கோவை, வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்திருக்கும் ‘ஈஷா ஆஷ்ரம்’ பிரம்மாண்டமான ஒரு தனி உலகமெனக் காட்சியளிக்கிறது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் குவிகின்றனர். “இரண்டு லட்சம் பேருக்குச் சமைக்கும் வசதி இங்குண்டு” என்கிறார் ஆசிரமச் சமையலறையின் பொறுப்பாளர். மகா சிவராத்திரி அன்று பத்து லட்சம் பேர் கூடுகிறார்கள். நாட்டின் பிரதமரில் தொடங்கி பல மாநிலங்களின் முதல்வர்கள், அமைச்சர்கள், முன்னணித் தொழிலதிபர்கள் எனப் பல்வேறு உயர் தரப்புகளையும் தன் தொடர்பு வட்டத்தில் வைத்திருக்கும் அதன் குரு ஜக்கி வாசுதேவ் பறந்துகொண்டிருக்கிறார். நான் சந்திப்பதற்கு முதல் நாள் சென்னையில், அன்றைய தினம் கோவையில், மறுநாள் ஆமதபாத்தில், அடுத்த நாள் மும்பையில், அடுத்தடுத்த நாட்கள் துபையில் என்று விரிகிறது அவருடைய பயணத் திட்டம். ஒரு முழு நாள் தங்கி இரு அமர்வுகளில் அவருடன் நடத்தப்பட்ட உரையாடல் இது.
உள்ளபடி ஜக்கி வாசுதேவ் யார்? உடல் நிர்வாக குருவா, சாமியாரா, யோகியா?
மக்கள் என்னை சத்குருன்னு கூப்டுறாங்க. இது ஒரு வர்ணனை. கைனகலாஜிஸ்ட், ஆப்தமாலஜிஸ்ட் மாதிரி. பலவித குருக்கள் இருக்காங்க. நீங்க வேதம் புரிஞ்சிக்கணுன்னா என்கிட்ட வரக் கூடாது. ஜோஷியம் தெரிஞ்சுக்கணும்னா என்கிட்ட வரக் கூடாது. எனக்கு ஒண்ணுதான் தெரியும். இந்த உயிருக்குள்ள என்ன நடக்குது, அதை எப்படிப் புரிஞ்சுக்குறது? இதான் எனக்குத் தெரியும்.
எந்தத் தருணத்தில் இப்படி மாறினீர்கள்?
பல வருஷங்களுக்கு முன்னாடி எனக்குள்ள ஒரு மகத்தான மாற்றம் சில மணி நேரத்துல ஏற்பட்டுடுச்சு. உடல்ல ஒவ்வொரு அணுவுலேயும் ஒரு பேரானந்தம். நான் என்ன உணர்ந்துக்கிட்டேன்னா, இந்த மூச்சைக் கவனிக்க ஆரம்பிச்சு சும்மா உட்கார்ந்துகிட்டாலே அந்தப் பேரானாந்தம் உண்டாயிடுதுன்னு. எவ்ளோ பாதிப்புகள் நடக்குது இந்த உலகத்துல. இவ்ளோதான் கத்துக்கணும் மனிதன்னு தோணுச்சு.
உங்களுடைய குரு யார்? உங்கள் மரபு என்ன மரபு? நீங்க முன்னிறுத்தக்கூடிய தத்துவத்தின் அடிப்படை என்ன?
நான் ஒண்ணு உணர்ந்திருக்கேன். உங்களுக்கும் வேணுன்னா சொல்லிக்கொடுப்பேன். அவ்ளோதான். இந்த யோக விஞ்ஞானத்துக்குத் தத்துவம், கடவுள் இதெல்லாம் கிடையாது. இங்கெ நீங்க பார்க்குற சிவன்கூட எப்படின்னா, யோகத்துக்கு மூலமா இருக்குற ஒரு அடிப்படையை ஆதிகுருன்னு சொல்லுவோம். ஆதிகுருன்னா முதல் குரு. அவன், அவனோட பேரைச் சொல்லிக்கலை. அதனால ஆதியோகின்னு சொல்லுவோம். ‘சி-வா’ அப்டின்னா என்ன அர்த்தம்னா, ‘இப்போ எது இங்க இல்லையோ அதுக்கு ‘சி-வா’ன்னு அர்த்தம். உங்களை எழுத்தாளர்னு கூப்பிடுறோம். ஏன்? அந்தத் தன்மையை நீங்க வெச்சிட்டிருக்கீங்க. அதேபோல, அவன் ஒண்ணும் இல்லாத தன்மையை வெச்சிட்டிருக்கான். அதனால அவனை சிவான்னு கூப்பிடுறோம். நம்மளோட உடம்பு, மனசு தாண்டி ஒரு தன்மை இருக்கு. அதை ஆன்மிகம்னு சொல்றோம். அதை உணர வைக்கிறதுக்கான ஒரு கருவி என்கிட்ட இருக்கு. போதனை இல்ல, கருத்து இல்ல, வேதம் இல்ல. இது முழுக்க அனுபவம்.
தமிழ்நாட்டில் சிவனுக்கு உருவம் கொடுத்து வழிபடக்கூடிய மரபு இருக்கிறதா? நீங்களே ஆரம்பத்தில் லிங்க வழிபாட்டுடன்தான் தொடங்கினீர்கள். இப்போது படிப்படியாக வடக்கத்திய பாணி உருவ வழிபாட்டைக் கொண்டுவரக் காரணம் என்ன?
லிங்க வழிபாடு எல்லாம் இல்லை. தியானலிங்கம் இருக்குது. ஆனா, எந்த பூஜையும் அதுக்குக் கிடையாது. சும்மா அதுக்கூட உக்காந்துக்கறது, அவ்ளோதான். என்னத்துக்குன்னா, அதுல ஒரு அதிர்வு இருக்குது. அதை நீங்க உணரணும். இப்போ ஆதியோகியுடைய உருவம் வந்திருக்குது. அதுக்கும் பூஜை கிடையாது. மனிதனுக்கு ஒரு ஊக்கம் தேவை. அதை அது தரும்.
சிலைகள் கடவுள் இல்லை, சடங்குகள் வழிபாடு இல்லை என்கிறீர்கள். மதச்சார்பற்ற அமைப்பாகவே ஈஷாவை முன்னிறுத்துகிறீர்கள். ஆனால், நீங்கள் முன்னிறுத்தும் ஒவ்வொரு செயல்பாட்டிலும் பிராமணிய கலாச்சாரம், அதிலும் வடக்கத்திய கலாச்சாரம் வெளிப்படுகிறதே, ஏன்?
ஆதியோகி ஒரு ஆதிவாசி. நானும் பிராமணன் கிடையாது, தெரியுமா உங்களுக்கு?
இன்றைக்கு பிராமணியம் என்ற சொல் ஒரு தனிநபர் அல்லது குறிப்பிட்ட சாதி வரையறைக்குட்பட்டது அல்ல. நீங்கள் முன்னிறுத்தும் ஒற்றைக் கலாச்சாரத்தையே நான் குறிப்பிடுகிறேன். 70% மக்கள் அசைவம் சாப்பிடும் நாட்டில் ஏன் அசைவத்தை ஒறுக்கச் சொல்லி, சைவத்தை முன்னிறுத்துகிறீர்கள்?
இப்போ மாடு வெட்டிச் சாப்பிடணும் உங்களுக்கு?
அப்படியே வைத்துக்கொள்வோம். ஏன் மாட்டுக்கறி சாப்பிடக் கூடாது?
ஏன்னா, மனுஷனோட உடலுக்கு அது ஏத்தது இல்ல. லாரிக்கு டீசல், டூவிலருக்கு பெட்ரோல்னு ஒரு கணக்கு இருக்குற மாதிரி உயிர்களுக்கும் இருக்குது. ஆடு, மாடெல்லாம் புலி சாப்பிடுறது. அதை நீங்க சாப்பிட்டா உங்க உடம்பு எப்படித் தாங்கும்? உங்க குடலை எடுத்து அது நீளத்தைப் பாருங்க, அது மாமிசப் பட்சிகளுக்கு இருக்குற மாதிரி இருக்குதா, தாவரப் பட்சிகளுக்கு மாதிரி இருக்குதான்னு!
அதனால்தானே புலி, சிங்கம் மாதிரியெல்லாம் இல்லாமல் மனித குலம் தம் குடல், செரிமானத்தன்மைக்கேற்ப சமைத்துச் சாப்பிடும் கலையைக் கற்றிருக்கிறது?
அட, இதுக்கு ஒரு விஞ்ஞானம் இருக்குது. என்னன்னா, எது சாப்பிட்டா இந்த உடலுக்குள்ள எந்தெந்த மாதிரி தன்மை வரும்னு இருக்குது.
உடலை ஒரு கருவியாகக் கொள்ளும் ராணுவத்தினரும் விளையாட்டு வீரர்களும்கூட உலகம் முழுக்க அசைவத்தையே அதிகம் எடுத்துக்கொள்கிறார்கள். நீங்கள் சொல்வதற்கெல்லாம் என்ன அறிவியல் நிரூபணங்கள் இருக்கின்றன?
இப்போ விளையாட்டு வீரர்கள்லாமே சைவமாயிட்டு இருக்காங்க, தெரியுமா உங்களுக்கு? உலகத்துல இருக்குற 50% நோய்களுக்கு அசைவச் சாப்பாடுதான் காரணம்னு சொல்றாங்க. கொழுப்பு அதிகமாகி எத்தனை லட்சம் பேர் பாதிக்கப்படுறாங்க, தெரியுமா?
அந்தக் கருத்து இன்று மாறிவிட்டது. இன்றைய விஞ்ஞானம் சொல்வது என்னவென்றால், ‘கொழுப்பு அல்ல; சர்க்கரையே பிரதானமான எதிரி’ என்பதுதான். அதீத கார்போ ஹைட்ரேட் நுகர்வே முக்கியமான எதிரி என்கிறது. இன்று ஈஷா பந்தியில் சாப்பிட்டேன். காலையில் கேசரி, மாலையில் ஜிலேபி போட்டார்கள். உங்களுடைய கேன்டினில், கேக் தொடங்கி ஐஸ்கிரீம் வரை எல்லாம் கிடைக்கிறது. இந்த உணவுகளில் இல்லாத ஆபத்து ஒரு முட்டையில், அதாவது அசைவத்தில் இருக்கிறது என்கிறீர்களா?
நீங்க ஒரு சோதனை பண்ணுங்க. மூணு நாளு வெறும் மாமிசமே சாப்பிடுங்க. உங்க உடல், மனநிலை எப்படி இருக்குதுன்னு பாருங்க. அப்புறம் நான் சொல்ற உணவைச் சாப்பிடுங்க, எப்படி இருக்குன்னு சொல்லுங்க. நீங்க சக்தி நிலையில வேலை செஞ்சா, என்ன மாதிரி சாப்பிடணும்; உணர்வு நிலையில வேலை செஞ்சா என்ன மாதிரி உணவு சாப்பிடணும் இப்படியெல்லாம் இருக்கு. இப்போ நம்ம வாழ்க்கை எப்படி இருக்குதோ அப்படி நாம மிக்ஸ் பண்ணி சாப்பிட்டுக்கலாம். இதைத்தான் சாப்பிடணும், அதைத்தான் சாப்பிடணும்னு இங்கே ஒண்ணும் கட்டாயம் பண்ணலை.
உணவு ஒரு உதாரணம்தான். ஈஷாவின் எல்லாப் பயிற்சிகளின் பெயர்கள், இங்கே ஆசிரமத்தில் உள்ள கட்டமைப்புகளின் பெரும்பாலான பெயர்கள் ஏன் சம்ஸ்கிருதத்தில் இருக்கின்றன? ஏன் வணக்கத்தைக்கூட ‘நமஸ்காரம்’ என்று சொல்லச் சொல்கிறீர்கள்?
எல்லா ஊருலேர்ந்தும் ஆளுங்க வர்றாங்க இங்கெ. நமஸ்காரம்ன்னா உலகம் முழுக்க தெரியும். நீங்க என்ன சொல்றீங்கன்னா, நம்ம நாட்டைப் பிரிச்சிக்கணும்னு சொல்றீங்க, தனித்தனியா.
இந்தப் பார்வையே தவறல்லவா? இங்கே ஒரு மொழி இருக்கிறது, இந்தச் சமூகத்துக்கு என்று நெடியதொரு பாரம்பரியம் இருக்கிறது. ‘நீங்கள் ஏன் அதைத் தவிர்க்கிறீர்கள்?’ என்று கேட்டால், அதை எப்படி பிரிவினைக் கேள்வியாக நீங்கள் பார்க்க முடியும்? தமிழும் இந்தியாவின் தேசிய மொழிகளில் ஒன்றுதான் இல்லையா?
நாடுன்னா பாரத நாடுதானே, இல்ல தமிழ்நாடு வேற நாடுன்னு தனியா சொல்லிக்கிறிங்களா?
இந்திய நாடுதான். ஆனால், இந்திய நாடு என்பதே எல்லா மாநிலங்களும், மொழிகளும், கலாச்சாரங்களும் சேர்ந்து உருக்கொண்டதுதான். இதில் தமிழ் அடையாளம் ஏன் புறக்கணிக்கப்படுகிறது என்று கேட்டால், எப்படி அது தேசிய விரோதம் ஆகும்?
நாம எதுக்கும் விரோதம் இல்ல. இந்த யோகா மையத்தோட தலைவாசலுக்குப் பேர் மலைவாசல். அது தமிழ்ச் சொல்தானே? ஆக, தமிழ் வாசல் வழியா நீங்க வந்து உள்ளே பலவிதமான மக்களுக்கும் ஏத்த மாதிரியான பெயர்களோட இணைஞ்சிக்குறதா வெச்சிக்குங்க...
நான் சுட்டிக்காட்டுவது, பெயர் பிரச்சினை அல்ல; நீங்கள் முன்னெடுக்கும் கலாச்சாரப் பிரச்சினை. உதாரணமாக, பிரதமர் மோடி இங்கு வந்திருந்தபோது நீங்கள் தியான லிங்கத்துக்கு நடத்திய வழிபாட்டு முறைகள் இங்குள்ள கலாச்சாரத்தின் நீட்சி அல்ல. நடன, நாட்டிய பாவனைகளுடன் கூடிய அது ஒரு அந்நிய சினிமா காட்சிபோலத் தோன்றியது...
தியான லிங்கத்துல ஒரு தன்மை இருக்குது. அதை மக்கள்கிட்ட கொண்டுபோறதுக்கு ஒரு சூழ்நிலையை நாம உருவாக்குனோம். அது சினிமா மாதிரி இருக்குதுன்னு நீங்க சொல்றீங்க. அவ்ளோ நல்லா வந்துருந்தா எனக்கு சந்தோஷம்!
பிரதமரை ஈஷாவின் விழாவுக்கு அழைத்த பின்னணி என்ன?
மக்கள்தானே தேர்ந்தெடுத்திருக்கீங்க! அழைக்கிறதுல என்ன தப்பு?
அதிகாரத்துடன் இப்படியான நெருக்கம் ஆன்மிகவாதிகளுக்குத் தேவையா?
காலங்காலமா அப்படித்தானே இருக்கு! ராஜகுருக்களா இருந்தவங்கள்லாம் யாரு? நான் கீழேயிருக்குற கோடி பேர்கிட்ட பேசுறதைவிட மேல இருக்குற நூறு பேர்கிட்ட பேசி அவங்களை நல்ல விதமா மாத்த முடிஞ்சா நல்லதுன்னு நெனைக்குறேன். அதுல தப்பில்லே. தப்பு செஞ்சா விமர்சிக்கலாம். சும்மா ஏன் அரசியல்வாதிங்களை ஒதுக்கிவைக்கணும்?
ஆட்சியாளர்கள் தவறிழைக்கும்போது அதிகாரத்துடன் உறவாடும் ஆன்மிகவாதிகள் அப்படிதான் விமர்சிக்கிறீர்களா?
என்ன பண்ணணும்? ரோட்டுல போய் போராடணுமா?
இல்லை. உங்கள் ட்விட்டர் கணக்கைப் பார்த்தேன். கிரிக்கெட்டில் விராட் கோலி சதமடித்தபோது அதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கிறீர்கள். ஆனால், லட்சம் பேர் உள்நாட்டில் ஒரு கலவரத்தால் அகதிகளாகும்போது அதுகுறித்து உங்களுக்குச் சொல்வதற்கு ஒன்றும் இல்லையே, ஏன்?
எப்பவுமே என் கருத்துகளை வெளிப்படுத்துறேன். பயணங்கள்ல இருக்கிறப்போ சில விஷயங்கள் விடுபட்டிருக்கலாம். ஜாதி, மத வன்முறையை நான் கடுமையா எதிர்க்குறேன். என்னுடைய உணர்வுல எல்லோரும் சமம். மக்கள் ஏதோ ஒரு காரணத்துனால போராடுறாங்க. மதத்து பேர்ல, ஜாதி பேர்ல... அடிப்படையில கோபத்துலேயும் வெறுப்புலேயும் வெறியிலேயும்தான் போராடுறாங்க.
யோகா பிரச்சினை இல்லை. ஆனால், ஈஷாவில் ‘அவரவருக்கு நிகழும் எல்லாவற்றுக்கும் அவரவரே காரணம்’ என்றே சொல்லிக்கொடுக்கிறீர்கள். இப்போது, ‘போராட்டம் என்பது கோபத்தின், வெறுப்பின், வெறியின் வெளிப்பாடு’ என்கிறீர்கள். இதுதான் பிரச்சினை. நிதர்சனம் அப்படியா இருக்கிறது? உதாரணமாக ஒரு தலித்துக்குப் பிறப்பிலிருந்து இழைக்கப்படும் அநீதிக்கு அவர் எந்த வகையில் காரணம்? சமூகத்தின் வியாதி அல்லது பிரச்சினைகளைப் பொருட்படுத்தாத சுயநல ஆன்மிகத்தால் என்ன பயன்?
சமூகத்துல எந்தப் பிரச்சினையும் இல்ல. மனிதனுக்குள்ள தான் பிரச்சினைங்கிறேன் நான். போராட்டம் சாதிக்காததை முன்னேற்றம் சாதிக்கும். நீங்களே தலித்துன்னு வெச்சிக்குங்க.
நீங்க நல்ல டாக்டர் ஆயிட்டிங்க, அமெரிக்கா போயி சம்பாதிச்சுட்டு வந்திட்டீங்கன்னா எல்லாரும் வந்து உங்க முன்னாடி விழுந்திடுவாங்க. ஓடி வந்து பொண்ணு கொடுப்பாங்க.
கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டம் முடித்த அம்பேத்கர் இங்கே இந்தியா திரும்பிய பின் விடுதியிலிருந்து துரத்தப்பட்டார் என்பதே வரலாறு…
நீங்க எந்தக் காலத்தைப் பத்தி பேசுறீங்க?
இன்றைக்கும் இங்கே முஸ்லிம்களுக்கும் தலித்துகளுக்கும் நம் நகரங்களிலேயே வாடகைக்கு வீடு கிடைப்பதில்கூட அவ்வளவு பிரச்சினைகள் இருக்கின்றன…
நடக்கலைன்னு நான் சொல்லலை. மனிதர்களுக்குள்ள இருக்குற வேறுபாடும் பாகுபாடும் பெரிய கொடுமைகள். சமத்துவத்துக்காக நாம பேசறது, எழுதுறது, மக்களுக்கு அறிவைக் கொண்டுவர்றது எல்லாமே முக்கியம். ஆனா, போராட்டம் தீர்வு இல்லை.
மனித குலம் இதுவரை அடைந்திருக்கும் ஜனநாயக, சமத்துவ உரிமைகள் யாவற்றிலும் போராட்டங்களுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது...
