அபூர்வமான எழுத்து: அ.முத்துலிங்கம்

பத்திரிகை அலுவலகம் பரபரப்பாக இயங்கியது. செய்தியாளர் தன் மேசையில் ஒரு தாளில் தலைப்பை எழுதிவைத்துவிட்டு உட்கார்ந்திருந்தார். அதில் இருந்த வாசகம் இதுதான்: ‘புகைக்கூண்டில் சிக்கிய மாடு’.
ஆசிரியர் கேட்டார்: ”இது என்ன தலைப்பு?”
செய்தியாளர் சொன்னார்: “இந்தத் தலைப்பு கவர்ச்சியாக இருக்கிறது. எதற்கும் எழுதிவைத்துவிட்டு காத்திருக்கிறேன். ஒருநாள் உண்மையாக இப்படி நேரும்போது இந்த தலைப்பை உபயோகிக்கலாம் அல்லவா?”

இப்படியான சூழலில்தான் பத்திரிகை உலகம் இயங்குகிறது. முன்கூட்டியே எதையும் யோசித்துவைக்க வேண்டும். எல்லாமே அவசரம்தான். உடனுக்குடன் செய்தி தேவை. அடுத்த பத்திரிகை ஒன்றை எழுதுவதற்கு முன்னர் எழுதிவிடவேண்டும். எழுத்து நன்றாக அமைந்து வாசகரைக் கவர வேண்டும். எழுதுவதில் நம்பகத்தன்மை இல்லையென்றால், அது வாசகர்களைச் சென்றடையாது. ஆகவே அடுத்த சில நிமிடங்களில் அச்சுக்குப் போக இருக்கும் பத்திரிகைக்குத் தகுந்த ஆதாரங்களை திரட்டித் தரவேண்டும். இதுதான் ஒரு பத்திரிகையாளர் எதிர்கொள்ளும் தினசரி அவலம்.

*

கனடாவில் பிரபலமான பத்திரிகை ‘ரொறொன்ரோ ஸ்டார்’. காலையில் அநேகம் பேர்களின் கைகளில் அது காணப்படும். 25 வருடங்களாக அந்தப் பத்திரிகையில் ஆசிரியராக பணியாற்றியவரிடம், ‘ஒரு நல்ல பத்திரிகையாளருடைய இலக்கணம் என்ன?’ என்று கேட்டேன். அவர் இரண்டு வரிகளில் பதில் சொன்னார். ’எழுதுவது சுவாரஸ்யமாக இருக்க வேண்டும். எழுத்தில் உண்மை வெளிப்படவேண்டும்.’
சமஸின் கட்டுரைகளைத் தொகுப்பாகப் படித்தபோது எனக்குத் தோன்றியது அதுதான். அவருடைய எழுத்தில் இவை இரண்டும் இருந்தன.

நான் சமஸைச் சந்தித்தது கிடையாது; அவரிடம் பேசியதும் இல்லை. ஆனால், எப்பொழுதெல்லாம் சமஸ் கட்டுரைகள் என் கண்களில் படுகின்றனவோ அப்பொழுதெல்லாம் அவற்றைப் படித்துவிடுவேன். அதற்குக் காரணம் அவர் வாதங்களைத் திறமையாக அடுக்கி அதன் தர்க்க முடிவு நோக்கி வாசகர்களை நகர்த்திக்கொண்டு செல்லும் நேர்த்திதான். சமஸுடைய மொழிநடை அபூர்வமானது. ஆழமான ஆற்றை மேலே நின்று பார்த்தால் அது ஓடுவதே தெரியாது. அதுபோலத்தான் சமஸுடைய எழுத்தும். ஆர்ப்பாட்டமில்லாமல் ஆழத்தில் பாயும்.
ஒரு கட்டுரை. ’வரலாற்றில் நம்முடைய இடம் எது?’ என்று. உலகத்தில் எங்கே என்ன நடந்தாலும் இந்தியா மௌனம் காக்கும். இது ஒரு வழக்கமாகவே ஆகிவிட்டது. நியாயமான தரப்பை ஆதரிப்பது இல்லை; விரோதமான தரப்பை எதிர்ப்பதும் இல்லை. உலக விவகாரங்களில் இந்தியா தன் அபிப்பிராயத்தை வெளிப்படுத்த வேண்டும். காலம் அதைக் குறித்து வைத்திருக்கும். வரலாறு உருவாவது அப்படித்தான் என்று எழுதும் சமஸ் தன் கட்டுரையை இப்படி முடிக்கிறார்:

