நமக்குள்ளிருக்கும் கோட்ஸேவுக்கு முகம் கொடுக்கலாமா?என்னை அதிகம் வசீகரித்த தொன்மக் கதைகளில் ஒன்று, வங்கத்தின் சுந்தர வனத்தைக் காக்கும் வன தேவதையான பொன்பீபியின் கதை. சதுப்புநிலக் காடான சுந்தர வனப் பிராந்தியத்தை ஆண்ட தக்ஷிண் ராய் ஒரு துஷ்ட சக்தி. புலி வடிவில் மக்களை வேட்டையாடும் துர்குணம் அவனுக்கு உண்டு. பிறந்த கையோடு வனத்தில் கைவிடப்பட்டு, ஒரு மானால் வளர்த்தெடுக்கப்படும் பொன்பீபி வனத்தின் மகளாகிறாள். தனக்கான ஆபத்தாக பொன்பீபி உருவெடுப்பாள் என்பதை உள்ளுணர்வால் உணரும் தக்ஷிண் ராய் அவளைக் கொல்லத் திட்டமிடுகிறான். பொன்பீபியுடன் போரிடச் செல்லும் தக்ஷிண் ராயுடன் அவனுடைய தாய் நாராயணியும் சேர்ந்துகொள்கிறாள். “ஒரு பெண்ணுடன் போரிட நான் போதுமானவள்” என்கிறாள் நாராயணி. பொன்பீபியுடனான போரில் நாராயணியும் தொடர்ந்து தக்ஷிண் ராயும் தோற்கின்றனர். தோற்று கீழே விழும்போது மனம் திருந்துகிறாள் நாராயணி. அவளைக் கருணையோடு மன்னிக்கும் பொன்பீபி நாராயணியை அணைத்துக்கொள்கிறாள். தன்னை வணங்குவோர் அவளையும் வணங்க வரம் கொடுக்கிறாள். தக்ஷிண் ராயும் மன்னிப்பு கோருகிறான்; பொன்பீபி அவனையும் மன்னிக்கிறாள்; ஆனால், அவன் திருந்தவில்லை. வனத்துக்குள் ஓடி மறைந்துகொள்ளும் தக்ஷிண் ராய் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் ஏதேனும் ஒரு புலிக்குள் புகுந்து அதன் வழியாக மனிதர்களை வேட்டையாடியபடி இருக்கிறான். மக்கள் பொன்பீபியை தக்ஷிண் ராயிடமிருந்து காக்கும் தெய்வமாகக் கருதுகின்றனர். ஆனால், பொன்பீபி மக்களுக்கு மட்டும் அல்ல; சுந்தர வனத்தில் வாழும் ஒவ்வொரு உயிரையும் காக்கும் தேவதையாக இருக்கிறாள். சுந்தர வனத்தின் பூர்வக் குடிகளான மக்களுக்கும் புலிகளுக்கும் சரி பாதியாக அந்த வனத்தை அவள் பிரித்துக்கொடுத்திருக்கிறாள். தன் எதிரிக்கான ஊடகமாகின்றன என்று புலிகளைக்கூட அவள் கைவிட்டுவிடவில்லை; எதிரி என்பதால், தக்ஷிண் ராயையும் அவள் கொன்றுவிடவில்லை; அவனும் திருந்தட்டும் என்று அவள் காத்திருக்கிறாள்; அவனிடமிருந்து மக்களைப் பாதுகாத்தவாறே அவனையும் அவள் பாதுகாக்கிறாள் என்பதே அந்தக் கதை.தேவதை என்பதைத் தாண்டி, ஒரு நல்ல தலைவருக்கான மிகச் சிறந்த இலக்கணத்தை பொன்பீபியின் மூலமாகச் சுந்தர வனம் நமக்குச் சொல்கிறது. ஒரு நல்ல தலைவருக்கான அடிப்படை அறம் தாய்மை - எல்லோர்க்கும் வாழ்வளிக்கும் இடத்தில் தன்னை நிறுத்திக்கொள்வது; எல்லோர்க்கும் சமமான இடத்தில் தன்னை நிறுத்திக்கொள்வது! மூர்க்கத்தனம் அல்ல; கருணையே மாவீரம். அழித்தொழிப்பல்ல; அரவணைப்பே ஆளுமை. சுந்தர வனத்தில் பொன்பீபி வீற்றிருக்கும் கோயில்களுக்குக் கதவுகள் கிடையாது. இந்துக்கள், இஸ்லாமியர்கள் இரு தரப்பினராலும் வழிபடப்படும் காவல் தேவதையாக பொன்பீபி தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருப்பதில் ஆச்சரியம் என்ன? எல்லோருக்கும், எல்லாக் காலத்துக்குமான தெய்வமாக நிற்கிறாள் அவள்! அரசியலின் அடிப்படை இயல்பை இரண்டாகப் பிரிக்கும்போது, வன்முறை அரசியல் ஆண்-மைய அரசியலாகிறது - கருணையின் அரசியல் பெண்-மைய அரசியலாகிறது. பொன்பீபி பெண்-மைய அரசியலின் வடிவம்!

அரசியலை இப்படி இரண்டாகப் பிரிக்க முடியுமா என்று இளவயதில் கேட்டபோது என் தாத்தா சொன்னார், “நிச்சயமாக அரசியலில் இருபால் தன்மைகள் இருக்கின்றன. பிளவு ஆண். அரவணைப்பு பெண். மூர்க்கம் ஆண். பொறுமை பெண். வெறுப்பு ஆண்-மைய அரசியலின் பண்பு. அன்பு பெண்-மைய அரசியலின் பண்பு. அடையாளக் கருத்தியல் குறியீடுகள் ஆண்-மைய அரசியலின் குறியீடுகள். அன்றாட வாழ்வாதாரக் குறியீடுகள் பெண்-மைய அரசியலின் குறியீடுகள். ஆனால், இதை அப்படியே ஆண்களுக்கும் பெண்களுக்குமாகப் பண்போடு பொருத்திப் பார்க்க முடியாது. ஏனென்றால், அரசியல் களம் மகா குரூரமானது. ஒரு பெண் இங்கு காலடி வைக்கும்போதே அவளிடமுள்ள பெண்தன்மையை அது காவு கேட்கிறது. ஆண்தன்மையை அவள் அடைவதையே வீரம் என்றும் அங்கீகரிக்கிறது. இந்தத் தன்மை மாற்றத்துக்குப் பிறகே அவளுக்கான களத்தை அவளுக்குத் தருகிறது. மாறாக, பெண்தன்மையை அடைந்த ஆண்களும் உண்டு!”

அவர் ஒருநாளும் இந்திரா காந்தியையோ, ஜெயலலிதாவையோ பெண்-மைய அரசியலின் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டதில்லை. அவர்கள் ஆண்-மைய அரசியலின் பெண் வார்ப்புகள் என்பார். அவரளவில், நவீன இந்தியா இதுவரை முழுமையாக ஒரேயொரு பெண்-மைய அரசியல் பிரதிநிதியையே கண்டிருக்கிறது. அவர், காந்தி! நேரு, அண்ணா போன்றவர்களிடமெல்லாம் பெண்-மைய அரசியலின் தன்மை அதிகம் என்றாலும், காந்தியின் அளவுக்கு எவரையும் ஒப்பிட முடியாது என்பார்.

இந்தியாவில் பெண்-மைய அரசியலுக்கான உச்ச உதாரணம் காந்திய அரசியல்; ஆண்-மைய அரசியலுக்கான உச்ச உதாரணம் சங்கப் பரிவார அரசியல். இந்துக்களாக, முஸ்லிம்களாக, கிறிஸ்தவர்களாகப் பிரிந்து கிடந்தவர்களை இந்தியர்கள் என்ற புள்ளியில் சேர்த்து, ஒட்டுமொத்த மானுடக் கடல் நோக்கி அவர்களை ஒன்றுதிரட்டியது காந்தியத்தின் பெண்-மைய அரசியல்; இந்தியர்களை இந்துக்களாகவும், முஸ்லிம்களாகவும், கிறிஸ்தவர்களாகவும் சிந்திக்கவைத்து, இறுதியில் நுட்பமாகச் சனாதன சாதியச் சிறையை நோக்கி மக்களைத் தள்ளுவது சங்கப் பரிவாரங்களின் ஆண்-மைய அரசியல்.

ஒரு நூற்றாண்டு போர் என்று இதைச் சொல்லலாம். ஏறத்தாழ இதே காலகட்டத்தில்தான் நூறு வருடங்களுக்கு முன் இந்திய அரசியல் களத்தில், பிரிட்டிஷாருக்கு எதிராக இந்து தேசியத்தை முன்னிறுத்திய ஆண்-மைய அரசியல் செல்வாக்கு பெற்றது. காங்கிரஸே இந்து தேசிய அரசியலின் மையமாக மாறும் அபாயம் அன்று இருந்தது. கோகலேவுக்கு எதிராக உருவான ‘லால், பால், பால் அணி’ என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால் மூவரணி முன்னெடுத்த தீவிரப் போக்கு ஆண்-மைய அரசியலின் பிரதிபலிப்பாகவே இருந்தது.

இன்றைய பாஜக அரசியலுக்குப் பல வகைகளில் முன்னோடி என்று திலகரைச் சொல்லலாம். கீதோபதேசத்தை யுத்த தர்மமாகவும் போரிடுவதைக் கர்ம யோகமாகவும் வர்ணித்தவர் திலகர். மக்களை ஒன்றுதிரட்ட வீடுகளில் பூஜிக்கப்பட்ட விநாயகரை, வீதியில் இறக்கி விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு வித்திட்டவர். தேவநாகரியை வரிவடிவமாகக் கொண்ட இந்தியை தேசிய மொழியாக்க வேண்டும் என்று முதன்முதலில் கோரியவர். பெண் கல்வியைப் புறந்தள்ளியவர். சாதி மறுப்புத் திருமணங்களை வெறுத்தவர். வெளியே மரபுவாதியாகத் தெரிந்த அவர் முன்னிறுத்திய அரசியல் பாதை, அடிப்படையில் ஒரே அரசு, ஒரே கலாச்சாரம், ஒரே தேசம் மற்றும் ஒரே தேசியம் எனும் ஐரோப்பிய நவீன அரசியல் கருத்தாக்கத்தை நோக்கியது என்பது கவனிக்க வேண்டிய முரண்பாடு. இன்றைய சங்கப் பரிவாரங்களின் அரசியல் கருத்தாக்கமும் திலகரின் கருத்தாக்கமும் ஒன்றுபடும் முக்கியமான புள்ளி இது.

1915-ல் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய காந்தி, காங்கிரஸுக்குள் அடியெடுத்து வைத்ததும், 1920-ல் திலகர் காலமானதும் காங்கிரஸில் ஆண்-மைய அரசியலுக்கான பெரும் பின்னடைவாக அமைந்தன. காங்கிரஸில் திட்டவட்டமாக காந்தியின் கை ஓங்கிய நிலையில், காங்கிரஸுக்கு வெளியே தமக்கான ஒரு அரசியல் இயக்கத்தை வளர்த்தெடுக்கும் நிலையை நோக்கி இந்து தேசியர்கள் நகர்ந்தார்கள். காந்தி மீதான இந்து தேசியர்களின் தீராத வன்மம் இங்கிருந்தே தொடங்குகிறது - தீவிரப் பாதையை வீராண்மைப் பாதையாகவும் அஹிம்சைப் பாதையைப் பெட்டைத்தனமாகவும் அவர்கள் கருதினர். சாவர்க்கர் முதல் கோட்ஸே வரை அவர்கள் எல்லோருக்குமே இந்தியாவை ஆண்தன்மையிலானதாக மாற்றும் பார்வை இருந்தது.

விடுதலை வேண்டும் என்றால், எதிரியை அச்சுறுத்தும் ஆற்றலை நாம் பெற வேண்டும் என்பது கோட்ஸேவின் கோட்பாடு. காந்தியம் அகவிடுதலையின் மூலமாக புறவிடுதலையைப் பேசியது. எதிரியை அச்சுறுத்துவது என்பது ஒருவகையில் தன்னிடமுள்ள அச்சத்தை எதிரிக்குக் கடத்த முற்படுவது; மாறாக, சுய அச்சத்திலிருந்து விடுதலை அடைவது உலகில் யாராலும் அடிபணிய வைக்க முடியாத நிலையை அடைவது என்பது காந்தியின் கோட்பாடு. சுயதரப்பின் குறைகளைச் சரிசெய்து, சுயதரப்பைப் பலப்படுத்திக்கொள்வதன் மூலமாக எதிர்த் தரப்பைப் பலவீனப்படுத்திவிட முடியும் என்பதே அதன் வியூகம்.

கன்னட எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தி நினைவுகூர்ந்த ஒரு நிகழ்ச்சியை இங்கு குறிப்பிடலாம். “இந்தியா வந்த ஒரு அமெரிக்கப் பத்திரிகையாளர் காந்தியைப் பேட்டி காண்கிறார். ‘உங்கள் செயல்திட்டம் என்ன?’ என்று கேட்கிறார். பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியாவை விடுவிப்பதைத் தன்னுடைய செயல்திட்டம் என்று காந்தி சொல்லியிருக்க வேண்டும். ஆச்சரியமூட்டும்படி காந்தி அப்படிச் சொல்லவே இல்லை. ‘என் செயல்திட்டங்கள் மூன்று. முதலாவது, இந்து-முஸ்லிம் ஒற்றுமை. இரண்டாவது, தீண்டாமை ஒழிப்பு. மூன்றாவது, சுதேசி’ என்றார் காந்தி. “ஏன் பிரிட்டிஷாரை இந்தியாவை விட்டு வெளியேற்றுவதை அவர் ஒரு செயல்திட்டமாகச் சொல்லவில்லை என்றால், இந்த மூன்று செயல்திட்டங்களும் நிறைவேறினால், அது தானாக நிறைவேறிவிடும் என்பதே காந்திய நம்பிக்கையும் வழிமுறையும்” என்று கூறினார் அனந்தமூர்த்தி.

காந்தி கொலைக்குப் பிறகு, நீதிமன்றத்தில் பேசுகையில், “கருணை என்பது என் மனசாட்சிக்கு எதிரானது” என்ற கோட்ஸேவின் கூற்று இந்தியாவில் ஆண்-மைய - பெண்-மைய அரசியலின் மையப் புள்ளியையும் காந்தி - கோட்ஸே அரசியலின் மையப் புள்ளியையும் ஒருசேரத் தொட்டுக்காட்டுவது. வெளிப்படையாக அறிவிக்கப்படாவிட்டாலும் இந்து தேசியத்தின் உயிரோடு ஒட்டிய இன்னொரு இயல்பு, சனாதனம். யாரை எங்கே வைக்க வேண்டும் என்கிற அதன் அதிகாரப் படிநிலையில், திட்டவட்டமாக மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சித்பவன் பிராமணர்கள் உச்சத்தில் இருந்தார்கள். காந்தியின் அரசியல் இந்த இரு இடங்களிலுமே கை வைத்தது. இந்து தேசியர்களின் கனவுக்கு காங்கிரஸ் சரியாக ஒரு நூற்றாண்டு தடையாக இருந்த நிலையில், இப்போது மீண்டும் அவர்கள் தலையெடுக்கிறார்கள்.

மோடியின் காலத்தில் இந்தியா அடைந்துவரும் மிகப் பெரிய அரசியல் பின்னடைவுகளில் ஒன்று என நான் கருதுவது, இந்திய அரசியல் களத்தை முழுக்க ஆண்-மைய அரசியல் இயல்பை நோக்கித் திருப்புவதில் பாஜக அடைந்துவரும் முன்னேற்றம். தன்னுடைய எதிரிகளின் போக்கையும் தீர்மானிக்கும் வல்லமையை பாஜகவுக்குப் பெற்றுத் தரும் பிரதான வியூகம் இதுவே. ஏன் விலைவாசி உயர்வு போன்ற அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகளைப் பேசுவதைக் காட்டிலும், இந்த மூன்றாண்டுகளில் இந்து தேசியம் போன்ற அடையாள அரசியலை நாடு அதிகம் பேசிக்கொண்டிருக்கிறது என்றால், கோட்பாடுகளுக்கு - கடந்த காலத்துக்கு முக்கியத்துவம் அளிப்பது ஆண்-மைய அரசியலின் கூறு. மாறாக, அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு - நிகழ் காலத்துக்கு முக்கியத்துவம் அளிப்பது பெண்-மைய அரசியலின் கூறு.

கூர்ந்து கவனித்தால் ஒரு விஷயம் புரியும், மக்களை அன்றாட வாழ்க்கைப்பாட்டு நினைவுகளிலிருந்து பிளவு அடையாள நினைவை நோக்கி இழுப்பதை ஆட்சியில் இருக்கும்போது மட்டும் பாஜக செய்வதில்லை; எதிர்க்கட்சி வரிசையிலிருக்கும்போதும் இந்த வேலையைத் தொடர்ந்து செய்துவருகிறது. சொல்லப்போனால், கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால், மொழியின் பெயரால், நாட்டின் பெயரால், தேச பக்தியின் பெயரால் என்று வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு அடையாளங்களை வன்முறையினூடாகப் பெரும்பான்மை மக்களின் நினைவுகளில் பொதிப்பதைத் தன்னுடைய நிரந்தரமான அரசியல் பாதைகளில் ஒன்றாகக் கையாண்டே பாஜக இன்றைக்கு இந்த இடத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறது. குஜராத்தில் பாஜகவின் அமைப்புச் செயலராக மோடி பொறுப்பேற்று 182 இடங்களைக் கொண்ட குஜராத் சட்டமன்றத்தில், 11 இடங்களாக இருந்த பாஜகவின் பலத்தை 121 இடங்களாக உருவெடுக்கவைத்த காலகட்டத்தில்தான் குஜராத் மூன்று அடுத்தடுத்த பெரும் மதக் கலவரங்களைச் சந்தித்தது. தமிழகத்தில் மண்டைக்காடு கலவரத்திலிருந்தே குமரி மாவட்டத்திலும் கோயமுத்தூர் கலவரத்திலிருந்தே கோவை மாவட்டத்திலும் பாஜக உயிர் பெற்றது என்பதையும் இங்கு நினைவூட்டிக்கொள்ளலாம். பாஜக அடுத்தடுத்த அதிகாரத்தை நோக்கி நகரும்போதெல்லாம் வெடிக்கும் வன்முறையும் பதற்றமும் வெறும் நிகழ்வுகள் அல்ல; அது ஆண்-மைய அரசியலின் அப்பட்டமான வெளிப்பாடு.

மோடியின் வெற்றி ஒரு மோடியின் ஆண்-மைய அரசியல் வெளிப்பாடு அல்ல; கோடிக்கணக்கான மக்களின் ஆண்-மைய அரசியலின் வெளிப்பாடு என்பதே இந்தக் கதையின் மிகச் சிக்கலான பகுதி. கோட்ஸேவின் வாழ்வை இன்று திரும்பப் படிக்க நேர்கையில், நாம் அன்றாடம் சகஜமாகப் பேசிக்கொண்டிருக்கும் பலரிடம் இன்று கோட்ஸேவின் குரல் வெளிப்படுவதை உணர முடிகிறது. இந்தியா எதிர்கொள்ளும் சவால், செத்துப்போன கோட்ஸே அல்ல; இன்னும் பலரிடத்தில் உயிரோடு மிச்சமிருக்கும் கோட்ஸே.

அரசு எனும் நவீன கருத்தாக்கம் தொடர்பாக கோட்ஸேவுக்கும் நமக்கும் இருக்கும் வேறுபாடு என்ன? தேசியம் தொடர்பாக கோட்ஸேவுக்கும் நமக்கும் இருக்கும் வேறுபாடு என்ன? தேசிய மொழி தொடர்பாக கோட்ஸேவுக்கும் நமக்கும் இருக்கும் வேறுபாடு என்ன? நாம் நாட்டைப் பிரதானமாகக் கருதுகிறோமா, அரசைப் பிரதானமாகக் கருதுகிறோமா? நாடு என்பது நம் மனதில் பிராந்தியத்தைக் குறிக்கிறதா; மக்களைக் குறிக்கிறதா? முதலில் நாம் ஆண்-மைய அரசியலை விரும்புகிறோமா, பெண்-மைய அரசியலை விரும்புகிறோமா? இப்படி நிறையக் கேள்விகளை இன்றைக்கு நாம் நமக்குள் கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஏனென்றால், இந்த ஒவ்வொரு கேள்விக்கான பதிலுக்குப் பின்னாலும், நமக்கும் கோட்ஸேவுக்கும் உள்ள தொடர்பும் நெருக்கமும் ஒளிந்திருக்கிறது. ஒளிந்திருக்கும் அந்த மாயக் கயிறுகளின் வழியாகவே மோடி மேலே மேலே ஏறிப் போய்க்கொண்டிருக்கிறார்!

ஜூன் 2017, ‘தி இந்து’

(மோடியின் காலத்தை உணர்தல்... 17)


5 கருத்துகள்:

 1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 2. Madha kalavaram.. Madha kalavaram nu Ipdi alarreenglae samas, delhi yil nadhirshah seidha neesa thanamaana padukolaigal theriyumaa? Aurangzeb, feroz shah tuqlag, gajini idithu thalliya hindu koyil galin thonmayai patri theriyumaa? Bhagathsingh viduthalai patri gandhi ,viceroy irwinidam yendha korikayum vaikavillai enbadhu theriyumaa? Subash chandra bose congress thalaivaraaga yaerkapattadhu sagikka mudiyaadha gandhiyai patri theriyumaa ? Hindu muslim kalavarangalai thadukka india vai jinnahvae aalattum endru sonna gandhiyai theriyumaa? Naeradi nadavadikkai endra peyaril madha kalavarathai thoondiyadhu jinnah vaa savarkaraa? Hindu muslim otrumai ,tharsamayam yedhir noki ulla periya aabathu BJP alla, thangalai pondra pseudo secularist galaal dhaan!!!

  பதிலளிநீக்கு
 3. தமிழகத்தில் வஉசி பாரதி போன்றோர் திலகர் தலைமையைப்போற்றியவர்கள். ஆனால்அவர்களது சமகாலத்தில் சகதலைவர் களால் ஏற்கப்படாதவர்கள்ஆனார்கள்.

  பதிலளிநீக்கு
 4. சமஸ் புதுப்புது கருத்துக்களை தெரிவித்து மதவெறி பிடித்த சிலருக்கு நிஜவெறி பிடிக்க செய்து விடுவார் போல் தெரிகிறது. எனவே விமர்சனம் செய்வதில் இருந்து விலகி இருக்க விரும்பினாலும் சமசின் மையக் கருத்துகளில் அறிவியல் உளவியல் சம்பந்தப் படுவதால் சும்மா இருக்க முடியவில்லை.

  இயற்கையாயால் மனித இனத்தில் ஏற்பட்ட முக்கிய வேறுபாடுதான் ஆண்பால் பெண்பால் என்பது. இரண்டும் இணைந்தால் தான் மனித இனமும் இயக்கங்களும் ஆரோக்கியமாக இயங்கும் தொடரும்.
  ஆணுக்கு பெண்ணை விட ஒரே ஒரு குரோமசோம்தான் அதிகம். அதாவது மரபணுக்களில் உள்ள 23 வது குரோமசோம் தான் ஆண்பால் பெண்பாலை தீர்மானிப்பது. எனவே இருபாலினரிடமும் இரு பாலரின் குணங்களும் உண்டு. இது எல்லா நபர்களுக்கும் அமைப்புகளுக்கும். பொருந்தும். இதில் விதிவிலக்காக இருபால் குணங்களும் கிட்டத்தட்ட சமநிலையில் கலந்த, இருபாலிலும் சேர்க்க முடியாத முன்றாம் பாலினத்தவரும் மிக மிகச் சிறுபான்மையினராக சமூகத்தில் உள்ளனர்.

  இதனால் எல்லா அமைப்புகளிடமும், இயக்கங்களிலும் ஆண்பால் பெண்பால் தன்மைகளைக் கொண்டவர்கள் மட்டுமல்ல மூன்றாம் பாலினத்தன்மையான நடுநிலை அல்லது அலித்தன்மைகளை கொள்கைகளில் கொண்ட வர்கள் மிக சிறுபான்மையினராக இருப்பர். இந்த மூவகை குணங்களும் ஆண்கள் வழியாகவோ பெண்கள் வழியாகவோ வெளிப்பட்டு எல்லா அமைப்புகளிலும் இடையறாத போராட்டங்கள் நடைபெறும். இப்போராட்டத்தில் ஆண்/பெண் இருசக்திகளும் கிட்டத்தட்ட சமநிலையில் இருந்தால் இந்த இரு பிரிவினரும் வெற்றிப் பெறுவதில்லை. இருபால் தன்மைகளும் சமநிலையில் கலந்த முன்றாம் பால் தன்மை கொண்ட கொள்கை கொண்ட அதாவது இருதரப்பினரிடமும் இணக்கமாகச் செல்லும் கொள்கை கொண்டவர்களையே இருதரப்பினரும் இறுதியில் தேர்ந்தெடுப்பார்கள்.

  இதனால் சாதாரண, சமப் போட்டிகள் நிலவும்காலக் கட்டங்களில ்
  .பெரும்பாலும் இந்த நடுநிலைத்தன்மை எனும் அலித்தன்மை.கொண்டவர்களே வெற்றி பெறுவர். காந்தியார் வெற்றிப் பெற்றதும் அவ்வாறுதான். வாஜ்பாயி வெற்றி பெற்றதும் அத்வானி தோல்வி அடைந்ததும், தற்போது மோடி வெற்றி பெற்றிருப்பதும் இவ்வாறுதான். இந்த மூவகைத் தன்மைகளுக்கும் இடையே நடக்கும் போட்டிகளில் சூழ்நிலைகளால் எவராவது ஒரவர் தற்காலிகமாக வெற்றி பெறுவர் என்பதே உண்மை எனவே கௌட்சேக்களும் மோடிக்களும் சில சூழ்நிலைகளில் முன்னுக்கு வருவதும் பின்னர். பின்னுக்கு செல்வதும் இயற்கையின் இயல்புகளில்
  ஒன்றுதான். அதனை பேராபத்தாக கருத வேண்டியதில்லை.

  இயக்கயியலையும், பாலியல் தன்மைகளையும் இணைத்தும். அறிவியலையும்.உளவியலையும் இணைத்தும் அமைப்புகளின் இயக்கங்களைப் பார்ப்பவர்களுக்கு இதில் உள்ள உண்மைகள் புரியும்.

  "182 இடங்களைக் கொண்ட குஜராத் சட்டமன்றத்தில், 11 இடங்களாக இருந்த பாஜகவின் பலத்தை 121 இடங்களாக உருவெடுக்கவைத்த காலகட்டத்தில்தான் குஜராத் மூன்று அடுத்தடுத்த பெரும் மதக் கலவரங்களைச் சந்தித்தது. தமிழகத்தில் மண்டைக்காடு கலவரத்திலிருந்தே குமரி மாவட்டத்திலும் கோயமுத்தூர் கலவரத்திலிருந்தே கோவை மாவட்டத்திலும் பாஜக உயிர் பெற்றது என்பதையும் இங்கு நினைவூட்டிக்கொள்ளலாம்.'' ஆளும் வர்க்கங்கள் எந்தக் கட்சிகளை பயன்படுத்தியோ எந்த வெறிகளை கிளப்பி விட்டோ தொடர்ந்து ஆளவே விரும்புவர் என்பது சமூக அறிவியலின் பால பாடம். இதனை ஆர்எஸ் எஸ் அப்பட்டமாக செய்கிறது அவ்ளவுதான்.

  ''அரசு எனும் நவீன கருத்தாக்கம் தொடர்பாக கோட்ஸேவுக்கும் நமக்கும் இருக்கும் வேறுபாடு என்ன? தேசியம் தொடர்பாக கோட்ஸேவுக்கும் நமக்கும் இருக்கும் வேறுபாடு என்ன? தேசிய மொழி தொடர்பாக கோட்ஸேவுக்கும் நமக்கும் இருக்கும் வேறுபாடு என்ன? நாம் நாட்டைப் பிரதானமாகக் கருதுகிறோமா, அரசைப் பிரதானமாகக் கருதுகிறோமா? நாடு என்பது நம் மனதில் பிராந்தியத்தைக் குறிக்கிறதா?'' இது மிகச்சிறந்த கேள்வி கோட்சேயின் குணம் எல்லோரிடமும் சிறிதாவது இருக்கும். ஆனால் அதன் அளவு ஆர்எஸ்எஸ்சிடமும் பாஜகவிடமும் அதிகமாக இருக்கிறது. இதுவும் இயற்கைதானே. நீங்கள் என்னதான் எழுதினாலும் இயற்கையயாக சிலரிடம் உருவான பிறவிக் குணங்களை எளிதில் மாற்ற முடியாது.

  பதிலளிநீக்கு
 5. \\ எல்லோர்க்கும் வாழ்வளிக்கும் இடத்தில் தன்னை நிறுத்திக்கொள்வது; எல்லோர்க்கும் சமமான இடத்தில் தன்னை நிறுத்திக்கொள்வது //

  \\அரசியலின் அடிப்படை இயல்பை இரண்டாகப் பிரிக்கும்போது, வன்முறை அரசியல் ஆண்-மைய அரசியலாகிறது - கருணையின் அரசியல் பெண்-மைய அரசியலாகிறது. //

  \\ “நிச்சயமாக அரசியலில் இருபால் தன்மைகள் இருக்கின்றன. பிளவு ஆண். அரவணைப்பு பெண். மூர்க்கம் ஆண். பொறுமை பெண். வெறுப்பு ஆண்-மைய அரசியலின் பண்பு.
  அன்பு பெண்-மைய அரசியலின் பண்பு.'' // _இவை கட்டுரையின் சாரம்.
   
  ஒரு தனி மனிதனின், ஒரு அமைப்பின் செயல்பாடுகளின் தன்மையை பகுப்பாய்வு செய்யும் போது ஆண் பெண் மற்றும் மூன்றாம்பால் என்ற இயற்கை தன்மைகளை வைத்து பகுப்பாய்வு செய்வதில் தவறில்லை. சிலர் விளையாட்டாக, மேலோட்டமாக இத்தகைய ஆய்வுகளை செய்துள்ளனர். ஆனால் அதனால் என்ன பயன்? இயற்கை தன்மைகளை மாற்றிட முடியுமா?.மாற்றுவதால் நன்மையா தீமையா?.
  இவ்வளவு நுட்பமாக ஆய்வு செய்த சமஸ் அடுத்த கட்டத்துக்கு சென்றிருக்க வேண்டும். சுரண்டலற்ற புராதன தாய் ஆதிக்க சமூகம் மறைந்ததேன்?. அதன் பின் ஆணாதிக்க சமூகம் கோலோச்சுவதேன்? ஆணாதிக்க சமூகத்திலும் பெரும்பான்மையான ஆண்கள் அடிமையானதேன்?
  இந்த ஆண்-மைய பெண்-மைய தன்மைகளின் ஆதிக்கத்தால் சமுகத்தில் பயன் பெறுவோர் யார் பாதிக்கப் படுவோர் யார்? பெண் மைய தலைமைகளினால், அமைப்புகளினால் சமூகத்தில் எல்லோரும் என்றாவது பயன் பெற்றிருக்கிறார்களா?

  புராதன தாயாதிக்க சமூகத்திற்கு பின் எல்லா சமுகங்களிலும் பெரும்பான்மை. மக்கள் அடிமையானதும் பாதிக்கப் பட்டதும் தானே உண்மை. உற்பத்தி சாதனங்களில் ஆதிக்கம் கொண்ட சிறு பிரிவினர்தானே அதிகாரமும் ஆனந்த வாழ்வும் பெற்றுள்ளனர். இதனை மறுக்க முடியுமா?. இது எதனைக் காட்டுகிறது?

  சமூகம் உற்பத்தியின், உழைப்பின் அதிகாரத்தின், அடிப்படையில் இரண்டு பிரிவுகளாக ஆண்டவர்களால், ஆள்வோரால், அதாவது சமஸ் குறிப்பிடும் ஆண்தன்மையும் பெண்தன்மையும் கொண்ட இரு பிரிவினராலும் காலம் காலமாக பிரிக்கப் பட்டுள்ளது என்பதைத்தானே தெளிவாக காட்டுகிறது. இந்தப் பிரிவினைக்கு பெயரென்ன?. இது
  ஆண் பெண் தன்மைகளைப் போல் ஆரம்பத்திலிருந்தே இயற்கையால் உருவாக்கப் பட்டதில்லையே. ஆள்வோரால் உருவாக்கப் பட்டதுதானே. இது சமசுகளுக்கு தெரியாதா?
  அமைப்புகளின் ஆண்தன்மைகளும் பெண்தன்மைகளும் இந்த அடிப்படை பிரிவுகளின் நலன்களை பாதுகாப்பவர்களின் வெளிப்படையான அடையாளங்களே.

  சமூகத்தில் நிலவும் அடிப்படை பிரிவுகளை ஆண்தன்மை பெண் தன்மைக்குள் அடக்கி விட முடியுமா?. அறிவியலையும் தத்துவத்தையும் இவ்வாறு பிரிக்க முடியுமா?.

  இயற்கையால் உருவான ஆண் பெண் அமைப்புகள் இரண்டுமே ஒன்றுடன் ஒன்று இணைந்து வாழ்ந்தாக வேண்டிய இயல்புகனைக் கொண்டவை. இரண்டின் நலனும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவல. நட்பு/உறவுத் தன்மை கொண்டவை. ஆதிக்கவாதிகளால் செயற்கையாக உருவாக்கப் பட்ட பிரிவினைகள் பகைத்தன்மை கொண்டவை. அதாவது ஆடு மான் மாடு் மற்றும் புலிக சிங்கங்களை போல பகை தன்மை கொண்டவை. புலிகளை சிங்கங்களை அழித்தாலே மற்றவற்றை காப்பாற்ற முடியும். இதைச் செய்வதுதான் எளிது. முற்போக்காளர்களின் கடமை. இந்த உண்மைகளைப் புரியா விட்டால் எந்தப் பிரச்சினை சம்பந்தமாகவும் சரியான புரிதலுக்கோ சிறந்த தீர்வுகளுக்கோ வர முடியாது.

  ஆக சமூகத்தில் நிலவும் வர்க்க வர்ண பிரிவுகளை மறைப்பதற்கு ஆதிக்க வாதிகள் புதுப்புது ஆய்வுகளையும் .விளக்கங்களையும் அளிப்பதைப் போல் சமஸ் செய்கிறாரா? அல்லது வர்க்கப் பிரிவினை பற்றிய சரியான புரிதல் இல்லாமல் இருக்கிறாரா? என்று தெரிய வில்லை.

  எல்லோருக்கும் சமமாக இருப்பது, எல்லோரையும் வாழ வைப்பது எப்படி சாத்தியம்? அதாவது புல் பூண்டுகளுக்கும், ஆடுகளுக்கும், புலிகளுக்கும் சமமாக இருப்பதும் அனைத்தையும், அனைவரையும் வாழ வைப்பதும் பொன்பீவிகளுக்கும் கடவுளருக்கும் முடியலாம். உண்மையான மனித நேயமும், அறிவும் தைரியமும் கொண்ட எந்த தலைவராலும் முடியாது. மாயாஜாலங்களிலும் கற்பனைக் கதைகளில் மட்டுமே முடியும். சமஸ் கட்டுரைகள் எழுதுவதை விட புலியையும் ஆட்டையும் புல்கட்டையும் காப்பாற்றுவது பற்றிய விடுகதைகளைப் போன்ற கதைகளையும் கற்பனைக் காவியங்களையும் எழுதினால் இலக்கியமாவது சிறக்கும். அல்லது எல்லோருக்கும் சமமாக இருந்து எல்லோரையும் வாழ வைக்க கண்ணை மூடிக்கொண்டு கடும் தவம் புரிந்தால், காவிகளிடமிருந்தும், கம்யூனிஸ்ட்களிடமிருந்தும் கடி படுவதையாவது தவிர்க்கலாம்

  பதிலளிநீக்கு