ஆயிரக்கணக்கானோர் கூடிய யாகூப் மேமன் இறுதி ஊர்வலத்தைப் பத்தோடு ஒன்று பதினொன்று; அத்தோடு சேர்த்து இது ஒன்று என்று விட்டுவிட முடியுமா? இந்தியா அப்படி விட்டுவிட முடியாது என்று தோன்றுகிறது.
பெரியவர் அஷ்ரஃப் அலியிடம் பேசிக்கொண்டிருந்தேன். ஒன்றரை ஆண்டுக்கு முன் மும்பையில் சையத்னா முஹம்மது புரானுதீன் இறந்தபோது, பெரிய கூட்டம் கூட்டம் கூடியதை அவர் நினைவுகூர்ந்தார். “அவர் உலகெங்கும் உள்ள போரா முஸ்லிம்களின் பிரதிநிதி. குரு. ஐம்பதாயிரம் பேருக்கு மேல் அப்போது கூடினார்கள். நெரிசலில் பதினெட்டுப் பேர் இறந்தார்கள். யாகூப் மேமனுக்கோ, அவருடைய குடும்பத்தினருக்கோ அப்படியான மதம் / அமைப்பு சார்ந்த பெரிய பின்னணியெல்லாம் எதுவும் கிடையாது. அரசாங்கம் வெளிப்படையாக ஒரு கொடூரக் குற்றவாளியாக, எதிரியாகப் பாவித்தது. நகரம் முழுவதும் காவல் துறையின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்தது. யாகூப் மேமனை அனுதாபத்தோடு பார்த்தவர்கள் ஒவ்வொருவரும் கண்காணிக்கப்பட்டார்கள். அதையெல்லாம் தாண்டியும் யாகூப் மேமன் இறுதி ஊர்வலத்தில் பதினைந்தாயிரம் பேருக்கு மேல் திரண்டிருக்கிறார்கள்; பல இடங்களில் கடைகளை அடைத்திருந்தார்கள்.”
பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு, நாடு முழுக்க 2000 சொச்சம் பேர் செத்துப்போனார்கள். அயோத்தியை உள்ளடக்கிய, ‘பிற்போக்கு முகம்’ கொண்ட உத்தரப் பிரதேசத்தில்கூட அவ்வளவு பலிகள் இல்லை. நவீன இந்தியாவின் நாகரிக நுழைவாயில், பன்மைத்துவக் கலாச்சாரத்தின் அடையாள, பொருளாதாரத்தின் இதயம் என்றெல்லாம் சொல்லப்படும் மும்பையில்தான் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஒவ்வொரு நாளும் வெறுப்பும் வெறியும் ரத்தமும் சாவும் போட்டி போட்டு 900 மனிதர்களைக் கூறுபோட்டன. “அப்போதெல்லாம் காலையில் வீட்டை விட்டுக் கிளம்பும்போதே சாவுக்குத் தயாராகி வெளியே செல்வதுபோலத்தான் இருக்கும். பலர் தங்களுடைய பிள்ளைகளைப் பள்ளிக்கூடங்களுக்கே அனுப்பவில்லை. வீட்டைக் காலிசெய்துவிட்டு சொந்த ஊர் திரும்பியவர்கள் உண்டு. கலவரம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பிறகான ஆசுவாசமும் நீண்ட நாள் நீடிக்கவில்லை. தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. ஊரோடு போய்விடலாம் என்றெல்லாம் நினைத்தோம்.” - இன்றைக்கும் மும்பைவாசிகள் அந்த நாட்களை மறக்கவில்லை.
மும்பை தொடர்குண்டுவெடிப்பு வெறும் சில நூறு உயிர்களை இலக்காகக் கொண்டது அல்ல. பாபர் மசூதி இடிப்பு, அதன் தொடர்ச்சியாக நடந்த கலவரங்களின் பின்னணியில், தேசப் பிரிவினைக்குப் பின் நாடு தழுவிய ஒரு தொடர் இனக் கலவரங்களுக்கான விதையை இலக்காகக் கொண்ட சர்வதேச சதி அது. மும்பைக் கலவரங்களில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள். தொடர் குண்டுவெடிப்புகளிலும் முஸ்லிம்கள் செத்தார்கள். ஆனபோதிலும், பிரதானக் குற்றவாளிகள் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலேயே, தொடர்குண்டுவெடிப்புக்கான பழியும் அதற்கான பலியும் தங்கள் தலை மீது விழுமோ என்று தினம் தினம் பயந்து செத்துக்கொண்டிருந்தார்கள். எவரும் அந்நாட்களை மறந்துவிடவில்லை. பின், எப்படி மும்பை தொடர்குண்டுவெடிப்பில் தொடர்புடைய யாகூப் மேமனின் இறுதி ஊர்வலத்தில் இத்தனை பேர் திரண்டார்கள்? சமீப காலத்தில் இந்திய முஸ்லிம்களிடையே வேறு எவரின் மரணமும் இப்படி ஒரு தாக்கத்தை உருவாக்கவில்லை; அதற்கு முந்தைய நாள் காலமான, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உள்பட. இது இந்தியப் பொதுச் சமூகத்துக்குச் சொல்லும் செய்தி என்ன?
திரிபுரா ஆளுநர் ததாகத ராயாகவோ, பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சாக்ஷி மகராஜாகவோ, சிவ சேனையின் ஊதுகுழலான ‘சாம்னா’ ஆசிரியர் சஞ்சய் ரௌத்தாகவோ நாம் இருந்துவிட்டால் விவகாரத்தை எளிமையாக முடித்துவிடலாம்: “யாகூப் மேமன் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் ஒவ்வொருவரும் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள்; அவர்களில் பயங்கரவாதிகளும் அடக்கம். யாகூப் மேமனுக்குக் கருணை காட்டப்பட வேண்டும் என்று கோரியவர்கள் தேச விரோதிகள். எல்லோரும் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட வேண்டியவர்கள்.”
நாம் ததாகத ராயோ, சாக்ஷி மகராஜோ, சஞ்சய் ரௌத்தோ கிடையாது. நாம் கொஞ்சம் இந்த விவகாரத்தை நிதானமாகவும் ஆழமாகவும் யோசித்துதான் ஆக வேண்டும்: எது ஒரு சாதாரண முஸ்லிமை யாகூப் மேனனுடன் பொருத்திப்பார்க்க வைக்கிறது? இது சொல்லும் செய்தி என்ன?
நண்பர் அமீன் ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டினார். “யாகூப் குற்றவாளியா, இல்லையா; மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டுமா, வேண்டாமா என்பதையெல்லாம் தாண்டி யாகூப் மேமனைத் தூக்கிலிடுவதில் அரசாங்கம் காட்டிய அதீதமான ஆர்வமும் அவசரமும் அதில் உள்ள அரசியலும் அப்பட்டமாகத் தெரிந்தது. அவர் உயிரைக் காப்பதற்கான சட்டப் போராட்டங்கள் ஒவ்வொன்றின் மீதும் கடைசிக் கட்டத்தில் நம்முடைய அரசியல் - நீதி அமைப்புகள் உடனடியாகக் கொடுத்த அடுத்தடுத்த அடிகள் எவரையும் நிலைகுலைய வைப்பவை. காலையில் தூக்கு மேடையில் ஏற்றப்படும் ஒரு மனிதனின் குடும்பம் அதற்கு மூன்று மணி நேரம் முன்புவரை, கடைசி நாள் முழுவதும் நீதிமன்றத்தில் போராடிக்கொண்டிருக்கும் கொடுமை யாருக்கும் நேரக் கூடாதது அல்லவா? யாகூப் மேமன் பாரபட்சத்துக்கும் புறக்கணிப்புக்கும் உள்ளாக்கப்படும் உணர்வை அது எல்லோரிடத்திலும் உருவாக்கியது. ஒரு வாடகை வீட்டுக்கும் வேலைவாய்ப்புக்கும்கூட இங்கு முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பாரபட்சமும் புறக்கணிப்பும் யாகூப் மேமனோடு பொருத்திப் பார்க்கும் காரணிகளாயின.”
பாரபட்சம், புறக்கணிப்பு. இப்போதெல்லாம் முஸ்லிம் சமூகத்தினரிடத்தில் பேசும்போதெல்லாம் திரும்ப திரும்ப இந்த இரு வார்த்தைகளைக் கேட்க முடிகிறது. வெறுப்பு எத்தனை அபாயகரமான ஆயுதமோ, அதற்குக் கொஞ்சமும் குறைவில்லாதவை பாரபட்சமும் புறக்கணிப்பும் என்பார் காந்தி. நாம் எப்போது அவர்களுடைய இந்தக் குறைகளுக்குச் செவிகொடுக்கப்போகிறோம்?
இந்தியப் பொதுச் சமூகம் அடிப்படையில் சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல; பன்மைத்துவமே இந்த மண்ணின் உயிர்நாடி. ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு இணையாக, வெறும் 70 ஆயிரம் பேர் மட்டுமே வாழும் பார்சிகளும் 10 ஆயிரத்துக்கும் குறைவான எண்ணிக்கையைக் கொண்ட யூதர்களும்கூட இங்கு பெரிய குற்றச்சாட்டுகள் ஏதும் இல்லாமல் வாழ முடிகிறது. ஆனால், நாட்டின் இரண்டாவது பெரும் சமூகம் தொடர்ந்து அழுத்தத்தில் இருக்கிறது. இதை அப்படியே நீடிக்கவிட முடியாது. இங்குள்ள அமைப்பு எப்படி சட்டபூர்வமாக எல்லோருக்கும் சமமானதாக இருக்கிறது, நம்முடைய பந்தி பரிமாறல் முறை எப்படியானது என்பதெல்லாம் அல்ல முறையான பதில்; சாப்பிட்டவர் பசியாக இருக்கிறார்; அவருக்கான உணவு முறையாகப் போய் சேரவில்லை; அவருடைய பசி போக்கப்பட வேண்டும்; அவருடைய கஷ்டம் தீர்க்கப்பட வேண்டும்; அவர் சந்தோஷத்தை அவர் வழியே நாம் உணர வேண்டும்.
உலகிலேயே முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடுகளில், இன்றைக்கு மூன்றாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. 18 கோடிப் பேர். கிட்டத்தட்ட நைஜீரியாவின் ஒட்டுமொத்த மக்கள்தொகைக்கு இணையான எண்ணிக்கை இது. ஆனால், இந்திய முஸ்லிம்களின் உண்மையான அரசியலைக் கரிசனையுடன் பேசும், அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடு தழுவிய ஒரு அரசியல் தலைமை இன்றைக்கு இல்லை. அரசில், ஆட்சியில், அதிகாரத்தில் அவர்களுடைய விகிதாச்சாரம் மிகக் குறைவு. கடந்த இரண்டரை தசாப்த சர்வதேச அரசியல் அவர்களை அடையாள அரசியலிலும் தள்ளியிருக்கிறது. அவர்களிடத்திலும் சிக்கல்கள் இல்லாமல் இல்லை; பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. ஆனால், அவர்கள் நிறைய நெருக்கடிகளின் நடுவே இருக்கிறார்கள். நாம் கை கொடுக்க வேண்டும். நம்மில் ஒரு சகோதரனிடத்தில் நிம்மதி இல்லை என்றால், ஒட்டுமொத்த குடும்பத்தின் நிம்மதியையும் அவனுடைய அமைதியின்மை குலைக்கவே செய்யும். யாகூப் மேமனைப் பின்தொடர்ந்த நிழல்களிடம் சொல்ல நிறைய விஷயங்கள் இருக்கின்றன. இந்தியப் பொதுச் சமூகம் அவற்றுக்குக் காது கொடுக்க வேண்டும்!
ஆகஸ்ட் 2015
முஸ்லீம்கள் கமலா ஹாசனை ஏன் வெறுத்தார்கள் என்பதை ஆய்வு செய்தாள் நீங்கள் "நாம் அத்தனை பேரும் பயங்கரவாதிகளாக ஆக முடியாது!" எழுதி இருக்க மாட்டீர்கள். உங்களுக்கு நீங்களே நியாயம் கற்பிக்குறீர்கள். குற்றவாளி தண்டிக்க படவேண்டும் என்பதில் முஸ்லீம்கள் உங்களுடன் வேகமாக இருப்பார்கள். ஆனால் அநீதி இழைக்கப்படும்போது அதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளா மாட்டார்கள். உங்களில் கைகளில் முத்தமிட துடித்தேன். (ஹிந்துவில் தேடி பாருங்கள் முதல் வாசகம் அது தான்) உங்களை "சைவ அசைவ" கோபிநாத்துடன் பார்த்தவுடன் கைகளை தட்டினேன் நீங்கள் அங்கு வந்த டிரஸ் எந்த வகையிலும் எங்களை உங்களுடன் இருந்து தூர மாக்கவில்லை. உங்களுடைய கட்டுரையை சுட்டிக்காட்டி மார்க்ஸ் உடன் தனிப்பட்ட முறையில் உறவாடினேன் அவரும் மிகவும் வருத்தம் தெரிவித்தார். உங்கள் கைகளில் பேனா இருக்கிறது நியாத்தை எழுதுங்கள். உண்மையை எழுதுங்கள். இன்று மனுஷ புத்திரன் எழுதிருப்பார் ஏன் இந்த ஊடகங்கள் அந்த தீவிரவாதியை குறிப்பிட்டு //நான் இந்துக்களை கொள்ளவே வந்தேன் என்று// . அவன் அப்படியே கூறி இருந்தாலும் இப்போது கூற வேண்டுமா அவ்வாறே உங்கள் கட்டுரையும் இருந்தது. நீங்கள் எழுத்தாளர் சார். sorry Sir if I am wrong, you may correct me, i will be thankful
பதிலளிநீக்குhttp://ikhwanameer.blogspot.in/2015/07/blog-post_36.html
பதிலளிநீக்கு//வெறுப்பு எத்தனை அபாயகரமான ஆயுதமோ, அதற்குக் கொஞ்சமும் குறைவில்லாதவை பாரபட்சமும் புறக்கணிப்பும்//
பதிலளிநீக்குஅருமையான மேற்கோள் - ஆனால்
இதே அளவுகோல் எல்லோருக்கும் ஏன் பொருத்திப் பார்க்கப் படவில்லை?
அது ஏன் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் என்றால் தங்களை போன்ற மேதாவிலாச எழுத்தர்களுக்கு பொங்குகிறது. இதற்கு அற்ப விளம்பரம் என்று கற்பித்துக் கொள்ளலாமா?
இதே புறக்கணிப்பும் பாரபட்ச்சமும் முன்னேறிய சாதிகளாக அடையாளம் காட்டப் பட்ட சில பாவப் பட்ட சமூகங்கள் உள்ளன.
கல்வி, வேலைவாய்ப்பு என்று பல நிலைகளிலும் தங்கள் 'முன்னேறிய சாதி' என்ற முத்திரையால் புறந்தள்ளப்பட்டு வாழ்ந்து கெட்டவர்கள் என்ற அடைமொழியுடன் போராட்ட வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் முகமில்லா அப்பாவிகள்.
அவர்களுக்கு மத அமைப்புகளோ, சாதி அமைப்புகளோ, இன்னபிற பின்புலங்களோ (மேதாவிலாச எழுத்தர்கள் 'கருணை' உட்பட) இல்லாமல் ஒரு சுயமரியாதை வாழ்க்கை வாழ திண்டாடும் அந்த எளியவர்கள் தங்களை போன்ற மேதாவிகளின் பார்வையில் படுவதற்கு வாய்ப்பு இல்லை; ஏனென்றால் அவர்களுக்கு வாக்கு வங்கியோ, 'விருப்பம்' தெரிவிக்கும் ஆள் பலமோ இல்லை.
//யாகூப் மேமனுக்கோ, அவருடைய குடும்பத்தினருக்கோ அப்படியான மதம் / அமைப்பு சார்ந்த பெரிய பின்னணியெல்லாம் எதுவும் கிடையாது.//
- சிரிப்பு தான் வருகிறது.
இப்படிப் பட்ட அற்பமான பரப்புரைகள் மிகவும் வேடிக்கை வினோத சேர்க்கை.
நீங்கள் தங்களின் புத்திசாலித்தனத்தை தொடர்ந்து நிலைநாட்டுங்கள்.
very very correct.
நீக்கு