ஜெயலலிதா விடுதலையாகிவிட்டார்… மக்கள் தண்டனையைச் சுமக்கிறார்கள்!


சொத்துக்குவிப்பு வழக்கில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது; மரணம் அவரை விடுவித்துவிட்டாலும், அவருடைய தோழி சசிகலா, அவருடைய உறவினர்கள் சுதாகரன், இளவரசிஆகியோர் நான்காண்டுகள் சிறைத் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தத் தீர்ப்பு அரசியல்வாதிகளுக்கு ஒரு எச்சரிக்கை என்று பலரும் கூறுகிறார்கள். இருக்கலாம். கூடவே இந்திய நீதித் துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்களையும் இத்தீர்ப்பு நமக்கு உணர்த்துவதாகவே நான் கருதுகிறேன்.

லட்சம் கோடிகளை ஊழல்கள் எட்டிவிட்ட காலகட்டத்தில், வெறும் ரூ.66.6 கோடி சொத்துக்குவிப்பு வழக்கில் அளிக்கப்பட்டிருக்கும் தண்டனை இன்றைய தலைமுறையினர் பலருக்கு ஆச்சரியமாகவும், சிலருக்கு அதீதமாகவும்கூடத் தோன்றலாம். 1991-96 காலகட்டத்தை நினைவில் வைத்திருப்பவர்களுக்கு இந்த வழக்கின் முக்கியத்துவம் புரியும்.

தமிழகத்தின் இருண்ட காலகட்டங்களில் ஒன்று அது. வீதிக்கு வீதி சுவர்களில் ‘அன்னையே’, ‘மேரி மாதாவே’, ‘துர்க்கையே’ என்ற பட்டங்களோடும் அந்தந்தக் கடவுளர் தோற்றங்களோடும் ஜெயலலிதா சிரித்த காலகட்டம். ஊர்கள்தோறும் ஐம்பதடி, நூறடி கட் அவுட்களில் ஜெயலலிதா நின்ற காலகட்டம். ஜெயலலிதா சாலையைக்  கடக்கிறார் என்றால், சிக்னலில் பிரதமர் நரசிம்ம ராவ்  சிக்னலில் காத்திருக்கவைக்கப்பட்ட காலகட்டம்.  துறைகள்தோறும் ஜெயலலிதா-சசிகலாவின் பெயரால் லஞ்சமும் ஊழலும் மலிந்திருந்த காலகட்டம். கொஞ்சம் பெரிதாக வீடு கட்டுபவர்கள் “ஜெயலலிதா - சசிகலா கும்பல் கண்ணுல இது பட்டுடாம இருக்கணும்” என்று கிண்டலாகக் கூறிக்கொண்ட அளவுக்கு தோழியர் பெயரால் சொத்துக்குவிப்புகள் நடந்த காலகட்டம். சட்டப்பேரவையில் சபாநாயகரின் நாற்காலியில் எந்தப் பதவியிலும் இல்லாத  சசிகலாவை உட்காரவைத்து எல்லா மாண்புகளையும் ஜெயலலிதா உருக்குலைத்த காலகட்டம். எதிர்த்த அரசியல் செயல்பாட்டாளர்கள், விமர்சித்த பத்திரிகையாளர்கள், அடக்குமுறைக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த வழக்குரைஞர்கள் கொடூரத் தாக்குதலுக்குள்ளான காலகட்டம். அடுத்த தேர்தலில் ஜெயலலிதாவே பர்கூர் தொகுதியில் தோற்கும் அளவுக்கு மக்களிடத்தில் அதிருப்தியும் கோபமும் கொந்தளித்திருந்த காலகட்டம். சசிகலா குடும்பத்தின் மீதான தமிழக மக்களின் வெறுப்பு அந்தக் காலகட்டத்தில் வேரூன்றிய விருட்சம்.


