இந்தி தேசியம் ஆள்கிறது... நாம்?


சுதந்திரத்துக்கு முன் நம்மிடம் இருந்த இலக்குகளின் உயரத்தையும் அமைப்பில் நமக்கிருந்த செல்வாக்கையும் காட்டிலும் நாம் இன்று பெருமளவில் சரிந்திருக்கிறோம்.

தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளின் அரை நூற்றாண்டுத் தொடர் ஆட்சிக்கு வித்திட்ட அண்ணாவின் முக்கியமான முழக்கங்களில் ஒன்று, ‘வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது!’ இன்றைக்கு யாரேனும் இப்படி ஒரு முழக்கத்தைக் கூறினால், பொதுவெளியில் இருப்பவர்கள் கொஞ்சம் வித்தியாசமாகப் பார்ப்பார்கள். ஏனென்றால், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட சமூக நலக் குறியீடுகளில் நாட்டிலேயே காத்திரமான இடத்தில் நிற்கும் மாநிலங்களில் ஒன்று தமிழகம். உலகமயமாக்கல் சூழலில், தாராளமயமாக்கலை வேகமாகச் சுவீகரித்துக்கொண்ட மாநிலங்களில் ஒன்று என்பதால், பொருளாதார வளர்ச்சியிலும் தனி நபர் வருவாய் விகிதத்திலும் நாட்டில் முன்னணியில் நிற்கும் மாநிலம். மேலும், மத்தியில் இடையில் உருவான கூட்டணி யுக அரசியல் சூழலையும் இரு திராவிடக் கட்சிகளும் பயன்படுத்திக்கொண்டன. மத்திய அமைச்சரவையில் முக்கியமான இடத்தில் அவை இருந்தன. ஆக, இன்றைக்கு நாம் பெரிய இடத்தில் இருப்பதாகப் பொதுவில் நாம் நம்புகிறோம். இந்த நம்பிக்கை எந்த அளவுக்கு உண்மையானது?

நாங்கள் - சில நண்பர்கள் இதுகுறித்து கடந்த வாரம் விவாதித்தோம். முதலில், சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டம், சுதந்திரத்துக்குப் பிந்தைய காலகட்டம் என வகுத்துக்கொண்டோம். அடுத்து, சுதந்திரத்துக்குப் பிந்தைய காலகட்டத்தில், திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு முந்தைய காலகட்டம், பிந்தைய காலகட்டம் என வகுத்துக்கொண்டோம். தமிழ்நாடு கூடவே இந்தி பேசாத மாநிலங்கள் பலவற்றின் சூழலையும் எடுத்துக்கொண்டு விவாதித்தோம். முதலில் அரசியலமைப்புச் சட்டரீதியாகவே, மாநிலங்களின் உரிமை சார்ந்து நிறைய இழந்துவிட்டோம்; தவிர, சுதந்திரத்துக்கு முன் நம்மிடம் இருந்த இலக்குகளின் உயரத்தையும் அமைப்பில் நமக்கிருந்த செல்வாக்கையும் காட்டிலும் நாம் பெருமளவில் சரிந்திருக்கிறோம் எனும் முடிவுக்கே நாங்கள் வந்துசேர வேண்டியிருந்தது. பலருக்கும் இது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும்கூட இருக்கலாம். உண்மை இதுவே.

வாழ்வதும் ஆள்வதும் ஒன்றா?
கல்வி, சுகாதாரம் போன்ற சமூகநலக் காரணிகளையும் பொதுவான பொருளாதார வளர்ச்சியையும் அடிப்படையாக முன்வைத்து ஏனைய மாநிலங்களைக் காட்டிலும் நாம் சிறப்பாக இருக்கிறோம் என்று நம்மை நாமே தட்டிக்கொடுத்துக்கொள்வது வேறு. ஒரு நாட்டை ஆள்வது வேறு. இன்றைய இந்திய ஒன்றியத்தின் முடிவுகளைத் தீர்மானிக்கும் இடத்தில், நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் இடத்தில் உள்ளபடி நம்முடைய பங்கு என்ன?

இந்தக் கேள்விதான் எங்களுடைய விவாதத்தின் மையப் புள்ளி. நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் ஐந்து முக்கியமான துறைகளை நாங்கள் கணக்கில் எடுத்துக்கொண்டாம். 1. நாட்டின் எல்லா முடிவுகளையும் முன்னின்று தீர்மானிக்கும் அரசியல், 2. அரசியல்வாதிகளின் கொள்கை முடிவுகளுக்கு வழிகாட்டும் அதிகாரவர்க்கம், 3. அரசியல் முடிவுகளைப் பின்னின்று இயக்கும் தொழில் துறை, 4. நாட்டின் பார்வையைக் கட்டமைக்கும் ஊடகங்கள், 5. நாட்டின் சட்டங்களின் பரப்பைத் தங்கள் வாதங்களால் தீர்மானிக்கும் சட்ட வல்லுநர்கள்.



தேசிய அரசியல் யார் கையில்?
இன்றைய தேசிய அரசியலைத் தீர்மானிக்கும் காங்கிரஸ், பாஜக இரு தேசியக் கட்சிகளும் யார் கையில் இருக்கின்றன? இரு கட்சிகளின் முடிவுகளையும் தீர்மானிக்கும் இடங்களில் இருப்பவர்கள்: மோகன் பாகவத், நரேந்திர மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, நிதின் கட்கரி, வெங்கய்ய நாயுடு, ராம் மாதவ், ராம் லால், சுரேஷ் சோனி; ராகுல் காந்தி, திக் விஜய் சிங், ப.சிதம்பரம், ஜோதிர் ஆதித்ய சிந்தியா, அஜய் மக்கான், ரந்தீர் சூரஜ்வாலா, ஜிதேந்திர சிங் ஆல்வார், சச்சின் பைலட், ஜிதின் பிரசாதா, விஜேந்திர சிங்கலா.

அதிகாரத்தின் கயிறுகள் யார் கையில்?
இன்றைய தேசிய அரசின் கொள்கை முடிவுகளைத் தீர்மானிக்கும் இடத்தில் இருப்பவர்கள் இவர்கள்: நிருபேந்திர மிஸ்ரா, அஜித் டோவல், பிகே மிஸ்ரா, அமிதாப் காந்த், ஸ்வரூப் சந்திரா, பாஸ்கர் குல்பே, பிரதீப் கே சின்ஹா, எஸ்கே ஸ்ரீவத்ஸா, அர்விந்த் பனகாரியா, அர்விந்த் சுப்ரமண்யன்.

நாட்டின் ஆகப்பெரும் செல்வம் யார் கையில்?
இந்தியாவின் 58% செல்வம் இந்தியாவின் 1% செல்வந்தர்கள் கைகளில் இருக்கிறது என்று சமீபத்தில் தெரிவித்தது உலகப் பொருளாதார அமைப்புக்காக ஆக்ஸ்ஃபோம் மேற்கொண்ட ஆய்வறிக்கை. குறிப்பாக, 57 பெருங்கோடீஸ்வரர்களின் கைகளில் உள்ள செல்வம் 70% இந்தியர்களின் கைகளில் உள்ள செல்வத்துக்குச் சமம் என்றது. உள்ளபடி அவர்களே பின்னின்று இந்திய அரசின் முடிவுகளைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றனர். இந்தியாவின் முதல்நிலைச் செல்வந்தர்களின் பட்டியல் இது. சொத்து மதிப்பு அடிப்படையில் ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டது: முகேஷ் அம்பானி (ரூ.15 லட்சம் கோடி), திலிப் சங்வி (ரூ.11 லட்சம் கோடி), இந்துஜா சகோதரர்கள் (ரூ.10.1 லட்சம் கோடி), அசிம் பிரேம்ஜி (ரூ.10 லட்சம் கோடி), பல்லோன்ஜி மிஸ்திரி (ரூ.9.31 லட்சம் கோடி), லட்சுமி மிட்டல் (ரூ.8.37 லட்சம் கோடி), கோத்ரெஜ் குடும்பம் (ரூ.8.31 லட்சம் கோடி), ஷிவ் நாடார் (ரூ.7.64 லட்சம் கோடி), குமார் பிர்லா (ரூ.5.89 லட்சம் கோடி), சைரஸ் பூனாவாலா (ரூ.5.76 லட்சம் கோடி).

