நூறு வருடங்களை ஒரு கூட்டுவண்டியாக உருமாற்றி, அந்த வண்டியின் மாடுகளை ஒரு பானைக்குள்ளேயே சுற்றிச் சுற்றி ஓடவைக்க முடியுமா? இந்திய ஆட்சியாளர்களால் முடியும். இந்தியா முழுமைக்கும் இந்தியைப் பரப்புவதன் மூலம் இந்திய தேசியத்தைக் கட்டுறுதியானதாக்க முடியும் என்பது நூற்றாண்டு பழைய சிந்தனை. காங்கிரஸ் கைக்கு ஆட்சியதிகாரம் கொஞ்சம்போல வரத் தொடங்கிய 1938 முதலாக இந்த அபிலாஷையை டெல்லி முயன்றுகொண்டிருக்கிறது; தமிழ்நாடு எதிர்த்துக்கொண்டிருக்கிறது. இடையில் நாடு சுதந்திரம் அடைந்து, அதற்குப் பின் எழுபதாண்டுகளாக ஒரு கூட்டு வாழ்க்கையை நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்; உலக வரைபடம் எவ்வளவோ மாறிவிட்டிருக்கிறது. டெல்லியின் எண்ணங்கள் மாறவில்லை; கடந்துவந்திருக்கும் பாதையிலிருந்து எந்தப் பாடத்தையும் அவர்கள் படிக்கவும் இல்லை.
ஏன் தமிழ்நாடு உரிய கவனம் பெறவில்லை?
புதிய கல்விக் கொள்கையின் வரைவானது முன்மொழியும் மும்மொழிக் கொள்கை - தாய்மொழி, ஆங்கிலம், கூடவே இன்னொரு மொழி - தொடர்பான விவாதங்களை ஒரு வார காலமாகக் கவனித்துவருகிறேன். ‘இந்தி வேண்டும்’ என்று பேசும் அரசியல்வாதிகள் மட்டும் அல்ல; ‘இந்தி கூடாது’ என்று பேசும் கல்வியாளர்களும்கூட ஒரு விஷயத்தை எப்படி கவனிக்கத் தவறுகிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது. டெல்லிக்கு மாற்றான ஒரு மொழிக் கொள்கையைக் கடந்த அரை நூற்றாண்டாக தமிழ்நாடு கைக்கொண்டுவருகிறது. அது உண்டாக்கியிருக்கும் சமூக, பொருளாதார மாற்றங்கள், தாக்கங்களுக்கு ஏன் இந்த விவாத அரங்குகள் கவனம் அளிக்க மறுக்கின்றன?
தமிழ்நாட்டுப் பள்ளிக்கூடங்கள் தமிழ் - ஆங்கிலம் இரண்டையும் கற்பிக்கும்; தமிழுக்கு அடுத்து, உலக மொழியான ஆங்கிலத்துக்குத் தமிழ்நாட்டு அரசு முக்கியத்துவம் கொடுக்கும் என்பது திராவிடக் கட்சிகளின் முதல் முதல்வரும், திராவிட இயக்கத்தின் ராஜ்ஜியக் கனவுகளுக்கு உயிர் வடிவம் கொடுத்தவருமான அண்ணாவின் முடிவு. இந்த முடிவு எத்தகைய தொலைநோக்கிலானது என்பதை உலகின் முன்னணி நாடுகள் இன்று எத்தகைய மொழிக் கொள்கையைப் பின்பற்றுகின்றன என்கிற பார்வையினூடாகத்தான் உணர முடியும்.
உலகம் எந்த மொழியில் படிக்கிறது?
உலகின் பெரும்பாலான நாடுகள் தங்களுடைய குழந்தைகளுக்கு ஒரு மொழியை - பெரும்பாலும் தாய்மொழியை - கற்பிக்கும் ஒரு மொழிக் கொள்கையையே தொடக்கக் கல்வியில் பின்பற்றுகின்றன. குழந்தைகள் நடுநிலைக் கல்விக்கு மாறும்போது இரண்டாவதாக ஒரு மொழியைப் பயிலும் வாய்ப்பை வழங்குகின்றன; இந்த மொழியாகப் பெரும்பாலும் ஆங்கிலமே அமைகிறது.
பிரிட்டனும் அமெரிக்காவும் ஆங்கிலத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஜெர்மன், பிரான்ஸ், இஸ்ரேல் போன்ற நாடுகள் முறையே பிரெஞ்சு, ஜெர்மன், ஹீப்ரூ - அரபி மொழிகளுக்கு வழங்குகின்றன; சர்வதேச அளவில் எல்லாத் துறைகளிலும் ஆங்கிலத்துக்கு ஈடுகொடுக்கும் அளவுக்குத் தங்கள் மொழியை வளர்த்தெடுத்திருப்பதன் வாயிலாக இம்முடிவை அவை வெற்றிகரமானதாக்கி இருக்கின்றன. அதேசமயம், பள்ளிக்கூடம் வழியே திணிப்பு நடப்பதில்லை என்பதால், ஏனைய மொழிகளைக் கற்பது ஆர்வத்தின் அடிப்படையில் இங்கெல்லாம் நிறைய நடக்கிறது. இலக்கியமோ சமூகவியலோ படிப்பவர்கள், நாடு கடந்து வணிகத்தில் ஈடுபடுபவர்கள் சர்வ சாதாரணமாக ஐந்தாறு மொழிகள் வரை அறிந்திருக்கிறார்கள்.
புதிய நூற்றாண்டுக்குள் பெரும் சவால்களுக்கு இடையே தங்களை முன்னகர்த்திக்கொள்ள வேண்டியிருந்த நாடுகள் அனைத்துமே தாய்மொழிக்கு அடுத்து ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வழக்கத்தையே கொண்டிருக்கின்றன. சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்கு மொழிக் கொள்கையை ஒரு முக்கியமான கருவியாகக் கையாண்ட இரு வெற்றிகரமான ஆசிய முன்னுதாரணங்கள் என்று ஜப்பானையும் சிங்கப்பூரையும் சொல்லலாம். இதில் சிங்கப்பூரின் வெற்றி மிக வேகமானது; இந்தியாவோடு ஒப்பிட நெருக்கமானது. தாய்மொழியையும் ஆங்கிலத்தையும் சரிசமமாகப் பாவிப்பதன் வாயிலாக உலகச் சமூகங்களோடு இணைந்து பணியாற்றுவதோடு, பெரும் மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்பதில் நவீன சிங்கப்பூரைச் செதுக்கிய லீ குவான் யூவின் பார்வையை அண்ணாவின் பார்வையோடு பல விதங்களில் ஒப்பிட முடியும்.
சிங்கப்பூர் முன்னுதாரணம்
இன்று உலக அளவில் விமரிசையாகப் பேசப்படும் சிங்கப்பூரின் வளர்ச்சிக்கான முக்கியக் கருவியாக அதன் இருமொழிக் கொள்கையையே குறிப்பிட்டார் லீ. தமிழ்நாட்டின் முதல்வராக அண்ணா பொறுப்பேற்றதற்கு இரு ஆண்டுகளுக்கு முன் - 1965-ல் சிங்கப்பூர் முழுச் சுதந்திரம் அடைந்தது. பிறப்பால் ஒரு சீனர் என்றாலும், மேட்டுக்குடியான லீயின் வீட்டில் பேசப்படும் மொழியாக ஆங்கிலமே இருந்தது. ஆங்கிலப் பள்ளிக்கூடங்கள் வழி வளர்ந்தவர் என்பதோடு, பிற்பாடு பிரிட்டனில் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்றவர் என்பதால், சர்வதேசத்துடனான போட்டியில் ஈடுபட அன்றைக்கு மிகவும் பின்தங்கிய சமூகமாக இருந்த சிங்கப்பூரர்களுக்கு ஆங்கிலம் எவ்வளவு முக்கியம் என்பதை லீ உணர்ந்திருந்தார்.
முக்கியமாக, பல கலாச்சாரச் சமூகமான சிங்கப்பூரின் எழுச்சிக்கு, அங்குள்ள ஒவ்வொரு சமூகக் குழுவும் தன்னை அந்நாட்டின் இணையான சமூகமாகக் கருதும் நிலையை உருவாக்க வேண்டியது அவசியம் என்பதை லீ புரிந்துகொண்டிருந்தார். நாட்டின் ஆட்சிமொழியைத் தேர்ந்தெடுக்கும்போது, அந்த மொழி எல்லா சமூகங்களுக்கும் இணையான தொலைவில் இருப்பதன் வாயிலாகவே இணையான போட்டியையும் வாய்ப்புகளையும் உண்டாக்க முடியும் என்று அவர் கருதினார். இந்தப் பின்னணியில்தான் சிங்கப்பூரின் ஆட்சிமொழிகளாக மாண்டரீன், மலாய், தமிழ், ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளும், நாட்டின் பொது தேசிய அடையாள மொழியாக ஆங்கிலமும் அறிவிக்கப்பட்டன.
இந்தியாவின் ஆட்சிமொழிகளாக அதன் தேசிய மொழிகள் அத்தனையையும் அறிவிக்க வேண்டும்; உலகோடு உறவாடும் மொழியாக ஆங்கிலத்தை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அண்ணா, தன்னுடைய வாதத்தில் சுட்டிக்காட்டிய மிக முக்கியமான அம்சமாக, “இந்தியாவின் ஆட்சிமொழி எல்லா சமூகங்களுக்கும் சம தொலைவு உடையதாக இருக்க வேண்டும்” என்பதையே குறிப்பிட்டார் என்பது இங்கே நினைவுகூரப்பட வேண்டியதாகும். நாம் ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுக்கையில், ஆங்கிலத்தில் ஒரு தேர்வை நடத்துகையில், ஒரு இந்தி மாணவருக்கும் தமிழ் மாணவருக்கும் சம தொலைவில் உள்ள மொழியாக அது இருக்கும்; ஆனால், இந்தியை ஆட்சிமொழியாக்கி அதில் ஒரு தேர்வை நடத்துகையில், இந்தி மாணவருக்கு அது நெருக்கமானதாகவும் தமிழ் மாணவருக்கு அது அந்நியமானதாகவும் மாறிவிடும்; விளைவாக, சமூகங்கள் இடையே பாரபட்சம் நிலவும். இது அநியாயம் என்று கருதினார் அண்ணா.
இதைத்தான் 1963 நாடாளுமன்ற விவாதத்தில், “இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி பேசும் மக்களுக்கு அதுவே தாய்மொழி, அதுவே அரசுமொழி, அதுவே பயிற்றுமொழி; கூடவே, அதுவே மத்திய அரசின் மொழி. இந்தி பேசும் மக்களுக்குத்தான் எத்தனை சலுகைகள், வாய்ப்புகள், உரிமைகள்? இந்தி பேசாத மக்களுக்கு மறுபுறம் இவை எவ்வளவு பாதிப்புகளை உண்டாக்கும்?” என்று அவர் கேட்டார்.
ஆட்சிமொழி விவாதத்தின்போது அண்ணா சுட்டிக்காட்டிய அமெரிக்க உதாரணத்தை இங்கே நினைவுகூரலாம். “ஆங்கிலம் என்ற சாளரத்தின் வழி ஒட்டுமொத்த உலகத்தையும் நாம் காண முடியும்” என்று குறிப்பிட்ட அண்ணா சொன்னார், “அமெரிக்கா என்ற நாடு உருவானபோது அங்கே குடியேறியவர்களில் 20% பேர் மட்டுமே பிரிட்டிஷ் தீவுகளிலிருந்து சென்றவர்கள். 80% பேர் ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி என்று ஐரோப்பிய நாடுகளிலிருந்து சென்றவர்கள். இருந்தும் ஆங்கிலத்தையே ஆட்சிமொழியாகத் தேர்ந்தெடுத்தது அமெரிக்கா என்பதை நினைவில் கொள்ளுங்கள்!” அண்ணா தன்னுடைய திராவிட நாட்டுக்கான மொழிக் கொள்கையாக எதை முன்னிறுத்தினாரோ அதையே சிங்கப்பூரில் லீ செய்துகாட்டினார்.
இந்தியை மட்டும் இந்தியா ஆட்சிமொழியாக வரித்துக்கொள்வதற்கான நியாயத்தைக் காட்டிலும் பல மடங்கு நியாயம் மாண்டரீனை மட்டும் சிங்கப்பூர் ஆட்சிமொழியாக வரித்துக்கொள்வதற்கு அதற்கு இருந்தது. இந்தியாவில் இன்றைக்கும் இந்தி பேசுவோர் எண்ணிக்கை 50%-ஐத் தாண்டவில்லை. சிங்கப்பூர் மக்கள்தொகையில் மாண்டரீனைத் தாய்மொழியாகக் கொண்ட சீனர்கள் 76.8%, மலாய்கள் 13.9%, இந்தியர்கள் 7.9%, மற்றவர்கள் 1.4%. லீ நினைத்திருந்தால், மாண்டரீனை மட்டும் ஆட்சிமொழியாக அறிவித்து, பெரும்பான்மையினரான சீனர்களைத் திருப்திப்படுத்தி, அரசியல்ரீதியாகக் காலத்துக்கும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அதையே ஒரு தேசியவாதக் கருவியாக மாற்றிக்கொண்டிருக்கவும் முடியும். லீ அப்படி நடந்துகொள்ளவில்லை.
ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுத்ததுடன் மட்டும் அல்லாமல், ஒவ்வொரு சமூகத்தின் தாய்மொழியையும் லீ அங்கீகரித்தார். ஒவ்வொரு சிங்கப்பூரரும் ஆங்கிலத்துடன் அவரவர் தாய்மொழியைக் கட்டாயம் படிக்க வேண்டும்; தாய்மொழியில் ஒருவர் கொண்டிருக்கும் வேர்களே பிற்பாடு அவருடைய எதிர்கால ஆளுமையைத் தீர்மானிப்பதாக அமையும் என்றார். “தாய்மொழியை மட்டுமே கற்றுத் தேர்ந்தால் நாம் வெறும் ‘ஒருமொழிப் பிள்ளை’களாக இருப்போம்; உலகோடு போட்டியிட்டு வாழ்க்கையை உயர்த்திக்கொள்ள முடியாது. அதேசமயம், ஆங்கிலத்தை மட்டுமே அறிந்திருந்தாலும் பின்னடைவுதான்; ஏனென்றால், தாய்மொழியில் ஆழமற்ற நாம் நம்முடைய கலாச்சார அடையாளத்தை இழந்திருப்போம், உலகில் நமக்குரிய இடம் எது, நாம் யார் என்ற தன்னம்பிக்கையையும் இழந்திருப்போம்” என்று குறிப்பிட்டார் லீ.
சிங்கப்பூரைத் தமிழ்நாட்டுடன் ஒப்பிடலாமா?
ஒரு மூன்றாம் உலக நாட்டின் சாத்தியங்களின் எல்லைகளையும் சவால்களையும் புரிந்துகொண்டு லீ எடுத்த முடிவு உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. சர்வதேச வர்த்தகத்தில் சிங்கப்பூரின் முக்கியமான உடைமையாக சிங்கப்பூரர்களின் மொழித்திறனே திகழ்கிறது. உலகமயமாதலுக்கு சிங்கப்பூரர்களை முன்கூட்டித் தயார்படுத்தியவர் என்று லீயின் இருமொழிக் கொள்கையைப் புகழ்கிறார்கள்.
குஜராத், மகாராஷ்டிரம் போன்ற பெரிய மூலதன செல்வம், வணிகக் கலாச்சாரம் அற்ற, கேரளம் - பஞ்சாப் போன்ற நீர் நில வளமும் கொண்டிராத, உத்தர பிரதேசம் போல ஜனநாயகத்தில் பெரிய பேரம் பேசத்தக்க மக்கள்தொகை பலமும் இல்லாத தமிழ்நாடு இந்தியாவின் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாக இன்று நிற்பதன் பின்னணியில், உலகமயமாக்கல் சூழலுக்கு முகங்கொடுத்ததில் அது முதல் வரிசையில் நின்றதன் பின்னணியில் அண்ணா உருவாக்கிய இருமொழிக் கொள்கையின் பங்களிப்பை என்றேனும் இங்குள்ள நிபுணர்கள் பேசியது உண்டா? சுதந்திரத்துக்கு எழுபதாண்டுகளுக்குப் பின்னரும் சமூகங்களுக்கு இடையே ஒரு சமநிலை இன்னும் இந்நாட்டில் உருவாக்கப்படாததன் பின்னணியில், இந்திய அரசின் மொழிக் கொள்கையின் தோல்விகளை என்றைக்கு இந்நாட்டின் நிபுணர்கள் விவாதிக்கப்போகிறார்கள்?
அனுபவங்கள் வாயிலான படிப்பினை
தொலைநோக்கில் சிங்கப்பூருடன் ஒப்பிடத்தக்கது என்றாலும் - இந்திய அளவில் முன்வரிசையில் நின்றாலும் - விளைவுகளில் தமிழ்நாட்டின் கல்வியை சிங்கப்பூருடன் ஒப்பிடத்தக்க சூழல் இன்று இல்லை. முக்கியமாக மொழி சார்ந்து - தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் - மோசமான சிக்கலை எதிர்கொள்கிறார்கள் நம்முடைய மாணவர்கள். ஆங்கிலத்தில் மட்டுமின்றி தமிழிலும் பலருக்கு ஆளுமை இல்லை. ஆனால், இது இருமொழிக் கொள்கையின் தோல்வி அல்ல; அமலாக்கத்தின் தோல்வி. இந்தியக் கல்விச் சூழலின் கூட்டு விளைவு என்றும் சொல்லலாம்.
கிட்டத்தட்ட ஐம்பதாண்டுகள் நாட்டின் சர்வ அதிகாரங்களையும் தன் கையில் வைத்திருந்த லீக்கு அவருடைய கனவுக்கேற்பப் பள்ளிக்கூடங்களை உருமாற்றுவதற்கான எல்லா வாய்ப்புகளையும் சிங்கப்பூர் அவருக்கு வழங்கியது. லீயின் கனவை சிங்கப்பூர் சமூகம் தனதாக்கிக்கொண்டு கூடவே உழைத்தது. தமிழ்நாட்டிலோ ஆட்சிக்கு வந்த ஓராண்டில் அகால மரணத்தால் விடைபெற்றுக்கொண்டார் அண்ணா. கல்வியில் முடிவெடுக்கும் அதிகாரத்தை மாநிலங்களிடமிருந்து படிப்படியாகத் தன் வசம் நோக்கி இழுத்துக்கொண்டது டெல்லி. போதாக்குறைக்கு கல்வியை வணிகமாக்கித் தங்கள் அரசியலுக்கான எரிசக்தியாக்கும் கலாச்சாரத்தை அரசியல்வாதிகள் இங்கே உருவாக்கினர்; தமிழை அடுத்தடுத்த தளங்களுக்கு வளர்த்தெடுக்கும் பணியிலும் வீழ்ச்சி ஏற்படவும் அவர்களே காரணமாயினர். மேலும், உலகெங்கும் இருமொழிக் கொள்கையை வரித்துக்கொண்ட நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் தமிழ்நாட்டை அழுத்துகின்றன.
பிரிட்டனுக்குச் சென்றிருந்தபோது “பிரிட்டிஷ் குழந்தைகள் இன்று எதிர்கொள்ளும் பெரிய சவால் ஆங்கிலம். தாய்மொழியில் மோசமாகச் சறுக்குகிறார்கள்” என்று அங்குள்ள கல்வியாளர்கள் சொல்லக் கேட்டு அதிர்ந்தேன். அமெரிக்காவில் பள்ளிக்கல்வியைப் பாதியில் நிறுத்தும் ஆப்பிரிக்க, ஐரோப்பிய இன மாணவர்களில் பெரும்பாலானோர் ஆங்கிலத்தையே காரணமாகச் சொல்கிறார்கள். இருமொழிக் கொள்கையை வரித்துக்கொண்டிருக்கும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் இன்று எதிர்கொள்ளும் பெரிய கல்விச் சிக்கலும் ஆங்கிலம்தான்; தரமான ஆங்கில ஆசிரியர்கள் போதிய அளவில் இல்லாதது அங்கே தேசியப் பிரச்சினையாகவே உருவெடுத்திருக்கிறது என்கிறார்கள். அரேபிய நாடுகளும் சீனாவும்கூட இதே சிக்கலை எதிர்கொள்கின்றன. உலகளாவிய மொழியான ஆங்கிலத்தின் தேவை உலகெங்கும் நாளுக்கு நாள் அதிகம் உணரப்படுகிறது; அதேசமயம், தாய்மொழி - ஆங்கிலம் இரண்டையும் வெற்றிகரமாகக் கற்பிப்பது ஒரு சவாலாக இருக்கிறது. எங்கெல்லாம் கல்வியை அர்ப்பணிப்புமிக்க கவனத்தோடு அரசுகள் அணுகுகின்றனவோ அங்கெல்லாம் இந்தச் சவால் வெற்றிகரமாக எதிர்கொள்ளவும்படுகிறது.
புதிய தலைமுறைகளை உருவாக்க உண்மையாகவே ஒரு புதிய கல்விக் கொள்கையை இந்தியா விரும்புகிறது என்றால், உலகெங்கும் உள்ள கல்விச் சூழலோடு தமிழ்நாட்டின் கடந்த கால பலங்கள் - பலவீனங்களை ஒப்பிட்டு தீவிரமாகப் பரிசீலிப்பதன் வாயிலாகவே டெல்லி அந்தப் பார்வையைப் பெற முடியும். ஒட்டுமொத்த இந்தியாவிலும் இருமொழிக் கொள்கையை வெற்றிகரமாக அமலாக்க முற்படுவதற்கான சாத்தியங்களை யோசிப்பதன் வாயிலாக இந்தியாவின் கல்விக் கொள்கை மட்டும் அல்ல; இந்தியாவின் ஆட்சிமொழிக் கொள்கையும் புதிய வெளிச்சத்தைப் பெறும்.
- ஜூன், 2019, ‘இந்து தமிழ்’
திரு. சமஸ், கருத்தாழமிக்க கட்டுரை. நன்றிகள்
பதிலளிநீக்குஅற்புதமான கட்டுரை. இதை ஆங்கிலம் இந்தி இரண்டிலும் மொழி பெயர்த்து டெல்லியில் உட்கார்ந்திருக்க்கும் ஆட்சியாளர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லுங்கள்.அப்புறமாவது சொரணை வந்து தங்களின் பிடிவாதத்தைத் தளர்த்திக் கொள்கிறார்களா என்று பார்க்கலாம்.
பதிலளிநீக்குஇந்நேரத்திற்கு தேவையான கட்டுரை நன்றி சமஸ் அண்ணே
பதிலளிநீக்குமுக்கியமான தரப்பு . முன்றாம் மொழியை பாடத்திட்டத்திற்குள் கொண்டு வராமல் சிறப்பினமாக extra curricular activity ஆக கொண்டு வந்தால் அனைத்து தரப்பையும் திருப்திபடுத்துமா?.உங்கள் கருத்து
பதிலளிநீக்குOne of the excellent article i've read in the recent times. This is to be considered by the rulers and citizens of India, so essentially.
பதிலளிநீக்குIs there an english version of this article...
தொலைநோக்குடன் அணுகியதன் விளைவாதவே நாட்டின் முன்னோடியாக தமிழ்நாடு தற்போது விளங்குகிறது❤️
பதிலளிநீக்கு