ஒரு மனிதன் குடியரசு ஆகும் காலம்!


செய்தித்தாள்களில் முதல் பக்கம் - ஒரு முழுப் பக்கம் அந்த விளம்பரம். தொலைக்காட்சிகளில் அந்த விளம்பரம். சமூகவலைதளங்களில் அந்த விளம்பரம். சாலைகளில் பெரிய பெரிய பதாகைகளில் அந்த விளம்பரம். எல்லா விளம்பரங்களிலும் ஒரு ஊடகவியலாளரின் முகம் ஆக்கிரமித்திருக்கிறது. முகம் என்றால், முகம் மட்டும் – சில விளம்பரங்களில் அது அரை முகம். அந்த முகம் மக்களை உற்றுப்பார்க்கிறது. அகங்காரத்துடன், இறுமாப்புடன். பக்கத்தில் ஒரு வாசகம் - ‘தேசம் இன்னும் தெரிந்துகொள்ள விரும்புகிறது!’  கீழே கையெழுத்துபோல கொட்டை எழுத்தில் அந்தப் புதிய தொலைக்காட்சியின் பெயர் - ‘ரிபப்ளிக்’ (குடியரசு).

நொடிக்குக் கோடி விளம்பரங்கள் கொட்டும் யுகத்தில், மாதம் கடந்து அந்த விளம்பரம் திரும்பத் திரும்ப மண்டையைக் குடைவதற்கான நியாயம் இருக்கிறது. எழுபதாண்டு சுதந்திர இந்தியா இன்று வந்தடைந்திருக்கும் ஒரு புள்ளியைத் தீர்க்கமாகச் சுட்டுகிறது அந்த விளம்பரம். ஒரு மனிதன் தேசமாகும் காலத்தில் நாம் இருப்பதை அது பகிரங்கமாக நமக்குச் சொல்கிறது. மேலும் அந்தப் பெயர் – ‘குடியரசு’ - எவ்வளவு சூட்சமமானது! ஒரு மனிதன் தன்னையே தேசமாகக் கட்டமைக்கும் காலத்தில் ஒரு மனிதனின் எண்ணமே ஒரு குடியரசின் எண்ணமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுவிடுகிறது.

அரை நூற்றாண்டுக்கு முன் தங்களுடைய சர்வாதிகார ஆட்சியை அலங்கரமான வார்த்தைகளால் அழைத்த ராணுவ அதிபர்கள் – தன்னுடைய அரசை ‘அடிப்படை ஜனநாயகம்’ என்றழைத்த அயூப்கான், ‘நெறிப்படுத்தப்பட்ட ஜனநாயகம்’ என்றழைத்த சுகர்னோ, ‘புதிய ஜனநாயகம்’ என்றழைத்த ட்ரூயிலோ - ஞாபகத்துக்கு வருகிறார்கள். நாம் ஒன்றை நினைவூட்டிக்கொள்ள வேண்டும், மோடியின் காலத்தில் அர்ணப் கோஸ்வாமிகள் உருவாகவில்லை; மாறாக அர்ணப் கோஸ்வாமிகளே மோடியின் காலத்தை உருவாக்குக்கியிருக்கிறார்கள். துல்லியமாகச் சொல்வது என்றால், நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் காலத்தின் வெளிப்பாடு அல்லது விளைவுகளில் ஒன்றே மோடி.

இப்படி, ஒரு மனிதன் குடியரசாகும் காலத்தில்தான் நாம் இந்த தேசத்தின், மக்களின் உண்மையான குடியரசுக் கனவைப் பற்றியும் அதன் இன்றைய நிலையையும் பேச வேண்டிய அவசியம் உண்டாகிறது. நாம் மாபெரும் இந்த இந்திய நாட்டை ஆளும் அமைப்பை ஜனநாயகம் என்று மட்டும் குறிப்பிடவில்லை; குடியரசு என்றும் குறிப்பிடுகிறோம். அதாவது ஜனநாயகக் குடியரசு. ஆனால், நம்முடைய அரசு எப்படியான ஆட்சியை நமக்குத் தருகிறது? ஜனநாயக ஆட்சியையா, குடியரசு ஆட்சியையா? நாம் எதை விரும்புகிறோம்? ஜனநாயக பாணி ஆட்சியையா, குடியரசு பாணி ஆட்சியையா? கல்லூரிகளில் பேசச் செல்லும்போது மாணவர்கள் மத்தியில் இந்தக் கேள்விகளைக் கேட்பது உண்டு. அப்போதெல்லாம் மாணவர்களிடமிருந்து வரும் பதில் கேள்வி: ‘ஜனநாயகத்துக்கும் குடியரசுக்கும் என்ன வித்தியாசம்?’

என் அனுபவத்தில் இதுவரை இந்தக் கேள்விக்கான பதில் அளித்த ஒரு மாணவரைச் சந்தித்ததில்லை. அதிர்ச்சி அடைய ஏதும் இல்லை. ஏனென்றால், அது தனியார் கல்வி நிறுவனமோ, அரசுக் கல்வி நிறுவனமோ; கல்வியின் உள்ளடக்கமான பாடத்திட்டத்தை அரசு தன் கைகளில் வைத்திருக்கிறது. இப்படியான விஷயங்கள் மாணவர்களுக்குத் தெரிந்துவிடக் கூடாது என்று அரசே எண்ணும்போது, பாடத்திட்டம் அரசியல் நீக்கப்பட்டதாகத் தயாரிக்கப்படும்போது மாணவர்களை எப்படி நாம் நொந்துகொள்ள முடியும்?

ஆனால், ஜனநாயகத்தைப் பற்றியும் குடியரசைப் பற்றியும் ஆசிரியர்கள் பேச முடியும். “இந்தியா என்பது வெறும் ஜனநாயகம் மட்டும் அல்ல; அது ஒரு குடியரசும் ஆகும். ஜனநாயகமும் குடியரசும் ஒன்றல்ல. தனி நபருக்கும் அரசுக்குமான தொடர்பில், இவை இரண்டுக்கும் வெவ்வேறு பங்குகள் இருக்கின்றன. ஜனநாயகம் என்பது அடிப்படையில் பெரும்பான்மையின் கைகளில் ஆட்சியை ஒப்படைத்துவிடுகிறது. ‘தலைக்கு ஒரு ஓட்டு’ என்பது ஒரு உயரிய நியாயமாக மேலோட்டத்தில் இருந்தாலும், ‘சிறுத்தைகள், ஓநாய்களுக்கும் ஒரு ஓட்டு; ஆடுகள், மாடுகளுக்கும் ஒரு ஓட்டு’ என்பது அடிப்படையிலேயே வலியவர்கள் கை ஓங்கும் அபாயத்தையும் இயல்பாகவே கொண்டிருக்கிறது. புலிகள் ஒன்றுசேர்ந்து அவற்றின் பெரும்பான்மையில் ஒரு ஆட்சி அமையும்போது மான்களின் கதி என்னவாகும்? இந்த இடம்தான் ஜனநாயகத்தின் மிகவும் சிக்கலான, பலவீனமான பகுதி. இந்தப் பிரச்சினையைக் கையாளும் தீர்வாகவே குடியரசு உருவெடுக்கிறது. அது புலியோ, ஓநாயோ எந்தத் தரப்பு ஆட்சியிலும் வந்தாலும் மான்கள், மாடுகளின் சுதந்திரமும் உரிமைகளும் பாதிக்கப்படாமல் இருப்பதைச் சட்டபூர்வமாக உறுதிசெய்கிறது. அதாவது, குடியரசின் உச்சபட்ச பண்பு அது சட்டபூர்வமாக உறுதிசெய்யும் குடிமக்களின் தனிநபர் சுதந்திரத்தில் நிலைகொண்டிருக்கிறது” என்று மாணவர்களிடத்தில் ஆசிரியர்கள் விளக்க முடியும்.

ஆசிரியர்கள் இப்படி வளர்த்தெடுத்தால் நிச்சயம் அந்த மாணவர்கள் இப்படி ஒரு கேள்விகளை எழுப்புவார்கள்: “அப்படி என்றால், ஒரு ஜனநாயகக் குடியரசான இந்திய அரசு ஏன் தன் குடிமக்களை வெறும் ஜனநாயக அரசுபோலவே நடத்துகிறது? அதாவது, சிறுபான்மையின மக்களின், ஒடுக்கப்பட்ட மக்களின், விளிம்புநிலை மக்களின், எளிய மக்களின், தனிமனிதர்களின் மிக அடிப்படையான உரிமைகளைக்கூட இந்திய அரசால் ஏன் உறுதிப்படுத்த முடியவில்லை? ஒரு தனி மனிதர் இதைச் சாப்பிடக் கூடாது என்று எப்படி இன்னொருவரால் சொல்ல முடிகிறது? ஒரு தனி மனுஷி இப்படியான உடையை உடுத்தக் கூடாது என்றோ இன்னாரைத் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்றோ எப்படி இன்னொருவரால் வலியுறுத்த முடிகிறது? எல்லோர்க்கும் நியாயமான ஒரு குடியரசு எப்படி இதையெல்லாம் வேடிக்கை பார்க்க முடியும்?”

இந்திய அரசு அடிப்படையிலேயே தனிமனித உரிமைகளைப் பிரதானமாகப் போற்றுவதாகக் கட்டமைக்கப்படவில்லை; மாறாக, பெரும்பான்மையை, பெரும்பான்மையால் உருவாக்கப்பட்ட அமைப்பை, அரசைத் தூக்கிப் பிடிப்பதாகவே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. காலனிய அரசின் கட்டமைப்பைச் சுவீகரித்துக்கொண்டதன் விளைவு காலனிய அரசின் கலாச்சாரமே சுதந்திர இந்தியாவின் கலாச்சாரமாகவும் அதிகார வர்க்கத்தால் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது.

அரசமைப்பிலோ, ஆட்சி நிர்வாகத்திலோ ஒரு குறையைச் சுட்டிக்காட்டினால் எழுத்தாளர்கள் மீது ஆட்சியாளர்களுக்கு ஏன் அவ்வளவு ஆத்திரம் வருகிறது? தங்களுடைய நியாயமான கோரிக்கைகள் பொருட்படுத்தப்படாமல் போகும்போது போராட்டத்தில் ஈடுபடும் மக்களை ஏன் அதிகார வர்க்கம் அவ்வளவு வன்மத்தோடு பார்க்கிறது? போராட்டத்தில் ஈடுபடும் மக்களைக் காவல் படையினர் ஏன் அவ்வளவு மூர்க்கமாக அணுகுகிறார்கள்? இந்தப் பிரச்சினையின் மையம் ஆட்சியாளர்களிடத்தில் இல்லை; ஒரு சுதந்திர ஜனநாயகக் குடியரசு என்ற நிலைக்கேற்ப நம்முடைய ஆட்சியமைப்பு இல்லை - நம்முடைய நிர்வாக, காவல், ராணுவ அமைப்புகள் கட்டமைக்கப்படவில்லை அல்லது சீர்திருத்தப்படவில்லை என்பதில் இருக்கிறது.

அம்பேத்கர் கூறியதை இங்கு நாம் நினைவுகூரலாம், “ஒரு அரசியலமைப்பின் நோக்கம், அரசுக்கான உறுப்புகளை உருவாக்குவது மட்டுமல்ல; அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதும் ஆகும். ஏனென்றால் உறுப்புகளின் அதிகாரமானது கட்டுப்படுத்தப்படவில்லை என்றால், அதுவே முழுமையான கொடுங்கோன்மை மற்றும் முழுமையான ஒடுக்குமுறைக்கு வழிவகுத்துவிடும்!”

