சீமான், கமல்ஹாசன் அரசியல் என்னவாகும்?
அ.முகமது ஷரீஃப், கீழக்கரை.
இருவருக்குமே இது முதல் மக்களவைத் தேர்தல். ‘நாம் தமிழர் கட்சி’, ‘மக்கள் நீதி மய்யம்’ இரு கட்சிகளுமே இத்தேர்தலில் அவர்களைப் புறக்கணிக்க முடியாத ஓட்டுகளை வாங்குவார்கள் என்று என் நண்பர்கள் சொல்கிறார்கள். குறிப்பாக, இளைய தலைமுறையினர் மத்தியில் சீமானுக்கும், நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் கமலுக்கும் ஒரு செல்வாக்கு இருப்பது எல்லோரும் கவனிக்கக் கூடியதாகத்தான் இருக்கிறது. ‘தொகுதி வெல்கிறார்களோ, இல்லையோ; ஓட்டுகளைப் பிரிப்பார்கள்’ என்ற பேச்சினூடாக இருவர் மீதும் நிறைய வசைபாடல்களையும் பார்க்க முடிந்தது. அது கட்சிக்கார மனோபாவம்; நாம் அதற்கு வெளியே நின்று பேசுவோம். தொகுதிக்கு இருவரும் குறைந்தது ஐம்பதாயிரம் ஓட்டுகளை வாங்குவதாக வைத்துக்கொண்டால்கூட அந்த ஐம்பதாயிரம் வாக்காளர்களின் அபிலாஷைகள் என்ன என்பதுதான் முக்கியமான கேள்வி. தமிழர்களின் உரிமைகள் புறக்கணிக்கப்படுவதை மையப்படுத்தியிருந்தது சீமானின் பிரச்சாரம். கமலின் பிரச்சாரம் ஊழலையும் குடும்ப அரசியலையும் மையப்படுத்தியிருந்தது. இருவரும் பிரதான கட்சிகளில் இன்று வாய்ப்பற்றவர்களாகிவிட்ட சாமானியர்கள் சிலரையேனும் வேட்பாளர்களாக நிறுத்தியிருந்தார்கள். இருவருமே தேசியக் கட்சிகளான பாஜக, காங்கிரஸ் மட்டும் அல்லாது மாநிலத்தின் இரு பெரும் கட்சிகளான திமுக, அதிமுகவையும் குறிவைத்தார்கள் என்பது வெளிப்படை. ஆனால், அதில் என்ன தவறு இருக்க முடியும்? தேர்தல்கள் வெறுமனே வெற்றி தோல்விக்கானவை மட்டும் அல்ல. ஓட்டுகளின் பின்னணியிலுள்ள மக்களின் அபிலாஷைகள் நிச்சயமாகப் பிரதானக் கட்சிகளால் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில், முதலிடத்தில் வரும் கட்சியின் குரல்கள் மட்டும் அல்ல; அடுத்தடுத்த இடங்களில் வரும் ஒவ்வொரு கட்சியின் குரல்களும் காலப்போக்கில் வலுப்பெறுகின்றன. ஒவ்வொரு ஜனநாயக சமூகத்திலுமே ‘அரசியலழுத்தக் குழு’க்களுக்கு ஓர் இடம் உண்டு. தேர்தல் அரசியலுக்கு உள்ளும் வெளியிலுமாக இவர்கள் வெவ்வேறு கொள்கைகளை வலியுறுத்திவருவார்கள். இந்தியாவில் தேர்தல் வெற்றி - தோல்விகளுக்கு அப்பாற்பட்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தனித்துவமும் முக்கியத்துவமும் மிளிரும் இடமும்கூட அதுதான். சீமானும் கமலும் அரசியலில் என்ன வேண்டுமானாலும் ஆகட்டும்; இந்தத் தேர்தலில் அவர்கள் கையில் எடுத்திருக்கிற விஷயங்கள் எதிர்வரும் காலத்தில் தமிழ்நாட்டில் எல்லா பிரதானக் கட்சிகளாலும் மொழிபெயர்க்கப்படும். அந்தத் தாக்கம் ஜனநாயகத்துக்கு நல்லது.
சீமான் கமல்ஹாசன் அரசியல் என்னவாகும்?
பதிலளிநீக்குஇரு வேறு அரசியல் செய்பவர்களை வைத்து ஒரு வாசகரினால் கேட்கபட்ட ஒரு கேள்வி.
கமல்ஹாசனின் அரசியல் பெரும்பாலும் மக்களின் அபிலாஷைகள் சார்ந்ததாகவே இருந்து வந்துள்ளது. அவரின் ஒருபக்க மதசார்பான அரவக்குறிச்சி பேச்சுகள் போன்றவற்றை தவிர்த்து.
சீமானோ இனவாதத்தை அடிப்படையாக வைத்து தனது அரசியலை செய்பவர்.ஸ்ரீலங்கா தீவிரவாதி எல்டிடிஈ தலைவரை தனது தலைவன் என்று கொண்டாடுபவர்.அந்த தாக்கம் இந்திய ஜனநாயகத்துக்கும் மக்கள் நலன்களுக்கும் தீமையானதே.
இன்று நான் பார்த்த செய்திகளின்படி மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் மகேந்திரன் தெரிவிக்கிறார், மக்கள் நீதி மய்யத்தைப் பொறுத்தவரையில் சாதியோ, மதமோ பூர்வீகமோ பிரச்சினையில்லை. தமிழ்நாட்டில் வாழும் அனைத்து மக்களும் சமம்.
நீக்குஅதற்கு எதிர்மாறாக தமிழ் இனவாதம் பேசியே ஸ்ரீலங்காவில் உள்ள ரத்தகறை படிந்த எல்டிடிஈயை தனது தலைமையாக அறிவித்து அரசியல் செய்யும் சீமான்.