ஆட்சியிலிருந்த ஒரு முதல்வர் மீது வழக்குத் தொடர ஆளுநர் அனுமதி அளித்தது அதுவே முதல் முறை. சுமார் 20-க்கும் மேற்பட்ட ஊழல் வழக்குகள் அப்போது ஜெயலலிதா மீது தொடுக்கப்பட்டன. பல வழக்குகளில் சசிகலாவும் கூட்டாளி. ஊழல் குற்றச்சாட்டுகள் பலவும் ஏதோ ஒரு புதிய திட்டத்தின்போது தரகுத் தொகையாக ஒரு தொகையை ஆட்சியாளர் வாங்கிக்கொள்வது போன்ற வழமையான குற்றச்சாட்டின் நீட்சி அல்ல; மாறாக, ஊழலின் நிமித்தம் அத்துமீறலில் ஈடுபடும் இயல்பைக் கொண்டவை. ‘டான்சி நில அபகரிப்பு வழக்கு’ என்றால், அதன் அடிப்படைக் குற்றச்சாட்டின் மையம் ``அரசுக்குச் சொந்தமான நிலத்தை ஜெயலலிதா அபகரித்துக்கொண்டார்’’ என்பதாக இருந்தது.  கொடைக்கானல் ‘பிளஸன்ட் ஸ்டே விடுதி வழக்கு’ என்றால், அதன் அடிப்படைக் குற்றச்சாட்டின் மையம் “இந்த விடுதிக்கு அனுமதி கொடுப்பதற்காக, கொடைக்கானலில் தளங்கள் கட்டுவதற்கான விதியையே சட்டப்பேரவையில் சட்டத்திருத்தம் கொண்டுவந்து ஜெயலலிதா மாற்றினார்” என்பதாக இருந்தது.

நீதித் துறையையும் எல்லா விழுமியங்களையும் காலில் போட்டு நசுக்கும் வகையிலேயே ஜெயலலிதா இந்த வழக்குகளை எதிர்கொண்டார். நீதிமன்றத்துக்கு வெளியே அதிமுகவினர் இந்த வழக்குகளை எதிர்கொண்ட விதமும் அசிங்கமானது. கொடைக்கானல் விடுதி வழக்கில் கீழமை நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, நீதிமன்றத்தால் ஜெயலலிதா தண்டனைக்குள்ளானபோது, அதைக் கண்டித்து தமிழகம் எங்கும் அதிமுகவினர் நடத்திய கலவரம் ஒரு உதாரணம். தருமபுரியில் கல்லூரி மாணவிகள் வந்த ஒரு பஸ்ஸுக்குத் தீ வைக்கப்பட்டதில் உயிரோடு மூன்று மாணவிகள் எரிக்கப்பட்டார்கள். பிற்காலத்தில் இந்த வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுபட்டார். இப்படி தன் மீதான ஒவ்வொரு வழக்கையும் தவிடுபொடியாக்கினார்.

ஜெயலலிதா மீதான வழக்குகளில் சொத்துக்குவிப்பு வழக்கு மட்டும் அவர் காலைச் சுற்றிய பாம்பாக நீடித்தது. ‘’வெறும் ஒரு ரூபாய் அடையாளச் சம்பளம் மட்டுமே வாங்கிக்கொண்டு மக்களுக்காக உழைக்கிறேன்’’ என்று சொன்ன ஜெயலலிதாவின் ரூ.2.01 கோடி சொத்து அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.66.6 கோடியாக எப்படி  மாறியது என்பதை அடிப்படையாகக் கொண்டு நடந்த வழக்கு இது. ஜெயலலிதாவின் வீட்டில் சோதனையின்போது கணக்கில் கொண்டுவரப்பட்ட 10,000 புடவைகளில் தொடங்கி கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற அவருடைய வளர்ப்பு மகன் திருமணச் செலவு விவரங்கள், முதல்வராகப் பதவியேற்கும் முன் ஜெயலலிதா, சசிகலா பெயரில் இருந்த 12 ஆக இருந்து, பதவிக்காலம் முடியும்போது 52 ஆக உயர்ந்த வங்கிக் கணக்குகள் வரையில் ஏராளமான வலுவான ஆதாரங்களோடு ஜெயலலிதா சிக்கிய வழக்கு இது. எப்படியெல்லாம் வழக்கை இழுத்தடிக்க முடியுமோ அப்படியெல்லாம் இழுத்தடித்தார் ஜெயலலிதா. ’’வழக்கை விரைந்து முடிக்க தனி நீதிமன்றம் கூடாது’’ என்று வாதிட்டவர் அவர். 18 ஆண்டுகள். 14 நீதிபதிகள் மாறினர். ‘’ஆறு மாத காலமாக விசாரணையே நடக்கவில்லை. விசாரணைக்கு ஜெயலலிதா தரப்பு ஒத்துழைப்பு தருவதே இல்லை. ஒவ்வொரு நாளும் நான் தனியாக வந்து நீதிமன்றத்தில் உட்கார்ந்து செல்கிறேன். தனிமைச் சிறையில் இருப்பதுபோல உணர்கிறேன்’’ என்று புலம்பினார் நீதிபதி பச்சாபுரே.

2014 செப்டம்பர் 27 அன்று பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி' குன்ஹா இந்த வழக்கில் தீர்ப்பளித்தார். ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி நால்வரும் குற்றவாளிகள் என்று அறிவித்ததோடு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் விதித்து அவர் தீர்ப்பளித்தபோது, ஜெயலலிதா நான்காவது முறையாக தமிழக முதல்வர் ஆகியிருந்தார். ‘நாட்டிலேயே பதவியிலிருக்கும்போது ஊழல் வழக்கில் தண்டனைக்குள்ளாகி சிறை செல்லும் முதல் முதல்வர்’ என்ற பெயர் ஏற்கெனவே அவருக்கு இருந்தது.

மேல்முறையீட்டிற்கு அவர் சென்றார். வெறும் 21 நாட்களில் அவருக்கு ஜாமீன் அளித்தது உச்ச நீதிமன்றம். அலைக்கற்றை முறைகேடு வழக்கில், விசாரணைக் கைதிகளாகவே ஆ.ராசா, கனிமொழி இருவரும் ஜாமீன் பெற ஓராண்டு காத்திருக்க வேண்டியிருந்தது இங்கு குறிப்பிட வேண்டியது. கூடவே, 18 ஆண்டுகள் நீதித் துறையை இழுத்தடித்தவரின் மேல்முறையீட்டை அடுத்த மூன்று மாதங்களுக்குள் விரைந்து முடிக்குமாறும் உத்தரவிட்டது. அடுத்த சில மாதங்களில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி நால்வரையும் நிராபராதி என்று சொல்லி விடுவித்தார். அவருடைய தீர்ப்பின் வாதங்கள் ஒவ்வொன்றும் குன்ஹாவின் வாதங்களுடன் ஒப்பிடுகையில் அதிர்ச்சியளிக்கக் கூடிய வகையில் இருப்பதாக அப்போதே சட்டத் துறை வல்லுநர்கள், முன்னாள் நீதிபதிகள் பலரும் சொன்னார்கள். எல்லாவற்றையும் தாண்டி, குமாரசாமியின் தீர்ப்பின் அஸ்திவாரமாக எது அமைந்திருந்ததோ, அந்த நியாயத்துக்கான கூட்டுத்தொகைக் கணக்கில் அவர் தவறிழைத்திருந்தார். தீர்ப்பு வந்த மறுநாளே அவர் செய்த தவறு அம்பலத்திற்கு வந்தது. ஆக, தீர்ப்பின் மையம் எதுவோ, அதுவே கேள்விக்குள்ளாகிவிட்ட நிலையில், ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதற்கு எதிராக கர்நாடக அரசுத் தரப்பு மேல்முறையீட்டுக்குச் சென்றபோது, அதை அவசர வழக்காகக் கருதி உச்ச நீதிமன்றம் செயல்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால், இது ஒரு தனிப்பட்ட நபர் சார்ந்த வழக்கல்ல. மாறாக ஒரு மாநிலத்தின் ஏழரைக் கோடி மக்களின் நிகழ்காலம், எதிர்காலம் தொடர்பிலானது. ஆனால், அப்படி நடக்கவில்லை. மாதக்கணக்கில் நீண்டது விசாரணை. 2016 ஜூன் மாதத்திலேயே இரு தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், கிட்டத்தட்ட 8 மாதங்களுக்குப் பிறகே தீர்ப்பை அளித்தது உச்ச நீதிமன்றம். இடையிலேயே மீண்டும் தேர்தல் வந்தது. ஜெயலலிதா மீண்டும் வென்றார். ஆறாவது முறையாக பதவியேற்றுக்கொண்டார். வெகு விரைவிலேயே உடல்நலம் குன்றி இறந்தும்போனார். இதையடுத்து, அடுத்த முதல்வர் ஆவதற்கான எல்லாக் காய்களையும் நகர்த்தி ஆட்சி அமைக்கக் கோரும் கடிதத்தையும் ஆளுநருக்கு கொடுத்துக் காத்திருக்கிறார் இந்த வழக்கின் அடுத்த குற்றவாளியான சசிகலா. இந்தத் தீர்ப்பு இன்னும் சில ஆண்டுகள் கழித்து வந்திருந்தால்தான், யார் அதைக் கேள்வி கேட்க முடியும்? இன்னும் என்னென்னவெல்லாம் நடந்திருக்கக் கூடும்?

உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில், மூன்று கோடிக்கும் மேற்பட்ட வழக்குகள் இந்திய நீதிமன்றங்களில் தேங்கிக்கிடக்கின்றன. இவற்றில் உச்ச, உயர் நீதிமன்றங்களில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் தேங்கியிருக்கின்றன. இந்திய நீதித் துறையின் தாமதம் தொடர்பில் பேசும்போதெல்லாம் நீதித் துறைக்கான ஆட்கள் பற்றாக்குறை தொடர்பில் பேசுவது இயல்பானது. இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு, 17 பேர் எனும் விகிதத்திலேயே நீதிபதிகள் இருக்கின்றனர். நீதிபதிகளின் இந்த எண்ணிக்கை அமெரிக்காவில் 151, சீனாவில் 170 என்ற சூழலோடு ஒப்பிடும்போது நம்முடைய உள்கட்டமைப்பின் போதாமை புரியும் என்று கூறப்படுவதுண்டு. பிரச்சினைக்கான அடிப்படை இந்த எண்ணிக்கையில் அல்ல; மாறாக நோயின் வெளி அறிகுறிகளில் ஒன்று இது என்றே நான் கருதுகிறேன்.

அரசியலமைப்புச் சட்டப்படி, ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதி உறுதிசெய்யப்பட்டிருக்கும் ஒரு நாட்டில் சரியான நேரத்தில் அளிக்கப்படாத நீதியானது அநீதி எனும் அறவுணர்வு நம்முடைய ஆட்சியாளர்களின் பிரக்ஞையிலேயே இல்லை. உலகிலேயே நீதித் துறைக்குக் குறைவான நிதியை ஒதுக்கீடுசெய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பது அதன் அப்பட்டமான வெளிப்பாடுகளில் ஒன்று. இந்நாட்டு மக்களை இரண்டாந்தரக் குடிமக்களாக வைத்து, நீதிப் பரிபாலனம் நடத்திய ஆங்கிலேயே அரசின் காலனியாதிக்க மனோபாவத்திலிருந்து விடுபடாத மனோநிலையின் தொடர்ச்சி இது. இந்திய நீதித் துறையின் சாபக்கேடு தாமதம் என்று சொல்லப்படுவதுண்டு. சாமானிய மனிதர்களுக்குத்தான் அது சாபம்; ஜெயலலிதாக்களுக்கு அல்ல. எந்த தாமதம் சாமனிய மக்களை நீதிக்காக அலைக்கழியவிட்டு, நீதிக்கான முயற்சியையே தண்டனையாக்குகிறதோ, அதே தாமதம்தான் அதிகாரத்தில் இருப்பவர்களையும் செல்வந்தர்களையும் அவர்களுடைய குற்றங்களைப் பாதுகாக்கும் கவசமாகவும் இருக்கிறது.

ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு இங்கு ஒரு உதாரணம்.  லாலு பிரசாத் யாதவ் வழக்கில் என்ன நடந்தது? 1996-ல் பீகார் முதல்வராக அவர் இருந்தபோது, ரூ. 37.7 கோடி முறைகேடு நடந்ததாக வழக்குத் தொடர்ந்தார்கள். 2014-ல் இந்த வழக்கில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு, ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டபோது, 75 நாள் சிறைவாசத்திற்குப் பின், ஜாமீன் வாங்கிக்கொண்டு வெளியே வந்துவிட்டார் லாலு. வழக்கு இப்போது மேல்முறையீட்டில் இருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பிந்தைய இடைப்பட்ட காலகட்டத்தில், இரண்டு பிரதமர்களைத் தேர்ந்தெடுக்கும் இடத்தில் அவர் இருந்தார். ஒரு முறை அவரே பிரதமராக முற்பட்டார். பிறகு, ஐந்தாண்டுகள் ரயில்வே துறை அமைச்சராக இருந்தார். இப்போதும் பிகாரில் நிதிஷ்குமாரின் ஆட்சி லாலுவின் தயவில்தான் நடக்கிறது.

ப.சிதம்பரம் 2009 மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு வென்றார். “இந்த வெற்றி செல்லாது” என்று அறிவிக்கக் கோரி வழக்குத் தொடர்ந்தார் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர். அந்த மக்களவை காலாவதியாகியும் மூன்றாண்டுகள் ஆகப்போகிறது. இன்று வரை நிலுவையில் இருக்கிறது வழக்கு. இடைப்பட்ட காலகட்டத்தில், மத்திய நிதியமைச்சர், உள்துறை அமைச்சர் பொறுப்புகளில் மிக முக்கியமான முடிவுகளை எடுப்பவராகச் செயல்பட்டு, ஒருகட்டத்தில் நாட்டின் தலையெழுத்தையே தீர்மானிக்கும் பிரதமர் பதவிக்கான பரிசீலனையிலும் சிதம்பரத்தின் பெயர் அடிபட்டது. அவரது வெற்றி நியாயமானதாகவே இருக்கலாம். அதை உறுதிப்படுத்துவதும், நிராகரிப்பதும் உடனடியாக நடக்க வேண்டியது இல்லையா?

கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் இடத்தில் இருப்பவர்கள் மக்கள் பிரதிநிதிகள். ஆட்சியோடு தொடர்புடைய அவர்கள் சார்ந்த வழக்குகள் இழுத்தடிக்கப்பட நீதித்துறை அனுமதிக்கக் கூடாது.
ஒரு குற்றவாளியிடம் மக்கள் ஆட்சிப் பரிபாலனம் பெறுவது கொடுமை. “ஜெயலலிதாவும் சசிகலாவும் முறைகேடாக சேர்த்த சொத்துகளை, முறையாகச் சம்பாதித்து சேர்த்த சொத்துகளைப் போலக் காட்டுவதற்கு போயஸ் தோட்ட இல்லத்தில் சதி செய்து செயல்படுத்தியுள்ளனர். இது ஆழ்ந்த சதியின் விளைவு” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தம் தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். அந்தச் சதியின் நீட்சிதான் நிழல் அதிகார மையமே நிஜ அதிகார மையமாக உருவெடுக்கும் கனவிலும் ஒளிந்திருந்தது. எது ஒரு குற்றவாளிக்கு இந்த அசாத்திய துணிச்சலைத் தந்தது? நீதியின் மீதான பயமின்மைக்கு அதில் முக்கியமான பங்கு உண்டு. தாமத நீதிப் பரிபாலனத்துக்கு அதில் முக்கியமான பங்கு உண்டு. தாமதமான இந்தத் தீர்ப்பு ஒருவகையில் ஜெயலலிதாவுக்கு விடுதலையைத் தந்துவிட்டது; ஆனால், ஒரு ஆட்சியாளராக அவர் எடுத்த ஒவ்வொரு தவறான முடிவுகளுக்காகவும் தண்டனையை ஏழரைக் கோடி மக்கள் இன்று சுமக்கிறார்கள். இந்திய நீதித் துறை தன்னை ஆழமான சுயபரிசீலனைக்கு உள்ளாக்கிக்கொள்ள வேண்டும்!

பிப், 2017, ‘தி இந்து’

6 கருத்துகள்:

 1. வழக்கம் போலவே பிய்த்து உதறி விட்டீர்கள் சமஸ்! நன்றி!

  பதிலளிநீக்கு
 2. இனியாவது அரசியல் நடக்குமா ?என்ற கட்டுரையை மறு வாசிப்பு செய்யுங்கள் சமஸ்..

  பதிலளிநீக்கு
 3. சட்டப்பேரவையில் சபாநாயகரின் நாற்காலியில் எந்தப் பதவியிலும் இல்லாத சசிகலாவை உட்காரவைத்து எல்லா மாண்புகளையும் ஜெயலலிதா உருக்குலைத்த காலகட்டம்////
  .
  :O இதைப்பற்றி என் போன்ற இளைய தலைமுறையினருக்கு இப்போதுதான் தெரிய வருகிறது!இதுமாதிரி பல பழைய அபத்தங்களை வெளிப்படுத்த ஊடகவியலாளர்கள் முன்வர வேண்டும்!

  பதிலளிநீக்கு