மக்களின் முதல்வர்!


யா அத்தனை அழுக்காக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. தூசி, புகை, அழுக்கு, குப்பை, சாக்கடை. பண்டைய இந்தியாவில் பெரும் பேரரசை பிஹார் இயக்கியிருக்கலாம். நவீன இந்தியாவில் அது கிராமங்களின் தொகுப்பு. அமைதியான கிராமங்கள் அல்லது நகரங்கள் என்ற பெயரைக் கொண்ட அழுக்கான கிராமங்கள். அன்றைக்குப் பகலில் மின்சாரமே இல்லை. நம்மூர் மின்வெட்டு ஞாபகம் வந்தது. பிஹாரிகளோ, “எங்களுக்கு மின்வெட்டு ஒரு பிரச்சினை இல்லை. இருட்டிய பிறகு மின்சாரம் கிடைப்பதே இங்கே பெரிய விஷயம். அதுவும், நிதிஷ் ஆட்சிக்கு வந்ததால் கிடைத்தது” என்றார்கள். தமிழக ஜனத்தொகை 7 கோடி. பிஹார் ஜனத்தொகை 11 கோடி. தமிழக மின்நுகர்வு 12,000 மெகாவாட். பிஹார் மின்நுகர்வு 3,500 மெகாவாட். இது நிதிஷின் 10 ஆண்டு ஆட்சிக்குப் பிறகு. அப்படியென்றால், அதற்கு முன் பிஹார் எவ்வளவு இருட்டில் இருந்திருக்கும்?

சமகால இந்திய அரசியலில் ‘புனிதர்கள்’ அல்லது ‘முழுத் தூய்மையாளர்கள்’ என்று அரசியல்வாதிகளைத் தேடுவது கடினம். எனினும், அரசியல் லாப - நஷ்டக் கணக்குகள், கச்சடாக்கள் பொதுவாகிவிட்ட சூழலில், செயல்பாட்டின் அடிப்படையில் நிச்சயம் இன்றைய முதல்வர்களில் நிதிஷ் கொண்டாடப்பட வேண்டியவர்.


சகா ஷஃபி முன்னா சொன்னார், “அப்போதெல்லாம் சாயங்காலம் ஆறு மணிக்கு மேல் வெளியே ஆட்களைப் பார்க்க முடியாது. பயம். எங்கும் ரவுடிகள் ராஜ்ஜியம். கொஞ்சம் வசதி வந்துவிட்டால், நீங்கள் தனியாகப் பாதுகாப்புக்காக ஆள் போட்டுக்கொள்ள வேண்டும், துப்பாக்கியோடு. இல்லாவிட்டால் தூக்கிவிடுவார்கள். புதிதாக வீடு வாங்குகிறோம், கார் வாங்குகிறோம், தொழில் தொடங்குகிறோம் என்றால் தாதாக்களுக்குத் தனியே ‘ரங்தாரி’ கட்ட வேண்டும். எல்லாவற்றுக்கும் கப்பம்.” அவர் சொன்னது நகரங்களின் நிலை. கிராமங்கள் முழுக்க நிலச்சுவான்தார்கள் கைகளில் இருந்தன. அத்துக்கூலிக்குக் கொத்தடிமை வேலை. எதிர்த்தால், தீர்த்துக்கட்டுவது. பொறுக்க முடியாமல் கூலித் தொழிலாளர்கள் நக்ஸல்களாக மாறினார்கள். அதை எதிர்கொள்ள நிலச்சுவான்தார்கள் கூலிப்படைகளை அமைத்துக்கொண்டார்கள். அப்படி உருவானவற்றில் ஒன்றுதான் ரன்வீர் சேனா. 1997-ல் லக்ஷ்மண்பூர் பாத்தேவில் 58 தலித் தொழிலாளர்களை ரன்வீர் சேனா கொன்று குவித்தது, அன்றைய அராஜகச் சூழலின் ஒரு துளி.

நிதிஷும் மோடியும் ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில் இந்தியாவின் கவனத்தை ஈர்த்தவர்கள். சிறந்த முதல்வர் பட்டத்தை ஊடகங்கள் மோடிக்கே வழங்கின என்றாலும், நிதிஷின் சாதனைகள் பெரியவை. குஜராத் தொடர்ந்து வளர்ச்சியில் முன்னணியில் இருக்கும் மாநிலம். மோடியின் காலத்தில் தொழில் வளர்ச்சி மேலும் மேலே சென்றது. ஆனால் கல்வி, சுகாதாரம், எளிய மக்கள் முன்னேற்றம், சமூக நல்லிணக்கம் போன்ற ஒட்டுமொத்த சமூக வளர்ச்சிக்கான பல அம்சங்களில் குஜராத் வளர்ச்சி மெச்சத் தக்கதாக இல்லை. பிஹாரோ பல தசாப்தங்களாக மோசமான நிர்வாகத்தால் பின்தங்கி இருந்தது. லாலு குடும்ப ஆட்சி மேலும் அதைத் திவாலாக்கியது. போதாக்குறைக்கு, முஹம்மது சஹாபுதீன், பப்பு யாதவ், ரீத்லால் யாதவ் என்று பல ரவுடிகளை சட்டப்பேரவை உறுப்பினர்களாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் வளர்த்துவிட்டு, குண்டர்கள் அரசியல் கலாச்சாரத்தையும் வளர்த் தெடுத்திருந்தார் லாலு.

2005-ல் நிதிஷ் ஆட்சிக்கு வந்ததும் செய்த முதல் நல்ல காரியம் 70,000-க்கும் மேற்பட்ட ரவுடிகளைத் தூக்கியது. இவர்களில் 12 பேர் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள். வெறும் கைதோடு விடாமல், விரைவு நீதிமன்றங்கள் அமைத்து, சிறைக்குள் அடைத்தார். போலீஸார் எண்ணிக்கையை உயர்த்தினார். 2005-ல் லட்சம் பேருக்கு 57 போலீஸார் இருந்த நிலை 2015-ல் 88 ஆகியிருக்கிறது. சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குள் வந்தபோது கூடவே நக்ஸல்கள் தாக்கமும் குறைந்தது. கடந்த 10 ஆண்டுகளில் நக்ஸல்கள் பகுதிகளில் மட்டும் 10,000-க்கும் மேற்பட்ட திட்டப் பணிகளை அவர் நிறைவேற்றியிருப்பது ஒரு முக்கியமான பணி.

இந்தியாவின் தேசிய சராசரியைக் காட்டிலும் பிஹாரில் விவசாயிகள் அதிகம். இன்னமும் 81% பேர் விவசாயத்தை நம்பியிருக்கும் மாநிலம் அது. விவசாயத்துக்கு நிதிஷ் புது உத்வேகம் அளித்தார். இன்றைக்கு 52 லட்சம் ஹெக்டேரில் 151 லட்சம் டன் உணவு உற்பத்தி நடக்கிறது. மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 42% பங்கை விவசாயம் தருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அளவில் வேளாண் துறையின் வளர்ச்சி 3.79%; பிஹாரின் வளர்ச்சி 5.58%. கல்வியில் பின்தங்கியிருந்த பிஹாரை மேலே கொண்டுவர நிதிஷ் எடுத்த முயற்சிகளில் முக்கியமானது, 1.5 லட்சம் ஆசிரியர்களைப் பணியில் அமர்த்தியது. இது ஒரு புரட்சி. பிஹாருக்குப் பக்கத்தில் இருக்கும் உத்தரப் பிரதேசத்துடன் ஒப்பிட்டால், கிட்டத்தட்ட இது இரு மடங்கு. ஆனால், ஜனத்தொகையில் உத்தரப் பிரதேசத்துடன் ஒப்பிட்டால் பிஹார் கிட்டத்தட்ட பாதி. பெண் கல்வியை ஊக்குவிக்க மாணவிகளுக்காக (பின்னாளில் மாணவர்களுக்கும்) அறிமுகப்படுத்திய சைக்கிள் வழங்கும் திட்டமும் பெரிய அளவில் பலன் தந்தது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டிலேயே கல்வி கற்போர் விகிதாச்சார அதிகரிப்பில் பிஹார் முன்னணி வகிக்கிறது. 2005-ல் படிப்பைப் பாதியில் நிறுத்தும் பள்ளிக்கூடக் குழந்தைகளின் எண்ணிக்கை 12%. 2015-ல் அது 1.72% ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது. முன்பெல்லாம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் பிஹாரில் கண்துடைப்பு. பல இடங்களில் கட்டிடங்கள் இருக்கும்; மருத்துவர்கள் இருக்க மாட்டார்கள். சூழலை மாற்றினார் நிதிஷ். 2005-ல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாதத்துக்கு 39 பேர் சிகிச்சை பெற்றனர். இப்போது 11,000 பேர் சிகிச்சை பெறுகிறார்கள்.

அதிகாரிகளைத் தன் ‘ஈகோ’வால் முடக்காமல், சுதந்திரம் கொடுத்து வேலை வாங்குவதில் நிதிஷ் சமர்த்தர். பிரத்யாயா ஓர் உதாரணம். இந்த இளம் ஐஏஎஸ் அதிகாரி, துடிப்பான செயல்பாட்டுக்குப் பேர்போனவர். பொருளாதார வளர்ச்சியை முடுக்க சாலைக் கட்டுமானத்தை முதல் கருவியாக்கிய நிதிஷ், அந்தப் பணியில் பிரத்யாயாவை அமர்த்தினார். பிஹார் மாநில சாலைக் கட்டுமானத் துறை பிரத்யாயா நிர்வாகத்தில் 66,508 கி.மீ. சாலைகளை அமைத்தது / மேம்படுத்தியது. பிஹார் சாலைகளில் மொத்த அளவில் கிட்டத்தட்ட இது சரிபாதி. தன் 30 ஆண்டு வரலாற்றில் 314 பாலங்களை அமைத்திருந்த பிஹார் பாலக் கட்டுமான நிறுவனம், நிதிஷின் ஆட்சியில் முதல் மூன்று ஆண்டுகளில் மட்டும் 336 பாலங்களை அமைப்பதாக மாறியது. நிதிஷ்-பிரத்யாயா கூட்டணி கையில் எடுத்த அடுத்த ஆயுதம் மின்சாரம். 2005-ல் தனிநபர் மின்சார நுகர்வு 70 கிலோவாட்; இன்றைக்கு 203 கிலோவாட். தன்னுடைய ஆட்சியில் கிட்டத்தட்ட 5 மடங்கு மின் உற்பத்தியைப் பெருக்கியிருக்கிறார் நிதிஷ். புதிய சாலைகள், மின் விநியோகம் இரண்டும் கிராமங்களையே அதிகம் சென்றடைந்தன. பிஹார் முதல்வராக நிதிஷ் தாக்கல் செய்த முதல் பட்ஜெட் ரூ. 26,328 கோடி. சமீபத்திய பட்ஜெட் ரூ. 1,20,685 கோடி. அவர் பதவியேற்றபோது பிஹாரின் வளர்ச்சி விகிதம் 3.5%. கடந்த 10 ஆண்டுகளில் பிஹாரின் சராசரி வளர்ச்சி விகிதம் 10%. பிஹார் வரலாற்றிலேயே சிறந்த முதல்வர் நிதிஷ் என்றால், அவை கூடுதல் வார்த்தைகள் அல்ல.

முக்கியமான ஒரு காலகட்டத்தில் தன் நெடுநாள் அரசியல் எதிரியையே கூட்டாளியாக்கிக்கொண்டு மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கிறார் நிதிஷ். பிஹாரில் இன்னமும் 4,000 கிராமங்களில் மின்சாரம் இல்லை. 2016-க்குள் கடைசி பிஹாரிக்கும் மின்சாரம் கிடைக்கும் என்று இலக்கு நிர்ணயித்திருக்கிறது புதிய அரசு. கூடவே, விவசாயத்துக்கென்று தனி மின் பாதை அமைக்கவும் திட்டமிட்டிருக்கிறார்கள். நல்ல நிர்வாகம், நல்ல வளர்ச்சி என்பது எப்போதும் கடைசி மனிதனின் தேவை நிறைவேற்றப் படுவதிலிருந்தே தொடங்குகிறது. சுதந்திரத்துக்கு 68 ஆண்டுகளுக்குப் பின் மின்சாரத்தை வரவேற் கவிருக்கும் அந்தக் கிராமவாசிகள் சார்பில் நிதிஷை நானும் வரவேற்கிறேன்!

நவ. 2015, ‘தி இந்து’

3 கருத்துகள்:

 1. நிதீஷ் எனும் ஆளுமையின் பணி
  சிறக்க வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. மக்களின் முதல்வர்! - சமகால இந்திய அரசியலில் ‘புனிதர்கள்’ அல்லது ‘முழுத் தூய்மையாளர்கள்’ என்று அரசியல்வாதிகளைத் தேடுவது கடினம். எனினும், அரசியல் லாப - நஷ்டக் கணக்குகள், கச்சடாக்கள் பொதுவாகிவிட்ட சூழலில், செயல்பாட்டின் அடிப்படையில் நிச்சயம் இன்றைய முதல்வர்களில் நிதிஷ் கொண்டாடப்பட வேண்டியவர். - முக்கியமான ஒரு காலகட்டத்தில் தன் நெடுநாள் அரசியல் எதிரியையே கூட்டாளியாக்கிக்கொண்டு மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கிறார் நிதிஷ். பிஹாரில் இன்னமும் 4,000 கிராமங்களில் மின்சாரம் இல்லை. 2016-க்குள் கடைசி பிஹாரிக்கும் மின்சாரம் கிடைக்கும் என்று இலக்கு நிர்ணயித்திருக்கிறது புதிய அரசு. கூடவே, விவசாயத்துக்கென்று தனி மின் பாதை அமைக்கவும் திட்டமிட்டிருக்கிறார்கள். நல்ல நிர்வாகம், நல்ல வளர்ச்சி என்பது எப்போதும் கடைசி மனிதனின் தேவை நிறைவேற்றப் படுவதிலிருந்தே தொடங்குகிறது. சுதந்திரத்துக்கு 68 ஆண்டுகளுக்குப் பின் மின்சாரத்தை வரவேற் கவிருக்கும் அந்தக் கிராமவாசிகள் சார்பில் நிதிஷை நானும் வரவேற்கிறேன்! = அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள் திரு சமஸ்

  பதிலளிநீக்கு
 3. 2005 இல் இருந்து 2013 வரை பீகார் நிதி அமைச்சர் ஆக இருந்தவர் பிஜேபி இன் சுஷில் குமார் மோடி என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்

  பதிலளிநீக்கு