மாஸ்கோவின் மல்லிகை?


மாஸ்கோவில் பிரதமர் விளாடிமிர் புதினை எதிர்த்துப் பொதுமக்கள் நடத்திய பேரணியின் தொடர்ச்சியாக, உலகின் கவனத்தைத் திசைதிருப்பி இருக்கிறார்கள் ரஷ்யர்கள்.

                     டிச. 4-ம் தேதி அங்கு நடந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் புதினின் ஐக்கிய ரஷ்ய கட்சிக்குப் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. தேர்தலில் தனிப் பெரும்பான்மையைப் பெற்று இருந்தாலும், 50 சதவிகிதத்துக்கும் குறைவாக ஐக்கிய ரஷ்யக் கட்சி வாக்குகள் பெற்றிருப்பது கடந்த 12 ஆண்டுகளில் இதுவே முதல் முறை. ரஷ்யாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக புதினின் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. தேசிய வெறி, அடக்குமுறை, தேர்தல் முறைகேடுகளை ஆயுதமாக்கி, தன்னுடைய கையாள் மெத்வதேவ் உதவியுடன் மாறி மாறி அதிபர், பிரதமர் நாற்காலிகளில் அமர்ந்து ஆட்சி நடத்திவருகிறார் புதின். நாடாளுமன்றத் தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன்புதான் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக அறிவித்தார் புதின். இதனால், ஐக்கிய ரஷ்யக் கட்சிக்கு ஏற்பட்டு இருக்கும் பின்னடைவு புதினின் பின்னடைவாக மாறி இருக்கிறது. ‘புதினே வெளியேறு’ முழக்கங்களுடன் ஆயிரக்கணக்கான ரஷ்யர்கள் வீதிகளில் இறங்கியிருக்கின்றனர்.

                     ரஷ்யர்களின் இந்த எழுச்சியை அரபு உலக எழுச்சியின் - மல்லிகைப் புரட்சியின் - தொடர்ச்சியாக எல்லோரும் பார்க்கிறார்கள். நாம் சற்றுப் பின்னோக்கிப் பார்க்கலாம்.

                      சோவியத் சமூகவுடைமைக் குடியரசுகளின் ஒன்றியம் (யு.எஸ்.எஸ்.ஆர்.) உடைந்து 20-வது ஆண்டு இது. சோவியத் சமூகவுடைமைக் குடியரசுகளின் ஒன்றியம்? இந்தத் தலைமுறைக்கு அறிமுகம் இல்லாத இந்தப் பெயர்தான் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகின் நிலப்பரப்பில் பாதியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இரு உலகப் போர்களின் முடிவுகள் மோசமானவர்களின் கைகளில் சிக்கிக்கொள்ளாமல் பார்த்துக்கொண்டது. முக்கியமாக, அமெரிக்காவின் இன்றைய ஏகாதிபத்திய அரசியலுக்குப் பெரும் தடையாக இருந்தது!

                      இப்போதும் நினைவிருக்கிறது... இந்தியாவைத் தாண்டி இந்தியர்களால் அதிகம் நேசிக்கப்பட்ட தேசம் சோவியத் ஒன்றியமாகவே இருக்கும். நம்மை எந்த ஓர் ஆபத்தில் இருந்தும் அவர்களால் விடுவிக்க முடியும் என்று நாம் நம்பினோம். தங்களை நம்பியவர்களிடம் அவர்களும் அப்படித்தான் நடந்துகொண்டார்கள். சோவியத் ஒன்றியத்தின் நண்பர்களாக இருந்த ஒவ்வொரு நாட்டிலும் டால்ஸ்டாய்கள், லெனின்கள், ஸ்டாலின்கள் முளைத்தார்கள். அந்த நாட்களில் தமிழகத்தில் 'மோகமுள்'ளும் 'பொன்னியின் செல்வ'னும் இல்லாத வீடுகளில்கூட மக்ஸிம் கார்க்கியின் ‘தாய்’ இருக்கும்.

                     ஒருநாள் எல்லாம் சிதைந்தது. சோவியத் ஒன்றியத்தில் இருந்த குடியரசுகள் தனி நாடாகப் பிரிந்து செல்ல விரும்பின. ரஷ்யர்களே தங்களுடைய வளங்கள் ஏன் மற்றவர்களுக்குப் பங்கிடப்பட வேண்டும் என்று நினைத்தார்கள். முதலாளிகளாகத் துடித்தார்கள். தேசிய இனப் போராட்டங்கள் ஜனநாயக வேட்கையுடன் கைகோத்தன. சோவியத் ஒன்றியத்தின் கடைசி அதிபராக இருந்த கோர்பசேவ் முன்னெடுத்த ‘பிரெஸ்டோரிகா - கிளாஸ்நோஸ்ட்’ (மறுசீரமைப்பு - வெளிப்படைத்தன்மை) சீர்திருத்த நடவடிக்கைகள் அவரையே வரலாற்றின் புதைகுழிக்குள் தள்ளின. 1991 ஆகஸ்ட் 19-ம் தேதி அதிபரும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலருமாகிய கோர்பசேவ் கடமைகளை நிறைவேற்ற முடியாத நிலையில் இருப்பதாகக் கூறி, ஆட்சிக் கவிழ்ப்பு நாடகம் அரங்கேறியது. கோர்பசேவ் இடத்தில் கட்சியின் துணைப் பொதுச் செயலர் கென்னடி யானேவ் அமர்ந்தால், மக்கள் போராட்டங்களை அவரால் அடக்கிவிட முடியும் என்று நம்பினார்கள். நடந்ததோ வேறு. ரஷ்யா தனி நாடாக வேண்டும் என்று முழங்கிய போரிஸ் எல்ட்சின், ஒரே நாளில் பெரும் சக்தியாக உருவெடுத்தார். வீதிகளில் கூடிய பல்லாயிரக்கணக்கான ரஷ்யர்கள் தங்கள் மீது தாக்குதல் தொடுக்கக் காத்திருந்த பீரங்கிகளில் பூங்கொத்துக்களைச் செருகிச் சென்றபோது, ராணுவம் சோவியத் ஒன்றியத்தினுடையதாக இல்லை; ரஷ்யாவினுடையதாக மாறி இருந்தது. டிச. 25-ம் தேதி கோர்பசேவ் தன் வசம் இல்லாத அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தபோது, மிச்சம் இருந்த சோவியத் சமூகவுடைமைக் குடியரசுகளின் ஒன்றியம் என்ற பெயரும் முற்றிலுமாக அழிந்தது.

                     யார் செய்தது சரி, யார் செய்தது தவறு? தெரியவில்லை!

                     மக்கள் ஜனநாயகத்தை விரும்பினார்கள், எப்போதும்போல. அது இன்றுவரை அவர்களுக்குக் கிடைக்கவில்லை. மேலும், தங்களுடைய வளமான வாழ்வையும் பறிகொடுத்து இருக்கிறார்கள்.
இந்தக் கதையை இப்போதைய அரபு உலகின் எழுச்சியோடு ஒப்பிட்டுப்பாருங்கள்... எகிப்தில் சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக்கை ஆட்சியில் இருந்து விரட்டியவர்களுக்கு இப்போது கிடைத்திருப்பது... ராணுவத்தின் ஆட்சி. லிபியாவில் கடாஃபியின் கதையை முடித்தவர்களுக்கு இப்போது கிடைத்திருப்பது... ஒரு பொம்மை அரசாங்கத்தின் ஆட்சி. நாளை சிரியாவில், ஏமனில், இரானில்...

                     மக்களால் யார் ஆளக் கூடாது என்பதைத் தீர்மானிக்க முடிகிறது. யார் ஆள வேண்டும் என்பதை ஏன் தீர்மானிக்க முடியவில்லை? ஒரு வலுவான சித்தாந்தமும் தொலைநோக்கும் உள்ள மக்கள் தலைவனும் இல்லாத இடத்தில் உருவாகும் மக்கள் எழுச்சியால் ஒரு கட்டமைப்பை அழிக்க முடியுமே தவிர, உருவாக்க முடியாது. யார் ஆள வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் புரட்சியை எப்படி முன்னெடுப்பது என்று ரஷ்யர்கள் தங்கள் முன்னோரிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம்!

ஆனந்த விகடன் 2011

3 கருத்துகள்:

 1. இனிமேலாவது தமிழகஅரசு திருந்தட்டும். நம்மாநிலத்தில் மழைநீர் வீணாவதைத் தடுக்க சிலரது வசம் உள்ள குளம், கால்வாய்களை முழுமையாக மீட்டு மேம்படுத்த திட்டம் வகுக்கட்டும். அதன்மூலம் தமிழம் வளரட்டும்.
  கே. சுரேஷ்-வடகாடு.

  பதிலளிநீக்கு
 2. மிக மிக ஆழமான கட்டுரை .உங்களுடைய கருத்துக்களோடு பெரிதும் உடன் படுகிறேன் .நம் நாட்டு மக்களுக்கு எல்லா மொழிகளிலும் இலவசமாக கொடுத்து இருந்த கோடானு கோடி புத்தகங்களுக்காகவே அந்த நாடு எப்போதோ திவாலாகி இருக்க வேண்டும் .நாடு நாடாக சோஷலிசத்தை ஏற்றுமதி செய்த அந்த நாட்டினால் சோஷலிசத்தை காப்பாற்ற முடியவில்லை .இது வரலாற்றின் மாபெரும் சோகம் .இத்தனை ஆண்டுகளுக்கு பின்பும் வருத்ததிலிருந்து என்னால் விடுபடமுடியவில்லை -பீட்டர் துரைராஜ் .

  பதிலளிநீக்கு
 3. 1987-ல் எனது தந்தையின் சோவியத் யூனியன் பயணத்தின் போது , அங்கு அவர்கள் இந்தியர் என்றதும் காட்டிய ஒரு முகமூடியில்லாத பாசத்தை அவர் இங்கு விவரித்ததை கேட்கும் போதே மெய் சிலிர்த்தது ...அப்படிப்பட்ட ஒரு தேசம் இன்றைக்கு சின்னாபின்னமானது என்பது இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் ஜீரணிக்க முடியாத ஒன்று. உலகத்தின் கணிசமான பகுதிக்கு பிராணவாயு நின்று போனது என்பதே உண்மை...

  பதிலளிநீக்கு