துரதிர்ஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை. காந்திய சிந்தனைக்கு மாறாக நேரு, படேலில் தொடங்கி அம்பேத்கர் வரை எல்லோருமே மையப்படுத்தப்பட்ட அரசமைப்பைத் தாங்கிப் பிடிப்பவர்களாகவே நின்றார்கள். இந்தியாவின் அரசியலமைப்பை அறிமுகப்படுத்துகையில் அம்பேத்கர் பேசிய வார்த்தைகளையே குறிப்பிடலாம். தன்னுடைய உரையில், “நமது சமூக, பொருளாதார இலக்குகளை அடைவதற்கு அரசியலமைப்பின் நெறிமுறைகளை விடாப்பிடியாக நாம் பின்பற்ற வேண்டும் என்பதே என்னைப் பொறுத்தவரை முதல் விஷயம். ரத்தம் சிந்தவைக்கும் புரட்சிகளை நாம் கைவிட வேண்டும் என்பது இதன் அர்த்தம். சட்டமறுப்பு, ஒத்துழையாமை, சத்தியாகிரகம் ஆகியவற்றை நாம் கைவிட வேண்டும் என்பது இதன் அர்த்தம். பொருளாதார, சமூக இலக்குகளை அடைவதற்கு அரசியலமைப்புரீதியிலான வழிமுறைகள் ஏதும் இல்லாத காலத்தில் அரசியலமைப்புக்குப் புறம்பான வழிமுறைகளைப் பின்பற்றுவதில் பெருமளவு நியாயம் இருந்தது. ஆனால், அரசியலமைப்பு நெறிமுறைகள் இருக்கும்போது இதுபோன்ற அரசியலமைப்புக்கு அப்பாற்பட்ட வழிமுறைகளை எந்த விதத்திலும் நியாயப்படுத்திவிட முடியாது. இவையெல்லாம் அராஜகத்தின் இலக்கணமன்றி வேறல்ல. இவற்றை எவ்வளவு சீக்கிரம் கைவிடுகிறோமோ அவ்வளவுக்கு நல்லது!” என்றார் அம்பேத்கர்! யோசித்துப் பார்த்தால், காந்திய போராட்டங்களால் சுதந்திரம் அடைந்த இந்நாடு தனக்கான அரசியலமைப்பை உருவாக்குகையில், சத்தியாகிரகப் போராட்டங்களைச் சட்ட விரோதமாக்கி, எளிய மக்களின் கடைசி ஆயுதத்தையும் அவர்களிடமிருந்து பறித்து, அதை அராஜகம் என்ற நிலையை நோக்கியும் தள்ளியது எவ்வளவு வினோதமானதும் கொடூரமானதுமாகும்!

சுதந்திர இந்தியாவின் எழுபதாண்டு வரலாற்றைப் பார்த்தால், அரசாங்கம் மட்டும் அல்ல; அரசியல் இயக்கங்கள், மக்கள் இயக்கங்கள், ஊடகங்கள், அறிவுஜீவிகள் என்று எல்லாத் தரப்புகளுமே படிப்படியாக அலையலையாகப் பெரும்பான்மைவாதப் பார்வையை வரித்துக்கொண்ட கொடுமையே இங்கு பெரிய அளவில் நடந்திருக்கிறது. பெரும்பான்மைவாத அபாயத்தை உள்ளடக்கியதே ஜனநாயகம் எனும் பிரக்ஞையற்று, ஜனநாயகம் எனும் சொல்லைக் கடந்த எழுபதாண்டுகளில் அளவுக்கு அதிகமாகவே த் தூக்கிப் பிடித்துவிட்டதால், இன்று அது நம்முடைய பொதுச் சமூகத்தில் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட ஒரு புனிதச் சொல்லாகவே மாறிவிட்டது. விளைவாகவே, ‘இந்த விஷயத்தில் நான் பெரும்பான்மை முடிவை ஆதரிக்கிறேன்’ என்று சொல்லும்போது, ஒருவர் அந்த முடிவு தொடர்பில் எடுத்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு ‘இந்த விஷயத்தில் நான் ஜனநாயக முடிவை ஆதரிக்கிறேன்’ என்று சொல்லும்போது தேவையில்லாது போகிறது.

ஜனநாயகவாதத்தில் கடந்த எழுபதாண்டுகளில் நாம் எந்த அளவுக்கு உறைந்துபோய்விட்டோம் என்பதற்கான உதாரணமாக ஒவ்வொரு தேர்தல் முடிவுகளின்போதும் பத்திரிகைகள் எழுதும் தலையங்கங்களைச் சொல்லலாம். எவ்வளவு அராஜகங்களை, ஊழல்களைச் செய்திருந்தாலும் பெரும்பான்மை மக்களால் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார் என்றால், அதை விமர்சிப்பது நம் பழக்கத்தில் இல்லையே! மாறாக, ‘மக்கள் முடிவு, ஜனநாயகத்தின் தீர்ப்பு’ என்று பெரும்பான்மைவாதத்தை நியாயப்படுத்துவதைத்தானே மரபாகக் கொண்டிக்கிறோம்! நாட்டின் பன்மைத்துவத்துக்கு எதிரான பெரும் தாக்குதல் மோடியின் அரசாட்சியில் நடக்கிறது என்று சொல்லும் நாம் இன்னொரு உண்மைக்கும் முகம் கொடுக்க வேண்டும். இந்தத் தாக்குதலை, உரிமைப் பறிப்பை, அதிகாரச் சூறையாடலைப் புதுப் புதுச் சட்டங்களின் மூலம் மோடி செய்யவில்லை; எல்லாவற்றையும் ஏற்கெனவே இருக்கும் சட்டக் கட்டமைப்பின் பின்னணியிலிருந்தே அவரால் மேற்கொள்ள முடிகிறது. அப்படியென்றால், ஏற்கெனவே கட்டமைப்பு ஏராளமான சேதங்களோடு இருக்கிறது என்றுதானே அர்த்தம்?

