடக் கூடியவராக பன்னீர்செல்வம் இருக்கிறார் என்பதும் அவர்களுக்கு உவகையை அளிக்கிறது. முன்னதாக, தை எழுச்சிப் போராட்டத்தின்போதே, பன்னீர்செல்வத்துக்கு எதிரான அவ்வளவு எதிர்ப்பு கோஷங்கள் நடுவிலும்கூட சில முக்கியமான சலனங்களைக் கவனிக்க முடிந்தது. ஒரே நாளில் அப்போது நான்கு முறை செய்தியாளர்களை பன்னீர்செல்வம் சந்தித்ததை சமூக வலைதளங்களில் பலர் குறிப்பிட்டிருந்தார்கள். முக்கியமாக, “சமூக வலைதளங்களில் உங்களைக் கடுமையாக விமர்சிக்கிறார்களே?” என்ற கேள்விக்கு, “பொதுவாழ்க்கைக்கு வந்துவிட்டால் இப்படியான விமர்சனங்களையெல்லாம் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்” என்று சிரித்தவாறே அவர் பதிலளித்ததைப் பலரும் பாராட்டியிருந்தார்கள். மிகக் குறுகிய காலம் என்றாலும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் சட்டப்பேரவையில் இணக்கமான உறவை அவர் பராமரித்ததும், அதிமுக, திமுக இரு பிரதான கட்சிகள் இடையிலும் ஆக்கபூர்வமான ஒரு அரசியல் உறவு உருவானதும் தமிழகத்தின் கசப்பு அரசியல் கலாச்சாரத்தில் நிகழ்ந்த பெரிய மாற்றம். மேலும், தமிழகத்தில் மக்கள் ஒரு பொதுநலக் கோரிக்கையோடு பெருந்திரளாகக் களத்தில் உட்கார்ந்தபோது, ஆட்சியாளர் உடனடியாக அதற்குச் செவிசாய்த்ததும் பன்னீர்செல்வத்தின் ஆட்சியிலேயே நடந்தது. ஆக, “பன்னீர்செல்வம் மீண்டும் ஆட்சியில் தொடர்ந்து, அவருடைய இதே எளிமையான, எவரும் அணுகத்தக்க ஒரு அரசியல் பாணியையும் தொடரும் பட்சத்தில், அதிமுகவைத் தாண்டியும் தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் கலாச்சாரம் வளர்த்தெடுக்கப்பட அது வழிவகுக்கும்” என்று மக்கள் நம்புகிறார்கள் என்றால், அதை முற்றிலுமாக நிராகரிக்க முடியாது.
ஒரு விஷயம் முக்கியமெனத் தோன்றுகிறது. “என்னுடைய ஆட்சியாளராக நீங்கள் இருக்க முடியாது!” என்று ஒரு அரசியல்வாதியை நோக்கி இத்தனை அழுத்தமாக மக்களிடமிருந்து எதிர்ப்புணர்வு வெளிப்படுவது இந்தியாவில் இதுவே முதல் முறை. அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களால் அடுத்த முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சசிகலாவை எதிர்த்தும், பன்னீர்செல்வத்தை ஆதரித்தும் நடத்தப்படும் இயக்கத்தில் இதுநாள் வரை 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இணைந்திருக்கிறார்கள். சமூக ஊடகங்கள் இதைச் சாத்தியமாக்கி இருக்கின்றன. சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களைச் செல்பேசியில் தொடர்புகொண்டு, தன்னுடைய அடையாளத்தைத் துணிச்சலாக வெளிப்படுத்தியபடி, “உங்கள் முடிவில் எனக்கு விருப்பமில்லை. என்னுடைய தேர்வு இது” என்று வாக்காளர்கள் கூறும் கலாச்சாரம் மிக முக்கியமான ஜனநாயக நடவடிக்கை. இதன் தாக்கத்தை நேரடியாக மக்கள் பிரதிநிதிகளிடம் பார்க்க முடிகிறது. சசிகலாவிடமிருந்து விலகி பன்னீர்செல்வம் நோக்கிச் செல்பவர்கள் பலரும் சொல்லிவைத்தார்போல “மக்களின் விருப்பப்படி முடிவு” என்று அறிவித்துச் செல்வது கவனிக்க வேண்டியதாகும்.
இந்தச் சூழலைத் தமிழகத்தைத் தாண்டி விவாதிக்க வேண்டும் என்றால், இந்திய மக்களுக்கு ‘ஆட்சியாளர்களைத் திரும்பப் பெறும் உரிமை’யை அளிக்க வேண்டிய தேவையை இது உணர்த்துகிறது என்பேன். இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, “மக்களுக்குப் பிடிக்காத சூழலில் ஒரு அரசியல் முடிவு அல்லது மக்கள் பிரதிநிதியைத் திரும்பப்பெறும் உரிமை மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும்” என்பது தொடர்பில் நிறையவே பேசப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான எம்.என்.ராய் இதுகுறித்து தொடர்ந்து வாதிட்ட முன்னோடி. அண்ணா 1962-ல் தன்னுடைய மாநிலங்களவை உரையில் கூறினார்: “ஜனநாயகத்தைப் பொறுத்தவரையில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையும் ஆட்சியாளர்களின் குறிப்பிட்ட செயல்பாட்டுக்கு மக்களின் ஆதரவு உண்டா, இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ளும் கருத்தறியும் வாக்கெடுப்பு முறையும் இல்லாதவரை ஜனநாயகத்துக்கான எந்தப் பயனையும் நாம் எதிர்பார்க்க முடியாது!” நெருக்கடிநிலையின்போது ஜெயப்பிரகாஷ் நாராயணன் இதுகுறித்து தொடர்ந்து பேசிவந்தார். பின்னர் வந்த ஜனதா அரசும் இதுகுறித்துப் பேசியது. அப்போது தொடங்கி வெவ்வேறு காலகட்டங்களில் அத்வானி பலமுறை பேசியிருக்கிறார். பாஜக இதுதொடர்பில் ஒருமுறை தேர்தல் வாக்குறுதிகூட அளித்தது நினைவில் இருக்கிறது.
அமெரிக்கா, சுவிஸ், பிலிப்பைன்ஸ் என்று சில நாடுகளில் ‘திரும்பப் பெறும் உரிமை’ குறிப்பிட்ட அளவில் இருக்கிறது. வெனிசுலாவில் அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த உரிமை மக்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் ஊழலில் ஈடுபடும் நீதிபதிகள், அதிகாரிகள், பலமுறை திரும்ப அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவில் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், பிஹார், ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளைத் திரும்பப்பெறும் அதிகாரம் மட்டும் சில ஆண்டுகளுக்கு முன் அளிக்கப்பட்டது. ஆனால், முழுமையான அளவில் ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் இந்த உரிமையை அளிக்க இந்திய அரசியல்வாதிகள் தயாராக இல்லை.
பொதுவாக, ஒரு அரசியல் முடிவு தொடர்பில் மக்களிடத்தில் பெரும் விவாதம் உருவாகும் சூழலில், அந்நாட்டின் மக்கள்தொகையில் குறிப்பிட்ட சதவிகிதத்தினரிடத்தில் கையெழுத்து பெறும் இயக்கமாகத் தொடங்கி, கணிசமான ஆதரவு அதற்குக் கிடைத்தால் இதுகுறித்து அரசு வாக்கெடுப்பு நடத்தும் சூழல் உருவாக்கப்பட்டு, வாக்கெடுப்பு முடிவின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படுவதே நடைமுறையில் இருக்கிறது. இங்கிலாந்து இப்படி சமீபத்தில் எடுத்த மிக முக்கியமான முடிவு ‘பிரெக்ஸிட்’ - ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் முடிவு.
இந்தியாவில், இந்த உரிமை கூடாது என்று விவாதிப்போரிடம் எவ்வளவு காரணங்கள் இருக்கின்றனவோ, அதே அளவிலான காரணங்கள் இந்த உரிமை வேண்டும் என்று கோருவோரிடமும் இருக்கின்றன. நாட்டின் பெரும்பகுதி மக்களிடம் இன்றைக்கு ‘ஆதார்’ போன்ற பிரத்யேகமான அடையாள அட்டையும் செல்பேசியும் இருக்கும் நிலையில், மின்னணுத் தொழில்நுட்பம் கருத்தறியும் வாக்கெடுப்புக்கான கூடுதல் சாத்தியங்களை ஆட்சியாளர்களுக்கு அளிக்கிறது. தமக்குப் பிடிக்காத அரசியல் முடிவுகளை மக்கள் நிராகரிக்கும் உரிமை ஜனநாயகத்தின் மிக முக்கியமான ஒரு அங்கம். இந்திய மக்கள் இந்த உரிமையை எப்படிக் கையாள்வது என்று இன்று தமிழகம் தனக்கே உரிய பாணியில் இந்தியாவுக்கு அடையாளம் காட்டுகிறது!
- பிப்ரவரி, 2017, ‘தி இந்து’
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக