ஏஞ்சலினா மார்பகங்கள் இனி யாருடையவை?



                பெண்களுக்கு ஒரு முக்கியமான செய்தியைப் பகிர்ந்திருக்கிறார் ஏஞ்சலினா ஜோலி.  தனக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படக்கூடிய அபாயத்தைப் பரிசோதனைகளின் மூலம் அறிந்துகொண்ட அவர், புற்றுநோயைத் தவிர்க்க  மாஸ்டெக்டோமி அறுவைச் சிகிச்சை முறை மூலம் தன் இரு மார்பகங்களையும் அகற்றிக்கொண்டிருக்கிறார். 'நியூயார்க் டைம்ஸ்'  பத்திரிகையில் இது தொடர்பாக எழுதியுள்ள கட்டுரையில், "என்னுடைய தாயை அவருடைய 56 வயதில் புற்றுநோய்க்குப் பறிகொடுத்தேன். இப்போது எனக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கு 87 சதவீதமும் கருப்பைப் புற்றுநோய் ஏற்படுவதற்கு 50 சதவீதமும் வாய்ப்பு இருப்பதைப் மரபணுப் பரிசோதனைகள் மூலம் அறிந்துகொண்டேன். அந்த அபாயத்தை முடிந்தவரை குறைத்துக்கொள்ளும் நோக்கிலேயே இந்த முடிவை எடுத்தேன்" என்று எழுதியிருக்கும் ஏஞ்சலினா அடுத்து சொல்லியிருக்கும் செய்திகள் முக்கியமானவை. "என் மார்பகங்களை இழந்ததால் ஒரு பெண்ணாக எதையும் இழந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. உலகெங்கும் ஆண்டுதோறும் 4.58 லட்சம் பெண்கள் மார்பகப் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர். குறிப்பாக பொருளாதாரரீதியாக பின் தங்கியிருக்கும் நாடுகளில். பலருக்கு நோயைத் தவிர்க்க இப்படியான முடிவுகளை எடுக்கும் வாய்ப்புகள் இருப்பது தெரியாது. என் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் அந்த வாய்ப்புகளைப் பேச விரும்புகிறேன்" என்று தெரிவித்திருக்கிறார். மேலும், இந்தச் சிகிச்சைக்குப் பின் புற்றுநோய் அபாயம் 87 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைந்துவி்ட்டதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.


                  வருமுன் காப்பது சாலச்சிறந்தது. அதேசமயம், அந்தக் காப்புமுறை உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, வாழ்க்கைச் சூழல் போன்ற வழிமுறைகளால் நடக்க வேண்டும் என்பது என் எண்ணம். இப்படியான முன்கூட்டித் திட்டமிடும் சிகிச்சைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. இந்தியா போன்ற - வந்த பின்னரான சிகிச்சைக்கே வழியில்லாத - நாட்டில் இதைப் பற்றிப் பேசுவதிலும் அர்த்தம் இல்லை (தவிர, இத்தகைய பரிசோதனைகள், செய்திகளின் பின்னணியில் மருந்து நிறுவனங்களின் ராட்சஷ லாபி உண்டு). ஆனால், இவற்றை எல்லாம் தாண்டி ஏஞ்சலினா ஜோலியின் அனுபவத்தில் மூன்று செய்திகள் ஒளிந்திருக்கின்றன.


                  ஏஞ்சலினாவுக்கு இப்போது 37 வயது. 6 குழந்தைகளுக்குத் தாய் என்றாலும்,  இன்னமும் ஜொலிக்கும் நட்சத்திரம்.  தன்னுடைய புன்னகையை 30 மில்லியன் டாலருக்குக் காப்பீடு செய்திருக்கும் ஜூலியா ராபர்ட்ஸில் தொடங்கி தன்னுடைய புட்டத்தை 300 மில்லியன் டாலருக்குக் காப்பீடு செய்திருக்கும் ஜெனிஃபர் லோபஸ் வரை அவர் சார்ந்திருக்கும் போட்டி நிறைந்த ஹாலிவுட் உலகம்  உடலையே முதலீடாக ஆராதிப்பது (ஒருகாலத்தில் ஏஞ்சலினாவே 1 பில்லியன் டாலருக்குத் தன் ஒட்டுமொத்த  உடலையும் காப்பீடு செய்திருந்ததாகக் கிசுகிசுக்கள் உண்டு). இன்றைக்கு அங்கிருந்து, எல்லோரையும்விட, எல்லாவற்றையும்விட எனக்கு நான் முக்கியம் - என் உடல் எனக்கானது - என்கிற செய்தியைச் சொல்கிறார் ஏஞ்சலினா. ஒரு பெண் மார்பகங்களை இழப்பதால், பெண்மையில் இழப்பு ஏதும் நடந்துவிட்டதாக உணரவில்லை என்ற செய்தியைச் சொல்கிறார். முக்கியமாக, நாம் எது நம்முடைய பலங்களில் ஒன்று என்று நம்பிக்கொண்டிருக்கிறோமோ, அதை இழந்த பிறகும் நமக்கு வாழ்க்கை பிரகாசமாகவே இருக்கிறது என்கிற நம்பிக்கையை அவர் விதைக்கிறார்.

                  தன்னைச் சுற்றி இருப்பவர்களைப் பார்த்து, அவர்கள் நலனை முன்னிறுத்தியே எதையும் யோசித்து முடிவெடுக்கும் நம் பெண்களுக்கு, குடும்பத்துக்காக எவ்வளவோ உடல் உபாதைகளைத் தனக்குள் புதைத்துக்கொள்ளும் நம் பெண்களுக்கு, தன் உடலின் முதல் உரிமையைத் தனக்கு வெளியே இருக்கும் உலகத்துக்கு அளிக்கும் நம் பெண்களுக்கு ஏஞ்சலினா சொல்லியிருப்பது முக்கியமான செய்திதானே?
மே 2013

17 கருத்துகள்:

  1. ஏஞ்சலீனா பற்றிய செய்தி என்பதால் தான் இப்படி மஞ்சள் பத்திரிகை தரத்துக்குத் தலைப்பு வைத்தீர்களா?

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா16 மே, 2013 அன்று AM 6:46

    ஒரு பெண்ணாக இந்த தலைப்பை பார்த்ததும் முதலில் அதிர்ச்சி அடைந்தேன். அதுவும் சமசிடமிருந்தா இப்படி? ஆனால், எவ்வளவு பொருத்தமான தலைப்பு என்பதை கட்டுரையை முழுமையாக படித்தபோது உணர்ந்தேன். முன்பு உங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா கட்டுரையை படிக்கும்போதும் இதுவே நிகழ்ந்தது. நேற்றே படித்த செய்தி. இந்த கோணம் வழக்கம்போல புதிது சமஸ். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா16 மே, 2013 அன்று AM 6:53


    முதல்ல பேரை மாத்துங்க நிறமில்லா சிந்தனை. நீங்க எப்போ, எங்கே கமெண்டு போட்டாலும் உங்க நிறம் நாத்தம் அடிக்குது. கவிதை எழுதி பேரு வாங்குறது தப்பில்லே. குறை சொல்லி பேரு வாங்குற காலம் மலையேறிடுச்சு. நானும் எல்லா பேப்பர்லேயும் இந்த செய்தியை படிச்சேன். யாரும் இப்படி யோசிக்கவும் இல்லை. இப்படி எழுதவும் இல்லை. தயவுசெய்து நல்லதை பாராட்டக் கத்துக்குங்க.
    - தஞ்சை ராம்நாத்

    பதிலளிநீக்கு
  4. அருமையான கட்டுரை தோழர். எவ்வளவு பெரிய விஷயத்தை உள்ளடக்கியுள்ளீர்கள். ஆண்களுக்கு நீங்கள் கொடுத்துள்ள தலைப்பு வேறு மாதிரிதான் படும். பன்னெடுங்காலமாக பெண்ணுடல் அவர்களுடையதாகத்தானே இருக்கிறது. பெண்கள் எமக்கு தெரியும் அதில் உள்ள வலி. இப்படியான விமர்சனங்களால் தயவுசெய்து தலைப்பை மாற்றிவிடாதீர்கள். இன்னொரு கோரிக்கை. நீங்கள் அரசியல் கட்டுரைகளை தாண்டி இதுபோன்ற தளங்களில் அதிகம் எழுத வேண்டும். பெண்கள் பிரச்னைகளை அதிகம் எழுத வேண்டும். நாங்கள் பின் நிற்கிறோம் தோழர்.

    பதிலளிநீக்கு
  5. என்னை பொறுத்தவரை இது பொருத்தமான தலைப்பு

    பதிலளிநீக்கு
  6. வருமுன் காப்போம் என்பதன் விகாரமாக இது தோன்றவில்லையா? மருந்து கம்பெனிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு இது ஒரு தங்கவேட்டை அல்லவா?

    மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் இறப்பதற்கு 100% வாய்ப்புகள் உள்ளது -- ஆகவே இன்றே தற்கொலை செய்து கொண்டு விடலாமா?

    ஏஞ்ஜலினா ஜோலியின் இந்த ஆபரேஷன் மற்றும் பேட்டியின் பின்னால் ஏதாவது ஒரு விளம்பரக் கம்பெனி இருந்தாலும் ஆச்சரியமில்லை.

    கணையாழி விற்பதற்காக அட்டையில் கவர்ச்சிப் படத்தைப் போடுதல் சரியாகுமா சமஸ்?

    பதிலளிநீக்கு
  7. மிரியாட் ஜெனடிக்ஸ் என்ற நிறுவனம் BRCA1 & BRCA2 என்ற இரண்டு ஜீன்களுக்கு பேடண்ட் வாங்கியுள்ளது -- ஆமாம் நமது உடம்பிலுள்ள இந்த இரண்டு ஜீன்களுக்குத்தான் இந்த நிறுவனம் பேடண்ட் வாங்கியுள்ளது. இதனை எதிர்த்த அமெரிக்கன் சிவில் லிபர்டீஸ் யுனியன் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணையில் உள்ளது,

    இந்த இரண்டு ஜீன்களும் எதற்கு என்று கேட்கிறீர்களா? மார்பகப் புற்று நோய் மற்றும் கருப்பை புற்று நோய் ஆகியவை வரக்கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளனவா என்று காட்டக்கூடியவை இந்த ஜீன்கள்.

    இதற்கான கட்டணத்தை திடீரென்று $4000ஆக உயர்த்தியுள்ளது இந்த நிறுவனம். அது மட்டுமல்ல, இந்த ஜீன்களைப்பற்றி எந்த வித ஆராய்ச்சி அல்லது சோதனை யாரும் செய்யக் கூடாது என்பது இந்த பேடண்ட் கொடுக்கும் உரிமை. என்ன போங்கு இது?

    ஏஞ்சலினா ஜோலி இந்த சோதனையைத்தான் செய்து கொண்டு இந்த நிறுவனத்துக்குப் புகழ் தேடித்தந்துள்ளார். இதனை ஒரு சமூக சேவையாகத்தான் செய்துள்ளார், இதில் வியாபார அல்லது விளம்பர நோக்கமே இல்லை -- நம்புங்கள். மேலும் விவரங்களுக்கு நேற்றைய டைம்ஸ் ஆப் இந்தியா பாருங்கள்

    பதிலளிநீக்கு
  8. அன்புமிக்க அருண்...
    நவீன மருத்துவக் கண்டுபிடிப்புகள், பரிசோதனைகள், அவைபற்றிய செய்திகள் எல்லாவற்றுக்குப் பின்னணியிலும் மருந்து நிறுவனங்களின் ராட்சஷ லாபி இருக்கும் என்பதை நானும் முழுமையாக உணர்கிறேன். ஆகையால், உங்கள் கருத்துகளில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. வருமுன் காப்பது என்ற பெயரிலான பரிசோதனைகளின் அடிப்படையிலான சிகிச்சையிலேயே எனக்கு நம்பிக்கை இல்லை - அது மலிவான, இலவச சிகிச்சையாக இருப்பினும்கூட. ஆகையால், இந்த விஷயத்திலேயே நம்பிக்கை இல்லை என்பதைத் தெரிவித்துவிட்டதாலேயே இதன் பின்னணியில் உள்ள லாபிபற்றி கட்டுரையில் குறிப்பிடவில்லை (இது ஒரு நிமிஷக் கட்டுரை - ஏதேனும் ஒரு சிந்தனையை மட்டுமே குவித்து எழுதுவதை நோக்கமாகக் கொண்டது). எனினும், இதுகுறித்து ஒரு வரி இருந்திருப்பது முக்கியம் என்று இப்போது தோன்றுகிறது. ஆகையால், அந்த ஒரு வரியை அடைப்புக்குறிக்குள் சேர்க்கிறேன். தங்கள் பகிர்வுக்கு நன்றி.
    ஆனால், கணையாழி - கவர்ச்சிப்படம் ஒப்பீடு சரியல்ல. கட்டுரையின் தலைப்பு - நான் ஏற்கெனவே முகநூலில் குறிப்பிட்டுள்ளபடி, - கட்டுரை பேசும் உடல் அரசியலுக்காக வைக்கப்பட்டது (ஏஞ்சலினாவின் கண்ணியமான படமே இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளதை நீங்கள் கவனிக்குமாறும் கோருகிறேன் ). வேறு எந்த நோக்கமும் இல்லை.

    பதிலளிநீக்கு
  9. அன்புமிக்க அருண்...
    நவீன மருத்துவக் கண்டுபிடிப்புகள், பரிசோதனைகள், அவைபற்றிய செய்திகள் எல்லாவற்றுக்குப் பின்னணியிலும் மருந்து நிறுவனங்களின் ராட்சஷ லாபி இருக்கும் என்பதை நானும் முழுமையாக உணர்கிறேன். ஆகையால், உங்கள் கருத்துகளில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. வருமுன் காப்பது என்ற பெயரிலான பரிசோதனைகளின் அடிப்படையிலான சிகிச்சையிலேயே எனக்கு நம்பிக்கை இல்லை - அது மலிவான, இலவச சிகிச்சையாக இருப்பினும்கூட. ஆகையால், இந்த விஷயத்திலேயே நம்பிக்கை இல்லை என்பதைத் தெரிவித்துவிட்டதாலேயே இதன் பின்னணியில் உள்ள லாபிபற்றி கட்டுரையில் குறிப்பிடவில்லை (இது ஒரு நிமிஷக் கட்டுரை - ஏதேனும் ஒரு சிந்தனையை மட்டுமே குவித்து எழுதுவதை நோக்கமாகக் கொண்டது). எனினும், இதுகுறித்து ஒரு வரி இருந்திருப்பது முக்கியம் என்று இப்போது தோன்றுகிறது. ஆகையால், அந்த ஒரு வரியை அடைப்புக்குறிக்குள் சேர்க்கிறேன். தங்கள் பகிர்வுக்கு நன்றி.
    ஆனால், கணையாழி - கவர்ச்சிப்படம் ஒப்பீடு சரியல்ல. கட்டுரையின் தலைப்பு - நான் ஏற்கெனவே முகநூலில் குறிப்பிட்டுள்ளபடி, - கட்டுரை பேசும் உடல் அரசியலுக்காக வைக்கப்பட்டது (ஏஞ்சலினாவின் கண்ணியமான படமே இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளதை நீங்கள் கவனிக்குமாறும் கோருகிறேன் ). வேறு எந்த நோக்கமும் இல்லை.

    பதிலளிநீக்கு
  10. அன்புக்குரிய நண்பர் சமஸ், உங்களது சாப்பாட்டுப் புராணம் புத்தகத்தால் ஈர்க்கப்பட்டு, பின் ஏதோ ஒரு இடுகையின் மூலமாக உங்களது பதிவுகளைப் பின்தொடரலானேன். உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி. அதிலும் இந்தப் பதிவின் கடைசியிலுருந்து 3வது பத்தியில் வருமுன் காப்பதைப் பற்றி நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள், அது பற்றி என்னுடைய ஒத்த கருத்தையும் பதிவதற்கே நானும் மரணத்தைப் பற்றி பேசியிருந்தேன்.

    கணையாழி - கவர்ச்சிப் படம் ஒப்பீடு : மன்னிக்கவும், நீங்கள் இட்ட படம் ஜோலியின் கண்ணியமான ஒரு படம்தான் (ஜோலியை மிகவும் அழகாகக் காட்டும் படமும் கூட :-) ). அதில் சந்தேகமில்லை, ஆனால் இனி யாருடையவை? என்ற கேள்வி வரும்போது, கடந்த காலத்தில் என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியாது, அது தொடர்பான கற்பனைகளையும் தவிர்க்க இயலாதுதான். பிறர் மனத்தின் விகாரங்கள் என்று கூறலாம், ஆனால் நடிகை என்று வந்து விட்டால், நமது மனதிலுள்ள பிம்பம் இதுதான் என்பதை மறுக்க இயலாது.

    மறுபடியும், மிக்க நன்றி, மாற்றுக் கருத்துக்களுக்கும் இடம் கொடுத்து, மரியாதையுடன் பதில் கொடுப்பதற்கு.

    இன்னொன்றையும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், பட்டையணிந்தவரெல்லாம் மதச்சார்பின்மை பேசமுடியாது என்ற உங்கள் நண்பரொருவரின் கருத்துப்படி பார்த்தால், மதச்சார்பின்மை பேசுபவர்களெல்லாம் கடவுள் மறுப்புக் கொள்கையுடயவராகத்தான் இருக்க வேண்டும், அப்படிப் பார்த்தால், கிறிஸ்தவர்கள், முஸ்லீமகள் இன்ன பிற சிறுபான்மை மதத்தினர் யாவரும் மதச்சார்பின்மை பேச முடியாது, ஏனென்றால், கடவுளை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அவர்கள் அந்த மதத்திலே இருக்க முடியாது -- இந்து மதத்தில் மட்டுமே இது முடியும்.

    தொடரட்டும் உங்கள் உரத்த பரந்த சிந்தனை.

    பதிலளிநீக்கு
  11. என் மார்பகங்களை இழந்ததால் ஒரு பெண்ணாக எதையும் இழந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. இந்தக் கூற்றில் பெண் சுதந்திரத்துக்கு எதிரான கருத்துக்கள் மறை பொருளாக இருப்பதாக நான் உணர்கிறேன். ஜனனம் என்பது உயிரின் தொடர்ச்சி -- இந்த உரிமையும் வாய்ப்பும் பெண்களுக்கே கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்களே இல்லாமல் இனப்பெருக்கம் செய்யும் உயிரினங்கள் இந்த பூமியிலே உண்டு. ஆகவே, மார்பகங்கள் என்பது இந்த ஜனனம் என்ற பெரும் பொறுப்பிலே ஒரு முக்கியக் கடமையாற்றக் கூடிய ஒரு உறுப்பாகத்தான் நான் பார்க்கிறேன். இதை ஒரு கவர்ச்சிப் பொருளாகப் பார்ப்பவர்கள்தான் இது இல்லாவிட்டாலும் நான் பெண்தான் என்று பேசமுடியும். தாய்மைக்கு உரிய அடையாளமான மார்பகங்களை இழந்து விட்டதால் நான் எதையும் இழந்து விடவில்லை என்று கூறுவது எவ்வாறு சரியாகும்? பெண்ணென்றால் குழந்தை பெற்றுக் கொள்ளத்தானா என்று சண்டைக்கு யாரும் வரவேண்டாம் -- பெண்ணென்றால் குழந்தை பெற்றுக் கொள்ளத்தான் என்று நான் கூறவில்லை, மாறாக, பெண்தான் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என்றுதான் கூறுகிறேன். ஆணும் பெண்ணும் எப்போதுமே complementing each other. இல்லாவிடில் எல்லாமே ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இயற்கை நம்மைப் படைத்திருக்கலாமல்லவா? ஆணும் பெண்ணும் வித்தியாசப்படுவது என்பது தவிர்க்க முடியாதது. இருவரும் சமமல்ல என்று சொல்லும்போது ஒருவர் உயர்வு ஒருவர் தாழ்வு என்று சொல்லவில்லை, ரோஜாவும் ஐஸ்கிரீமும் சமமல்ல, ஆனால் இதில் எது உயர்வு எது தாழ்வு என்று சொல்ல முடியுமா? அது போலத்தான், சமமல்லாத இரண்டில் உயர்வு தாழ்வு இருக்க வேண்டும் என்று சொல்வது. புட்டிப்பால் கொடுப்பேன், இன்குபேட்டரில் வளர்ப்பேன் (வருங்காலங்களில் பெண் சுமக்காமல், செயற்கை முறை கருத்தரிப்பில், பத்து மாதங்களும் இன்குபேட்டரிலேயே குழந்தை பெற்றுக் கொள்ளும் முறையும் வரலாம்) என்றெல்லாம் கூறலாம், இயற்கையை எதிர்த்து நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு அடியும், நம்மை அழிவுக்கு இட்டுச்செல்லும் படிக்கட்டுகள்தான் என்பதை நாம் இப்போது புரிந்து கொள்ளாவிட்டாலும், இயற்கை நமக்கு இந்த உண்மையை உணர வைக்கும்.

    பதிலளிநீக்கு
  12. அன்பு நண்பருக்கு, இந்தத் தலைப்பு கவர்ச்சிக்காக வைக்கப்பட்டது என்று நான் கூறவில்லை, ஆனால் ஒரு ஷாக் வால்யூவினைத் தருவது தெரிகிறது, இன்று 140 எழுத்துக்களே பெரியதாகிப் போன நிலையில், மக்களைப்படிக்க வைக்க வைப்பது என்பது வெகு கடினம், ஆனால், உங்கள் எழுத்துக்களைத்தேடி வரும் நாங்கள் உங்கள் எழுத்துக்களுக்கு விளம்பரமோ அல்லது முன்னுரையோ தேவையில்லை என்று நினைக்கிறோம். சமஸ் என்னும் பிராண்ட் வேல்யூவே போதும், எல்லாம் சொல்லும்

    பதிலளிநீக்கு
  13. தோழர் சமஸ்,

    உங்களது கட்டுரைகளும், நடையும் மிகவும் அறிவு பூர்வமானவை. குறிப்பாக தங்களது பெண்ணிய கருத்துக்கள். ஆனால் நீங்களே இது போன்ற மூன்றாம் தரமான தலைப்பை தேர்ந்து எடுத்திருக்க வேண்டாம். நானும் பெண்ணியவாதி என்று கூறி கொண்டு, ஆழ் மனதில் ஆணாதிக்கத்தின் சாக்கடை கழிவுகளை நிரப்பி கொண்டு திரியும் சமூகம் இது.அவர்களை திருப்தி படுத்தவோ, அல்லது இக்கட்டுரையை படிக்க வைக்கவோ இந்த தலைப்பை வைத்தீர்களா ...??

    பெண்களை உடலாக பார்க்காமல், உயிராக, மனமாக, அறிவாக பார்க்க வேண்டும்.எத்தனை பேர் அப்படி இருகிறார்கள்??? விரல் விட்டு என்னும் அளவிலே தான் ....ஆனால் அக்கருத்தை தங்கள் கட்டுரை பிரதிபலிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.இனியாவது தலைப்பு மற்றவர்களை கவரவோ, படிக்க தூண்டுவதாகவோ இருக்க வேண்டும் என நினையாமல் உங்களது எதார்த்தமான கட்டுரைகளைப் போன்றே வையுங்கள்...

    ஏனெனில், பூக்கடைக்கு விளம்பரம் தேவை இல்லை.

    பதிலளிநீக்கு
  14. UNGA TOPICKA VACHCHU TAMILARKAL THALAYAI THIRUPITTEENGA PONGA..MOSAM SIR
    INFO UTHAVUM NICHYAM.

    பதிலளிநீக்கு
  15. Nice article Mr.Samas .We should appreciate Ms. Joli .for her confidence

    பதிலளிநீக்கு