“அன்று சோவியத் ஒன்றியம் ஆப்கனை ஆக்கிரமித்தபோதும் சரி; நேற்று ஈழத்தில் தமிழினத்தை ராஜபக்ஷ கொன்றழித்தபோதும் சரி; இன்று ஏமனிலும் சிரியாவிலும் நடக்கும் படுகொலைகளின்போதும் சரி; நம்முடைய நிலைப்பாடு மௌனம்தான் என்றால், வரலாற்றில் நம்முடைய இடம் எது? கை கட்டி, வாய்ப் பொத்தி வேடிக்கை பார்த்திருப்பதுதான் நம்முடைய நிலைப்பாடு என்றால், ஜ.நா. சபையின் பாதுகாப்பு அவையில் நமக்கு எதற்கு நிரந்தர இடம்?”

இந்தியாவின் ஆத்மாவில் ஓங்கி அறைந்ததுபோல, ஒரு கேள்வியுடன் முடிகிறது கட்டுரை. ஆல்பெர்ட் ஐன்ஸ்டின் சொன்னது நினைவுக்கு வருகிறது: “ஒரு குற்றம் நடக்கும்போது நீ மௌனமாக இருந்தால் அந்தக் குற்றத்தில் நீயும் பங்கெடுத்தவன் ஆகிறாய்.”

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் சில வருடங்களுக்கு முன்னர் சென்னையில் ஒரு விருது விழா ஏற்பாடு செய்திருந்தது. கனடாவில் இருந்து ஏற்பாட்டாளர்கள் சென்னைக்குப் போயிருந்தார்கள். விழாவுக்கு எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், பார்வையாளர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பலரும் வருகை தந்திருந்தனர். விழா முடிந்த பிறகு ஏற்பாட்டாளர்களிடம் பத்திரிகையாளர்கள் ‘உறைக்காக’ வரிசையாக நின்றனர். ஏற்பாடு செய்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை; அப்படி ஒரு வழக்கம் இருப்பதே அவர்களுக்குத் தெரியாது. உறை கொடுக்கவில்லை. விழா செய்தியும் ஊடகங்களில் வரவில்லை.

இந்த விசயத்தைத்தான் சமஸ் ‘ஆளுக்கொரு செய்தி … ஜமாய்’ கட்டுரையில் வெளிப்படையாக எழுதியிருக்கிறார்.
“இந்திய அரசியல்வாதிகள் ஊழலில் திளைத்திருக்கிறார்கள். இந்திய அதிகாரிகளும் ஊழலில் திளைக்கிறார்கள். இப்போது மக்களும் ஊழல் பணத்தில் பங்கு கேட்கிறார்கள். எல்லோருமே கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் ஊடக வெளிச்சத்துக்கு ஏங்குகிறார்கள்’ என்று ஆத்திரத்துடன் பதிவுசெய்கிறார் சமஸ்.

ஒரு பத்திரிகையாளராக இருந்துகொண்டு இப்படி ஒரு கட்டுரை எழுதுவதற்கு எத்தனை துணிச்சல் வேண்டும் என்று தோன்றுகிறது. இந்தியப் பத்திரிகைகளின் கேவலமான முகத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார்.
இப்படி சமஸுடைய ஒவ்வொரு கட்டுரையைப் பற்றியும் சொல்ல நிறைய இருக்கிறது. இட வசதி கருதி எல்லாவற்றையும் இங்கே எழுத முடியவில்லை.

சமஸ் கட்டுரைகளைப் படிக்கும் முன்னர், அவர் எழுதும் விசயத்தைப் பற்றி உங்களுக்கு ஒரு கருத்தும் இல்லாமல் இருக்கலாம் அல்லது எதிர்க் கருத்து இருக்கலாம். கட்டுரை முடிவுக்கு வரும்போது அவர் தன் எழுத்தாற்றலால் உங்களைத் தன் கருத்துக்கு ஏற்ப மாற்றியிருப்பார். கட்டுரையை வாசிக்க ஆரம்பித்த வாசகரை தன் எழுத்தின் வசீகரத்தால் அதன் கடைசி வரி வரை இழுத்துச் சென்றுவிடும் சமஸ், கட்டுரைகளில் கொடுக்கும் புள்ளிவிவரங்களும் சான்றுகளும் அவர் சொல்ல வந்த விசயத்தைச் சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிறுவிவிடுகின்றன. ‘இதற்குத்தான் ஜெயித்தீர்களா ஜெயலலிதா?’ கட்டுரை என்னை அதிர்ச்சியடைய வைத்தது. உலகின் பெரிய நூலகங்களில் ஒன்றான அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்ற ஜெயலலிதா உத்தரவிட்டபோது அதை எதிர்த்து சமஸ் எழுதிய கட்டுரை இது. ஜெயலலிதாவின் உத்தரவு வெளியான அன்று அண்ணா நூலகத்துக்குச் செல்லும் அவர், அங்கு தான் கண்ட காட்சியொன்றைக் கட்டுரையில் கொண்டுவருகிறார்:

“வறிய தோற்றத்தில் ஒரு சிறுமியும் செழுமையான தோற்றத்தில் ஒரு சிறுவனும் படித்துக்கொண்டிருந்த மேஜையை நோக்கிச் சென்றேன்.
‘உன் பேர் என்னப்பா?’
‘ஸ்ரீவத்சன்.’
‘வீடு எங்கே இருக்கு?’
‘மாம்பலம்.’
‘உன் பேர் என்னம்மா?’
‘அனுசூயா.’
‘உன் வீடு எங்கே இருக்கு?’
‘இங்கேதான் பக்கத்துல..’
‘எங்கே?’
(தயங்கித் தயங்கி..) ‘கோட்டூர்ல….சேரில…’
ஒரு சமூகத்தில் உண்மையான சமத்துவம் இப்படித்தான் ஆரம்பிக்கிறது. ஜெயலலிதாவின் முடிவு நேரடியாகத் தாக்குதல் நடத்தியிருப்பது இந்தச் சமத்துவத்தின் மீதுதான்.”

இரண்டே இரண்டு வரிகள். தான் சொல்ல வந்த கருத்தை மிக அழுத்தமாகச் சொல்லிவிடுகிறார் சமஸ். அதிர்ச்சி ஏற்படுகிறது. மாடு புகைக்கூண்டில் மாட்டியது என்று செய்தி வந்தால் எப்படியிருக்கும்? அப்படித்தான் இந்த அதிர்ச்சியும்!

புத்தகத்தை வாங்க, தொடர்புக்கு:
thuliveliyeedu@gmail.com
samasbooks@gmail.com
9444204501

2 கருத்துகள்:

 1. நூலினைப் பெற மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்
  பொங்கல் நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. அன்புடையீர், வணக்கம்.

  தங்களின் வலைத்தளம் இன்று வலைச்சரத்தில் என்னால் அடையாளம் காட்டி சிறப்பிக்கப்பட்டுள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


  இணைப்பு:- http://blogintamil.blogspot.in/2015/02/blog-post.html

  பதிலளிநீக்கு