மது அரசியலும் மக்கள் அரசியலும்!

வரைப் பற்றிய முதல் அறிமுகமே, “கிறுக்கு, பைத்தியம்” என்ற வசைகளோடுதான் தொடங்கியது. அது சரி, எந்தச் சட்டை போட்டாலும், அந்தச் சட்டையில், ‘மது அருந்தாதீர்கள்; புகை பிடிக்காதீர்கள்; வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு' என்ற எழுத்துகளோடு நிற்கும் ஒரு மனுஷனை, அரசாங்கமே மது விற்கும் இந்த ஊரில் எப்படிச் சொல்வார்கள்?

டாக்டர் ஃபிராங்ளின் ஆசாத் காந்தியைப் பற்றி சேலத்தில் கேள்விப்படும் ஒவ்வொரு விஷயமும் ஆச்சரியமாக இருந்தது. “அவரு பேரு பாலகிருஷ்ணன். அவங்கப்பா கிருஷ்ணன் ஒரு காந்தியவாதி. காந்தி பைத்தியம் சின்ன வயசிலேயே இவரையும் புடிச்சிக்கிட்டு. மருத்துவம் படிச்சார். வைத்தியம் செஞ்சார். எம்மதமும் சம்மதம்னு சொல்லிக்கிட்டு, தன் பேரை ஃபிராங்ளின் ஆசாத் காந்தின்னு மாத்திக்கிட்டார். கிட்டத்தட்ட 30 வருஷமா இப்படித்தான். மதுக் கடை வாசல்ல போய் நிப்பார். ‘அய்யா, மது குடிக்காதீங்க, ஒரு வைத்தியனா சொல்றேன். உடம்பு நாசமாயிடும்; குடும்பம் சிதைஞ்சுடும். நாட்டுக்கும் கேடு. தயவுசெஞ்சு விட்டுடுங்க’ன்னு சொல்லிக் கையெடுத்துக் கும்பிட்டு, ஒவ்வொருத்தர் கால்லயா விழுவார். சில பேர் மாறியிருக்காங்க. பல பேர் திட்டிக்கிட்டே போவாங்க. ‘கிறுக்கா… பைத்தியக்காரா’ன்னு சொல்லி அடிக்கப்போனவங்களும் உண்டு. அவரு இதையெல்லாம் பத்திக் கவலைப்படுற ஆள் இல்லை. வயசு எண்பதைத் தாண்டும். ‘காந்தி குடில்’னு ஒரு ஆசிரமம்கூட உண்டு அவருக்கு.”

வாழ்க்கையில் ஏதோ ஒரு அம்சத்தில் காந்தியை வரித்துக்கொண்டவர்களுக்குப் பைத்தியம் பட்டம் எந்தச் சலனத்தையும் தராது. ஃபிராங்ளின் ஆசாத் காந்தியையும் அது சலனப்படுத்தவில்லை. “மதுவிலக்கு சாதாரணமான விஷயமில்லை. அதுவும் நம்மூரில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டைச் சார்ந்தவர்களுக்கும் சொந்தமாக மது ஆலைகள் இருக்கும்போது, யதார்த்தத்தில் அது எத்தனை கடினம் என்பது புரியாமல் இல்லை. ஆனாலும், ஒரு கொடியவன் மாபெரும் பலசாலி என்பதாலேயே, அவனை எதிர்க்காமல் இருந்துவிட முடியாது அல்லவா?” - இப்படித்தான் சொல்லிவிட்டுக் காரியங்களைத் தொடர்கிறார் ஃபிராங்ளின் ஆசாத் காந்தி.

மதுவுக்கு எதிரான போராட்டத்தின்போதே உயிர் துறந்த பெரியவர் சசிபெருமாளும் தன்னுடைய முன்னோடியான ஃபிராங்ளின் ஆசாத் காந்தியின் கண்ணோட்டத்தைத்தான் கொண்டிருந்தார். சசிபெருமாளின் உண்ணாவிரதப் போராட்டங்கள் பல முறை அவரைச் சாவுக்கு நெருக்கமாகக் கொண்டுசென்றிருக்கின்றன. கடைசிக் கட்டத்தில், கைதுசெய்யப்பட்டு, மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு, பலவந்தமாக மருந்துகள் - திரவ உணவுகள் செலுத்தப்பட்டுக் காப்பாற்றப்பட்டிருக்கிறார். அப்போதெல்லாம், “என்னங்க, என் உயிர் மேல காட்டுற அக்கறையைக்கூட இங்க யாரும் என் கோரிக்கை மேல காட்டுறதில்லீங்க” என்றே அலுத்துக்கொண்டிருக்கிறார். ஆனபோதிலும், இது விட்டுக்கொடுக்க முடியாத காரியம் என்றே அவர் நம்பினார். “நான் கிராமத்து ஆள். எனக்குத் தெரியும், நம்ம கிராமப்புறங்கள்லாம் இந்தக் குடியால எப்படி நாசமாகிக் கெடக்குன்னு. ஒரு நாளைக்கு சர்வ சாதாரணமா நூறு மூட்டை தூக்கிப்போடுறவன் நாலு மூட்டை சேர்த்தாப்புல தூக்கறதுக்குள்ள மூச்சுத் திணறி உட்கார்ந்திர்றான். மாசத்துக்கு ஒரு சாவு விழுது ஊருல, காமாலை பேருல. எத்தனை பேரு வயிறு வீங்கிக் கெடக்குது தெரியுங்களா? காந்தி லேசுபட்ட ஆள் இல்லீங்க. சாதிக்கு இணையா குடியை வைக்கிறார் அவர். குடி, தீண்டாமை ரெண்டும் நம்ம சமூகத்துக்குப் பெரிய எதிரிங்கிறார். அப்படின்னா, எவ்வளவு அபாயகரமானதா இருக்கும் இந்தக் குடி? எனக்கும் தெரியும், மதுவிலக்கு அவ்வளவு சாமானியமான காரியம் இல்ல. ஆனா, இதை அப்படியே விட்டுட்டா என்னாகும்? நாசமாயிடுங்க, சர்வ நாசமாயிடும். உயிரைக் கொடுத்தாவது இதைத் தடுத்து நிறுத்தணும்ங்க.”

சசிபெருமாள் சுட்டிக்காட்டியதில் பலர் கவனிக்கத் தவறுவது காமாலை. சமகாலத்தில் தமிழகத்தைச் சூறையாடும் கொள்ளைநோய்க் கூட்டமாக உருவெடுத்திருக்கின்றன கல்லீரல் நோய்கள். காமாலை என்ற ஒரே பெயருக்குள் மக்களால் அடைக்கப்பட்டுவிடும் இந்நோய்க் கூட்டத்தால், பாதிக்கப்படாதவர்களைக் கொண்ட தெருக்கள் இன்று தமிழகத்தில் அரிது. “இன்னும் இதன் விபரீதம் பெரிய அளவுக்கு வெளியே தெரியாமலிருப்பதன் பின்னணியில் அதிகார வர்க்கத்தின் கைங்கர்யம் உண்டு. டெங்கு காய்ச்சலால் மரணமடைபவர்களுக்கு டெங்கு மரணம் என்று சான்றிதழ் வாங்குவது இங்கு எவ்வளவு கடினமோ, அவ்வளவு கடினம் கல்லீரல் நோயாளிகள் அதன் காரணமாக மரணமடைந்தார்கள் என்று சான்றிதழ் வாங்குவது. தமிழகத்தில் மது கரை புரண்டோடும் இந்தக் காலகட்டத்தில்தான் இங்கு கல்லீரல் நோய் பாதிப்பு குறைவு என்று புள்ளிவிவரங்கள் கொடுக்கிறார்கள். எப்படி? உண்மையில், மதுவுக்குப் பெரிய விலை கொடுத்துக்கொண்டிருக்கிறோம் நாம்” என்கிறார்கள் மருத்துவர்கள்.

உலகெங்கும் மதுவிலக்கு பெரும்பாலும் தோல்வி அனுபவங்களையே தந்திருக்கிறது. அன்றைய ரஷ்யா 1914-ல் மதுவிலக்கை அமல்படுத்தியது. 1915-ல் ஐஸ்லாந்து, 1916-ல் நார்வே, 1919-ல் பின்லாந்து, 1920-ல் அமெரிக்கா என வரிசையாக மதுவிலக்கை அமல்படுத்தின. ஆனால், அரபு நாடுகள் நீங்கலாக எங்கும் மதுவை ரொம்பக் காலத்துக்கு முடக்கிவைக்க முடியவில்லை. ஒரே காரணம் மது வியாபாரத்தில் புரளும் பணம்; அது பின்நின்று இயக்கும் அரசியல். அதேசமயம், மதுவிலக்கு அமலிலிருந்த ஆண்டுகளில் இங்கெல்லாம் மக்களின் சுகாதாரத்திலும் பொருளாதாரத்திலும் வாழ்விலும் ஏற்பட்ட மாற்றங்கள் அபாரமானவை.

காந்திக்கு இந்தியா ஒரு ஜனநாயக நாடாக, மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்பதில் காட்டியதற்கு இணையான அக்கறை, இது மதுவற்ற நாடாக இருக்க வேண்டும் என்பதிலும் இருந்தது. அந்த அடிப்படையிலேயே இந்திய அரசியல் சட்டத்தின் அரசுக்கான வழிகாட்டுக் கொள்கைப் பிரிவில், 47-வது பிரிவில், “உடலைக் கெடுக்கும் மதுவையும் போதை மருந்துகளையும் மருத்துவம் நீங்கலாக ஏனைய நோக்கங்களுக்குப் பயன்படுத்தாமலிருக்க மதுவிலக்குக் கொள்கையை நம்முடைய அரசுகள் கடைப்பிடிக்க வேண்டும்” என்பது சேர்க்கப்பட்டது. நாட்டிலேயே இன்றைக்கு முழு மதுவிலக்கு அமலில் உள்ள ஒரே மாநிலம் குஜராத். குஜராத் ஒரு மாநிலமாக உருவான நாளிலிருந்து, கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக குஜராத்தில் மதுவிலக்கு அமலில் இருக்கிறது. குஜராத் அனுபவம் என்ன?

என்னுடைய குஜராத் நண்பர்களில் ஒருவர் பெரும் குடியர். அவருக்கான மது சேவையைத் தரும் இடம் அங்குள்ள எல்லைப் பாதுகாப்புப் படையினரின் முகாம். “மிலிட்டரி சரக்கு. நாலு மடங்கு விலை ஜாஸ்தி. உத்தரப் பிரதேசத்துல உருவாகுற ஒரு தாதா திருட்டு - கொள்ளையிலிருந்து தன் ராஜாங்கத்தைத் தொடங்குவான்னு சொல்வாங்க. மகாராஷ் டிர தாதாக்கள் ராஜாங்கம் கடத்தல்ல தொடங்கும். குஜராத் தாதாக்கள் ராஜாங்கம் கள்ளச்சாராயம் / சாராயக் கடத்தல்ல தொடங்கும். குஜராத்துல பல நூறு கோடி புழங்கும் தொழில் இது” என்பார். மக்களவைத் தேர்தலில் நாட்டிலேயே அதிகமாக குஜராத்தில்தான் - ரூ. 12.57 கோடி மதிப்புள்ள - மது பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த ஐந்து வருடங்களில் மட்டும் ரூ. 206 கோடி மதிப்புள்ள மது குஜராத்தில் போலீஸாரால் கைப்பற்றப்பட்டிருக்கிறது. எனினும், ஆண்டுக்குச் சில நூறு கோடிகள் மதுவில் புழங்கும் ஊர் எங்கே? ரூ. 28,000 கோடி புழங்கும் ஊர் எங்கே?

இன்றைக்கு குஜராத் உழைக்கும் மக்களில் கணிசமானோர் காலையில் ஒரு வேலை; மாலையில் ஒரு வேலை என்று இரு வேலைகளை மேற்கொள்கின்றனர். ஒரே வேலையில் இருப்பவர்களால் குறைந்தது 12 மணி நேரம் ஆயாசமின்றி உழைக்க முடிகிறது. தமிழகத்தில் இன்றைக்குப் பெரும்பான்மை உடல் உழைப்பு வேலைகளைப் பூர்த்திசெய்துகொண்டிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் அபாரமான உழைப்பு நமக்குத் தெரியும்; எங்கும் மதுக்கடைகளில் அவர்களைப் பார்க்க முடியாது. இரண்டுக்கும் தொடர்பு உண்டு.

நம்முடைய ஆதிக் கலாச்சாரத்திலேயே மதுவுக்கு இடம் உண்டு; சுதந்திரமான சமூகத்தில் மதுவுக்குத் தடை விதிப்பது தவறு என்பதெல்லாம் இங்கு பொருத்தமற்றது. ஆதியில் எவ்வளவோ மிருகத்தனங்களோடு சுற்றியிருக்கிறோம். இன்றைக்கும் அவற்றையெல்லாம் தூக்கிக்கொண்டேதான் திரிகிறோமா என்ன? மேலும், ஒரு சமூகம் எல்லா வகையிலும் சுதந்திரச் சமூகமாக இருக்கலாம். ஆனால், எங்கு சுய ஒழுங்குக்கும் சுயகட்டுப்பாட்டுக்கும் ஓரளவுக்கேனும் மதிப்பிருக்கிறதோ, அங்குதான் அது சாத்தியம். எப்போது கடை திறக்கும் என்று காத்திருந்து, ஓடிப்போய் பாட்டிலை வாங்கி, வெறும் வயிற்றில் அப்படியே அந்த ரசாயனத்தை ஊற்றிக்கொண்டு, சுவரில் இருக்கும் சுண்ணாம்பைச் சுரண்டி தொட்டுக்கையாக நக்கிக்கொண்டு, போதையில் அப்படியே மயங்கி பைத்தியங்களைப் போலத் திரியும் குடியர்களை ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கில் உருவாக்கிக்கொண்டிருக்கும் ஒரு சமூகத்துக்கு, குடியின் நியாயங்களைப் பற்றியெல்லாம் பேசுவதற்கு எதாவது தகுதி இருக்கிறதா என்ன?

சந்தை எதையும் நியாயப்படுத்தும். மக்களுக்கு அது தேவை இல்லை. அரசியல் எப்போது மக்களுக்கானதாக இல்லையோ, அப்போது அரசியலை மக்களே கையிலெடுப் பதைத் தவிர, வேறு வழியில்லை. சசிபெருமாள், டாக்டர் ஃபிராங்ளின் ஆசாத் காந்தி, மாணவி நந்தினி... காலம் இன்னும் நிறைய காந்திகளை உருவாக்கும்!

ஆகஸ்ட் 2015, ‘தி இந்து’

6 கருத்துகள்:

 1. சிந்திக்க வைக்கும் கட்டுரை, எத்தனை பேர் படித்தார்களோ?

  பதிலளிநீக்கு
 2. கட்டுரை விழிப்புணர்வு ...
  இளம் நெஞ்சங்கள் படிக்க வேண்டும்
  வாட்சப்பில் பகிர்கிறேன்
  அப்புறம்
  இங்கேயும்
  https://www.facebook.com/malartharu

  பதிலளிநீக்கு
 3. சந்தை எதையும் நியாயப்படுத்தும்- ஆழமாக சிந்திக்க வேண்டிய கருத்து.

  சிறந்த தகவல்கள் டாக்டர் பிராங்க்ளின் ஆசாத் காந்தி எனும் மாமனிதர் குறித்து, நன்றி

  பதிலளிநீக்கு
 4. Miga sariyana karuthu "Santhai ethaium niyaya paduthu" ethanai purinthu kondal Suya sinthanai valarum.

  பதிலளிநீக்கு
 5. //போதையில் அப்படியே மயங்கி பைத்தியங்களைப் போலத் திரியும் குடியர்களை ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கில் உருவாக்கிக்கொண்டிருக்கும் ஒரு சமூகத்துக்கு, குடியின் நியாயங்களைப் பற்றியெல்லாம் பேசுவதற்கு எதாவது தகுதி இருக்கிறதா என்ன?// - மதுவிலக்கைத் தமிழ்நாட்டில் எப்படி அமல்படுத்தலாம் எனும் கட்டுரையை எழுதி வைத்துவிட்டுக் கையோடு இதைப் படிக்கிறேன். ஆனாலும், அந்தக் கட்டுரையில் குடிப்பதற்குண்டான உரிமை பற்றி நான் பேசவேயில்லை. காரணம், அதற்கொரு தெளிவான பதில் எனக்குத் தெரியவில்லை. மேற்படி வரிகள் அந்தத் தெளிவைத் தந்தன. நன்றி!

  பதிலளிநீக்கு
 6. இந்தி படித்துவிட்டால் இந்தியாவெங்கும் கூலிக்கு அடிமை சேவகம் புரியலாம் என கூச்சலிடும் அறிவுக் குள்ளர்கள் சற்று சிந்திக்கலாம்.தமிழக தெருவெங்கும் இந்தி நாற்றமெடுப்பதை ....
  தமிழரின் கூடப் பிறந்த பழக்கம் குடிநோய் அல்ல அப்போதும் வெட்டியாய் உழைப்புச் சுரண்டல் மேற்கொண்டவர்களின் தீர்த்தத் தெளிவுதான் மது உழக்கும் மக்கள் குடிப்பதற்கு நேரமேது? பின்னர் தமிழகத்தில் குடி எங்கனம் குடிகொண்டது? உழைப்பதில் வல்லவன் தமிழன் அறிவில் தேர்ந்தவன் தமிழன் இவனை துரோகத்தந்த்தொடு அழிக்க செய்யப்பட சித்து விளையாட்டு ...நம்பிக்கெட்ட தமிழன் இன்று அழிந்து விழிப்பான் அப்போது எத்தர்கள் ஓடி ஒளிந்து கொள்வார்கள்.

  பதிலளிநீக்கு