திருவானைக்கா ஒரு ஜோடி நெய் தோசை!


            திருவானைக்கா.
ஆயிரக் கணக்கான ஆண்டுகள் வரலாற்றையும் அற்புதமான கோயிலையும் தன்னகத்தே அடக்கி நிற்கும் ஊர். சிற்றூர்களின் அடையாளங்களை விழுங்கிவிடும் மாநகரங்களுக்கே உரிய துர்குணத்தால் இன்று திருவானைக்காவும் திருச்சி மாநகரின் ஒரு பகுதியாகிவிட்டது. ஒருபுறம் காவிரியாலும் மறுபுறம் கொள்ளிடத்தாலும் சூழப்பட்டிருக்கும் திருவானைக்காவில் இரண்டு விஷயங்கள் பிரசித்தம். ஒன்று... கருவறையில் சிவலிங்கத்தைச் சுற்றி எப்போதும் நீர் ஊற்றெடுத்துக்கொண்டிருக்கும் ஜம்புகேஸ்வரர் கோயில். மற்றொன்று... திரும்பத்திரும்பச் சாப்பிட அழைக்கும் 'பார்த்தசாரதி விலாஸ்' ஒரு ஜோடி நெய் தோசை.


                            தமிழர்கள் வாழ்வில் அலுக்காத விஷயங்களில் ஒன்று தோசை. தோசையை விரும்பாதவர்கள் யார் இருக்கிறார்கள்? பக்கத்து வீட்டில் முறுகும் வாசம் பிடித்து எனக்கும் தோசை வேண்டும் என அடம்பிடிக்காத குழந்தைப் பருவம் யார் வாழ்வில் இல்லாமல் இருந்திருக்கிறது? ''என் பிள்ளைக்கு மூன்று வேளையும் தோசை கொடுத்தாலும் சாப்பிடும்'' என்ற வசனத்தை நாம் எல்லோருமே ஏதோ ஒரு காலகட்டத்தில் கடந்து வந்திருக்கிறோம். வீட்டில் ஒரு பள்ளிக்கூடமே நடத்தும் அளவுக்குக் கூட்டத்துடன் இருந்த நம் மூத்த தலைமுறையைக் கேட்டுப்பாருங்கள். யாருக்கும் தெரியாமல் அம்மாவிடம் கேட்டு, தான் மட்டும் திருட்டுத்தனமாய் தோசை தின்ற கதையைச் சொல்வார்கள். ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு நாள் வந்திருக்கும். வீட்டில் நெய்யும் தோசை சுடுபவருக்குப் பிரியமும் ஒன்று கூடி வந்த ஒரு நாள். அந்நாளில் அருமையான நெய் முறுகல் தோசைகளை நாம் சாப்பிட்டிருப்போம். ஒரு தோசை சட்னி தொட்டு, ஒரு தோசை ஜீனி தொட்டு, ஒரு தோசை வெறும் தோசையாய் என்று அந்நாளில் பிரமாதப்படுத்தி இருப்போம். பின்னர், அத்தகைய தோசை நமக்கு கிடைப்பதேயில்லை. காலமெல்லாம் சுற்றித்திரியும்போது எங்காவது ஒரு நாள் மீண்டும் கிடைக்கும் அப்படியொரு தோசை 'பார்த்தசாரதி விலாஸ்' நெய் தோசையைப் போல. சாப்பிட்டுவிட்டு பின்னர் அதைப் பற்றியே பேசிக்கொண்டிருப்போம். ஆனால், திருவானைக்காகாரர்களுக்குக் கொடுத்துவைத்திருக்கிறது. நினைத்தபோதெல்லாம் சாப்பிடுகிறார்கள்.


                            திருவானைக்கா கோயில் சுற்றுச்சுவரையொட்டி ஈருக்கிறது மேலவிபூதி பிரகாரம். வீதியின் மையத்தில் 'பார்த்தசாரதி விலாஸ்'. 1943-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கடை, இன்றும் நாற்பதுகளில் உள்ள உணவகத்தின் அதே தோரணையில் இருக்கிறது. அதே கட்டடம், அதே மேஜைகள், அதே இருக்கைகள், அதே அடுக்களை, அதே விறகடுப்பு, அதே தோசைக்கல், அதே ருசி! சாப்பிட வருபவர்களிடம் ஒரு சம்பிரதாயமாக "என்ன வேண்டும்'' என்று கேட்கிறார்கள். அவர்களும் சம்பிரதாயமாக "நெய் தோசை'' என்று சொல்கிறார்கள். ஆனால், கடைக்குள் உள் நுழைந்தவுடனேயே தோசைக் கல்லில் மேலும் இரண்டு தோசைகள் போட்டுவிடுகிறார் சமையல்காரர். பொன்னிறத்தில் ஒரு குழல்போல சுருட்டி இலையில் வைக்கிறார்கள்... சமையல்காரரின் கைப்பக்குவம் ரேகையாய் தோசையில் ஓடுகிறது. தொட்டுக்கையாகத் தேங்காய்ச் சட்னி, காரச் சட்னி, வெங்காய சாம்பார் தருகிறார்கள். ஆனால், முதல் தோசைக்கு இவை எதுவுமே தேவை இல்லை. நெய் மணத்தைத் தொட்டுக்கொண்டே சாப்பிட்டுவிடலாம். ஒரு ஜோடி தோசை. ஒன்று நெய் மணத்தைத் தொட்டுக்கொண்டு; மற்றொன்று சட்னி, சாம்பார் தொட்டுக்கொண்டு. திவ்யானுபவத்தை உணருவீர்கள்.

                            அக்காலத்தில் திருச்சிக்கு வரும் கச்சேரிக்காரர்களும் நாடகக்காரர்களும் இந்த திவ்யானுபவத்துக்காகவே கடைக்காரர்களுக்கு முன்னதாகவே சொல்லிவிடுவார்களாம். அவர்களுக்காக மாவு எடுத்துவைத்து, வந்தவுடன் தோசை சுட்டுக் கொடுப்பார்களாம் கடைக்காரர்கள். கடையை ஆரம்பித்த கே.ஏஸ். ஆனந்தநாராயணன், சுப்ரமண்யன் சகோதரர்கள் இன்று ஈல்லை. அவர்களுடைய மகன்கள் ஏ. வைத்தியநாதனும் எஸ். மணிகண்டனும் கடையை நிர்வகிக்கிறார்கள். தோசைபற்றிச் சொல்கிறார்கள்: "நான்கு பங்கு புழுங்கல் ஆரிசி, கால் பங்கு உருட்டு உளுந்து. இந்தக் கலவைதான். கையில் அள்ளினால் வழியாத பதத்தில் மாவை அள்ளிவிடுவோம். அதே பதத்தில் கல்லில் ஏறும். ஒரு இழுப்பு. தோசையில் பாருங்கள், ரேகை சொல்லும். வேக்காடு தெரியும் நேரத்தில் நெய் ஊற்றுவோம். தரமான வெண்ணெயாக வாங்கிப் பொங்கும் பதத்தில் உருக்கப்பட்ட நெய். மாறாத பக்குவமே மறக்க முடியாத தோசையாகிறது'' என்கிறார்கள் தோசை சகோதரர்கள்.

                            நெய் தோசை தந்த சிறு வயது நினைவுகளோடு ஜம்புகேஸ்வரர் கோயிலுக்குப் போனோம். பிரசாதம் பிரமாதமாக இருக்கும் என்றார்கள். அன்று நமக்குப் பிரசாதம் கிடைக்கவில்லை. ஜம்புகேஸ்வரரிடமே முறையிட்டுவிட்டோம்: "தினம்தினம் நீர் சாப்பிடுவது இன்றொரு நாள்கூட எமக்குக் கிடைக்காதா?'' ஜம்புகேஸ்வரர் நமுட்டுச் சிரிப்புடன் சொன்னார்: "இடத்தைக் காலிப் பண்ணும். நான் தினம்தினம் சாப்பிடுவதை நீர் ஏற்கெனவே சாப்பிட்டாயிற்று!''

சாப்பாட்டுப் புராணம் புத்தகத்திலிருந்து...
தினமணி 2008

4 கருத்துகள்:

 1. நல்ல சாப்பாட்டு பிரியரா நீங்க
  நானும் தான்

  பதிலளிநீக்கு
 2. அருமையாக இருக்கிறது கட்டுரை! 2008ல் திருவாணைக்கா சென்றேன்! இதை படித்திருந்தால் சாப்பிடாமல் வந்திருக்க மாட்டேன்! நெய் தோசை சாப்பிட திருவானைக்கா செல்வதாக உத்தேசித்துள்ளேன் படித்துக்கொண்டிருக்கும் போதே! விகடனில் நீங்கள் எழுதும் போதே உங்கள் கட்டுரைகள் சிறப்பாக இருக்கும். இந்துவிலும் உங்கள் கட்டுரைகள் சிறப்பாக வருகிறது! இன்று உங்கள் ப்ளாக் வந்தேன்! இனி தொடர்வேன்! நன்றி!

  பதிலளிநீக்கு
 3. உங்களின் தளம் + இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-7.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  பதிலளிநீக்கு
 4. MY GRAND FATHER USUALY TOLD THAT THE TASTE OFF THE THOSAI DEPEND UPON THE THOSAIKKAL WHICH YOU ARE USING AND ALSO TOLD THAT THAT IS WHY OUR FAMILY IS KEEPING THE SAME THOSAIKKAL SAFELY WHICH WAS USED BY HIS GRANDMOTHER
  ,

  பதிலளிநீக்கு