1950-ல் குடியரசாக இந்தியா அறிவிக்கப்பட்டபோதே அது முழுமையான குடியரசுத்தன்மையை, சமப் பிரதிநிதித்துவத்தன்மையைக் கொண்டிருக்கவில்லை; அன்றிருந்த எவ்வளவோ குடியரசு உரிமைகளை இடைப்பட்ட 70 ஆண்டுகளில் நாம் இழந்துவிட்டோம்; மேலும் மேலும் இழக்கிறோம் என்றால், நாம் வளர்ந்திருக்கிறோமா, தேய்ந்திருக்கிறோமா? ஆகப் பெரும்பாலான இந்தியர்களுக்கு, தனிப்பட்ட மனிதர்களின் - மக்களின் சுதந்திரம் ஒரு பொருட்டே அல்ல. விளைவாக, நம்முடைய தேர்தல் அரசியலிலும் அதற்குப் பெரிய இடம் இல்லை. ஜனநாயகத்தின் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் தேர்தல். இந்தியாவிலோ, தேர்தல் வழியாக மட்டும்தான் ஜனநாயகம் வெளிப்படுகிறது. அதாவது, தேர்தலில் தொடங்கி தேர்தலோடு ஜனநாயகம் முடிந்துபோய்விடுகிறது. தேர்தலில் தொடங்கி தேர்தலோடு ஜனநாயகம் முடிந்துபோகும் ஒரு இடத்தில்தான் ஒரு மனிதன் தேசமாகும் புள்ளி தோன்றுகிறது. ஒரு மனிதனின் முகம் குடியரசின் முகமாகப் பிரகடனப்படுத்தப்படும் புள்ளியும் அதனுள்ளிருந்து வெளிப்படுகிறது.

(மோடியின் காலத்தை உணர்தல்... 19))
 

ஜூலை, 2017, ‘தி இந்து’


17 கருத்துகள்:

 1. நிச்சயமாக! ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழிக்கேற்ப நம் பிரதமரை நாம் தேர்ந்தெடுத்திருக்கிறோம். இன்றைய இந்த நிலைக்கு நாமே காரணம்.

  இன்னமும் நான் ஜனநாயகத்திற்கும் குடியரசுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறிய முடியவில்லை. என் தேடலில் குறையுள்ளதை ஒப்பு கொள்ளும் அதே நேரத்தில் இவ்வளவு தேட வேண்டியிருக்கிறதே என்ற என் ஆதங்கத்தை வெளிப்படுத்தியதற்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 2. மோடி என்கிற தலைவர் எதோ குறுக்கு வழியில் ராணுவப் புரட்சியின் வாயிலாக அல்லது வானத்தில் இருந்து குதித்து வந்து பிரதமர் பதவியில் உட்கார்ந்து விட்டது போல ஒரு மாயத்தோற்றத்தை உருவாகும் பணியை வஞ்சனை இல்லாமல் செய்து வருகிறார் சமஸ்.ஜனநாயக மரபின் படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதமருக்கு எதிராக ஒரு வெறுப்பை இவ்வளவு திட்டமிட்டு முனைப்பாக இதற்கு முன் ஊடகங்கள் செய்ததாக நினவில்லை. ஆனால் சமஸ் உத்திகளை மாற்றிக் கொண்டால் ஒரு வேளை வெற்றி கிடைக்குமோ என்னவோ? ஒரு வங்க நாவல் அல்லது சிறுகதை படித்து விட்டாலோ, பழைய டில்லியில் எங்காவது ஒரு டொக்கு ஓட்டலில் பன்னீர் டிக்கா சாப்பிட்டு விட்டாலோ அதை பற்றி சிலாகித்து பேசுவதாக ஆரம்பித்து கடைசியில் மோடியின் கொண்டு முடிப்பதை இனியாவது சமஸ் மாற்றிக் கொள்ள வேண்டும். புனை கதை திறன் இருக்கிற அளவு அந்த எழுத்தில் நேர்மையோ, உண்மையோ அல்லது நடு நிலைமையோ வெளிப்படுவதில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. I vote for modi in last election, so am having right to critic modi....u said people elected modi..we are the people. we are telling "modi don't have power or guts to face people's problems. He just want to showoff like he is the influenced guy in India. And working for corporates. We just need an answer for this from modi not from u or any allakais".

   சமஸ் மாற வேண்டும் என்ற சொல்வதிலெயெ நீங்கள் இந்த கட்டுரையை புரிந்து கொள்ள வில்லை என தெரிகிரது. நீங்கள் தான் பெரும்பாமை சணநாயகவாதி. புரிந்து கொள்ள ஆழமாக படிக்கவும்...

   நீக்கு
 3. வானத்தின் கீழ் இருக்கும் எல்லாவற்றையும் பற்றி மானாவாரியாக களிப்புடன் விமரிசனம் செய்யும் நம்ம ஊர் பத்திரிகையாளர்கள் சக பத்திரிகையாளர்கள் பற்றி குற்றச்சாட்டுகள் எழும்போது கண்டு கொள்ளாமல் இருந்து விடுவார்கள். உதாரணத்துக்கு தெஹல்கா தருண் தேஜ்பால், பர்கா தத் தின் 2G ஈடுபாடு இதெல்லாம் இன்று வரை அதிக விமரிசனத்துக்கு ஆளாகவில்லை. கேட்டால் அதெல்லாம் பத்திரிகை தர்மம் அது இது என்று பசப்புவார்கள். அந்த வகையில் ஒரு வித்தியாசமான கட்டுரை என்றாலும். காரணம் தெளிவாக தெரிகிறது. 1 - முதல் முறை வலது சாரியினர் கருத்துக்கும் முக்கியத்துவம் தந்தவர் ஆர்னாப். 2 - நாட்டின் நலன் பாதுகாப்பு ஆகிய விஷயங்களுக்கு குரல் கொடுக்கிறவர். 3 -தீவிரவாதத்தை எதிர்க்கிறவர் 4 - மோடி அரசின் நிலைப்பாட்டையும் விவாதங்களின் போது முன் வைக்கிறவர். 5 - இந்த புகழும், ஊதியமும், விளம்பரமும் உள்ளூர் பத்திரிக்கையாளனான தனக்கு கிடைக்க வில்லையே என்ற சமஸின் வயிற்றெச்சல்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. If u are worshipping modi while he is showing his b**** means, that's ur problem. U don't have rights to ask me the same.
   Sorry Samas, got emotional.

   நீக்கு
  2. சமஸ் மோடியின் காலத்தை உணர்தல் yena bagirngamaga கட்டுரைகள் yeluthi varugirar! Aanaal Modiyo ungalai ponra Aatkalai vasagar poorvaiyil niyamikkaamal சமஸ் காலத்தை உணர்தல் yena கட்டுரைகள் yelutha vaikkalamey?

   நீக்கு
 4. ஜனநாயகம்,குடியரசு இரண்டின் வேறுபாடுகள் என்ன?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. In police station, if u r mishandled by police or not working on proper procedure means democratic.. If everything is working according to law means republic

   நீக்கு
 5. அருமையான கட்டுரை. பொதுவாக சமஸ் கட்டுரையின் தனித்தன்மை அவருடைய அவதானிப்பு (Observation). ஜனநாயகம், குடியரசு போன்றவற்றின் ஆழமான புரிதல்களை நமக்கு வழங்குகிறார். அதற்கு நன்றி.
  எதற்க்கெடுத்தாலும் பலர், மக்களால் தேர்தெடுக்கப்பட்டவர்... மக்களால் தேர்தெடுக்கப்பட்டவர்... அதை விமர்சிப்பது ஜனநாயக துரோகம்.... என்ற கோஷங்களையே மீண்டும் மீண்டும் எழுப்புகின்றனர். நம் மக்களில் பெரும்பாலானோர் இங்கு வரிசையில் நின்று வாக்களிக்கின்றனர் என்ற காரணத்தினாலேயே இங்கு ஜனநாயகம் உயர்த்த இடத்தில் உள்ளதாக நாம் எண்ணிவிட முடியாது. உதாரணமாக, மோடிக்கு வாக்களித்தவர்களில் எத்தனை பேர் மோடியைப் பற்றி, பாஜக-வின் கொள்கைகள் பற்றி, இந்துத்துவ அரசியலைப் பற்றி ஒருவித புரிதல்களுடன் வாக்களித்தனர் ? எதோ ஆட்சி மாற்றத்துக்காக வாக்களித்தவர்களே அதிகம். அரசியல்வாதிகளின் மேடைப்பேச்சுக்களை மட்டும் கேட்டு ஆஹா...ஓஹோ... என்று வாக்களிக்கும் பாமரர்கள்தான் நாம். அதனால் இங்கு உள்ள ஜனநாயகம் பெயரளவிற்கு உள்ளதுதான். இன்னும் சரியாக சொன்னால், உணர்ச்சிவசப்பட்ட மக்கள் திரளால் (Crowd) அரை உயிரோடு வாழ்ந்துகொண்டிருக்கும் ஜனநாயகம் தான் இங்குள்ளது. சமஸ் பல இடங்களில் குறிப்பிட்டதுபோல, நம் சமூகத்தில் (குறிப்பாக கல்வியில்) உள்ள 'அரசியலற்ற தன்மை' தான் இதற்குக் காரணம். எந்த அளவிற்கு நம்முடைய கல்வி அரசியலை விட்டு விலகிப் போகிறதோ அந்த அளவிற்கு நாம் பாமரர்களாகவே இருப்போம்.

  பதிலளிநீக்கு
 6. எனக்கு 38 வயதாகிறது!! மென்பொருள் துறையில் பணியாற்றுகிறேன்!! ஓரளவுக்கு வாசிப்பு அனுபவமும் உண்டு!! ஆனாலும் இது வரை குடியரசு தின கொண்டாட்டங்களை குடியரசு தலைவரின் வெறும் சலிப்பூட்டுக்கின்ற உரைகளின் தினமாக நினைத்திருக்கிறேன் !! அல்லது அதிகபட்சம் ராணுவ அணிவகுப்பின் அம்சமாக கருதி இருக்கிறேன் !! ஒரு போதும் குடியரசு என்றால் என்ன என்ற கேள்வி துளைக்கவில்லை என்பதை எண்ணும் போது நாணுகிறேன்!!

  ஒவ்வொரு முறையும் எதோ செய்தி வாசிப்பவர் போல் பக்கம் பக்கமாக குயரசு தலைவர் சற்றேறக்குறைய ஒரே வருத்தத்தை தெரிவிப்பார் !! (அதாவது நம் அடித்தள மக்களின் முன்னேற்றத்திற்கு உழைக்கவேண்டும் .. பல வருட காலமாக இதே செய்தி )

  நம் அரசு முதலில் இந்த குடியரசு தின செய்தியை மக்களுக்கு கொண்டு சேர்க்க புதிய வழி முறைகளை யோசித்தாக வேண்டும் .. இந்த இனையதள யுகத்தில் இதை ஆர்வம் தூண்டும் வகையில் கொண்டு சேர்ப்பது மிக எளிது!!


  நன்றி சமஸ் !!

  பதிலளிநீக்கு
 7. நம் நாட்டில் சுதந்திரம் தொட்டு குடியரசு தலைவரை பொம்மை போல் பாவிக்கிறார்கள்.. இது இந்த நாட்டின் குடியரசும் பொம்மையே என்பதை போல் குறிப்பால் உணர்த்துகிறார்களோ என்னவோ !!

  பதிலளிநீக்கு
 8. makkal vakkugalai petra (or) petrathaaga arivikkappatta aatchiyalargal 1)Therthal comission, 2)Arasu Athigarigal 3)Udagangal, 4)Neethith thurai, aagiya 4 jananayaga thongalaiyum yenraikku vilaikku vanginargalo anraikkey indiavil Kudiyarasu Seaththu vittathu!

  பதிலளிநீக்கு