போராட்டத்துனாலதான் எல்லாம் கெடைச்சதுங்குறது உங்க புரிதல். முக்கியமா சில பேருக்குச் சமத்துவ உணர்வு உள்ளத்துல வந்ததனால ஏற்பட்டுருக்குற மாற்றம் இது.
போராட்டம் மட்டுமே தீர்வுக்கான வழிமுறை என்று நானும் சொல்லவில்லை. ஆனால், சமத்துவத்துக்கான வழிகளில் ஒன்றல்லவா அது? நீங்கள் தனிமனித ஆனந்தத்துக்கான எதிர்நிலையில் சமூக நலனுக்கான போராட்டத்தை முன்னிறுத்தும் போதே இவ்வளவு விவாதிக்க வேண்டியிருக்கிறது…
ஒரு பிரச்சினையைப் போராட்டம்னு சொல்லி எதிர்க்குறதைக் காட்டிலும் உபாயமா தீர்வு கொண்டுவர்றது முக்கியம்னுதான் நான் சொல்றேன்.
இந்தியாவில் தாராளமயமும் தனியார்மயமும் தழைத்து, பொருளாதாரரீதியாக நாடு பெருக்கும் காலகட்டத்தில் உங்களைப் போன்றவர்கள் வளர்ந்துவந்திருக்கிறீர்கள். அதீத பொருள் சேர்ப்பு என்பது இந்தியப் பாரம்பரியத்தில் ஒரு குற்றவுணர்வைத் தரக் கூடியது. இந்தக் குற்றவுணர்வே அறம் நோக்கி மக்களைத் திருப்பிவந்திருக்கிறது. அதீத ஆசை தவறு என்பதே நமக்குத் திரும்பத் திரும்பச் சொல்லப் பட்டிருக்கிறது. ‘காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே’ என்கிறார் பட்டினத்தார். ஆனால், நீங்கள் அத்தனைக்கும் ஆசைப்படச் சொல்கிறீர்கள். ஆக, அதீத ஆசை தொடர்பான குற்றவுணர்விலிருந்து நீங்கள் மக்களை விடுவிக்கிறீர்களா?
ஆமா, நான் அதான் பண்றேன். என்னத்துக்குன்னா, உங்களுக்குள்ள பயமோ, கோபமோ, குற்றவுணர்வோ இருந்ததுன்னா எப்படி நீங்க ஆனந்தமா இருக்க முடியும்? முடியாது. ஆனந்தமா இருக்குறது எதுக்கு முக்கியம்ன்னா, நீங்க ஆனந்தமா இருக்குறப்போதான் அடுத்தவங்களைப் பத்தி நெனைக்கிறீங்க. அடுத்த உயிருக்கு எது தேவையோ அதைப் பண்ணுறீங்க. மனிதன் எவன் ரொம்ப பேரானந்தமா இருக்குறானோ அவன் தனக்குத் தேவையானது எல்லாத்தையும் பண்ணிக்குவான், அதுக்கு மேல அடுத்தவங்களுக்கும் அவன் செய்றான்.
நிதர்சனம் அப்படிதான் இருக்கிறதா? பெருநிறுவனங்களும் பெரும்பணக்காரர்களும்தான் இன்று எல்லா மக்களையும் வாழ வைக்கிறார்களா?
அப்படிதான் இருக்குறாங்க. எல்லாருமே முழுமையா மாறிட்டாங்கன்னு சொல்ல மாட்டேன். ஆனா, மாறிக்கிட்டிருக்காங்க.
வெள்ளியங்கிரி மலை ஏராளமான சித்தர்கள் வாழ்ந்த இடம் என்பார்கள். தமிழ்நாட்டின் சித்தர் மரபை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? உங்களுடைய உருவாக்கத்தில் அதன் தாக்கம் ஏதும் இருக்கிறதா?
இல்ல. என் பிரச்சினை இதுதான். என்கிட்ட யாரும் எந்தத் தாக்கத்தையும் உண்டாக்க முடியாது.
ஆன்மிகத்தின் அடிப்படை எளிமையும், அந்தரங்க சுத்தியும். ‘இறுதியில் நாம் ஒன்றுமே இல்லை; ஒரு தூசு’ என்பதைத்தான் எல்லாத் துறவிகளும் இதுவரை நமக்குச் சொல்லிக்கொடுத்திருக்கின்றனர். ஒருவகையில் துறப்பதுதான் ஞானத்தை அடைவதற்கான மார்க்கமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், துறவுக்கு வழிகாட்ட வேண்டிய துறவிகளே இப்படி அமைப்புகளை – அதுவும் இவ்வளவு பிரமாண்டமாக – உருவாக்கி வழிகாட்டுவது சரிதானா?
இது உங்களுக்குப் பெருசா தெரியுதா? நான் இது பெருசுன்னு நெனைக்கலை. இதுவே போதாதுன்னு நெனைக்குறேன். என்னத்துக்குன்னா, மக்கள் வர்ற வேகம் அப்படி. இப்போ இங்கே எவ்ளோ பேர் இங்க தங்கணும் நெனைக்குறாங்களோ அதுல ஒரு பதினைஞ்சு, இருவது சதவீத ஆளுங்களுக்கு மட்டும்தான் நாம வசதி பண்ணித் தர முடியுது. அப்படின்னா, என்ன அர்த்தம்? நாங்க பெருசா கட்டியிருக்குறோம்னா, இன்னும் போதிய அளவுக்குக் கட்டலைன்னா? இது பத்தாது. இன்னும் பல மடங்கு பெரிசாக்கணும்.
உங்களுக்கு எங்கிருந்து இதற்கெல்லாம் பணம் வருகிறது?
மூணு கோடி மரக்கன்னு வெச்சோம். பள்ளிக்கூடங்கள் நடத்துறோம். எவ்வளவோ நல்ல காரியம் பண்றோம். யாரும் கேட்கலை, எங்கிருந்து பணம் வருதுன்னு. நீங்க கேட்குறது சந்தோஷம். அரசாங்கம் எங்களுக்கு மானியம் கொடுக்கலை. அரசியல்வாதி, பணக்காரங்க பின்னாடி நாங்க ஓடுறதில்லை. ஒரே காரியம் யோகா சொல்லிக்கொடுக்குறோம். அது உங்களுக்குள்ள ஒரு பெரிய மாற்றத்தை உண்டு பண்ணிடுது. நீங்க அதை உணர்றீங்க. உதவுறீங்க. இப்படிக் கொஞ்சம். இந்த யோகாவையே நாங்க வெவ்வேறு கட்டணத்துல சொல்லிக்கொடுக்குறோம். இங்கெ மலைப்பகுதியில காசே வாங்காம சொல்லிக்கொடுக்குறோம். அதே பயிற்சிக்கு கோயம்புத்தூர்ல ஆயிரத்து ஐந்நூறு ரூபா வாங்குவோம். மும்பைல பன்னிரெண்டாயிரம் ரூபா. நியுயார்க்ல ரெண்டு லட்சம் ரூபா. இப்படிக் கொஞ்சம். அப்புறம், இங்கெ ஆசிரமத்திலேயே கிட்டத்தட்ட ஐயாயிரம் பேர் இருக்காங்க, என்னையும் சேர்த்து. நாங்க உழைச்சுக்கிட்டுத்தானே இருக்கோம். அந்த வருமானம். எல்லாம் சேர்ந்துதான் ஈஷா இயங்குது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காடு வளர்ப்பு தொடர்பாகவெல்லாம் தொடர்ந்து பேசுகிறீர்கள். வன ஆக்கிரமிப்பு, அத்துமீறல் கட்டுமானங்கள், இன்னும் ஏராளமான குற்றச்சாட்டுகள் ஈஷா மீது இருக்கின்றன…
ஒரு அங்குலம் நிலம் நான் ஆக்கிரமிச்சு, தப்பான வகையில இங்கே பிடிச்சுருக்கேன்னு நீங்க நிரூபிச்சா நான் அத்தனையையும் விட்டுட்டுப் போயிடுறேன்.
வெள்ளியங்கிரி மலைக்கென்று ஒரு வனச்சூழல் இருக்கிறது. பிரமாண்ட கட்டுமானங்கள் அதைக் குலைக்காதா? சட்டரீதியான தர்க்கங்களை விடுங்கள். ஒரு குரு ஸ்தானத்தில் இருக்கிறீர்கள். தார்மிகரீதியாக இந்தக் குற்றச்சாட்டுகள் உங்களுக்குச் சங்கடம் தரவில்லையா?
முதல்ல, இது காடாவே இல்லை. நாங்க உட்கார்ந்திருக்குறது நூறு வருஷத்துக்கு மேல விவசாயம் நடந்துக்கிட்டிருந்த இடம். இங்கெ வந்து எவ்வளவோ மரக்கன்னுகளை நாங்க நட்டிருக்கோம். காட்டுச் சூழலை நாங்க குலைக்கலை.
ஒரு பெருநிறுவனத் தொழிற்சாலைபோல நடத்தப்படும், பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்லும் எந்த பிரமாண்ட கட்டமைப்பும் நிச்சயமாக வனச் சூழலைக் குலைக்கத்தானே செய்யும்?
ரெண்டாயிரத்து ஐநூறு வருஷத்துக்கு முன்னாடிலேர்ந்து இதே மலையடிவாரத்துல ஒரு கோயில் இருக்குது. என்னத்துக்கு அதை இங்கே கட்டினாங்க? இந்த மலைக்கு ஒரு தன்மை இருக்குது. அதே தன்மைதான் என்னை இங்கே கூட்டிட்டு வந்து இந்தக் காரியங்களைச் செய்ய வைக்குது.
அந்தக் கோயிலின் அளவு என்ன, உங்கள் ஆசிரமத்தின் அளவு என்ன?
அன்னைய ஜனத்தொகை என்ன, இன்னைய ஜனத்தொகை என்ன? நான் அதுக்கேற்ப பெரிசா கட்டணுமா, இல்லையா?
இவ்வளவு பிரம்மாண்டமான இந்த அமைப்புக்கும் இதன் சொத்துகளுக்கும் அடுத்த வாரிசு யார்?
இப்பவே நான் இதை இயக்கலை. ஊர் ஊரா சுத்திக்கிட்டிருக்கேன். ஒரு உறுதி தர்றேன். இப்போ எப்படி எல்லாம் நடக்குதோ அப்படியே எப்பவும் நடக்கும். நீங்க யாரையாவது ஒரு தனிநபரை நான் சுட்டிக்காட்டணும்னு நெனைச்சா, நான் அதை இன்னும் யோசிக்கலை. இன்னும் கொஞ்ச நாள் இருக்கலாம்னு நெனைக்கிறேன்.
ஒருவகையில் உங்களைப் போன்றவர்கள் யோகாவை ஜனநாயகப்படுத்தியிருக்கிறீர்கள். பலருக்கு அது போய்ச் சேர்ந் திருக்கிறது. ஆனால், ஆன்மிக வழியாகச் சென்றடைவதற்கு மாற்றான இந்தப் பாதையில், ஒரு தொழில்நுட்பக் கருவிபோலத்தான் மக்களிடம் யோகா சென்றடைந்திருக்கிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. உள்ளபடி நீங்கள் கொடுத்திருக்கும் யோகா உடல் மேம்பாட்டைத் தாண்டி, அக மேம்பாட்டுக்கும், ஆன்மரீதியிலான மேம்பாட்டுக்கும் உதவுகிறதா? உங்களிடம் பயிற்சி பெற்றவர்களிடம் எப்படியான மாற்றங்களை நீங்கள் பார்க்கிறீர்கள்?
நல்லது நிறைய நடக்குது. நீங்க நடந்து போறீங்க. கஷ்டப்படுறீங்களேன்னு ஒரு செருப்பைத் தர்றோம். அதைப் போட்டுகிட்டு நீங்க அங்கேயே நிக்கிறீங்களா, இமயமலைக்குப் போறீங்களாங்கிறது உங்களோட முயற்சியிலதான் இருக்குது. ஆனா, கருவி உங்களுக்குப் பயன்படும். உங்க பயணத்தை எளிமையாக்கும்!
மார்ச் 2017, ‘தி இந்து’
அருமையான கேள்விகள் ஆனால் அதற்க்கான விடைகள்தான் கிடைக்கவில்லை,ஜக்கி நழுவுகிறார்,
பதிலளிநீக்குஅருமையான கேள்விகள். எளிமையான ஆனால் ஆழமான பதில்கள்!
பதிலளிநீக்குசத்குரு எப்போதும் சற்று விரிவாக பேச கூடியவர் கேள்விகளை அப்படியே வைத்து கொண்டு கோமாளிதனமாக பதில்களை சுருக்கியது அப்பட்டமாக தெரிகிறது
பதிலளிநீக்குஉண்மைதான். இப்பேட்டி பதில் அளிப்பவருக்கு முக்கியம் அளிக்காமல், கேள்வியாளர் பார்வையில் படிப்பவர்களை இழுத்துச்செல்லுமாறு சாதுர்யமாக எடிட்டிங் செய்யப்பட்டுள்ளது. மேலும் பதில் அளிப்பவர்மேமேல் ஒரு குற்றச்சாட்டுக்கு விளக்கம் தருபவர் போன்ற ஒரு தொனியும் வருமாறு நைசாக தொகுக்கப்பட்டுள்ளது. Not an ounce of neutral tone, really surprising. இப்படி எழுதி என்ன செய்ய உத்தேசிக்கிறார் திரு. சமஸ். Doesn't expected this. Hope he maintains neutrality in future, atleast with others celebrities
நீக்குஇந்த கேள்வி-பதில் படிக்கும் போது பதில்கள் 'கத்திரி' போடப்பட்டது அப்பட்டமாக தெரிகிறது ...
நீக்குஒரு முன்முடிவோடு சற்று அகந்தையோடு சென்று கேள்விகள் கேட்டிருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது..
பதிலளிநீக்குஉண்மை
நீக்குதெளிவான கேள்விகள்
பதிலளிநீக்குஊடகத்துக்கு போதுமான கேள்விகளும் பதில்களும் போல தெரிகிறது.
பதிலளிநீக்குமிகச்சரியனா கேள்விகள் ஆனால் மழுப்பலான பதில்கள்
பதிலளிநீக்குஎல்லா கேள்விகளுமே சத்குருவை ஏக நெருக்கடிக்குள்ளாக்கியிருக்கும். பதில்கள் இம்முறை சமாளிப்பு வகையில்தான் சேருகிறது. நல்ல நேர் காணல் மூலம் பாராட்டுக்குறியவராகிறார் சமஸ்.
பதிலளிநீக்கு21வருடம் கழித்து குற்றவாளி என சொல்கிறது நீதிமன்றம்.இவனது கட்டிடங்கள் அரசு அனுமதி இன்றி கட்டிய அத்து மீறல் கட்டிடங்கள் என நீதிமன்றத்தில் தமிழக அரசே சொல்லிவிட்டது இனி நீதிமன்றம் எத்தனை வருடம் கழித்து இதற்கு தீர்ப்பு சொல்லுமோ அதுவரை ஜெ மக்களை ஏமாத்தி நாட்டை ஆண்ட மாதிரி இவனும் வாழ்ந்து முடிச்சிடலாம். நம்ம நீதிதுறை நிர்வாகம் அப்படி.
பதிலளிநீக்குDon't know why all these gurus always work hard to bring peace/happiness for the people in big cities. May be they think that people in rural and semi urban areas have already attained salvation.
பதிலளிநீக்குPlease do not comment without knowing things properly ... they focus on both and done/doing many things for rural people
நீக்குதன் தவறை ஏற்காது அதை நியாயப்படுத்த முயல்வது ஜக்கியின் பேச்சில் தெரிகிறது. அவரே ஒத்துக் கொண்டார் நான் எந்த குரு பரம்பரையிலும் சேராதவன், ஏமாற்றுக்காரன் என்று....
பதிலளிநீக்கு21வருடம் கழித்து குற்றவாளி என சொல்கிறது நீதிமன்றம்.இவனது கட்டிடங்கள் அரசு அனுமதி இன்றி கட்டிய அத்து மீறல் கட்டிடங்கள் என நீதிமன்றத்தில் தமிழக அரசே சொல்லிவிட்டது இனி நீதிமன்றம் எத்தனை வருடம் கழித்து இதற்கு தீர்ப்பு சொல்லுமோ அதுவரை ஜெ மக்களை ஏமாத்தி நாட்டை ஆண்ட மாதிரி இவனும் வாழ்ந்து முடிச்சிடலாம். நம்ம நீதிதுறை நிர்வாகம் அப்படி.
பதிலளிநீக்குGet your facts correct and prove some thing against him ... He says very boldly that, "if one damn thing is proven, i will leave everything" ... but Get your facts correct
நீக்குசம்ஸ் கேட்ட கேள்விக்கு ஜக்கி இப்படித்தான் பதில் கூறினார் என்று நம்மால் கூறமுடியாது.. காரணம் சமஸ் தன் விருப்படி வெட்டிஇருப்பார்..மேலும் அதன் அருகிலுள்ள காருண்யா கல்வி மற்றும் ஜெபகூட்டம் மூலமாக மதமாற்றும் பணம் சம்பாதிக்கும் தினகரனை கேட்டால் சமமாக இருக்கும்..
பதிலளிநீக்குஏன் சம்சு தான் கேடக்கணுமா...நீ கூட போய் கேட்கலாமே...பதில் இருக்கா அம்பி
நீக்கு// ஏன் சம்சு தான் கேடக்கணுமா...நீ கூட போய் கேட்கலாமே...பதில் இருக்கா அம்பி //
நீக்கு(Srinivasan Ramakrishnan )அவர் என்ன ஊடகத் துறையிலா இருக்கிறார் ?? ரெண்டாவது , அங்க போய் கேள்வி கேட்டா வெட்டி புடுவாய்ங்க :-)
மிகச்சரியனா கேள்விகள் ஆனால் மழுப்பலான பதில்கள்
பதிலளிநீக்கு'தி ஹிந்து' னு உங்க நாளேட்டுக்கு பேரை வச்சிக்கிட்டு, அதெப்படி பா அடுத்தவங்கள்ட்ட போய் வெக்கமே இல்லாம தமிழ்ல ஏன் பேர் வைக்கலனு கேட்கறீங்க? கூச்சப்படறதேயில்ல ����
பதிலளிநீக்கு'தி ஹிந்து' னு உங்க நாளேட்டுக்கு பேரை வச்சிக்கிட்டு, அதெப்படி பா அடுத்தவங்கள்ட்ட போய் வெக்கமே இல்லாம தமிழ்ல ஏன் பேர் வைக்கலனு கேட்கறீங்க? கூச்சப்படறதேயில்ல ����
பதிலளிநீக்குthe questions are highly ignorant. Before asking such questions, the writer should have done his homework on yoga sciences. waste of time
பதிலளிநீக்குOutstanding set of questions and an unprofessional way of answering.
பதிலளிநீக்குDr.K.Alex
அற்புதமான கேள்விகள், மொக்கையான பதில்கள்.
பதிலளிநீக்குகேள்வியில் நடுவுநிலமை இல்லை, ஜக்கி நல்லவரோ கெட்டவரோ எனக்கு தெரியாது. ஆனால் இந்த உரையாடலின் ஆரம்பம் முதலே ஜக்கியை கெட்டவராக சித்தரிக்கும் முயற்சியிலேயே சமஸ் ஈடுபட்டுயிருக்கிறார் என்பது அப்பட்டமாக தெரிகிறது.
பதிலளிநீக்குsadguru answered properly. the problem is mr samas. He asked all questions with biased motive. it is a kind of intolerance, that he expects other to endorse his views. sadguru, is intelligent. He rejected him gently.
பதிலளிநீக்குWonderful questions, and confusing answers.
பதிலளிநீக்கு