மோடியின் தையல்காரர்!


விபின் சௌஹானும் ஜிதேந்திர சௌஹானும் தம்பி அண்ணன்கள். தங்களுடைய தையல் கடைக்கு ‘ஜேட் ப்ளூ’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அஹமதாபாத் ஆட்டோக்காரர்களிடம் கேட்டால், ‘மோடியின் தையல் கடை’ என்று சொல்லி வழிகாட்டுவார்கள் அல்லது கொண்டுபோய்விடுவார்கள். அஹமதாபாதில் மட்டும் அல்ல. குஜராத்துக்கு வெளியே நாக்பூர், உதய்பூர், ஜெய்பூர், புணே, ஹைதராபாத் என்று எங்கெல்லாம் ‘ஜேட் ப்ளூ’ கடைகள் இருக்கின்றனவோ எல்லாமே ‘மோடியின் தையல் கடைகள்’தாம். ‘ஜேட் ப்ளூ’ கடைக்காரர்களே அப்படிச் சொல்லித்தான் விளம்பரப்படுத்துகிறார்கள் என்று உள்ளூர்க்காரர்கள் சொல்கிறார்கள். மோடியின் நண்பர் தொழிலதிபர் அதானியும் ‘ஜேட் ப்ளூ’வின் வாடிக்கையாளர்தான்.



இரண்டு சௌஹான்களும் ஆரம்ப நாட்களில் கடைவீதியில் காஜா எடுக்கும் வேலை பார்த்திருக்கிறார்கள். எந்தத் தையல்காரர் சட்டைக்குப் பொத்தான் வைக்கக் கூப்பிடுகிறாரோ, அவருடைய கடை வாசலே அன்றைக்கு இவர்களுடைய கடை. கொஞ்ச காலம் கழித்து, 1981-ல் கொஞ்சம் துணிச்சலோடு, 250 சதுர அடியில் ஒரு இடத்தைப் பிடித்துக் கடை போட்டிருக்கிறார்கள். கடைக்கு அப்போது வைக்கப்பட்ட பெயர் ‘சுப்ரிமோ’. இதற்கு 8 வருடங்கள் கழித்து, அவர்கள் கடைக்கு நரேந்திர தாமோதர தாஸ் மோடி முதல்முறையாக வந்தார். ஆர்.எஸ்.எஸ். உறவு. முதல் முறை மோடிக்கு, வெள்ளை கதர் குர்தா தைத்துக்கொடுத்ததாகச் சொல்கிறார் விபின் சௌஹான். இன்று வரை மோடியின் குர்தாக்கள் இங்கேதான் தைக்கப்படுகின்றன. இடையில் 1995-ல் கடை 3,000 சதுர அடியில் விஸ்தரிக்கப்பட்டபோது பெயர் ‘ஜேட் ப்ளூ’ என்றானது. இப்போது 14,215 சதுர அடிக்கு விரிந்து கிடக்கிறது. வருட வியாபாரம் ரூ. 150 கோடி. கடையில் கிடைக்கும் ஏராளமான முன்னணி பிராண்டுகள் இடையே தங்கள் சொந்த பிராண்டுகளையும் வைத்திருக்கிறார்கள். முக்கியமான பிராண்ட் மோடி குர்தா. மோடியிடம் அனுமதி வாங்கிவிட்டுத்தான் இப்படிப் பெயர் வைத்தோம் என்கிறார்கள். பரஸ்பரம் விளம்பரம். ஒரு வருஷத்துக்கு முன்பு 25,000 மோடி குர்தாக்கள் போனதாம். இனி அதை 10 மடங்கு பெருக்க வேண்டும் என்கிறார் சௌஹான். ஆரம்ப நாட்களில், வெள்ளை கதர் குர்தாவில் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக மாறி இன்றைக்கு வந்தடைந்திருக்கும் மோடியின் ஆடை வண்ணப் பயணம் முழுவதற்கும் ‘ஜேட் ப்ளூ’வில் ஒவ்வொரு கதை உண்டு. ஆனால், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்தியப் பயணத்தின்போது, மோடி அணிந்திருந்த, ‘நரேந்திர தாமோதர தாஸ் மோடி’ என்று ஆடை முழுவதும் நெய்யப்பட்டிருந்த கோட்டின் ரகசியத்தை இங்கிருந்தும் பெற முடியவில்லை.


டை அலங்காரத்தையே ஒரு ஆளுமைப் பிரகடனமாகக் கருதும் தலைவர்கள் உலகம் முழுவதும் உண்டு. எல்லாக் காலத்திலும். நம் காலத்தில் ஆசியத் தலைவர்களில் ஆப்கனின் ஹமீத் கர்சாய் இதில் பெரும் பேர் வாங்கியவர். பல்கேரியாவின் போய்கோ பரிஸவ் தன்னை ஒரு ஆணழகனாகவே காட்டிக் கொண்டவர். மோடியின் 56 அங்குல மார்பைவிடவும் அகன்ற மார்பு இவருடையது என்று சொல்லலாம். கராத்தேவில் கருப்புப் பட்டை வாங்கியவர் என்பதை போய்கோ பரிஸவுடைய கை குலுக்கல் சொல்லும் என்று குலுக்கியவர்கள் சொல்வது உண்டு. எகிப்துடைய முபராக்கின் ஆடை அலங்காரம் அவ்வளவு பிரசித்தம் இல்லையென்றாலும், அவரும் தன் பெயரை நெய்த கோட்டைப் போட்டுக்கொண்டதுண்டு. பெண் தலைவர்களில் லைபீரியாவின் எலென் ஜான்ஸன் சர்லீஃப் கச்சிதமாக, கம்பீரமாக உடுத்துவார் என்பார்கள்; அர்ஜென்டினாவின் கிறிஸ்டினா பெர்னாண்டஸ் கீர்சனர் அரசியலில் அழகிக்கு உதாரணம் என்பார்கள். மறக்க முடியாதவர், தன்னுடைய கடைசிக் காலத்தில் மக்களால் தெருத்தெருவாக விரட்டிக் கொல்லப்பட்ட லிபியத் தலைவர் மம்மர் கடாஃபி. ஆடை அலங்காரத்தில் கடாபியை ஒரு பின்நவீனத்துவவாதி என்று தாராளமாகச் சொல்லலாம். ஒரு நாள் பழங்குடி அவதாரம் எடுப்பார். ஒரு நாள் ராணுவ அவதாரம் எடுப்பார்.

எப்படியும் இந்தப் பட்டியலில் ஒபாமாவுக்கு இடம் கிடைப்பது சிரமம்தான். திருமதி ஒபாமா சவாலான போட்டியாளர். ஆனால், டெல்லியில் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில், மோடி உடைகளை மாற்றிய வேகத்தைப் பார்த்து ஒபாமாவே கொஞ்சம் திகைத்துவிட்டதாகத்தான் சொல்கிறார்கள் ராஷ்டிரபதி பவன் சேவகர்கள். விருந்தின்போது ஒபாமாவே மோடியிடம் சொன்ன தாகவும் கேள்வி, “மிஷேல் மாதிரியே நீங்களும் ஆச்சரியப்படுத்துகிறீர்கள்” என்று. குடியரசு தின அணிவகுப்பில் மோடி அணிந்திருந்த ராஜஸ்தான் ‘பந்தினி’ தலைப்பாகைக்குக்கூட ஒபாமா ஆசைப்பட்டதாக ஒருவர் சொன்னார்.


ரு அமெரிக்க அதிபர் முதல் முறையாக இந்தியாவின் குடியரசு விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக வந்திருக்கிறார்; உலகின் இரு பெரும் ஜனநாயகங்கள் தோள் மீது கை போட்டு நெருக்கமாகப் பேசுகின்றன, அருகருகே உட்கார்ந்து டீ பரிமாறிக்கொள்கின்றன; ‘அணிசாராக் கொள்கை காலம் எல்லாம் நேருவோடு போய்விட்டது’ என்பதைப் பகிரங்கமாகச் சொல்லும் காலத்தில் அடியெடுத்துவைத்திருக்கிறோம்; அணுசக்தி யுகத்தின் உச்சத்தை நோக்கி நகர ஆரம்பிக்கிறோம்... இதையெல்லாம் விட்டுவிட்டு இப்போது பேச இதுதான் சேதியா? ஒரு பிரதமர் தன் விருப்பப்படி தன்னுடைய பெயரையே கோட்டில் நெய்து போட்டுக்கொள்ளக் கூடாதா? இதெல்லாம் ஒரு விவாதப் பொருளா?   கேட்கலாம்.

இந்திய வரலாற்றில் இது மிக முக்கியமான ஒரு நகர்வுதான். ஆனால், மூன்று நாட்கள் முழுவதுமாக என்ன நடந்தது என்ற கதை உண்மையாகவே யாருக்கும் முழுக்கத் தெரியவில்லை. முக்கியமாகப் பேசப்படும் ‘அணுசக்தி இழப்பீட்டு ஒப்பந்தம்’ நம்முடைய வாயில் வடையைச் செருகியிருப்பது பூடகமாகத் தெரிகிறது. விவரம் கேட்டு திக்விஜய் சிங் அறிக்கை விட்டிருக்கிறார். டி. ராஜா, மோடிக்கே கடிதம் எழுதியிருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர்களுக்கே இதுதான் நிலையென்றால், சாதாரணக் குடிமக்கள் என்ன செய்ய முடியும்?

நம்முடைய பிரதமருக்குத் தெரியும், எது விவாதப் பொருளாக இருக்க வேண்டும் என்று. சும்மாவா தன் பெயரை நெய்த கோட்டைப் போடுகிறார்? அவருக்குத் தெரியும். விபின் சௌஹானிடம் ஒரு முறை மோடி சொன்னாராம், “மூன்று விஷயங்களில் நான் சமரசம் செய்துகொள்ள மாட்டேன்: 1. பார்வை 2. குரல் 3. உடை.”

பெரிய மனிதர்கள் காரண காரியம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டார்கள்.

சவுதி மன்னர் அப்துல்லா இறந்துபோனதால், ஒபாமா தம்பதி தாஜ்மஹாலைப் பார்க்க ஆக்ரா போகவில்லை. ஒபாமா தம்பதி ஆக்ராவைப் பார்க்கப் போகும்போது, சாலைகள் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நம்முடைய அரசாங்கம் ரொம்ப மெனக்கெட்டிருந்தது. ஒரு நாளைக்கு ரூ. 300 கூலியாகக் கொடுத்து 600 பேரைச் சாலைகளைத் தினமும் கழுவிவிடச் சொல்லியிருந்தது. உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், ஒபாமா தம்பதியை வரவேற்கும் வாய்ப்பு நழுவிவிட்டதாக வருத்தம் தெரிவித்திருக்கிறார்.சாலைத் தொழிலாளர்கள் அதைவிடவும் வருத்தம் அடைந்திருப்பார்கள். கிடைத்த ஓரிரு நாள் வேலையும் பாதியில் போய்விட்ட துயரம்தான்.

ஒரு சமையல்காரரின் பேரன் ஒரு நாட்டின் அதிபராவதும் ஒரு டீக்கடைக்காரரின் மகன் ஒரு நாட்டின் பிரதமராவதும் அமெரிக்காவிலும் இந்தியாவிலும்தான் சாத்தியம் என்று பேசியிருக்கிறார் ஒபாமா. கூடவே, கடைசி நாள் அன்று, “பன்மைத்துவம்தான் நமது பலம். இந்தியத் துணைக் கண்டத்தில் மதரீதியாகப் பிரிவினை கூடாது. நாடு ஒற்றுமையாக இருந்தால்தான் வெற்றிகள் குவியும்” என்றெல்லாம் பேசியிருக்கிறார். வெறும் சம்பிரதாயமாகத் தெரியவில்லை.

பெரிய மனிதர்கள் காரண காரியம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டார்கள்!

ஜனவரி, 2015, ’தி இந்து’

1 கருத்து: