வாச்சாத்தி ஒரு தொடக்கப்புள்ளி ஆகட்டும்!

வாச்சாத்தியில் அந்த பயங்கரம் நடந்து 3 ஆண்டுகளுக்குப் பின் நடந்த அடையாள அணிவகுப்பு அது. வாச்சாத்தி வன்முறையில் ஈடுபட்ட 269 பேருடன் மேலும் பல நூற்றுக்கணக்கானோர் கலந்து நிறுத்திவைக்கப்பட்டு ஐம்பது ஐம்பது பேராக அந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது. அவர்களில் பாலியல் குற்றவாளிகளை பாதிக்கப்பட்ட பெண்கள் அடையாளம் காட்ட வேண்டும். வாச்சாத்தி பெண்கள் சரியாக அடையாளம் காட்டினார்கள். இதற்கு 10 ஆண்டுகள் கழித்து கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோதும் துல்லியமாக அடையாளம் காட்டினர். அப்போது நீதிபதி அசோக்குமாரிடம் ஒரு பெண் சொன்னார்: ‘‘இப்ப இல்லீங்கய்யா... எப்ப கேட்டீங்கன்னாலும் அடையாளம் காட்டுவோம். வாழ்க்கையையே சீரழிச்சவங்களை எப்படிங்கய்யா மறக்க முடியும்?’’
இதுதான் வேறுபாடு. வாச்சாத்தி பயங்கரம் நமக்கு ஒரு சம்பவம். அவர்களுக்கோ அது வாழ்க்கையில் மறக்கவே முடியாத ஒரு பகுதி!
நீதிமன்றத் தீர்ப்பு வெளியான அன்று வாச்சாத்தி பெண்களைப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியவர்கள் மட்டும் தண்டனைக்கு ஆளாகவில்லை. பாதிக்கப்பட்ட பெண்களும் இன்னொருமுறை தண்டனைக்கு ஆளாகினர். இப்போது அனேகமாக அவர்கள் எல்லோரும் தாய் ஸ்தானத்தில் இருக்கின்றனர். அவர்களுடைய பிள்ளைகள் இப்போது நன்கு விவரம் அறிந்தவர்கள். தங்கள் தாயின் முன்கதையை அவர்கள் அறிந்துகொண்டார்கள். தன் தாயும் மானபங்கப்படுத்தப்பட்டவள் என்ற கதையைத் தங்கள் நண்பர்களிடம் மறைக்க அவர்கள் இப்போது வழிதேடிக்கொண்டு இருக்கிறார்கள். நினைத்துப் பாருங்கள்... இந்தச் சூழலை!
வாச்சாத்தி தீர்ப்பு _ அது பெரிய வெகுமதி இல்லை என்றாலும்கூட _ இன்றைக்கு எல்லோராலும் பேசப்படுகிறது. ஆனால், அதற்கு வாச்சாத்தி மக்கள் மிகப் பெரிய விலையைக் கொடுத்திருக்கிறார்கள். வனத் துறை, காவல் துறை, வருவாய்த் துறை... மூன்று முக்கியமான துறைகள்... 269 அரசு அலுவலர்கள்... சர்வ அதிகாரங்களும் அவர்கள் கைகளில். அவர்களை எதிர்த்து 19 ஆண்டு காலம் சட்டப் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள் என்றால், அது சாதாரணமானதல்ல.
சம்பவம் நடந்தது 1992 ஜூன் 20, 21, 22 தேதிகளில். விஷயம் வெளியே தெரியவே ஒரு மாதம் ஆனது.   
சந்தனக் கடத்தல் தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் 3 நாட்கள் கோரத் தாண்டவம் ஆடி இருந்தது அரச அதிகாரம். 15 ஆண்கள், 90 பெண்கள், 28 குழந்தைகள் என 133 பேர் கைதுசெய்யப்பட்டு இருந்தார்கள். சிறுமிகள் உட்பட 18 பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு இருந்தனர். தமிழகமே கொந்தளித்தது. ஆனால், காவல் துறையும் தமிழக அரசும் வாச்சத்தி மக்களை முற்றிலுமாக வஞ்சித்தன. கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் போராடிதான் _ உச்ச நீதிமன்றத்தின் படி ஏறிதான் _  சி.பி.ஐ. விசாரணையைப் பெற்றார்கள் வாச்சாத்தி மக்கள். இதுவரை உள்ளூர் காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையே பதிவுசெய்யப்படாத விசித்திரமான இந்த வழக்கில், சி.பி.ஐ. 1996&ல் குற்றப்பத்திரிகையை தாக்கல்செய்தது. அப்போது தொடங்கி வழக்கை முறியடிக்க என்னென்ன உபாயங்கள் உண்டோ அவ்வளவையும் கையாண்டது அதிகார வர்க்கம். ஒரு முறை நீதிபதியே தனக்குப் பாதுகாப்பு இல்லை என்று சி.பி.ஐ&யிடம் சொன்னார். ‘‘எத்தனையோ முறை பெட்டிபெட்டியாகப் பணம் வந்தது. முத்துமாரப்பன் ஓர் உதாரணம். வனத் துறையைச் சேர்ந்த இந்த மனிதர், அடையாள அணிவகுப்பு நடப்பதற்கு ஓரிரு நாட்கள் முன் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் தலா ரூ.2 லட்சம் வரை பேரம் பேசினார். மக்கள் அசையவில்லை. குடிநீர், மின்சாரம் என அடிப்படை வசதிகள் அவ்வளவையும் நிர்மூலமாக்கினார்கள். மக்கள் அசையவில்லை. பொய்வழக்குகள் போட்டு அலைக்கழித்தார்கள்; ஆயுதங்களோடு வந்து மிரட்டினார்கள். மக்கள் அசையவில்லை’’ என்கிறார் போராட்டக் குழுவைச் சேர்ந்தவரும் சட்ட மன்ற உறுப்பினருமான டில்லி பாபு.
இந்த மன உறுதிதான் அதிகார வர்க்கத்தின் முன் இவ்வளவு வலிமையாக வாச்சாத்தி மக்களை நிறுத்தி இருக்கிறது. ஆனால், இவ்வளவு பெரிய போராட்டத்துக்கு என்ன பதிலை நம்முடைய அரசமைப்பு தந்து இருக்கிறது?
வாச்சாத்தி வழக்கு இந்திய வரலாற்றில் மிக முக்கியமான ஒரு வழக்காக மாறி இருக்கிறது. நம்முடைய நிர்வாகம் சட்ட அமைப்பு சார்ந்து 2 முக்கியமான பலவீனங்களையும் தேவைகளையும் அது சுட்டிக்காட்டுகிறது.
1. இந்தியக் காடுகளில் என்ன நடக்கிறது? காடுகளில் வெளியாட்கள் _ குறிப்பாக அரசப் படைகள் _ புகுந்தால் என்ன ஆகும்? வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது மேற்குத் தொடர்ச்சி மலைக் கிராமங்களில் நடந்தது என்ன? தண்டகாரண்ய பகுதியில் இப்போது நடந்துகொண்டு இருப்பது என்ன? வாச்சாத்தி நமக்குத் தெளிவான ஒரு சித்திரத்தை வழங்குகிறது. நம்முடைய அதிகார வர்க்கம் என்ன நினைக்கிறது என்றால், நாட்டின் எல்லா அதிகாரங்களும் தமக்கானவை என்று நினைக்கிறது. நல்லது. ஆனால், உரிமைகள் குடிமக்களுடையவை. காட்டின் மீதான முதல் உரிமை, காட்டிலேயே வாழும் பழங்குடிகளுக்குத்தான். காடுகளின் மீதான பழங்குடிகளின் உரிமைகள் சட்டபூர்வமானதாக்கப்பட வேண்டும்.
2. உச்ச நீதிமன்ற கவனம் வரை பெற்ற இவ்வளவு முக்கியமான ஒரு வழக்கில் நீதி சொல்லகூட நம்முடைய நீதிமன்றங்களுக்கு 19 ஆண்டுகள் ஆகி இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் இப்போது குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டு இருக்கும் பல அதிகாரிகள் பதவி உயர்வோடு தங்கள் முழுப் பணிக் காலத்தையும் வெற்றிகரமாகக் கடந்துவிட்டார்கள். குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் 54 பேர் இறந்துவிட்டனர், எந்த தண்டனையும் இல்லாமலேயே... பாதிக்கப்பட்டோர் 33 பேர் இறந்துவிட்டனர் எந்த நியாயத்தையும் பெறாமலேயே..!
உச்ச நீதிமன்றம் சொல்கிறது: ‘‘வன்முறைகளிலேயே கொடூரமானது அரச வன்முறை’’ என்று. ஆனால், அரச வன்முறையை யார், எப்படி, எவ்வளவு காலகட்டத்துக்குள் விசாரிப்பது? தண்டிக்கும் அதிகாரமிக்க ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும். குடிமக்கள் மீதான அரச வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுபவர்கள் மீது உயர்ந்தபட்ச தண்டனை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரவேண்டும். வாச்சாத்தி அதற்கான தொடக்கப்புள்ளியாக அமையட்டும்!
ஆனந்த விகடன் 2011
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக