கைவிடப்பட்டவர்கள்!

‘‘எனக்கு இந்தி என்றாலே பிடிக்காது. எவ்வளவோ படித்தும் மண்டையில்  ஏறவில்லை. அதனால், உமா மகேஸ்வரி டீச்சர் என்னைக் கண்டிப்பார். அவர் திட்டுவார் என்பதற்காகவே நிறைய தடவை பள்ளிக்கூடம் போகாமல் இருந்திருக்கிறேன். ஆத்திரத்தில், கோபத்தில் தப்பு செய்துவிட்டேன். ஆனால், இப்போது தவிக்கிறேன். நான் யாரையும் பார்க்க விரும்பவில்லை. உமா மகேஸ்வரி டீச்சர் கதறியது என் கண்ணிலேயே நிற்கிறது. நான் தப்பு செய்துவிட்டேன். எனக்குத் தண்டனை கொடுங்கள். எனக்கு மன்னிப்பே கிடையாது!’’
- உமா மகேஸ்வரி கொலையாளி, ஒன்பதாம் வகுப்பு மாணவன்.
ஆசிரியை உமா மகேஸ்வரி தன் வகுப்பு மாணவனால் கொல்லப்பட்ட அன்று சென்னையின் போக்குவரத்து நெரிசல் மிக்க பூந்தமல்லி நெடுஞ்சாலை வன் முறைக் களமாகி இருந்தது. காரணம், பச்சையப்பா கல்லூரி மாணவர்கள். ‘பஸ் தினம்’ கொண்டாட விதிக்கப்பட்ட தடையை எதிர்த்துக் கடைகளைச் சூறையாடிய அவர்கள், சாலையில் சென்ற பேருந்துகள் மீது கல்வீச்சு நடத்தியதுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸார் மீதும் பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்தினர்.
இந்தக் கொலைக்கு முந்தைய நாள் தாம்பரத்தில் ஒரு பெண்ணைப்  பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய நால்வரை போலீஸார் கைதுசெய்தனர். நால்வருமே கல்லூரி மாணவர்கள்.
இந்தக் கொலைக்கு மறுநாள் சென்னை, பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் தற்கொலை செய்துகொண்டார். தேர்வு பயம் காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட அவர், பத்தாம் வகுப்பு மாணவர்!
உங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்டம், நெரும்பூரைச் சேர்ந்த மாணவி வர்ஷினி--யின் கதை ஞாபகத்தில் இருந்தால், இந்தச் சம்பவங்கள் எதுவுமே பெரிய அதிர்ச்சியை உருவாக்காது. ஓராண்டுக்கு முன், ஆசிரியை திட்டியதால் மன உளைச்சலுற்று தீக்குளித்து தன்னை மாய்த்துக்கொண்டவள் வர்ஷினி. ஐந்தாம் வகுப்பு மாணவி!
ஆனால், வர்ஷினியை நமக்கு ஞாபகம் இருக்காது. ஏனென்றால், மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது நமக்குச் சாதாரணமாகிவிட்டது. இப்போது மாணவர்கள் பாலியல் வன்முறையில் ஈடுபடுவதும் நமக்குச் சாதாரணமாகிக்கொண்டு இருக்கிறது. இனி, மாணவர்கள் கொலை செய்வதும் நமக்குச் சாதாரணமாகிவிடும். இன்னும் என்னவெல்லாம் நாம் மாணவர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்?
முழுப் பழியையும் மாணவர்கள் மீது சுமத்துவதைவிட்டு கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஆசிரியை உமா மகேஸ்வரியின் கொலை பாதிக்கும் அளவுக்கு மாணவர் லோகேஷின் தற்கொலை ஏன் உங்களைப் பாதிக்கவில்லை?
சுமார் 160 ஆண்டுகள் பழமையான ஒரு பள்ளியில் படிக்கும் ஒரு மாணவன் கொலை செய்கிறான்... 170 ஆண்டுகள் பழமையான ஒரு கல்லூரியின் மாணவர்கள் ரௌடிகளைப் போல நடந்துகொள்கிறார்கள் என்றால், நம்முடைய கல்வித் துறை எவ்வளவு புரையோடிப்போய் இருக்கிறது என்று நாம் வெட்கப்பட வேண்டாமா?
ஆசிரியை உமா மகேஸ்வரி நல்லவராக இருக்கலாம். ஆனால், மோசமான நம்முடைய கல்விக் கட்டமைப்பில் அவரும் ஒரு கண்ணி. கொலை செய்த மாணவரின் குறிப்பேட்டில் ஏழெட்டு முறை புகார்களைக் குறிப்பிட்டு அனுப்பி இருக்கிறார் உமா மகேஸ்வரி. மாணவரின் பெற்றோர் கண்டிப்பானவர்கள் என்றும் அவருடைய பிரச்னைகளை அவர்கள் உணர்ந்துகொள்ளும் நிலையில் இல்லை என்றும் கூறப்படுகிறது. தன் குழந்தைக்குப் படிப்பில் ஆர்வம் இருக்கிறதா, இல்லையா; குழந்தைக்குக் கற்கும் திறன் எந்த அளவுக்கு இருக்கிறது என்ப தைப் பற்றியெல்லாம் துளிக்கூட யோசிக் காமல் படிப்பைத் திணிக்கும் பெற்றோர்கள் நிரம்பிய ஒரு சமூகத்தில், மீண்டும் மீண்டும் ‘உன் பிள்ளை படிக்கவில்லை, தேறுவது கடினம்’ என்னும் செய்தியைச் சொல்லும் ஆசிரியர்களை எதிர்கொள்ள குழந்தை களுக்கு என்ன வாய்ப்புகள் இருக்கின்றன? கடைசி வரிசை மாணவர்களின் உணர்வுகளை, பிரச்னைகளைப் பகிர்ந்துகொள்வதற்கு ஏற்ற சூழல் இங்கு எந்த அளவுக்கு இருக்கிறது?
அந்தக் காலத்தில் பள்ளிக்கூடங்களில் நீதிபோதனை வகுப்புகள் என்று ஒரு பிரிவு உண்டு. தெனாலிராமன்களும் பீர்பால்களும்  விக்கிரமாதித்யன்களும் பரமார்த்த குருவின் சீடர்களும் உலவும் வகுப்புகள் அவை. படிப்பில் ஆர்வம் இல்லாத குழந்தைகள்கூட ஆர்வத்துடன் பங்கேற்கும் அந்த வகுப்புகளில் ஆசிரியர்கள் கதை சொல்வார்கள். மாணவர்களிடமும் அவர்களுடைய சொந்தக் கதைகளைக் கேட்பார்கள். பல மாணவர்கள் குடும்பக் கதையைச் சொல்லும்போது மனச்சுமை தாளாமல் அழுவார்கள். ஆசிரியர்கள் அவர்களுக்கு ஆறுதலாக நிற்பார்கள். குழந்தைகள் குறைந்தபட்சம் பிரச்னைகளைத் தங்கள் அளவில் எதிர்கொள்ளும் ஆன்மபலத்தையேனும் இந்த வகுப்புகள் வழங்கின.
இந்தக் காலக் குழந்தைகளுக்கோ நீதிபோதனை வகுப்புகள்கூடக் கிடையாது. பாவம் கிடையாது. புண்ணியம் கிடையாது. கடவுள் கிடையாது. சாத்தானும் கிடையாது. எல்லோராலும் கைவிடப்பட்டவர்கள் அவர்கள்!
பிரெஞ்சு அறிவுஜீவிகளில் ஒருவரான மிஷல் ஃபூக்கோ வகுப்பறைகள், மருத்துவமனைகள், சிறைகள் மூன்றையும் ஒப்பிடுவார். பிரமாண்டமான சுற்றுச்சுவர்கள், கண்காணிப்பாளர்கள், வருகைப் பதிவேடுகள், நெருக்கடியான சூழல் என்று இவை மூன்றுமே ஒரே மாதிரியான கட்டமைப்பின் கீழ் இருப்பதைச் சுட்டிக்காட்டுவார் ஃபூக்கோ. முற்றிலும் அறநெறிகளைத் துறந்துவிட்ட ஒரு சமூகம், வணிகமயமாகிவிட்ட கல்வித் துறை, பொருளாதாரச் சந்தைக்குத் தயாராக்கும் வகையில் நாம் உருவாக்கி வைத்திருக்கும் கல்விக்கூடங்களின் கட்டமைப்பு, போட்டிக்களமாகிவிட்ட தேர்வுமுறைகள்... இவற்றின் தோல்வியைத்தான் இன்னொரு முறை சுட்டிக்காட்டி இருக்கின்றன உமா மகேஸ்வரியின் கொலையும் லோகேஷின்
தற்கொலையும்!
ஆனந்த விகடன் 2012

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக