உலகில் உள்ள எல்லாத் தீமைகளையும் எப்படி முடிவுக்குக் கொண்டுவருவது? இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் துப்பாக்கித் தோட்டாக்கள் மூலமாகவே சாதித்து விடலாம் என்று நம்புவதாகத் தோன்றுகிறது.
தமிழ் சினிமாவின் போலீஸ் பட அபத்த வரலாறு தெரியாததா, இருக்கும் ஆயிரத்தெட்டு பஞ்சாயத்துகளுக்கு நடுவே இதெல்லாம் ஒரு பிரச்சினையா என்று உதறிவிட்டுப் போக முடியவில்லை. இயக்குநர் ஹரி பாணி படங்களாக இருந்தால், அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. அவருடைய நாயகன்கள் தங்களைப் பற்றிய அறிவிப்புகளைத் தாங்களே அறிவித்துவிடுகிறவர்கள்: “நான் போலீஸ் இல்லடா; பொறுக்கி.”
ஒருவிதமான மேட்டிமைத்தனத்தோடும் போலி அறிவு ஜீவித்தன்மையோடும் கட்டமைக்கப்படும் கௌதமின் படங்களையும் சரி, அவை முன்வைக்கும் நியாயங்களையும் சரி... அப்படி ஒதுக்கிவிட முடியவில்லை. பார்வையாளனின் உளவியலில் ஊடுருவி பெரும்பான்மைவாதத்தோடு குலைத்துகொள்ளும் அவை சமூகத்தின் ஒரு தரப்பின் குரலாக உருமாறுகின்றன; ஒரு தரப்பின் மீது வெறுப்பை உமிழ்கின்றன; உண்மையான அரசியலை மூடி மறைக்கின்றன.
கௌதமின் முதல் போலீஸ் படமான ‘காக்க காக்க’ 2003-ல் வெளியானபோது அதை, முக்கியமான போலீஸ் படங்களில் ஒன்று என்று எழுதியவர்கள் உண்டு. போலீஸ் அதிகாரியான அதன் நாயகன் அன்புச்செல்வன் ஒரு கொலையைச் செய்துவிட்டு, அந்த என்கவுன்ட்டருக்கான நியாயமாக உச்சரிக்கும் வார்த்தைகள் இவை:
“அரெஸ்ட் பண்ணினா கவர்மென்ட்டுக்குத் தேவையில்லாத செலவு. ஒரு வண்டி எடுக்கணும். அதுக்கு டீசல் ஊத்தணும். நம்ம ஆளுங்க யூனிஃபார்மோட நாலு பேர் அதுக்கு பந்தோபஸ்து வேற. கோர்ட்டு, ஜட்ஜு... இப்ப ஒரேயொரு புல்லட் செலவு. என் செலவு. வெறும் அம்பது ரூபா. தேவி சந்தோஷப்படுவாள்ல? போட்டோம்ல?”
இந்த என்கவுன்ட்டர்களுக்காக மனித உரிமை ஆணைய விசாரணையை எதிர்கொள்ளும்போது விசாரணை அதிகாரியை நோக்கி அவன் சொல்வான்:
“மனுஷங்களுக்குத்தான் மனித உரிமை. எங்களைப் பொறுத்தவரைக்கும் இவங்க மூணு பேரும் மனுஷங்களே இல்லை. எங்களுக்குத் தண்டனை கொடுக்குறதுன்னு நெனைச்சீங்கன்னா, மிருகவதைத் தடுப்புச் சட்டத்துல தண்டனை கொடுங்க. ஏத்துக்குறோம்.” இதிலிருந்து 3 ஆண்டுகள் கழித்து அவருடைய அடுத்த போலீஸ் படமான ‘வேட்டையாடு விளையாடு’ வெளியானது.
அதிலிருந்து 8 வருஷங்கள் கழித்து, இப்போது அவருடைய அடுத்த போலீஸ் படமான ‘என்னை அறிந்தால்...’ வெளியாகியிருக்கிறது. இந்த 3 படங்களையும் பார்த்த எவரும் ஒரு விஷயத்தைக் கண்டுகொள்வார்கள்: கௌதமிடம் ஒரு போலீஸ் அதிகாரியின் கதை இருக்கிறது. அதையே அங்கே கொஞ்சம் இழுத்து, இங்கே கொஞ்சம் நீட்டி, இடையில் கொஞ்சம் வெட்டி கொஞ்சம் சேர்த்து சூர்யா, கமல்ஹாசன், அஜித் என்று வெவ்வேறு ஆட்கள் வழியே தருகிறார்.
நம்முடைய பிரச்சினை அதுவல்ல. இந்த இடைப்பட்ட 11 ஆண்டு காலகட்டத்தில் அந்த போலீஸ் அதிகாரி இம்மியளவுகூட மேல் நோக்கி நகரவில்லை. மேலும் மேலும் கொடூரமானவராக மாறுகிறார். மேலும் மேலும் கொடூரமான நியாயங்களைப் பேசுகிறார். முக்கியமாக, ஒரு சமூகம் எந்தப் பிரிவினரைக் கருணையுடன் அணுக வேண்டுமோ, அந்தப் பிரிவினர் மீது - சமூகத்தின் விளிம்பு நிலையில் இருப்பவர்கள் மீது - வெறுப்பை உமிழ்வதுடன் ஈவிரக்கம் இல்லாமல் ஏனையோரும் காழ்ப்பை உமிழ்ந்து வெறுத்து ஒதுக்கத் தூண்டுகிறார்.
அஜித் நடித்திருக்கும் ‘என்னை அறிந்தால்...’ படத்தின் ஒரு பத்திக் கதை இது. ‘பாடப் புத்தகங்களைத் தாண்டி வெளியே வா, உலகம் சுற்று, உன்னையறிந்துகொள்’ என்று முழுச் சுதந்திரம் தரும் அன்பான அப்பாவின் கொலைக்குப் பழி தீர்க்க நினைக்கிறான் சிறுவன் சத்யதேவ். அவன் முன்னே இரண்டு வழிகள். ஒன்று, அப்பாவைக் கொன்றவனைப் போலவே ஒரு தாதாவாவது; மற்றொன்று, போலீஸாவது. டிவியில் ரஜினியின் ‘மூன்று முகம்’ அலெக்ஸ்பாண்டியனைப் பார்ப்பவன் போலீஸாக முடிவெடுக்கிறான். இப்படி ஒரு ஐ.பி.எஸ். அதிகாரியாகும் அவன், தன் போலீஸ் வாழ்வில் எதிர்கொள்பவர்களையெல்லாம் போட்டுத்தள்ளுவதே கதை.
உச்சகட்டத்தில் உடல் உறுப்புக் கொள்ளைக் கும்பலை ஒழிக்கிறான். இடையில், ஒரு குழந்தையுடன் விவாகரத்தான ஒரு நடனமங்கையைக் காதலிக்கிறான். அவள் முந்தையவனுக்குப் பெற்ற குழந்தையைத் தன்னுடைய குழந்தையாக வரித்துக்கொண்டு அந்தக் குழந்தையைக் கொண்டாடுகிறான். அதற்காக தன் வாழ்க்கையையே மாற்றிக்கொள்கிறான். கௌதமுடைய முந்தைய படங்களில் நாயகன்கள் எப்படித் தங்களைச் சார்ந்தோரிடம் அன்பையும் காதலையும் நேசத்தையும் பாசத்தையும் பொழிவார்களோ அப்படியே... ஆனால், மறுபக்கம் அவன் ஒவ்வொரு நாளும் பணி நிமித்தம் அணுகும் குற்றவாளிகளிடம் அவனுக்குத் துளியும் கருணை இல்லை.
ஏன்?
கௌதமின் திரையுலகம் அப்படி. கௌதமின் உலகத்தை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று வெள்ளை உலகம். கட்டுடல் வெள்ளை தேகம். கச்சிதமான உடைகள். நேர்த்தியான உடல்மொழி. உயர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அன்பானவர்கள். இன்னொன்று கருப்பு உலகம். இங்கே இருப்பவர்கள் துளியும் அன்பற்றவர்கள், கொடூரர்கள், சைக்கோக்கள், அவருடைய முதல் பட நாயகன் அன்புச்செல்வன் சொல்கிறபடி, ‘எல்லாம் பொறுக்கிகள், மொள்ளமாரிகள்...’ போட்டுத்தள்ளப்பட வேண்டியவர்கள்.
இந்த மனோபாவத்தை உளவியலில், கருப்பு வெள்ளை மனோபாவம் (டிகோடமி) என்பார்கள். ஒரு பிரிவினரை எல்லா மேன்மைகளோடும் இன்னொரு பிரிவினரை எல்லாக் கீழமைகளோடும் பொருத்திப் பார்ப்பது. கௌதமின் படங்கள் போலீஸ்காரர்களை முழு வெள்ளையாகச் சித்தரிக்கிறது; குற்றவாளிகளை முழுக் கருப்பாகச் சித்தரிக்கிறது.
ஆனால், உண்மை அப்படித்தான் இருக்கிறதா?
சென்னை தாம்பரம் பஸ் நிலையம். ரயில் நிலையத்தின் நுழைவாயிலும்கூட அது. இரவு நேரங்களில் அந்தப் பகுதியைக் கடக்கும்போதெல்லாம் ரோந்துப் பணியிலிருக்கும் அந்த போலீஸ்காரரின் குரல் கேட்கிறது: “டேய்... அங்கெ எவன்டா வண்டியில நிக்கிறது? மூஞ்சிய பேத்துருவன். கம்னாட்டி. தூக்கிட்டுப் போனேன்னா, உன்ன உள்ள தள்ளி மிதிச்சே கொன்னுருவன்... டே... வண்டிய எடுடா... நாயீ...”
ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்லும் இடம். மைக்கில் பேசுகிறார். எல்லோர் காதையும் அடைக்கிறது. யாருக்கும் உறுத்தவில்லை. அந்த அளவுக்கு காவல் துறையின் அதிகார துஷ்பிரயோகம் சகஜம் இங்கு.
தன் வாழ்நாளில் ஒரு முறை பாதிக்கப்பட்டவராக காவல் நிலையங்களுக்கோ, சிறைக்கோ சென்று பார்த்தவர்களுக்குத் தெரியும், அது எவ்வளவு மோசமான ஒரு இருட்டு உலகம் என்பது.
“எதோ ஒரு வாட்டி தெர்யாத பண்ணிட்டன்பா. பொண்டாட்டி புள்ளக்குட்டியோட ஒழுங்கா வாழ்ணனும்னுதான் தோண்து. பிள்ளைங்களை நல்லாப் படிக்கவெச்சி பெரிய ஆளாக்கணும்னுதான் நெனைக்கிறேன்; முடியலைபா; துரத்திக்கினேகிறாங்கோபா...” - நாம் குற்றவாளிகளாகப் பார்க்கும் பலரின் கதறல் இதுதான். அவர்களில் ஆகப் பெரும்பாலானோர் ஏங்குவதும் அவர்களைத் தவறான வழிகளில் இயக்குவதும், நமக்கு மிகச் சாதாரணமாகக் கிடைக்கும் வாழ்க்கையே அவர்களுக்கு என்றைக்கும் எட்டாத கனவாக இருப்பதுதான்.
கடந்த 11 வருஷங்களில் தன்னுடைய மூன்று படங்களிலுமே போலீஸ் அதிகாரிகளின் துணைவிகள் கொல்லப்படுவதாகக் காட்டியிருக்கிறார் கௌதம். அப்படி ஒரு சம்பவம் தமிழகத்தில் நடக்கவில்லை. ஆனால், இடைப்பட்ட அதே காலகட்டத்தில் போலீஸ்காரர்களால் என்கவுன்ட்டர்களில் மட்டும் 19 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்!
குற்றவாளிகளைப் பற்றி நாம் நிறையப் பேசுகிறோம். அவர்கள் குற்றச் சூழலை நோக்கித் தள்ளப்படுவதற்கான காரணிகளை நாம் விவாதிப்பதே இல்லை. இந்தியச் சூழலில், காலனிய ஆதிக்க மனோபாவ காவல் அமைப்புகளை விலக்கிவிட்டு குற்றங்களைப் பற்றிப் பேசுவது துளியும் அர்த்தம் இல்லாதது. உண்மையில் காவல் அமைப்புகளினால் இதுவரை சமூகத்துக்குக் கிடைத்திருக்கும் ஆக்கபூர்வமான பங்களிப்புகள் யாவற்றுக்கும் அதிலிருக்கும் கொஞ்சநஞ்ச மனிதாபிமானிகள்தான் காரணமே தவிர, துப்பாக்கித் தூக்கிகள் அல்லர்.
கௌதமின் ‘என்னை அறிந்தால்’ நாயகனின் தந்தை ஸ்கூட்டருக்குக்கூட முத்தம் கொடுத்து அதை ஸ்டார்ட் செய்பவர். அவ்வளவு அன்பானவரால் வளர்க்கப்படும் நாயகனே, தன் தந்தையின் சாவுக்குப் பின் ‘சமூக நீதிக்காக’ தாதாவாக யோசிக்கிறான் என்றால், காவல் துறை நினைத்தபோதெல்லாம் தூக்கிக்கொண்டு போய் துவைத்தெடுக்கும் குற்றவாளிகள் / அவர்கள் குழந்தைகள் மனநிலை எப்படி இருக்கும்?
சென்னையில் ஒரு பகுதிக்கு கிட்னிவாக்கம் என்றே பெயர் உண்டு, மருத்துவ உலகில். இங்குள்ள ஏழைகள் அவ்வளவு பேர் சிறுநீரகத்தைப் பறிகொடுத்திருக்கிறார்கள். உலகெங்கும் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேருக்கு உறுப்பு மாற்றுச் சிகிச்சை நடக்கிறது. இதில் இந்தியா போன்ற நாடுகளில் நடக்கும் சரிபாதிக்கும் மேலான உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகள் சட்ட விரோதமானவை. மிகப் பெரிய வலைப்பின்னலில் நடப்பது இந்தக் கொள்ளைத் தொழில். பின்னணியில் இருப்பவர்கள் சர்வ வல்லமை பெற்றவர்கள், அரசியல் அதிகாரத்துடன் மருத்துவமனைகளையும் தங்கள் கைப்பிடியில் வைத்திருப்பவர்கள்.
கௌதம் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கிறார். அந்தோ பரிதாபம். இங்கும் அடிமட்டத்திலிருந்து வரும் விக்டர் போன்ற அடியாளைத்தான் காரணமாக்குகிறார். விக்டர் போன்றவர்கள் இல்லாமல் இத்தகைய தொழில்கள் நடப்பதில்லை. ஆனால், அவர்களெல்லாம் தரகு வேலை பார்க்கும் எடுபிடிகளாகத்தான் இருக்க முடியும்; ஒரு மருத்துவமனையையும் பல மருத்துவர்களையும் அரசின் கண்காணிப்பு மையங்களையும் கைக்குள் வைத்து ஆட்டம் காட்டும் பெருமுதலாளிகளாக அல்ல.
விக்டர்களை உயிரோடு பிடித்து விசாரித்தால், அந்த முதலைகள் பிடிபடுவார்கள். விக்டர்களைத் தீர்த்துக் கட்டினால், விக்டர்களோடு கதை முடிந்துவிடும். ஆளும் வர்க்கம் என்கவுன்ட்டர்களை ஊக்குவிப்பதன் பின்னுள்ள நுட்பமான அரசியல் இதுதான். கௌதமின் மூன்று படங்களுமே அப்படிதான் முடிகின்றன. உண்மையான குற்றவாளிகளையும் அரசியலையும் நோக்கி அவை முன்நகர்வது இல்லை; அடிபொடிகளை மட்டுமே காரணமாக்கிவிட்டு முடிந்துவிடுகின்றன.
கௌதம்... எல்லோரிடத்திலும் அன்பு இருக்கும். அவ்வாறே வெறுப்பு, வன்மம், இயலாத்தன்மை, கருணை, அற்பத்தனங்கள், மகோன்னதங்கள்... எல்லாமுமே எல்லோரிடத்திலுமே கலந்திருக்கும். ஒரு நல்ல கலைஞனின் வேலை சமூகத்தில் உள்மனதில் புதைந்திருக்கும் கருணையை வெளிக்கொணர்ந்து விளிம்பு நிலையில் இருப்பவர்கள் மீது அவற்றை விரவச் செய்வதுதான். வெறுப்பையும் வன்மத்தையும் விதைப்பது அல்ல.
உச்சக் காட்சியில், சத்யதேவ் தன் காதலி கொல்லப்பட்டது போலவே விக்டரைப் பிச்சுவா கத்தியால் சீவித்தள்ளும்போது அரங்கம் அதிர்கிறது. உணர்ச்சி மேலிடக் கத்துபவர்களில் குழந்தைகளும் இருக்கிறார்கள். அவர்களில் எவரேனும் சின்ன வயது சத்யதேவ்போல தந்தையை இழந்தவர்கள் இருந்தால் என்னவாகும்?
கௌதம் கொஞ்சம் யோசிக்க வேண்டும்!
பிப். 2015, ‘தி இந்து’
Sumaar
பதிலளிநீக்குஅருமையான கட்டுரை, மிகவும் நுட்பமாக ஆராய்ந்து எழுதப்பட்டள்ளத-
பதிலளிநீக்குகொளதம் போன்றவர்கள் யோசிக்கத்தான் வேணடும் ஐயா
பதிலளிநீக்குஅருமையான கட்டுரை
உங்களைப் போன்று எழுத்தாளனாக விரும்புகிறேன்.
பதிலளிநீக்குதமிழ் திரை உலகம் குறித்த முன்னோடி விமர்சனம் இது! முக்கிய நாளிதழ்களில் தரமான சினிமா விமர்சனங்கள் வருவதில்லை. சமூக வலைத்தளங்கள் மட்டுமே இப் பணியைச் செய்துவருகின்றன. ஆனால் இவை பொதுக்கருத்தை உருவாக்குபவையாக மாறுவதில்லை. இந் நிலையில் முக்கிய நாளிதழில் இது போன்ற விமர்சனம் வருவது ஆரோக்கியமானது. தொடர்ந்து இது போன்ற விமர்சனங்கள் இடம் பெறவேண்டும். ஊடகங்களில் தொடர்ந்து பல முன்னெடுப்புகளை செய்து வருபவர் சமஸ். இது மற்றொரு முன்னெடுப்பு. ஹாட்ஸ் அப், சமஸ்!
பதிலளிநீக்குஒரு நல்ல கலைஞனின் வேலை சமூகத்தில் உள்மனதில் புதைந்திருக்கும் கருணையை வெளிக்கொணர்ந்து விளிம்பு நிலையில் இருப்பவர்கள் மீது அவற்றை விரவச் செய்வதுதான். வெறுப்பையும் வன்மத்தையும் விதைப்பது அல்ல.
பதிலளிநீக்குஇங்கு யாரை விளிம்பு நிலையில் இருப்பவர் என்பதை நீங்கள் சொல்லவேண்டும். இரண்டு மாத ஐ.டி கம்பெனியின் ஊதியம் வரவில்லை என்னில் நானும் அந்த விளம்பில் உள்ளவன் தான்.
சார் இங்க ரெண்டு வார படம் திரையில் ஓட வேண்டும் என்றால் பெரிய படங்களின் எண்ணிக்கை மற்றும் சிறய படத்தின் தரம் என்று பிரித்து பார்த்து பார்வையாளனை திரையரங்கிருக்கு வர வைப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை.
பெரிய இயக்குனர் சிறிய இயக்குனர் என்ற மதிப்பே இல்லாம தான் இப்ப படம் இருக்கு. இங்க கருணை எதிர் பாக்கலாமா... அதுவும் சினிமா காரங்க கிட்ட....
Perfect Analysis! Tamil Directors should think!
பதிலளிநீக்குஎன்கௌண்ட்டர்கள் என்ன காரணங்களுக்காக நடத்தப்படுகின்றன என்பது இங்கு படிக்காத பாமரனுக்குக் கூடத் தெரியும். சராசரி மனிதர்களை விடக் காவல்துறையினர் எப்பேர்ப்பட்ட நம்பத்தகாதவர்கள் என்பதும் சமூகத்துக்குத் தெரியும். கௌதம் போன்றோர் இந்த மூன்று அல்ல, இன்னும் இது போல் முந்நூறு படங்கள் எடுத்தாலும் உண்மையை மூடி மறைத்து விட முடியாது. காவல்துறையினர் பற்றிய பிம்பத்தையும் மாற்றி விட முடியாது. ஆனாலும் இந்த அளவுக்கு இந்த விதயத்தை நுட்பமாக அலசி விழிப்புணர்வை ஏற்படுத்தியமைக்கு நன்றி!
பதிலளிநீக்குVery deep Analysis . Nice.
பதிலளிநீக்கு.. எல்லோரிடத்திலும் அன்பு இருக்கும். அவ்வாறே வெறுப்பு, வன்மம், இயலாத்தன்மை, கருணை, அற்பத்தனங்கள், மகோன்னதங்கள்... எல்லாமுமே எல்லோரிடத்திலுமே கலந்திருக்கும். ஒரு நல்ல கலைஞனின் வேலை சமூகத்தில் உள்மனதில் புதைந்திருக்கும் கருணையை வெளிக்கொணர்ந்து விளிம்பு நிலையில் இருப்பவர்கள் மீது அவற்றை விரவச் செய்வதுதான். வெறுப்பையும் வன்மத்தையும் விதைப்பது அல்ல...
பதிலளிநீக்குசமுதாயத்திற்க்கு தன் படைப்பை முன்வைக்கும் ஒவ்வொருவரும் ஒரு திறந்த அழைப்பிதழை முன்வைக்கிறார்கள். அது அன்பையும், புரிதலையும், நேயத்தையும் பரிமாறுமா அல்லது பிளவையும், வெறுப்பையும் பதிய வைக்குமா என்று உணர்ந்து சரியானதைப் படைப்பின், அந்த மனம் ஒரு ஆக்க சக்தியின் ஊற்றாகும்...நன்றி சமஸ்!
ஆக்கப்பூர்வமான கட்டுரை...
பதிலளிநீக்குஎன்னைப் பொருத்தவரை அவர்கள் மனுசங்களே இல்ல... மிருகங்கள்.
ஆக்கப்பூர்வமான கருத்துக்கள்.
பதிலளிநீக்குஎன்னைப் பொருத்தவரை அவர்கள் மனுசங்களே இல்ல... மிருகங்கள்.
நமக்கும் கிடைக்குமா மிருக வதைத் தடுப்புச் சட்டத்தில் தண்டனை பெறுவதற்கான வாய்ப்பு...?