படம்: பாலாஜி மஹேஷ்வர் |
மன்னார்குடியில் ‘மதராஸ் ஓட்டல்’என்று ஓர் உணவகம் உண்டு. அந்நாட்களில் அரசு இயக்கிய ‘திருவள்ளுவர்’ விரைவுப் பேருந்துகள் ‘சென்னை’ பெயரைச் சுமந்திருக்கும். மதராஸ், சென்னை எனும் வார்த்தைகள் அறிமுகமானது இப்படித்தான். ஒருநாள் அம்மாவிடம் கேட்டபோது, “தமிழ்ல சென்னை; அதைத்தான் இங்கிலீஷ்ல மெட்ராஸ்னு சொல்வாங்க” என்றார் சுருக்கமாக. பின்னாளில், சென்னை வரலாற்றைத் தமிழில் எழுதிய ஆய்வாளரான நரசய்யாவைச் சந்தித்தபோது அவர் சொன்னார், “சென்னப்பட்டினம் வேறு; மதராசப்பட்டினம் வேறு. இரண்டுமே ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பே இங்கே இருந்த கிராமங்கள். இந்தச் சோழ மண்டலக் கடற்கரையின் பல கிராமங்கள் குறைந்தது சில ஆயிரம் வருஷங்கள் பழமையானவை. ஆனால், ஆங்கிலேயர்கள் வந்த பிறகுதான் இந்த ஊரே உருவானதுபோல ஒரு தோற்றத்தை வந்தேறிகள் உருவாக்கிவிட்டார்கள்.”
சென்னை ரொம்ப நாட்கள் பீதிக்குரிய ஒரு ஊராகவே மனதில் நிலைத்திருந்தது. ஊரில் சென்னைக்கு பஸ் ஏற நிற்கும்போது மட்டும் பார்ப்பவர்கள் எல்லோரும், “பார்த்துடா, பத்திரம்டா” என்று உருகி உருகி எச்சரித்ததெல்லாம்கூடக் காரணமாக இருக்கலாம். எந்த அளவுக்கு அது பீதி தந்தது என்றால், பேருந்தில் துணிப்பையைக்கூடக் கீழே வைக்கப் பயந்து மடியிலேயே வைத்துக்கொண்டு வரக்கூடிய பீதியைத் தந்தது. வீட்டில் ஐந்நூறு ரூபாய் கொடுத்துவிட்டால், அதை பத்து, ஐம்பது ரூபாய் நோட்டுகளாக மாற்றி சட்டைப் பையில் இரண்டு நோட்டுகள், பேன்ட்டின் இரு பக்கப் பைகளிலும் இரண்டிரண்டு நோட்டுகள், பின் பையில் இரண்டு நோட்டுகள், இடுப்புப் பையில் ஒரு நோட்டு, துணி மூட்டையில் ஒரு நோட்டு என்று பதுக்கி, தடவித் தடவிப் பார்த்துக்கொண்டே வரும் அளவுக்குப் பீதியைத் தந்தது. சென்னை வந்து இறங்கிவிட்டால், யாராவது கொஞ்சம் உற்றுப்பார்த்தால், முகத்தில் பிளேடு துப்பிவிடுவார்களோ என்று தோன்றும். யாராவது கொஞ்ச தூரம் நம் பின்னாலேயே வருவதுபோல இருந்தால், ‘ஜேப்படித் திருடர்களாக இருப்பார்களோ? ’ என்று பயமாக இருக்கும். இரவு நேரங்களில் விடுதிகளில் தங்க நேர்ந்தால் தூக்கம் பிடிக்காது. இவ்வளவைத் தாண்டியும் அந்நாட்களிலேயே சென்னைக்காரர்களிடம் ஒரு விஷயம் பிடித்தது, நண்பர்களிடம் பீற்றிக்கொள்ளும் அளவுக்கு: “யார்கிட்ட விலாசம் கேட்டாலும் நின்னு நிதானமா சொல்றாய்ங்க மாப்புள.”
படிப்பு முடிந்து வேலை தேடும்போது பெரும்பாலான பத்திரிகைகள் சென்னையில் இருந்தாலும், மறந்தும்கூட சென்னைக்கு வரக் கூடாது என்பது ஒரு வைராக்கியமாகவே இருந்தது, பல ஆண்டுக் காலத்துக்கு. இப்போது சென்னைவாசிகள் மீது பயம் இல்லை. ஆனாலும், இந்த ஊர் பிடிக்கவில்லையே!
வெயில் நாள் என்றால் கொளுத்தும், மழை நாள் என்றால் மிதக்கும்; ஐயோ! எங்கு பார்த்தாலும் எறும்புகள்போல ஊர்ந்துகொண்டிருக்கும் ஜனம், சாக்கடை, புழுக்கம், புழுதி, புகை… என்ன ஊர் இது என்ற நினைப்பு. சென்னைதான் வாழ்க்கை என்றாகி, இந்த ஊரைத் தெருத் தெருவாகச் சுற்ற ஆரம்பித்தபோதுதான் புரிய ஆரம்பித்தது, என்ன மாதிரியான ஒரு ஊரை எப்படி நாசமாக்கிவிட்டோம் நாம்!
கடற்கரையை ஒட்டி ஒரு நகரம், அதனூடே இரு நதிகள், ஒரு கால்வாய், ஊர் விரிய விரிய ஏரிகள், இடை யிடையே சிறு மலைகள், சிறு வனங்கள்… ஒருகாலத்தில் கூவத்தில் அன்றாடம் படகில் சென்று மீன் பிடித்திருக்கிறார்கள். கரையில் நின்று காத்திருந்து மீன் வாங்கிச் சென்றிருக்கிறார்கள். படகுச் சவாரி நடந்திருக் கிறது. படகுப் போட்டி நடந்திருக்கிறது. இன்றைக்கும்கூட, கல்லாற்றின் கிளை நதியாகப் பிரியும் கேசாவரத்தில் கூவம் சாக்கடையாக இல்லை. ஒரு நதியை எவ்வளவு கழிவுகளைக் கொட்ட முடியுமோ கொட்டி நாம்தான் மாபெரும் சாக்கடையாக்கி இருக்கிறோம். கூழைக் கடாக்கள், நீலத்தாழைக் கோழிகள், நாமக் கோழிகள், முக்குளிப்பான்கள், நீலவாலிலைக் கோழிகள், பூநாரைகள் என்று பறவைகள் குவியும் பள்ளிக்கரணை போன்ற ஒரு சதுப்புநிலப் பகுதிக்கு அருகில் ஊர் குப்பையையெல்லாம் கொட்டி, கொளுத்திவிடும் மடத்தனத்தை நம்மைப் போல வேறு யாரேனும் செய்வார்களா!
தமிழகத்தில் எத்தனையோ கிராமங்களில் இன்றைக்கு நிலத்தடிநீர் மட்டம் ஆயிரம் அடிக்குக் கீழே சென்றுவிட்டது. சென்னைக்கு வந்த புதிதில் குடியேறிய சைதாப்பேட்டை வீட்டில், கிணறு உண்டு. பத்தடி ஆழத்தில் தண்ணீர் உண்டு. வீட்டின் எந்த மூலையில் மழைத்துளி விழுந்தாலும் கிணற்றில் வந்து விழும் வகையில் சேகர அமைப்பைக் கட்டியிருந்தார் வீட்டுக்காரர். கிணற்றடியில் வாராவாரம் மஞ்சள், குங்குமம் பூசி பூஜிப்பார். “நாம அதுக்கு மரியாதை செஞ்சா, அது நமக்கு மரியாதை செய்யும்” என்பார். இன்றைக்கும் பூஜை நடக்கிறது; கிணற்றில் தண்ணீர் இருக்கிறது.
சென்னைக்கு என்று ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது. பெருமைகொள்ளும் பன்மைக் கலாச்சாரம் இருக்கிறது. மனதைக் கொள்ளை கொள்ளும் பல இடங்கள் இங்கே இருக்கின்றன. அற்புதமான ஒரு வாழ்க்கை இங்கேயும் இருக்கிறது. கேட்காமலே உதவிக்கு வரக் கூடிய, உதவிவிட்டு அவர்கள் போக்கில் போகக்கூடிய அற்புதமான மனிதர்கள் இருக்கிறார்கள். எல்லாவற்றையும் தாண்டி சென்னையையும் அதுபற்றிய நினைவுகளையும் நாசமாக்குவது எது?
நம்முடைய மனதின் அடியாழத்தில் கசந்து புகையும் வெறுப்புதான் என்று தோன்றுகிறது. நமக்குச் சொந்த ஊரின் மீது ஒரு காதல் இருக்கிறது. இளவயதுக் காதல்போல. அந்தக் காதல் நீடித்து, கல்யாணமும் கூடியிருந்தால் சந்தோஷம்தான். ஆனால், பலருக்கு அது வாய்ப்பதில்லை. ஏன் வாய்ப்பதில்லை என்று கேட்டால், அரசாங்கக் கொள்கைகள் - அதிகாரக்குவிப்பு - நகர்மயமாக்கல் - சிற்றூர்கள் புறக்கணிப்பு - நம்முடைய குடும்பச் சூழல் என்று காரணங்களை அடுக்கலாம். எப்படியோ, நமக்குச் சோறு போடும் திராணிகூட இல்லாதவையாக நம்முடைய சொந்த ஊர்களை மாற்றிவிட்டோம். ஆனால், நிறைவேறாத அந்தக் காதல் தந்த சோகத்தையும் வலியையும் வெறுப்பாக்கி, நமக்குச் சோறு போடும் இந்த நகரின் மீது வெறுப்பைக் கக்குகிறோம். இந்த நகரில் ஒரு செடியை நடும் பிரியம் கூட நம்மிடம் இல்லையே ஏன்? இந்த ஊர் நமது இல்லை. இந்த ஊருக்கான கடமைகள் நமது இல்லை. இது பணம் சம்பாதிப்பதற்கான ஊர், சூறையாடுவதற்கான ஊர், கொள்ளையடிப்பதற்கான ஊர்.
எழுத்தாளர் ஜோ டி குரூஸுடன் சில மாதங்களுக்கு முன் கடற்கரைக்குச் சென்றிருந்தேன். இயல்பாக ஏறி ஒரு படகில் உட்கார்ந்த குரூஸ் கடலைப் பற்றிக் கதைக்க ஆரம்பித்தார். சென்னை கடல் பகுதியில் என்னென்ன மீன் வகைகள் கிடைக்கும், எங்கே ஆழம் அதிகம், எங்கே பாடு அதிகம், ஆழ்கடல் மீன் தொழில் எப்படி, கடல் தங்கல் எப்படி என்று அவர் பாட்டுக்குப் பேசிக்கொண்டிருந்தார். பேச்சினூடே சொன்னார், “எனக்கு எங்கூர் கடக்கரைக்கும் ராயபுரம் கடக்கரைக்கும் பெரிய வித்தியாசம் தெரியலீங்க.” கடலையே பார்த்துக்கொண்டிருந்தவர் கொஞ்சம் இடைவெளி விட்டு மீண்டும் சொன்னார்: “கடலு சோறு போடுற தாயின்னா, மண்ணும் அப்படித்தானே!”
ஆகஸ்ட், 2015, ‘தி இந்து’
கடலையும் மண்ணையும் நேசிக்கும் மாண்பு போற்றுதற்குரியதாகும்.
பதிலளிநீக்குI love chennai. அது சோறிட்ட ஊர் இல்லையா.. பற்பல பெருமைகள் கொண்ட நல்ல ஊர். நாம் தான் சீரழிக்கிறோம். சொந்த ஊர் வந்த ஊர் என்றெல்லாம் இல்லை நமக்கு ஒரு பொறுப்பின்மை இருக்கிறது. நான் மட்டும் செஞ்சா என்ன மாறிடப் போகுது என்று.. அது மாறியும் வருகிறது. வழக்கம் போல் அருமையான கட்டுரை. நன்றி.
பதிலளிநீக்குI love chennai. அது சோறிட்ட ஊர் இல்லையா.. பற்பல பெருமைகள் கொண்ட நல்ல ஊர். நாம் தான் சீரழிக்கிறோம். சொந்த ஊர் வந்த ஊர் என்றெல்லாம் இல்லை நமக்கு ஒரு பொறுப்பின்மை இருக்கிறது. நான் மட்டும் செஞ்சா என்ன மாறிடப் போகுது என்று.. அது மாறியும் வருகிறது. வழக்கம் போல் அருமையான கட்டுரை. நன்றி.
பதிலளிநீக்குI love chennai. அது சோறிட்ட ஊர் இல்லையா.. பற்பல பெருமைகள் கொண்ட நல்ல ஊர். நாம் தான் சீரழிக்கிறோம். சொந்த ஊர் வந்த ஊர் என்றெல்லாம் இல்லை நமக்கு ஒரு பொறுப்பின்மை இருக்கிறது. நான் மட்டும் செஞ்சா என்ன மாறிடப் போகுது என்று.. அது மாறியும் வருகிறது. வழக்கம் போல் அருமையான கட்டுரை. நன்றி.
பதிலளிநீக்குநல்ல பதிவு. இருந்தாலும், சென்னையைப் பற்றி பொதுப்படையாக எழுதியிருப்பது போல் தோன்றுகிறது
பதிலளிநீக்குசென்னையை பற்றிய பதிவு பிரமிக்கவைக்கிறது... அருமை
பதிலளிநீக்குஅற்புதம் ஐயா! அற்புதம்!
பதிலளிநீக்கு"'சென்னை நாள்' என ஆண்டு தவறாமல் கொண்டுகிறீர்களே! அட, மடையர்களே! அப்படியானால், வெள்ளைக்காரன் வருவதற்கு முன் இங்கு என்ன வெறும் கடலா இருந்தது? அவனா கடலுக்குள்ளிருந்து இந்த நிலப்பகுதியை வெளியில் எடுத்துச் 'சென்னை' எனும் இந்தப் புதிய நிலத்தை உருவாக்கினான்? அவன் வருவதற்கு முன் இங்கு நம் முன்னோர்கள் வாழ்ந்ததில்லையா? இங்கே ஊர்கள் இருந்ததில்லையா? இந்த மண்ணுக்கென ஒரு நாகரிகமும் பண்பாடும் செழித்திருக்கவில்லையா?" என்கிற கேள்விகள் எனக்கும் பல ஆண்டுகளாக உண்டு. அதே அலைவரிசையில் இருப்பவர் நீங்களும். கடந்த ஆண்டு எழுதிய பதிவில், சென்னை நாள் கொண்டாடுவது எவ்வளவு மடத்தனம் என்பது பற்றியும், அதற்கு முன்பே இங்கு சென்னை என்கிற ஊர் எப்படிப்பட்ட நாகரிகத்துடன் இருந்தது என்பது பற்றியும் விலாவாரியாக எழுதியிருந்தீர்கள். இந்த ஆண்டு, அதே போல் இன்னொரு கருவூலப் பதிவு! சென்னைக்கு வேற்றூர்களிலிருந்து வந்து வாழ்பவர்களின் கண்ணோட்டத்திலிருந்து நீங்கள் எழுதியிருக்கும் இந்தப் பதிவு, கண்டிப்பாகப் பல்லாயிரம் பேர்களுக்கு அறிவுக் கண்ணையும், மனக்கண்ணையும் திறந்து வைப்பதாக இருக்கும். சென்னை மண்ணின் பழங்குடிகளுக்கும் உண்மையை உரைக்க வைக்கும்!
மிக்க நன்றி!
எல்லாம் சரிதான் ஆனால் வெள்ளையர்கள் வந்து அங்கு கோட்டை கட்டி கம்பனி உருவாக்கி நவீன துறைமுகம் கட்டாவிட்டால் இன்று இருப்பது போன்ற சென்னை மாநகரம் இருந்திருக்காது என்பதையும் சென்னையும் நமது மற்ற கடற்கரை ஊர்களைப் போலவோதான் இருந்திருக்கும் என்பதையும் கொஞ்சம் நினைத்துப்பார்க்கவும். நாம் நாகப்பட்டினதுக்கோ வேதாரன்யதுக்கோ பிறந்த தினம் கொண்டாடுவதில்லை .....
நீக்குYes. It is high time we thought of our duty towards the cities we live in and earn from, especially the one like chennai.
பதிலளிநீக்குThank you.
Chennai pole oru orey elaaaaaaaaaaaaaaaa...................... I like very muchhhhhhhhhhhhhhh.............
பதிலளிநீக்குNallathoru thagavalai sonnirgal " Chennaipattinam" , "Matharasapattina"
பதிலளிநீக்குNandri..................
Chennai pole oru orey elaaaaaaaaaaaaaaaa...................... I like very muchhhhhhhhhhhhhhh.............
பதிலளிநீக்குமிக அருமை! சென்னை பிடிக்காமல் தான் பல வருடங்கள் அங்கேயே தங்கி இருந்தும் மனதில் ஒட்டவில்லை. உங்கள் எழுத்தால் என் மனமும் மாற்றம் காண ஆரம்பிக்கிறது. ஊர் என்ன செய்யும்! ஊரை நாசமாக்கிய மனிதர்களை அன்றோ சொல்ல வேண்டும். அருமையான பதிவுக்கு நன்றி.
பதிலளிநீக்குஎல்லாம் சரிதான் ஆனால் வெள்ளையர்கள் வந்து அங்கு கோட்டை கட்டி கம்பனி உருவாக்கி நவீன துறைமுகம் கட்டாவிட்டால் இன்று இருப்பது போன்ற சென்னை மாநகரம் இருந்திருக்காது என்பதையும் சென்னையும் நமது மற்ற கடற்கரை ஊர்களைப் போலவோதான் இருந்திருக்கும் என்பதையும் கொஞ்சம் நினைத்துப்பார்க்கவும். நாம் நாகப்பட்டினதுக்கோ வேதாரன்யதுக்கோ பிறந்த தினம் கொண்டாடுவதில்லை .....
பதிலளிநீக்குசென்னை தற்போது தழும்புவதற்கும் இவையேதான் காரணம்., இல்லையா?!
பதிலளிநீக்குசுற்றுலா என என் வாழ்நாளில் வெளியூர்களுக்கு சென்றது பத்து எண்ணிக்கையைக்கூட தொடாது. நான்கு வருடம் சென்னையில் பணியாற்றியபோது நகரமய வாழ்க்கையில் ஒரு சலிப்பு இருந்தாலும் அவ்வப்போது சென்னையின் பன்முகத்தன்மையை ரசிக்கும்போது இந்த ஊரில் வாழ நான் கொடுத்துவைத்திருக்க வேண்டும் என்று தோன்றும். OMRல் அண்ணா சாலையில், express avenue liftல் பயணிக்கும்போது ஒரு பிரமிப்பு தோன்றும். PTC குடியிருப்பு நிறுத்தத்தில் இறங்கி ஒரு 10 அடி நடந்தால் போதும் நன்கு பழக்கப்பட்ட ஊர் போன்ற ஒரு உணர்வு. எங்கள் வீட்டுக்கு பின்னால் இருந்த நீர்நிரம்பிய குளத்தை (ஆழிகண்டீசுவரர் நகர், ஒக்கியம் துரைப்பாக்கம்) பார்க்கும்போதெல்லாம் ஆனந்தம். ஞாயிற்றுக் கிழமை அதிகாலை மாநகரப் பேருந்தில் ஒரு நாள் சலுகை பயணச்சீட்டை எடுத்துக்கொண்டு (ஆரம்பத்தில் 30 ரூபாய் இரவு 10 மணிவரை, பின்னர் 50 ரூபாய்க்கு கட்டணம் உயர்த்தப்பட்டு இரவு 12 மணிவரை நீட்டிக்கப்பட்டது.) அதிகாலையிலிருந்து நள்ளிரவுவரை ஒரே பயணச்சீட்டில் பயணம் செய்திருக்கிறேன். அதிகபட்சம் ஒரே நாளில் 290கிமீ சென்னையை பேருந்தில் சுற்றியிருக்கிறேன். முதன் முதலில் பார்த்தபோது பிராட்வே பேருந்து நிலையமாகட்டும் (பூ மார்கெட் பஸ் ஸ்டாண்ட்), செங்குன்றம், பழவேற்காடு, கண்ணகி நகர், கொளத்தூர், திருவள்ளூர், திருக்கழுக்குன்றம், எண்ணூர் என பல்வேறுதரப்பட்ட நிலப்பகுதியை பல்சுவை மனிதர்களை சந்தித்த நினைவுகள், அந்த பரவசம் என்றும் என் நினைவில் நீங்காதவை. I really miss Chennai. தற்போது கோவையின் அழகை ரசிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இங்குள்ள மாநகரப் பேருந்துகளில் முன்னிருக்கைகள் பெண்கள் இருக்கையாக இருப்பது மட்டும் பிடிக்கவில்லை. பின்னர் எப்படி ஊரின் அழகை ரசிப்பது?
பதிலளிநீக்குCan someone help me with the English word for "athikarakuvippu?"
பதிலளிநீக்குConcentration of Power
பதிலளிநீக்கு