‘‘ஒரே தீர்வு: புரட்சி!’’

அமெரிக்கா நீண்ட காலமாக தன் நாட்டில் உள்ள இன்னொரு அமெரிக்காவை மறைத்துவைத்து இருந்தது. அந்த இன்னொரு அமெரிக்கா நமக்கு அறிமுகம் இல்லாதது. வேலையற்றவர்களும் ஏழைகளும் சூழ்ந்தது. வாஷிங்டனிலும் சியாட்டிலிலும் சாக்ரோமண்டோவிலும் ஒதுக்குப்புறங்களில், தேவாலயங்களின் பின்பகுதியில் கூடாரங்கள் அமைத்து வாழும் அமெரிக்கர்கள் நிறைந்த அமெரிக்கா அது!
வல்லரசான அமெரிக்காவின் குடிமக்களில் கிட்டத்தட்ட 28 சதம் பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ்தான் வாழ்கிறார்கள். வேலையில்லாத் துயரம் அங்கு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் வேலையற்ற அமெரிக்கர்களின் சதவிகிதம் 5 சதவிகிதத்தில் இருந்து 8 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறது. வேலையின்மையால் வீட்டை இழந்து காரையே வீடாக மாற்றிக்கொள்ளும் வழக்கம் ஒரு கலாசாரமாகவே அங்கு உருவெடுத்து இருக்கிறது.
கடந்த 2007 - 08 பொருளாதார மந்தநிலையின்போதே அமெரிக்கா புரட்சியைச் சந்தித்து இருக்க வேண்டும். 2008-ல் மட்டும் 1.5 லட்சம் அமெரிக்கர்களுக்கு வேலை போனது. பண நெருக்கடியில் சிக்கிய 50 லட்சம் அமெரிக்கர்களின் வீடுகள் ஜப்தி செய்யப்பட்டன. அமெரிக்க அரசு மிகப் பெரிய பொருளாதார மீட்சி நடவடிக்கையை எடுக்கப்போகிறது என்று அன்றைய புஷ் நிர்வாகம் அறிவித்தபோது அமெரிக்கர்கள் தங்கள் பொருளாதாரத்தை மீட்க அந்த நடவடிக்கை உதவும் என்று நம்பினார்கள். ஆனால், தவறிழைத்த நிதி நிறுவனங்களுக்கு ரூ. 35 லட்சம் கோடி அரசுப் பணத்தை வாரி இறைப்பதே அந்தப் பொருளாதார மீட்சி நடவடிக்கையாக அமைந்தது. அடுத்து, ‘‘நம்மால் முடியும், மாற்றம் நிச்சயம்’’ என்று அறைகூவல் விடுத்த ஒபாமாவை நம்பினார்கள். அதுவும் ஏமாற்றத்தில் முடிந்தது. அமெரிக்க பாணியை அப்படியே பின்பற்றும் ஏனைய நாடுகளிலும் இப்படிதான் நிலை. மக்களின் வேலைக்கு வாய்ப்புகளை உருவாக்காத அரசாங்கங்கள் ஏற்கெனவே அவர்களுக்கு அளித்துவந்த கல்வி, சுகாதார மானியங்களையும் நிறுத்தத் தொடங்கின.
இது எப்படி நியாயம் ஆகும்? இதுதான் முதலாளித்துவ நீதி; இதுதான் கார்பரேட் உலக தர்மம்!
பொறுத்து பொறுத்து ஏமாந்த மக்கள் கொந்தளித்து எழுந்தால் என்னவாகும்? அக். 15-ம் தேதி சரியான பதிலைச் சொன்னது. உலகப் பங்குவர்த்தகத்தின் கோயிலாக முதலாளிகளால் கொண்டாடப்படும் ‘வால்ஸ்ட்ரீட்’டை முன்வைத்து, அமெரிக்காவில் ‘வால்ஸ்ட்ரீட்டை முடக்குவோம்’ என்ற இயக்கம் கடந்த சில வாரங்களாக சின்ன அளவில் நடந்துவந்தது. இந்தப் போராட்டம் கடந்த சனிக்கிழமை உலகம் தழுவியயதாக மாறியது. அமெரிக்காவில் தொடங்கி ஆப்பிரிக்கா வரை உலகின் அத்தனை கண்டங்களிலும், 82 நாடுகளில், 951 நகரங்களில் நடந்தது போராட்டம். நியூயார்க்கின் டைம் சதுக்கம், லண்டனின் மன்ஹாட்டன் வீதி, இத்தாலியின் ரோம் சதுக்கம், ஸ்பெயினி மாட்ரீட் வீதிகள், தென் ஆப்பிரிக்காவின் ஜோகஸ்பர்க் பங்குச்சந்தை வீதி என்று எங்கும் எங்கும் போராட்டங்கள்... ஒரே இலக்கு... முதலாளித்துவத்துக்கு முடிவு. கார்பரேட் உலகின் பேராசைக்கு முடிவு!
‘‘முதலாளித்துவத்தின் சாவே, மக்களின் விடுதலை!’’, ‘‘பங்குச்சந்தைகளை முடமாக்குவோம்’’, ‘‘சர்வதேச செலவாணி நிதியத்தை இழுத்து மூடுவோம்’’, ‘‘கார்பரேட் உலகுக்கு சங்கு ஊதுவோம்’’, ‘‘’ஏழை - பணக்காரர் பிரிவினைக்கு முடிவுகட்டுவோம்’’...  கோஷங்கள் விண்ணைப் பிளக்கின்றன. தன்னெழுச்சியுடன் சமூக வலைத்தளங்கள் உதவியுடன் ஒன்றுகூடும் மக்களை எந்த நாட்டு அரசாங்கத்தாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. முதலாளித்துவம் எங்கு செழித்து உலகம் முழுமைக்கும் பரவியதோ அங்கிருந்தே அதன் அழிவும் தொடங்குகிறது. மார்க்ஸ் சொன்னதுபோல, முதலாளித்துவம் தன சவப்பெட்டிக்கான ஆணிகளைத் தானே தேர்ந்தெடுத்துக்கொண்டதாகத் தோன்றுகிறது.
உலகம் முழுவதும் பரவும் இந்தப் போராட்டங்களுக்கான காரணங்கள் அந்தந்த நாட்டுக்கு ஏற்ப மாறுபடுகிறன. போராட்டக்காரர்கள் ஒரே இயக்கத்தின் கீழும்கூட திரளவில்லை. ஆனால், இன்றைய முதலாளித்துவ உலகை மாற்ற என்ன தீர்வு என்பதில் மட்டும் அத்தனை பேரும் தெளிவாக இருக்கிறார்கள். விண் அதிர முழங்குகிறார்கள். ‘‘ஒரே தீர்வு: புரட்சி!’’
ஆனந்த விகடன் 2011

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக