2019 தேர்தலின் பெரும் கேள்வி: பழனிசாமி முன்னெடுக்கும் அரசியல் என்னவாகும்?


தேர்தல் காய்ச்சலுக்குள்ளான தமிழ்நாட்டின் குறுக்கும் மறுக்குமாகக் கோடை வெக்கையில் சுற்றுவது வெயிலை உள்ளும்புறமுமாகக் குடிப்பதற்குச் சமானம். மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற பதைபதைப்பில் அரசியல்வாதிகள் சுற்றுகிறார்கள் என்றால், மக்களும் ஏராளமான கேள்விகளுடன்தான் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். ‘இந்தத் தேர்தலில் யார் வெல்வார்; எந்தக் கட்சிக்கு எவ்வளவு தொகுதிகள் கிடைக்கும்; டெல்லியில் ஆட்சி அமைக்கப்போவது யார்?’ என்கிற  வழமையான தேர்தல் கேள்விகளைத் தாண்டிய வேறொரு கேள்வியும் இம்முறை மக்களிடம் சேர்ந்துகொண்டிருக்கிறது: ‘எடப்பாடி கே.பழனிசாமி முன்னெடுக்கும் அரசியல் என்னவாகும்?’

இன்னும் கொஞ்சம் விஸ்தரித்து இந்தக் கேள்வியைக் கேட்கலாம் என்றால், ‘தமிழ்நாட்டின் ஏழு மண்டலங்களில் ஆறு மாவட்டங்கள், 38 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய ‘கொங்கு மண்டலம்’ என்றழைக்கப்படும் மேற்கு மண்டலம் இந்த மக்களவைத் தேர்தலில் என்ன முடிவெக்கும்?’


தமிழ்நாட்டில் எந்தப் பிராந்தியத்தில் தேர்தல் முடிவுகள் எப்படியிருந்தாலும், மேற்கு மண்டலத்தில் மட்டும் அத்தனை தொகுதிகளிலும் அதிமுக வெல்லும் என்று பழனிசாமி உறுதியாக நம்புவதும், பெரும்பான்மை ஊடகங்களும் அதையே கணிப்பதும் எதிர்க்கட்சிகள் அத்தனையும் இத்தொகுதிகளைக் கலக்கத்தோடு பார்ப்பதும் சேர்ந்து உருவாக்கியிருக்கும் கேள்வி இது என்றாலும், வெறும் சுவாரஸ்ய அரசியல் கணிப்புக் கேள்வி என்று கடந்திடக்கூடிய ஒன்றல்ல. முதல்வராக ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த இரண்டு ஆண்டுகளில் பழனிசாமி மிகத் தீவிரமாக தொடர்ந்து செயல்பட்டு ஒரு காரியத்தை முனைந்திருக்கிறார் என்றால், அது இதுதான் - நவீன தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வகையில் குறிப்பிட்ட சாதி, குறிப்பிட்ட பிராந்தியவுணர்வு சார்ந்த உள்ளூர் ஆதிக்க அரசியலை வளர்த்தெடுக்க முற்பட்டிருக்கிறார். அதன் வாயிலாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முற்படுகிறார்.

நவீன தமிழ்நாட்டின் வரலாற்றில் ஓமந்தூரார், ராஜாஜி, காமராஜர் தொடங்கி கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா வரை எந்த முதல்வரும் தன்னை ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்குமான, எல்லாச் சமூகங்களுக்குமான பிரதிநிதியாகவே கருதிச் செயல்பட்டுவந்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியும்; சொந்த சாதி, சொந்த பிராந்தியம்சார் நலன்களை மையத்துக்குக் கொண்டுவந்து செயல்பட்டவர்கள் என்று இவர்கள் எவரையும் கூறிட முடியாது. தற்காலிக முதல்வராக மும்முறை செயல்பட்ட ஓ.பன்னீர்செல்வமும்கூட பழனிசாமி முயன்றுவரும் உள்ளூர் ஆதிக்க மைய அரசியலை முயற்சித்தவர் கிடையாது.

எல்லோருக்குமான தலைவராக உருவெடுக்கும் வாய்ப்புகள் பழனிசாமிக்கு இயல்பாகக் கூடி வந்தன. ஒரு குறுகிய எல்லைக்குள் அடைபட்டது பழனிசாமி தானாக நேர்ந்துகொண்ட தேர்வுதான் என்று அதிமுகவைச் சேர்ந்தவர்களே சொல்கின்றனர். டெல்லி பாஜகவுடனான உறவுக்கான பாலமாக தன்னுடைய சமூகத்தைச் சாராத மைத்ரேயனையும், பாண்டியராஜனையும் பன்னீர்செல்வம் கொண்டிருந்ததையும், பழனிசாமி ஆட்சியில் மாநிலத்துக்குள்ளும் மாநிலத்துக்கு வெளியிலுமான எல்லா முடிவுகளையும் தீர்மானிப்பவர்களாக அவரது சொந்த பிராந்தியம், சாதியைச் சேர்ந்த வேலுமணியும், தங்கமணியும் உருவாக்கப்பட்டிருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

பழனிசாமி அரசியலின் மைய கவனம் எங்கே நிலைகொண்டிருக்கிறது என்பதற்கான துல்லிய உதாரணமாக, கஜா புயல் பாதிப்புகளை அவர் எதிர்கொண்ட நாட்களை நினைவுகூரலாம். காற்றின் கோரத் தாண்டவத்தில் காவிரிப் படுகை மாவட்டங்கள் பேரிழப்பைச் சந்தித்தபோது மக்கள் ஒரு ரொட்டித்துண்டுக்கும், தண்ணீருக்கும் அகதிகளைப் போல பரிதவித்து அலைந்துகொண்டிருந்த நாட்களில், முதல்வர் பழனிசாமியின் முன்னுரிமை அவருடைய சொந்தக்காரர்கள் வீட்டு விஷேங்களில் பங்கேற்பதிலும் சொந்தப் பிராந்தியத்தில் திட்டங்களைத் தொடக்கிவைக்கும் விழாக்களிலும் நிலைகொண்டிருந்தது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மிக நிதானமாகப் பார்வையிட ஹெலிகாப்டரில் சென்றவர் பருவநிலை சரியில்லை என்று சொல்லி அந்தப் பயணத்தையும் பாதியில் முடித்துக்கொண்டார். கவனத்துக்குரிய அம்சம் என்னவென்றால், மேற்கு மண்டலத்தைப் போலவே காவிரிப் படுகையான கிழக்கு மண்டலமும் அதிமுகவுக்கு நல்ல செல்வாக்குள்ள பகுதி.

பழனிசாமி ஆட்சிக்கு வந்த நாளில் தொடங்கி, கன்னியாகுமரிக்கும், கடலூருக்கும், நாகப்பட்டினத்துக்கும், திருச்சிக்கும் எத்தனை முறை பயணப்பட்டிருக்கிறார்; எத்தனை முறை மேற்கு மண்டலத்துக்குப் பயணப்பட்டிருக்கிறார் என்கிற ஒரு கேள்விக்கான பதில் பழனிசாமி அரசியலின் ஒட்டுமொத்த பரிணாமத்தையும் வெளிப்படுத்திவிடும். அடி தென் தமிழ்நாடு அல்லது மேல் வட தமிழ்நாடுபோல அல்லாமல் ஏற்கெனவே வளர்ச்சியில் முற்பட்ட நிலையிலுள்ள மேற்கு தமிழ்நாட்டுக்கு இரண்டாண்டுகளில் மட்டும் எவ்வளவு திட்டங்கள் கொண்டுசெல்லப்பட்டிருக்கின்றன என்கிற விவரம் இந்த விஷயத்தில் கூடுதல் தெளிவைத் தரும். தன் மனதுக்கு நெருக்கமான சேலம் நகரத்தை இன்று ‘பாலங்களின் நகரம்’ ஆக்கியிருக்கிறார் பழனிசாமி. நல்ல விஷயம். அதேசமயம், சாலைகளே சதிராடும் சிதம்பரத்துக்கும் தருமபுரிக்கும்கூட அவர்தானே முதல்வர் - எது முன்னுரிமைக்கு உரியது என்ற சாமானியனின் கேள்வியிலுள்ள நீதியுணர்வு எவராலும் புறக்கணிக்கக் கூடியதல்ல.

பழனிசாமி தன் அரசியலுக்காகக் கொடுக்கும் பலிகள் கட்சியிலிருந்தே தொடங்குகின்றன. “தேர்தலுக்கு முன்பே அதிமுகவைப் பலிகொடுத்துவிட்டார் பழனிசாமி” என்ற ஆதங்க மூச்சை இன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிமுகவினர் மத்தியில் கேட்க முடிகிறது. 2014 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும் அதிமுகவைத் தனித்து நிறுத்தி, 37 தொகுதிகளில் வென்று, மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சி என்ற உயரத்திலும் கட்சியை அமரவைத்துவிட்டு சென்றார் ஜெயலலிதா. இந்தத் தேர்தலிலோ 19 தொகுதிகளில் அதிமுக போட்டியிடவே இல்லை. அது போட்டியிடும் 20 தொகுதிகளிலும்கூட 11 இடங்களில் மட்டுமே திமுகவுடனான நேரடியான போட்டியை எதிர்கொள்கிறது.

இத்தேர்தலில் பழனிசாமி கையாண்டிருக்கும் பெரிய தந்திரமே, போட்டியைப் பல இடங்களில் தவிர்த்திருப்பதுதான்; தோல்விகளின் எண்ணிக்கை அதிகரித்தால், கட்சிக்குள் தன் பிடி நழுவிவிடும் என்பதற்காகவே கட்சியைப் பல இடங்களில் பலி கொடுத்துவிட்டார் என்ற பேச்சு அதிமுக உள்ளுக்குள் சுழன்றடிக்கிறது. மேற்கு மண்டலத்துக்கு இணையாக பலம் வாய்ந்த, தெற்கு மண்டலத்தின் பல தொகுதிகளைக் கட்சி கை கழுவ என்ன காரணம் என்று கேட்கிறார்கள். எம்ஜிஆரோ, ஜெயலலிதாவோ இதுவரை ஒருமுறைகூட கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிடாமல் நேரடிப் போட்டியில் வைத்திருந்த, எட்டு முறை வென்ற திண்டுக்கல் தொகுதியை இம்முறை அங்கு கொஞ்சமும் செல்வாக்கற்ற பாமகவுக்குப் பழனிசாமி ஒதுக்கியிருப்பதை வேறு எந்த வகையில் புரிந்துகொள்வது?

இந்தியாவில் பெயரளவில் அகில இந்தியக் கட்சியாகவும், கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டளவில் ஒரு மாநிலத்திலேயேகூட ஒட்டுமொத்த மக்களையும் சென்றடையும் திராணியற்ற கட்சிகள் ஏராளம் - நமக்கு மிக அருகிலுள்ள உதாரணம் மதச்சார்பற்ற ஜனதா தளம். கர்நாடகத்தில் மைசூர் பிராந்தியத்தைத் தாண்டி செல்வாக்கில்லாத, ஒக்கலிக சமூகத்தின் பிரதிநிதியாக மட்டுமே சுருங்கிவிட்டிருக்கும் கட்சி அது. அகில இந்திய அளவில் ஒப்பிட்டால், பாஜகவேகூட நெடுங்காலம் வடநாட்டுக் கட்சியாக அறியப்பட்டுவந்ததுதான்.

தமிழ்நாட்டின் திராவிடக் கட்சிகள் கட்டமைப்பு அளவில் மாநில எல்லைக்குள் செயல்பட்டாலும், சித்தாந்தத் தளத்திலும் தொலைநோக்கிலும் அகில இந்திய அரசியலில் தம்மை நிலைநிறுத்திக்கொண்டவை. இந்தியாவில் கூட்டணியரசுக்கான ஸ்தாபிதம் தமிழ்நாட்டிலிருந்தே நிலைபெறுகிறது. இந்திய தேசத்தை டெல்லியிலிருந்து அல்லாமல் மாநிலங்கள் வழி பார்க்கும் மாற்றுச் சிந்தனையைத் திராவிட இயக்கமே வழங்குகிறது. அதிலும் டெல்லி அரசியலிலிருந்து தொலைவில் இருந்தாலும், இந்தி பேசாத ஒரு மாநிலக் கட்சியைச் சேர்ந்தவரும் பிரதமர் கனவு காண முடியும் என்ற கற்பனையை இந்நாட்டுக்கு வழங்கியவர் ஜெயலலிதா. மோடி அலை சூறாவளியாகச் சுழன்றடித்த 2014 தேர்தலிலேயே அத்தகைய சாத்தியங்களைத் தீவிரமாக யோசித்தவர்.

பாஜக, காங்கிரஸ் இரண்டுக்குமே தனிப் பெரும்பான்மை கிடைக்காது; அடுத்த ஆட்சியைத் தீர்மானிப்பதில் மாநிலக் கட்சிகள் முக்கியப் பங்கு வகிக்கும் என்ற கணிப்புகள் மேலோங்கிவரும் இந்நாட்களில் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், அதிமுகவின் வியூகங்களும் பேரங்களும் என்னவாக இருந்திருக்கும் என்பதை யோசித்தால்தான் இன்றைக்கு பழனிசாமி நடத்திக்கொண்டிருப்பது எவ்வளவு தலைகீழ் அரசியல் என்பதும், பட்டத்து யானை தெருவில் இறங்கிய கதையும் புரியவரும். அகில இந்தியாவையும்கூட ஆளும் கனவு நமக்கும் இருக்கலாம் என்று செயல்பட்டுவந்த ஜெயலலிதாவின் அதிமுகவை ஒரு வட்டாரக் கட்சிபோல கொங்கு மைய அதிமுகவாகச் சுருக்கிவிட்டிருக்கிறார் பழனிசாமி.

அதிமுக எனும் கட்சியைத் தாண்டி யோசித்தால், தமிழ்நாட்டு அரசியலில் இது உருவாக்கவல்ல விளைவு அபாயகரமான உள்ளூர் சாதி பெரும்பான்மையியத்துக்கு இட்டுச் செல்லும் என்று தோன்றுகிறது. ஏற்கெனவே அந்தந்தப் பகுதிகளில் ஆங்காங்கே பெரும்பான்மையாக உள்ள சாதியைச் சேர்ந்தவர்களே வேட்பாளர்களாக நிற்க முடியும் என்ற நிலை உருவாகிவிட்டிருக்கும் சூழலில், அந்தந்தப் பிராந்தியத்தின் பெரும்பான்மைச் சாதியத்தை அரசியலில் மேலும் மையத்துக்குக் கொண்டுவருவதாக இது அமையும்.

அதிமுக அரசையும் தன்னையும் கடுமையாகச் சாடிவந்த பாமகவுடன், பழனிசாமி அமைத்திருக்கும் கூட்டணியானது ‘பொருந்தாக் கூட்டணி’ என்று எதிர் தரப்புகளால் சாடப்பட்டாலும், சிந்தனை அடிப்படையில் அது இயல்பான கூட்டணியாகவே தெரிகிறது. ஒரு குறிப்பிட்ட சமூகம், ஒரு குறிப்பிட்ட பிராந்தியம் ஆகியவற்றைக் கணக்காகக் கொண்டு இயங்கும் பாமக, தன் மனதில் ‘வடதமிழ்நாடு’ எனும் சாதி அடிப்படையிலான மாநிலத்தைக் கனவாகக் கொண்டிருப்பதுபோலவே ‘கொங்கு நாடு’ எனும் சாதி அடிப்படையிலான தனி மாநிலக் கனவும் மிதந்துகொண்டிருக்கும் அரசியலிலிருந்துதான் பழனிசாமி வெளிப்படுகிறார். மொழிவாரி மாநிலங்கள் என்ற சிந்தனைக்கு மாறாக மாநிலங்களை வெறும் நிர்வாக அலகுகளாகப் பார்க்க விரும்பும் பாஜகவின் சிந்தனையோடு மிக இயல்பாக ஆரத் தழுவி இணைந்து கரையவல்ல சிந்தனை இது.

கேள்வி என்னவென்றால், தமிழ்நாட்டின் வணிகச் சமூகங்களில் பிரதானமானதும், எல்லா பகுதி மக்களையும் தமக்குள் ஒருங்கிணைந்துக்கொள்வதை இயல்பாகக் கொண்டதும், தொழில் துறைக்கு இணையாக விவசாயத் துறைக்கும் முக்கியத்துவம் அளிக்கும் நீடித்த பொருளாதார வாழ்வியலில் நம்பிக்கை கொண்டதுமான மேற்கு மண்டலம் - குறிப்பாக கவுண்டர் சமூகத்தினர் - பழனிசாமியின் இந்த உள்ளூர் ஆதிக்க அரசியலுக்கு எப்படி எதிர்வினை ஆற்றப்போகிறார்கள் என்பதுதான்.

தமிழ்நாட்டில் நம் காலத்தின் முக்கியமான பொருளாதார அறிஞர்களில் ஒருவரும், கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவரும், ‘எம்ஐடிஎஸ்’ போன்ற ஒரு உயரிய ஆய்வு நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பிறகு, மேற்கு மண்டலத்திலுள்ள தன்னுடைய சொந்த கிராமத்துக்கே சென்றுவிட்டவருமான எஸ்.நீலகண்டனுடன் பேசிக்கொண்டிருந்த நாட்கள் நினைவுக்குவருகின்றன. “கொங்கு பிராந்தியத்தின் இன்றைய வளர்ச்சி, அது அடைந்திருக்கும் முன்னேற்றம் எல்லாமே அது கொண்டிருக்கும் பன்மைத்துவத்திலும் எல்லைக்கப்பாற்பட்டு சிந்திக்கும் அதன் பரந்துபட்ட இயல்பிலுமே இருக்கிறது. ஆப்பிரிக்கக் கண்டத்தில்கூட ஆழ்துளைக்கிணறுகளை அமைக்கும் பணியில் தமிழகத்து லாரிகள் இன்று நிற்கின்றன என்றால், அது இந்தப் பிராந்தியத்திலிருந்து சென்றவர்களின் எல்லை கடந்த சிந்தனையின் வெளிப்பாடு. கோவையை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று நாம் பெருமையாகச் சொல்கிறோம்; ஸ்டேன்ஸின் பங்களிப்பைப் பிரித்துவிட்டு அதைச் சொல்ல முடியுமா அல்லது இந்தப் பிராந்தியத்தின் உள்நாட்டு மோட்டார் தொழில் பெருமையைப் பேசும்போது ஜி.டி.நாயுடுவைப் புறந்தள்ளிவிட முடியுமா?” என்று கேட்டார் நீலகண்டன். அரசியலில்  மேற்கு மண்டலம் தன்னுடைய பன்மைத்தன்மையை இழந்துவிடுமா?

தமிழ்நாடு அரிசிப் பஞ்சத்தில் அடிபட்டுக்கொண்டிருந்த நாட்களில் மத்திய விவசாயத் துறை அமைச்சராக இருக்கிறார் சி.சுப்பிரமணியம். நாட்டின் பல்வேறு பகுதிகளுமே அன்று உணவுப் பற்றாக்குறையில் சிக்கிக்கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டுக்கு என்று நிர்ணயிக்கப்பட்ட அளவைத் தாண்டி தானிய ஒதுக்கீடு செய்ய ஏதேனும் உதவ முடியுமா என்று கேட்டபோது சுப்பிரமணியம் சொன்னாராம், “நான் இன்றைக்குத் தமிழ்நாட்டுக்கு மட்டும் அமைச்சர் இல்லையே, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் அல்லவா அமைச்சர்? எல்லோர் பசியும் நம் பசிதானே!”

தமிழுணர்வு குன்றியவர் அல்ல சுப்பிரமணியம். மொழிப் போராட்டக் காலகட்டத்தில் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடியவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை டெல்லி ஏவியபோது அதைக் கண்டிக்கும் விதமாக தார்மிக அடிப்படையில் தன்னுடைய பதவியிலிருந்து விலகியவர் - எதிர் வரிசையிலிருந்த அண்ணாவால் பெரிதும் மெச்சப்பட்டவர் - சுப்பிரமணியம். பழனிசாமி எங்கிருந்து வருகிறாரோ அங்கிருந்தே வந்தவர்தான் சுப்பிரமணியமும்; ஆனால், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற தமிழறத்தின் நிழலில் அன்று அவருடைய அரசியல் நின்றது. பழனிசாமியின் காலத்தில் அரசியலறம் வேறு ஒரு ரூபத்தின் நிழல் தேடுகிறது.

எதிர்கால அரசியலில் தன்னுடைய இடத்தை வெளிப்படுத்துவதாக இந்தத் தேர்தல் முடிவு அமையும் என்பதை இரு நாட்களுக்கு முன் சூசகமாகக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார் முதல்வர் பழனிசாமி. உண்மைதான். கூடவே தமிழ்நாட்டு அரசியலில் உள்ளூர் ஆதிக்க அரசியலின் இடம் என்ன என்பதைச் சொல்வதாகவும் அது இருக்கும்!

-ஏப்ரல், 2019, ‘இந்து தமிழ்’ 

9 கருத்துகள்:

  1. Such a detailed analysis.. have been following you for more than 4 years now, most of your political articles are look like written by a much matured person in age than yours. All the best.

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் சொல்லும் படியாக இவர் கொங்கு மண்டலத்தை ஆவது முழுவதுமாக பார்த்தாரா என்றால் அதுவும் மிகப் பெரிய கேள்விக்குறியாக அமைகின்றது. என்னைப் பொருத்தவரை இவர் தனக்கென்று ஒரு பகுதியை வைத்துக் கொண்டார் அந்தப் பகுதிக்கு அனைத்தையும் கொண்டு சேர்த்தார் என்பதே உண்மை. அதிலும் குறிப்பாக சேலம் முதல் கோவையில் பாதி வரை மட்டுமே இவருடைய பார்வை நீண்டு இருந்ததே தவிர. டன்கொங்கு மண்டலத்தை முழுமையாக கவனிக்கவில்லை என்பதை என்னால் கூற இயலும் அதை நீங்கள் அவருடைய பயணங்களில் இருந்து அறிந்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  3. நீங்கள் பத்திரிக்கையாளர் என்று நினைத்திருந்தேன் சமஸ். சில காலங்களாக பிரச்சாரகர் ஆகிவிட்டீர்கள் என்று உங்களால் பூர்ந்துகொள்ள முடிகிறதா. உங்களுக்கு இல்லை உங்கள் வாசகர்களுக்கு பேரிழப்பு சமஸ்.

    பதிலளிநீக்கு
  4. மோடி எதிர்ப்பு திமுக ஆதரவு என்பது அவரது இந்து பத்திரிக்கை நிர்வாகம் நிலைப்பாடு .அதனால் சமஸ் அப்படி
    தானே சொல்வார்

    பதிலளிநீக்கு
  5. மிக மிக அருமையான கட்டுரை. மத,சாதீய சாக்கடையில் இருந்து தமிழன் மீள்வான் என்று நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு