உண்மையைப் பேசுவோம்!


         போர் வெற்றியின் உற்சாகத்தில் இருந்த ராஜபக்ஷ இந்தியப் பத்திரிகையாளர் ஒருவருக்குப் பேட்டி அளித்தபோது சொன்னார்: ‘‘நாங்கள் இந்தியாவுக்காகவும் போரிட்டிருக்கிறோம்!’’
        
         ஆமாம். ராஜபக்ஷ  பொய் சொல்லவில்லை. இந்தப் போரில்  இந்தியா  பின்னின்று பங்கேற்றது. போருக்கு முன் ‘எம்.ஐ. 17’ ரக ஹெலிகாப்டர்களில் தொடங்கி போருக்குப் பின் ‘விக்ரஹா’ ரோந்துக் கப்பல் வரை சகல படைக்கலன்களையும் இலங்கைக்கு வழங்கியது; ஆட்களை அனுப்பியது; சிங்களப் படைக்கு இங்கு பயிற்சி அளித்தது. கோடியக்கரையில் இருந்தும் உச்சிபுளியில் இருந்தும் கடல் பகுதியைக் கண்காணித்து உளவு சொன்னது; ராஜ தந்திர ரீதியாக போருக்கு எந்தத் தடையும் வராமல் பார்த்துக்கொண்டது. யோசித்துப் பாருங்கள்... இலங்கையின் போர்க் குற்றங்களுக்கு எதிராக இந்தியா குரல் கொடுக்க வேண்டும் என்று கோருவது எவ்வளவு அபத்தம்?
உங்களுக்கு நினைவிருக்கிறதா?

            2009-ம் ஆண்டு மே 15-ம் தேதி அமெரிக்க பசிபிக் பிராந்திய கட்டளைத் தளபதி திமேத்தி ஜே கீட்டிங் அன்றைய இந்திய தேசியப் பாதுகாப்புச் செயலர் எம்.கே.நாராயணனையும் வெளியுறவுத் துறைச் செயலர் சிவசங்கர் மேனனையும் சந்தித்தார். பின்னர், ‘‘இலங்கையில் போர்ப் பகுதியில் ‘பாதிக்கப்பட்ட மக்களுக்கு’ உதவ அமெரிக்கக் கப்பல் படைக் கப்பல்கள் தயார் நிலையில் இருக்கின்றன’’ என்று அறிவித்தார். விடுதலைப் புலிகள் தலைமை அமெரிக்காவிடமிருந்தும் இங்கிலாந்திடமிருந்தும் பொது மன்னிப்பு உறுதிமொழியை எதிர்பார்த்து சரணடைய காத்திருந்த நாள் அது. ‘ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரண் அடைந்தால் பொது மன்னிப்பு’ என்ற பொய்யான வாக்குறுதி சர்வதேசத்தால் வழங்கப்பட்டதற்கான மறைமுக சாட்சி அது. ஆமாம். அமெரிக்காவுக்கும் இதில் பங்கு உண்டு. கொத்துகொத்தாக குண்டுகள் விழுந்தபோதும்  தமிழ் உயிர்கள் வீழ்ந்தபோதும் எல்லோரும்தானே வேடிக்கை பார்த்தார்கள்? எல்லாருடைய விருப்பத்தின்பேரில்தான் அது நடந்தது!

         போர்க் குற்றங்களுக்காக சர்வதேசம் மூன்று வழிகளில் நடவடிக்கை எடுக்கலாம்.
        
         முதலாவது, ஐ.நா. சபையின் பாதுகாப்பு அவையின் மூலம் தீர்மானம் நிறைவேற்றுவதன் மூலம். இங்கு இலங்கையின் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை. இலங்கையைக் காப்பாற்ற சீனாவிடம் உள்ள ‘வீட்டோ’ அதிகாரம் போதுமானது.

         இரண்டாவது, சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை மூலம். தன்னுடைய வரலாற்றிலேயே இப்போதுதான் முதன்முதலாக ஒருவரை _ காங்கோவின் தாமஸ் லுபாங்காவை _ போர்க் குற்றவாளி என்று அறிவித்திருக்கிறது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம். அதன் லட்சணம் இவ்வளவுதான். இங்கும்கூட இலங்கை தண்டிக்கப்பட வாய்ப்பில்லை. ஏனெனில், போர் அற விதிகளைக் கடைப்பிடிக்கும் உறுதிமொழியை ஏற்று, இந்த  நீதிமன்றத்தின் கீழ் வரும் நாடுகள் மீதுதான் சர்வதேச நீதிமன்றத்தால் நடவடிக்கை எடுக்க முடியும். இலங்கை இதில் கையெழுத்திடவில்லை.

         மூன்றாவது... மனித உரிமை ஆணைய விசாரணை மூலம். வெறும்  கண்டனங்களையும் கோரிக்கைகளையும் வலியுறுத்தல்களையும் மட்டுமே முன்வைக்க வல்ல அமைப்பு இது. இதன் பாதுகாப்பு அவையின் முன்புதான் இப்போது இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்திருக்கிறது. சுருக்கமாக இந்தத் தீர்மானம் என்ன சொல்கிறது? போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க இலங்கை அரசு அமைத்த ‘கண்துடைப்பு விசாரணை ஆணையம்’ அளித்த அறிக்கையில் உள்ள விஷயங்களை நிறைவேற்ற வேண்டும் என்று சொல்கிறது. சரி, அந்த அறிக்கை என்ன சொல்கிறது? அதிர்ச்சி அடையாதீர்கள். இரண்டு பகுதிகளைக் கொண்ட அந்த அறிக்கையின் முதல் பகுதி போர்க் குற்றங்கள் தொடர்பானது. இலங்கை ராணுவம் எந்தப் போர் குற்றத்திலும் ஈடுபடவில்லை என்று சொல்கிறது. இரண்டாவது பகுதி போருக்குப் பிந்தைய தமிழர்கள் நிலை தொடர்பானது. தமிழர்கள் பகுதி முழுவதும் ராணுவமயமாக்கப்பட்டுள்ள சூழல் மாற்றப்பட வேண்டும்; தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்று சொல்கிறது. இதைத்தான் இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று அமெரிக்க தீர்மானம் முன்மொழிகிறது. போரில் நடந்த மனித உரிமை மீறால்களையோ, போர்க் குற்றங்களையோ, அவை தொடர்பான சர்வதேச விசாரணையைப் பற்றியோ அல்ல!

         சரி, அப்படியே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் என்ன நடக்கும்? இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் கோரும்.

         அப்போதும் இலங்கை அரசு கேட்காவிட்டால்? ஒன்றும் நடக்காது. அதிகபட்சம் சில பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படலாம். இலங்கையைப் பொருத்த அளவில் அதுவும் நடக்காது. ஏனெனில், அது ஒரு சந்தை நாடு. அதற்குத் தடை விதித்தால், விதிப்பவர்களுக்குத்தான் அதிக நஷ்டம். இலங்கை அமைச்சர் வீரவம்ச சொன்னதுபோல, கோக் இல்லாவிட்டால் சிங்களர்கள் செத்துப் போய்விடுவார்களா என்ன?

         சரி, இப்படி ஒரு விஷயத்துக்கு ஏன் இத்தனை களேபரம்?

         சீனாவுடனான பனிப்போரில், ஆசிய பிராந்தியத்தில் சீன ஆதிக்கத்தை மட்டுப்படுத்திவைக்க அதன் நெருக்கமான கூட்டாளி இலங்கையைத் தட்டிவைக்க வேண்டிய அரசியல் அமெரிக்காவுக்கு. தமிழகத்தின் மின்வெட்டுப் பிரச்னையைத் திசை திருப்ப வேண்டிய அரசியல் ஆளும் அ.தி.மு.க-வுக்கு. அதற்குப் பதில் லாவணி பாட வேண்டிய நிர்ப்பந்த அரசியல் தி.மு.க-வுக்கு. இந்த விஷயத்தைப் பெரிய விவகாரமாக எடுத்துக்கொள்ள இலங்கைக்கும் அரசியல் உண்டு. ராஜபக்ஷ மீதான அதிருப்தி மறைந்து தேசிய வெறி மீண்டும் தலை தூக்க இது உதவும். ஆக, எல்லோருடைய அரசியலுக்கும் செத்தும் உயிர் கொடுக்கிறான் ஈழத் தமிழன்!
ஜூனியர் விகடன் மார்ச் 2012

1 கருத்து:

  1. தமிழன் ஏமாந்த சோனகிரி என்பது முழு உலகிற்கும் தெரிந்த ஒன்று. இந்த உலக நாடுகளின் உதவியில்லாதிருப்பின் எம் மண்ணில் ஆக்கிரமிப்பாளன் காலடி எடுத்து வைத்திருப்பான? அல்லது கொலைவெறியன் தான் வெற்றிக் கூச்சல் இட்டிருப்பானா?

    பதிலளிநீக்கு