சட்டம் யார் கையில்?
இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின் எல்லைகளை விஸ்தரிக்கும் இடத்தில் இருப்ப வர்கள் இவர்கள்: ராம் ஜேத்மலானி, கபில் சிபல், கேகே வேணுகோபால், இந்திரா ஜெய்ஸிங், முகுல் ரோட்டகி, ஹரீஷ் சால்வே, சோலி சொராப்ஜி, ஃபாலி நாரிமன், ராஜீவ் தவன்.

ஊடகங்கள் யார் கையில்?
இந்தியாவில் ஆளும் வர்க்கத்தின் சிந்தனையைக் கட்டமைக்கும் இடத்திலிருக்கும், அதிகம் பார்க்கப்படும் ஆங்கிலச் செய்தித் தொலைக்காட்சிகள் இவை: டைம்ஸ் நவ், ஹெட்லைன்ஸ் டுடே, என்டிடிவி, சிஎன்என் - ஐபிஎன். இந்தியாவில் அதிகம் விற்கும் ஆங்கிலப் பத்திரிகைகள் இவை: டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் டைம்ஸ், தி இந்து,
தி டெலிகிராஃப், டெக்கான் க்ரானிக்கல், மும்பை மிரர், எகனாமிக் டைம்ஸ், டிஎன்ஏ, தி ட்ரிப்யூன், இந்தியன் எக்ஸ்பிரஸ். அதிகம் பார்க்கப்படும் ஆங்கில இணைய தளங்கள் இவை: இந்தியாடைம்ஸ்.காம், என்டிடிவி.காம், இந்தியா டுடே.காம், திஇந்து.காம், ஒன்இந்தியா.காம்.

பட்டியலின் அடிப்படை என்ன?
இந்தப் பட்டியலில் இன்றைக்கு உள்ள பெயர்கள் நாளைக்கு மாறலாம். ஆனால், கடந்த 70 ஆண்டுகளின் பட்டியலைப் பரிசீலிக்கையில், இந்தப் பெயர்கள் பிரதிபலிக்கும் மொழி/இன/மாநில/சித்தாந்தப் பிரதிநிதித்துவம் பெரிய அளவில் மாறவில்லை அல்லது முன்னதாக இருந்த பன்மைத்துவப் பிரதிநிதித்துவமும் இப்போது குறைந்துவருகிறது என்பதே உண்மை.
ஓர் உதாரணத்துக்கு பத்தாண்டுகளுக்கும் மேலாக ‘இந்தியா டுடே’ ஆண்டுதோறும் வெளியிட்டுவரும் ‘செல்வாக்கு மிக்கவர்களின் பட்டியல்’ விவரத்தை இங்கே தரலாம் என்று நினைக்கிறேன். இது போன்ற பட்டியலானது அந்தந்த ஆண்டில் பல்வேறு துறைகளிலும் உச்சம் தொடுபவர்களை உள்ளடக்கியதாகும். ‘இந்தியா டுடே’ இதழ் இப்படி ஒரு பட்டியலைத் தொடங்கிய நாள் முதல் 2016 வரை அதன் எல்லாப் பட்டியல்களிலும் இடம்பெற்றிருக்கும் 10 பேரின் பட்டியல் இது: முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, அனில் அம்பானி, பார்தி மிட்டல், கே.என்.பிர்லா, சுபாஷ் சந்திரா, அசிம் பிரேம்ஜி, அமிதாப் பச்சன், ஷாரூக் கான்.

பத்திரிகையைக் குற்றம் சொல்ல ஏதுமில்லை. உண்மையான இந்தியச் சூழலையே அது பிரதிபலிக்கிறது. இப்படியான பட்டியல்களையெல்லாம் கூர்ந்து கவனித்தால், அதில் ஒரு செயற்கையான பன்மைத்துவம் கொண்டுவரப்பட்டிருப்பதைப் பார்க்க முடியும். ஆம், இந்தி பேசாத மாநிலங்களின் முகங்களும் அதில் இடம்பெற்றிருக்கும். அவர்களின் பட்டியல் இப்படியானதாக இருக்கும்: விஸ்வநாதன் ஆனந்த், ஏஆர் ரஹ்மான், சுந்தர் பிச்சை, சத்ய நாதெள்ளா, ரவிச்சந்திரன் அஸ்வின்... இந்திய அரசின் முடிவுகளில் முகேஷ் அம்பானி ஏற்படுத்த வல்ல தாக்கமும் விஸ்வநாதன் ஆனந்த் ஏற்படுத்த வல்ல தாக்கமும் ஒன்றா? டாடா நிறுவனத்தின் தலைவர் பதவியில் சந்திரசேகரன் உட்காருவது வேறு; ரத்தன் டாடா போன்ற ஒரு முதலாளியாக உருவெடுப்பது வேறு!

வெறும் பதவிகள் மட்டுமே இங்கே அளவுகோல் இல்லை. ஒரு மாநிலத்தைத் தாண்டி டெல்லி அதிகார வளையத்துக்குள் நுழைவது என்றாலே தன்னுடைய பிராந்தியம்சார் அக்கறைகளைத் துறந்துவிட்டு, பெரும்பான்மை ஜோதிக்குள் ஐக்கியமாகிவிடுவது எனும் எழுதப்படாத விதியைத் தாண்டிச் செயல்பட எத்தனை பேரை இன்றைய நம்முடைய அமைப்பு அனுமதிக்கிறது?  முன்பிருந்த குறைந்தபட்ச பேரச் சூழலையும் இன்று நாம் இழந்திருக்கிறோம்.

நாளுக்கு நாள் சுருங்குகிறோமா?
காந்தியுடனும் நேருவுடனும் சரிநிகராகப் பேசக் கூடிய ராஜாஜி போன்ற ஒரு ஆளுமை, இன்று அரசியல் களத்தில் உண்டா? மாநிலங்களின் உரிமையை   உரக்கப் பேசிய அண்ணா போன்ற ஒரு தொலைநோக்குத் தலைவர் வழிவந்தவர்களில், எத்தனை பேர் இன்றைக்கு அந்த அக்கறையுடன் இருக்கின்றனர்? ப.சிதம்பரத்துக்குப் பின் தேசிய அரசியலில் பங்கேற்கத்தக்க எத்தனை ஆளுமைகள் அதற்கேற்ற தகுதிகளுடன் இங்கே இருக்கின்றனர்? 138 ஆண்டுகளுக்கு முன்பே தேசிய பத்திரிகைகளுக்குச் சவால் விடத்தக்க ஒரு ஆங்கிலப் பத்திரிகை - ‘தி இந்து’ - இங்கு தொடங்கப்பட்டது. அதற்குப் பின் எத்தனை முயற்சிகள் அப்படி இங்கே தொடங்கப்பட்டிருக்கின்றன; தேசிய அளவில் அவற்றின் தாக்கம் என்ன? ஊடகத் துறையில் இன்று வருமானம், பார்வையாளர்கள் கணக்குப்படி முன்னணியில் இருக்கும் ‘சன் குழுமம்’ போன்ற நிறுவனங்கள்கூட தேசிய அளவிலான முடிவுகளைத் தீர்மானிக்கும் இடத்தில் ஒரு பொருட்டல்ல என்பதும் அவற்றுக்கும் அப்படியான பொது அரசியல் இலக்குகள் ஏதும் இருப்பதுமில்லை என்பதே உண்மை. உள்ளபடி நம்முடைய கவனங்கள், அக்கறைகள், போட்டிகள், வெற்றிகள் எல்லாமே இன்றைக்கு ஒரு உள்வட்டத்துக்குள் வரையறுக்கப்பட்டுவிட்டன. நம்முடைய இலக்குகள் ஒரு குறுகிய எல்லைக்குள் சுருங்கிவிட்டன அல்லது சுருக்கப்பட்டுவிட்டன. தேடிவந்த பிரதமர் பதவியை காமராஜர் மறுத்தது என்பது ஒரு வரலாற்றுக் குறியீடு.

வெறும் வெளி ஆதிக்கம் மட்டுமே இதன் பின்னுள்ள காரணம் என்று நான் நினைக்கவில்லை. நாமும் உள்ளுக்குள் சுருங்கிவிட்டோம். ஒருகாலத்தில் இந்திய ஆட்சிப் பணித் துறையில் முன்வரிசையில் இருந்த தமிழகம், இன்றைக்கு வெகுவாகக் கீழே இறங்கிவிட்டது ஒரு உதாரணம். 1970-களின் தொடக்கம் முதலாக கடந்த நான்கு தசாப்தங்களில் இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 57.5% பேர் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். அடுத்த நிலையிலிருக்கும் எல்லா மொழியினரின் கூட்டுத்தொகையைக் காட்டிலும் இது அதிகம். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் 8.9%  மட்டுமே. வெறும் பொருளியல் கனவுகளே இன்றைய தமிழ்ச் சமூகத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசுக்கு எதிராக சுதேசி முழக்கத்துடன் ஒரு கப்பல் நிறுவனத்தைத் தொடங்கிய வ.உ.சிதம்பரனாரின் கனவு எங்கே; இன்றைய தமிழ்ச் சமூகத்தின் கனவுகள் எங்கே?

நமக்குப் பெரிய அளவிலான கனவுகள் இல்லையா? தேசிய அளவில் உயரப் பறக்கத் துணிச்சல் இல்லையா? தாழ்வு மனப்பான்மை நம்மை அழுத்துகிறதா? ஒருவரையொருவர் தூக்கிவிட்டு, நம்மைச் சேர்ந்தவர்களை மேலே உயர்த்தி, நாமும் உயரும் பண்பு நமக்கு இல்லையா? மொழி நமக்கு ஒரு தடையாக இருக்கிறதா? இந்தி பிரதேசத்தின் பெரும்பான்மை ஆதிக்க அரசியலுக்கு முகங்கொடுக்கும் மனத் துணிவு இல்லையா? இப்படி ஏராளமான கேள்விகளை அடுக்கலாம். இவை எல்லாவற்றுக்குமே இந்த விஷயத்தில் தொடர்பு இருக்கிறது என்றே தோன்றுகிறது.

மீண்டும் அதே புள்ளி!
ஆக, ஏழு தசாப்தங்களில் நாம் பெரிய ஒரு சுற்று சுற்றிவிட்டு மீண்டும் அதே புள்ளியில் வந்து நிற்கிறோம். அரை நூற்றாண்டுக்கு முன் ‘வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது’ முழக்கம் எழுப்பப்பட்ட சூழலைவிடவும் இன்றைய சூழல் மோசம் என்று சொல்லலாம். ஏனென்றால், இன்றைக்கு ‘இந்தி தேசிய’த்தின் எல்லைகள் வடக்கைத் தாண்டி நீண்டுவிட்டன. டெல்லி, ஹரியானா, உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பிஹார், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகியவற்றைத் தாண்டி மகாராஷ்டிரமும் குஜராத்தும்கூடக் கிட்டத்தட்ட ‘இந்தி தேசிய’த்தின் எல்லைக்குள் வந்துவிட்டன. தமிழகம் நீங்கலாக ஏனைய இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தி ஒரு அந்நிய மொழி இல்லை. கொல்கத்தாவும் பெங்களூருவும் ஹைதராபாத்தும் இன்றைக்கு அதனதன் தாய்மொழிகளுக்கு இணையாக இந்தி பேசுவோர் எண்ணிக்கை அதிகரித்துவரும் மாநிலங்கள்.

இது பன்மைத்துவத்துக்கான பணி!
இந்த நாட்டைப் பிராந்திய நலன்கள் பிரதானமாகக் கட்டமைக்கப்பட்ட, அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்ட ஒரு ஒன்றியமாகவே காந்தி கனவு கண்டார். ஆரம்பக் கால காங்கிரஸ் அதற்கான அடிகளை எடுத்துவைத்தது. ஆனால், இந்திய அரசியல் சட்டம் உருவானபோது மத்தியில் அதிகாரங்கள் குவிக்கப்பட்ட ஒரு அரசாக இது உருவாக்கப்பட்டது. தேசப் பிரிவினை அதற்கான வரலாற்று நியாயமாக அன்றைக்கு இருந்தது. ஆனால், 70 ஆண்டுகளுக்குப் பின் இன்று நமக்குக் கிடைத்திருக்கும் அனுபவங்கள் ‘மையப்படுத்தப்பட்ட அதிகாரம் பெரும்பான்மையே போஷிக்கும்; விளிம்புநிலைச் சமூகங்களை அது ஓரத்தில்தான் வைத்திருக்கும்’ எனும் வரலாற்றுப் பாடத்தையே சொல்கின்றன. இந்தி பிராந்தியத்தின் பெரும்பான்மையையே தேசியம் எனத் தூக்கிப் பிடிக்கும்  போக்கை எதிர்ப்பது இன்றைக்குத் தமிழ் அரசியலைப் பிரதானப்படுத்துவது மட்டும் அல்ல; மாறாக, காஷ்மீரில் தொடங்கி குமரி வரையிலான பன்மைத்துவத்தைக் காப்பதற்கான அடிப்படைப் பணிகளில் ஒன்றாகிறது.

அரை நூற்றாண்டுக்கு முன் இந்த விவாதம் வந்தபோது நமக்குள் பேசி, நமக்குள் புழுங்கி, நமக்குள் கசந்து,  நமக்குள் மார்தட்டி, நமக்குள் சுருங்கியதையே அனுபவமாகப் பெற்றோம். இனியும் அந்தத் தவறு நடக்கக் கூடாது. என்ன செய்யப்போகிறாம்? மேலே காஷ்மீர்; இந்தப் பக்கம் பஞ்சாப், குஜராத், மகாராஷ்டிரம்; அந்தப் பக்கம் வட கிழக்கின் எட்டு மாநிலங்கள், வங்கம் ஒடிஷா; சுற்றி ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், கேரளம் என ஒரு தேசிய அளவிலான விவாதமாக இதை வளர்த்தெடுக்கும் வகையில் விரிவான தொலைநோக்குத் திட்டங்களுடன் சிறகு விரிக்கப்போகிறோமா அல்லது வெற்று முழக்கங்களோடு மேலும் மேலும் நமக்குள் சுருங்கப்போகிறோமா?

தி இந்து, மார்ச், 2017 

7 கருத்துகள்:

  1. Excellent, please don't stop just as an article. Please try to make it as a series, for every topic..so that younger generation get chance to read and understand.

    பதிலளிநீக்கு
  2. Very good article. it will be more enlightening if this article is expanded and analysed on various fields. this article is need of the hour for Tamilnadu. Very glad that Samas brother writing this.

    பதிலளிநீக்கு
  3. தொடர்ந்து தெளிவான தேவையான பார்வைகளை சமஸ் மற்றும் குழுவினர் முன்வைப்பது சிறப்பு...இந்த கண்ணோட்ட்ங்களை ஒரு தொடர் விவாதமாக்க, பள்ளி,கல்லூரி மாணவர்களிடமும் இளைஞர் குழுக்களிடமும் ஒரு தொடர் உரையாடல் நிகழ்ச்சியினை உருவாக்க வேண்டுமென தமிழ் செய்திக்குழுமங்களை வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. தொடர்ந்து தெளிவான, தேவையான பார்வைகளை சமஸ் மற்றும் குழுவினர் முன்வைப்பது சிறப்பு...

    இந்த கண்ணோட்டங்களை ஒரு தொடர் விவாதமாக்க, பள்ளி,கல்லூரி மாணவர்களிடமும் இளைஞர் குழுக்களிடமும் ஒரு தொடர் உரையாடல் நிகழ்ச்சியினை உருவாக்க வேண்டுமென தமிழ் செய்திக்குழுமங்களை வேண்டுகிறேன்

    பதிலளிநீக்கு
  6. ஐயா! எப்பேர்ப்பட்ட கட்டுரையை எழுதியிருக்கிறீர்கள்! உங்கள் கைகளைப் பிடித்து முத்தமிட வேண்டும்!

    தமிழ், தமிழர், தமிழ்நாடு எனப் பேசுபவர்களெல்லாரும் குறுகிய மனம் படைத்தவர்கள்; கிணற்றுத் தவளைகள் என்றே நம்பும் பொது மனப்பான்மையில் எழுத்தாணியை அறைந்திருக்கிறீர்கள்! உணர்வார்ந்த நன்றி!

    பதிலளிநீக்கு
  7. மிக மிக அருமையான கட்டுரை.

    பதிலளிநீக்கு